உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நாராயணசாமி நாயுடு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நாராயணசாமி நாயுடு · 271 / 391

55. நாராயணசாமி நாயுடு மனந்திறந்த பேட்டி "இ ருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்வதற்காகவும், அஞ்ஞானத்தை அகற்றுவதற்காகவும் இறைவனால் அருளப்பட்டு அவனுடைய கருணையிலிருந்து பிறந்த வழிகாட்டுதலே திருக்குர் ஆன்" என்பதை ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய மக்களின் நாடுகள் தான் ஈரான், ஈராக் இரண்டுமே! ஆனால் அந்த இருநாடுகளுக்கிடையே நீண்ட காலமாக இருந்து வந்த எல்லைத் தகராறு 1980 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படுகின்ற அளவிற்கு முற்றியது.

ஈரான் நாட்டு மன்னரான ஷாவினால் விரட்டப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறிய கோமேனி பல்வேறு நாடுகளிலே அடைக்கலம் புகுந்து இறுதியாக பிரெஞ்சு நாட்டில் இருந்தவாறு ஈரானில் பெரும் புரட்சியைத் தூண்டிவிட்டார். ஈரான் நாட்டுத் தெருக்களில் மன்னர் படைகளும் புரட்சிப் படைகளும் மோதிக் கொண்டன. கடைசியில் ஷா மன்னர் நாட்டை விட்டு மனைவி மக்களுடன் வெளியேறினார். அவர் எந்த நாட்டில் இருந்தாலும் அவர் பிணத்தைக் கொண்டுவர கோமேனி ஆட்களை அனுப்பினார்.

ஆனால் ஷா மன்னனுக்கு எகிப்தின் ஆதரவு கிடைத்தது. பின்னர் உடல் நலிவுற்றுச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அமெரிக்கா ஷா மன்னருக்குச் சிகிச்சை அளிப்பது குறித்துக் கோபமடைந்த கோமேனி ஐம்பதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து அடைத்து வைத்தார். சிகிச்சையிலிருந்து குணம் பெற்று எகிப்துக்குத் திரும்பிய ஷா மன்னர் சிலகாலம் கழித்து மாண்டும் போனார். ஆனால் ஈரானில் ஷா மன்னர் எவ்வளவு கொடுமையாகச் சித்திரிக்கப்பட்டாரோ அவரையும் மிஞ்சுகின்ற வகையிலே கோமேனி கொடுங்கோன்மை செலுத்துகிறவர் என்ற பெயருக்குரியவரானார்.

ஷாவின் காலத்து அதிகாரிகள், அமைச்சர்கள், தளபதிகள், ஆதரவாளர்கள் அனைவரின் உயிர்களும் கோமேனியின் ஆட்சியிலே பறிக்கப்பட்டன. சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும் சிறிய கதை என்ற நிலை ஈரானில் மட்டுமல்ல, ஈராக்கிலும் இருந்தது. கோமேனியைப் போலவே பல எதிர்ப்புக்களைச் சமாளித்து ஈராக்கின் அதிபராக ஆனவர்தான் சதாம் உசேன். இளம் வயதிலேயே உசேன், ஈராக் குடியரசுத் தலைவரைக் கொல்ல முயன்று 1959 ஆம் ஆண்டு மரண- தண்டனை விதிக்கப்பட்ட கைதியாகக் கொட்டடியில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து தப்பியோடி, சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் அலைந்து திரிந்து 1963இல் ஈராக்கில் நடைபெற்ற புரட்சி வெற்றி பெற்றபோது சொந்த நாட்டுக்குத் திரும்பினார். புரட்சி செய்து நாடாள வந்த உசேனின் கட்சி நீண்ட நாள் ஆட்சியில் இல்லை! கவிழ்ந்தது. உசேனும் சிறைப்பட்டார். இரண்டு ஆண்டு தண்டனை பெற்று; அதைக் கழித்துவிட்டு வெளியே வந்த சதாம் உசேன், மீண்டும் தீவிரப் புரட்சியில் ஈடுபட்டார். அந்தப் புரட்சியின் பயனாக அவருக்குத் துணை அதிபர் பதவி கிடைத்தது.

