உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/சுதந்திர இந்தியாவில் பஞ்சாப்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

சுதந்திர இந்தியாவில் பஞ்சாப் · 280 / 391

64. சுதந்திர இந்தியாவில் பஞ்சாப் படுகொலைகள் தி ருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஒரு விபத்திலே சிக்கி மறைந்துவிட்ட காரணத்தினால் 1983 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல்நாள், அங்கே இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.கழகம், அ.தி.மு.க., இந்திரா காங்கிரஸ் ஜனதா, கா.கா.தே.கா. ஆகிய கட்சிகள் தனித் தனியாகப் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கையில் இறுதியாக அ.தி.மு.க வேட்பாளர் தி.மு.கழகத்தை விட 1766 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அனைத்து ஏடுகளும் மாலை 6மணிவரை தி.மு.கழக வேட்பாளர் தான் அதிக வாக்குகள் பெற்று முன்னணியிலே இருந்ததாகவும் பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்திலே பதட்டநிலை போலீஸ் தடியடி எல்லாம் ஏற்பட்ட பிறகு, இழுபறியான நிலையிலே ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியிட்டன. 19.5.1983 அன்று சென்னை ஏ.வி.எம்.இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நான் எழுதிய "தென்பாண்டிச்சிங்கம்" நூல் வெளியீட்டு விழா அபிராமி பதிப்பகத்தின் சார்பில் நடைபெற்றது.

பேராசிரியர் வ.சுப.மாணிக்கம் தலைமையிலே பொதுச் செயலாளர் பேராசிரியர் நூலினை வெளியிட பாகனேரி உ.சுப்ரமணியம், பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியம், பேராசிரியர் திருநாவுக்கரசு, சாண்டில்யன், கவிஞர் கா.மு.ஷெரீப், எஸ்.எஸ்.தென்னரசு ஆகியோர் நூலைப் பாராட்டி உரையாற்றினர். இறுதியாக நான் நன்றியுரையாற்றினேன். இந்தக் கதையிலே நான் எழுதியிருந்த பல்வேறு சம்பவங்கள், திரைப்படக் கதாசிரியர்கள், இயக்குநர்கள் சிலரால் கையாளப்பட்டு அவர்களுடைய திரைப்படங்களில் அந்தக் காட்சிகள் வந்ததைக் கண்டபோது, இப்படியும் சிலர் நாட்டில் இருக்கிறார்களே என்று எனக்கு நானே எண்ணிக் கொண்டேன்.

83 ஆம் ஆண்டு மே திங்கள் 26 ஆம் தேதி கோவை மாநகரில் நடைபெற்ற கழகத்தின் பொதுக்குழுவில் நான் தலைவராகவும், பேராசிரியர் பொதுச் செயலாளராகவும், சாதிக்பாட்சா பொருளாளாராகவும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். தணிக்கைக்குழு உறுப்பினர்களாக கோவை மு.இராமநாதன், அ.ரகுமான்கான், சுப. தங்கவேலன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைப்பொதுச் செயலாளராக நாஞ்சிலார் நியமிக்கப்பட்டார். பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தும், அ.தி.மு.க.

அரசின் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும் பொதுக்குழுவிலே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருப்பத்தூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையே இருந்து வந்த உறவு பெரியகுளம், திருச்செந்தூர் இடைத்தேர்தல்களில் உறவு முறிந்தது என்ற நிலைக்காளாகி இரண்டு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்ட போதிலுங்கூட புதுவையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் நீடித்து வந்தது.

இடையிடையே இரண்டு கட்சிகளுக்குமிடையே சிறுசிறு பூசல்கள் ஏற்பட்ட போதிலும், அவைகளை அவ்வப்போது பேசித்தீர்த்துக்கொண்டு, சுமார் மூன்றரை ஆண்டுகள் ஆட்சியும் தொடர்ந்து நடந்தது. அந்த நேரத்தில் 20.3.83 அன்று பெங்களூரில் கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, தென்மாநில முதலமைச்சர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டியிருந்தார். இந்த மாநாட்டில் ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமராவ் அவர்களும், தமிழ்க முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

