நெஞ்சுக்கு நீதி
தீக்குளித்தல் தொடர்கதையாவதோ? · 274 / 391
58. தீக்குளித்தல் தொடர்கதையாவதோ? தமிழகத்திலே இவ்வளவு பரிதாபத்திற்குரிய நிகழ்ச்சிகள் நடந்த போதிலும் அரசு திருந்தவில்லை. கைது நடவடிக்கைகளையும் குறைத்துக் கொள்ளவில்லை. மதுரை முரசொலியை அங்கிருந்து கவனித்துக் கொண்டிருந்த என் மகன் மு.க. அழகிரியை 19.9.1981 அன்று நள்ளிரவில் கைது செய்து எங்கே அழைத்துச் செல்கிறோம் என்று தெரிவிக்காமலேயே அழைத்துச் சென்று விட்டார்கள். சென்னையிலே நான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்ணீர்ப் புகை வீச்சும், தடியடியும், பேருந்துகள் எரிப்பு நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன.
செப்டம்பர் 19-ஆம் தேதியன்று சேலம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த பி.டி. செழியன் என்ற 25 வயது தொழிலாளி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்னால் தீயிட்டுக் கொல்ல முயற்சி செய்தபோது, காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். திருச்சி, பீமநகரைச் சேர்ந்த மனோகரன் என்ற 20 வயது கழகக்காளை, இளைஞர் அணியைச் சேர்ந்தவர் 20.9.81 அன்று திருச்சி பாலாஜி தியேட்டர் எதிரிலே தன் உடலிலே மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீயிட்டுக் கொண்டார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் பலனின்றி இறந்து போனார். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடரவேண்டாமென்றும், யாரும் இத்தகைய பணியிலே ஈடுபடக்கூடாதென்றும் பொதுச்செயலாளர் பேராசிரியரை விட்டு வேண்டுகோள் ஒன்று விடும்படி சிறையிலிருந்தவாறு கூறியனுப்பினேன். பேராசிரியர் அந்த வேண்டுகோளை விடுத்தும் அந்த நிகழ்ச்சிகள் நின்றபாடில்லை. 22ஆம் தேதியன்று காலையில் திருவாரூர் நகரில், நீண்டநாள் கழகத் தோழர் கிட்டு, தன் மகன் பழனியோடு அண்ணா சிலைக்கு எதிரே வந்து, தன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு, தன் மகனிடம் "கலைஞரை விடுதலை செய்" என்று முழக்கமிடுமாறு கேட்டுக் கொண்டு, தானும் அவ்வாறே முழக்கமிட்டுக் கொண்டு தீயிட்டுக் கொண்டார்.
அருகேயிருந்த காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் ஓடிவந்து காப்பாற்ற முனைந்தபோதும் பயனின்றி, அவர் எரிந்து அந்த இடத்திலேயே உயிர்விட்டார். மீண்டும் பலமுறை பேராசிரியர் "தீக்குளிப்பு தொடர வேண்டாம்" என்று கேட்டு அறிக்கை விடுத்தார்.
சென்னையில் துரைமுருகன், சீத்தாபதி, ஜார்ஜ், வள்ளுவன், வி.பி.அகிலன் உட்படப் பலர் 22ஆம் தேதியன்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். நெல்லையில் மறியல் நடத்தச் சென்ற வை.கோபால்சாமி எம்.பி., உட்பட நூறு பேரும் அன்றே கைது செய்யப்பட்டனர். சில்லிகுளம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைத்துரை, என்னுடைய விடுதலை கோரித் தீயிட்டுக் கொண்டபோது காவல்துறையினர் தடுத்து, அவரைக் கைது செய்து வழக்கு தொடுத்தனர். பெரியார் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், சென்னிமலை லெட்சுமியம்மாள், ஈரோடு அண்ணா சிலைக்கு முன்னால் தீயிட்டுக் கொள்ள முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
பல்லடம் நகரில் முத்துச்சாமி என்ற கழகத் தோழர் தீயிட்டுக் கொண்டபோது காப்பாற்றப்பட்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார். காஞ்சிபுரத்தில் பொதுக் கூட்டத்தில் தன்மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, தீயிட்டுக் கொள்ள முயன்ற சிவப்பிரகாசம் தடுக்கப்பட்டு, அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வேலூர் அண்ணாசிலை அருகே தீக்குளிக்க முயன்ற சேகர் தடுக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். பெருந்துறையில் முத்துப்பாண்டியன் என்ற கழகத்தோழர், தன் உடலுக்குத் தீயிட்டுக் கொண்டார்.
இவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தச் செய்தியை எல்லாம் படித்து உள்ளம் தாள முடியாத நிலையில் "தியாகத்தீயால் என் உள்ளத்தைக் கருக்கிடாதீர்" என்று சிறையிலே இருந்தவாறே வேண்டுகோள் விடுத்தேன். தீக்குளித்து மாண்டவர்களின் குடும்பத்தினருக்கெல்லாம் சிறையிலிருந்தவாறு கண்ணீர்க் கடிதங்களையும் எழுதினேன். திருப்பூரில் கழகத் தோழர் திருவேங்கடம், 25ஆம் தேதி இரவு தீயிட்டுக் கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார்.
26ஆம் தேதியன்று விடியற்காலையில் தர்மபுரியில் கல்லாவி இராசேந்திரன், தன் உடலுக்குத் தீயிட்டுக் கொண்டு மிகவும் ஆபத்தான நிலையில் தர்மபுரி மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டார். இந்த இருவர் மீதும் காவல்துறை தற்கொலை வழக்குகளைப் பதிவுசெய்தது. ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன் சுருட்டி வெண்ணங்குழி கிராமத்தைச் சேர்ந்த ராமையன், நான் விரைவிலே விடுதலையாகி விடுவேன் என்று எதிர்பார்த்ததாகவும், அரசு விடுதலை செய்யாததால், தான் உயிரோடு இருந்து பயனில்லை என்று கருதுவதாகவும் கூறிக்கொண்டு, தீயிட்டுக்கொண்டு பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டார்.
நாமக்கல்லில் வி.கே.ராமசாமி என்ற 27 வயது தோழர் தீயிட்டுக் கொண்டு, ஆபத்தான கட்டத்திலே மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டார். குடியாத்தம் அருகே மேல்மாயில் ஜெகநாதன் "கலைஞரை விடுதலை செய்" என்ற முழக்கத்துடன் தீயிட்டுக்கொண்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார். சென்னையில் 67வது வட்டக்கிளை உறுப்பினர் மேரி, தன் உடலிலே மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீயிட்டுக் கொண்டு, தன் மூன்று குழந்தைகளையும், கணவனையும் விட்டுவிட்டுச் சாவூருக்குச் சென்று விட்டாள்.
இதிலே ஒரு கொடுமை என்னவென்றால், ஓட்டேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மேரியின் கணவரையும், தம்பியையும் அழைத்து, மேரி வறுமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக எழுதித் தரும்படி கேட்டு வலியுறுத்தியதுதான். ஆனால் அந்தக் குடும்பமே கழகக் குடும்பம் என்பதால், காவல்துறையினரின் மிரட்டலுக்கு அஞ்சிடவில்லை. 29.9.81 அன்று காலையில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நீதிபதி எங்களிடம், குற்றப்பத்திரிகை நகல் வழங்க இரண்டு மூன்று நாட்களாகும் என்பதால், ஜாமீனில் செல்வதாக இருந்தால் அனுமதிக்கிறேன் என்றார்.
அப்போது நான் படித்த அறிக்கையில், "அரசாங்கம் 400 பேரை விடுதலை செய்திருந்தால், பத்தாயிரம் பேரை சிறை வைக்க நேர்ந்திருக்காது; தீக்குளித்துச் சிலர் மாண்டிடவும், பலர் மரணப்படுக்கையிலே கிடக்கும் நிலமையும் ஏற்பட்டிருக்காது. சிறையிலே எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாங்கள் இருக்கத் தயார், ஜாமீனில் வெளியேற மாட்டோம், ஏனென்றால் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ஏற்கத் தக்கவையல்ல; நாங்கள் குற்றவாளிகளும் அல்ல" என்று தெளிவாக்கினேன்.
