உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இந்திரா காங்கிரஸ் நன்றி
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இந்திரா காங்கிரஸ் நன்றி · 275 / 391

59. இந்திரா காங்கிரஸ் நன்றி காட்டிய படலம் தெ ன் ஆர்க்காடு மாவட்ட தி.மு.கழக மாநாடு 1981ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18,19 ஆகிய நாட்களில் படலூர் இரெ இளம்வழுதி பந்தலில், ஏ.கோவிந்தசாமி அரங்கத்தில் சி.வி.எம்.அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சி.டி.தண்டபாணி மாநாட்டினைத் திறந்து வைக்க, திருமதி அலமேலு அப்பாதுரை கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். 18ஆம் தேதியன்று காலையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

வரவேற்புக் குழுத்தலைவராக செஞ்சி ராமச்சந்திரனும், மாநாட்டுச் செயலாளர்களாக எம்.செல்வராஜு, எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.முத்துவேல், பொன்.ராமகிருஷ்ணன், சௌ.பத்மநாபன் ஆகியோரும், தொண்டர் படைத் தலைவராக எஸ்.பி.பச்சையப்பனும் பணியாற்றினார். மாநாட்டின் இரண்டாவது நாளன்று, புதுவையிலே காலையில் கழகத்தின் நிர்வாகக் குழு நடைபெற்று அ.தி.மு.க. அரசின் ஊழல்கள், மதுவிலக்குத் தளர்வு, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, பேருந்துக் கட்டண உயர்வு, நிர்வாகச் சீர்கேடுகள் இவற்றையெல்லாம் கண்டித்து, ஆகஸ்ட் திங்கள் 1,2 ஆகிய நாட்களில் தமிழக முழுதும் கண்டனக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்துவதென்றும், அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னையிலே கறுப்புக்கொடியேந்திப் பேரணி ஒன்றை நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டு அன்று இரவு மாநாட்டின் இறுதியிலே நான் உரையாற்றும் போது அறிவித்தேன்.

ஜூலைத் திங்கள் 23ஆம் தேதி அதிகாலையில் கோவை தினகரன், மாலைமுரசு அலுவலகம், அ.தி.மு.க.வினரால் சூறையாடப்பட்டது. அங்குள்ள விலையுயர்ந்த பல பொருட்கள் சூறையாடப்பட்டன. அதற்குக் காரணம் கோவை வந்திருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிக்க அருகே நெருங்க முடியாததால், ஒரு மாணவர் இருந்த இடத்திலிருந்து அந்த மாலையை எம்.ஜி.ஆரின் கழுத்தை நோக்கி வீச, அது அவருடைய தொப்பியைக் கீழே தள்ளிவிட்ட காரணத்தினால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர்.

அந்த மாணவனை அருகேயழைத்துக் கன்னத்திலே அறைந்து விட்டார். அது செய்தியாளர்கள் முன்னிலையிலே நடந்ததால், அந்தச் செய்தியை ஏடுகளிலே வெளியிடக் கூடாது என்று அரசு தரப்பிலே கூறப்- பட்டதை மீறி தினகரன், மாலைமுரசு ஏடுகள் அதனைச் செய்தியாக வெளியிட்டதால் அந்த இதழ்களின் அலுவலகங்கள் தாக்கப்படடன. இந்த வன்முறையை அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். சி.டி.தண்டபாணி, கோவை மோகன் ஆகியோர் இதுகுறித்து பிரதமருக்குத் தந்தி கொடுத்தனர்.

தினகரன் அலுவலர் மூவர் பலத்த காயங்களுக்கு ஆளாயினர். பொருளாளர் சாதிக்பாட்சா நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தார். அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டிலும், தமிழ் மாநாட்டிலும் கலந்து கொள்வதற்காகக் கவிஞர் கண்ணதாசன் 81ஆம் ஆண்டு ஜூலையில் சென்றவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவனையிலே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று செய்தி வந்தது. இந்தச் செய்தி கேட்டு அமெரிக்காவிலுள்ள தமிழக டாக்டர்கள் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவனைக்குச் சென்று, அவரைக் காப்பாற்ற முயன்றனர்.