அவர்களும் புதுவை முதல்வர் டி.ராமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்கள். மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் எனக் கோரும் முதலமைச்சர்கள் கொண்ட கூட்டம் என்பதால், தி.மு.கழகமும் காங்கிரசும் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ள புதுவைமாநில முதலமைச்சர் அந்த மாநாட்டிலே கலந்து கொள்ளலாமா என்ற பிரச்சினை ஒரு சில காங்கிரஸ்காரர்களால் பெரிதாக எழுப்பப்பட்டது.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரும் 'மாநில சுயாட்சி'க் கழகத்தின் கொள்கை என்பதைக் காங்கிரசார் ஏனோ புரிந்து கொள்ளவில்லை. எனவே பெங்களூர் மாநாட்டில் தென்மாநில முதலமைச்சர்கள் கவுன்சில் என்ற ஒரு அமைப்பை நிறுவியது பற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது கோபத்தைத் தெரிவித்துக் கொண்டது. அதனைச் செயல்படுத்தும் முறையில் திடீரென ஒரு நாள் இந்திராகாங்கிரஸ் புதுவையில் தி.மு.கழக அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

இந்திரா காங்கிரஸ் தன்னுடைய ஆதரவைத் திரும்பப் பெற்றபோதிலும், மொத்தம் 30 உறுப்பினர்களைக் கொண்ட புதுவை சட்டப் பேரவையில் தி.மு.கழகம் 13 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. மேலும் தி.மு.கழக ஆட்சிக்கு மூன்று ஜனதா உறுப்பினர்களின் ஆதரவும் வழங்கப்படும் என்று, அந்தக் கட்சியின் தலைவர் ஹெக்டே தொலைபேசி மூலமாக என்னிடம் தெரிவித்தார். தங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களுக்கும், தி.மு.கழகத்தை ஆதரிக்கும்படி பணிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.

இதையும் தவிர முஸ்லிம் லீக் உறுப்பினர் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவரும் தி.மு.கழகத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். எனவே புதுவையில் பெரும்பான்மை பலத்துடன் திகழும் தி.மு.கழக அரசை, நீடிக்க அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் குடியரசுத் தலைவருக்கு நீண்ட தந்தி ஒன்று அனுப்பினேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி அவர்கள் பெரும்பான்மை பலத்தைச் சட்டமன்றத்தில் நிரூபிக்க ஆளுநர் வாய்ப்பளிக்க வேண்டுமே தவிர, புதுவை அரசைக் கலைக்கக் கூடாது என்று அறிக்கை விடுத்தார்.

ஜூன் 22ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது மூப்பனார் பெங்களூரில் நடை பெற்ற மாநாட்டில் புதுவை முதலமைச்சர் கலந்து கொண்டதற்காக இந்திரா காங்கிரஸ் அவர்மீது அதிருப்தி அடைந்திருக்கக் கூடுமென்றும் அதனால் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றிருக்கக்கூடுமென்றும் கூறினார். அதுபற்றிச் செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, அதுதான் காரணம் என்றால் தி.மு.கழகம் அதனைப் பெருமையாகக் கருதுகிறது எனக் கூறினேன்.

இந்திரா காங்கிரஸ் தன் ஆதரவைத் திரும்பப் பெற்றபோதிலும் தி.மு.கழகத்திற்கு ஆட்சியைத் தொடர்ந்து நடத்திடப் போதுமான பெரும்பான்மை இருந்தபோதிலும் மத்திய அரசு புதுவையிலே ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்து தனது "ஜனநாயக" விரோதச் செயலைக் காட்டிக் கொண்டது. புதுவையில் கழக அரசினை இந்திரா காங்கிரஸ் கலைத்ததையொட்டி நாடாளுமன்றத் துணைத்தலைவராக இருந்த கழக உறுப்பினர் ஜி.லெட்சுமணன் நாடாளுமன்றத் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்து, 25-ஆம் தேதி அதற்கான கடிதத்தை நாடாளுமன்றப் பேரவைத்தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

