நெஞ்சுக்கு நீதி
நீதி கேட்டு நெடிய பயணம் · 276 / 391
60. நீதி கேட்டு நெடிய பயணம் ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டு காலம் பொதுப் பணித்துறை அமைச்சராகவும், 1969இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு 1976 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை எதிர்த்த காரணத்திற்காக தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்ட வரை ஏழாண்டுக் காலம் முதலமைச்சராகவும் பதவியில் இருந்த நான் பதவியிழந்த பிறகு மக்கள் பணியிலிருந்தோ இயக்கத்தின் ஆக்கப்பணிகளிலிருந்தோ என்னை ஒதுக்கிக் கொள்ளவில்லை என்பதும், அரசின் அடக்குமுறை அராஜகங்கள், நிர்வாக ஊழல்கள், விலைவாசி உயர்வு, இலங்கைத்தமிழர் பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை போன்றவைகளுக்காகப் பலமுறை அறப்போரட்டங்களிலே ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றதோடு, அரசின் பல்வேறு வழக்குகளையும் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளிலே ஏறிச் சந்திக்கவும் பின்வாங்கிடவில்லை.
அதில் ஒரு சட்டம்தான் 26.11.1980 அன்று திருச்செந்தூர் கோயில் வளாக விடுதியில் அறநிலையத் துறையின் உதவி ஆணையாளர் சுப்ரமணியப்பிள்ளை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அறங்காவலர்களால் படுகொலை செய்யப்பட்டு அதற்குத் தற்கொலை என்று பெயர் சூட்டி மறைத்திடப் பார்த்ததைக் கண்டு தி.மு.கழகம் போர்க்குரல் கொடுத்ததாகும். 2.12.80 அன்று திருச்செந்தூர் நகரமே அனைத்துக் கட்சி சார்பில் ஒட்டுமொத்தமாகக் கடையடைப்பு நடத்தி உண்மையைத் உலகத்திற்கு தெளிவாக்கியது.
இந்தச் சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர் அரசினாலேயே அமைக்கப்பட்டு விசாரணை நடத்திய நீதிபதி சி.ஜெ.ஆர்.பால்; அரசாங்கத்திற்குக் கொடுத்த அறிக்கை தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதால், அரசு அதனை வெளியிடாது இருந்த நேரத்தில், நீதிபதி பால் அவர்களின் அறிக்கையின் நகல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்குக் கிடைத்ததால் அந்த அறிக்கையின் நகல்களை 24.11.1981 அன்று ஏடுகள் மூலமாக வெளியிட்டேன். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத அ.தி.மு.க அரசு அந்த அறிக்கையை நான் வெளியிட்ட காரணத்தினால் என் மீதும் என்னைச் சார்ந்தவர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைகளிலே ஈடுபட்டது.
முரசொலி அலுவலகம் என்னுடைய இல்லம் எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் அரசினால் எனக்கு நியமிக்கப்பட்டிருந்த உதவியாளர் சண்முகநாதன் இல்லம் ஆகியவை காவல்- துறையினரால் சோதனையிடப்பட்டன. மேலும் என்னுடைய மருமகன் முரசொலி செல்வம், உதவியாளர் சண்முகநாதன், மற்றொரு அரசு அதிகாரி சதாசிவம் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதில் முதல் குற்றவாளியாக சதாசிவமும், இரண்டாவது குற்றவாளியாக முரசொலி செல்வமும், மூன்றாவது குற்றவாளியாக சண்முகநாதனும், நான்காவது குற்றவாளியாக நானும் சேர்க்கப்பட்டு அரசினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அரசு அதிகாரிகளான சதாசிவமும் சண்முகநாதனும் பணியிலிருந்து 'சஸ்பென்ட்' செய்யப்பட்டார்கள். இதிலும்கூட, முதல் குற்றவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்ட சதாசிவம் சில நாட்களில் மீண்டும் பணியிலே சேர்த்துக் கொள்ளப்பட்ட போதிலும் மூன்றாவது குற்றவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்ட என் உதவியாளர் சண்முகநாதனை 1989இல் மீண்டும் தி.மு.கழக ஆட்சி வரும்வரை பணியிலே சேர்க்கவே இல்லை. 13.2.1982 அன்று சட்டப்பேரவையிலே பால் கமிஷன் அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, தி.மு.க சார்பில் பேசிய நான் நீதிபதி பால் அறிக்கை பற்றித் தெளிவாக விளக்கிக் குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
ஆனால் அரசு சார்பில் பதிலளித்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அந்த வழக்கைக் குற்றப்புலனாய்வுத்துறை மீண்டும் விசாரித்த பிறகுதான் பரிசீலிக்க வேண்டுமென்றார். அமைச்சரின் பதில் திருப்தியைத் தராததால் தி.மு.கழகம் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தது. அதற்குப் பிறகு முதலமைச்சர் எழுந்து திருச்செந்தூர் கோவில் அறங்காவலர்கள் தங்களுடைய பதவி விலகல் கடிதங்களை அப்போதுதான் அனுப்பியிருப்பதாக அவைக்கு ஒரு தகவலைத் தெரிவித்தார்.
