உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/ஈழப் பிரச்சினையில் கழகத்தின்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

ஈழப் பிரச்சினையில் கழகத்தின் · 273 / 391

57. ஈழப் பிரச்சினையில் கழகத்தின் ஈடுபாடு வங்காள தேசத்தின் அதிபராக இருந்த ஜியாவுர் ரகுமான் 81ஆம் ஆண்டு மே திங்கள் 30 ஆம் நாள் விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். ஜியாவுர் ரகுமானால் பதவி இறக்கம் செய்யப்பட்ட மன்சூர் என்ற இராணுவத் தளபதியும் அவருடைய ஆதரவுப் படைகளும் 45 வயதான ஜியாவுர் ரகுமானைச் சுட்டுக் கொன்றார்கள். வங்காள தேசத்தின் முக்கியமான துறைமுகநகரம் சிட்டகாங்.

இந்த நகரம், விமான நிலையம், துறைமுகம், ரேடியோ நிலையம் ஆகியவற்றைப் புரட்சிக்காரர்கள் கைப்பற்றினர். ஜியாவுர் ரகுமானின் உடலைப் பெறுவதற்கு வங்காள தேச புது அதிபர் சத்தார் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. அவரது உடலைத் தரப் புரட்சிப் படையினர் மறுத்துவிட்டனர். புரட்சிப் படையினருக்கும் அரசு ஆதரவுப் படையினருக்கும் இடையே போர் நடைபெற்றது. வங்காள தேச தளபதி எர்சாத் புரட்சி நடத்திய மன்சூரை உடனடியாக சரண் அடையும்படியும், சரணடைந்தால் மன்னிக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.

மன்சூருக்கு எதிர்பார்த்த அளவிற்கு இராணுவத்தின் உதவி கிடைக்காததால், தனது முக்கிய ஆதரவாளர்களுடன் தப்பியோட முற்பட்டார். அவரும் நான்கு அதிகாரிகளும், ஐம்பது வீரர்களும் பர்மா எல்லையில் உள்ள காட்டில் தப்பியோடும் போது பிடிபட்டனர். மூன்றே நாட்களில் வங்காள அரசு புரட்சியை அடக்கி நாட்டிலே அமைதி நிலையை ஏற்படுத்தியது. சுட்டுக் கொல்லப்பட்ட ஜியாவுர் ரகுமானின் உடல் ஒரு கல்லூரி அருகே அனாதையாகக் கிடந்தது.

அதை எடுத்து வந்து அரசாங்க மரியாதையுடன் அடக்கமும் செய்யப்பட்டது. தப்பியோடும்போது பிடிப்பட்ட மன்சூரைக் கொண்டு வரும்போது, மன்சூரின் ஆதரவாளர்கள் சிலர் வழியிலே அரசு ஆதரவு படையினரோடு மோதிய காரணத்தால் இருவருக்குமிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் படுகாயமடைந்த மன்சூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலே மரணமடைந்தார். எனவே தினையை விதைத்தவன் ஒரு சில நாட்களுக்குள்ளாகவே தினையை அறுத்தான்.

வங்காள தேசத்தில் இது நிலைமை என்றால்; தமிழகத்தின் எல்லை நாடான இலங்கையிலே நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்- பட்டு, பத்திரிகைத் தணிக்கை முறையும் கொண்டு வரப்பட்டது. காரணம், இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் கலவரம் ஏற்பட்டு இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 4.6.1981 அன்று இலங்கையில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேர்தலை, தனி ஈழம் கேட்டுப் போராடும் போராளிகள் எதிர்த்த காரணத்தால் அந்தத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கையில் எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் கட்சியை எதிர்த்து மோதல்களை உண்டாக்கினர்.

