நெஞ்சுக்கு நீதி
வழங்கியது அனைத்தையும் வழங்கியது · 277 / 391
61. வழங்கியது அனைத்தையும் வழங்கியது கழகத்திற்கே! தஞ்சை மாவட்ட ஆறாவது தி.மு.கழக மாநாடு 1982-ஆம் ஆண்டு மே திங்கள் 15, 16, ஆகிய நாட்களில் குடந்தை நகரில் கோவை மு. கண்ணப்பன் தலைமையில் பேராவூரணி அடைக்கலம் வடிவேல் பந்தலில், கொற்கை நீலாம்பாள் கோவிந்தன் அரங்கில் நடைபெற்றது. மதுரை பொன். முத்துராமலிங்கம் மாநாட்டினைத் திறந்து வைத்தார். பொற்செல்வி இளமுருகு கழகக் கொடியினை ஏற்றிவைத்தார். திராவிட இயக்கப் பெரியவர் கே.கே.
நீலமேகம் திருவுருவச் சிலை அருகிலிருந்து மாநாட்டு ஊர்வலம் புறப்பட்டது. மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவர் தாழை மு. கருணாநிதி வரவேற்புரையாற்றினார். மாநாட்டுத் தலைவரை முன்மொழிந்து மாநிலங்களவை உறுப்பினர் எல்.கணேசன் உரையாற்றிட, பேராவூரணி கிருஷ்ணமூர்த்தியும் மற்றவர்களும் வழிமொழிந்தனர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர், தளபதி அழகிரிசாமி, மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார், மறைமலை அடிகளார்.
ந.மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்வேள் உமாமகேஸ்வரன் ஆகியோர் படங்கள் திறந்து வைக்கப்பட்டன.. கழகத்தின் முன்னணியினர், பேச்சாளர்கள் உரையாற்றிய பின்னர்ப் பொதுச் செயலாளரும், நானும் உரையாற்றினோம். மே 15, 16 ஆகிய நாட்களில் குடந்தையிலே ஆறாவது மாநாடு நடைபெற்றதென்றால், அதற்கடுத்த கிழமை, மே 23ஆம் தேதி குளித்தலையிலே அறிவிக்கப்படாத ஒருமாநாடு நடைபெற்றது. ஆனால் அது மாநாடு அல்ல; சட்டமன்ற உறுப்பினராக 25 ஆண்டுகள் தொடர்ந்து நான் பணியாற்றியதையொட்டி, "சட்டமன்றப்பணி வெள்ளிவிழா", நான் முதன் முதல் சட்டமன்ற உறுப்பினராக நின்று வெற்றி பெற்ற குளித்தலையிலே திருச்சி மாவட்ட தி.மு.கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டக்கழகச் செயலாளர் அன்பில் தர்மலிங்கம் விழாவிற்குத் தலைமை தாங்கினார். குளித்தலை முத்துக்கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். குளித்தலையில்தான் விழா என்ற போதிலும், திருச்சி மாவட்டமே விழாக்கோலம் பூண்டு அந்த விழாவினை நடத்தியது. அந்த விழாவில் என்னைப் பாராட்டி முன்னாள் மத்திய அமைச்சரும் இந்திரா காங்கிரஸ் கட்சிப் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான மரகதம் சந்திரசேகர், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி, மாவட்டக்கழக தலைமைக்கழகச் செயலாளர்கள், பொதுச்செயலாளர் பேராசிரியர் ஆகியோர் உரையாற்றினர்.
திருச்சி மாவட்டக் கழகப் பொருளாளர் எம்.பாலகிருஷ்ணன் எனக்குப் பொன்னாடை போர்த்தி அறுபது பவுன்கள் அடங்கிய பொன்னாரத்தை அணிவித்தார். விழாக்குழு சார்பில் நாகசுந்தரம் நன்றி கூறினார். விழாத்தலைவர் அன்பில் அவர்களும், பொதுச்செயலாளர் அவர்களும் அந்தப் பொன்னாரம் என்னுடைய குடும்பத்திற்காகத் தரப்பட்டது என்று வலியுறுத்திக் கூறினார்கள். இரண்டு மூன்று மாத காலமாகப் போராசிரியரின் ஆலோசனையைப் பெற்று அன்பிலும் மற்ற நண்பர்களும் இரகசியமாக இந்த ஏற்பாட்டினைச் செய்து வந்ததை நான் அறிவேன்.
