நெஞ்சுக்கு நீதி
அரசியல் அரங்கில் இடிகளும் · 281 / 391
65. அரசியல் அரங்கில் இடிகளும் மின்னல்களும்! கா ஷ்மீரில் பரூக் அப்துல்லாவை முதலமைச்சராகக் கொண்டு நடைபெற்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆட்சியை 2.7.1984 அன்று மத்திய அரசு கவிழ்த்தது. காஷ்மீரில் இது போன்ற நிலைமை வரும் என்பது பற்றி 84 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 29 ஆம் நாள் முரசொலியில் நான் எழுதிய கடிதத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். மத்திய அரசின் கவிழ்ப்பு வேலைகளுக்கு ஒத்துவராத காஷ்மீர் ஆளுநர் பி.கே.நேருவை மாற்றிவிட்டு, அந்த மாநில ஆளுநராக ஜக்மோகன் என்பவரை நியமித்த நேரத்தில், அதற்கான உள்நோக்கம் இதுதான் என்று நான் அந்தக் கடிதத்திலே குறிப்பிட்டிருந்தேன்.
அது ஜூலைத் திங்களில் நிரூபணமாயிற்று. மொத்தம் 76 உறுப்பினர்களைக் கொண்ட அந்த மாநிலத்தில் 46 பேர் வெற்றி பெற்று 1983 ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில்தான் பரூக் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைத்திருந்தார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் 26 பேர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்தவரும் பரூக் அப்துல்லாவின் சகோதரியின் கணவரும், அதிருப்தி குழுவினருக்குத் தலைமை தாங்கி நடத்தி வந்தவருமான ஜி.எம்.ஷா என்பவர் தலைமையிலே 12 சட்டமன்ற உறுப்பினர்களை விலகச் செய்து சுயேச்சை உறுப்பினர் ஒருவரையும் பிடித்து 39 பேர்களின் ஆதரவு தனக்கிருப்பதாக இவர் ஆளுநரிடம் தெரிவித்ததின் பேரில் பரூக் அப்துல்லாவின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஜி.எம்.ஷாவை முதலமைச்சராக்கினர்.
காஷ்மீரில் நிறைவேற்றப்பட்டிருந்த கட்சித்தாவல் சட்டப்படி கட்சி தாவிய 12 பேருக்கும் சட்டசபையில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்பதால் பேரவையிலே தனக்குப் பெரும்பான்மையுள்ளது என்றும் பேரவையைக் கூட்டினால் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் பரூக் அப்துல்லா, ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதை அவர் செவிமடுக்க மறுத்துவிட்டார். இந்த ஜனநாயகப் படுகொலையை இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்தனர்.
31.7.84 அன்று பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஜி.எம்.ஷா பேரவையைக் கூட்டினார். பேரவைத் தலைவர் வாலி முகமது, பரூக் அப்துல்லாவின் ஆதரவாளர் என்பதால் 30.7.84 அன்று கட்சி மாறிய 12 உறுப்பினர்களும் பதவி இழந்துவிட்டதாக அறிவித்தார். ஆனால் காஷ்மீர் உயர்நீதி மன்றம் அவர்கள் பதவி இழக்கவில்லை என்று அறிவித்துவிட்டது. 31.7.84 அன்று அவை கூடிய போது, ஷாவின் ஆதரவாளர்கள் பேரவைத் தலைவர் மீது ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.
ஷாவின் அமைச்சரவை மீது பரூக்கின் ஆதரவாளர்கள் ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். எந்தத் தீர்மானத்தை முதலில் எடுத்துக் கொள்வதென்ற பிரச்சினை வந்த போது, ஷாவின் ஆதரவாளர்கள், பரூக்கின் ஆதரவாளரான பேரவைத்தலைவரை அப்படியே தூக்கிக் கொண்டு போய் வெளியே போட்டுவிட்டனர். இதைக் கண்டித்து ஷாவின் எதிர்ப்பாளர்கள் எல்லாம் வெளிநடப்புச் செய்துவிட்டதால், புதிய பேரவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்டசபை எதிர்க்கட்சி இல்லாமலே நடைபெற்றது.