நீதிபதி அக்டோபர் முதல்தேதி குற்றப்பத்திரிகை நகல் தரப்படுமென்றும், அதுவரை சிறைக்காவலில் இருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டு, மீண்டும் நாங்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். காவல் நீடிப்புச் செய்தி கேட்டு, நகரெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சட்டம், ஒழுங்கு மிகவும் பாதிக்கப்படுமோ என்று அஞ்சிய காவல்துறையினர் அரசிடம் தெரிவித்ததின் பேரில் அன்றையதினமே அரசின் சார்பில் வழக்கறிஞர் நீதிமன்றம் சென்று தொடர்ந்து எங்களைக் காவலில் வைத் திருக்கத் தேவையில்லை என்று மனு செய்து, அதன்பேரில் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அன்று மாலை 4.30 மணி அளவில் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, ஆயிரக்கணக்கான தோழர்களுடன், பேராசிரியர், சாதிக் பாட்சா, நாஞ்சிலார், முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் சமது ஆகியோர் என்னை வரவேற்று மாலை அணிவித்தனர். விடுதலைக்குப் பின் செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து அடுத்த திட்டம் என்ன என்று கேட்டபோது, "சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோமே தவிர, வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படவில்லை 1.10.81 அன்று நீதிமன்றத்திற்கு இந்த வழக்கிற்காக நாங்கள் செல்ல வேண்டும்.
பிறகு தீக்குளித்தோர் இல்லங்களுக்கெல்லாம் சென்று, அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவிருக்கிறேன். 11.10.81 அன்று தீக்குளித்த தியாகிகள் தினம் தமிழ்நாடு முழுதும் கழக அமைப்புகளின் சார்பில் நடைபெறும்" என்று கூறியதோடு எங்கள் விடுதலைக்காக அரசை வலியுறுத்திய கட்சிகள் அனைத்திற்கும், மற்றும் விவசாயிகள் சங்கம், மாணவர் அமைப்புகள், அரசு அலுவலர் சங்கம், ஆசிரியர் மன்றங்கள், பத்திரிகையாளர்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டேன்.
1.10.81 அன்று வழக்கு விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் ஒரு அறிக்கையைப் படிக்க முன்வந்த போது, மரபுப்படி அவ்வாறு அறிக்கை படிக்க அனுமதிப்பில்லையே எனக் கழக வழக்கறிஞர் என்.வி.என்.சோமு மறுப்புத் தெரிவிக்க, நீதிபதி அந்த அறிக்கையைப் படித்திட அனுமதி கொடுத்தார். உடனே நான் அரசு வழக்கறிஞருக்கு அந்த அறிக்கையைப் படிக்க அனுமதித்தால், அதற்குப் பதில் கூறும் வாய்ப்பினை எனக்கும் நல்க வேண்டுமென்று கேட்டு, நீதிபதி அதனையேற்றார்.
அரசு வழக்கறிஞரின் அறிக்கைக்குப் பதிலளித்து நானே அரை மணி நேரத்திற்கு மேல் வாதம் செய்தேன். குறிப்பாக 29ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் காவலை நீடிப்பதாக முதலில் உத்தரவிட்டு விட்டு, பிறகு அதே நாளில் அரசு வழக்கறிஞரே வந்து எங்களைச் சிறையிலிருந்து அனுப்பத் தடையில்லை என்று கூறிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இதுபோல் எப்போதாவது நடைபெற்றதுண்டா என்று கேட்டபோது நீதிபதியே சிரித்துவிட்டார். வழக்கு அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நீதிமன்றத்திலிருந்து நேராக சென்னையிலேயே தீக்குளித்து மாண்ட மேரியின் இல்லத்திற்குச் சென்று, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். தீக்குளித்து மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் ராமசாமியைப் பற்றி ஆளுங்கட்சி ஆதரவு பத்திரிகை ஒன்று குடும்பத்தகராறு காரணமாக அவர் தீக்- குளித்ததாகச் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் பேரில், செய்தியாளர்கள் மருத்துவமனைக்கே சென்று அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது, "அது மக்களின் குரல்வளையை நெறிக்கும் பத்திரிகையிலே வந்த செய்தி.