நீதிபதி பால் அவர்கள் தனது அறிக்கையிலே குறிப்பிட்ட குற்றவாளிகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, தி.மு.கழகத்தின் சார்பில் என்னுடைய தலைமையிலே 15.2.1982 அன்று மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை கழகத் தோழர்கள் உடன் நடந்துவர நீதிகேட்டு நெடியபயணம் மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது. 15ஆம் தேதி மதுரையிலே பொதுச்செயலாளரும் மற்ற கழக முன்னணியினரும் வழியனுப்ப நெடியபயணம் புறப்பட்டு மதியம் திருப்பரங்குன்றத்திலே ஓய்வெடுத்து விட்டு இரவு திருமங்கலத்தை அடைந்தது.
அன்று அங்கே நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மறுநாள் காலை 7.45 மணிக்கெல்லாம் அங்கிருந்து இரண்டாவதுநாள் பயணத்தைத் தொடங்கினோம். அன்று விருதுநகர் வரை நடந்தோம். வழியில் சிவராக்கோட்டை, கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, நல்லம்ம நாயக்கன் பட்டி, ஆவல் சூரன்பட்டி போன்ற ஊர்களில் வரவேற்பு. மூன்றாவது நாள் காலையில் கால் முழுவதும் ஒரே கொப்பளம். கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, டாக்டர்கள் கலாநிதி, ராஜாம்பாள், காஞ்சனாகமல் நாதன், நாராயணசாமி, ராஜேந்திரன், ரங்கசாமி, ராஜூ, களஞ்சியம், மூர்த்தி போன்றவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளித்துக் கொண்டே வந்தனர்.
பயணத்தின்போது வலி தெரியாமல் இருக்கப் பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கழகத் தோழர்கள் வந்தனர். முதல்நாள் பயணத்தின் போது கலந்துகொண்ட வாடிப்பட்டி கலைக்குழுவினரின் நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்று நான் பேசும்போது குறிப்பிட்டதையொட்டி மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் பொன். முத்துராமலிங்கம் உடனடியாக ஆள் அனுப்பி வாடிப்பட்டி கலைக் குழுவினரை மீண்டும் தருவித்தார். நான் அந்தப் பயணத்தின்போது 'மொரகோஸ்' என்ற கருவியை, கழகத் தோழர்களுடன் சேர்ந்து இசைத்துக் கொண்டே சென்றேன்.
மூன்றாவது நாள் பயணத்தின் போது ஒரு வேடிக்கை. என்னுடன் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ஆர்க்காடு வீராசாமி கால்வலிக்கு தடவிக் கொள்வதற்காகப் பாட்டிலிலே வைத்திருந்த டர்பன்டைனை மோர் என்று நினைத்துக் கொண்டு தாகத்தின் வேகம் காரணமாக அப்படியே எடுத்து ஒரு வாய் குடித்துவிட உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டார். மூன்றாவது நாள் சாத்தூர் வரையிலும், நான்காவதுநாள் கோவில்பட்டி வரையிலும், ஐந்தாவதுநாள் எப்போதும் வென்றால் வரையிலும், ஆறாவது நாள் 20.2.82 அன்று தூத்துக்குடி வரையிலும் ஏழாவது நாள் ஆத்தூர் வரையிலும் நெடியபயணம் நடைபெற்று எட்டாவது நாள் 22.2.1982 அன்று நெடியபயணம் திருச்செந்தூரைச் சென்றடைந்தது.