தங்கமாக இதனை அளித்தால் கழகத்திற்குக் கொடுத்து விடுவேன் என்பதற்காக - அண்ணா அவர்களின் உருவம் ஒரு பக்கத்திலும், என்னுடைய உருவம் இன்னொரு பக்கத்திலும் பதிக்கப்பட்டு, இரண்டு பவுன் கொண்ட பதக்கங்களாக முப்பது பதக்கங்களை ஒரு சங்கிலியாக ஆக்கித் தந்துவிட்டால், அதனை நான் குடும்பத்திற்குத்தானே எடுத்துச் செல்ல வேண்டுமென்று திட்டமிட்டு அதனை என் கழுத்தில் அணிவித்தார்கள். இருந்தாலும் நான் உரையாற்றும்போது "நானே தி.மு.கழகத்திற்குச் சொந்தமென்று ஆகிவிட்ட பிறகு, எனக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாரம் மட்டும் எனக்கு எப்படிச் சொந்தமாகும்?
அதுவும் தி.மு.கழகத்திற்கே சொந்தமாக வேண்டும். என்னை அன்பில் பேச அழைத்தபோது, தலைவரே ஆணையிடுங்கள் என்றார். ஆணையிடுங்கள் என்று கேட்டுவிட்டு, ஆணையை மீற முடியாது. எனவே ஆணையிடுகிறேன். எனக்கு அணிவிக்கப்பட்டட இந்த முப்பது பதக்கங்களும், மூவாயிரம் ரூபாய் வீதம் 90,000 ரூபாய் ஆகிறது. இந்த முப்பது பதக்கங்களையும் நான் ஒருவனே கொண்டு போய் என் வீட்டிலோ அல்லது கழகக் கட்டிடத்திலோ வைத்திருந்தால் அதைப் பார்த்து, ஒரு காலத்தில் கருணாநிதிக்கு அணிவிக்கப்பட்ட சீதனம் என்று கூறி மகிழ்ச்சி அடைபவர்கள் இருப்பார்கள்.
ஆனால் இது பரவிட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த முப்பது பதக்கங்களில், நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக நாலைந்து பதக்கங்களை மட்டும் என் வீட்டிற்காக எடுத்துக் கொள்கிறேன். என் பேரன் பேத்திகளுடைய கழுத்துக்களிலே இவைகள் தொங்கட்டும். மீதமுள்ள பதக்கங்கள் பலபேருடைய வீடுகளில் இருக்க வேண்டும். பதக்கத்தின் விலை மூவாயிரம் ரூபாய். ஒரு நாலாயிரம் ரூபாய் யார் தருகின்றார்களோ அவர்களுக்கு ஒரு பதக்கம்.
அந்தப் பதக்கம் பரவலாகத் தமிழகத்தின் பல இடங்களிலே இருக்கின்ற நேரத்தில் 25 ஆண்டுக்காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய கருணாநிதிக்காக அளிக்கப்பட்ட பதக்கம் என்பதோடு திருச்சி மாவட்டத்தின் புகழும் பரவுமல்லவா?" என்று கூறினேன். அந்த விழாவில் பொதுச் செயலாளரின் பேச்சு மிகவும் உருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அமைந்தது. அதில் ஒருசில பகுதிகள்.... "வாழ்விலோர் திருநாள்" என்ற ஒரு பாடலை பல ஆண்டுகளுக்குமுன் கேட்டிருப்பீர்கள்.
அப்படித்தான் இன்றைக்குக் கலைஞர் அவர்களுக்கு நிகழ்கின்ற பாராட்டு அவருடைய வாழ்விலே ஒருநாள் திருநாள் என்றுகூட அல்ல; திருச்சி மாவட்டத்திலே ஒரு திருநாள் என்றுகூட அல்ல; தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்விலே ஒரு திருநாளாக இந்தநாள் அமைந்திருக்கின்றது. இன்று ஒன்றை நான் நினைவூட்ட விரும்புகிறேன். கலைஞர் எந்த இடத்தை நிறைவு செய்கிறார் என்று பார்த்தால் ஒரு புலவருடைய இடத்தை அல்ல; ஒரு எழுத்தாளருடைய இடத்தை அல்ல; ஒரு சட்டமன்ற உறுப்பினருடைய இடத்தைக் கூட அல்ல; ஒரு அரசியல்வாதியின் இடத்தைக்கூட அல்ல; தந்தை பெரியாரின் இடத்தையும், அறிஞர் அண்ணாவின் இடத்தையும் அவர் நிறைவு செய்கிறார்.