இந்திரா காங்கிரஸ் கட்சி காஷ்மீரில் நடத்திய ஜனநாயகக் கொலை இது! காஷ்மீரைத் தொடர்ந்து காங்கிரசின் பார்வை ஆந்திரா பக்கம் திரும்பியது. ஆந்திராவில் தெலுங்கு தேசக் கட்சியை ஆரம்பித்து இந்திரா காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் என்.டி.ராமராவ், இதய நோய் காரணமாக அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல்நலம் முழுதும் தேறாத நிலையில் 14.8.84 அன்று ஹைதராபாத் திரும்பினார்.
அவர் தாயகம் திரும்பிய சில மணி நேரத்தில் அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த நான்கு பேர் நிதியமைச்சர் பாஸ்கர ராவ் தலைமையில் அமைச்சரவையிலிருந்து விலகினர். பாஸ்கர ராவ் தனது ஆதரவாளர்களோடு கவர்னர் ராம்லாலைச் சந்தித்துப் பேரவையில் என்.டி. ராமராவுக்குப் பெரும்பான்மை இல்லை என்றும் தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த 91 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், மேலும் இந்திரா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 57 பேர் தன்னை ஆதரிப்பதாகவும், எனவே தன்னை முதலமைச்சர் பதவியேற்க அழைக்க வேண்டுமென்றும், அமைச்சரவை அமைத்திடத் தன்னை அனுமதித்திட வேண்டுமென்றும் கூறினார்.
என்.டி.ராமராவ் தன்னை ஆதரிக்கும் 163 சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தோடு கூடிய மனுவை ஆளுநரிடம் கொடுத்து நம்பிக்கை வாக்குக் கோருவதற்கு, பேரவையை 18.8.84 அன்று கூட்டுவதற்குத் தன்னை அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அது பற்றி எந்த முடிவும் அறிவிக்காமல், 16.8.84 அன்று ஆளுநர், ராமராவ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உங்களுக்குப் பெரும்பான்மை இல்லை, எனவே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்றார்.
இதைப் படித்து ஆத்திரமடைந்த என்.டி.ஆர். தன்னை ஆதரிக்கும் 168 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். ஆனால் அவர்களை அங்கே உள்ளே அனுமதிக்கவில்லை. இதற்கிடையே இந்திரா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்று பாஸ்கர் ராவை ஆதரிப்பதாக அறிவித்தனர். ஆளுநர் உடனே என்.டி.ராமராவ் அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்து பாஸ்கர் ராவை புதிய அமைச்சரவை அமைக்கும்படியும் ஒரு மாதத்திற்குள் பேரவையைக் கூட்டிப் பெரும்பான்மையை நிரூபிக்கும்படியும் தெரிவித்துவிட்டார்.
என்.டி.ஆர். ஆட்சியைக் கவிழ்த்ததையொட்டி ஆந்திராவில் பெரும் கலவரம் மூண்டது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் எதிர்ப்புக்குரல் கொடுத்தன. விவாதத்திற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் நரசிம்மராவ், ராமராவ் ஆட்சியை டிஸ்மிஸ் செய்து கவர்னர் எடுத்த நடவடிக்கை சரியானதுதான் என்றார். இது குறித்து 21.8.84 அன்று டெல்லியிலே நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு ஆந்திராவில் நடை பெற்ற ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்ததோடு மீண்டும் அங்கே ஜன நாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமென்றும் இந்திரா காங்கிரசின் தொடர்ந்த இந்தப் போக்கினைத் தடுத்திட நாடெங்குமுள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் நின்று பாடுபட வேண்டுமென்றும், ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் தி.மு.கழகத்தின் அணியின் சார்பில் மறியல் நடத்தப்படும் என்றும் கூறினேன்.