என் குடும்பத்தில் எந்தவிதமான தகராறும் இல்லை. கலைஞரின் விடுதலைக்காகத்தான் நான் தீக்குளித்தேன்" என்று தெரிவித்தார். தர்மபுரியிலே தீக்குளித்து ஆபத்தான கட்டத்தில் இருந்த கல்லாவி ராசேந்திரனுக்கு ஒரு முக்கியமான மருந்து சிங்கப்பூரிலிருந்து கொண்டு வரவேண்டுமென்று கூறியபோது, உடனடியாக நானே தலையிட்டு, அந்த மருந்தைச் சிங்கப்பூரிலிருந்து வர வழைத்து அர்ஜுனன் எம்.பி., மூலமாக மருத்துவர்களுக்கு அனுப்பிவைத்தேன்.
தீக்குளித்த தியாகிகளின் குடும்பங்பளுக்கு ஆறுதல் கூறவும், சிகிச்சை பெறுபவர்களைக் காணவும் 8.10.1981 அன்று புறப்பட்டு முதலில் வேலூர் சென்றேன். 26-ஆம் தேதி தீக்குளித்து வேலூர் மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்த மேல்மாயில் ஜெகநாதனைக் கண்டேன். அப்போது அந்த இளைஞன் கூறிய வாசகங்கள் "தலைவரே, உங்க விடுதலைக்காக உயிர் விட்டவங்க பட்டியலிலே என் பேரு இடம் பெறாம போயிட்டுதே.... உங்க முகத்தைப் பார்த்துட்டேன்.
அதுபோதும், இனிமே என் உயிர் போனால் நான் மகிழ்வேன்" என்றார். இயக்கத்திற்காக நான் ஏற்றுக்கொண்ட சிரமங்கள், சிறைவாசங்கள் எல்லாம் அந்த ஒரு நொடியிலே என்னை விட்டகன்றன. அதற்கு முதல்நாள், "சண்டே" இதழின் சிறப்புச் செய்தியாளர் அனிதா பிரதாப் அவரைச் சந்தித்து, "தீக்குளிக்க உங்களுக்கு வேதனையாக இல்லையா?"
என்று கேட்டபோது, "கலைஞர் விடுதலைக்காகத் தீக்குளித்த நான் இன்னும் சாகாமல் இருக்கிறேனே, அதுதான் வேதனையாக உள்ளது" என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து, "தலைவர் நாளை உங்களைச் சந்திக்க வருகிறாரே?" என்றதற்கு, "அது மட்டுமே எனக்கு மகிழ்ச்சி" என்று தன் உடல் வேதனைகளைப் பொறுத்துக்கொண்டு ஜெகநாதன் பதில் கூறியிருக்கிறார்.
8-ஆம் தேதி பிற்பகலில் தர்மபுரி சென்று கல்லாவி இராசேந்திரனை மருத்துவமனையிலே கண்டேன். நான் வருவதறிந்து மருத்துவமனை வாசலிலேயே ஒரு பொதுக்கூட்டம் போலக் கூட்டம். கல்லாவி இராசேந்திரனின் மனைவி திலகா, தாயார் புஷ்பம் அம்மாள், தந்தையார் ரங்கநாத செட்டியார், குழந்தைகள் ஆனந்தி, வசந்தி, மற்றும் அவருடைய சகோதரர்கள், சகோதரிகள் எல்லாம் என் கையைப் பிடித்துக் கொண்டு கதறினார்கள். இராசேந்திரனிடம், "ஏனப்பா, என்னை விடுதலை செய்யாமலேயா போய்விடுவார்கள்?
அதற்குள் ஏன் இப்படி அவசரப்பட்டாய்?" என்றேன். "உங்களைவிட என் உயிரைப் பெரிதாக நினைக்கவில்லை. எனவேதான் அவ்வாறு செய்து கொண்டேன்" என்றார். இதற்குப் பின் பதினைந்து நாட்கள் மட்டுமே உயிர்வாழ்ந்த கல்லாவி இராசேந்திரன் அக்டோபர் 23-ஆம் தேதியன்று மறைந்துவிட்டான். தலைமைக் கழகத்தின் சார்பில் அவனுடைய இறுதி ஊர்வலத்திலே பொருளாளர் சாதிக்பாட்சா கலந்து கொண்டார். "திக்கு நோக்கித் தெண்டனிடுகிறேன்" - கல்லாவி இராசேந்திரனுக்காக நான் கண்ணீரோடு முரசொலியில் எழுதிய கடிதத்தின் தலைப்பு இது!