அதனால்தான் ஒருமுறை மன்னையிலே பேசிய அண்ணா அவர்கள், "நான் என்னுடைய உரையை முடித்துக் கொண்டு விடைபெற்றுக் கொள்ளவேண்டியவனாக இருக்கிறேன், அதற்குப் பின்னர்த் தம்பி கருணாநிதி, தொடர்ந்து பேசுவார்; நான் வரலாற்றின் முன்பகுதியை எழுதியிருக்கிறேன், தொடர்ந்து அதைத் தம்பி கருணாநிதி எழுதுவார்" என்று கூறினார்.
அவ்வாறு கூறிவிட்டு விடைபெற்றுச் சென்ற அண்ணா 69ஆம் ஆண்டில் தொடர்ந்து நிலையாக விடைபெற்றார். அண்ணா எழுதிய முன்னுரையைத்தான் தொடர்ந்து கலைஞர் எழுதுகிறார்; எழுதிக் கொண்டேயிருக்கிறார்; இன்னும் பல ஆண்டுகள் எழுதிக்கொண்டேயிருப்பார்; எவன்எவனுக்கோ அவனவனுடைய தலையெழுத்தை எழுதவேண்டிய வரலாற்றைக் கலைஞர் எழுத இருக்கிறார் என்பதை நாட்டுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். கலைஞர் இயற்கையிலேயே ஒரு தலைவனுக்குரிய இயல்புகளோடு வளர்ந்த ஒருவர் இன்று அவருக்கு வழங்கப்பட்ட பொன்னாரம் கலைஞருடைய தொண்டுக்கு ஈடான காரியமா என்றால் இல்லை; கலைஞரின் தொண்டுக்குத் தமிழ்நாடே தான் ஈடு - கலைஞரின் கொள்கை உறுதிப்பாட்டுக்குத் தமிழ் மக்கள் எல்லாம்தான் ஈடு - கலைஞர் அவர்கள் இதுவரை நாட்டுக்கு வழங்கியிருக்கின்ற செல்வத்திற்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற செல்வம் எல்லாம் ஈடு.
எனவே அப்படிப்பட்ட ஒரு தொண்டு நமக்குக் கிடைத்திருக்கின்றது. கரிகாலன் கல்லணையைக் கட்டினான். கலைஞர் வார்த்தையிலே மேலணையைக் கட்டினார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்றால், கலைஞர் பூம்புகாரை நிர்மானித்துத் தந்தார். அத்தகைய கலைஞரை - தமிழனை, தமிழனாகப் பண்பாட்டோடு வாழச் செய்கிற ஒரு காலம் வரும் வரையில் வாழ்க என்று வாழ்த்துகிறேன்."
1982-ஆம் ஆண்டு மே திங்கள் 19ஆம் நாளன்று கேரளா, மேற்கு வங்காளம், அரியானா, இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல்கள் நடைபெற்றன. கேரளாவில் கருணாகரன் தலைமையிலே இருந்த இந்திரா காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவை கவிழ்ந்ததால் அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. மற்ற மூன்று மாநிலங்களிலும் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிந்ததால் தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் இந்திராகாங்கிரஸ் கட்சித் தலைமையிலே ஒரு கூட்டணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலே மற்றொரு கூட்டணியும் அந்தத் தேர்தலில் போட்டியிட்டன.
மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலே முதலமைச்சர் ஜோதிபாசு தலைமையிலே இருந்தது. இந்த மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்று இந்திரா காங்கிரஸ் கடுமையாக, இந்தத் தேர்தலிலே பணியாற்றியது. அரியானாவிலும், இமாசலப் பிரதேசத்திலும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும், லோக்தளம் - பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. நடைபெற்ற தேர்தலில் கேரளாவில் மொத்தம் 140 இடங்களில் இந்திரா காங்கிரஸ் கூட்டணி 77 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி 58 இடங்களிலும், ஜனதா 5 இடங்களிலும் வெற்றி பெற்றன.
மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி 238 இடங்களிலும், இந்திராகாங்கிரஸ் கூட்டணி 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மையான இடங்களில் மகத்தான வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஜோதிபாசு தலைமையிலே ஆட்சி அமைத்தது. அரியானாவில் மொத்தம் 89 இடங்களில் இந்திராகாங்கிரஸ் 36 இடங்களிலும், லோக் தளம் 31 இடங்களிலும், பாரதீய ஜனதா 6 இடங்களிலும், ஜெகஜீவன்ராம் காங்கிரஸ் 3 இடங்களிலும், ஜனதா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 12 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
லோக்தளம், பாரதீய ஜனதா இரண்டும் கூட்டணிக் கட்சிகளாகும். எனவே ஆட்சி அமைப்பதிலே இழுபறிநிலை ஏற்பட்டது. சட்டசபை லோக்தளக்கட்சித் தலைவரான தேவிலால், பாரதீய ஜனதா, ஜெகஜீவன்ராம் காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவோடு ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டுமென்று கவர்னரைக் கேட்டுக்கொண்டார். கவர்னர், தேவிலாலிடம், 'உங்களுக்கு ஆதரவு இருந்தால், உங்கள் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அழைத்து வந்து 24.5.82 அன்று காலை 10 மணி அளவில் காட்டுங்கள்' என்று கூற, அதன்படிச் செய்வதாக கவர்னரிடம் தேவிலால் கூறியிருந்தார்.
ஆனால் அதற்குள்ளாக, இந்திரா காங்கிரஸ் கட்சி சட்டசபைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஜன்லால், கவர்னரைச் சந்தித்துத் தங்கள் கட்சிக்குச் சட்டசபையில் தனிப்பெரும்பான்மையிருப்பதின் பேரில், தங்களுக்குத்தான் முதல் வாய்ப்புத் தரவேண்டுமென்றும், 44 சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் கூறி ஒரு பட்டியலைத் தந்தார். கவர்னர் அதனை உடனே ஏற்றுக்கொண்டு புதிய அமைச்சரவை அமைக்க பஜன்லால் அவர்களை அனுமதித்ததோடு 23.5.1982 அன்று மாலையே அவருக்கு முதல் அமைச்சராகப் பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவிப்பிரமாணம் நடைபெற்ற இடத்திற்கு, லோக்தள கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று எதிர்ப்பு முழக்கமிட்டனர். அவர்களில் நான்கு பேரைச் சந்திக்க கவர்னர் அழைத்தபோது, அவர்கள் கவர்னரிடம், "நீங்கள் செய்தது ஜனநாயகப் படுகொலை" என்று கூறினர்.
"நீங்கள் உங்கள் பெரும்பான்மையைச் சட்டசபையில் நிரூபித்துக் காட்டுங்கள்" என்று அவர்களிடம் கவர்னர் கூறிவிட்டார். இதுகுறித்துக் குடியரசுத் தலைவர் அவர்களை எதிர்க்கட்சித் தலைவர்களை ஜெகஜீவன்ராம், பகுகுணா, மதுலிமாயி, அத்வானி, தேவராஜ் அர்ஸ், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோர் சந்தித்து அரியானா கவர்னரை உடனே டிஸ்மிஸ் செய்யவேண்டுமென்று கேட்டு மனுக் கொடுத்தனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் குடியரசுத்தலைவரின் இல்லத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
24.5.1982 அன்று காலையில் தேவிலால் ஒரு பேருந்தில் தன்னையும் சேர்த்து 45 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் நேரில் கவர்னர் இல்லம் வந்து அனைவரையும் கவர்னர் முன்னிலையில் நிறுத்தி நியாயம் கேட்டார். மேலும் மறுநாளே சட்டப்பேரவையைக் கூட்டுமாறு பஜன்லாலுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். கவர்னரை மிகவும் கேவலமான முறையிலே அப்- போது ஒருசில சட்டமன்ற உறுப்பினர்கள் விமர்சித்தனர். கவர்னர் செய்தியாளர்களிடம் ஜூன் 30ஆம் தேதிக்குள் பஜன்லால் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென்று கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.
தேவிலால் அவர்களுக்கு கவர்னர் இல்லம்வரை சென்று ஆதரவு தெரிவித்த ஐந்தாறு சட்டமன்ற உறுப்பினர்கள் அன்று மாலையே தங்கள் ஆதரவை இந்திரா காங்கிரஸ் பக்கம் திருப்பினார்கள். அவர்களில் மூன்று பேர் இந்திரா காந்தியையும், பஜன்லாலையும் சந்தித்த பின்னர்த் தங்கள் கருத்தை இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகத் தெரிவித்தனர். அதுவரை தேவிலால் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜெகஜீவன்ராம் அவர்கள்கூட, தேவிலால் அவர்களின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கவர்னர் முன்னால் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவித்தார்.
