உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/மூன்று தமிழர்கள் மறைவு!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

மூன்று தமிழர்கள் மறைவு! · 272 / 391

56. மூன்று தமிழர்கள் மறைவு! பே ரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்தபோது 1968 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டினை சென்னையிலே சீரும் சிறப்புமாகக் கொண்டாடியது வரலாற்றில் மறக்க முடியாத மறைக்க முடியாத பொன்னெழுத்துச் செய்தியாகும். அந்த மாநாடு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு அந்தப் படத்திற்கு விளக்கவுரையினைக் கவிதை நடையில் நானே எழுதிப் பின்னணியில் பேசியிருந்தேன். அப்படத்தை உலக முழுதுமுள்ள தமிழர்கள் பார்த்துக் களித்தனர்.

1981 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியிலேயும் உலகத் தமிழ் மாநாட்டினை பத்துக் கோடி ரூபாய் செலவழித்து மதுரையிலே நடத்தினார்கள். அந்த மாநாடு 1981 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 4ந் தேதி முதல் 10ந் தேதி வரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் நானோ பேராசிரியரோ, தி.மு.கழகத்தின் சார்பில் யாருமோ கலந்து கொள்ளவில்லை. அரசின் சார்பில் முறைப்படி அழைக்காமல், இருபதுக்கு மேற்பட்ட துணைத்தலைவர்களில் ஒருவராக என்னையும், பேராசிரியரையும் நியமித்து, அதைக்கூட நேரில் யாரும் நேரில் யாரும் தெரிவிக்காமல், கடிதத்தின் மூலமாக எங்களுக்குத் தெரிவித்தனர்.

மேலும் தி.மு.கழக ஆட்சியின் போது குதிரைப் பந்தயத்தை ஒழிக்க முடிவெடுத்ததையொட்டி அதன் நினைவாக சென்னை அண்ணா மேம்பாலம் அருகிலே இரண்டு குதிரை வீரர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தச் சிலைகளை அகற்றி மதுரையிலே கொண்டு போய் உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி அங்கே வைக்கப் போவதாகவும் அ.தி.மு.க. அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே இதையும் மனத்திலே கொண்டு தி.மு.கழகம் அந்த மாநாட்டிலே கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்தது.

தி.மு.கழகம் எடுத்த முடிவு சரியா தவறா என்பது மாநாட்டிற்கு முதல் நாள் 3.1.1981 அன்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டில் வந்த ஒரு கட்டுரையின் ஒரு சில முக்கிய பகுதிகளைப் படித்தாலே நன்கு புரிந்து கொள்ள இயலும். அது வருமாறு:- "அண்ணாதுரையின் அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் உயிர்ப்புச் சக்தியாக விளங்கினார். மாநாடு (ஆராய்ச்சிக் கருத்தரங்கு) என்றால் மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத கட்டுரைகளை மட்டுமே மொழியியல் வல்லுநர்கள் படிப்பார்கள்.

அது வெறும் கருத்தரங்கைப் போன்றதுதான் என்றிருந்த நிலைமையை அடியோடுமாற்றி, பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்கும் சிறப்புமிகு நிகழ்ச்சியாக அந்த உலகத்தமிழ் மாநாட்டை மாற்றிய பெருமை கருணாநிதிக்கு உண்டு. மக்களை ஈர்க்கத் தக்க வகையில் அந்த உலகத் தமிழ் மாநாடு சீரும் சிறப்பும் மிக்கதாக அமைய கருணாநிதி சென்னையிலுள்ள மிகப் பெரும் திரைப்படப்பிடிப்பு நிலையங்களின் கைத்திறனையெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்.

