உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பேராசிரியர் மணிவிழா
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பேராசிரியர் மணிவிழா · 279 / 391

63. பேராசிரியர் மணிவிழா ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காகத் தி.மு.கழகம் நடத்திய போராட்டங்களும், அதனைத் தொடர்ந்து நான் உள்ளிட்ட தி.மு.கழகத்தினர் அ.தி.மு.க. ஆட்சியினரால் கைது செய்யப்பட்டுச் சிறையிலே அடைக்கப்பட்டதும், அதனைக் கண்டித்து கோயிலடி பிருந்தாவன், திருச்சி மனோகரன், பெருந்துறை முத்துப்பாண்டியன், திருவாரூர் கிட்டு, சென்னை மேரி, கல்லாவி இராசேந்திரன், மேல்மாயில் ஜெகநாதன் போன்ற ஏழு திருவிளக்குகள் தீக்குளித்து மாண்டும், மேலும் பலர் தீக்குளித்த காயங்களுடன் மீண்டும் இலங்கைத் தமிழர் பிரச்சினை முடிந்து விடவில்லை.

அஃதோர் வீரமிகு தொடர்கதையாகவும், சோகம் பெருகும் நிகழ்ச்சிகளின் கோவையாகவும் அமைந்ததென்றே சொல்லலாம். யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட சிவநேசன் என்ற போலீஸ்காரரை சுட்டுக் கொன்றதாக - தமிழ் இளைஞர்கள் குட்டிமணி, ஜெகன் ஆகியோர் மீது வழக்கு நடைபெற்று, 13.8.82 அன்று இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் அப்போது குட்டிமணி தன்னைத் தூக்கிலிடுவதன் மூலம் பல்லாயிரக் கணக்கான குட்டிமணிகள் உதயமாவார்கள் என்றும் தன் இனத்திற்காகத் தரக்கூடியதாக இருப்பது தன் உயிர் மாத்திரம்தான் என்றும், தன் கண்களைப் பார்வையற்ற ஒரு தமிழ் மகனுக்கு வழங்கும்படியும், அதன் மூலம் மலரப்போகும் தமிழ் ஈழத்தைப் பார்க்கப் போவதாகவும், தன் உடலை யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீடத்திற்கு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டதோடு, தனக்காக வாதாடிய வழக்கறிஞர்களிடம் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக யாரிடமும் மண்டியிட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.

இந்தச் செய்தி வந்ததும், "தமிழ் இனம் மெல்ல மெல்ல அழிவதா?" என்ற தலைப்பிலே முரசொலியிலே கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தின் முடிவில், "வாழ்வின் எல்லைக் கோட்டில் நிறுத்தப்பட்டுள்ள நேரத்திலும் அந்த வாலிபர்களின் வைரம் பாய்ந்த உள்ளத்தினை எண்ணியெண்ணி வையகமே திகைத்துத்தான் நிற்கிறது. தீரர் இருவர்க்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புக் கேட்டுத் தீயை மிதிப்பது போல ஆகிவிட்ட தமிழா! நீ உலகத்தின் எந்த மூலையிலே இருந்தாலும் அந்த இடத்தில் நீ தன்னந்தனியனாக ஒருவனாக இருந்தாலும், அந்த இளந்தம்பிகளின் உயிரைக் காக்க, எஃகுக் கம்பிகளின் மரண தண்டனையைத் தடுத்து நிறுத்தக் குரல் கொடுத்தே ஆக வேண்டும்.