தர்மபுரி மருத்துவமனையில் கல்லாவி இராசேந்திரனைப் பார்த்துவிட்டு, அன்று இரவு சேலம் மாநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், வீரபாண்டி ஆறுமுகம், மாவட்டக் கழகச் செயலாளர் ப.தா. முத்து, அர்ஜுனன் எம்.பி., ஜி.கே.சுபாஷ், ஜே.கே.கே. சுந்தரம், ப.க.தமிழழகன், புலவர் ஆடலரசு, எம்.கந்தசாமி எம்.பி., ஆகியோர் உரையாற்றிய பின், நான் இறுதியாக உரையாற்றினேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியும், அ.தி.மு.க. அரசு கழகத்தினரைக் கைது செய்து வழக்குப் போட்டுச் சிறையிலே அடைத்தது பற்றியும் விரிவாகப் பேசினேன். அக்டோபர் 9-ஆம் தேதி காலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு, நாமக்கல் புறப்பட்டேன். நாமக்கல் மருத்துவமனைக்குள் செல்வதற்கே பெரும் போராட்டம். அந்த அளவிற்கு மக்கள் வெள்ளம் அங்கே! தொட்டியம் ராமசாமி தீக்குளித்த காயங்களுடன் பேசக்கூட முடியாத நிலையில் கண்ணீரோடு என்னை வரவேற்றார்.
அருகிலே அவரது துணைவியார் காளியம்மாள், குழந்தை சாந்தி ஆகியோர்! மருத்துவர்களை அழைத்து அவரது உடல் நலம் பற்றி விசாரித்தேன். அவருடைய சிகிச்சை நிதிக்காக, இரண்டாயிரம் ரூபாயை ராமசாமியின் துணைவியாரிடம் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன். அடுத்து, பெருந்துறையில் தீக்குளித்து மறைந்த முத்துப்பாண்டியனின் படத்திறப்புப் பொதுக்கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி தலைமையிலே நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலே கலந்து- கொண்டு முத்துப்பாண்டியனின் திருவுருவப் படத்தினைத் திறந்துவைத்தேன்.
கூட்டத்தில் சி.டி.தண்டபாணி, கோவை ராமநாதன், மு.கண்ணப்பன், பி.ஏ. சாமிநாதன், சுப்புலட்சமி ஜெகதீசன், திருப்பூர் முத்துரத்தினம் ஆகியோர் மற்றக் கழக முன்னணியினரோடு கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றும்போது, பெருந்துறையிலே முத்துப் பாண்டியன் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அதற்கான நிதியினை மாவட்டக் கழகம் வசூலித்து நடத்திடும் என்றும், நிதி போதாவிட்டால் அதற்கான உதவியைத் தலைமைக்கழகமே கொடுத்து உதவும் என்று அறிவித்தேன்.
பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருப்பூருக்குப் புறப்பட்டேன். திருப்பூர் மருத்துவமனையிலே சிகிச்சை பெற்றுவந்த திருவேங்கடத்தைச் சந்தித்தேன். முகம், கை, மார்பு, கால், வயிறு போன்ற
உறுப்புகள் தீயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும், இரண்டு கைகளையும் தூக்கி என்னை வணங்கி வரவேற்றான் அந்த மாவீரன். அருகே மனைவி ஜெயலட்சுமி, செல்வங்கள் ஆசைத்தம்பி, உதயநிதி ஆகியோர்! என்னைக் என்னைக் கண்டதும், "நீங்க இனிமேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறைக்குப் போகக் கூடாது. எங்களுக்கு உத்தரவு கொடுங்கள், நாங்கள் போராடுகிறோம். உங்களைச் சிறைக்குள் வைத்திருப்பதைத் தாங்கிக் கொண்டு எங்களால் எப்படி உயிரோடிருக்க முடியும்?