அன்றைய தினம் சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது கட்சித் தலைமையின் ஒப்புதலோடு பதவி விலகும் முடிவைத் தான் எடுத்ததாகவும், இந்திரா காங்கிரஸ் கட்சி தி.மு.கழகத்ததுடன் கொண்ட உறவின் காரணமாகத் துணைத் தலைவர் பதவி தனக்கு அளிக்கப்பட்டதாகவும் புதுவை அமைச்சரவையும் அதே உறவின் காரணமாகத் தான் ஏற்பட்டது என்றும் தற்போது புதுவையிலே அந்த உறவு முறிந்து- விட்ட பிறகு தான் முழுக்க முழுக்க ஒரு கட்சிக்காரன், திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரன் என்ற அடிப்படையிலே தி.மு.கழகத்தைத் தவிர தனக்குப் பெரிது எதுவுமில்லை என்றும், தனக்கு நாடாளுமன்றத் துணைத் தலைவர் அந்தஸ்தைக் கொடுத்தது தி.மு.கழகம் தான் என்றும், அந்தக் கழகத்திற்குத் தான் உண்மையான நன்றியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதுவையில் கழக அரசு கலைக்கப்பட்ட ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து 30.6.83 அன்று அங்கே முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத் துணைத் தலைவர் பதவியை எங்களுடைய ஒப்புதலோடு ராஜினாமா செய்துவிட்டு, தன் வாழ்நாளிலேயே அந்த நாள்தான் மகிழ்ச்சியான நாள் என்று நிருபர்களிடமும் இங்கே கூறிவிட்டு டெல்லி சென்ற ஜி.லெட்சுமணன், அங்கே சென்றதும் தான் அனுப்பிய பதவி விலகல் கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார் என ஏடுகள் செய்தி வெளியிட்டன.

இந்திரா காங்கிரஸ், தி.மு.கழகத்தோடு கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்ட நிலையில், நாடாளுமன்றத் துணைத் தலைவர் பதவியையும் லெட்சுமணனிடமிருந்து பறித்துக் கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், அதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட லெட்சுமணன் சென்னையிலிருந்து தானே விலகுவதைப் போல அறிவித்துப் பின்னர் டெல்லிக்குச் சென்றதும் இந்திரா காங்கிரசோடு பேசி அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதைப்போலப் பெற்றுக் கொண்டார் என்றும் எனக்குப் பின்னர்ச் செய்திகள் கிடைத்தன. எனினும் பதவி ஆசை எந்த அளவிற்கு மனிதனைக் கெடுத்து விடுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சியும் எனக்குத் துணை புரிந்தது.

தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் வழிநடந்த தன்மான தளகர்த்தர், நாற்பதாண்டுக் காலம். என்னோடு நெருங்கிப் பழகிய உடன்பிறப்பு, பேரவைத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்து பணியாற்றியவர் மதியழகன். சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருந்தவர் 17.8.83 அன்று தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். உடனடியாக அவரது இல்லத்திற்குச் சென்று இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.

23.8.83 அன்று சென்னை பெரியார் திடலில் பொதுச்செயலாளர் பேராசிரியர் தலைமையில் மதியழகன் அவர்களின் உருவப்படத் தினைத் திறந்து வைத்து நானும் அனைத்துக்கட்சித் தலைவர்களும் உரையாற்றினோம். 1984 ஆம் ஆண்டு துவக்கத்தில் குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி, திங்கள்களில் கழகத்தின் மாநாடுகள் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்றன. டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய நாட்களில் புதுவையில் எஸ்.எஸ்.தென்னரசு தலைமையிலும், ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் கரூரில் திருச்சி மாவட்ட ஆறாவது மாநாடு நாஞ்சிலார் தலைமையிலும் ஜனவரி 28, 29 ஆகிய நாட்களில் மதுரை மாவட்டத் தி.மு.க.

ஆறாவது மாநாடு சேலம் நகரில் முரசொலி மாறன் தலைமையிலும் சிறப்பாக நடைபெற்றன. கரூர் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான், நான் பேசுவதற்கு முன் மாநாட்டின் முக்ப்பில் கழகத்தின் வளர்ச்சியைக் கண்டு அசூயை கொண்டோர் தீ வைத்தனர். அதையும் மீறி அந்த மாநாடும் சிறப்புற நடைபெற்று முடிந்தது. கழக மாநாடுகள் நடந்து கொண்டிருந்த போதே, இடையில் 13.1.84 அன்று கல்கத்தா நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் மாநாட்டிலே தி.மு.கழகத்தின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