உடன்பிறப்பே, உனக்கும் எனக்கும் ஏற்படுகிற இந்த உணர்வு எங்கெங்குமிருக்கின்ற எல்லாத் தமிழர்க்கும் ஏற்பட்டே தீரும்! ஏற்பட்டே ஆக வேண்டும்! இல்லையேல் தமிழ் இனம், மெல்ல மெல்ல - ஆனால் உறுதியாக அழிக்கப்பட்டே விடும்!" என்று எழுதியிருந்தேன். மேலும் தி.மு.கழகத்தின் சார்பில் ஆகஸ்ட் 28ஆம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நாள் என்ற பெயரில் அன்றையதினம் காலையில் அனைவரும் தங்கள் உடையில் கறுப்புச் சின்னங்கள் அணிய வேண்டுமென்றும், மாலையில் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நாளில் திராவிடர் கழகமும் பங்கேற்குமென்று தளபதி கி.வீரமணி அறிவித்தார். 27.8.82 தேதியிட்ட முரசொலியில் மீண்டும் ஒருமுறை கடிதம் எழுதினேன். சென்னையிலே நடைபெற்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நாள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யும்படி கேட்டு இலங்கை அதிபருக்கு - ஜெயவர்த்தனேவிற்குத் தந்திகள் கொடுக்கும்படியும், வசதியில்லாதவர்கள் கடிதம் மூலம் அந்த வேண்டுகோளை அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டேன்.

அவற்றின் நகல்களை இந்தியப் பிரதமருக்கும் அனுப்பி வைக்க வேண்டுமென்றும், கட்சிச் சார்பற்ற முறையிலே அனைத்துத் தரப்பினரும் தமிழன் என்ற உணர்வோடு அதனைச் செய்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டேன். ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர், 1983ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் இலங்கையில் மீண்டும் இனவெறி கோரத்தாண்டவமாடியது. தமிழ் இனப் படுகொலைகள், கொள்ளைகள், தீ வைப்புகள், கற்பழிப்புகள் போன்ற காரியங்களில் சிங்கள இன வெறியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, 25.7.1983 அன்று பிற்பகல் 2.30 மணி அளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிங்களக்காடையர் வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்ற தமிழ் இளைஞர்கள் அடைப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் முன்னேற்பாட்டின்படி திறந்து வைக்கப்பட்டிருந்தன. கத்திகள், கோடரிகள் இருப்புக் கம்பிகள், விறகு கட்டைகளால் தமிழ் இளைஞர்களின் உடலைப் பதம்பார்த்தனர்.

வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதியால் வெலிக்கடை சிறைக்கூடமே சிவப்பாகியது. தமிழ் இளைஞர்களுடைய தலைகள் பிளக்கப்பட்டன. அனைத்துக் கொடுமைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றன. தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றவர்களைக் குறி வைத்துச் சித்திரவதை செய்து கொன்றனர். அன்றைய சம்பவத்தின் காரணமாக 35 தமிழர்கள் படுகொலைக்கு ஆளானார்கள். கழகச் சட்டமன்றக்கட்சி அலுவலகத்தில் இருந்த எனக்கு, இலங்கையிலிருந்து சென்னைக்கு முற்றாகச் செய்தி தகவல் தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டதால், இலண்டன், பாரீஸ் நகரிலிருந்து தமிழர்கள் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு அழுது கொண்டே இந்தத் தகவலைக் கூறினார்கள்.

பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மறுநாளே சென்னையில் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெறுமென்று அறிவித்தேன். ஏழுமணி நேர அவகாசத்தில் எட்டு இலட்சம் பேர் அந்தப் பேரணியில் பங்கேற்றனர். சென்னை நகரில் எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை. ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடவில்லை. ஈழத் தமிழர்களைக் காக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமரைக் கேட்டுக் கொண்டேன். டெல்லியிலுள்ள இலங்கைத் தூதுவரக அலுவலகத்திற்கு தி.மு.க.

உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊர்வலமாகச் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். 27.7.1983 அன்று மீண்டும் 18 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 19 பேர் பயங்கர அனுபவங்களோடு தப்பிப் பிழைத்தனர் என்ற செய்தியும், தொடர்ந்து நான்கு நாட்கள் இலங்கையிலே நடைபெற்ற வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலைக்கு ஆளாகினர் என்றும் தகவல்கள் வந்தன. சென்னையில் குடியிருந்த குட்டிமணி, ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கெல்லாம் ஆறுதல் கூறினேன்.