சம்பிரதாயங்களின் படி அவர் ஒரு "தமிழ் ஆராய்ச்சியாளர்" இல்லை என்றாலும் கூட நவீனத் தமிழ்ச் சொல்லாட்சியில் கருணாநிதி மிகப் பெரும் புலமைமிக்கவர். அந்தச் சொற்களுக்கு உருக்கொடுத்து வடித்தெடுப்பதில் அவர் வகிக்கும் பங்கு மகத்தானது! எனவே உலகத் தமிழ் மாநாடு போன்ற விழாக்களில் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர், இயற்கையாகவே உரிமை படைத்தவராவார். கவியரங்கமானாலும் பட்டிமன்றமானாலும் கருத்தரங்கமானாலும் எந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றாலும் அதிலே அத்துணைப் பேச்சாளர்களுக்கும் நாயகமாய் அவர்களை எல்லாம் விஞ்சி அனைவரையும் கவரத்தக்க ஈர்ப்புச் சக்தியாய் அவர் திகழ்வார் என்பதில் ஐயத்திற்கிடமில்லை.

அவரது கடும் பகைவரான எம்.ஜி.ஆர் தனது அரசாங்கத்தின் ஆதரவில் தமிழ் மாநாட்டை நடத்தத் தீர்மானித்த அதே வேளையில் இந்தத் தடவை கருணாநிதி அவராகவே இந்தக் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கும்படியான நிலையை உருவாக்க நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டார். இது எம்.ஜி.ஆரைப் பொருத்து இயற்கையானதே! உலகத் தமிழ் மாநாட்டுக் கொண்டாட்டங்களை ஒட்டிக் குழுக்கள் சிலவற்றில் உறுப்பினராயிருக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கருணாநிதிக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் வேண்டுமென்றே மாமூலானவைகளாக இருந்தன!

அந்தக் கடிதங்கள் அனுப்பப்படும் வேளையிலேயே எம்.ஜி.ஆருக்கு மெத்த நெருக்கமானவர்கள் என்று ஊரால் அறியப்பட்ட அமைச்சர்கள் சிலர் கருணாநிதிக்கு தமிழ் இலக்கிய அறிவில்லை என்று பகிரங்க அறிக்கைவிட்டார்கள். இது அவர்கள் விரும்பிய பலனைத் தந்தது. கருணாநிதி மட்டுமல்ல; மொத்த தி.மு.க.வினரும் மாநாட்டைப் புறக்கணிப்ப- தென்று அதிகாரப் பூர்வமாக முடிவெடுத்தனர். இந்நிலையில் தங்குதடை ஏதுமில்லாத "எம்.ஜி.ஆர் ஷோ" ஆகவே மாநாடு இருக்கும்."

இவ்வாறு எழுதியிருந்தது "எக்ஸ்பிரஸ்" ஏடு!. மதுரை உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் பிரதமருக்கு வேண்டுகோள் விடப்பட்டது. முதல் அமைச்சரும் பிரதமரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையே அ.தி.மு.க. ஆட்சினரால் சலுகைகளைப் பெற்ற சிலர் அ.தி.மு.க.விற்கும் இந்திரா காங்கிரசிற்கும் இடையே மீண்டும் உறவைப் புதுப்பிக்க வேண்டுமென்று விரும்பியதோடு, மதுரை உலகத் தமிழ் மாநாட்டிற்கு பிரதமரை எப்படியாவது வரவழைக்க வேண்டுமென்பதில் முனைப்புடன் செயல்பட்டனர்.

அவர்கள் பிரதமரிடம், இது அ.தி.மு.க. அரசின் அழைப்பு என்று பார்க்காமல் தமிழர்களின் மாநாடு என்ற அளவிலும், உலகத்திலுள்ள அனைத்துத் தமிழர்களும் இந்த விழாவிற்கு வருவார்கள் என்றும் பிரதமர் இந்த விழாவிலே கலந்து கொள்வதின் காரணமாகத் தமிழர்களின் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உயரும் என்றெல்லாம் மிகைப்படக் கூறி உலகத் தமிழ் மாநாட்டிற்கு பிரதமர் வருவதை உறுதிப்படுத்தினர். மதுரை உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தியை சென்னனை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தி.மு.கழகத்தின் சார்பாக வரவேற்றபோது, அ.தி.மு.க.