முரசொலி மாறனும் ஆர்க்காடு வீராசாமியும் என்னுடன் வந்திருந்தனர். மேற்குவங்க முதலமைச்சர் ஜோதிபாசு முன்னின்று நடத்திய அந்த மாநாட்டில் பரூக் அப்துல்லா, சந்திரஜித் யாதவ், சந்திரசேகர், என்.டி.ராமராவ், பிஜூ பட்நாயக், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத், மது தண்டவதே, சரத்பவார் போன்ற அகில இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். ஜோதிபாசு அவர்களின் வரவேற்புரைக்குப் பின் நான் உரையாற்றும் போது மாநில சுயாட்சிக் கொள்கை பற்றியும் நாடு சுதந்திரமடைந்து ஆண்டுகள் பல கடந்த பிறகும் இந்தியாவில் ஏழை மேலும் ஏழையாகின்ற நிலைமைதான் உள்ளது என்றும், உண்மையான சோஷலிசம் மக்களுக்கு கிடைக்கப் புதியதோர் பொருளாதார சமூகக் கொள்கையை உருவாக்கப் பாடுபடுவோம் என்றும் கூறினேன்.

கல்கத்தாவிலிருந்து சென்னை திரும்பியதும் ஜனவரி 15ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழாக அதுவரை வெளிவந்து கொண்டிருந்த "ஜனசக்தி" நாளிதழாகத் தொடங்கப்படும் விழாவிலே கலந்துகொண்டேன். அந்த நிகழ்ச்சி 'ராகுகாலத்தில்' நடைபெறுவதாக முன்னால் பேசிய நண்பர் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி நாடே ராகுகாலத்தில்தான் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த ராகு காலத்தைப் போக்க ஜனசக்தியின் பணி அவசியம் தேவை என்று குறிப்பிட்டு என் பேச்சைத் தொடர்ந்தேன்.

அந்தக்காலகட்டத்தில் தமிழகத்திலே வறட்சிநிவாரணப் பணிகளிலே ஊழல், விவசாயக் கடன்களுக்கு ஜப்தி, மின் துண்டிப்புப் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கியதால் அ.தி.மு.க. ஆட்சியினர் மக்களின் கவனத்தைத் திருப்ப மாவட்டங்களைப் பிரிப்பதாகக் கூறி அவற்றுக்குப் பெயரும் சூட்டினர். அப்படிச் சூட்டும் போது, பெரியார் பிறந்த ஈரோட்டைத் தலைநகராகக் கொண்டு பெரியார் மாவட்டம் அமைந்ததைப்போலவோ, காமராஜர் பிறந்த விருதுநகரைத் தலைநகராகக் கொண்டு காமராஜர் மாவட்டம் அமைந்ததைப் போலவோ அறிவிக்காமல் மதுரையைப் பிரித்துத் திண்டுக்கல்லைத் தலைநகராகக் கொண்டு உருவான மாவட்டத்திற்கு அண்ணா மாவட்டம் என்று பெயர் சூட்டினர்.

உடனடியாக தி.மு.கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்த செங்கற்பட்டு மாவட்டத்திற்குத்தான் அண்ணாவின் பெயர் சூட்டப்பட வேண்டுமென்று குரல் கொடுத்தோம். ஆனால் எம்.ஜி.ஆர். அதை ஏற்காமல் 15.7.84 அன்று திண்டுக்கல்லுக்குத்தான் அண்ணா மாவட்டம் என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துவிட்டார். செங்கை மாவட்டத்துக்கு அண்ணா பெயர் சூட்டுவதைக் காஞ்சி சங்கரமடம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மையான காரணமாகும்.

எனவே ஜூலை 16-ஆம் தேதி சென்னை துறைமுகப் பகுதியிலே நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நான் பேசும்போது காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு விளங்கும் செங்கற்பட்டு மாவட்டம் இனி அண்ணா மாவட்டம் என்று தி.மு.கழகத்தின் சார்பில் கருதப்படும், அழைக்கப்படும் என்றும், கழகத்தினர் எழுதும் அனைத்துக் கடிதங்களிலும் அவ்வாறே எழுத வேண்டுமென்றும், எதிர்காலத்தில் தி.மு.க்ழகம் ஆட்சிக்கு வரும்போது அதனை முறைப்படுத்துவோம் என்றும் அறிவித்தேன். அவ்வாறே கழகத்தினராலும் அது அமல்படுத்தப்பட்டு வந்தது.