24.8.84 அன்று ஆந்திர மாநில ஆளுநராக இருந்த ராம்லால் தன் பதவியை ராஜினாமா செய்ததால், புதிய ஆளுநராக சங்கர் தயாள் சர்மா நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் 25 ஆம் தேதி நடைபெற்ற மறியலில் குன்றத்தூரைச் சேர்ந்த கழகத் தோழர் ஏகாம்பரம் தீக்குளித்து இறந்தார். 2.9.84 அன்று சென்னை கடற்கரையில் ஆந்திராவில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலைக்காக கண்டனம் தெரிவித்து அனைத்திந்திய எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் நானும் சந்திர சேகர், அத்வானி, பரூக் அப்துல்லா, என்.டி.ராமராவ், இரா. செழியன், ராஜேஸ்வர ராவ், உபேந்திரா, அப்துல் சமது, நெடுமாறன், உமா நாத், டாக்டர் சந்தோஷம் ஆகியோரும் உரையாற்றினோம். ஆந்திராவின் புதிய கவர்னர் பாஸ்கரராவை 11.9.84 அன்று பேரவையைக் கூட்டிப் பெரும்பான்மையை நிரூபிக்கும்படிக் கூற, அதன்படி அவரால் நிரூபிக்க முடியவில்லை. எனவே 16.9.84 அன்று ஆளுநர் பாஸ்கரராவை அழைத்துப் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் ராஜினாமா செய்யக்கூறிவிட்டு என்.டி.ராமராவை அழைத்து மீண்டும் அமைச்சரவை அமைக்கும்படியும் ஒரு மாதத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்றும் கூறினார்.
அன்று மாலையிலேயே அதன்படி என்.டி.ஆர். முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார். உடனடியாகத் தொலைபேசி மூலமாக என்னைத் தொடர்பு கொண்டு நன்றி கூறியதோடு, 20 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் வெற்றி விழாப் பொதுக் கூட்டத்திலும் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதே 20 ஆம் தேதி பேரவையிலும் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டினார். அன்று மாலை நடைபெற்ற வெற்றி விழாக் கூட்டத்தில் தி.மு.கழகத்தின் சார்பில் நானும் பங்கேற்று உரையாற்றினேன்.
ஆந்திராவில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. 1972 ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி, கழகத்திலே உள்ளவர்கள் எல்லாம் கணக்குக் காட்ட வேண்டுமென்றும் கூறிக் கழகத்தைப் பிளந்து ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர். 1984 ஆம் ஆண்டு அதே குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலைக்குள்ளானார்.
இப்போது எம்.ஜி.ஆரை நோக்கிக் குற்றசாட்டுப் பட்டியலை வைத்தவர் அவருடைய அமைச்சரவையிலே இடம் பெற்றிருந்த எஸ்.டி.சோமசுந்தரம். எஸ்.டி.சோமசுந்தரம் அப்போது எம்.ஜி.ஆர். மீது எதிர்ப்புத் தெரிவிக்க முக்கிய காரணமாகக் கூறப்பட்டது என்ன தெரியுமா? எம்.ஜி.ஆர். ஆட்சியிலே அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகக் குற்றஞ்சாட்டித்தான் எஸ்.டி.எஸ். ஆட்சியினருக்கெதிராகப் போர்க்கொடியினை உயர்த்தினார்.
2.8.84 அன்று திருச்சியிலே சில நிகழ்ச்சிகளிலே கலந்துகொள்ளச் சென்ற எஸ்.டி.சோமசுந்தரத்தை எதிர்த்த அ.தி.மு.க.வினரே புகைவண்டி நிலையத்தில் இரகளை செய்தனர். கறுப்புக் கொடிகள் அமைச்சர் எஸ்.டி.எஸ்.சுக்கு எதிராகக் காட்டப்பட்டன. எஸ்.டி.எஸ்.ஸின் ஆதரவாளர்கள் எல்லாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள். பல மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் ஜெயலலிதா தன்னை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக் கூடாதென்று கூறியிருப்பதாக நிருபர்களிடம் எஸ்.டி.எஸ்.