ஜூலை 31அன்று ஏற்கனவே நடைபெறுவதாக விளம்பரப்படுத்தப்பட்ட முகவை மாவட்டக் கழக மாநாடு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாடாக இராமனாதபுரம் நகரிலே நடத்தப்பட்டது. தமிழக அரசு 2.8.83 அன்று முழுஅடைப்பு என்று அறிவித்து, அதுவும் தமிழகம் முழுதும் நடைபெற்றது. முகவை மாவட்டக்கழக மாநாட்டில் 4.5.83 அன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டமும் 5.8.93 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டமும் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் மத்திய அரசு தானாக முன் வந்து அன்றையதினம் தமிழகத்திலே ரெயில்கள் ஓடாதென அறிவித்துவிட்டது. 7.8.8.3 அன்று தி.மு.கழகத்தின் செயற்குழுக் கூடி, ஐ.நா மன்றத்திற்கு இலங்கைத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று கோரி வேண்டுகோள் விடுக்கும் படிவத்தில் இரண்டு கோடி கையொப்பங்களைப் பெற்று ஐ.நா. சபைக்கு அனுப்புவதென்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் மத்திய மாநில அரசுகள் ஈழத்தமிழர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்தாததைக் கண்டித்து, 10.8.83 அன்று நானும், கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியரும் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதங்களைப் பேரவைத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம்.

ஆனால் பேரவைத்தலைவர், அந்தக் கடிதங்கள் முறைப்படியான படிவத்திலே எழுதப்படவில்லை என்று காரணம் கூறிப் பதவி விலகினால் அது செல்லாது என்றும் தெரிவித்துவிட்டார். எனினும் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளாமல், பேரவைத் தலைவர் கூறிய படி ராஜினாமா கடிதங்களை எழுதி எடுத்துக்கொண்டு ஊர்வலமாகவே சென்று எங்களுடைய பதவிவிலகல் கடிதங்களைக் கொடுத்தோம். முகவை மாவட்டத்திலும், கழகச் செயற்குழுவிலும் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில், 8.8.83 அன்று டெல்லியில் தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்.கணேசன், வை.கோபால்சாமி இருவரும் உண்ணாநோன்பினைத் தொடங்கினார்கள்.

கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் முரசொலி மாறன் தலைமையில், அனைத்துக் கட்சியினரும் உரை ஆற்றிட நோன்பு தொடங்கியது. கழகத் தலைமை, அடையாள உண்ணா நோன்பே போதுமென்று கருதி, சாகும்வரை உண்ணாவிரதம் என்ற அறப்போராட்டத்தைக் கைவிடவேண்டுமென்று கேட்டு தந்திக் கொடுத்ததின் பேரில், அவர்கள் உண்ணா நோன்பினை முடித்துக் கொண்டனர். ஆகஸ்ட் திங்கள் 11, 12, 13, 14 ஆகிய நாட்களில் தமிழகம் முழுதும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகக் கூட்டங்களை நடத்துவதென்றும், இலங்கை அரசு பிரிவினை கேட்பதைத் தடை செய்து புதிதாகச் சட்டம் இயற்றியிருப்பதைக் கண்டித்து, அந்தச் சட்டத்தை எரிப்பது என்றும் முடிவெடுத்து அவ்வாறே நடைபெற்றன.

25.8.83 அன்று காலையில் பிரதமரின் தூதுவராக ஜி.பார்த்தசாரதி அவர்கள் என்னை சென்னையிலே சந்தித்துப் பேசிவிட்டு, அன்று மாலையில் இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார். இலங்கைத்தமிழர் பிரச்சினையில் பிரதமர் இந்திரா காந்தி விடுதலைப் போராளிகளிடம் கொண்டுள்ள பரிவையும் - அந்த அடிப்படையில் அவர் வழங்கிடும் உதவிகளையும் ஜி.பார்த்தசாரதி அவர்கள் என்னிடம் விளக்கினார். இலங்கைத் தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களும் என்னைச் சந்தித்துப் பேசியதோடு, பார்த்தசாரதியின் அழைப்பையேற்று அவரும் இலங்கைக்குச் சென்றார்.

ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் - "இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத் தமிழகத்தை உருவாக்கித் தருமானால் தமிழகத்திலே காங்கிரஸ் கட்சியே ஆளட்டும், பத்தாண்டுக் காலத்திற்கு ஆட்சிக்கு வர தி.மு.கழகம் முயற்சி எடுக்காது" என்று கூறினேன்.