மதுரையிலிருந்து திருச்செந்தூர்வரை 200 கிலோ மீட்டர் தூரம். எட்டு நாட்கள் - எட்டுப் பொதுக் கூட்டங்கள். சுமார் பதினைந்து இலட்சம் மக்களைச் சந்தித்த மனநிறைவு. ஒரு தனிப்பட்ட அரசு அதிகாரிக்கு ஆளுங்கட்சி இழைத்த அநீதிக்கு நீதி கேட்டு, தி.மு.கழகம் தன்னைத் தானே வருத்திக் கொண்டு நடத்திய அறப்போராட்டம் அது. என்னுடைய வழி நடைப்பயணத்தின்போது இடைவழியில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் என்னைச் சந்தித்துப் பெருமைப்படுத்தினர்.
தீவிர காங்கிரஸ்காரரும் விடுதலைப் போராட்டவீரருமான இனியநண்பர் கே.டி.கோசல்ராம் எம்.பி அவர்கள் திருச்செந்தூர் எல்லையில் எங்களை வரவேற்று மாலையணிவித்தார். 24.2.82 அன்று சென்னை திருவல்லிக்கேணி தேரடித் திடலில் தலைமைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சுப்பிரமணிய பிள்ளையின் குடும்ப நிதியாக 50,000 ரூபாய் வழங்கி அவரது குடும்பத்திற்கு அ.தி.மு.க ஆட்சியினர் வழங்கிய அநீதிக்கு நான் என் மனத்திற்கு - நெஞ்சுக்கு நீதி வழங்கிக் கொண்டேன்.
இதற்கிடையில் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசியலைக் குலுக்கிய எரிசாராய ஊழல். வெளி மாநிலங்களுக்கு எரி சாராயம் எடுத்துச் செல்ல அரசு விதித்திருந்த தடை ஆணையை அரசே இரத்துச் செய்துவிட்டு அனுமதி வழங்கியது பற்றியும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றியும் ஏடுகள் விரிவாக வெளியிட்டிருந்தன. இது பற்றி விசாரிக்க முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தனக்கு வேண்டிய கைலாசம் அவர்களைக் கொண்டு விசாரணைக்கமிஷன் நியமிக்க தி.மு.கழகம் அது கண்துடைப்பு கமிஷனாக அமையும் என்று கூறியது.
22.2.81 அன்று சென்னைமாவட்டக்கழகம் கைலாசம் விசாரணைக் கமிஷனைக் கண்டித்துப் பேரணி நடத்த முயன்று நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். 1.3.81 அன்று சிந்தாதிரிபேட்டை பொதுக்கூட்டத்தில் கைலாசம் கமிஷன் நியமன ஆணையைத் தீயிட்டதற்காக நாஞ்சிலாரும் மற்றக் கழகத் தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நீதிபதி கைலாசம் இந்த ஊழல் பற்றி விசாரிக்கக் கூடாது என "சுதந்திர மக்க உரிமை அரங்கு" தலைவர் பி.சுப்பிரமணியம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இதற்குப் பிறகு நீதிபதி கைலாசம் தானாகவே அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதால், அரசு நீதிபதி சதாசிவம் அவர்களை கமிஷன் நீதிபதியாக நியமித்தது. மத்திய அரசு எரி சாராய ஊழல் பற்றி விசாரிக்க ஒரிசா மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.ரே அவர்களை நியமித்தது. மேலும் 1981 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அ.தி.மு.க அரசு கள்ளுக்கடைகளைத் திறக்கவும் வெளிநாட்டு மதுவகைகளைத் தயாரிக்கவும் அனுமதி வழங்குவதாக அறிவித்தது, சாராயத்தை பாட்டிலிலே அடைத்து விற்கவும், பிளண்டிங், பாட்டிலிங் அனுமதி வழங்கவும் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெறப்பட்டு சாராய மன்னர்களுக்கும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் பெயராலும், அவர்களுடைய பினாமிகளின் பெயராலும் அனுமதிகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டன.
