நெஞ்சுக்கு நீதி
விபீஷணர்களைப் பற்றிய · 270 / 391
54. விபீஷணர்களைப் பற்றிய ஒரு வீர உரை! தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றிச் செய்தியாளர்களிடம் பிரதமர் இந்திரா காந்தி கூறிய போது "தமிழ்நாட்டில் தி.மு.க., இந்திரா காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு யார் மீதும் பழி சுமத்திப் பயனில்லை. தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். தி.மு.க.வுடன் இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு கொண்டது தவறு என்று நான் கருதவில்லை. அந்த உடன்பாடு பயன்படுத்தப்பட்ட விதம் அல்லது பயன்படுத்தப்படாமல் விடப்பட்ட விதம் துரதிருஷ்டவசமானது" என்று கூறினார்.
தி.மு.கழகம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், அதோடு என்னுடைய 57 வது பிறந்த நாள் விழாவை நடத்தவும் 3.6.1980 அன்று கடற்கரையில் கழகப் பொருளாளர் சாதிக்பாட்சா தலைமையிலே ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. அன்று காலையில் எம்.ஜி.ஆர். எனக்குத் தொலைபேசி மூலமாகப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார். நானும் அவர் தேர்தலிலே பெற்ற வெற்றிக்காக வாழ்த்தைத் தெரிவித்து எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியமைக்கு நன்றி தெரிவித்தேன்.
கடற்கரைக் கூட்டத்திலே அன்று நான் பேசி முடிக்கும்போது "தாய் தன்னுடைய குழந்தையைத் தூக்கிக் கொஞ்சும்போது குழந்தை சில நேரங்களில் தாயின் நெற்றியிலே சிறுநீர் கழித்துவிடும். அதற்காகத் தாய் குழந்தையைத் தூக்கி வீசி எறிந்துவிடமாட்டாள். மெதுவாகக் குழந்தையைக் கீழே இறக்கிவைத்து சிறுநீர் பட்ட உடையைக் கழற்றிவிட்டு, அதைக் குளிப்பாட்டி வேறு உடை அணிவித்து மறுபடியும் கண்ணே, மணியே என்றுதான் கொஞ்சுவாள், அதைப்போல் தான் நானும் இந்தத் தேர்தல் முடிவினை எடுத்துக் கொள்கிறேன்.
மேலும் ஒன்று கூறுகிறேன். தமிழர்களே, என்னை நீங்கள் கடலிலே தூக்கி எறிந்தால், கட்டுமரமாக மிதப்பேன், அதிலே ஏறி நீங்கள் சவாரி செய்யலாம்; என்னை நீங்கள் நெருப்பிலே தூக்கி எறிந்தால் நான் விறகாக அடுப்பெரிக்கப் பயன்படுவேன். நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம். என்னை நீங்கள் பாறையிலே மோதினால் வெறும் கல்லைப் போல் பொடியாகிவிடமாட்டேன். தேங்காய் சிதறுவது போல் சிதறி உங்களுக்குத் தின்கின்ற பண்டமாக மாறுவேன்.
ஆகவே தமிழர்களே, என்னை நீங்கள் எதுவேண்டு- மானாலும் செய்து கொள்ளுங்கள், நான் உங்களுக்கே பயன்படுவேன்." என்று கூறினேன். சில நாட்களுக்குப் பின் டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துத் தேர்தல் முடிவுகள் பற்றி விளக்கினேன். அவர்கள் மிகவும் ஆறுதலோடு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் சஞ்சய் காந்தியைச் சந்தித்து, நீண்ட நேரம் பேசினேன். என்னிடம் மரியாதையோடும், அன்போடும் சஞ்சய் காந்தி பேசினார்.