முதல் நாள் மறியலில் நான் கலந்து கொண்டேன். என்னைக் கைது செய்யவில்லை. பிறகுதான் இந்த முடிவிற்கு வந்தேன்" என்று கூறினார். என்னுடன் மு.கண்ணப்பன், கோவை ராமநாதன், சி.டி.தண்டபாணி, பொங்கலூர் பழனிச்சாமி, பி.எஸ்.ஜானகிராமன், திருப்பூர் முத்துரத்தினம், நெல்லை நெடுமாறன், ஜே.கே.கே.சுந்தரம் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். மருத்துவச் சிகிச்சைக்காக இரண்டாயிரம் ரூபாய் திருவேங்கடத்தின் துணைவியாரிடம் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
அன்றிரவு திருப்பூரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளான அக்டோபர் 10-ஆம் தேதி திருச்சிக்குச் செல்லும் வழியில் பல்லடத்தில் தீக்குளித்து, காப்பாற்றப்பட்டு, வீட்டிலேயே தங்கிச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பல்லடம் முத்துசாமி இல்லத்திற்குச் சென்று அவரது உடல்நலம் கேட்டறிந்தேன். அன்று பிற்பகல், திருச்சியில் தீக்குளித்து மறைந்த தியாகி மனோகரனின் இல்லம் சென்று அவனது பெற்றோருக்கும், உறவினர்- களுக்கும் கண்ணீரால் ஆறுதல் கூறினேன்.
அங்கு வைக்கப்பட்டிருந்த மனோகரனின் திருவுருவப் படத்தினையும் திறந்து வைத்தேன். கழகத்தின் சார்பில் அந்தக் குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் நிதியினையும் வழங்கினேன். என்னுடன் அன்பில் தர்மலிங்கம், வை. கோபால்சாமி, நெல்லை நெடுமாறன், திருச்சி பாலகிருஷ்ணன், செல்வராஜ் எம்.பி., பொற்செல்வி இளமுருகு, புதுக்கோட்டை பெரியண்ணன், கே.கே.எம். தங்கராஜ், ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி, குளித்தலை சிவராமன் ஆகியோர் உடன்வந்தனர்.
அங்கிருந்து மருத்துவமனை சென்று காவல்துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகிச் சிகிச்சை பெற்று வந்த இராசேந்திரனைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, சிகிச்சைக்காக ஆயிரம் ரூபாய் நிதியையும் அளித்துவிட்டு, பின்னர் திருச்சி மாநகரில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். மலர்மன்னன் தலைமையிலே நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் அன்பில், மன்னை, பி.டி.ஆர்.பழனிவேல்ராசன், வை.கோபால்சாமி, எல்.கணேசன், செல்வேந்திரன், ஜே.எஸ்.ராஜு, திருச்சி ராபி மற்றும் பலர் உரையாற்றினர்.
இறுதியாக நான் உரையாற்றினேன். திருச்சி நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, மறுநாள் 11.10.1981 அன்று என்னுடைய விடுதலைக்காக முதன் முதலில் தீக்குளித்து மாண்ட கோவிலடி பிருந்தாவன் இல்லத்திற்குச் சென்றேன். அவனது தாயாரும், சகோதரரும் கண்ணீர் வழிய என் காலடியிலே விழுந்து அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறவே என்னால் முடியவில்லை. என்னுடன் அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, தாழை மு. கருணாநிதி, பேராவூரணி கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை சுல்தான், பொன்.
கலியமூர்த்தி, சச்சிதானந்தம், இளங்கோவன், எல்.கணேசன் ஆகியோர் வந்திருந்தனர். கழகத்தின் சார்பில் பிருந்தாவனின் தாயார் ராஜாமணி அம்மையாரிடம் பத்தாயிரம் ரூபாய் நிதியினை வழங்கிவிட்டு, பின்னர் பிருந்தாவனின் நினைவிடத்திற்குச் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன். மன்னை நாராயணசாமி தலைமையிலே அங்கே நடைபெற்ற இரங்கல் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினேன். அடுத்து, திருவாரூர் நகரத்திலே தீக்குளித்து மாண்ட கிட்டுவின் இல்லத்திற்குச் சென்று கிட்டுவின் துணைவியாருக்கும், குழந்தைகளுக்கும் ஆறுதல் கூறினேன்.