அந்த அனுமதிகள் வழங்கியதில் நடைபெற்ற எண்ணற்ற முறைகேடுகள் பற்றி ஆதாரங்களோடு பேரவையிலே அரசை நேரடியாகக் குற்றஞ்சாட்டிப் பேசினேன். அந்தத் தொழிற்சாலைகளிலே வருமான வரித்துறை சோதனை நடத்திக் கொடுத்த அறிக்கைகளையும் பேரவையிலே படித்துக் காட்டினேன். இந்த ஊழல்பற்றி ஆங்கில ஏடுகள் எல்லாம் விசாரித்து விரிவான முறையில் அரசைக் கண்டித்து எழுதின. நீதிமன்றங்களும் சில தீர்ப்புகள் மூலம் அவைகளை விளக்கியிருந்தன.
இந்த ஊழல்கள் பற்றி விசாரிக்க, அ.தி.மு.க. அரசு தனக்குத் தானே ராமமூர்த்தி கமிஷனை நியமித்தது. இந்தக் கமிஷன் முன்னால், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆர்.என்.மாணிக்கம் அவர்களே கொடுத்த வாக்குமூலத்தில் ஆளுங்கட்சியினர் பெற்ற இலஞ்சம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த விசாரணைக் கமிஷன் முன்னால் பலரும் அரசுக்கு எதிராகச் சாட்சியங்களை அளித்தனர். ராமமூர்த்தி கமிஷன் விசாரணை தொடங்கிச் சில நாட்களுக்குள்ளாகவே அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில் நீதிபதி ராமமூர்த்தி நோயுற்றிருப்பதாகவும் அதனால் அவருக்குப் பதிலாக நீதிபதி ராமபிரசாத் ராவ் கமிஷன் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தது. நீதிபதி ராமபிரசாத் ராவ் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி செப்டம்பர் 15ஆம் தேதியோடு விசாரணைையை முடித்துக்கொண்டார். ஆனால் அவருடைய விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட முதலமைச்சரையோ அல்லது அவருடைய அமைச்சரவை நண்பர்களையோ அழைத்து விசாரிக்க மறுத்துவிட்டார்.
அவர்களை எல்லாம் அழைத்து விசாரிக்க வேண்டுமென்று தி.மு.கழகம் வைத்த வேண்டுகோளை நிராகரித்ததோடு தி.மு.கழகத்தையும் விசாரிக்கவில்லை. இந்தக் காரணங்களை உயர்நீதி மன்றத்திலே கூறி, ராமபிரசாத் ராவ் கமிஷன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இடைக்காலத்தடை விதிக்க வேண்டுமென்று தி.மு.கழகத்தின் சார்பில் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி விடுத்த வேண்டுகோள் மனு ஏற்கப்பட்டு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய இடைக் காலத் தடை விதிக்கப்பட்டது.
பிறகு அரசே முறையிட்டு அந்தத் தடையை நீக்கி ஆணையைப்பெற்று, அதே நாளில் பேரவையிலும் ராமபிரசாத்ராவ் கமிஷன் அறிக்கை பெறப்பட்டு வைக்கப்பட்டது. 1981-82இல் மராட்டிய மாநில முதலமைச்சராக இருந்த அந்துலே அவர்கள் ஒரு அறக்கட்டளை நடத்தி வந்தார். அந்த அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கிலே வசூல் செய்யப்பட்டதாகவும், நன்கொடை கொடுத்தவர்களுக்கு சிமெண்ட் பர்மிட் கொடுக்கப்பட்டதாகவும் அந்துலேதான் இந்த ஊழலுக்குக் காரணம் என்றும் அருண் ஷோரி எழுதிய கட்டுரையையொட்டி, பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் புகார் கூறப்பட்டது.