தனது தந்திரத்தால், அதிபரின் உடல் நிலையைக் காரணம் காட்டி, அவரை நீக்கிவிட்டு ஈராக்கின் அதிபராக உசேன் பதவியேற்றார். பதவியேற்றவுடன் தனக்குப் போட்டியாக வரக்கூடுமெனக் கருதிய சொந்தக் கட்சிக்காரர்களை எல்லாம் சதிக்குற்றஞ்சாட்டி, தூக்கிலிட்டு அவர்கள் வாழ்வை முடித்தார். அவர் கண்ணுக்கெதிரிலேயே ஈராக்கின் துணைப் பிரதமரும், மற்றும் இருபதுக்கு மேற்பட்ட முக்கியஸ்தர்களும் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.

இவ்வாறு தங்கள் தங்களின் நாட்டுக்குள்ளேயே தங்களது ஆதிக்க எதிரிகளைப் பழி வாங்கிக் கொண்டிருந்த ஈரான் அதிபரும் ஈராக் அதிபரும் 1980 ஆம் ஆண்டு ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு உலகத்தின் ஆழ்ந்த கவனத்திற்கு ஆளானார்கள். இருநாடுகளுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதே அப்போது சிக்கலுக்கு வித்தானது! 22.9.1980 அன்று ஈராக் விமானப் படையினர் ஈரான் தலைநகரான டெக்ரானை குண்டு வீசி தாக்க முற்பட்டனர்.

அதற்குமுன் ஈராக் நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறிய கப்பல்களை ஈரான் மூழ்கடித்ததால் பத்து வீரர்கள் இறந்தனர். சீற்றம் கொண்டு ஈரான், ஈராக் மீது போரைத் தொடங்கியது. வடக்கே துருக்கியையும் கிழக்கே ஈரானையும் தெற்கே சவூதி அரேபியாவையும் மேற்கே ஜோர்டான் சிரியாவையும் எல்லை நாடுகளாகக் கொண்ட ஈராக்கின் பரப்பளவு 1,67,568 சதுர மைல்! 1965 ஆம் ஆண்டு கணக்குப்படி மக்கள் தொகை 82,61,567 பேர். இவர்களில் 75 சதவிகித மக்கள் ஷியா முஸ்லிம்கள்!

அதிபர் உசேன் சிறு பான்மையினரான சன்னி முஸ்லிம். ஈரான் ஷியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. கோமேனியும் ஒரு ஷியாதான். ஈரானுக்கு வடக்கே ரஷ்யாவும் காஸ்பியன் கடலும், தெற்கே பர்சியன் கடலும் ஓமன் வளை- குடாவும் கிழக்கே ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானும், மேற்கே ஈராக், துருக்கியுமாக எல்லைகள் அமைந்தது. இந்த நாட்டின் பரப்பளவு 6,36,367 மைல்; மக்கள் தொகை 1964 ஆம் ஆண்டு கணக்கின்படி 2,28,60,000.

பர்சியா என்றிருந்த பெயரைத்தான் 1935 ஆம் ஆண்டு ஈரான் என்று மாற்றிக் கொண்டது. மதத்தால் முஸ்லிம்களானாலும், ஈராக்கில் உள்ளவர்கள் அராபிய இனத்தையும் ஈரானில் உள்ளவர்கள் ஆரிய இனத்தையும் சேர்ந்தவர்கள். ஒரு மாதத்திற்கு மேலாக இரு நாடுகளும் விட்டுக் கொடுக்காமல் போரிட்டன. லிபியா அதிபர் கடாபி, சவூதி அரேபிய இளவரசர் அப்துல் அஜீத், பாகிஸ்தான் அதிபர் ஜியா ஆகியோர் சமரச முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