27.5.1982 அன்று பஜன்லால் அமைச்சரவையின் சார்பாக 12 அமைச்சர்களும், 6 ராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்களில் ஆறுபேர் சுயேச்சை உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 24.6.82 அன்று அரியானாவில் சட்டமன்றக் கூட்டம் கூடி, பலட் பரீட்சை நடைபெற்றது. பேரவைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பின்போது, இந்திரா காங்கிரஸ் கட்சியின் ஆதரவு வேட்பாளர் 48 வாக்குகளையும், எதிர்க்கட்சிகளின் ஆதரவு வேட்பாளர் 40 வாக்குகளையும் பெற்றனர்.
ஆகவே தற்காலிகமாக அரியானாவில் இந்திரா காங்கிரஸ் அமைச்சரவை நிலைத்தது. அரியானாவில் ஏற்பட்ட இழுபறி நிலையைப் போலவேதான் இமாசலப் பிரதேசத்திலும் மொத்தமுள்ள 68 இடங்களில் 31 தொகுதிகளில் இந்திரா காங்கிரசும், 29 இடங்களில் பாரதீய ஜனதாவும், இரண்டு இடங்களில் ஜனதா கட்சியும், ஆறு இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். எனவே இரண்டு தரப்பினருமே சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இரண்டு தரப்பினரும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் அதிக இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சி என்ற வகையில் கவர்னர் இந்திரா காங்கிரசை அழைத்து அமைச்சரவை அமைக்கக் கூறியதன் பேரில் ராம்லால் இந்திரா காங்கிரஸ் முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த அளவில் நான்கு மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிவுற்றன. 1982-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 3ஆம் நாள் என்னுடைய 59வது பிறந்தநாள் என்பதையொட்டி - அதற்கு முதல் நாள் கழகத்தின் தலைமை இலக்கிய அணியினர் நடத்திய விழாவிற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.
எஸ்.எஸ்.தென்னரசும், கோ.சி.மணியும் வீட்டில், என்னுடன் விழாவிற்குச் சேர்ந்து வருவதற்காக வந்தவர்கள், பேசிக் கொண்டிருந்தார்கள். தொலைபேசியில் ஆர்க்காடு வீராசாமி பேசுகிறார் என்று உதவியாளர் கூறினார். விழாவிற்கு உடன்வருவது பற்றித்தான் ஏதோ கூறப்போகிறார் என்று நினைத்துத் தொலை பேசியை வாங்கியதும், "தொலைபேசி மூலமே இந்த ஆண்டு உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணே!"
என்றார். எனக்கு ஆச்சரியம்! "எங்கேயிருந்து பேசுகிறீர்கள்?" என்றேன். "என்னைக் கைது செய்யக் காவல்துறையினர் வந்திருக்கிறார்கள்" என்றார். அப்போது 'எதிரொலி' இதழுக்கு அவர் நிர்வாக இயக்குநர். அந்தக் காரணத்தால்தான் ஜனவரித் திங்களில் ஒருமுறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருந்தார். இப்போது இரண்டாவது முறையாகக் கைது செய்திருக்கிறார்கள். என் பிறந்தநாள் நிகழ்ச்சிகளிலே கலந்துகொள்ள விடாமல் கைது செய்த நேரத்தை எண்ணி வேதனையடைந்தேன்.
அந்த நினைவோடு, இலக்கிய அணியின் விழாவினையும், பிறந்த நாள் விழாவினையும் இரத்துச் செய்து விடலாம் என்று அங்கிருந்தவர்களிடம் கூறினேன். ஆனால் தென்னரசும், கோ.சி.மணியும், வீராசாமி நாளைக்காலையில் ஜாமீனில் வந்து விடுவார், எனவே விழாவை ரத்துசெய்ய வேண்டாமென்றனர். அதற்குப் பிறகு இலக்கிய அணி நடத்திய விழாவிற்குப் புறப்பட்டுச் சென்றேன். வழக்கம்போல் கருத்தரங்கம், கவியரங்கம், வாழ்த்தரங்கம் எல்லாம் நடைபெற்றன.