ஆனால் எனக்கு அப்போது தெரியாது, அந்த இனைஞரோடு நான் உரையாடும் கடைசி வாய்ப்பு அதுதான் என்று! ஆம், அதற்குப் பின் ஒருசில நாட்களிலேயே 23.6.80 அன்று காலையில், 33 வயதே நிரம்பிய சஞ்சய் காந்தியும் டெல்லி விமானப் பயிற்சி சங்கத் தலைமைப் பயிற்சியாளர் கேப்டன் சுபாஷ் சக்சேனாவும் டெல்லி சப்தர்ஜங். விமான நிலையத்திலிருந்து 'புஷ்பக்' என்ற பயிற்சி விமானத்தில் ஏறிப் பறக்கத் துவங்கினர். புறப்பட்ட கால் மணி நேரத்தில், விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாக காங்கிரஸ் இயக்கத்தினரால் போற்றப்பட்ட சஞ்சய் காந்தி பற்றிய இந்தத் திடுக்கிடும் செய்தி சிலமணி நேரத்தில் இந்தியா முழுவதும் பரவியது. இத்தாலியில் அப்போதிருந்த அவரது சகோதரர் ராஜீவ் காந்திக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், மைசூரில் ஓய்வெடுத்து எழுதிக்கொண்டு இருந்த எனக்கும் செய்தி கிடைத்து, நான் உடனடியாக சென்னை திரும்பி, சென்னையிலிருந்து நேராக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றேன்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது உடன்பாடு பற்றிப் பேச 79ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நான் டெல்லி சென்றபோது, டெல்லியிலுள்ள முரசொலி மாறன் இல்லத்தில் சஞ்சய் காந்தியும் நானும் ஒரு மணி நேரத்திற்கு மேல் இந்தியாவின் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் என் நினைவலைகளிலே தோன்றியது. மீண்டும் சென்னையிலே தேசிய முஸ்லீம்கள் பேரவை சார்பிலே அவருக்கு வரவேற்ப்புத் தரப்பட்ட விழாவிலே நான் கலந்து கொண்டு, "நேருவின் பேரப்பிள்ளை - இந்திராவின் வீரப்பிள்ளை" என்று அவரை அன்போடு அழைத்ததும் நினைவிற்கு வந்தது.
சென்னையிலிருந்து எனனுடன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமத் எம்.பி., ஆர்க்காடு வீராசாமி, நெல்லை சிவப்பிரகாசம் எம்.பி., ஜி.லெட்சுமணன் எம்.பி., ஆகியோர் உடன் வந்தனர். டெல்லி விமான நிலையத்தில் முரசொலி மாறன் எம்.பி., சி.டி. தண்டபாணி எம்.பி., வை.கோபால்சாமி எம் பி. ஆகியோர் என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தனர். விமான நிலையத்திலிருந்து நேராக பிரதமர் இல்லத்திற்குச் சென்று சஞ்சய் காந்தியின் உடலுக்கு மலர்வளையம் வைத்தேன்.
பின்னர் சோகமே உருவாக இருந்த இந்திரா காந்தியைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். "எனது துயரத்திலே பங்கு கொண்ட தங்களுக்கு நன்றி" என்று இந்திரா காந்தி கூறினார். அன்று மாலையில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டேன். அதே நாளில் சென்னையில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி டெல்லிக்குக் கிடைத்தது. உடனயைாக சென்னைக்குத் திரும்பி வி.வி.கிரியின் இறுதி ஊர்வலத்திலே கலந்து கொண்டேன்.
வெற்றிபெற்ற தி.மு.கழகச் சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சென்னையிலே நடைபெற்று சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக என்னையும், துணைக் கொறடாவாக எஸ்.பாலனையும், செயலாளர்களாக துரைமுருகன், ரகுமான்கான் ஆகியோரையும், பொருளாளராக செஞ்சி ராமச்சந்திரனையும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியிலே சட்டசபை கட்சித் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பெரும் சிக்கல். 17.6.80 அன்று இந்திரா காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மூப்பனாரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், மற்றும் தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டத்திலே மேலிடப் பிரதிநிதியாக கர்நாடக மாநில முதலமைச்சர் குண்டுராவும் கலந்து கொண்டார். தலைவர் பதவிக்கு உ.சுப்பிரமணியம், என்.எஸ்.வி.சித்தன், என். சுந்தரராஜ், கே.எஸ்.ஜி.ஹாஜா ஷெரிப்அ இளையபொருமாள் ஆகியோர் போட்டியிட விரும்பினர்.