தமிழினப் படுகொலைக்கு நீதிகோரி தி.மு.கழகம் ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா.சபைக்கு - சுமார் ஆயிரம் பவுண்டு எடை கொண்ட அந்த மனுக்களை அனுப்பி வைத்தது. அதைக்கண்ட ஐ.நா.உயர் அதிகாரி, தன்னுடைய பத்தாண்டுக் கால அனுபவத்தில் இத்தனை இலட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மனுக்களைப் பெற்றது இதுவே முதல் தடவை என்று கூறினார். அந்த மனு ஜெனீவா நகரில் அடுத்துக்கூடும் மனித உரிமைக் கழக மாநாட்டில் விவாதிக்கக் கூடிய பொருட்களில் ஒன்றாகச் சேர்க்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது.

இலங்கையிலே தமிழர்கள் படும் துயரத்திற்கு இன்றளவும் முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. அங்கே வாழும் தமிழர்களுக்காக தி.மு.கழகம் ஒவ்வொரு முறையும் தன்னாலியன்ற அளவிற்குக் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. பல நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட பிறகு, இலங்கையில் 1983 அக்டோபருக்குப் பிறகு சற்று அமைதி தோன்றியது. இருந்தாலும் அந்த அமைதியும் ஒருசில நாட்களுக்குத்தான்! முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களின் 86-வது பிறந்த நாளையொட்டி 9.10.82 அன்று காலையில் அவருக்கு மாலை அணிவிப்பதற்காக அவரது இல்லத்திற்குச் சென்ற போது, அவரது இல்லத்திலேயே பல சான்றோர்கள் அவரை வாழ்த்தி உரையாற்றிய பிறகு, அவர் ஏற்புரையாற்றிக் கொண்டிருந்தார்.

நான் அருகே சென்று மாலை அணிவித்ததும் என்னைப்பற்றிக் குறிப்பிட்டு அவர் ஏற்புரையிலே கூறியதாவது:- "கலைஞர் அவர்களை தனியாக நாம் வரவேண்டுமென்று அழைக்கவில்லை. அழைக்கவில்லை என்றால், அலட்சியமாகக் கூப்பிடாமல் இல்லை. ஒருக்காலும் அலட்சியம் இல்லை. இருந்தாலும் கலைஞர் இங்கு வந்திருப்பதை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நேற்று மாலை எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் பெரியகுளம் தேர்தல் முடிவு பற்றிக் கலைஞர் அவர்களை நீங்கள் ஏன் பாராட்டினீர்கள் என்று கேட்டார்.

இவ்வளவு கஷ்டத்திற்குப் பிறகும் இன்னொரு புறத்தில் எவ்வளவோ செல்வாக்கு கலைஞருக்கு இருக்கிறது. பெரியகுளத்தில் இவ்வளவு வாக்குகள் வாங்கியிருப்பது பாராட்டுக்குரியது என்று சொன்னேன். பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்ட வேண்டும். குறை சொல்ல வேண்டிய நேரத்தில் குறை சொல்கிறோம். கலைஞர் இன்று இங்கே வந்ததற்காக என் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

என்று கூறினார். அவருடைய ஏற்புரை முடிந்துவிட்ட போதிலும், என்னையும் வாழ்த்துரை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் நான் பெரியவர் பக்தவத்சலம் அவர்களைப் பற்றியும், அவருக்கும் எனக்கும் இடையே நடைபெற்ற பல சம்பவங்கள் பற்றியும் அவரது நிர்வாகச் சிறப்புகள் பற்றியும், அவரது பெருந்தன்மை, பரந்த உள்ளம் பற்றியெல்லாம் விளக்கமாக உரையாற்றினேன். அக்டோபர் திங்கள் 21ஆம் நாள், என்னுடைய தலைமையிலே பேராசிரியர் அவர்களின் மணிவிழாவினைத் தலைமைக் கழகமே கொண்டாடுவதற்காக மணிவிழாக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

