நெஞ்சுக்கு நீதி
பொய்ப்புகார் பொடிப்பொடியானது! · 278 / 391
62. பொய்ப்புகார் பொடிப்பொடியானது! ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 9 ஆம் தேதி முதல் குடியரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், போட்டியிருந்தால் வாக்குப் பதிவு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பதவியிலே இருந்த நீலம் சஞ்சீவரெட்டி, தான் மீண்டும் ஒரு முறை போட்டியிடப்போவதில்லை என்று செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் பற்றி பிரதமர் இந்திராகாந்தி என்னை அழைத்துக் கருத்துக் கேட்டது குறித்துச் சென்ற அத்தியாயத்தில் எழுதியிருந்தேன். அப்போது டெல்லிக்கு நானும் மாறனும் வீராசாமியும் சென்றிருந்தோம். பிரதமரிடம் பேசும்போது நான் வலியுறுத்திக் கூறியதை அவர் கவனமுடன் கேட்டுக் கொண்டார். அவருடைய மனத்தில் ஆர். வெங்கட்ராமன் பற்றிய எண்ணமிருந்ததாக அறிந்தேன். சூழ இருந்தோர் அவ்வாறு ஒரு கருத்தை அவர் இதயத்தில் திணித்திருந்தார்கள் போலும்.
ஆர். வெங்கட்ராமன் இல்லையேல் நரசிம்மராவ் என்றும் நினைத்திருந்தார். என் கருத்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. நான் பிரதமரிடம் சொன்னது வருமாறு:- "நீங்களும் உயர்வகுப்பைச் சேர்ந்தவர். ஆர்.வெங்கட்ராமனும் உயர் வகுப்பைச் சேர்ந்தவர். இந்தியாவில் இருபெரும் பதவிகளும் உயர்வகுப்பாருக்கு என்ற எண்ணம் வருதல் நல்லதல்ல. இப்போதுதான் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடியரசுத்தலைவர் இருந்திருக்கிறார். மீண்டும் ஆந்திராவைச் சேர்ந்த நரசிம்மராவ் அந்தப் பதவிக்கு வருவதும் ஏற்புடையதாக இருக்காது.
எனவே இந்த முறை ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவியுங்கள்" என்றேன். அந்த பிற்படுத்தப்பட்ட வேட்பாளர் யார் என்று அவர் என்னைக் கேட்டபோது, கியானி ஜெயில் சிங் பெயரை நான் குறிப்பிட்டேன். அதுவரை அவருக்கு ஜெயில் சிங் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியாது. எனவே பிரதமர் தன்னுடைய செயலாளர் தவானை அழைத்து கியானி ஜெயில்சிங் என்ன வகுப்பைச் சேர்ந்தவர் என்று விசாரிக்கச் சொன்னார்.
மீண்டும் ஐந்து நிமிடங்களில் உள்ளே வந்த தவான் பஞ்சாப்பில் பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்தவர் ஜெயில் சிங் என்று குறிப்பிட்டவுடன், 'எனக்கே இது- வரை தெரியாது' என்று இந்திரா காந்தி கூறினார். அன்று பிரதமர் கையாலேயே எங்களுக்கு மாலைச் சிற்றுண்டி வழங்கியது பசுமையான நினைவுகளில் ஒன்றாகும். இறுதியாக பிரதமர் இந்திரா காந்தி என்னுடைய கருத்தையே ஏற்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த கியானி ஜெயில் சிங் அவர்களை இந்திரா காங்கிரஸ் அணியின் சார்பிலே குடியரசுத் தலைவர் வேட்பாளராக முடிவெடுத்து அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கிரேன் முகர்ஜி பெயர் முதலிலேயே அறிவிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலிலே அவருடைய பெயர் இல்லாததால் பிறகு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.ஆர். கன்னாவை நிறுத்தவதென்று அறிவித்தார்கள். 22.6.1982 அன்று ஜெயில் சிங் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பிலும் ஒரு வேட்புமனு ஜெயில் சிங்கை வேட்பாளராக, நான் முன்மொழிந்தும் சி.டி.தண்டபாணி, கே.மாயத்தேவர் ஆகியோர் வழிமொழிந்தும் தாக்கல் செய்யப்பட்டது.