போர் நிறுத்தப்பட வேண்டுமென்று ஐ.நா.பாதுகாப்புக் குழு தீர்மானமும் நிறைவேற்றியது. ஐ.நா.சபையின் கட்டளைப்படி போரை நிறுத்த ஈராக் சம்மதித்தபோதிலும் ஈரான் போரை நிறுத்த மறுத்துவிட்டது. ஈராக் நாட்டுக்குப் பணியமாட்டோம், இறுதிவரை போராடுவோம் என்று ஈரான் அதிபர் கோமேனி அறிவித்தார். போரின் 13வது நாளில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அதுவரை ஈரான் மீது ஈராக் கடும் தாக்குதல் நடத்திப் பல நகரங்களைக் கைப்பிடித்திருந்ததற்கு மாறாக, அன்று ஈரான், ஈராக் தலைநகரமான பாக்தாத் மீது குண்டுமாரி பொழிந்தது.

அடுத்த சில நாட்களில் ஈரானின் முக்கிய நகரான அப்தான் நகரத்தை ஈராக் படைகள் சுற்றிவளைத்துத் தாக்கின. ஈரானிலேயே மிகப் பிரமாண்டமான பெட்ரோல் தொழிற்சாலை இந்த அப்தான் நகரிலே இருந்ததால், இரு நாடுகளும் மூர்க்கத்தனமாகப் போரிட்டன. நீண்ட நாட்களுக்கு இந்தப் போர் நீடித்தது. இரண்டு மாத காலத்திற்குப் பின் போரின் வேகம் குறைந்ததே தவிர இருவரும் ஒரு முடிவிற்கோ, சமாதானத்திற்கோ வரவில்லை. பின்னர் ஈரானின் கோமேனிக்கும், அந்த நாட்டின் ஜனாதிபதிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, ஜனாதிபதி நாட்டை விட்டே ஓடிவிட்டார்.

நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் 80 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் முதல் வாரத்தில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ஐனநாயகக் கட்சிச் சார்பில் அப்போது குடியரசுத் தலைவர் பதவியிலே இருந்த ஜிம்மி கார்ட்டரும், குடியரசுக் கட்சிச் சார்பில் ரொனால்டு ரீகனும் போட்டியிட்டார்கள். குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு ஜனநாயகக் கட்சிச் சார்பில் அப்போதைய குடியரசு துணைத்தலைவர் மாண்டேலும், குடியரசுக் கட்சி சார்பில் ஜார்ஜ் புஷ்ஷூம் போட்டியிட்டார்கள்.

52 பணயக் கைதிகள் ஈரானில் காவலிலே வைக்கப்பட்டிருந்தவர்களை மீட்காதது, கார்ட்டரின் வெற்றிக்குப் பாதகமாகப் பேசப்பட்டது. ஆனால் கடந்த நூற்றாண்டுகளில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் யாரும் பதவியிலே இருந்து கொண்டு போட்டியிட்டபோது தோல்வி அடைந்ததில்லை. குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரீகன் முன்னாள் ஹாலிவுட் நடிகர். இவரது தேர்தல் சின்னம் யானை. கார்ட்டரின் தேர்தல் சின்னம் கழுதை. இறுதியாக இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக அதுவரை பதவியிலே இருந்த வருமான ஜிம்மி கார்ட்டர் தோல்வியடைந்து, 69 வயதான ரீகன் புதியத் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடியரசுத் துணைத் தலைவராக ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றார். புதிய குடியரசுத் தலைவரை வாழ்த்தி நான் விடுத்த வாழ்த்துச் செய்தியில் "வெற்றி பெற்ற ரீகன் இந்தியாவுடன் நட்புறவும் நல்லெண்ணமும் கொண்டு செயல்படுகிறவராக விளங்குவார் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்திப் பாராட்டுகிறேன். ஏற்கெனவே கவர்னராகப் பணியாற்றி நிர்வாகப் பயிற்சியும், அரசியல் அனுபவமும் பெற்றுள்ள ரீகனின் தலைமையை தேர்ந்தெடுத்துள்ள அமெரிக்க மக்களை அவர் ஏமாற்றத்திற்கு ஆளாக்கமாட்டார் என்று நம்புவோமாக!"