போட்டி அதிகமாக அருந்ததால் இளையபெருமாள் ஆகியோர் போட்டியிட விரும்பினர். போட்டி அதிகமாக இருந்ததால் இளையபெருமாள் போட்டியிட விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். தலைவரை ஒரு மனதாகத் தேர்ந்தேடுக்க விரும்பிய குண்டுராவ் ஒவ்வொரு உறுப்பினரையும் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களின் கருத்துக்களை அறிந்து, இறுதியாக ஹாஜா ஷெரீபைத் தலைவராக அறிவித்துவிட்டு விமானத்திற்கு நேரமாகி விட்டதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
ஹாஜா ஷெரீப் தலைவராக அறிவிக்கப்பட்டதும், வெளியே இருந்த ஊழியர் மத்தியில் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த நேரத்தில் அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சின்ன அண்ணாமலை இறந்துவிட்டார் என்ற செய்தி வந்து மூப்பனாரும் வெளியே சென்று விட்டார். அதற்குப் பின்னர் அந்த அலுவலகத்தில் இருந்த நாற்காலிகளைத் தூக்கி எறிந்தும், கண்ணாடி ஜன்னல்களை உடைத்தும் கலவரத்திலே ஈடுபட்டனர்.
இந்த முடிவை எதிர்த்து டெல்லிக்குத் தூதுக்குழுச் செல்லப் போவதாகவும், டெல்லியும் ஏற்க மறுத்தால் ராஜ்யசபை தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் ஒரு குழுவினர் தெரிவித்தனர். இவ்வாறு தேர்தலுக்குப் பின்னரும் அந்தக் கட்சியிலே ஒற்றுமை தோன்றிடவில்லை. குதிரை கீழே தள்ளியதோடு மட்டுமல்லாமல் குழியும் தோண்டியது என்று சொல்வார்களே, அதைப்போல இந்திரா காங்கிரஸ் கட்சியோடு உறவு கொண்டு அதன் காரணமாகப் பல அல்லல்களைப் பெற்றுத் தோல்வியடைந்த பின்னரும் இந்திரா காங்கிரஸ் நம்மை சும்மா விடவில்லை.
மத்தியிலே அவர்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த காரணத்தால் இங்கேயுள்ள காங்கிரஸ்காரர்கள் தங்களை ஏதோ "ஆண்டான்" போலவும், தி.மு.கழகத்தை "அடிமை" போலவும் எண்ணிக் கொண்டு கூட்டங்களிலே விமர்சிக்கத் தொடங்கினர். முதலமைச்சர் பதவி யாருக்கு என்று கூறியதால்தான் தோல்வி ஏற்பட்டது என்றும் முதல்வர் பதவி காங்கிரசுக்கு என்று அறிவித்திருந்தால் மகத்தான வெற்றி கிடைத்திருக்கும் என்பதைப் போலவும் பேசினார்கள்.
மேலும் செய்தியாளர்களிடம் ஒரு முறை பேசும்போது, எம்.பி.சுப்பிரமணியம் ஆகஸ்ட் 18ந் தேதியன்று இந்திரா காங்கிரஸ் தலைவர்கள் கூடித் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டு உண்டா என்பதுபற்றி ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார். அதற்குத் சில நாட்கள் முன்பு தமிழகத்திற்கு வந்த மராட்டிய மாநில முதலமைச்சர் அந்துலே தி.மு.கழகக் கூட்டினால்தான் இந்திரா காங்கிரஸ் தோற்றது என்று பேசியிருந்தார்.
அவருடன் அப்போதிருந்த எம்.பி.சுப்பிரமணியம் "தி.மு.க.வின் செல்வாக்கு அவர்கள் ஆட்சியிலே இருந்த ஒன்பது ஆண்டுக்காலம்தான். இனிச் செல்வாக்கு இல்லை" என்று கூறினார். மத்தியிலே உள்ள இந்திரா காங்கிரஸ் தலைவர்களுக்கும் தி.மு.கழகத்திற்கும் இடையே நல்லுறவு இருந்தாலும், ஏன்; தமிழ் நாட்டிலே உள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், பல பிரமுகர்களிடையே நல்ல அபிப்பிராயம் இருந்தபோதிலும், இடையிலே உள்ள சில தலைவர்கள் எப்படியாவது இரண்டு கட்சிகளுக்கிடையே உள்ள உறவை முறித்திட வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையோடு ஒரு சிலரின் தூண்டுதலோடு தொடர்ந்து ஈடுபட்டார்கள்.