ஆனால் அந்துலே அவர்கள் குற்றத்தை மறுத்துத் தான் நிரபராதி என்று கூறி வந்தார். சிமெண்ட் விநியோகத்தில் ஊழல் புரிந்ததாக பம்பாய் உயர்நீதிமன்றத்தில் அந்துலே மீது வழக்குத் தொடரப்பட்டது. நாடாளுமன்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கமல் தேசாய், சமந்த் ஆகியோர் இந்த வழக்குத் தொடுக்கக் காரணமாக இருந்து வழக்குத் தொடரப்பட்டது. 12.1.1982 அன்று இந்த வழக்கில் அந்துலே குற்றவாளி என்று நீதிபதி லென்டின் தீர்ப்புக் கூறினார்.
நன்கொடை கொடுத்தவர்களுக்கே சிமெண்ட் பர்மிட் கொடுக்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது என்று நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார். சிமெண்ட் கோட்டா ஒதுக்கப்பட்டதில் அந்துலேக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பு இல்லை என்ற அரசாங்க வாக்கறிஞரின் வாதத்தை நீதிபதி நிராகரித்து விட்டார். இவ்வாறு பம்பாய் உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியதைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை அந்துலே ராஜினாமா செய்தார். அவர் விடுத்த அறிக்கையில் தன்மீது ஊழல் புகார் கூறப்பட்டதுமே தான் பதவியை ராஜினாமா செய்யமுன் வந்ததாகவும், பிரதமர் இந்திரா காந்திக்குத் தான் ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்ததாகவும், ஆனால் இந்திரா காந்தி அதனையேற்கவில்லை என்றும், தற்போது தனது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கவும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
அந்துலேயின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளும்படி இந்திரா காந்தி சம்மதம் தெரிவித்ததன் பேரில் மராட்டிய மாநில ஆளுநர் அந்துலேயின் ராஜினாமாவை ஏற்றார். புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும்வரை அந்துலேயைப் பதவியில் நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார். அந்துலேவிற்குப் பதிலாக அவரது அமைச்சரவையிலே சட்ட அமைச்சராக இருந்த ஆனந்த்ராவ் போஸ்லே மராட்டிய மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஆந்திர மாநிலத்தில் என்.டி.ராமாரவ் தெலுங்கு தேசக்கட்சியைத் தொடங்கினார்.
மத்திய அரசு மாநிலத்தைக் கேவலமாகக் கருதுகிறது என்றும் ஆந்திர மாநிலம் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவே தெலுங்குதேசக் கட்சியைத் தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார். வங்காள தேசத்தில் ஜனாதிபதி அப்துல்சத்தார் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில்தான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அப்துல் சத்தார் வெற்றிபெற்று ஜனாதிபதியானார்.
24.3.82 அன்று வங்காள தேசத்தில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அப்துல் சத்தாரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 52 வயதான இராணுவ தளபதி எச்.எம்.எர்ஷாத் திடீர் புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்ப
ற்றினார். வங்காள தேசம் முழுவதும் இராணுவச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. இராணுவச்சட்ட தலைமை நிர்வாகி என்ற பெயரில் தளபதி எர்ஷாத் சகல அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொண்டார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்தப் புரட்சிக்கு உதவியாக இருந்த விமானப் படை தளபதி சுல்தான் மகமூத், கப்பல்படைத் தளபதி மகமூத் அலிகான் ஆகிய இருவரையும் இராணுவச் சட்டத்தை அமல் நடத்தும் துணை நிர்வாகிகளாக அவர் நியமித்தார். இரத்தம் சிந்தாமல் உயிர்ச்சேதமின்றி ஒரு அறிவிப்பு மூலம் இந்த ஆட்சி மாற்றம் நடந்ததாக ரேடியோ கூறியது.