தி.மு.கழகத்தின் மாபெரும் திருவிழாபோல, 19.12.1982 அன்று சென்னை பெரியார் திடலில் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களின் மணிவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. இடையிலே ஒருமணி நேர இடைவெளிதான்! காலையில் இளைஞர் அணியினர் கருத்தரங்க நிகழ்ச்சியினை நடத்தினர்; பிற்பகலில் இலக்கிய அணியினர் கவியரங்க நிகழ்ச்சியையும், மாலையில் தலைமைக் கழகத்தின் சார்பில் வாழ்த்துரை வழங்கும் நிகழ்ச்சி அனைத்துக் கட்சித்தலைவர்கள், சான்றோர்கள், புலவர்கள் ஆகியோர்களைக் கொண்டு நடைபெற்றன.

19ஆம் தேதிய முரசொலி மலரிலே பேராசிரியரின் மணி விழாவையொட்டி நான் எழுதிய கவிதை வாழ்த்து இதோ:- உடன்பிறப்பே, உனக்கு மணிவிழா! நமது குடும்பத்தின் திருவிழா - உன் நாக்குத் தமிழ் மணத்தால் கழக நந்தவனம் சிறக்கும் உன் வாக்குத் திறத்தாலே வஞ்சினப் பகையனைத்தும் பறக்கும் - உன் ஆக்கப்பணிகள் கழகத்தைக் காத்து - நெடுந் தூக்கத் தமிழரை எழுப்பும்! நீயோர் ஒளி மணி; ஓயாமல் ஒலிக்கின்ற தமிழ் மணி! பள்ளந்தான் தமிழர் வாழ்வில் விழலாமோ என்று, உள்ளந்தான் கொதிதெழுந்தால் - புது வெள்ளந்தான் உந்தன் பேச்சு!

வீரம் செய்கின்ற இனத்தின் மூச்சு! வெற்றி விளைக்கின்ற வாளின் வீச்சு! அகமென்றும் புறமென்றும் அடுக்கிடும். அருந்தமிழ் இலக்கியங்கள் தேன் வடித்திடும்! புலவர் கூட்டமோ, அதனை உன்பால் பருகத் துடித்திடும்! பெரியாரின் பிள்ளைகள் நாம் பேரறிஞர் தம்பிகள் நாம் - என்றும் பிரியாத இருவண்ணக் கொடியே நாம் - இந்தப் பெருங்குடும்பம் பெருமகிழ்வுக் கடலில் துள்ள அருமருந்தே! அன்பழக உடன்பிறப்பே! அறுபது நிறை மணிவிழாப் போல் - இன்னும் அடுக்கடுக்காய் பலவிழாக் காண நீ பல்லாண்டு வாழியவே!

அன்று மாலையில் நடைபெற்ற வாழ்த்துரை வழங்கும் விழா நிகழ்ச்சிக்கு நான் தலைமை தாங்கினேன். நாஞ்சிலார் வரவேற்புரை ஆற்றினார். மணிவிழாக்குழுவின் சார்பில் பெரியவர் பக்தவத்சலம் பேராசிரியருக்குப் பொன்னாடை போர்த்தினார். தலைமைக் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட மணிவிழா மலரை

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் வெளியிட, முதல் மலரை சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் நெ.து.சுத்தரவடிவேலு பெற்றுக் கொண்டரர். தலைமைக் கழகத்தின் சார்பிலே பேராசிரியர் அவர்களுக்கு புதுக்கார் ஒன்று வாங்கிப் பரிசளிக்கப்பட்டது. மாநில இளைஞர் அணியினர் தமிழ்த் தட்டச்சு இயந்தியரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினர். இறுதியாக நான் உரையாற்றிய பிறகு பேராசிரியர் அன்று உருக்கமிகுந்த ஏற்புரை ஒன்றை நிகழ்த்தினார்.