அந்த ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15,16 ஆகிய நாட்களில் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலே காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கழக மாநாடு அண்ணா மாவட்டக்கழக மாநாடு என்றே அழைக்கப்பட்டுச் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. தி.மு.கழகம் 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும் 1984இல் அறிவித்த அண்ணாமாவட்ட அறிவிப்பினை அதிகாரபூர்வமாக அமல்படுத்தியது. 1984 ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்ற மேலவைக்கும் நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்கும் கழகத்தின் சார்பில் யாரை நியமிப்பது என்று முடிவெடுக்கக் கழகத்தின் நிர்வாகக்குழுக் கூடி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகச் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்த என்னைச் சட்டமன்ற மேலவைக்கும், மாநிலங்கள் அவைக்கு இரண்டாவது முறையாக வை.கோபால்- சாமியையும் நிறுத்துவது என்று முடிவெடுத்துப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அந்த முடிவினை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மார்ச் திங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் நாங்கள் இருவரும் வெற்றி பெற்றோம். 22.2.84 அன்று நெல்லை மாவட்டக்கழகச் செயலாளராக இருந்த தளபதி மஸ்தான் அதற்கு மறுநாளே தஞ்சை நகரக்கழகச் செயலாளரும், அந்தத் தொகுதியிலே நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது என் வெற்றிக்காக அரும்பாடுபட்டவருமான என் நெஞ்சுக்கினிய

நண்பர் தஞ்சை நடராஜன், ஏப்ரல் திங்கள் முதல் வாரத்தில் என்னுடைய நெருங்கிய நண்பரும் நான் எழுதிய திரைப்படமான "பராசக்தி"யை இயக்கிய இரட்டையர்களில் ஒருவருமான பஞ்சு, மே திங்களில், "தி.மு.கழக வரலாறு" எனும் நூலை எழுதியவரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான டி.எம். பார்த்தசாரதி, ஆகஸ்டில் தர்மபுரி மாவட்டக்கழகச் செயலாளராக இருந்த சென்னகேசவன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக இயற்கையடைந்து தனிப்பட்ட முறையில் எனக்கும் கழகத்திற்கும் பெரும் இழப்பினை ஏற்படுத்தினார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அண்ணாநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர்,உப்பிலியாபுரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் 20.5.84 அன்று நடைபெற்றது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகம், ஏராளமான பொருட்செலவு ஆகியவைகளுக்கு ஈடுகொடுத்து அண்ணாநகர், மயிலாடுதுறை ஆகிய இரண்டு தொகுதிகளிலே இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வும் உப்பிலியாபுரத்தில் அ.தி.மு.க.வும் தஞ்சையிலே இந்திரா காங்கிரசும் வெற்றி பெற்றன.

அ.தி.மு.க.வும் காங்கிரசும் உடன்பாடு கொண்டு போட்டியிட்ட நிலையிலும் தி.மு.கழகம் இரண்டு தொகுதிகளிலே வெற்றி பெற்றது பெரும் வெற்றியாக ஏடுகளால் அப்போது விமர்சிக்கப்பட்டது. இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஜூன் திங்கள் 3ஆம் நாள் என்னுடைய மணிவிழா. பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில் மணிவிழாக்குழு அமைத்து ஜூன் 1,2,3 ஆகிய நாட்களில் மணிவிழாச் சிறப்புற நடைபெற்றது. ஜூன் 1 ஆம் தேதியன்று இளைஞர் அணி சார்பில் பெரியார் திடலில் நீலகிரி படகர்கள் நடனத்துடன் விழாத் தொடங்கியது.

தொடர்ந்து நாஞ்சிலார் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்று, அடுத்து இரவு ஹெரான்ராமசாமி குழுவினரின் நாடகத்தோடு முதல்நாள் நிகழ்ச்சிகள் முடிவுற்றன. ஜூன் 2 ஆம் தேதியன்று காலையில் மகளிர் அணி சார்பில் கருத்தரங்க நிகழ்ச்சியும் மாலையில் இலக்கிய அணி சார்பில் கருத்தரங்கம், கவியரங்கம், காவிய நாயகன் என்ற நாட்டிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 3ஆம் தேதியன்று காலையில் வழக்கம்போலப் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் நினைவகங்களுக்குச் சென்று மலரஞ்சலி செய்துவிட்டு இல்லம் திரும்பி உடன்பிறப்புக்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டேன்.