இந்த மோதலில் இரண்டு வேட்பாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழர் கட்சி அலுவலகமும் தாக்கப்பட்டது. ஒரு போலீஸ் அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கலவரம் காரணமாக அந்தப் பகுதிக்கு இராணுவம் விரைந்தது. இராணுவத்தினர் சாதாரண உடையில் சென்று அனைத்துத் தமிழர்களையும் வேறுபாடின்றித் தாக்கினார்கள். தமிழர் கட்சித் தலைவர்களில் ஒருவரான சிவசிதம்பரம் வீட்டிற்குள் இராணுவத்தினர் நுழைந்து சுட்டார்கள் அதன் காரணமாகச் சிறுவன் ஒருவன் மரணமடைந்தான்.

இந்தச் செய்தி கிடைத்ததும், "இது மற்றொரு நாட்டின் பிரச்சினை என்றாலும் கூட இந்திய அரசு மனிதாபிமான கண்ணோட்டத்தோடு அணுகி இலங்கையிலே அமைதி ஏற்படுத்தவும், அங்குள்ள தமிழர்களைக் காக்கவும் முயற்சி காக்கவும் முயற்சி எடுக்க வேண்டும்."

என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டேன். மேலும் ஜூன் மாதக் கடைசியில் டெல்லிக்கு நேரில் சென்று பிரதமர் இந்திரா காந்தியிடம் இலங்கைத் தமிழர் அவதிக்கு ஆளாகியிருப்பது பற்றி எடுத்துக்கூறினேன். மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் இந்தப் பிரச்சினையிலே எடுக்கும் என்று அவர் உறுதியளித்தார். பிரதமரைச் சந்தித்துவிட்டு, சில நாட்களுக்கு முன்பு அமேதி தொகுதியிலே நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சுமார் இரண்டரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜீவ் காந்தி அவர்களை நேரில் சந்தித்து, அவருக்குத் தி.மு.கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

ஜூன் திங்களிலே இலங்கையிலே ஏற்பட்ட கலவரம் சில நாட்களுக்குப் பின்னர் ஓய்ந்துவிட்ட போதிலும், இலங்கைத் தமிழர்கள் வாழ்விலே அது நிரந்தர அமைதியை ஏற்படுத்தவில்லை அடுத்து இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அங்கே பிரச்சினை இல்லாமல் இருந்தது. மீண்டும் ஆகஸ்ட் திங்களில் தமிழர்கள் சென்ற ரெயிலைச் சிங்களவர்கள் தாக்கினார்கள். அவர்களின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் அம்பாரை கோவிலுக்குச் சொந்தமான ஒரு தேரையும் சேதப்படுத்தினார்கள்.

கொழும்பில் பட்டப்பகலில் ஒரு பெண் கொல்லப்பட்டார். 'தமிழர்களைத் தாக்குங்கள், தூக்கியெறியுங்கள்' என்று சிங்கள மொழியில் அச்சிடிடப்பட்ட போஸ்டர்கள் அரசினாலேயே அச்சிடப்பட்டுச் சிங்களவர்களிடம் தரப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலைமைகளை எல்லாம் விளக்கமாகத் தந்தி மூலம் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி இந்தப் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் கருதி உதவி செய்திட வேண்டுமென்று மீண்டும் கேட்டுக் கொண்டேன்.