அரசின் நிர்வாக முறைகேடுகள், மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகள் பற்றியெல்லாம் விளக்கி எழுதியிருந்த ஒரு கடிதத்தையும் இந்திரா காந்தியிடம் அளித்தேன். அந்தக் கடிதத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் பணியாற்றி வந்த 24,000 கிராம அதிகாரிகளை எல்லாம் ஒரே நாளில் இரவோடு இரவாக எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அ.தி.மு.க. அரசு பதவியிலிருந்து நீக்கிவிட்டது பற்றியும், ஊராட்சிமன்றங்களில் பணியாற்றி வந்த 12,000 தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அ.தி.மு.க.

அரசு ஒரே உத்தரவில் கலைத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டதோடு, அவர்கள் இடங்களிலே ஆளுங்கட்சியினரை நியமனம் செய்தது பற்றியும் அதுபோலக் கூட்டுறவு நிறுவனங்களில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எல்லாம் வீட்டிற்கு அனுப்பப்பட்டு ஆளுங்கட்சியினரை அந்த இடங்களிலும் நியமனம் செய்தது பற்றியும் மற்றும் பல முறைகேடுகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். பிரதமரை வரவேற்கவும் இந்தக் கடிதத்தைப் பிரதமரிடம் கொடுக்கவும் நான் மீனம்பாக்கம் சென்றபோது, சைதை மறைமலை அடிகள் பாலத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் என் காரை வழிமறித்துக் கட்டைகளைக் கொண்டு தாக்க முயன்றனர்.

அப்போது என் காரை ஓட்டி வந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.டி.சீத்தாபதி காரை ஒதுக்கி வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டதால், அவர்களால் எதுவும் அப்போது செய்ய முடியவில்லை. காரில் அப்போது முன்னிருக்கையில் நானும் பின்னிருக்கையில் பொருளாளர் சாதிக் பாட்சாவும் நாடாளுமன்ற மக்களவை கழகக் குழுத்தலைவர் சி.டி.தண்டபாணியும் இருந்தனர். வழியில் ஆளுங்கட்சி குண்டர்களின் எண்ணம் கைகூடாததால், பிரதமர் இந்திரா காந்தியை வரவேற்க நான் விமான தளத்திற்குள் சென்றபோது போலீஸ் அதிகாரி ஒருவர் என் கையைப் பிடித்து இழுத்து முறுக்கித் தடுத்து நிறுத்த முனைந்தார்.

சீதாபதியின் குறுக்கீட்டால் அந்த அதிகாரியை மீறி நான் உள்ளே சென்றேன். என்னுடைய கடிதத்தைப் பெற்றுக் கொண்ட இந்திராகாந்தி அன்று மாலை சென்னை திரும்பி கவர்னர் மாளிகையிலே தங்கவிருப்பதாகவும் அப்போது சந்திக்கும்படியும் கூறினார். மதுரையிலே மாநாட்டிற்குச் செல்வதற்கு முன்பு காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பேசும் போது பாதுகாப்புச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும், தான் அரசியல் அடிப்படையில் மதுரைக்கு வரவில்லை என்றும், மாநாட்டிற்கு வந்துள்ள அறிவார்ந்த தமிழ்ப் பெருமக்களுக்குத் தனது வணக்கத்தைத் தெரிவிக்கவே வந்திருப்பதாகவும் கூறினார்.