பிற்பகலில் ராயபுரம் அறிவகத்திலிருந்து மணிவிழா ஊர்வலம் நடைபெற்று இரவு கடற்கரை சீரணி அரங்கத்தில் பொதுச்செயலாளர் பேராசிரியர் தலைமையில் மணிவிழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மணிவிழாக் குழுவினர் திரட்டிய இருபது இலட்சம் ரூபாயை இந்தப் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் பேராசிரியர் என்னிடம் வழங்கினார். என்னுடைய ஏற்புரையின்போது, நான் அந்த இருபது இலட்சம் ரூபாய் நிதியினை அப்படியே கழகத்தின் தேர்தல் நிதியாக வழங்கினேன்.

மணிவிழாவினையொட்டி மிகுந்த அக்கறையோடு தயாரிக்கப்பட்ட மணிவிழா மலரைப் பொருளாளர் சாதிக்பாட்சா வெளியிட்டார். துணைப் பொதுச்செயலாளர் நாஞ்சிலார் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் பாபு ஜெகஜீவன் ராம், பகுகுணா, குஜ்ரால், ரெகுநாத ரெட்டி, எம்.கல்யாணசுந்தரம், சங்கரய்யா, அப்துல் சமத், கி.வீரமணி, இரா.செழியன், பழ.நெடுமாறன், நாராயணசாமி நாயுடு அரங்கண்ணல், டாக்டர் சந்தோஷம் ஆகியோர் உரையாற்றினர். 1969ஆம் ஆண்டு பஞ்சாப் முதலமைச்சராக இருந்த குர்நாம் சிங் அழைப்பின் பேரில் பஞ்சாப் போயிருந்ததை முன்பே குறிப்பிட்டுள்ளேன்.

மதபேத உணர்வுகள் தலைகாட்டாத மாநிலமாக அன்று நான் கண்ட பஞ்சாப் 1984,85 ஆம் ஆண்டுகளில் அமளிக்காடாகத் திகழ்ந்தது. 26.1.84 அன்று சீக்கிய தீவிரவாதிகள் பஞ்சாப்பிலே காலிஸ்தான் தனிநாடு கொடியினை ஏற்றினார்கள். தங்களின் கோரிக்கையை பிப்ரவரி 26-ந் தேதிக்குள் ஏற்காவிட்டால் பிப்ரவரி 27ஆம் தேதி பாராளுமன்றத்தின் முன் அரசியல் சட்டத்தை எரிக்கப்போவதாக சீக்கியர்கட்சித் தலைவர் லோங்கோவால் அறிவித்தார். 8.2.84 அன்று பஞ்சாப் மாநிலத்தில் முழுஅடைப்பு நடந்தது.

கத்திகளையேந்தி சீக்கியர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாராளுமன்றத்திற்கு அருகே 27.2.84 அன்று பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் ஐந்து சீக்கிய தலைவர்கள் இந்திய அரசியல் சட்டத்தை எரித்துக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். 1978 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் அகாலிதளத்தின் ஆட்சி நடைபெற்றபோது அந்த ஆட்சியை இறக்கிவிட்டு காங்கிரஸ் ஆட்சியை அமைத்திட வேண்டுமென்ற எண்ணத்துடன் காங்கிரஸ் செயல்பட்டது. அதே நேரத்தில் அகாலிதள ஆட்சிக்கு எதிராக 1978 இல் செயல்படப் புறப்பட்டவர்தான் பிந்தரன்வாலே.

அவருக்குத் துணை நின்று அவரை முடுக்கி விட்டவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தான்! சீக்கிய மதத்தில் ஒரு பிரிவினரான நிரங்காரிகளைப் பழிவாங்க அகாலிதளம் தனக்கு ஒத்துழைப்புத் தரவில்லை என்ற காரணத்தைக் காட்டி அகாலிதளத்திற்கு எதிராகவும், காங்கிரசுக்கு ஆதரவாகவும் பிந்தரன்வாலே கொடி உயர்த்தினார். குருத்துவாரா கமிட்டி தேர்தல்களில் கூட பிந்தரன்வாலே காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அகாலிதளத்தினரைத் தோற்கடித்தார்.