இலங்கையிலே கலவரம் நாளுக்குநாள் அதிகரித்தது. தமிழர்கள் படிக்கும் பள்ளிகளில் சிங்களவர் நுழைந்து அங்கே படிக்கச் சென்ற மாணவிகளைத் தாக்கினார்கள். ஒரு பள்ளியையே கொளுத்த முயற்சி செய்த போது தலைமை ஆசிரியரின் உதவியினால் அது தவிர்க்கப்பட்டது. அரசு அலுவலகங்களிலும் சிங்களவர்கள் நுழைந்து தமிழர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். தமிழர் கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் இலங்கை ஜெயவர்த்தனாவிற்கு எழுதிய கடிதத்தில் இதுவரை நான்கு பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆசிரியைகள் கற்பழிக்கப்பட்டதாகவும், உடனடியாகத் தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இதன் காரணமாக இலங்கையில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. யாராவது தீ வைத்தாலோ, சூறையாடினாலோ மரண தண்டனை விதிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. 21.8.1981 அன்று சட்டப் பேரவையிலே இலங்கைத் தமிழருக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டுமென்று பிரதமரைக் கேட்டுக் கொண்டு ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தி.மு.கழகத்தின் சார்பிலே அந்தத் தீர்மானத்தின் மீது நான் உரையாற்றினேன். தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலாச் சென்ற கோஷ்டியினர் மீதும் சிங்களவர் தாக்கி ஒருவரைக் கொலையும் செய்தனர்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தனபதி உட்பட 42பேர் இலங்கைக்குச் சுற்றுலாச் சென்றிருந்த போது சிங்களவர் தாக்கி தனபதி அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். மரணமடைந்த தனபதியின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. தனபதி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்துத் தி.மு.கழகத்தின் சார்பில் 29.8.1981 அன்று இலங்கைத் தூதுவரகத்தின் முன்னால் "ஒருநாள் அடையாள மறியல்" நடத்துவதென்று அறிவித்தது. ஆனால் அதற்கு அரசு தடை விதித்தது.

எனவே தடையை மீறி மறியல் நடத்துவதாக அறிவித்தோம். அவ்வாறே தடையை மீறி ஊர்வலம் சென்ற தி.மு.கழகத்தினரை - ஆர்.டி. சீத்தாபதி, என்.வி.என்.சோமு உட்பட 150 பேரை - அ.தி.மு.க. அரசு கைது செய்து காவலில் வைத்தது. தி.மு.கழகத்தின் சார்பில், ஒருநாள் அடையாள மறியல் நடத்துவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி நடத்தவிருந்த ஊர்வலத்திற்கே அரசு தடை விதித்ததால்தான், தடையை மீற வேண்டிய நிலை தி.மு.கழகத்திற்கு ஏற்பட்டது.

மேலும் இந்திரா காங்கிரஸ் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் தடையை மீறி நடத்தினார்கள். அவர்களை அ.தி.மு.க அரசு கைது செய்துவிட்டு, உடனடியாக விடுதலை செய்தது. அது போலவே காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சிச் சார்பிலே இலங்கைத் தூதுவராலயத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் தி.மு.கழகத்தின் தொண்டர்களை மட்டும் அ.தி.மு.க. அரசு பழிதீர்க்கும் நோக்கத்தோடு கைது செய்து சிறையிலே அடைத்தது.

அரசின் இந்தப் போக்கினைக் கண்டித்து, செப்டம்பர் 3-ந் தேதி முதல் 15ஆம் தேதி வரை தினந்தோறும் தி.மு.கழகத்தின் சார்பில் தடையை மீறி ஊர்வலமாகச் சென்று மறியல் நடத்துவதென்றும், செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று என்னுடைய தலைமையிலே மறியல் நடத்துவதென்றும் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஐம்பது பேர் 2.9.1981 அன்று சென்னைப் பொது மருத்துவமனை வாயிலில் இலங்கைத் தமிழர் படும் கொடுமையைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார்கள்.

அவர்களின் அழைப்பின் பேரில் நான் நேரில் சென்று அவர்களுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினேன். தி.மு.கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட தொடர் மறியலின் அடிப்படையில் 1981-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 3 ஆம் நாளன்று முன்னாள் மேயர் மைனர் மோசஸ் தலைமையிலே 53 பேரும், 4-ஆம் நாளன்று திருவல்லிக்கேணி பொ.மாணிக்கம் தலைமையிலே 18 பேரும், 5 ஆம் நாளன்று ரகுமான்கான், எம்.எல்.ஏ. தலைமையிலே 13 பேரும், 7ஆம் நாளன்று சோ.கி.மூர்த்தி, சி.என்.