25.8.81 அன்று சட்டப் பேரவையில் கண்ணதாசனின் மருத்துவச் செலவிற்காக அவருடைய குடும்பம் சிரமப்படுவதாகத் தெரிவித்து அரசு செய்துள்ள உதவி பற்றிக் கேட்டேன். அமைச்சர் அரங்கநாயகம், கண்ணதாசனுக்கு ஆகிற மருத்துவச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளுமென்று முதலமைச்சர் கூறியிருப்பதாகத் தெரிவித்தார். அதற்கு நான் அரசாங்கம் ஐம்பதாயிரம் ரூபாய்தான் ஒதுக்கியிருப்பதாக அறிகிறேன். ஆனால் இலட்சக்கணக்கில் செலவாவதால், முழுச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

முதலில் அபாயக் கட்டத்தில் இருந்து படிப்படியாகத் தேறி வந்தவர், 17.10.81 அன்று திடீரென்று சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அன்று இரவு அமெரிக்க மருத்துவமனையிலே இறந்து விட்டார் என்ற செய்தி தமிழகத்திற்கு வந்தது. "நெஞ்சுக்கு நீதி" முதல் பாகத்தில் 'நண்பர் கண்ணதாசன்' என்ற தலைப்பிலே அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்படத் தொடங்கியது பற்றியும், பின்னர் எந்த அளவிற்கு நெருங்கிப் பழகினோம் என்பதையும் எழுதியிருக்கிறேன்.

அவரது பிரிவுச் செய்தி என்னைப் பெரிதும் பாதித்தது. அமெரிக்காவில் எப்படியும் உடல்நலம் பெற்றுத் தாயகம் திரும்பிவிடுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். எனினும் இயற்கை அந்த மாபெரும் கவிஞனைக் கொண்டு போய்விட்டது. அவரது இல்லத்திற்குச் சென்று அவருடைய மனைவிக்கும், குழந்தைகளுக்கும் ஆறுதல் கூறினேன். 21.10.81 அன்று அவருடைய உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு 22 ஆம் தேதியன்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவு குறித்து சென்னைத் தொலைக்காட்சியில் நான் கூறியது: தென்றலாக வீசியவன் நீ! என் நெஞ்சில் தீயாகச் சுட்டவனும் நீ! அப்போதும் அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததே அன்றி, அணைந்த தீபமாக ஆனதே இல்லை நண்பா! நிலையில்லா மனம் உனக்கு ஆனாலும் நிலைபெற்ற புகழ் உனக்கு! கண்ணதாசன் மறைவுக்கு முதல் நாள்தான் உதகைக்குச் சென்றிருந்த நடிகர் முத்துராமன் திடீர் மாரடைப்புக் காரணமாக மறைந்தார். மேலும் சில நாட்களுக்குப் பிறகு நீண்ட நாட்கள் நினைவில்லாமல் இருந்த நடிகை சாவித்திரியும் இயற்கையடைந்தார்.

கலையுலகைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் ஒருவர் பின் ஒருவராக மறைவெய்தினார்கள். அந்தக் காலக்கட்டத்தில் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் 81 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியன்று இஸ்ரேலுடன் நடந்த போரின் எட்டாவது ஆண்டு விழாவையொட்டி இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அதனை எகிப்து நாட்டின் அதிபர் 63 வயதான சதத், துணை அதிபர் கொசினி முபாரக், இராணுவ மந்திரி கஜாலா ஆகியோர் ஒரு மேடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

முப்படையைச் சேர்ந்த வீரர்களும் வரிசையாக அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது விமானப் படையைச் சேர்ந்த ஆறு விமானங்கள் ஆகாயத்தில் 'குட்டிக்கரணம்' அடித்துச் சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தது. அதிபர் சதத் உட்பட அனைவரும் அதனை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென இராணுவ வண்டி ஒன்று வரிசையை முறித்துக் கொண்டு சதத் இருந்த மேடையை நோக்கி விரைந்து வந்தது. அதிலிருந்த இராணுவ வீரர்கள் மின்னல் வேகத்தில் குதித்து சதத் இருந்த மேடையை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்கள்.