அந்தக் கமிட்டிகளில் ஒன்றுக்கு மாணவர் அமைப்பின் தலைவரான அம்ரிக் சிங்கையே பிந்தரன்வாலே நியமித்தார். அதன் பின்னர் நிரங்காரிகளின் தலைவர் குர்பக்சன் சிங்கையும், பத்திரிகையாளரும் சுதந்திரப் போராட்ட வீரருமான லாலா ஜெகத் நாராயணனையும் கொலைசெய்ததற்கு பிந்தரன்வாலே தான் காரணம் என்று கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதையொட்டி நடைபெற்ற கிளர்ச்சியைக் காரணமாகக் காட்டிக் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அவரை இப்படியெல்லாம் தட்டிக் கொடுத்து டெல்லி ஆதரிக்கிறது என்று இந்தியாவின் அரசியல்வாதிகள் எல்லாம் பேசினார்கள்.

ஆனால் அதே பிந்தரன்வாலே ஓரிரு ஆண்டுகளில் வன்முறைத் தீவிரவாதிகளின் தலைவராக மாறிவிட்டார். 1969 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் குருநானக் விழாவில் கலந்துகொண்ட நான் பேச்சின் இறுதியில் "குருநானக்கின் பெயர் சொல்லிப் பறவைகள் பாடுகின்றன! அந்தப் பாட்டைக் கேட்டு மேகங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன!"

என்று குறிப்பிட்டேன். ஆனால் 1984 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல் நாள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு வெளியே இருந்த இராணுவத்தினருக்கும், கோவிலுக்குள் பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வானம் இரத்தக் கண்ணீர் வடித்தது. 12 பேர் இறந்தனர். 40 பேர் காயமடைந்தனர். மத்திய அரசு கலவரத்தை ஒடுக்கும் பொறுப்பினை ராணுவத்திடம் ஒப்படைத்தது.

இராணுவம் பொறுப்பேற்ற ஒரே நாளில் சீக்கிய தீவிரவாதிகள் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிந்தரன்வாலே பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்தபடியே போராட்டத்தை நடத்தினார். 5.6.84 அன்று இரவு 11 மணிக்கு சீக்கியர்களின் புனிதமான பொற்கோவிலுக்குள் இராணுவம் புகுந்தது. கடும்போர் அன்று இரவு நடை பெற்றது. அதில் 48 இராணுவத்தினர் உட்பட 350 பேர் பலியானர்கள். 450 சீக்கிய தீவிரவாதிகள் கைதானார்கள். ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

சீக்கிய மத நிறுவனத்தலைவர் குரு சரண்சிங் டோக்ரா, சீக்கியர் கட்சித் தலைவர் லோங்கோவால் ஆகியோரும் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். சீக்கிய தீவிரவாதிகளின் தலைவரான பிந்தரன்வாலே என்னவானார் என்பது முதல் நாள் தெரியாவிட்டாலும், மறுநாள் பொற்கோவிலுக்குள் அவரும் அவரது நெருங்கிய ஆதரவாளர்களும் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இராணுவத்தால் சுடப்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?

அல்லது இராணுவத்தின் முன் சரணடைய அவர் மறுத்ததோடு, மற்றவர்களையும் சரணடைய ஒப்புக்கொள்ளாமல் எதிர்ப்புத் தெரிவித்ததால் தீவிரவாதிகளில் ஒரு சிலரே அவரைச் சுட்டுக்கொன்றார்களா? என்பது பற்றிப் பல்வேறு கருத்துக்கள் அப்போது கூறப்பட்டன. புனிதமான கோவிலுக்குள் இராணுவம் புகுந்தது பற்றி நாடெங்கிலுமுள்ள சீக்கியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களிலும், கலவரங்களிலும் ஆங்காங்கு ஈடுபட்டனர். 16.6.84 அன்று ஜலந்தரில் இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் ஹர்தயாள் சிங் சீக்கிய தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குடியரசுத் தலைவரும் பிரதமர் இந்திரா காந்தியும் பொற்கோவிலுக்குள் சென்று சுற்றிப்பார்த்து ஆலயத்தைப் புனிதப்படுத்திடும் காரியங்களில் ஈடுபட ஆணை பிறப்பித்தனர். ஆனால் பஞ்சாப்பில் அன்று தொடங்கிய வன்முறை பல ஆண்டுக் காலம் நீடித்தது, பல உயிர்களைப் பலி கொண்டது. அடிமை இந்தியா சந்தித்த பஞ்சாப் படுகொலையைவிட இது பயங்கரமானது; தொடர்கதையாகவும் ஆனது!