இரத்தினம் ஆகியோர் தலைமையிலே 64 பேரும், 8ஆம் நாளன்று டி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையிலே 25 பேரும், 10ஆம் நாளன்று எல்.பலராமன் தலைமையில் 61 பேரும், 11 ஆம் நாளன்று சு.பாலன் எம்.எல்.ஏ., தலைமையில் 72 பேரும், 14ஆம் நாளன்று மா.வெ. நாராயணசாமி தலைமையில் 35 பேரும் கைது செய்யப்பட்டுச் சிறையிலே அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் செப்டம்பர் 3ந் தேதி, நெல்லை மாவட்டத்தில் சில திருமண நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன்.

தூத்துக்குடியிலே பேசும்போது, தி.மு.கழகம் தொடர் மறியல் நடத்துவதற்குக் காரணம் நாங்கள் அல்ல, முதலில் சீத்தாபதி தலைமையிலே ஒருநாள் அடையாள மறியல் நடத்துவதாகத்தான் அறிவித்திருந்தோம். அரசு பழிவாங்கும் தன்மையோடு அவர்களைச் சிறையிலிட்ட காரணத்தால்தான் தொடர் மறியல் நடத்த வேண்டியதாயிற்று. சீத்தாபதியையும், மற்றக் கழகத் தோழர்களையும் வழியனுப்பி வைத்தவன் என்ற முறையில் அவர்கள் இன்னும் திரும்பி வராத காரணத்தினால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிற தாய், பள்ளிக்கூடம் போன பிள்ளை திரும்பி வராவிட்டால் தெருவோரத்திலே நின்று அந்தத் திக்கை எதிர்பார்த்து இருப்பாள், பிள்ளை வருவானா என்று எதிர்பார்த்திருப்பாள்; வரவில்லை என்றால் பிறகு அவளே பள்ளிக்கூடம் நோக்கிச் செல்வாள்.

பிள்ளையைத் தேடி, பிள்ளை இருக்கின்ற திக்கு நோக்கிச் செல்வோம் என்று அங்கே செல்வாள். அதைப்போலத்தான் பிள்ளையைத் தாய் வழியனுப்பி வைத்ததைப்போல, நான் சீத்தாபதியையும், மற்றவர்களையும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அறப்போராட்டத்திற்கு வழியனுப்பி வைத்தேன். அவர்கள் திரும்பி வராத காரணத்தினால்தான் 15ஆம் தேதி நடைபெறும் மறியலில் நானே கலந்து கொண்டு சிறை செல்வதாக இருக்கிறேன் என்ற அறிவித்தேன். தூத்துக்குடியில் செப்டம்பர் 3ஆம் தேதி இரவு 7 மணியளவில் தெர்மல் நகரில் மாவட்டக் கழகச் செயலாளர் தூத்துக்குடி இரா.கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்த நிதியளிப்பு விழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு விட்டு, அடுத்து விளாத்திகுளத்தில் என்னுடைய எடைக்கு எடை நாணயம் கழக நிதியாக வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காகத் தூத்துக்குடியை விட்டு இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டேன்.

தூத்துக்குடி உப்பளம் பகுதியிலே என்னுடைய கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென என் காருக்கு முன்னால் வெடிச் சத்தம்போல் கேட்டது. காரின் முன் கண்ணாடி அப்படியே நொறுங்கி, முன் இருக்கையிலே அமர்ந்திருந்த என் மீது கொட்டியது. என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளவே சில மணித்துளிகள் ஆகிவிட்டன. கார் சில அடிகள் தூரம் சென்று நின்றது. அந்தப் பகுதி வெளிச்சம் இல்லாத பகுதி என்ற போதிலும், பின்னால் வரிசையாக வந்த கார்களின் வெளிச்சத்திலே பார்த்தபோது, இரண்டு பேர் தாக்கியவர்கள் கீழே இறங்கி ஓடியது நன்றாகத் தெரிந்தது.