மாநாட்டினை முடித்துக் கொண்டு அன்று சென்னை திரும்பி கிண்டியில் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமரை நான் சந்தித்த போது அரசியல் காரணங்களுக்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று மதுரையிலே கூறியதற்காக நன்றியைத் தெரிவித்தேன். அதற்கு மறுநாள் 11.1.1981 அன்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்த பிரதமர் இந்திரா காந்தி தி.மு.க-இந்திரா காங்கிரஸ் உறவு நீடிக்கும் என்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்புச் சட்டத்தை விவசாயிகள் மீது பயன்படுத்தியது தவறு என்றும் அதுபற்றி விசாரித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

பிரதமர் வெளியிட்ட இந்தக் கருத்தின் காரணமாகத் தமிழக அரசு உடனடியாகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டுச் சிறையிலே வைத்திருந்த விவசாயச் சங்கத் தலைவர்களை எல்லாம் விடுதலை செய்தது. உலகத் தமிழ் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மதுரை மாநகரில் உலகத் தமிழ்ச் சங்கம் தமிழக அரசின் சார்பில் விரைவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்த் திங்கள் 15ஆம் தேதியன்று அண்ணா பிறந்தநாளின் போது உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் மக்களிடையே தொடர்பு ஏற்படுத்தும் வகையில் உலகத் தமிழ் விழா எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த இரண்டு அறிவிப்புகளுமே அ.தி.மு.க. அரசின் அறிவிப்புக்களாகவே ஆகிவிட்டன. உருவான தொடர்பணி எதுவுமில்லை. உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்ற தேவநேயப் பாவாணர் அவர்கள் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு 5.1.1981 அன்று மதுரை அரசினர் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயன் அளித்திடாததால் 15.1.81 அன்று இயற்கை அடைந்தார். பாவாணரின் மறைவு குறித்து நான் விடுத்த இரங்கல் செய்தியில் - "ஆழமான தமிழறிவும் அசைக்க முடியாக இன உணர்வும் கொண்ட தமிழ்ச்சீயம் மறைந்துவிட்ட செய்தி கேட்டுத் தமிழ் நிலம் தத்தளிக்கிறது!

எத்துணை ஈடற்ற தமிழ்க் கருவூலங்களை அவர் வரலாற்று உலகிற்கும் இலக்கிய உலகிற்கும் வழங்கியிருக்கிறார் என்பதை எண்ணிடும்போது நெஞ்சு கொள்ளாத பெருமிதம் ஏற்படுகிறது! ஆனால் அவரைத் தமிழர்கள் இழந்துவிட்டார்கள் என்பதை எண்ணும்போது நெஞ்சு துடிக்கிறது! பதைக்கிறது! கழக ஆட்சியில் அவரைக் கொண்டு "அகரமுதலி" எனும் பெருநூல் தயாரிக்கத் திட்டம் தீட்டி அந்தப் பணியினை அவர் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

அந்தப் பணி பாதியில் முடிந்தது போலவே அவரது வாழ்வும் முடிந்துவிட்டது! அஞ்சாநெஞ்சம்! ஆற்றல்மிகு தமிழார்வம்! அவரால் தமிழும் தமிழரும் பெற்ற பயன் கொஞ்சநஞ்சமல்ல! அவரது உறுதிவாய்ந்த தமிழ் உணர்வைப் போற்றுவதே அவருக்கு நாம் தொடர்ந்து காட்டும் மரியாதையும் நன்றியுமாகும்! வாழ்க பாவாணரின் புகழ்! வாழ்க!"

என்று குறிப்பிட்டிருந்தேன். 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதியன்று இரவு 10.45 மணி அளவில் சென்னையிலிருந்து புறப்பட்ட ஏற்காடு எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தபோது, அதிகாலை 3 மணி அளவில் வாணியம்பாடி அருகே காலியாக நின்று கொண்டிருந்த சரக்கு இரயில் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. அதனால் சரக்கு ரெயிலின் சில பெட்டிகள் கவிழ்ந்து பக்கத்திலுள்ள இருப்புப் பாதையில் விழுந்தன. அப்போது கோவை, ஈரோடு வழியாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த திருவனந்தபுரம் விரைவு ரெயில் தான் வரும் தடத்தில் சரக்கு ரெயில் பெட்டிகள் கிடப்பது தெரியாமல் அதுவும் மோதியது.