28-ஆம் தேதி இரவு 7.45 மணி அளவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஜெயில் சிங் அவர்கள் தி.மு.கழகத்தின் ஆதரவைக் கோருவதற்காகத் திராவிட முன்னேற்றக் கழகக் சட்டமன்றக் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்கள். அவருடன் மூப்பனார், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோரும் உடன் வந்தனர். ஜெயில்சிங் அவர்களுக்கு நானும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணியும் மாலை அணிவித்து வரவேற்றோம்.
கழகத்தின் சார்பில் ஒரு தேநீர் விருந்தும் ஜெயில்சிங் அவர்களுக்கு அங்கேயே தரப்பட்டது. கழகத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் சமதும் மக்களவைத் துணைத் தலைவர் ஜி.லெட்சுமணனும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஜெயில்சிங் அவர்களை அந்த நிகழ்ச்சியிலே வரவேற்றுப் பேசும்போது, "பிரதமர் இந்திரா காந்தி இந்திய நாட்டுக்கும், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒரு பரிசைத் தருவதுபோல் ஜெயில்சிங் அவர்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள்" என்று நான் குறிப்பிட்டேன்.
வரவேற்புக்கு நன்றி கூறும்போது ஜெயில் சிங் அவர்கள், "நான் இந்திரா காங்கிரஸ் வேட்பாளராக வந்திருக்கிறேன். தி.மு.கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பும், விருந்தும் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட முதலில் என்னை ஆதரித்தது திரு.கருணாநிதி அவர்கள்தான். அப்போதே உங்களுடைய ஆதரவு எனக்குக் கிடைத்துவிட்டது. அதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன" என்றார்.
பிறகு இந்திரா காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி அலுவலகத்திற்கு ஜெயில் சிங் சென்று காங்கிரஸ் கட்சிச் சார்பில் தரப்பட்ட வரவேற்பையும், அதன் பின்னர் கன்னிமாரா ஓட்டலில் அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அளித்த விருந்திலே கலந்துகொண்டு அவர்கள் அளித்த ஆதரவையும் ஏற்றுக் கொண்டார். 12.7.1982 அன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்தியா முழுவதும் நடைபெற்றது. ஜெயில் சிங் 7,54,113 வாக்குகளும், கன்னா 2,82,685 வாக்குகளும் பெற்றனர்.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கக் கூடிய இந்தத் தேர்தலில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும் செல்லாத வாக்குகள் என்பதுதான் வேடிக்கையான செய்தி. வெற்றிபெற்ற ஜெயில் சிங்கிற்கும், பிரதமர் இந்திரா காந்திக்கும் வாழ்த்துத் தந்திகளைக் கழகத்தின் சார்பில் அனுப்பினேன். 25.7.1982 அன்று இந்தியாவின் 7-வது குடியரசுத் தலைவராக ஜெயில் சிங் பதவியேற்றார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் பதவிப் பிரமாணத்தைச் செய்து வைத்தார்.
புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஜெயில் சிங் எனக்கு எழுதிய கடிதத்தில்- "தாங்களும் தங்கள் கட்சியும் தந்த அனைத்து உதவிகளுக்கும், ஒத்துழைப்புகளுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புகூர்ந்து அதை ஏற்றிடுக. இந்தப் புதிய பதவியின் பெரும் பொறுப்பினை நிறைவேற்றவும், இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட, வறிய, நசுக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டாற்றவும் தங்கள் நல்வாழ்த்தும் தொடர்ந்த ஒத்துழைப்பும் எனக்கு உதவும்" - என்று குறிப்பிட்டிருந்தார்.
இளைஞர் அணி தொடங்கப்பட்ட இரண்டாம் ஆண்டு விழா திருச்சி மாநகரில் ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய நாட்களில் மிகப்பெரிய மாநாட்டினைப் போல் நடத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்த மாணவர்கள், இளைஞர்கள் பிரதிநிதிகளோடு கலந்துரையாடல் என்ற வகையிலும், இரண்டாம் நாளன்று இளைஞர் அணியின் பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணியின் முடிவிலே நான், பேராசிரியர், சாதிக்பாட்சா, நாஞ்சிலார், அன்பில் தர்மலிங்கம் மற்றும் கழக முன்னணியினர் உரையாற்றி- னோம்.