அந்த நிகழ்ச்சியிலே நான் நன்றியுரை ஆற்றுவதற்கு முன்பு கவிஞர் குடியரசு அவர்களுக்கு, இலக்கிய அணியின் சார்பாக மூவாயிரம் ரூபாய் நிதியோடு, தலைமைக் கழகத்தின் சார்பாக ஏழாயிரம் ரூபாய் நிதியையும் சேர்த்துப் பத்தாயிரம் ரூபாயாக நிதியினை வழங்கினேன். மறுநாள் காலையில் அண்ணாவின் நினைவிடத்திற்கும் பெரியாரின் நினைவிடத்திற்கும் சென்று வணங்கி விட்டு வந்து நண்பர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டேன்.
எதிர்பார்த்ததைப் போலவே அன்று பிற்பகலில் ஆர்க்காடு வீராசாமி பொறுப்பிலே விடுதலையாகி வந்துவிட்டார். என் பிறந்தநாளன்று சற்று வேதனைப்பட வேண்டுமென்று விரும்பிய ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர். ஆனால் 3-ஆம் தேதியன்று பொறுப்பிலேவிட்ட ஆர்க்காடு வீராசாமியை மீண்டும் 5-ஆம் தேதியன்று மாலையில் கைது செய்தனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகப் பெரிதும் பாடுபட்ட, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் அவர்கள் 7-6-1982 அன்று திடீர் மாரடைப்புக் காரணமாக மறைந்துவிட்ட செய்தி அறிந்து, பெங்களூரிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அர்ஸ் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன்.
அர்ஸ் அவர்களின் துணைவியாருக்கும், புதல்வியர்களுக்கும் ஆறுதல் கூறினேன். இந்தியக் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியின் பதவிக்காலம் 1982-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 25ந் தேதியோடு முடிவடைவதையொட்டி, புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது பற்றி இந்திய நாட்டின் அரசியல் கட்சிகள் அதற்கான ஏற்பாட்டினை ஜூன் திங்களிலேயே தொடங்கி விட்டன. புதிய குடியரசுத் தலைவரைப் போட்டியின்றித் தேர்ந்ததெடுப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார்கள்.
எனினும் அதிலே ஒருமித்த கருத்து ஏற்படாததால் போட்டி தவிர்க்க முடியாத அளவிற்கு நிலைமை உருவாயிற்று. குடியரசுத் தலைவராக யார் வேட்பாளர் என்பது இரு தரப்பினரின் அடுத்த பரிசீலனைக்கு ஆளாகியது. ஜூன் திங்கள் இரண்டாவது வாரத்தில் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த என்னை உடனடியாக டெல்லிக்கு வரும்படி பிரதமர் இந்திராகாந்தி சொல்லியனுப்பியதால் டெல்லிக்குச் சென்று அவர்களைச் சந்தித்தேன்.
அப்போது பிரதமர் இந்திரா காந்தி, குடியரசுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து விவரமாகப் பேசியதோடு இரண்டு மூன்று பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றிய அபிப்பிராயத்தையும் கேட்டுக்கொண்டார். கழகத்தின் சார்பில் என்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிவித்தேன். மேலும் பிரமதரிடம் விடுதலைப் புலிகள் பிரச்சினை, மண்டல் கமிஷன் பரிந்துரை பற்றிய பிரச்சினை ஆகியவற்றையும் விவாதித்து விட்டு சென்னை திரும்பினேன்.
ஜூன் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுச் சிறையிலிருந்த ஆர்க்காடு வீராசாமியையும் எதிரொலி ஆசிரியர் கில்ஜியையும் இரண்டாவது முறையாகச் சென்று சந்தித்தேன். என்னுடன் சி.டி. தண்டபாணி எம்.பி., வை.கோபால்சாமி எம்.பி., டாக்டர் குழந்தைவேலு எம்.பி., செ. குப்புசாமி, ஆர்.டி.சீத்தாபதி ஆகியோர் உடன் வந்தனர். 23.5.82 அன்று குளித்தலையில் என்னுடைய 25 ஆண்டுக்கால சட்டமன்றப்பணியைப் பாராட்டி நடைபெற்ற விழாவினைப் போலவே மதுரையிலும் மதுரை மாவட்ட மக்கள் விழாக்குழு என்ற அமைப்பின் பெயரால் பி.டி.ஆர்.