கழகப் பொருளாளர் சாதிக் பாட்சா நன்றி கூறினார். விழா மறுநாள் காலை 1 மணிக்குத் தான் முடிவுற்றது. பேராசிரியர் தனது ஏற்புரையில் என்னைப் பற்றிக் குறிப்பிடும் போது - "இந்தப் பெரிய விழாவினை என்னுடைய மணி விழா என்ற பெயரால் கலைஞர் அவர்கள் தானே பொறுப்பேற்று நடத்தி, என்னையும் இந்த அளவு பெருமைக்குரியவராக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். கலைஞர் எனக்கு மணிவிழா எடுக்கவேண்டுமென்று எண்ணுகிறார் என நான் அறிந்தபோது என்னிடத்தில் அவ்வளவாக அதுபற்றிப் பேசாமல் கழகத்தின் முன்னணியினரிடத்தில் அவர் கலந்து பேசியபோது, இந்த மணிவிழாவை மிகப்பெரிதாக நடத்த வேண்டுமென்று அவர் திட்டமிட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து ஒரு சாதாரணப் பொதுக் கூட்டம் நடத்தினால் போதுமென்ற என்னுடைய விருப்பத்தை - வேண்டுகோளை அவரிடத்தில் நான் தெரிவித்தேன்.

இருந்தாலும் அவரது உள்ளத்தில் என்னை மற்றவர்கள் பாராட்டுவதன் மூலம் பெருமகிழ்ச்சி அடையவேண்டும் என விரும்பினார் எனக்கருதுகிறேன். நான் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு - ஒருவேளை நான் அவருக்குச் செய்வதாக இருந்தால் என்னால் செய்ய முடியாத அளவிற்கு - இந்த விழாவை இவ்வளவு பெருமையாக பெரிய அளவில் நடத்தியிருக்கிறார். இந்த விழாவிற்குக் கலைஞர்தான் தலைவர் என்றாலும், அவரேதான் தொண்டர்; படைத்தலைவர்; அவரேதான் செயலாளர்; அவரேதான் சுவரொட்டிகள் எப்படி அமைய வேண்டுமென்று சொன்னவர்; அவரே தான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்; அவரேதான் மற்ற தலைவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதி மணிவிழா நிதி வசூலித்தவர்.

இப்படி அத்தனை வேலைகளையும் செய்து, இந்த விழாவை அவர் நடத்துகின்றபோது இவ்வளவு பெரிய காரியத்திற்கு நன்றி எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கலைஞரை உணர்ந்தவன் என்ற காரணத்தால் அவருக்கு நான் நன்றி சொல்லத் தேவையில்லை. யாருக்காவது நான் நன்றி சொல்ல வேண்டுமானால் என்னிலிருந்து அவர்களைக் கொஞ்சமாவது பிரித்துப் பார்க்கக் கூடிய வாய்ப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். நான் கலைஞரை என்னிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஆளாகி ஏறத்தாழ பத்து, பன்னிரண்டு ஆண்டுக் காலம் ஆகிறது.

நான் முதன் முதலில் கலைஞடைப் பார்த்தபோது ஆயிரக்கணகான தோழர்களில் ஒருவராகத்தான் பார்த்தேன். சட்டமன்ற உறுப்- பினராகப் பார்த்தபோது பதினைந்து பேரிலே ஒருவராகப் பார்த்தேன். அண்ணா விருகம்பாக்கம் மாநாடு நடத்தியபோதுதான் மூவரிலே ஒருவராக அவரை நான் பார்த்தேன். நாவலர் நம்மை விட்டுப் பிரிந்தபோதுதான் என்னிலே ஒருவராக அவரை நான் பார்த்தேன். இந்த உணர்வு ஏற்பட்டதற்குப் பின்னர், அவர் கோப்பெருஞ்சோழனாக வீற்றிருந்தாலும், நான் பிசிராந்தையாராக அவரைச் சார்ந்து நிற்பேன்.

கலைஞர் தமிழ்மக்களுக்கு வழிகாட்டுகிற வள்ளுவராகத் திகழ்ந்தால், நான் அவருக்கு உரை எழுதுகிற ஒரு தமிழ் அறிஞனாகத் தான் விளங்குவேன். அவர் தந்தை பெரியார் அவர்களது உணர்வைப் பெருக்கிக்காட்டி அந்த உணர்வை எடுத்து வைத்தாரேயானால் நான் அண்ணாவினுடைய பாணியிலே செயலாற்றினால், என்னாலும் பெரியாருடைய பாணியிலே செயலாற்ற முடியும். எந்த வகையாக இருந்தாலும் தமிழ்ச் சமுதாயத்திற்கு நாங்கள் கடமைப்பட்டவர்கள் என்ற ஒரே உணர்வுதான் எங்களை உள்ளடக்கியிருக்கிறது.