மேடையிலிருந்த அதிபர் சதத், துணை அதிபர் கொசினி முபாரக், இராணுவ மந்திரி கஜாலா ஆகியோர் காயமடைந்தனர். அதிபரின் செயலாளர் பாசி அப்துல் ஹாபஸ் அந்த இடத்திலேயே துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்துவிட்டார். படுகாயமடைந்த அதிபர் சதத் உட்பட அனைவரும் ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு விரைவாக எடுத்துச் செல்லப்- பட்டனர். குண்டுகளை அகற்ற அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அறுவைச் சிகிச்சையின் போது சதத் மரண மடைந்தார்.

இந்த பாதகமான செயலை இரண்டு இராணுவ அதிகாரிகளும் நான்கு சிப்பாய்களும் செய்தனர். அதிபர் சதத்தைச் சுட்டவர்களை மற்ற இராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். நாசருக்குப் பிறகு எகிப்து நாட்டின் 'இரும்பு மனிதராக' விளங்கியவர் சதத். அவர் இஸ்ரேலுடன் நட்புறவு கொள்ள முயற்சி செய்து வந்தார். இதைப் பல அரபு நாடுகள் எதிர்த்தன. உள்நாட்டிலும் இதற்குப் பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது. ஈரான் நாட்டில் நடைபெற்ற புரட்சியின் போது தப்பி வந்த ஈரான் மன்னர் ஷாவிற்கு எகிப்து நாட்டில் அடைக்கலம் கொடுத்தது பற்றியும் இவர் மீது உள்நாட்டில் அதிருப்தி இருந்தது.

"அதிபர் சதத் ஆட்சியைக் கவிழ்க்க எந்த உதவியும் செய்யத்தயார்" என்று லிபியா நாட்டின் அதிபர் கடாபி பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். மேலும் தனது நாட்டில் புரட்சி ஏற்படுத்த ரஷ்யா சதி செய்வதாகவும் சதத் கருதினார். அதன் காரணமாக ரஷ்ய தூதரகத்தைச் சேர்ந்த 100 அதிகாரிகளை அண்மையில் நாட்டை விட்டே சதத் வெளியேற்றினார். ரஷ்ய ஆதரவு நாடாக இருந்த எகிப்தை அமெரிக்க ஆதரவு நாடாக மாற்றியவரும் இவரே. நைல் நதிப் பள்ளத்தாக்கில் உள்ள மித்அபுஅல்கோம் என்ற கிராமத்தில் சாதாரண ஒரு குமாஸ்தாவிற்கு மகனாகப் பிறந்த சதத் இராணுவக் கல்லூரியில் பயின்று படிப்படியாக முன்னேறியவர்.

நாசர் இவருடைய வகுப்புத் தோழர். இவருடைய தாய் சூடான் நாட்டைச் சேர்ந்தவர். நாசர் அதிபராக இருந்தபோது துணை அதிபராக விளங்கிய சதத் 28.9.1970 ல் நாசர் மறைவெய்தியவுடன் அதிபராகப் பதவியேற்றார். 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆறு ஆண்டுக் காலத்திற்கு அதிபராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குத் தைரியமாகச் சென்று தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திச் சமாதானம் கண்டார்.