அப்துல் சத்தார் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். வங்காளதேசப் பிரதமர் ஷா அஜீசூர்ரகுமான் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அது எந்த இடம் என்பது தெரியவில்லை என்றும் செய்திகள் வந்தன. நவம்பர் 1981இல் நடைபெற்ற தேர்தலில் சத்தார் வெற்றிபெற்ற போது துணை ஜனாதிபதியாக எர்ஷாத் நியமிக்கப்படலாம் என்று முதலில் செய்தி வந்தது. ஆனால் சத்தார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இராணுவத்தின் வேலை எல்லையைப் பாதுகாப்பதுடன் சரி என்று கூறினார்.
அதிலிருந்து இருவருக்கும் பூசல் இருந்து வந்தது. எர்ஷாத் அரசியல் சட்ட விவகாரத்தில் இராணுவத்திற்கும் பங்கு வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார். இதனால் சத்தார் தேசிய பாதுகாப்புப்படை என்ற ஒரு அமைப்பை அமைத்து அதில் முப்படைத் தளபதிகளையும் சில அமைச்சர்களையும் உறுப்பினர்களாக்கியிருந்தார். ஆனால் அமைச்சர்களுக்கு அதில் இடம் இருக்கக் கூடாது என்று எர்ஷாத் கூறி வந்தார். வங்காள தேசத்தின் தேசிய தினம் கொண்டாடப்படுவதற்கு முதல்நாள் புரட்சி நடத்தி எர்ஷாத் ஆட்சியைக் கைப்பற்றினார்.
அப்போது இலண்டனில் இருந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் இதுபற்றிக் கருத்துக் கேட்டபோது, அண்டை நாட்டில் நிலையான ஆட்சி இல்லாவிட்டால் அது இந்தியாவையும் பாதிக்கக்கூடியதுதான். என்றாலும் வங்காளதேச விவகாரத்தில் இந்தியா தலையிடாது. அங்கு அமைதியும் நிலையான ஆட்சியும் ஏற்படவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று கூறினார். வங்காளதேச சுதந்திரப் போராட்டம் நடந்த போது எர்ஷாத் பாகிஸ்தான் இராணுவத்திலே இருந்தார்.
சுதந்திரம் அடைந்த பிறகு வங்காள தேசத்துக்கு வந்த அவர் தேசிய பாதுகாப்புப் படை அகாடமியில் பயிற்சி பெற்றார். 1975 ஆம் ஆண்டு முஜிபுர் ரகுமான் சுட்டுக்கொல்லப்பட்டபோது எர்ஷாத் உடனடியாக டாக்காவிற்கு அழைக்கப்பட்டார். பின்னர் 1978 ஆம் ஆண்டு ஜியாவுர்ரகுமான் புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றியபோது எர்ஷாத் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஜியாவுர் ரகுமான் கொல்லப்பட்ட பிறகு ஏற்பட்ட அரசாங்கத்துடன் எர்ஷாத் ஒத்தழைத்து வந்தார்.
ஜியாவுர் ரகுமானைச் சுட்டுக் கொன்று ஆட்சியைப் பிடிக்கத் திட்டம் போட்ட மன்சூரின் புரட்சியை நசுக்குவதற்கு ஜனாதிபதி சத்தாருக்கு உதவியாக இருந்தார். எனினும் கடந்த சில மாதங்களில் சத்தாருக்கும் எர்ஷாத்துக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இது வங்காள தேசத்தில் சுதந்திரம் அடைந்த 12 ஆண்டுக் காலத்திற்குள் நடைபெற்ற நான்காவது இராணுவப்புரட்சியாகும். வங்காள தேசத்தின் சுதந்திரப்போராட்டத்தை முன் நின்று நடத்திய முஜிபுர் ரகுமான் 1971 ஆம் ஆண்டு ஜனவரியில் அந்த நாட்டின் பிரதமராக ஆனார்.
1974 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி ஆட்சி முறையை அங்கே கொண்டு வந்து அவரே முதல் ஜனாதிபதியாகவும் ஆனார். ஆனால் 15.8.1975 அன்று முஜிபுர் ரகுமான் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது குடும்பமே அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புரட்சி நடத்திய கொண்டாகர் முஸ்தாக் அகமது ஆட்சிக்கு வந்தார். அவர் ஜியாவுர் ரகுமானைத் தளபதியாக நியமித்தார். அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் புரட்சி காரணமாக கொண்டாகர் பதவி விலகி நீதிபதி சையித் முகமது சலீம் ஜனாதிபதியாக ஆனார்.