என்று தெரிவித்திருந்தேன். 1980 நவம்பரில் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் கூட்டத்தில் அந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவன் என்ற முறையிலே சென்று கலந்து கொண்டு உரையாற்றினேன். பிரதமர் இந்திரா காந்தி, மற்றும் பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்திலே உரையாற்றிய பிரதமர் இந்திராகாந்தி இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி ஒரு போதும் திணிக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழியை வழங்கினார்.

தஞ்சை மாவட்டத்திலே ஒரு சில நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த நான் திருவாரூர் பயணியர் விடுதியில் 29.11.1980 அன்று தங்கியிருந்த போது திருச்சியிலிருந்து அன்பில் தர்மலிங்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான திருச்சி எம்.எஸ்.மணி திடீர் மாரடைப்புக் காரணமாக மறைந்துவிட்டார் என்றார். எம்.எஸ்.மணி மறைவு குறித்து நான் விடுத்த இரங்கல் செய்தியில் "தாங்க முடியாத துயரச் செய்தி!

தன்மானத் திலகம் கழகத்தின் செயல் வீரர் - எனது ஆருயிர் உடன்பிறப்பு திருச்சி எம்.எஸ்.மணி மறைந்துவிட்டார். திருச்சி நகரத்திலும், மாவட்டத்திலும் கழகத்தின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சிக்கும் அவரது உழைப்பும் தியாகமும் பயன்பட்டிருக்கிறது. என் இதயத்தில் ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்த இலட்சிய வீரனை இழந்துவிட்டேன். கழகம் ஒரு ஒப்பற்ற முன்னோடியைப் பறிகொடுத்துத் தவிக்கிறது. அவரது வியர்வையாலும் இரத்தத்தாலும் உரம் பெற்றது இந்த இயக்கத்தின் ஆணிவேர்.

அவரைப் பிரிந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்ததோடு திருச்சி சென்று அந்த மாவீரனின் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டு இடுகாட்டில் இரங்கல் உரையாற்றினேன்.

"அண்ணாவின் ஆலய மணி" என்ற தலைப்பிலே அவர்பற்றி இரங்கல் கவிதை ஒன்றையும் எழுதி முரசொலியில் வெளியிட்டு எனக்கு நானே ஆறுதல் வழங்கிக் கொண்டேன். விவசாயக் கிளர்ச்சிகளையும், எதிர்க் கட்சித் தலைவர்களையும் அடக்குவதற்காகத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைத் தான் பயன்படுத்தப் போவதில்லை என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அறிவித்ததற்கு மாறாகத் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவை அரசு கைது செய்தது.

அதுவும் அவர் டெல்லிக்குச் சென்று பிரதமரிடமும், குடியரசுத் தலைவரிடமும் விவசாயிகளின் குறைகளைக் கூறப் புறப்பட்டு, விமான நிலையத்தில் விமானத்தில் ஏற இருந்த சமயத்தில் அவரைக் கைது செய்தனர். அவரைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட விவசாய சங்கத்தினரும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து டிசம்பர் 31ஆம் தேதியன்று விவசாய சங்கத்தினர் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தினர்.