இவ்வாறு மூன்று ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியததின் காரணமாக ஐந்து பெட்டிகள் நொறுங்கின. அதில் ஏராளமானவர்கள் இறந்துவிட்டதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்த நிலையிலே இருப்பதாகவும் முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. அடுத்து வந்த செய்தியில் விபத்துக்கு ஆளாகிய ரெயிலில் முன்னாள் அமைச்சரும் கோவை மாவட்டக் கழகச் செயலாளருமான மு.கண்ணப்பன் பயணம் செய்ததாகவும் அவர் படுகாயமடைந்த நிலையிலே இருப்பதாகவும் செய்தி கிடைத்தது.

உடனடியாக நான், பேராசிரியர், சாதிக் பாட்சா, நாஞ்சிலார், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், அன்பில் தர்மலிங்கம், செ.குப்புசாமி, ஆர்.டி.சீத்தாபதி, திருப்பத்தூர் சுந்தரம், ஆகியோர் கார் மூலமாக வாணியம்பாடிக்குச் சென்றோம். மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருந்த ஏராளமானவர்களைச் சந்தித்து அவர்களுக்கெல்லாம் ஆறுதல் கூறினோம். கழக நண்பர்களிடம் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருந்தவர்களுக்குத் தேவையான உதவிகளை அளித்திடக் கூறினோம்.

விபத்து நடந்த இடத்தையும் சென்று பார்த்துவிட்டு வட ஆர்க்காடு நண்பர்கள் முருகையன், சி.சே. சின்னராஜ், திருப்பத்தூர் சுந்தரம், மன்னப்பன், ஆம்பூர் சம்பங்கி, பன்னீர்செல்வம் போன்றவர்களிடம் கண்ணப்பனைப் பார்த்துக் கொள்ளவும் வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கவும் கூறிவிட்டுப் புறப்பட்டோம். அந்த விபத்திலே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எம்.கல்யாணசுந்தரம், ப.மாணிக்கம் போன்றவர்கள் சிக்கிய போதிலும் எந்தவிதமான காயமும் இன்றித் தப்பினர்.

விபத்துப் பற்றித் தகவலறிந்த மத்திய அரசின் ரெயில்வே துறை இணை அமைச்சர் சி.கே.ஜாபர் ஷெரீப், ரெயில்வே போர்டு தலைவர் எம்.எஸ்.குஜ்ரால் ஆகியோர் டெல்லியிலிருந்து உடனடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்து பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளிலே ஈடுபட்டனர். தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களும் அமைச்சர்களும் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். 1976 ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டு சர்க்காரியா கமிஷன் போடப்பட்டு அதிகாரிகளையும் காவல்துறையையும் கையில் வைத்துக் கொண்டு, நெருக்கடி நிலையும் அமலில் இருந்ததால், தி.மு.கழகத்தின் மீது பல அடக்குமுறைகள் நடத்தப்- பட்ட நேரத்தில் என் மீது சி.பி.ஐயைக் கொண்டு இரண்டு வழக்குகள் போடப்பட்டன.

அதிகாரிகளிடம் எல்லாம் மிரட்டி அறிக்கைகளை வாங்கி அதன் அடிப்படையிலே என் மீது வழக்குப் போடப்பட்டிருந்தது. ஆனால் நெருக்கடி நிலை முடிவுற்று, ஜனதா அரசு மத்தியிலே வந்ததும், அரசின் மிரட்டலுக்கு அஞ்சி அறிக்கை கொடுத்த பலர், அந்த அறிக்கை; மிரட்டலுக்குப் பயந்து கொடுத்ததாகக் கைப்பட எழுதிக் கொடுத்துவிட்டார்கள். அதிகாரிகள் அவ்வாறு எழுதிக் கொடுத்த போதும், மத்தியிலே ஆட்சிப் பொறுப்பிலே இருந்த ஜனதா அரசும், பிரதமர் மொரார்ஜி தேசாயும் அந்த வழக்குகளைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