இந்த நிகழ்ச்சியிலேதான் முறையாக இளைஞர் அணிக்காக ஒரு அமைப்புக்குழு பொதுச் செயலாளரால் அறிவிக்கப்பட்டது. அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின், திருச்சி சிவா, இளம்வழுதி, வாலாஜா அசேன், தாரை மணியன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜெயம் ஜூலியஸ், திருப்பத்தூர் பஞ்சவர்ணம் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். கழகத்தையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்தவரும், இலட்சியக் காளையும், நாடாளுமன்ற உறுப்பினருமான கம்பம் நடராஜன் திடீர் மாரடைப்புக் காரணமாக மதுரை மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி மறைந்துவிட்டதாகவும், அவரது உடல் அவருடைய சொந்த ஊரான கம்பத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் மதுரையிலிருந்து வந்த தொலைபேசிச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
கல்லூரியில் படித்த காலந்தொட்டுக் கழகத்தின் மீதும், குறிப்பாக என்மீது தனிப்பட்ட முறையிலும் பாசம் கொண்டவர். நாடாளுமன்றத் தேர்தலிலே வேட்பாளராக நிற்க அவருடைய குடும்பத்தினர் மறுப்புத் தெரிவித்த நிலையிலே என்னுடைய விருப்பம் அது என்று தெரிந்ததும், அந்தத் தேர்தலிலே நின்று மகத்தான வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக ஆனவர் - இடையிலே மறைந்தார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடனடியாகப் புறப்பட்டுச் சென்றேன்.
2.7.82 தேதிய முரசொலியில் என் கடிதத்தின் தலைப்பு "போய்விட்டாயா; போர்வாள் மீசைக்காரா!" என்பது அந்த மாவீரனின் நினைவாகத்தான். 1980 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது தி.மு.கழகமும் இந்திரா காங்கிரசும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டபோது பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றிபெற்ற தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர் கம்பம் நடராஜன் மறைந்ததையொட்டி, செப்டம்பர்த் திங்கள் 26-ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென்றும், ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்த தேர்தல் அறிவிப்பு வரும்வரை தி.மு.கழகமும், இந்திரா காங்கிரசும் கடந்த தேர்தலில் அமைத்த கூட்டணி முறிந்து விட்டதாக அதிகாரப்பூர்வாக இரு தரப்பினராலும் அறிவிக்கப்படவில்லை. மேலும் ஜூலைத் திங்களில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, இந்திரா காந்தியே என்னை நேரில் வரச்சொல்லி, குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் யார் என்பதைக் கூடத் தெரிவித்த நிலையில் பெரியகுளம் இடைத்தேர்தல் வந்தது.
இடையில் நடைபெற்ற திருப்பத்தூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலில்கூட, கூட்டணி அடிப்படையிலேதான் தி.மு.கழகம் தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. தேர்தல் பிரச்சாரத்திற்கு காங்கிரசார் தி.மு.க.வை அழைக்காத காரணத்தினால், தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரில் செல்லவில்லை. ஆனால் அ.தி.மு.க. அந்தத் தேர்தலின் போது, அதற்கு முன்பு அவர்கள் உறவு வைத்திருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளைரைப் புறக்கணித்து விட்டு, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பணியாற்றியது.
பெரியகுளம் தொகுதியில் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அந்தத் தொகுதியிலே இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுமென்றும், தி.மு.க.வைத் தவிர மற்ற எதிர்க்கட்சிகளும், இந்திரா காங்கிரசும் தங்களை ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த குமரி அனந்தன் அ.தி.மு.க.விற்கு வைத்த கோரிக்கையில் இந்திரா காங்கிரசுடன் உறவு வேண்டாமென்று கேட்டுக் கொண்டார்.
இந்திரா காங்கிரஸ் கட்சித்தலைவர் எம்.பி.சுப்பிரமணியம், பெரியகுளம் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் போட்டியிடுவது பற்றி இந்திரா காந்தி முடிவு செய்வார் என்றும், இந்திரா காந்தியின் கரத்தை வலுப்படுத்த இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. இந்திரா காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கலாம் என்று தான் யோசனை கூறுவதாகவும் தெரிவித்தார். பெரியகுளம் இடைத் தேர்தல் குறித்துச் செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, தி.மு. கழகத்தின் செயற்குழுக் கூடி, அதுபற்றி முடிவெடுத்து அறிவிக்கும் என்று கூறினேன்.
17.8.82 அன்று அ.தி.மு.க.வின் செயற்குழுக் கூடி, பெரியகுளம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதென்று முடிவெடுத்து அறிவித்தது. 27.8.82 அன்று கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூடி மறைந்த கம்பம் நடராஜனின் தம்பி கம்பம் ராமகிருஷ்ணனை பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளராக நிறுத்துவதென்று முடிவெடுத்தது. திருப்பத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது இந்திரா காங்கிரசை வலுக்கட்டாயமாகச் சென்று அ.தி.மு.க.