திருவாரூரில் அமைக்கப்பட்ட கிட்டுவின் நினைவிடத்திற்குச் சென்று அவரது நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்துவிட்டு, அங்கே நடைபெற்ற இரங்கல் கூட்டத்திலும் உரையாற்றினேன். தஞ்சை மருத்துவமனைக்குச் சென்று தீக்குளித்துக் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ராமையனைச் சந்தித்து, ஆறுதல் கூறிவிட்டு, சிகிச்சைக்காக நிதியையும் கொடுத்துவிட்டு, அந்தச் சுற்றுப்பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற மாநாடு போன்ற வீர வணக்கநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
ஏ.வி.பதி தலைமையிலே நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பழனி மாணிக்கம், இரா. கோபாலகிருஷ்ணன், தங்கமுத்து, டி.கே.கோவிந்தன், சுல்தான், வி.எஸ்.ராமலிங்கம், பூபதி, தஞ்சை நடராஜன், கோ.சி.மணி, எல்.கணேசன், தாழை மு.கருணாநிதி, மன்னை நாராயணசாமி ஆகியோர் உரையாற்றிய பிறகு இறுதியாக நான் உரையாற்றினேன். அ.தி.மு.க. அரசு இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் மீது போட்டுள்ள வழக்குகளைச் சந்திக்க, கழகத்தின் செயற்குழுவிலே விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த நான்கு நாட்கள் சுற்றுப் பயணத்தின் போது என்னிடம் 34,540 ரூபாய் வழக்கு நிதியாக வழங்கியிருந்தனர்.
தி.மு.கழகத்தின் சார்பில் அக்டோபர் 11ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் வீரவணக்க நாளாக நடைபெற்று, அதையொட்டி ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வேலூர் மருத்துவமனையிலே நான் கண்டு வந்த மேல்மயில் ஜெகநாதன் 4.11.1981 அன்று பிற்பகல் இயற்கை அடைந்தார் என்ற வேதனைச் செய்தி எனக்குக் கிடைத்தது. சில நாட்களுக்கு முன் அவரை நான் சென்று பார்த்தபோது, "தலைவரே உங்க விடுதலைக்காக உயிர் விட்டவங்க பட்டியலிலே என்பேரு இடம் பெறாமப் போய்விட்டதே" என்று என்னிடம் கூறியவர், அந்தப் பட்டியலிலே தன்னுடைய பெயரையும் தன் விருப்பத்தைப் போலவே இணைத்துக் கொண்டார்.
ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், மற்றும் வடார்க்காடு மாவட்டக் கழக செயலாளர் பாபு ஜனார்த்தனம், வி.எம்.தேவராஜ், வி.டி.தேவராசன், முகமது சகி ஆகியோர் அவருடைய இறுதி நிகழ்ச்சிகளிலே பங்கேற்றனர். 11.12.1981 அன்று அந்தத் தியாகியின் சொந்த ஊரான மேல்மாயில் கிராமத்தில் ஜெகநாதனின் நினைவு நாள் பொதுக்கூட்டம் வி.எம்.தேவராஜ் தலைமையில் நடைபெற்றதில் நான், பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் சாதிக்பாட்சா, துணைப்பொதுச் செயலாளர் நாஞ்சிலார், முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது, ஆர்காடு வீராசாமி, முரசொலி மாறன், நன்னிலம் நடராஜன், புதுவை சிவக்குமார், ஆர்.டி.சீத்தாபதி, துரைமுருகன், சா.கணேசன், முகமது சகி, மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.
மேல்மாயில் ஜெகநாதன் குடும்ப நிதியாகத் தலைமைக் கழகத்தின் சார்பில் 12,000 ரூபாயும், வடார்க்காடு மாவட்டக்கழகத்தின் சார்பில் 5,440 ரூபாயும் ஆக மொத்தம் 17,440 ரூபாய் அந்த நிகழ்ச்சியிலே அவருடைய குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது. ஜெகநாதன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தையும் நான் திறந்து வைத்தேன்.