இந்த முழுஅடைப்பை முறியடிக்க ஆளுங்கட்சியினர் ஆங்காங்கு வன்முறைகளில் ஈடுபட்டனர். காவல் துறையினரின் துணையோடு கடைகளை எல்லாம் திறக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். இதன் காரணமாகப் பல இடங்களில் வன்முறை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 31.12.1980 அன்று மட்டும் தமிழகத்தில் மொத்தம் நான்கு இடங்களில் துப்பாக்கிப் பிரயோகம் இந்தக் கடையடைப்பின் காரணமாக நடைபெற்றது. துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்தனர்.

கோவில்பட்டி அருகில் உள்ள திருவேங்கடத்தில் ஒரு காவலர் வெட்டிக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்ததைச் சேர்த்து அன்றைய நிகழ்ச்சியையொட்டி ஒன்பது பேர் மொத்தத்தில் இறந்தனர். இதில் இறந்துபோன பெரியவர் வெங்கடசாமி, இளைஞன் வெங்கடசாமி, வரதராசன் ஆகியோரின் உடல்களை அடக்கம் செய்யக்கூட உறவினர்களிடம் தராமல் 2.1.1981 அன்று நள்ளிரவில் அரசாங்கமே அடக்கம் செய்ததாக 'தினத்தந்தி' இதழிலேயே செய்தி வந்தது.

விவசாயிகளின் பிரச்சினைக்காகவும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அ.தி.மு.க. அரசு முறைகேடாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதைக் கண்டித்தும் தி.மு.கழகம் 1.1.1981 அன்று சென்னையில் மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தியது. சென்னை காமராஜர் சாலை அண்ணா துயிலுமிடத்திலிருந்து புறப்பட்ட அந்த ஊர்வலம் கிண்டி ஆளுநர் மாளிகையை அடைந்து ஆளுநரிடம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அ.தி.மு.க. அரசு எந்தெந்த வகைகளில் எல்லாம் முறை கேடாகப் பயன்படுத்துகிறது என்பதற்கான விபரங்கள், கைதானவர்கள் பற்றிய விபரங்கள் எல்லாம் அடங்கிய முறையீட்டினை அளித்தோம்.

விவசாயிகளின் போராட்டம் பற்றிய நிலைமைகளைக் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் நேரில் விளக்கிடக் கழகப் பொருளாளர் சாதிக் பாட்சா தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் கொண்ட குழு ஒன்றினை டெல்லிக்கு அனுப்பிவைத்தோம். மேலும் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து கைதான பத்தாயிரம் விவசாயிகள் - எதிர்க்கட்சியினரை பொங்கலுக்கு முன் அரசு விடுதலை செய்யாவிட்டால் பிப்ரவரி முதல் வாரத்தில் அறப்போர் நடத்துவது என்று 6.1.81 அன்று சென்னையிலே கூடிய கழகத்தின் தலைமைச் செயற்குழு முடிவெடுத்தது.

விவசாயிகள் முழுஅடைப்பு அன்று தமிழகத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடங்களுக்குச் சென்று நேரில் பார்வையிட்டுத் தலைமைக்கு அறிக்கை தரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் ஏழுபேர் கொண்ட கழகக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் குழு அந்தப் பகுதிகளுக்கெல்லாம் விரைந்தது. சாதிக் பாட்சா தலைமையில் டெல்லி சென்ற தி.மு.கழகக் குழு 5.1.81 அன்று பிரதமரைச் சந்தித்துத் தமிழகத்தில் விவசாயிகள் மீதும் எதிர்க்கட்சியினர் மீதும் அ.தி.மு.க அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது பற்றியெல்லாம் விளக்கினர்.

விவசாய சங்கத்தின் இந்தப் போராட்டத்தை தி.மு.கழகம் முழுக்க முழுக்க ஆதரித்த போதிலும், அதற்கு முன் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, விவசாயிகள் சங்கம் தி.மு.க., அ.தி.மு.க என்ற இரண்டு அணிகளையுமே ஆதரிக்கவில்லை என்பதும் நடுநிலை வகித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்த மாறுபட்ட முடிவினை எடுக்கக் காரணம் என்ன என்பதை நாராயணசாமி நாயுடு அவர்களின் கீழ்க் கண்ட பேட்டியே விளக்கும் என்று கருதுகிறேன்.