12.10.80 அன்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஆர்.வி.சாமிநாதன், "1980 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.கழகத்தோடு கூட்டுச் சேர்ந்து தமிழகத்திலே 22 இடங்ளிலே போட்டியிட்டு 20 இடங்களிலே வெற்றி பெற்றது. நான் சிவகங்கை தொகுதியிலே போட்டியிட்டு வெற்றி பெறுவதற்குப் பாடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும் கூட்டுச் சேர்ந்த தி.மு.க.
மற்றும் தோழமைக் கட்சியினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.கழகத்திற்கு என்ன தொல்லைகள் நேர்ந்தாலும் நான் தலையிட்டு அவர்களுக்கு உதவி செய்வேன். அவ்வாறு தி.மு.கழகத்திற்கு உதவி செய்யத் தவறினால் அது நான் அவர்களுக்குச் செய்யும் பெரிய துரோகமாகும்."
என்றார். ஒரு சில காங்கிரஸ் தலைவர்களுடைய பேச்சுக்கு மாறாக ஆர்.வி.சாமிநாதன் போன்றவர்களுடைய பேச்சுகள் தி.மு.கழகத்திற்குப் பெரும் ஆறுதலாக அப்போது அமைந்தன. அந்தத் தேர்தலிலே ஜனதா கட்சியும் பெரும் தோல்வியைச் சந்தித்ததால், ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த பா.ராமச்சந்திரனும், அவருடைய ஆதரவாளர்களும் இந்திரா காங்கிரஸ் கட்சியோடு இணைய முடிவெடுத்து அதற்கான விழா சென்னையில் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்றது.
அந்த விழாவோடு இணைத்துக் காமராஜருக்கு நினைவு மண்டபம் கட்ட முடிவெடுத்து, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இணைக்கப்பட்டு பிரதமர் இந்திரா காந்தியை அந்த விழாவிலே கலந்துகொள்ள அழைத்திருந்தனர். முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் தலைமையிலே நடைபெற்ற அந்த விழாவிலே பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டு காமராஜர் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார். அந்த விழாவிற்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தியை விமான நிலையத்தில் தி.மு.கழகத்தின் சார்பில் நானும், பேராசிரியரும் வரவேற்றோம்.
ஜனதா கட்சியிலிருந்து பா.ராமச்சந்திரனும் அவாது ஆதரவாளர்களும் இந்திரா காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்ததைப் போலவே முன்பு இந்திரா காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சரவையிலே நிதி அமைச்சராக இருந்தவரும் - 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு அந்தக் கட்சியிலிருந்து விலகி அர்ஸ் காங்கிரஸ் கட்சியிலே இருந்தவரும் பின்பு சரண்சிங் அமைச்சரவையிலே இராணுவ அமைச்சராக ஆறு மாத காலம் பணியாற்றியவரும் 1980 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அர்ஸ் காங்கிரஸ் கட்சி தோற்ற பிறகு அந்தக் கட்சியிலிருந்தும் விலகி எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்து வந்த சி.சுப்பிரமணியம் அவர்களும் கவர்னர் மாளிகையிலே பிரதமர் இந்திராவைச் சந்தித்துப் பேசினார்.
சிலநாட்கள் கழித்து டெல்லி சென்று அங்கும் பிரதமரைச் சந்தித்துப் பேசிய பின் இந்திரா காங்கிரசிலே தன்னை இணைத்துக் கொண்டார். 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியிலே ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜனதா கட்சி ஆதரவாளரான பிரபுதாஸ் பட்வாரி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். 1980 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி தோற்று இந்திரா காங்கிரஸ் வெற்றிபெற்ற பிறகு ஆளுநர் பதவியைவிட்டு பட்வாரி தானாக விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் விலகவில்லை. பிறகு அவரை ராஜினாமா செய்யும்படி மத்திய அரசு கோரியும் பட்வாரி அதற்கு மறுத்து வந்தார். இதன் காரணமாக 80 ஆம் அண்டு அக்டோபர் இறுதியில் ஆளுநர் பதவியை விட்டு பட்வாரியை விலக்கிக் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்தார். அவருக்குப் பதிலாக மராட்டிய ஆளுநராக இருந்த சாதிக் அலி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் தமிழகம் வந்து பதவியேற்கும் வரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.