இதனால் மற்ற அரபு நாடுகள் எல்லாம் எகிப்தை ஒதுக்கி வைத்துவிட்டன. சதத் கொல்லப்பட்டதால், அதுவரை துணை அதிபராக இருந்த முபாரக் புதிய எகிப்து அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சதத் அடக்கம் செய்யப்பட்ட 'பிரமிடு'வின் மேல்பகுதியில் பதிக்கப்பட்ட கறுப்புக்கல் ஒன்றில் தங்கத்தினால் அரபு மொழியில் "யுத்த வீரராகவும் சமாதான வீரராகவும் விளங்கிய அன்வர் சதத் அவருடைய கொள்கைக்காகவே மரணமடைந்தார்" என்று எழுதப்பட்டுள்ளது.

1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வால்மீகி மரணமடைந்ததால், 1981 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் அந்தத் தொகுதியிலே இடைத்தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் தி.மு.க கூட்டணி சார்பிலே, காங்கிரஸ் வேட்பாளர் நின்று வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும் தி.மு.க., இந்திரா காங்கிரஸ் உறவு நீடித்து வந்ததாலும், இடைத்தேர்தலிலே அந்தத் தொகுதியை காங்கிரசுக்கே விட்டுத் தருவதுதான் முறை என்ற வகையிலே தி.மு.கழகம் அந்தத் தொகுதியிலே நிற்பதாக எந்தவிதமான அறிவிப்பும் செய்யாமல் இருந்தது.

மேலும் 81 ஆம் ஆண்டு மார்ச்சில் அந்தமான் தலைநகரான போர்ட்பிளேயரில் செய்தியாளர்களிடம் பேசும்போது பிரதமர் இந்திரா காந்தி தமிழ் நாட்டில் தி.மு.கழகத்துடன் இந்திரா காங்கிரஸ் கொண்டிருக்கும் உறவு சரியானதே என்றும், தி.மு.கழகத்துடன் உறவு கொண்டிருப்பதால் பிராந்திய உணர்வை வளர்ப்பதாகப் பொருள் கொள்ள முடியாதென்றும், தி.மு.கழகத்துடன் கொண்டிருக்கும் உறவு தமது கட்சியின் தேசிய உணர்வைப் பாதிக்காது என்றும் தெரிவித்திருந்தார். அந்தத் தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.

அணி சார்பிலே இந்தியக் கம் யூனிஸ்ட்கட்சி போட்டியிட்டிருந்தபடியால் அதே அடிப்படையில் இந்த இடைத் தேர்தலில் அந்தக் கூட்டணியின் சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தும் என்றும், கடந்த தேர்தலில் அவர்களோடு உறவு கொண்டிருந்த அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளின் ஆதரவைக் கோருவார்கள் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் நிருபர்களிடம் தெரிவித்தார். அ.தி.மு.க.

சார்பில் அந்தத் தொகுதியைச் சேர்ந்த செ.மாதவன் நிறுத்தப்படுவார் என்றும் அ.தி.மு.க இந்தத் தேர்தலிலே இந்திரா காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்குமென்றும், அதன் மூலம் தொடர்ந்து இந்திரா காங்கிரசுடன் அ.தி.மு.க. உறவு கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் என்றும் மாறுபட்ட செய்திகள் ஏடுகளில் வெளிவந்தன. அக்டோபர்த் திங்கள் முதல் வாரத்தில் நிருபர்களிடம் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பேசும்போது இடைத் தேர்தல்களில் அரசியல் கட்சிகளில் திருப்பங்கள் எதிர்பார்க்கப்படுவது தவறில்லை.

திருப்பத்தூர் தேர்தலிலும் திருப்பங்கள் ஏற்படலாம் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கே நிற்பதாக அறிவித்திருப்பது பற்றியும் அ.தி.மு.க.வின் ஆதரவைக் கோரியிருப்பது பற்றியும் கேட்டபோது "எல்லோரும் ஆதரவு கேட்கலாம். அது பற்றி இப்போது கூற முடியாது" என்றார்.