நிருபர்:- சிறு விவசாயிகளுக்குச் சில சலுகைகளைச் செய்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உங்கள் சங்கத்தைப் பிளவுபடுத்திப் பலவீனப்படுத்தப் பார்க்கிறார் என்பது உண்மையா? நாராயணசாமி நாயுடு:- இந்த ஆண்டின் பெரிய ஜோக்

இதுதான் சார்! எம்.ஜி.ஆர் சலுகைகள் எங்தே கொடுத்திருக்கிறார்? கொடுப்பதாகச் சொன்னார் - சொல்கிறார் - சொல்லிக் கொண்டே இருப்பார்... பேப்பரில்! இன்னும் கொடுக்கவில்லையே! நிருபர்:- கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் சங்கம் நடுநிலைமை வகித்தது ஏன்? நாராயணசாமி நாயுடு:- பாராளுமன்றத் தேர்தலில் எங்கள் சங்கம் தி.மு.க. இந்திரா காங்கிரஸ் கூட்டணியைத்தான் ஆதரித்தது. காரணம் அ.தி.மு.க. அரசின் விவசாய விரோதக் கொள்கைதான்.

போராடும் விவசாயிகளை அடித்து நொறுக்கியதும் சுட்டுத் தள்ளியதும் அ.தி.மு.க. அரசை எப்படியும் இறக்கியே தீர வேண்டும் என்ற வெறியை உண்டாக்கிற்று. 39 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 2 இடங்களைத் தவிர மீதி இடங்களில் படுதோல்வி அடைந்தது. அதில் எங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. ஆனால் சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க அரசு பதவியில் இல்லை. இறக்கப்பட்டுவிட்டது. நான் உடல் நலமின்றி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.

டாக்டர் கலைஞர் என்னைப் பார்க்க வந்தார். உடல் நலம் விசாரித்துவிட்டுப் போனார். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். என்னைப் பார்க்க விரும்புவதாக ஜனார்த்தனம் எம்.எல்.சி. என்பவர் என்னிடம் சொன்னார். அதன் பின்னர் யு.ஆர்.கிருஷ்ணன் எம்.பி. வந்தார். எம்.ஜி.ஆருக்கும் எங்களுக்கும் சரிப்பட்டுவராது. எம்.ஜி.ஆர். என்னைச் சந்திக்கவே வேண்டாம் என்று அவரிடம் சொன்னேன். அப்புறம் முன்னாள் மந்திரி அரங்கநாயகம் வந்தார். அவரிடமும் அதையே சொன்னேன்.

அந்த நேரத்தில் என் வீட்டைப் போலீசார் சோதனையிட்டு நடத்திய ரகளையால் எனக்கு ஏற்பட்ட வேதனைக்கு எல்லையே இல்லை. சில நாட்களில் வேறு இரண்டு மாஜி மந்திரிகள் பொன்னையனும் குழந்தைவேலுவும் வந்தார்கள். குழந்தைவேலு என்னைப் பற்றிப் பொதுக்கூட்டங்களில் தவறாகப் பேசியதைச் சுட்டிக் காட்டினேன். அவர் வருத்தம் தெரிவித்தார். அவர்களிடம் போலீசார் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் என் வீட்டில் நடத்திய திடீர் சோதனைகளையும், தோண்டிய இடங்களையும் காட்டினேன்.

தெரியாமல் நடந்துவிட்டது என்று கூறி வருத்தப்பட்டார்கள். அவர்களும் எம்.ஜி.ஆர். என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள். அவர்களிடமும் என் கருத்தைத் திட்டவட்டமாகச் சொன்னேன். அவர்கள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் "சரி வரச் சொல்லுங்கள், நாளைக் காலை பத்து மணிக்கு வரட்டும்; ஆனால் அவர் வந்து பார்ப்பதால் எந்தவித மாற்றமும் எங்கள் நிலையில் ஏற்படப்போவதில்லை" என்று கூறினேன்.