ஆதரித்தபோது, நிருபர்களிடம் அவர்கள் கூறிய காரணம், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர் இறந்து போனால், இடைத்தேர்தலில் அந்தத் தொகுதியை முதலிலேயே வெற்றிபெற்ற கட்சிக்கே விட்டுக் கொடுக்க வேண்டுமென்று அடிப்படையிலேதான் என்று காரணம் கூறியவர்கள், இப்போது அதை அப்படியே மறந்துவிட்டு, அ.தி.மு.க. அங்கே போட்டியிடுவதாக அனைவரையும் முந்திக் கொண்டு அறிவித்தார்கள். காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது குறித்து நிருபர்கள் என்னைக் கேட்டபோது, "பெரியகுளம் தொகுதி தி.மு.கழகம் நின்று வெற்றி பெற்ற இடம்.
சுமார் இரண்டாண்டுக் காலம்தான் கம்பம் நடராஜன் அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார். அந்தத் தொகுதி மக்களுக்காகப் பணியாற்ற தி.மு.கழகத்திற்கு ஒரு ஜனநாயகக் கடமை இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் கம்பம் நடராஜனின் தம்பியை அந்தத் தொகுதியிலே நிறுத்தியிருக்கிறோம். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினேன்.
இந்திரா காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது பற்றி, அந்தக் கட்சியின் சார்பில் கருத்துக் கூறிய சங்கர் தயாள் சர்மா இந்திரா காங்கிரசுக்கும், தி.மு.கழகத்திற்கும் இடையே உறவு முறிந்துவிடவில்லை என்றும், இது நட்போடு கூடிய போட்டி என்றும் கருத்துத் தெரிவித்தார். செப்டம்பர் 2, 3 ஆகிய நாட்களில் பெரியகுளம் தொகுதிக்குச் சென்று கழக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலும், செயல் வீரர்கள் கூட்டத்திலும் கலைந்து கொண்டேன்.
மீண்டும் செப்டம்பர் 12,13 ஆகிய நாட்களிலும் அந்தத் தொகுதியில் பிரச்சாரம் செய்தேன். 12ஆம் தேதி மதுரையிலே என்னைச் செய்தியாளர்கள் சந்தித்துப் பல கேள்விகளைக் கேட்டார்கள். அவற்றில் சில வருமாறு:- கேள்வி:- எம்.பி.சுப்பிரமணியம் பேசும்போது தி.மு.க.வுடன் இருந்த உறவு முறிந்து விட்டதாகச் சொல்லியிருக்கிறாரே? நான்:- எம்.பி.சுப்பிரமணியம் அவர்களைப் பொறுத்த வரையில் அவருக்கும் எங்களுக்கும் எப்போதும் உறவு இருந்ததில்லை.
கேள்வி:- காங்கிரசோடு தி.மு.க.வுக்கு இருந்த உறவு முறியக் காரணம் என்ன? நான்:- எல்லோருடனும் எங்களுக்கு உறவு இருக்கிறது. உறவு வேறு-உடன்பாடு வேறு. கேள்வி:- தேனியில் பேசிய எம்.ஜி.ஆர். அவருக்கும் உங்களுக்கும்தான் போட்டி என்று பேசியிருக்கிறாரே? நான்:- நான் அப்படிக் கருதவில்லை. எங்கள் எம்.பி. மறைந்துவிட்ட காரணத்தால் அவருடைய இடத்தில் அவருடைய தம்பியைக் கழக வேட்பாளராக நிறுத்தி மக்களுடைய ஆதரவைக் கேட்கிறோம்.
அவ்வளவுதான்! செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி பெரியகுளம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் அந்தத் தொகுதியிலே தங்கிப் பணியாற்றினேன். முத்துத்தேவன் பட்டி என்ற இடத்தில் கம்பம் நடராஜனுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் தங்கிக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். அதுபற்றிக் கூடப் பேரவையிலே பின்னர் ஒரு குற்றச்சாட்டுக் கூறப்பட்டது. அதுபற்றி அடுத்து எழுதுகிறேன்.