இஸ்மாயில் அவர்கள் தற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்றார். தேர்தலிலே தோல்வியுற்ற பிறகு தி.மு.கழகம் அதையே எண்ணிக் கொண்டிராமல் தொடர்ந்து எப்போதும்போல் மக்கள் பணியிலே நாட்டம் செலுத்தியது. அந்த வகையிலேதான் மதுரையிலே இளைஞர் அணி தொடக்கவிழா, தொடர்ந்து மதுரையிலும் சென்னையிலும் கோவையிலும் இளைஞர் அணி தொடக்க விழாக்களும் அந்த அணி செயல்படுவதற்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டன. 1980 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 20 ஆம் நாள் மதுரை ஜான்சிராணி பூங்கா திடலில் தி.மு.கழகத்தின் இளைஞர் அணி தொடக்க விழா நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் எஸ்.எஸ்.தென்னரசு, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், துரைமுருகன், தா.கிருஷ்ணன், காவேரிமணியம், தங்கபாண்டியன், வை.கோபால்சாமி, க.சுப்பு, பொன். முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் பேசும்போது சில நாட்களுக்கு முன் நான் முரசொலியில் எழுதிய "என்னுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன" என்ற கடிதத்தைப் பற்றிக் குறிப்பிட்டு ஏன் அவ்வாறு எழுதினீர்கள் என்று மனம் வருந்திப் பேசினார்.
அவரைத் தொடர்நது பேசிய கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் வை.கோபால்சாமி அதைப்பற்றிக் குறிப்பிட்டு: "தலைவர் அவர்களே" உங்கள் கடிதத்தில் - கூடவே இருந்து குழிபறிப்போர
்- குத்தீட்டி கொண்டு முதுகிலே குத்துவோர் நரிக்குணம் படைத்தோர்- நயவஞ்சகம் கொண்டோர்- அசூயைக்காரர் இவர்கள் மத்தியில் வாழுவதைவிட முடிவு எவ்வளவோ மேல் என்று எழுதியிருக்கிறீர்கள்; கூடவே இருந்து குழிபறிப்போரை நீங்கள் லட்சியம் செய்ய வேண்டியது அவசியம்தானா? உங்களுக்காக குருதியைக் கொட்டுவதற்கு ஒரு பெரும் கூட்டம் காத்திருக்கிறதே அதை ஏன் நீங்கள் நினைக்கவில்லை? நயவஞ்சகம் கொண்டோர் நரிக்குணம் படைத்தோர் நாட்டிலே எந்த இயக்கத்திலும் இருக்கலாம்.
ஒரு விபீஷணன் உருவாகுவதற்காக அதை உங்களுடைய பேனா லட்சியம் செய்கிறது என்று சொன்னால் ஒரு லட்சம் இந்திரஜித்துகள் உங்கள் பின்னால் அணி திரண்டு இருப்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்! ஒரு எட்டப்பன் உருவாகலாம். பல நூறு ஆயிரம் ஊமைத் துரைகள் உங்களுக்குப் பின்னாலே திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பின்னாலே இலட்சியத்தைக் காப்பதற்காக இருக்கிறார்கள்" என்று பேசினார்.
யார் பேசியது என்பது முக்கியமல்ல; என்ன பேசினார் என்பது தான் முக்கியம்! இளைஞர் அணி தொடக்க விழாவினைத் தொடர்ந்து திருச்சி மாநகரிலே கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றுப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்துத் திருநெல்வேலியிலே ஆகஸ்ட் திங்கள் 23,24 ஆகிய நாட்களிலே நெல்லை மாவட்ட தி.மு.கழக ஆறாவது மாநாடு நடைபெற்றது. 23 ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கிய அந்த ஊர்வலம் பிற்பகல் மூன்று மணி அளவில்தான் மாநாட்டுத் திடலை அடைந்தது.