மறுநாள் காலையில் அவர் வரவில்லை. அரங்கநாயகம் வந்தார். எம்.ஜி.ஆர். இரவு 10 மணிக்கு வருவதாகச் சொன்னார். இதிலேயும் குழப்பம். அப்போது எங்கள் வீட்டில் சுமார் 2000 விவசாயிகள் காத்திருந்தனர். அவர்களை எல்லாம் இரவு 10 மணி வரை காத்திருக்கச் செய்ய முடியாது என்றும், பின்னால் ஒரு நாள் பார்க்கலாம் என்றும் அரங்கநாயகத்திடம் சொன்னேன். உடனே அவர் ஆளை அனுப்பி போன் பண்ணி மத்தியானம் 2.30 மணிக்கே எம்.ஜி.ஆரை அழைத்து வந்துவிட்டார்.

எம்.ஜி.ஆர் என் வீட்டில் நடந்த சோதனைகளுக்கு அதிகாரிகள் மீது பழி சுமத்தினார். அதற்காக வருந்துவதாகவும் கூறிவிட்டுச் சட்டமன்றத் தேர்தலில் என் ஆதரவைக் கோரினார். நான் எங்கள் சங்கக் கமிட்டி கூடி முடிவெடுத்து தான் பதில் சொல்ல முடியும் என்று கூறினேன். தேர்தல் அறிக்கையே நீங்கள் சொல்வது போலத்தான் தயாரிக்கவேண்டும் என்றார் எம்.ஜி.ஆர். மீண்டும் நான் பெங்களூரில் இருந்தபோது எம்.ஜி.ஆர். வந்து பார்த்தார்.

தேர்தல் அறிக்கையைக் கொண்டு வந்து காட்டினார். அதன் பின்னர் கலைஞர் வந்தார். எப்போதும் போல மனம் விட்டுப் பேசினோம். அ.தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோது அதற்கு எதிராகப் பேச வேண்டாம். அரசியல் சர்ச்சையில் ஈடுபட வேண்டாம் என்று எங்கள் சங்கம் முடிவு செய்தது. எம்.ஜி.ஆர் போகிற இடமெல்லாம் எல்லாக் கடன்களையும் இரத்துச் செய்வோம் என்று பேசினார். விவசாயிகள் அதை ஓரளவுக்கு நம்பி ஏமாந்துவிட்டார்கள். எங்கள் சங்கம் நடுநிலை வகித்ததற்கு இதுதான் காரணம்.

நிருபர்:- தி.மு.க. ஆட்சிக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும் இடையே நீங்கள் காணும் வித்தியாசம் என்ன? நாராயணசாமி நாயுடு:- இரண்டு ஆட்சியிலும் நாங்கள் போராட்டம் நடத்தியிருக்கிறோம். ஆனால் கலைஞர் ஒரு தடவை ஒன்று சொன்னால் சொன்னபடி நடப்பார். ஆனால் எம்.ஜி.ஆர் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதும் இல்லை; நான் சொல்லவே இல்லை என்று மறுத்தும் விடுவார். அதுதான் அவர் பழக்கம். துணிவும் சமயோசிதமும் கலைஞருக்கு மட்டுமே உண்டு.

அவரால் தான் விவசாயிகளின் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் தீர்க்கவும் முடியும்." சட்டமன்றத் தேர்தலிலே நடுநிலை வகித்து விட்டு, எம்.ஜி.ஆர். வெற்றிபெற்று, ஆட்சியை அமைத்த பிறகு நாராயணசாமி நாயுடு வெளியிட்ட பேட்டிதான் இது. தேர்தலுக்குப் பின்னர் இந்த முடிவிற்கு வந்து என்ன பயன்?