உடனே பின்னால் வந்த கார்களிலே இருந்த கழகத்தோழர்கள் அவர்களை விரட்டிச் சென்றபோதிலும், கொஞ்ச தூரத்திற்கு அப்பால் வெளிச்சமற்ற பகுதிக்கு அவர்கள் சென்ற பின்னர், அவர்களைப் பிடிக்க இயலவில்லை. ராதாபுரத்தில் சில திங்கள்களுக்கு முன் என்னுடைய வேனிலே உளியை வீசி, தாக்கிட முனைந்து தோற்றவர்களின் தொடர் முயற்சி என்ற அளவிலே அதனை எடுத்துக் கொண்டு, நான் வந்த காரைப் பின்னால் வரச் சொல்லிவிட்டு, வேறொரு காரிலே ஏறிக்கொண்டு விளாத்திக்குளம் சென்றேன்.

1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 31ஆம் நாள் பம்பாய் தமிழ் அகாடமியின் முதலாண்டு விழா நிகழ்ச்சி பம்பாய் சண்முகானந்தா அரங்கிலே நடைபெற்றது. அந்தத் தமிழ் அகாடமிக்கும் கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது கட்சிச் சார்பற்ற அமைப்பு. அந்த நிகழ்ச்சியிலே அகாடமி சார்பில், இலங்கையிலே கொல்லப்பட்ட திருவொற்றியூர் தனபதியின் குடும்ப நிதியாக ஆயிரம் ரூபாயை என்னிடம் தந்தார்கள். அதே மேடையில் இருந்த பம்பாய் மாநில தி.மு.கழகத்தினர், அவர்கள் சார்பில் மேலும் இரண்டாயிரம் ரூபாயை என்னிடம் தந்து, அதையும் சேர்த்துத் தனபதியின் குடும்பத்திற்கு உதவியாகத் தந்துவிடவேண்டுமென்று கேட்டுக் கொண்டு கொடுத்தனர்.

நான் சென்னை திரும்பியதும், பொருளாளர் சாதிக்கிடம் அதனைக் கொடுத்து, தனபதியின் குடும்பத்தாரிடம் அதனைச் சேர்த்துவிட வேண்டுமென்று கூறினேன். உடனே அவரும், மா.வெ. நாராயணசாமி, மதுராந்தகம் ஆறுமுகம், திருவொற்றியூர் பழனிச்சாமி ஆகியோரும், தனபதியின் இல்லத்திற்குச் சென்று, அவரது தாயார், மனைவி ஆகியோரிடம் அதனைக் கொடுத்து, இரசீதிலே தனபதியின் துணைவியாரிடம் கையெழுத்தும் பெற்றுத் திரும்பி வந்துவிட்டனர்.

ஏடுகளிலே அந்தச் செய்தியும் புகைப்படமும் வெளிவந்து விட்டது. இதற்குப் பிறகு நெல்லையிலே நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டிலே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசும்போது, தனபதியின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பிலே 25,000 ரூபாய் வழங்குவதாகவும், தி.மு.கழகம் கொடுத்த நிதியை அவர்கள் மறுத்துவிட்ட- தாகவும் பேசினார். கழகப் பொருளாளர் சாதிக்பாட்சா மூவாயிரம் ரூபாய் நிதியைக் கொண்டு போய்க் கொடுத்தபோது நன்றியோடு பெற்றுக்கொண்டு, புகைப்படமும் எடுத்துக் கொண்டு, இரசீதிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தவர்கள், அதற்குப் பின்னர் ஒருமுறை தனபதியின் சகோதரர் நேரில் என்னைச் சந்தித்துத் தனபதியின் நினைவுச் சடங்கிற்கான அழைப்பையும் கொடுத்துவிட்டுச் சென்றார் - தங்களுடைய நிலைமையை விளக்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கடிதம் எழுதியிருந்தார்கள்.