கூற அந்தச் செய்தி முழுப்பொய் என்று ஜெயலலிதா மறுத்தார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இலஞ்சம் வாங்கவில்லை என்பதைத் தானாக முன்வந்து மக்களிடம் அவரே நிரூபிக்க வேண்டுமென்றார் எஸ்.டி.எஸ். 28.8.84 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கை ஒன்றில், அ.தி.மு.க.சார்பில் கொள்கை அறிவிப்புகளை வெளியிட எஸ்.டி.எஸ்.சுக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தார். அதே 28 ஆம் தேதி காலையில் ஈரோடு நகருக்குச் சென்ற எஸ்.டி.சோமசுந்தரத்திற்கு எதிராகப் புகைவண்டி நிலையத்திலேயே பயங்கர கலவரம்.
அவருடைய கட்சிக்காரர்களே அவருடைய கையைப் பிடித்து இழுத்து எங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறிவிட்டுத்தான் போக வேண்டுமென்றார்கள். 30.8.84 அன்று பேட்டியளித்த அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் மக்கள் ஆட்சியின் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் பற்றி இலஞ்சம் வாங்கியதாகச் சந்தேகப்படுகிறார்கள் என்று கூறினார். செய்தியாளர், எஸ்.டி.எஸ் இடம் உங்கள் மீது ஜெயலலிதா புகார் கூறுகிறாரே என்று கேட்டதற்குப் பதிலளித்த சோமசுந்தரம் "1972 ஆம் ஆண்டிலேயே கட்சிக்கு வந்தவர்கள் மீது, 1982இல் கட்சிக்கு வந்தவர் புகார் கூறுகிறார்.
நடவடிக்கை எடுக்கிறார். கட்சியில் அப்படி புதிய விதிமுறைகளை ஜெயலலிதா உருவாக்கியிருக்கிறார் போலும்! என்னைத் துரோகி என்று வீரப்பன் பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர். தனிக்கட்சி ஆரம்பித்தபோது அ.தி.மு.க. உறுப்பினர் பாரத்தில் கையெழுத்துப் போடவே வீரப்பன் மறுத்தார். அதுபற்றி எம்.ஜி.ஆரே ஒரு கட்டத்தில் வருத்தப்பட்டது கூட உண்டு" என்று கூறினார்.
1.9.84 அன்று அ.தி.மு.க. செயற்குழுக் கூடி நிறைவேற்றிய தீர்மானத்தில் எஸ்.டி.சோமசுந்தரம் தனது துறைகளைப் பயன்படுத்தி ஏராளமான முறைகேடான ஊழல்களில் ஈடுபட்டுத் தனக்கு வேண்டியவர்கள் பெயரில் பினாமியாகப் பெரும் சொத்துக்கள் சேர்த்துள்ளார். பல பெரும் ஊழல்களையும் செய்துள்ளார். தற்போது ஊழல்கள் அம்பலமாகிவிடுமென்று அஞ்சி ஆட்சி மீது குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார். எனவே அவரை அமைச்சரவையிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் 3.9.84 அன்று எஸ்.டி. சோமசுந்தரம் அமைச்சரவையிலிருந்து 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். உடனே செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.டி.சோமசுந்தரம் "எம்.ஜி.ஆருடைய சுயரூபத்தை இப்போது மக்கள் தெரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். சினிமாவில் வந்த எம்.ஜி.ஆரும் நடைமுறையில் முதலமைச்சராக இருக்கின்ற எம்.ஜி.ஆரும் ஒரே மாதிரி குணங்கள் கொண்டவரல்லர் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவர் இலஞ்சம் வாங்குகிறார்; தவறு செய்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள். அவர் இலஞ்சம் வாங்கவில்லை என்று சொல்லித் தப்பிக்க முடியாது. தகுந்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என்றார். ஒரு நிருபர் அவரிடம் "உங்கள் ஆதரவாளர் என்று கருதப்பட்ட சேடப்பட்டி முத்தையா பொதுக்குழுவிலே உங்களைத் தாக்கிப் பேசியிருக்கிறாரே?"
என்று கேட்டதற்கு "அவர் சூழ்நிலைக் கைதியாகியுள்ளார்" என்றார். தொடர்ந்து எஸ்.டி.எஸ். செய்தியாளர்களிடம் கூறும்போது, "எம்.ஜி.ஆர். ஒரு கிரிமினல் குற்றவாளி என்பதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகளைச் சொல்ல முடியும். எம்.ஜி.ஆர். இனிமேல் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. என் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு எப்போதும் கிரிமினல் மூளைதான். அவரே ஒரு கிரிமினல் குற்றவாளி.