பழனிவேல்ராஜன் பெருமுயற்சி எடுத்து 17-6-1982 அன்று மதுரை மேலமாசி வீதியில், முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவச்சலம் அவர்கள் தலைமையிலும், கேரள மாநில ஆளுநர் திருமதி ஜோதிவெங்கடாசலம் முன்னிலையிலும் மிகுந்த எழுச்சியோடு நடத்தினார் விழாக்குழுவின் சார்பில் விழாக் குழுத் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராசன், மதுரை மக்கள் சார்பில் ஆறுபவுன்களை வெள்ளித் தட்டில் வைத்து எனக்கு அளித்ததோடு, அறுபது பவுன் அடங்கிய பொன்னாரத்தையும் அணிவித்தார். பொன்னாரத்தைப் பெற்றுக்கொண்ட நான், குளித்தலையிலே அணிவிக்கப்பட்ட பொன்னாரம் எப்படித் தி.மு.கழகத்திற்குச் சொந்தம் என்று கூறினேனோ, அது போலவே மதுரையிலே அணிவிக்கப்பட்ட பொன்னாரமும் தி.மு.கழகத்திற்கே சொந்தமாகும் என்று அறிவித்தேன்.
விழாவிற்குத் தலைமையேற்ற பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் அந்த விழாவில் என்னைப் பெரிதும் பாராட்டிப் பேசியது என்றும் என் நினைவிலே நிற்கக் கூடிய வார்த்தைகளாகும். குளித்தலை, மதுரையைத் தொடர்ந்து 20-6-1982 அன்று சென்னையிலே பெருவிழா தலைநகரம் எடுத்த விழா தலைசிறந்த விழா என்பதை நிரூபித்துக் காட்டியது. 1981 ஆம் ஆண்டு நானும் நாஞ்சிலாரும் கலந்து கொண்ட ஒரு விழாவிலே பேசிய சென்னை மாவட்டக்கழகச் செயலாளர் ஆர்.டி.சீத்தாபதி என்னுடைய 59-வது பிறந்தநாளின் போது, 59 வயதைக் குறிப்படும் வகையில் 59 கிலோ வெள்ளிக்கட்டிகளை சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பிலே வழங்கப் போவதாக அறிவித்திருந்தார்.
59 கிலோ என்பது பிறகு என்னுடைய எடைக்கு எடை என்று அறிவிக்கப்பட்டது. விழாவிற்கான விளம்பரங்கள் செய்யப்பட்ட போது, திடீரென என்னுடைய எடையைப் போல இருமடங்கு எடை வெள்ளி வழங்கப் போவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் மேடையிலே பெரிய தராசைக் கட்டி வெள்ளிக்கட்டிகளை அடுக்கி வைத்துக் கொடுத்தபோது, என்னுடைய எடைக்கு எடை மூன்று பங்கு என்ற அளவில் மொத்தம் 203 கிலோ வெள்ளிக் கட்டிகள் வழங்கப்பட்டன. சென்னை நகரிலே உள்ள அத்தனைக் கழகத் தோழர்களும், பொது மக்களும் திரண்டிருந்த அந்தக் கூட்டத்திற்குக் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமை தாங்கினார்.
விழாத் தொடங்குவதற்கு முன்னால் எம்.எஸ்.விஸ்வநாதன் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. குளித்தலையில் எனக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாரத்திலிருந்த பதக்கங்களில், பொள்ளாச்சி விஜயராகவன், கரூர் கே.சி. பழனிச்சாமி, திருவொற்றியூர் டி.கே.பி.ஜான்சிராணி, புதுக்கோட்டை வீரையா, ஜெ.கே.கே. சுந்தரம், தினகரன் கே.பி.கந்தசாமி ஆகியோர் தலா நான்காயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டது போக, மீதியிருந்த பதக்கங்களையும், மதுரையிலேயே எனக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாரத்தையும் சென்னை விழாவிலே கழகப் பொருளாளரிடம் அனைவருடைய முன்னிலையிலே கழகத்திற்காக ஏற்கெனவே நான் அறிவித்தவாறே வழங்கினேன்.
அதுபோலவே சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்ட 203 கிலோ வெள்ளிக்கட்டிகளையும் - இதன் அன்றைய மதிப்பு ரூ.5,71,227 தலைமைக் கழகத்திற்கே வழங்கினேன்.