மாநாட்டுத் திடலின் முகப்பில் கடையநல்லூர் சுப்பையா நினைவுக் கம்பத்தில் திருமதி சற்குணம் கொடியினை ஏற்றினார். பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிட புதுவை டி.ராமச்சந்திரன் மாநாட்- டினைத் திறந்துவைத்தார். பேரறிஞர் அண்ணாவின் படத்தை நாஞ்சிலார் திறந்து வைத்தார். நெல்லை மாவட்டக் கழகச் செயலாளர் தூத்துக்குடி இரா.கிருஷ்ணன் வரவேற்புரையாற்றிட கா.மு.கதிரவன் மாநாட்டுத் தலைவரை முன்மொழிய, நெல்லை தம்பிதுரை, வழக்கறிஞர் ஏ.எல்.சுப்பிரமணியம், அ.திராவிடமணி, பத்தமடை பரமசிவம், நெல்லை இ.நம்பி, எம்.சங்கரலிங்கம், சி.டி.
தண்டபாணி மு. கண்ணப்பன், எஸ்.எஸ்.தென்னரசு ஆகியோர் வழிமொழிந்து உரையாற்றினர். மாநாட்டின் இரண்டாவது நாளன்று படத்திறப்பு நிகழ்ச்சிகளும் பல்வேறு தலைப்புகளின் கீழ்க்கழகத்தின் முன்னணித் தலைவர்களும் உரையாற்றியபின் கழகப் பொருளாளர், பொதுச் செயலாளர் உரையாற்றி இறுதியில் நான் உரையாற்றினேன். மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் மாவீரன் நெல்லை மஸ்தான் நன்றி கூறினார். நன்கொடை, நுழைவுக் கட்டணம் மூலமாக அப்போது ஒன்றரை இலட்ச ரூபாய் அந்த மாநாட்டிலே தலைமைக் கழகத்திற்குக் கிடைத்தது.
தமிழகத்தின் மூத்த கிழமையேடுகளில் ஒன்றான ஆனந்த விகடன் தனது பொன் விழாவினை நவம்பர் திங்கள் 7,8,9 ஆகிய நாட்களில் சென்னையிலே கொண்டாடியது. தொடக்க விழா, பட்டிமன்றம், கவியரங்கம், பரிசளிப்பு விழா என்றெல்லாம் தனித்தனியாகப் பிரித்து மூன்று நாட்கள் ஒவ்வொரு விழாவும், ஒவ்வொரு ஒவ்வொரு இடத்திலே என்று ஏற்பாடு செய்து, விழாவிலும் கலந்து கொள்ளத் தனித்தனியாக்ச் சான்றோர்களையும், அரசியல்வாதி களையும், கதையாசிரியர்களையும் அழைத்திருந்தது.
பொன்விழாவின் தொடக்க விழாவினை நடத்திட முதலமைச்சர் பொறுப்பிலே இருந்த எம்.ஜி.ஆரை அழைத்து அவரும் நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள ஒப்புதல் அளித்து அழைப்பிதழிலும் சேர்த்திருந்தார்கள். "சமுதாயப் பார்வையில்" என்ற தலைப்பில் கவியரங்கம் என்னுடைய தலைமையிலே நடைபெற்றது. அப்போது ஆனந்தவிகடன் பற்றி நான் எழுதிய சில வரிகள்... ஆனந்த விகடனுக்கு அகவை ஐம்பதாமே?-இல்லை! அதிலும் ஒர் திருத்தமுண்டு; ஐம்பத்திரண்டே உண்மை!
வாய்மையுள்ள விகடனாரே! வம்புக்குத் தான் கேட்கிறேன்! வயதை நீர் குறைத்துச் சொல்வதாலே என்ன இலாபம்?-இன்னும் வாய்ப்புத் தேடி அலைகின்றீரோ திரையுலகில்?- உமக்கு வயது முதிர முதிரத் தான் வைரம் பாய்கின்றது. வண்ணமிகு பாத்திரங்களேற்று எண்ணத்தைப் பொழிகின்றீர் தண்ணிலவு, தகத் தகாயச் சூரியன், விண்மீன்கள் இவை, தம் வயது கோடி கோடி ஆண்டென்று கூறுவதைக் கேளீரோ? அவற்றைப் போல் நீவீர் வாழ்க பல்லாண்டு!... ★★★ ஆலமரத்துக்கு விழுது போன்றார் பாலசுப்பிரணியன் பரிவுடன் என்பால் விகடன் பொன்விழா வீறுடன் நடைபெற வீற்றிடுக தலைவராய் கவியரங்கிற் கென்றார்...