அமைச்சர்களைக் கூட்டிவைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர். பேசும் போது "வாங்குவதுதான் வாங்குகிறீர்கள்; கொஞ்சம் ஒளிவு மறைவாக வாங்கக் கூடாதா, வாங்காமல் இருக்க முடியாதுதான், அதற்காக வெளியே தெரியும்படியாக வாங்க வேண்டுமா?" என்றார். நாற்பது இலட்சம் வரி பாக்கியை எம்.ஜி.ஆர். எப்படிக் கட்டினார்?"
என்றெல்லாம் கேட்டார். 5.9.84 அன்று எஸ்.டி.எஸ். "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். ஆனால் அ.தி.மு.க. என்று பெயர் வைக்கக் கூடாது என்று அ.இ.அ.தி.மு.க. கட்சிச் சார்பில் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர். 19.9.84 அன்று பேட்டி அளித்த எஸ்.டி.எஸ் மது மொத்த விற்பனையாளர்கள் ஒரு கேசுக்கு (பெட்டிக்கு) ஐம்பது ரூபாய் இலஞ்சம் தர எம்.ஜி.ஆரிடம் ஒப்புக் கொண்டதை வசூல் செய்யும் ஏஜெண்டாக இருக்குமாறு தன்னிடம் எம்.ஜி.ஆர்.
கூறியதாகவும் அதற்குத் தான் மறுத்ததால், ஆயத் தீர்வைத் துறை தன்னிடமிருந்து ஏற்கனவே பறிக்கப்பட்டதாகவும் கூறினார். கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவிற்கு அதிக முக்கியத்துவம் தரக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் அதிகமாகி, எஸ்.டி.எஸ் போன்றவர்கள் செய்தியாளர்கள் மத்தியில் எம்.ஜி.ஆரைப் பற்றி விமர்சித்த காரணத்தால், 1984 ஆம் ஆண்டு அக்டோபரில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார்.
அதுபற்றி ஏடுகளில் செய்தி வந்ததும், அவரை நேரில் சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் அதிலே வெளியிடப்பட்டிருந்ததால், நாம் ஏன் தொந்தரவு தரவேண்டுமென்று எண்ணி, அவர் விரைந்து நலம் பெறவேண்டுமென்று உடனடியாகத் தந்தி கொடுத்தேன். முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குச் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு 'டயாலிசிஸ்' செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரசு சார்பில் 13.10.84 அன்று பேரவையில்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் படித்த அறிக்கையில் எம்.ஜி.ஆர். குணமடைந்து வருகிறார் என்று ஒரு வரி மட்டும் கூறப்பட்டதால், கழக உறுப்பினர் துரைமுருகன் எழுந்து சிறுநீரக சிகிச்சைக்கு பெயர் பெற்ற ஆஸ்திரேலியா நாட்டு விக்டோரியா மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆரை அழைத்துச் சென்று விரைந்து சிகிச்சை செய்ய வேண்டுமென்று கருத்துத் தெரிவித்தார். 14.10.84 அன்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவமனை தலைமை இயக்குநர் பி.சி.ரெட்டி நிருபர்களிடம், 13ஆம் தேதி நள்ளிரவிற்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடலில் இடது பக்க மூளை நரம்பில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் வலது பகுதி முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது உடல் நிலை குறித்து 72 மணி நேரத்திற்குப் பின் தான், முழுமையான மதிப்பீட்டைச் செய்ய முடியுமென்றும் மூன்று வெளிநாட்டு மருத்துவர்கள் மறுநாள் சென்னைக்கு எம்.ஜி.ஆர்.