10.9.1981 அன்று நடைபெற்ற கழகத்தின் நிர்வாகக்குழுவிலே, செப்டம்பர் 15க்குள் சிறையிலே இருக்கும் கழகத்தினரை விடுதலை செய்யாவிட்டால் சென்னையிலே என்னுடைய தலைமையிலே மறியலை உறுதியாக நடத்துவதென்

றும், அதே நாளில் மாவட்டத் தலைநகரங்களிலும் மறியலை நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. 14.9.81 அன்று ராயபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமை தாங்கி என்னை வழியனுப்பி வைத்து உரையாற்றினார். மறியலில் முதல் அணிக்கு நான் தலைமை வகிப்பதென்றும், அடுத்த அணிக்கு ஆற்காடு வீராசாமியும், அதற்கடுத்த அணிக்கு அலமேலு அப்பாதுரையும் சற்குணமும் தலைமை வகிப்பதென்றும், இப்படி அணி அணியாகச் செல்ல வேண்டுமென்றும், கழகத் தோழர்கள் அனைவரும் கட்டுப்பாடு காத்து அறப்போரிலே ஈடுபட வேண்டுமென்றும், நான் முன்கூட்டிக் கைது செய்யப்பட்டாலும், அண்ணா பிறந்தநாளை யொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தவறாமல் நடைபெற வேண்டுமென்றும் அந்தக் கூட்டத்திலே நான் பேசும்போது தெரிவித்தேன்.

கூட்டம் முடிந்து இல்லம் திரும்பிய என்னை வரிசையாகத் தமிழக முழுவதிலுமிருந்து வந்த தொலைபேசிகள் வரவேற்றன. மாநிலம் முழுவதுமுள்ள கழக முன்னணியினரெல்லாம் கைது செய்யப்படுகிறார்கள் என்ற செய்திதான் தொலைபேசியின் மூலம் வந்தது. சென்னையில் நள்ளிரவு 2 மணிக்கு ஆற்காடு வீராசாமி, துறைமுகம் செல்வராசன், பி.ஏ.என்.ராஜரத்தினம் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர். மதுரையில் தென்னரசு, காவேரிமணியம், பொன்.முத்துராமலிங்கம், தா.கிருட்டிணன், மலைச்சாமி, தங்கப்பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் மு.ராமநாதன், மு.கண்ணப்பன், பி.எஸ்.ஜானகிராமன் ஆகியோரும், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், புதுக்கோட்டையில் பெரியண்ணன், சிதம்பரம் காஞ்சிபுரத்தில் சி.வி.எம். அண்ணாமலை, கே.டி.எஸ். மணி, சம்மந்தம் ஆகியோரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வந்து கொண்டேயிருந்தன. 15.9.1981. அண்ணா பிறந்தநாள்; வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று மறியலில் ஈடுபடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அன்று காலை முதல் வள்ளுவர் கோட்டம் செல்லும் சாலைகள் எல்லாம் காவல்துறையினரால் அடைக்கப்பட்டுவிட்டன. சுமார் ஒரு மைல் சுற்றளவிற்குப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது. வள்ளுவர் கோட்டத்திற்கு அருகே செல்ல யாரையும் அனுமதிக்காததால் கழகத்தோழர்கள் எல்லாம் அங்கிருந்து நேராக என் இல்லத்தை நோக்கி வந்தனர். இங்கும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு யாரையும் அனுமதிக்காததால், திரும்பவும் அவர்கள் வள்ளுவர் கோட்டத்தை நோக்கிச் சென்றனர்.

காலை 9.30 மணியளவில் என் இல்லத்திலிருந்து பேராசிரியர், சாதிக் பாட்சா, நாஞ்சிலார், பாண்டிச்சேர் டி.ராமச்சந்திரன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி ஆகியோரிடம் விடைபெற்றுக் கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காகப் புறப்பட்டேன். மறியலில் என்னுடன் கலந்து கொள்ள மன்னை நாராயணசாமி, அலமேலு அப்பாதுரை, சுப்புலட்சுமி ஜெகதீசன், எல்.கணேசன் எம்.பி., குழந்தைவேலு எம்.பி., சொக்கலிங்கம் எம்.எல்.ஏ., நெல்லை நெடுமாறன் ஆகியோர் உடன் வந்தனர்.