ஒரு பதவியில் இருந்தால்தான் உனை மதிப்பேன் என்றில்லாமல் தெருப்புழுதியில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் குன்றாதென்று கருப்பும் சிவப்பும் கலந்த என்னைக் கனிவுடன் அழைத்தார்... விருப்பு வெறுப்பிலா பாலுவின் பண்பை விளக்கொளி என்பேன்; வியந்து போற்றுவேன்! ★★★ அதிர்ச்சி அடையாதீர்! ஆனந்த விகடனை நான் "காந்தாரி" என்பேன்... அம்மிக்குழவி இல்லாமலே இவள் நூறு பிள்ளைகளைப் பெற்றவள்! வயிற்றெரிச்சலில் பிறக்காத காரணத்தால் அத்தனை பிள்ளைகளும் தனித்தனி ஏடுகள் நடத்தும் தகுதியைப் பெற்றன!
கனம் சாஸ்திரிகள்-கனம் பிள்ளைவாள்- கனம் மந்திரியார் என்பதுபோல்- "கனம்" என்ற பெருமை விகடனுக்கு இல்லவே இல்லை... காரணம் யாரும் விகடனை எடை போட்டு நிறுக்க பழைய பேப்பர் கடைக்கு அனுப்புவதே இல்லை 'பயிண்டு' செய்து பத்திரமாய்ப் பாதுகாக்கும்போது, 'பவுண்டு'கிலோ கணக்கென்ற 'கனம்'தான் ஏது? பெண்களின் கைகளில் இருக்கும் போது-அவர்கள் கண்களுக்கு 'விகடன்' ஓர் காதலன்- விட்டுப்பிரிய மனமின்றி அவர்தம் பட்டுப் புடவையோடு அணைத்திடுவார்!
ஆண்களுக்கோ 'விகடன்' ஓர் ஆரணங்கு; அட்டையெனும் "ஜாக்கெட்" அழகிலேயே அவர்கள் மயங்கிடுவர்! 'விகடன்' இன்று மாப்பிள்ளை! அதனால்; வேடிக்கை நலுங்கெல்லாம் வாடிக்கை! வீணாகக் கோபிக்கக் கூடாது! 'விகடன்' ஒரு டாக்டர் இவன் அருகே இருந்தால்-எல்லா நோயாளிக்கும் ஒரு ஆறுதல்! 'விகடன்' ஒரு டாக்டர் இவன் அருகே இருந்தால்-எல்லா நோயாளிக்கும் ஒரு ஆறுதல்! 'விகடன்' ஓர் ஊர்சுற்றி- எல்லா ரயில்களிலும் பஸ்களிலும் இவனைக் காணலாம்!
விகடன் பொன்விழாத் தொடக்க விழா நிகழ்ச்சியிலே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்தவாறு கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக விழாவிலே பங்கேற்ற அமைச்சர் வட ஆர்க்காடு மாவட்டத்தில் வறட்சிப்பகுதிகளைக் காண விரைந்து சென்றிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் வடஆர்க்காடு வேலூர் நகரில் முதலமைச்சர் வருவார் என மாவட்ட ஆட்சித்தலைவரும் அதிகாரிகளும் மலர் மாலைகளோடு பல மணி நேரம் காத்திருந்ததாகவும், முதலமைச்சர் வரவில்லை என்றும் மறுநாள் ஏடுகளிலே செய்தி!
கவியரங்க நிகழ்ச்சியிலே கலந்து கொண்ட நான் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன். பொன்விழாவினையொட்டி முன்னதாக ஆனந்த விகடன் நடத்திய "சிறந்த சரித்திர நாவல்" போட்டிக்கு நடுவர்களில் ஒருவராகவும் இருந்து கவிஞர் மு.மேத்தா எழுதிய "சோழநிலா" புதினத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினையும் பெற்றேன்.