எம்.ஜி.ஆரின் இந்தப் பேட்டிக்கு இரண்டு நாட்கள் கழித்து, தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.பி. சுப்ரமணியம் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்திலே சந்தித்து நீண்ட நேரம் பேசினாரென்று செய்தி வந்தது. எம்.பி.சுப்ரமணியத்திடம் நிருபர்கள் அதுபற்றிக் கேட்டபோது திருப்பத்தூர் தேர்தல் பற்றிப் பேசவில்லை என்றும், அந்தத் தொகுதியில் இந்திரா காங்கிரஸ் தனித்துப் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நிருபர்கள் என்னைக் கேட்டபோது "திருப்பத்தூர் தொகுதி கடந்த தேர்தலில் தி.மு.க., இந்திரா காங்கிரஸ் கூட்டணி சார்பில், இந்திரா காங்கிரஸ் நின்று வெற்றிபெற்ற தொகுதி. எங்கள் கூட்டணியை ஆதரிக்க யார் முன்வந்தாலும் அவர்கள் தாராளமாக ஆதரிக்கலாம்" என்றேன். தொடர்ந்து நிருபர், "எம்.ஜி.ஆர் திருப்பத்தூர் தொகுதியில் திருப்பங்கள் ஏற்படுமென்று கூறியிருக்கிறாரே?"

என்று கேட்டபோது, "அவர் மாற்றங்களை சுலபமாக உருவாக்கக் கூடியவர். தஞ்சைத் தேர்தலின்போது இரவு 10 மணிக்கு ஒரு மாற்றம், பத்தரை மணிக்கு ஒரு மாற்றம் என்று செய்தவர். அதனால் இப்போது என்ன மாற்றம் செய்வாரோ எனக்குத் தெரியாது" என்றும் கூறினேன்.

அதற்குப் பின் சேலத்தில் நிருபர்கள் என்னைச் சந்தித்தபோது "தி.மு.க. இந்திரா காங்கிரஸ் கூட்டணி மேலிடத்தால் முடிவு செய்யப்பட்டது. அதைத் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பிரிக்கப் பார்க்கிறார்களே?" என்று கேட்டதற்கு, "திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் எந்தவொரு கட்சியுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டாலும், அந்த உடன்பாட்டைத் தானாக விலக்கிக் கொண்டதில்லை. இதுதான் நான் இப்போது சொல்கின்ற பதில்" என்று கூறினேன்.

அக்டோபர் 17ஆம் தேதி சென்னை வந்த மத்திய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமனிடம் நிருபர்கள் திருப்பத்தூர் தொகுதி இடைத்தேர்தல் பற்றிக் கேட்டபோது, இந்திரா காங்கிரஸ் அங்கே தனித்துப் போட்டியிடும் என்றும் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராதென்றும், மற்ற கட்சிகள் அவர்களாக இந்திரா காங்கிரசை ஆதரிக்க முன்வந்தால் ஏற்றுக் கொள்வோமென்றும் கூறினார். தொடர்ந்து நிருபர்கள், தி.மு.க., இந்திரா காங்கிரஸ் உறவு முறிந்துவிட்டதா என்று கேட்டதற்கு, "அதை நான் எப்படிக் கூடி முடியும்; அதசியலில் நிரந்தரமான தேர்தல் உடன்பாடோ, நிரந்தர விரோதமோ எப்போதும் இருந்தது கிடையாது.

மாறிவரும் நிலைமைகளுக்கேற்ப முடிவெடுப்பதுதான் சரி" என்றார். அதே நாளன்று நிருபர்களிடம் எம்.பி.சுப்ரமணியம், தங்கள் கட்சிக்கு ஆதரவு கொடுக்க எந்த அரசியல் கட்சி முன்வந்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம் என்றும் ஆனால் தங்கள் கட்சி மேடைகளில் அவர்களைப் பேச அனுமதிக்க மாட்டோம் என்றும் தங்கள் கட்சி கார்களில் கூட ஆதரவு தரும் மற்றக் கட்சிகளின் கொடிகளைக் கட்ட மாட்டோம் என்றும் கூறினார். மேலும் அவரே, இந்திரா காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் உள்ள உறவு சட்டமன்றத் தேர்தலோடு முடிந்துவிட்டது என்றும் தி.மு.க.