ஆனால் ஐந்தே நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. ஜியாவுர் ரகுமான் புரட்சி நடத்தி நவம்பர் 7 ஆம் தேதி இராணுவ ஆட்சியை அமைத்தார் 1978 இல் பொதுத்தேர்தல் நடந்து ஜியாவுர் ரகுமான் ஜனாதிபதியாக ஆனார். ஆனால் 1980 ஆம் ஆண்டு மே மாதம் திடீர் புரட்சி நடந்து ஜியாவுர் ரகுமான் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் புரட்சி நடத்திய மன்சூர் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை துணை ஜனாதிபதி சத்தார் புரட்சியை நசுக்கினார்.
அவருக்கு அப்போது உதவியாக எர்ஷாத் இருந்தார். 1983 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் நடைபெற்ற இந்தப் புரட்சியைத் தொடர்ந்து அந்நாட்டில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி சத்தார் மீது இலஞ்சவழக்குத் தொடுக்கப்படும் என்று இராணுவ அரசு அறிவித்தது. மேலும் வங்காள தேசத்தின் புதிய ஜனாதிபதியாக அப்துல் பாசல் முகமது அசாமுதீன் சவுத்திரியை வங்காள தேச இராணுவச் சட்ட நிர்வாகியான தளபதி எர்ஷாத் நியமித்து அவர் பதவியேற்றார்.
ஜனநாயக அடிப்படையில் ஆட்சி மாற்றங்கள் நடைபெற்ற இந்திய நாட்டுக்குப் பக்கத்து நாட்டில் இப்படி இராணுவப் புரட்சிகள் வாயிலாக ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டது ஆச்சரியத்துக்குரிதேயாகும். தெற்கு அட்லாண்டிக் கடலில் பல தீவுகளின் தொகுப்புக்குப் பெயர் 'பாக்லாந்து'. குளத்தில் தாமரை மொட்டுக்களைப் பார்ப்பது போலத் தான் அலைகடலில் இந்தச் சிறிய தீவுகளைக் கண்டிட முடியும்! இந்தத் தீவுகளில் மொத்தம் வாழ்கின்ற மக்கள் தொகையே சுமார் இரண்டாயிரம் பேர் தான் இருக்க முடியும்!
ஆனால் இந்தத் தீவு யாருக்குச் சொந்தம்? யார் அங்கே ஆதிக்கம் செலுத்துவது? என்பது பற்றிய கேள்விக்கு விடை காண 1982ஆம் ஆண்டு பல்லாயிரம் போர் வீரர்களைக் கொண்டு போர்க்களத்தில் இங்கிலாந்தும் அர்ஜெண்டினாவும் குதித்தன! விமானங்கள் வீழ்த்தப்பட்டன! வீரர்களில் நூற்றுக் கணக்கானவர்கள் கடலில் பிரதேங்களாக மிதக்கின்ற அளவிற்குக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன! இந்த பாக்லாந்தின் பழைய வரலாறு என்ன? 1764 ஆம் ஆண்டு லூயிஸ் என்ற துறைமுகம் உருவாகும் வரையில் அந்தத் தீவுகளில் மனிதர்கள் குடியிருந்ததற்கான அறிகுறிகளே கிடையாது.
அதன்பிறகு தான் மனித சஞ்சாரமே மெல்ல மெல்ல ஏற்பட்டது. இந்தத் தீவுகளை 1592 ஆம் ஆண்டு ஜான் டெவிஸ் என்ற இங்கிலாந்துக்காரர் கண்டு பிடித்தார். 1598 ஆம் ஆண்டு செபால்ட்வான் வீர்ட் என்பவர் வடக்குத்தீவுகளைச் சுற்றிப் பார்த்ததையொட்டி அந்தத் தீவுகளுக்கு அவருடைய பெயரைச் சூட்டி "செபால்டின் தீவுகள்" என்று அழைக்கத் தொடங்கினர்.