நான் வெளியே வந்ததும், ஒரு காவல்துறை அதிகாரி என்னைச் சந்தித்துக் கைது செய்வதாகக் கூறி என்னை மட்டும் ஒரு காவல்துறை வேனில் ஏற்றினார். வீட்டிற்கு முன்னால் காவல்துறையினர் தடுத்ததையும் மீறித் திரண்டிருந்த கழகத் தோழர்கள் அந்தத் காவல்துறை வேனைச் சூழ்ந்து கொண்டனர். பல தோழர்கள், தாய்மார்கள் உட்பட வேனுக்கு முன்னால் படுத்துக் கொண்டு, தங்களையும் கைது செய்ய வேண்டுமென்று கேட்டனர். என்னைக் கைது செய்வதாகக் கூறிய அந்த அதிகாரி மீண்டும் என்னிடம் வந்து நீங்கள்தான் உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

நான் உடனே காவல்துறை வேனிலிருந்து இறங்கி, கழக அலுவலக வேனிலே ஏறி, அதிலேயிருந்த ஒலி பெருக்கியில் "அன்பார்ந்த உடன்பிறப்புக்களே, தயவுசெய்து மறியலில் ஈடுபடுகிற தோழர்களைத் தவிர மற்றவர்களை எல்லாம் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். கைது செய்யப்படுவதற்காகத்தான் - இந்த அரசாங்கத்தின் கோணல் சேட்டைகளை நாட்டிற்கு உணர்த்தத்தான் இந்த அறப்போரில் ஈடுபட்டிருக்கிறோம். ஆகவே அமைதியான முறையில் அனைவரும் எங்கள் காருக்கு வழிவிடக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கேட்டுக் கொண்டேன்.

பின்னர் தான் தோழர்கள் வழிவிட்டனர். நேராக சென்னை மத்திய சிறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். கைது செய்யப்பட்ட மற்ற கழக முன்னணியினரும் சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். நீதிபதியைச் சிறைக்கே அழைத்து வந்து ரிமாண்ட் செய்தனர். சென்னையிலே நான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கழகத்தினர் ஆங்காங்கு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் கடையடைப்புகள் நடைபெற்றன. பேருந்துகள் வழி மறிக்கப்பட்டன.

பல கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வெளியே வந்துவிட்டனர். குறிப்பாக சென்னையில் புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல் துறையினர் மாணவர்களின் விடுதிக்குள் சென்று மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதோடு பலரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். கரூர், கும்பகோணம் போன்ற பல நகரங்களில் முழு அடைப்பு நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில், திருக்காட்டுப் பள்ளியில் பேருந்து நிலையத்திற்கு முன்னால் 16.9.1981 அன்று மாலை 6 மணியளவில் கோவிலடி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதே ஆன கழகக்காளை பிருந்தாவன், தன் உடலிலே மண்ணென்ணெயை ஊற்றிக்கொண்டு "கலைஞரை விடுதலை செய்" என்று கூறிக்கொண்டே, தன் உடலுக்கு தீயிட்டுக் கொண்டான்.

80 சதவிகிதம் பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சை மருத்துவமனைக்கு பிருந்தாவன் எடுத்துச் செல்லப்பட்டான். மதுரையில் கழகத்தைச் சேர்ந்த வெள்ளைக்கண்ணு, ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தபோது, நான் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உடனடி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரியாத நிலையிலே, அதே ஊர்வலத்தின் பின்பகுதியில் அவருடைய துணைவியார் மகளிர் அணியினரோடு சேர்ந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்திருக்கிறார்.