உடல் நலனைக் கவனிக்க வருவதாகவும் தெரிவித்தார். செய்தி கேள்வியுற்றதும் 15.10.84 அன்று பெரியார் மாவட்டச் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டுச் சென்னை திரும்பிய நான் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று எம்.ஜி.ஆரின் உடல் நலம் குறித்துப் பேரவைத் தலைவர் கே.ராஜாராம், எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகியம்மாள், மற்றும் அமைச்சர்களிடம் விசாரித்துவிட்டு வந்தேன். என்னுடன் பேராசிரியர், அன்பில் தர்மலிங்கம், துரை முருகன், நீலநாராயணன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் வந்தனர்.
மறுநாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனி விமானத்தில் வந்து எம்.ஜி.ஆரை மருத்துவமனையிலே பார்த்தார். அப்போது எம்.ஜி.ஆர். பேச முயன்றார் என்றும் ஆனால் இயலவில்லை என்றும் ஏடுகளிலே செய்தி வந்தது. அமெரிக்காவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் சென்னைக்கு வந்த மருத்துவர்கள் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்தனர். எம்.ஜி.ஆரின் உடல்நிலை பற்றித் தொடர்ந்து வந்த செய்திகள் என்னைத் தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்தன.
1972 ஆம் ஆண்டு தி.மு.கழகத்திலிருந்து பிரிந்து சென்று புதுக்கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் தி.மு.கழகத்தைத் தோல்வியடையச் செய்த நிகழ்ச்சிகள் எல்லாம் மறைந்து ஆரம்ப காலத்தில் நானும் அவரும் கோவையிலே ஒன்றாக வாழ்ந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சிகளும் அவர் கழகத்திற்கு வரக்காரணமாக நானே அமைந்ததும் பின்னர்த் திரைப்படத் துறையில் நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதுமான நிகழ்ச்சிகள்தான் என் மனக்கண் முன்னால் வந்து வந்து போயின. வேற்றுமைகளை எல்லாம் மறந்து அவர் எப்படியாவது உடல் நலம் பிழைத்துத் தேறினால் போதுமென்று என் உள்ளம் விரும்பியது.
மந்திரி குமாரி படத்தில் எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்று நானும், மருதநாட்டு இளவரசி படத்திற்கு நான்தான் கதை வசனம் எழுத் வேண்டுமென்று எம்.ஜி.ஆரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்ற செயல்கள் என் சிந்தனையை அலைக்கழித்து எம்.ஜி.ஆர். உடல்நலம் பெற வேண்டுமென்பதற்காக முரசொலியில் "நானும் பிரார்த்தனை செய்கிறேன்" என்ற தலைப்பிலே ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்திலே நான் எழுதிய சில வரிகள்...
"என் இனிய நண்பரே! உங்களுக்காக உங்கள் உடல் நலிவு நீங்குவதற்காக பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் வேண்டுகோள் செய்தி விடுத்துள்ளார். இந்தப் பன்னிரெண்டு ஆண்டுப் பகையை நாற்பதாண்டுக் கால நட்புப் பனிக்கட்டி போல இன்று கரைத்துவிட்டதற்கு அடையாளம்; உங்கள் நோய் பற்றிக் கேள்விப்பட்டவுடன் என் கண்கள் அருவிகளானதுதான்! அந்த அருவியில் கருத்து மாறுபாடுகள் கரைந்து போகவில்லை! ஆனால் கசப்பு உணர்வுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன!
கல்லக்குடி போராட்டத்தில் ஆறு மாத சிறைவாசமேற்றுத் திருச்சிச் சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை எழும்பூர் இரயிலடியில் நான் வந்திறங்கியபோது மக்கள் வெள்ளத்தில் அமிழ்ந்து போக இருந்தேன்! அன்று என்னைக் "காக்கும் கரங்களாக" உங்கள் கரங்கள் தானே நீண்டன! என்னை வாரி அணைத்துத் தோளிலே தூக்கிக்கொண்டு மக்கள் கடலைக் கடந்தீர்கள்! அப்போது விலை உயர்ந்த உங்கள் கைக்கடிகாரம் அந்தக் கூட்டத்தில் போன இடம் தெரியவில்லை!