தேர்தல்நாள் நெருங்க நெருங்க அ.தி.மு.க.வினரின் அராஜகம் அதிகமாகியது. கழகத் தோழர்
கள் ஆங்காங்குத் தாக்கப்பட்டதாகச் செய்தி வந்து கொண்டேயிருந்தது. மாறாக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கள்ள வாக்குகளை அளிக்க வேறு தொகுதிகளிலிருந்து லாரிகளிலே கொண்டு வந்து குவிக்கப்பட்டார்கள். வாக்குச் சாவடிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திலும் ஆளுங்கட்சிக்கு வேண்டிய அதிகாரிகள் அலுவலர்களாக நியமிக்கப்பட்டார்கள். தேர்தல் முறையாக நடக்க பெரியகுளம் தொகுதிக்கு விரைந்து வருமாறு தலைமைத் தேர்தல் ஆணையருக்குத் தந்தி கொடுத்தும் எவ்விதப் பயனுமில்லை.
இறுதியில் அந்தத் தொகுதியில் ஆளுங்கட்சியினரின் அராஜகம் தான் வெற்றி பெற்றது. கழக வேட்பாளரை விட சுமார் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் உட்பட ஏனைய அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். ஆறு தொகுதிகளிலும் சேர்த்து இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 29 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கா.கா.தே.கா., ஆதரவோடு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுமார் 16 ஆயிரம் வாக்குகளையும், தனியாக நின்ற ஜனதா வேட்பாளர் சுமார் 4 ஆயிரம் வாக்குகளையும், வெற்றி பெற்ற அ.தி.மு.க.
வேட்பாளர் 2,52,377 வாக்குகளையும், தி.மு.கழக வேட்பாளர் 1,83,177 வாக்குகளையும் பெற்றனர். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே தமிழக இந்திரா காங்கிரஸ் கமிட்டியை இந்திராகாந்தி கலைத்துவிட்டு, எம்.பி.சுப்பிரமணியத்திற்குப் பதிலாகத் தற்காலிகத் தலைவராக மரகதம் சந்திரசேகர் அவர்களை நியமனம் செய்து அறிவித்தார். தேர்தலில் அதிக வாக்குகள் கிடைக்குமென்ற அபிப்பிராயத்தை எம்.பி.சுப்ரமணியம் ஏற்படுத்தியிருந்ததாகவும், டெபாசிட் கிடைக்காத அளவிற்கு தோல்வி ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப் பட்டதாகவும் ஏடுகள் செய்தி வெளியிட்டன.
தான் தப்புக் கணக்கு போட்டு விட்டதாக எம்.பி.சுப்பிரமணியமும் ஒப்புக்கொண்டார். முன்னாள் முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம் தேர்தல் முடிவுகள் பற்றிக் கருத்துக் கூறியபோது, "தி.மு.கழகம் தோல்வியடைந்த போதிலும், அவர்கள் பெற்ற வாக்குகள் கணிசமானவை, மிகுந்த பாராட்டிற்குரியது" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
கழகத்திற்குக் கிடைத்த வாக்குகளின் சதவிகிதம் அதிகரித்திருப்பதாக யு.என்.ஐ. செய்தி நிறுவனமும் கணக்கிட்டுத் தெரிவித்திருந்தது. எனினும் ஆளுங்கட்சியினரின் அராஜகத்திற்குக் கிடைத்த வெற்றியாகத்தான் தமிழகம் பெரியகுளம் தேர்தலைக் கருதியது. பெரியகுளம் இடைத்தேர்தலின் போது நான் தங்கியிருந்த இடத்தைப்பற்றி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த குழந்தைவேலு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும், அவர் கலந்து கொண்ட வேறு பல நிகழ்ச்சிகளிலும், தேனிக்குப் பக்கத்தில் முத்துத்தேவன் பட்டியில் என் மகன் மு.க.அழகிரி பெயரில் நூறு ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும், அதற்கான ஆதாரம் அவரிடம் இருப்பதாகவும் பலமுறை பேசியது பற்றிச் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய துரைமுருகன் அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி வருகிறாரே, அவர் அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா என்றார்.
உடனே அமைச்சர் குழந்தைவேலு எழுந்து, இந்தக் கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர், அவருடைய வாயால் கேட்டால் பொருத்தமாக இருக்கும். முத்துத்தேவன்பட்டியில் தனக்கு நிலம் என்றும், தன் குடும்பத்திற்கும் அவர் தங்கியிருந்த அந்த இடத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று இங்கேயிருக்கின்ற அவரே எழுந்து சொல்லட்டும். பிறகு நான் ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கிறேன் என்றார். அதற்குப் பிறகும் நான் அமர்ந்திருப்பது சரியல்ல என்பதால், நான் எழுந்து - "முத்துத்தேவன் பட்டியில் என் பெயராலோ, என் மகன் மு.க.அழகிரி பெயராலோ எந்த நிலமும் வாங்கப்படவில்லை என்று அண்ணா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.
அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் ராஜினாமா செய்வதாகக் கூறியிருக்கிறார். அவர் ஆதாரத்தைக்காட்டினால் நான் எதிர்கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல; சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யத் தயார்" என்று கூறினேன்.
அதற்கு அமைச்சர் குழந்தை வேலு அந்தச் சவாலைத் தான் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். அவை முன்னவர் நாவலர், அலுவல் ஆய்வுக் குழுவில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் இந்தப் பிரச்சினை பற்றிப் பேசலாமென்றும், அங்கே ஆதாரங்களை அமைச்சர் காட்டலாம் என்றும் கூறியதைப் பேரவை ஏற்றுக் கொண்டது. 1983 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12ஆம் தேதி பேரவையில் நடந்த பிரச்சினைக்கு ஏப்ரல் 4ஆம் தேதிதான் அமைச்சர் பேரவைத் தலைவர் ராஜாராம் அவர்களிடம் ஆதாரம் என்று கூறி ஒரு ஆவணத்தைக் கொடுத்தார்.
அந்த ஆவணம் யாரோ கே.அழகிரி என்ற பெயரில் பொய்க் கையெழுத்திட்டு, வெறும் மூன்று ரூபாய் பதிவுப் பேப்பரில், திருமலை, மணி என்ற இருவருக்கு பவர்-ஆஃப் அட்டர்னி கொடுத்து 8 ஏக்கர் 84 சென்ட் நிலத்தை 70,000 ரூபாய்க்கு வாங்கச் செய்து கொண்ட ஒரு போலி ஒப்பந்தம் ஆகும். அந்தப் பேப்பரில் மு.க.அழகிரியின் கையெழுத்தோ, நிலத்திற்கு உரிமையாளர்களின் கையெழுத்தோ எதுவும் கிடையாது. இதற்கிடையே நானும் சும்மாயிருக்காமல், முத்துத்தேவன்பட்டியில் நான் தங்கியிருந்த இடத்திற்கு உரிமையாளர்களிடமிருந்து அந்த இடத்திற்கான மூல ஆவணங்களை எல்லாம் வரவழைத்து, அந்த இடம் பல ஆண்டுகளாக கம்பம் நடராஜன் குடும்பத்தினர் பெயரில் இருப்பதையும், வேறு யாருக்கும் விற்கப்படவில்லை என்பதையும் தெளிவாக்கிடும் வகையில் பேரவைத் தலைவரிடம் ஒப்படைத்தேன்.
பேரவைத் தலைவர் ராஜாராமும் நிலப்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 1971 முதல் 1983 வரைக்கான ஆவணங்களை எல்லாம் வரவழைத்து அனைத்தையம் அலுவர் ஆய்வுக் குழுவிலே வைத்து, அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் காட்டி, அதற்குப் பின்னர் 15.4.1983 அன்று தன் தீர்ப்பினை அவையிலே தெரிவிக்கும்போது முத்துத்தேவன்பட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் மகன் மு.க.அழகிரியால் நூறு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கூறியதற்கு எந்தவிதமான உண்மை ஆதாரங்களும் கொடுக்கப்படவில்லை என்றும், அலுவல் ஆய்வுக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அமைச்சர் தகுந்த ஆதாரத்தைத் தரவில்லை என்றும், அவர் ஆதாரம் என்று கொடுத்த ஆவணம் நிரூபிக்கப்படத் தகுந்ததாக இல்லை என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள் என்றும், இனிமேல் யாரும் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல் அவையிலே கூறக்கூடாதென்றும் தீர்ப்பளித்தார்.
அவையிலே சவால் விட்ட அமைச்சர் குழந்தைவேலுவும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவரை ராஜினாமா செய்யுமாறு, அவர் சவால் விட்ட நேரத்தில் கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சரும் கூறவில்லை. நானும் பெருந்தன்மையோடு, அவைக்கும் நாட்டு மக்களுக்கும் உண்மை தெரிந்தது என்ற அளவில் அதனையெடுத்துக் கொண்டு, அவர் ராஜினாமா செய்தே ஆகவேண்டுமென்று வலியுறுத்தவில்லை.