வெள்ளைக் கண்ணுவிற்குச் சிகிச்சை தரப்பட்டும் பலனளிக்காமல் "கோமாளி அரசே கலைஞரை விடுதலை செய்" என்று கூறிக்கொண்டே அன்றைய தினமே உயிரை விட்டார். இதிலே வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால், சீத்தாபதியை விடுதலை செய்ய மறுத்ததாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே அ.தி.மு.க. அரசு முறைகேடாக நடந்து கொண்டதைக் கண்டித்தும்தான் தி.மு.கழகம் தொடர் போராட்டத்தை அறிவித்தது. அதன் இறுதிக் கட்டமாக 15ஆம் தேதிய மறியலில் நான் கைது செய்யப்பட்டுச் சிறையிலே அடைக்கப்பட்டதும், மறுநாள் 16ந் தேதியன்று, ஆர்.டி.சீத்தாபதி, என்.சி.என்.சோமு, இரா.கணேசன், புருசோத்தமன் உள்ளிட்ட 121 பேர் நீதிமன்றத்திலே தமிழக அரசு வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்ததை அடுத்து விடுதலை செய்யப்பட்டனர்.

என்னை விடுதலை செய்யாததைக் கண்டித்து மதுரை, நெல்லை, செங்கை அண்ணா மாவட்டங்கள் 17ந்தேதியன்று முழுஅடைப்பு நடத்தின. தஞ்சை மாவட்டத்தில் தடையை மீறியதால் மாவட்டக் கழகச் செயலாளர் தாழை மு.கருணாநிதி உட்பட 1200 பேர் கைதாயினர். மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் மாணவர்கள் போராட்டத்தில் தீவிரமாகக் குதித்தனர். அனைத்துக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அப்துல் லத்தீப், ப.மாணிக்கம், கி.வீரமணி, அனந்தநாயகி, திண்டிவனம் ராமமூர்த்தி, நாராயணசாமி நாயுடு போன்றவர்கள் என்னை விடுதலை செய்ய வேண்டுமென்று அறிக்கை விடுத்தனர்.

மாநிலம் முழுவதிலும் ஆங்காங்கு பேருந்துகளுக்குத் தீவைப்புகள் தொடர்ந்தன. தென் மாவட்டங்களில் மட்டும் மூன்று நாட்களில் பதிமூன்று பேருந்துகள் பாதிக்கப்பட்டன. நீலகிரி மாவட்டக்கழகச் செயலாளர் காந்தல்ராஜ் இந்தப் பேராட்டத்திலே ஈடுபட்டு, விடுதலையானவர் திடீர் மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தினார். என்னை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி உடலில் தீயிட்டுக் கொண்டு ஆபத்தான கட்டத்திலே தஞ்சை மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்த கோவிலடி பிருந்தாவனைக் காணத் தலைமைக்கழகத்தின் சார்பில் துரைமுருகன், என்.வி.என்.சோமு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் சென்றபோது, அந்த இளைஞன், "கலைஞர் எப்படி இருக்கிறார்? அவரை விடுதலை பண்ணிட்டாங்களா?" என்று கேட்டுவிட்டு, "நான் பிழைக்கமாட்டேன், அப்படி ஒருவேளை பிழைச்சா கலைஞர் எங்க ஊர் பக்கம் வந்தா என்னைப் பார்க்கச் சொல்லுங்கள்; நான் போயிட்டேன்னா, எங்கள் வீட்டுக்குப் போயி எங்கம்மாவைப் பார்க்கச் சொல்லுங்க" என்று கூறியிருக்கிறான்.

சிறையிலிருந்த என்னிடம் அவர்கள் இருவரும் வந்து அதைச் சொன்னபோது என் நெஞ்சில் இரத்தம் கொட்டியது. மருத்துவர்கள் எவ்வளவோ பாடுபட்டும் செப்டம்பர் 20 ஆம் தேதியன்று பிருந்தாவன் மறைந்து விட்டான். கழகத்தின் சார்பில் நாஞ்சிலார், அன்பில் தர்மலிங்கம், ரகுமான்கான் ஆகியோர் பிருந்தாவனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். நான் சிறையிலிருந்தவாறு அந்த அன்புத்தம்பிக்காகக் கண்ணீர் வடித்தேன்.