அதன்பிறகு அந்தத் தீவுகளுக்கு பாக்லாந்த் தீவுகள் என்ற பெயர் வந்ததற்கும் ஒரு காரணம் உண்டு! 1690ஆம் ஆண்டு அந்தத் தீவுக்குச் சென்ற கேப்டன் ஜான் ஸ்ட்ராங்க் என்பவர் தனது கப்பல் படையின் கருவூல அதிகாரியான "விஸ்கவுண்ட் பாக்லாந்தின்" பெயரை அந்தத் தீவுக் குழுவுக்குச் சூட்டினார். அந்தப் பெயரின் சுருக்கமே பாக்லாந்து என்று வழங்கலாயிற்று. 1764 ஆம் ஆண்டு பாக்லாந்தின் கிழக்குத் தீவுகளில் மனிதக் கூட்டம் ஒன்று குடியேறியது.
அதிலிருந்து தான் அந்தத் தீவுகளின் மனித வரலாறே ஆரம்பமாகிறது. 1975 ஆம் ஆண்டு அந்தத் தீவுகளில் ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்ட கேப்டன் ஜான் பிரயின்; அந்தப் பிரதேசம் இங்கிலாந்துக்குச் சொந்தமென்று கூறி ஒரு சிறிய படையையும் அங்கே முகாமிடச் செய்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அந்தத் தீவுகளில் பிரஞ்சுக்காரர்கள் உரிமை கொண்டாடி ஒரு படையும் அங்கே தங்குவதற்கு முயற்சி செய்தனர். இங்கிலாந்துக்காரர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடைபெற்ற மோதலில் நடுவில் நுழைந்து ஸ்பெயின் நாட்டினர் தாக்குதல் நடத்தினர்.
அந்தத் தாக்குதலில் இங்கிலாந்து படை வெளியேறினாலும் கூட மீண்டும் 1771 ஆம் ஆண்டு அதாவது அடுத்த ஆண்டு எக்மண்ட் என்ற துறைமுகத்தைக் கைப்பற்றியது. ஆனால் மூன்றாண்டுகளுக்குப் பின் அந்தத்துறைமுகத்தைக் கைவிட்டுவிட்டுச் சிறுக சிறுக தனது ஆதிக்கத்தை இங்கிலாந்து அங்கே வேரூன்றச் செய்து 1833 ஆம் ஆண்டு அதிகாரப் பூர்வமான உரிமையை பாக்லாந்து தீவுகளின் மீது பிரகடனப் படுத்தியது. அந்தப் பிரகடனத்திற்கு எதிராக அர்ஜென்டைனாவும் சிலி நாடும் தங்களுக்கே பாக்லாந்தின் மீது உரிமை உண்டு என வாதிட்டன.
பாக்லாந்திற்கு அருகே உள்ள அர்ஜென்டைனா நாட்டில் அப்போது இராணுவ ஆட்சி அதிபர் லியோ போர்டோ கால்டிரி தலைமையிலே நடைபெற்றது. நீண்ட நாட்களாக பாக்லாந்து தீவுகள் தங்களுக்கே சொந்தமென்று உரிமைகொண்டாடி வந்த அர்ஜென்டைனா, 2.4.1982 அன்று திடீரென அந்தத்தீவு மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றிக் கொண்டதையடுத்து இரண்டு நாடுகளுக்குமிடையே தொடர்ந்து சில வாரங்கள் போர் நடைபெற்றது. 8.6.82 அன்று பாக்லாந்து தலைநகரை முற்றுகையிட்ட இங்கிலாந்து படை அர்ஜென்டினாவை சரணடையும்படி எச்சரித்தது.
இதற்குப் பின் ஒரு வாரம் கழித்து 15.6.82 அன்று அர்ஜென்டினா படைகள் சரணாகதி அடைந்தன. இந்தப் போரில் இங்கிலாந்து பெரும் வெற்றிபெற்றது. போரில் தோற்றதால் அர்ஜென்டினாவில் உள்நாட்டுப் புரட்சி ஏற்பட்டு ராணுவத்தின் முப்படையினருக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுத் தரைப்படையைச் சேர்ந்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