அந்த அமைச்சரவையிலே பொறுப்பேற்றிருந்த பல அமைச்சர்கள்

, நெருக்கடி நிலை அமலிலே இருந்தபோது, இந்த வழக்குகள் எல்லாம் வேண்டுமென்றே அரசியல் பழிவாங்கும் தன்மையோடு போடப்பட்டவை என்று நிருபர்களிடமும், பொதுக்கூட்டங்களிலும் பேசியவர்கள்தான் என்ற போதிலும், வேறு பல மாநிலங்களிலே இதுபோல் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்றபோதும், தி.மு.கழகத்தின் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறாமல் இருந்து வந்தார்கள். பின்னர் 14.5.1981 அன்று நீதிமன்றத்திலே சி.பி.ஐ.

சார்பில் வழக்கறிஞர் நம்பீசன் ஆஜராகி, என்மீது தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளையும் தொடர்ந்து நடத்த முடியாததற்கான காரணங்களை விளக்கி மனுக்களைத் தாக்கல் செய்தார். இதற்கு எம்.ஜி.ஆரின் தமிழக அரசு, தானாகவே முன் வந்து அந்த வழக்குகளை வாபஸ் பெறக்கூடாது என்று எதிர்ப்பு மனு ஒன்றினைத் தாக்கல் செய்து அதன் மீது தமிழக அரசின் வழக்கறிஞர்களைக் கொண்டு வாதமிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 16.5.1981 அன்று சி.பி.ஐ.

வழக்கறிஞர் வாதத்தையும் அவர்கள் தாக்கல் செய்த மனுவையும் ஏற்று என் மீதிருந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்தார். முற்போக்கு எண்ணம் படைத்த முதுபெரும் கவிஞரும், தமிழ்ச்சமுதாயத்திற்கு எழுச்சி மிக்க பாடல்களை ஏராளமாக இயற்றித் தந்தவரும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பேரன்பைப் பெற்றவரும் என்னிடம் மிகுந்த பாசம் கொண்டவருமான உடுமலை நாராயணகவி அவர்களும் - தி.மு.கழக அமைச்சரவையிலே இடம் பெற்றிருந்தவரும், தினத்தந்தி இதழின் நிறுவனருமான சி.பா.ஆதித்தன் அவர்களும் 23.5.1981 அன்று ஒரே நாளில் இயற்கை அடைந்தார்கள்.

வேலைக்காரி, சொர்க்கவாசல், பராசக்தி, இரத்தக்கண்ணீர் போன்ற திரைப்படங்கள் பலவற்றில் முற்போக்கு எண்ணங்களைப் பாடல்களாக எழுதிப் புகழ்க்கொடி நாட்டியவர் உடுமலை நாராயண கவி. அண்ணாவின் சொர்க்கவாசல் படத்திற்காக "ஆத்திகம் எது? நாத்திகம் எது ? அறிந்து சொல்வீரே, புரிந்து கொள்வீரே" என்ற பாடல் அவர் எழுதியதுதான். அந்தப் பாடலைத் தணிக்கை அதிகாரி அனுமதிக்கவில்லை. உடுமலை நாராயண கவியின் மறைவு குறித்து நான் விடுத்த இரங்கல் செய்தியில் "கன்னித்தமிழ்ச் சாலையோரம் கவிதைக் கனிகள் உண்ணும் பறவைகளே!"

என்று தமிழின் மாண்பு குறித்தும், "பார் முழுதும் ஏர் முனையிலே, உழவன் பாட்டிலே கொண்டாட்டம் போடுதே" என்று உழவர்களின் மேன்மை குறித்தும், "திரௌபதி தன்னைத் துகிலுரிஞ்சது அந்தக் காலம்; பெண்ணைத் தொட்டுப் பார்த்தா சுட்டுப்புடுவா இந்தக் காலம்!"