நடத்திய தேர்தல் கால வாக்குறுதிகளை நினைவூட்டும் போராட்டங்களில் கூட இந்திரா காங்கிரஸ் கலந்து கொள்ளவி

ல்லை என்றும், புதுவையில் நடைபெறும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பற்றித் தான் எதுவும் கூற விரும்பவில்லை என்றும், அது வேறு மாநிலம் என்றும் கூறினார். அக்டோபர் 19ந் தேதியன்று வேலூரில் நிருபர்கள் மூப்பனாரிடம் திருப்பத்தூர் தேர்தல் பற்றிக் கேட்டபோது "காங்கிரஸ் கட்சி மேலிடமும் பிரதமர் இந்திரா காந்தியும்தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

"திருப்பங்கள் ஏற்படும் என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறாரே?" என்று நிருபர் கேட்டதற்கு, "இதுபற்றி எம்.ஜி.ஆர்.இடமே கேளுங்கள்" என்றும் கூறினார். மேலும் ஒரு நிருபர், எம்.பி.சுப்ரமணியம் தி.மு.க.வோடு உறவு முறிந்துவிட்டது என்று கூறியிருக்கிறாரே என்று கேட்ட போது, மூப்பனார் பதில் எதுவும் கூறவில்லை. ஆனால் அவருக்குப் பக்கத்திலே இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.

கோசல்ராம்; "எம்.பி.சுப்பிரமணியம் கூறுவது தவறு; நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு சென்னை வந்த பிரதமர் இந்திரா காந்தி விமான நிலையத்தில் பேட்டியளித்தபோது தி.மு.க.வுடன் உறவு இருந்து வருவதாகத்தான் கூறினார். இது சம்பந்தமாகக் கட்சியின் மேலிடம் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. இதை மூப்பனார் கூட மறுக்க முடியாது. தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை இன்னும் இந்திரா காங்கிரசுடன் கூட்டு நீடித்து வருவதாகக் கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

ஆனால் இந்திரா காங்கிரசை ஆதரிப்பதாக எம்.ஜி.ஆர். இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனவே திருப்பத்தூர் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் இந்திரா காந்தி வந்த பிறகு அவர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது" என்று கூறினார்.

அக்டோபர் 24ஆம் தேதியன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான மூப்பனார் அவர்களும் திண்டிவனம் ராமமூர்த்தியும் சட்டமன்ற தி.மு.கழக அலுவலகத்தில் வந்து என்னைச் சந்தித்து நீண்ட நேரம் பேசினர். என்னுடன் பேராசிரியர் அவர்களும், முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் சமது அவர்களும் அந்தப் பேச்சு வார்த்தையிலே கலந்துகொண்டார்கள். அக்டோபர் 31ஆம் தேதி நிருபர்கள் என்னிடம் திருப்பத்தூர் தொகுதியிலே தி.மு.க.போட்டியிடுமா என்று கேட்டதற்கு "அந்தக் கேள்விக்கே இடமில்லை.

இந்திரா காங்கிரசின் இடம் அது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினேன். தொடர்ந்து நிருபர்கள், "பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்க எம்.ஜி.ஆர் இன்று டெல்லி சென்றிருக்கிறாரே, நீங்கள் போவீர்களா?"

என்று கேட்டதற்கு, "அப்படிப்பட்ட உத்தேசம் எதுவுமில்லை" என்று கூறினேன். பிரதமர் இந்திராகாந்தி நவம்பர் 4ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் திருப்பத்தூர் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்றும், எல்லா அரசியல் கட்சிகளின் ஆதரவையும் அனைத்துத் தரப்பு தமிழக மக்களின் ஆதரவையும் வரவேற்பதாகவும், வேட்பாளராக ஆர்.எம்.அருணகிரி நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அதாவது தி.மு.க.வுக்கு "நன்றி காட்டும் படலம்" (?)