நன்றி சொல்லப்படுவதல்ல; அது செய்து காட்டப்படவேண்டியது. வார்த்தைகளாலே நிறைவடையாது. என்னுடைய உழைப்பு கலைஞருடைய உழைப்புக்கு ஈடுகொடுக்கக் கூடியதல்ல...." என்றார். பேராசிரியர் அவர்களின் மணிவிழா நிகழ்ச்சிகள் இவ்வாறு சிறப்பாக நடைபெற்று முடிந்தன. லெனின் கொள்கைகளை உண்மையாகக் கடைப்பிடித்து, கம்யூனிச கொள்கைக்காக அரும்பாடுபட்ட ரஷ்ய அதிபர் பிரஸ்நேவ் தனது 75-வது வயதில் 10.11.82 அன்று காலையில் மரணமடைந்தார்.

29 ஆண்டுகள் ரஷ்யாவில் பதவி வகித்த ஸ்டாலினுக்குப் பிறகு, 18 ஆண்டுகள் என்ற அளவிற்கு நீண்ட காலம் பதவி வகித்தவர் பிரஸ்நேவ். ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் பதவியும், ரஷ்ய ஜனாதிபதி பதவியும் அவரிடம் இருந்ததால் சர்வ அதிகாரம் படைத்த இரும்பு மனிதராக அவர் விளங்கினார். நேருவிற்கு நெருங்கிய நண்பராக விளங்கியவர் பிரஸ்நேவ். 1975ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுக்காலமாக உடல் நலக்குறைவாகவே இவர் இருந்து வந்தார்.

இந்தியாவின் சார்பில் பிரதமர் இந்திரா காந்தி இறுதி நிகழ்ச்சிக்காகச் சென்று கலந்து கொண்டார். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி அவசரமாகக் கூடி பிரஸ்நேவ் அவர்களுக்கு அடுத்த அதிபராக 68 வயதான ஆண்ட்ரோபோவ் அவர்களை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது. அதே திங்கள் 15ந் தேதியன்று காலையில் இந்தியாவில், பூமிகான் இயக்கத் தலைவரும், மகாத்மா காந்தி அடிகளின் சீடருமான வினோபாபாவே அவர்கள் தனது 87வது வயதில் மறைவெய்தினார்.

பிரஸ்நேவ் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த ரஷ்யா சென்றிருந்த இந்திரா காந்தி, உடனடியாக இந்தியாவிற்குத் திரும்பி வினோபா அவர்களின் இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிரஸ்நேவ் அவர்களுக்குப் பிறகு பதவிக்கு வந்த ஆண்ட்ரோ போவ் நீண்ட நாள் பதவியிலே இருக்கவில்லை. சிறுநீரகக் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்ட இவர் 9.2.1984 அன்று இயற்கை எய்தினார். இவருக்கு அடுத்த, ரஷ்யாவின் புதிய அதிபராக செர்னங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரும் நீண்ட நாள் வாழவில்லை. ஓராண்டுக் காலத்தில் உயிர் துறந்தார். அவருக்குப்பின் கார்ப்பசேவ் அவர்கள் சோவியத் அதிபராகப் பொறுப்பேற்றதும்; அவர் வகுத்த புதிய கொள்கையான "பெரிஸ்ட்ரோயிகா" (சீர்திருத்தம்) காரணமாக ஏற்பட்ட குழப்பங்களும், சோவியத் யூனியன் சிதறுண்டதும் சுமார் 75 ஆண்டுக்கால சோவியத் ரஷ்யா எனும் மிகப்பெரிய கம்யூனிச நாட்டின் வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதத்தக்க நிலையை உருவாக்கியதை மறக்க முடியாது.