அம்மவோ; அதைனெல்லாம் நிலைத்தால் அதுவும் இந்த நேரத்தில் நிலைத்தால்; நீங்கள் நலம் பெற வேண்டுமென்பதைத் தவிர என் உள்ளமும் உதடுகளும் வேறு எதனை உச்சரிக்கும். என் இனிய நண்பரே! உங்களுக்காக நடைபெறுகிற பிரார்த்தனைகள் வெற்றி பெறட்டும்! பாசமிகுந்த எனது பழைய காலத்துத் தோழரே! நீங்கள் அந்தப் பழைய புன்னகை முகத்தோடு எங்களைக் காண வாருங்கள்! நீங்கள் நலமெல்லாம் பெற்று எங்களைக் காண வந்தால் போதும்! "பிரார்த்தனை" என்பதற்குத் "துதி" என்பது மட்டுமல்ல; "வேண்டுகோள்" என்றும் ஒரு பொருள் உண்டு!
அந்தப் பொருளில் வேண்டுமானால் நானும் பிரார்த்தனை செய்கிறேன்; கருத்து மோதல்களுக்கிடையிலேயும் கனிந்துரையாடிடக் கடுகி எழுந்து வருக! கதிரொளிபட்ட பனிமூட்டமென உங்கள் நோய் மூட்டம் விலகிடுக! எம்.ஜி.ஆர். அவர்களின் உடல் நிலை காரணமாக என்னுடைய வெளியூர் நிகழ்ச்சிகளை எல்லாம் இரத்துச் செய்தேன். அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக அன்றாடம் அரசு தரப்பிலே அறிக்கைகள் வந்தன. எனவே ஏற்கனவே இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட தர்மபுரி மாவட்ட நிகழ்ச்சிகளில் மூன்று நாட்கள் கலந்து கொண்டுவிட்டுச் சென்னை திரும்பினேன்.
சுற்றுப் பயணத்தின் போது விளக்கொளிக்குப் பறந்து வந்த விஷப்பூச்சி ஒன்று கொட்டிவிட்டதால் உடலில் ஏற்பட்ட 'அலர்ஜி'க்கு மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு முரசொலி அலுவலகம் சென்றேன். அங்கே மாறனிடம் இரண்டு வார்த்தைகள் கூடப் பேசியிருக்கமாட்டேன். நான் இருந்த அறைக்குள் "திபுதிபு"வெனத் துணை ஆசிரியர்கள் பரபரப்புடன் நுழைந்தனர். யு.என்.ஐ. செய்தியில் பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்டு விட்டதாகவும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் அடிக்கப்பட்டிருந்தது.
இரும்புத்தடி ஒன்றினால் ஓங்கி என் மண்டையிலே அடித்ததுபோல் இருந்தது. சில நிமிடங்களில் அடுத்த செய்தியாக இந்திரா காந்தி நிலைமை கவலைக்கிடம் என்று வந்தது. நெஞ்சைத் தூக்கி நெருப்பிலே போட்டது போலாயிற்று. ஒன்றல்ல, இரண்டல்ல, பல குண்டுகள் பாய்ந்து விட்டன என்று செய்தி தொடர்ந்தது. கால்கள் தடுமாறியபடி நடந்து வந்து காரில் ஏறி வீட்டுக்கு, வந்தேன். இந்திரா காந்தியுடன் தி.மு.கழகம் உறவுடன் பழகிய காலம் நினைவில் அலைமோதியது.
டெல்லியிலிருந்து இரா.மோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திரா காந்தி மறைந்துவிட்டார் என்றார். தலை சுற்றியது. 31.10.84 அன்று காலையில் இந்திரா காந்தி அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த போலீசார் இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு, மருத்துவமனைக்குச் சென்றும் பலனின்றி மரணமடைந்துவிட்டதாகவும், இந்திரா காந்தியைச் சுட்டவர்களில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டர் பியாந்த் சிங் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார் என்றும் மற்றொருவர் சத்வந்த் சிங் என்ற போலீஸ்காரர் காயத்தோடு மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தொடர்ந்து வந்தன.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருந்த குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் உடனடியாக இந்தியா திரும்பினார். இந்திரா காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமன்றக்குழுச் செய்த சிபாரிசை ஏற்று இந்தியாவின் அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தி பதவியேற்றார்.