இ.காங்கிரசில் ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். நவம்பர் 6ஆம் தேதி சென்னையில் நிருபர்கள் என்னைச் சந்தித்தனர். அப்போது நான் "தற்போது இந்திரா காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டுமென்று இந்திரா காந்தி அனைத்துக் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எங்களுக்கு உள்ள உறவின் அடிப்படையில் அந்த அழைப்பினையேற்றுச் செயற்குழுவில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். இன்று உருவாகியுள்ள சூழ்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்களை இந்திரா காங்கிரஸ் அழைத்தால்தான் செல்வோமே தவிர, நாங்கள் தனியாகக் கூட்டம் போட்டு பிரச்சாரம் செய்யமாட்டோம்.

வருகின்ற அழைப்பு அதிகார பூர்வமானதாக இருக்க வேண்டும்" என்று கூறினேன். அ.தி.மு.க. அமைத்த 16பேர் குழு மதுரையில் கூடி எடுத்த முடிவு வருமாறு:- "நாடாளுமன்றத் தொகுதியோ, சட்டமன்றத் தொகுதியோ நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் காலி ஆவதைத் தவிர வேறு காரணங்களால் வெற்றிடம் ஏற்படுமானால் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எந்தக் கட்சியின் சார்பில் இருந்தாரோ, அந்தக் கட்சிக்கே அந்த இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையை அ.தி.மு.க வற்புறுத்துவதோடு அந்தக் கொள்கையின் அடிப்படையில் இந்திராகாந்தி விடுத்த கோரிக்கையை ஏற்றுத் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்கிறது" நிருபர்:- அப்படியானால் இந்திரா காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அ.தி.மு.க.

பிரச்சாரம் செய்யுமா? எம்.ஜி.ஆர்:- எங்களுடைய சூழ்நிலை, அவர்களுடைய கோரிக்கை ஆகியவற்றை பரிசீலித்து முடிவு செய்யப்படும். எம்.ஜி.ஆர். மதுரையிலே வந்து சந்திக்கும்படி கூறியதன் பேரில் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சித்தலைவர்களான ப.நெடுமாறன் (காமராஜ் காங்கிரஸ்), குமரி அனந்தன் (கா.கா.தே.கா) என். வரதராசன், (மார்க்சிஸ்டு) நல்லக்கண்ணு (இந்திய கம்யூனிஸ்டு), ஏ.ஆர். பெருமாள், (பார்வர்டு பிளாக்) செங்கம் ஜபார் (முற்போக்கு முஸ்லிம் லீக்) ஆகியோர் மதுரையில் எம்.ஜி.ஆரைச் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார்கள்.

பின்னர் நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:- "அ.தி.மு.க. நின்றால் ஏழு கட்சிகளும் ஆதரிப்பதாகக் கூறினோம். இல்லாவிட்டால் நாங்கள் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். எங்கள் கோரிக்கையை எம்.ஜி.ஆர். ஏற்கவில்லை. இந்தக் கருத்தை முன்பே எங்களிடம் கூறியிருந்தால் எங்கள் கட்சிச் செயற்குழுவைக் கூட்டிப் பேசியிருப்போம். அதற்கும் அவகாசம் இல்லை. எங்கள் அணியின் சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நிறுத்தப்படுவார்" என்று கூறினார்.

அந்தத் தேர்தலில் பிரச்சாரத்திற்காக இந்திரா காங்கிரஸ் யாரையும் அழைக்கவில்லை. தி.மு.கழகச் சார்பில் ஏற்கனவே நான் அறிவித்ததைப் போல அவர்கள் அழைக்காததால் நாங்கள் யாரும் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் செல்லவில்லை. ஆனால் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் மற்றும் அமைச்சர்கள் தலைமையில் இந்திரா காங்கிரஸ் அழைக்காமலேயே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இந்திரா காங்கிரஸ் மேடைகளில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

எனினும் எம்.ஜி.ஆர். அவர்கள் தனியாக வேனில் சென்று பிரச்சாரம் செய்தார்.