என்று புதுமைப் பெண்ணின் பெருமை குறித்தும், "சீறி வந்த புலியதனை சிங்கார மறத்தி ஒருத்தி முறத்தினாலே துரத்தினாளே!" என்று பழங்காலத் தமிழச்சியின் புறநானூற்று வீரம் குறித்தும், தமிழர்களுக்கு இனிய-எளிய-எழுச்சி மிக்க பாடல்களை ஆயிரம் ஆயிரமாகத் தந்த அரிமாகக் கவிஞர் உடுமலை நாராயணக் கவிராயர் மறைந்தது கேட்டு மனம் குலைந்தேன். அவர் பழுத்த பழம்; ஆனாலும் கூட, அவருடைய பகுத்தறிவு சங்கநாதம் பாடல்கள் மூலமாக இளமைத் துடிப்போடு என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கக் கூடியவை.

பத்து நாட்களுக்கு முன்புகூட என்னோடு தொலைபேசி மூலமாகப் பேசினார். அவருடைய குடும்பத்தாருக்கும், அவருடைய அணுக்கத் தொண்டர் போல் இருந்து அவரைக் கவனித்துக் கொண்டிருந்த அருமை நண்பர் செல்லமுத்துக்கும் என் ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

தமிழ், தமிழர் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவரும், அண்ணா ஆட்சி அமைத்தபோது பேரவைத் தலைவராகவும் பின்னர் என் அமைச்சரவையிலே கூட்டுறவுத் துறை அமைச்சராகவும், பொறுப்பேற்றிருந்த சி.பா.ஆதித்தனார் அவர்கள் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையிலே நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று, பலனளிக்காத நிலையில் அவரும் இயற்கை அடைந்தார். அவர் மறைந்த அன்று நான் பெங்களூரில் முக்கிய கழகப்பணி காரணமாகச் சென்றிருந்தபடியால், தி.மு.கழகத்தின் சார்பில் சென்னை மாவட்டக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் என் குடும்பத்தினர் நேரில் சென்று ஆதித்தனாருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள் ஆதித்தனார் மறைவு குறித்து நான் விடுத்த இரங்கல் செய்தி வருமாறு:- "தமிழ்ப் பத்திரிகை உலகில் தமிழன், தினத்தந்தி, மாலை முரசு போன்ற ஏடுகளின் மூலம் ஒரு புதிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் ஆதித்தனார் அவர்கள்.

தமிழின் பால் அளவற்ற பற்றும் தமிழினத்தின் முன்னேற்றத்தில் எல்லையில்லா ஆர்வமும் கொண்டவர் ஆதித்தனார் அவர்கள். தமிழ் காக்கவும் உரிமை காக்கவும் சிறை சென்ற சரித்திரத்துக்கு அவரும் ஒரு சொந்தக்காரர் என்றெண்ணும் போது உள்ளம் உணர்ச்சிக் கோளமாகிறது. உழைப்பால் முன்னேறித் தமிழ்நாட்டுப் பத்திரிகை உலகில் யாரும் புரிந்திட முன்வராத ஒரு பெரும் சாதனையாக இலட்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆகக் கூடிய அளவுக்கு பத்திரிகைகளைத் தொடங்கிய அவருடைய ஆரம்பக்காலத் துணிவும் அயராத பணியும் உழைத்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கெல்லாம் ஒரு பாடமாகவும் வழிகாட்டுதலாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அத்தகைய ஆற்றலாளரை இழந்து, வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், திருவாளர்கள் இராமச்சந்திர ஆதித்தன், செவந்தி ஆதித்தன், ஆகிய இரு புதல்வர்களுக்கும் அவரது மருமகன் 'தினகரன்' கே.பி.கந்தசாமி அவர்களுக்கும் குறிப்பாகப் பத்திரிகைத் துறையில் அவரால் உருவாக்கப்பட்ட இளம் தலைமுறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

பின்னர் நான் பெங்களூரிலிருந்து திரும்பியதும் ஆதித்தனார் இல்லம் சென்று அனைவருக்கும் ஆறுதல் கூறினேன்.