நெஞ்சுக்கு நீதி
சட்டமன்றத் தேர்தலும் மறைமுகச் · 269 / 391
53. சட்டமன்றத் தேர்தலும் மறைமுகச் சதிகளும்! சட்டமன்றத் தேர்தலுக்காக டெல்லியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையையொட்டி ஏற்பட்ட உடன்பாட்டின்படி தொகுதி பங்கீடு பற்றிய கலந்துரையாடல் ஏப்ரல் முதல் வாரத்திலே சென்னையில் தொடங்கியது. அதில் கழகத்தின் சார்பில் நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் சாதிக்கும் கலந்து கொண்டோம். இந்திரா காங்கிரஸ் கட்சிச் சார்பில் எம்.பி.சுப்பிரமணியம், மூப்பனார், சிவாஜிகணேசன், இளைய பெருமாள், கே.டி.
கோசல்ராம், கே.ராஜாராம் நாயுடு, ஏ.பி.சி. வீரபாகு, ஹாஜா ஷெரீப், காளியண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதற்கிடையில் ஜனதா கட்சி மேலும் ஒரு பிளவுக்கு உள்ளாக வேண்டியதாயிற்று. ஜனதா கட்சியிலே இருந்த முன்னாள் ஜன சங்கத்தினர் பிரிந்து, "பாரதீய ஜனதா" என்று ஒரு கட்சியை ஆரம்பித்து, அதன் தலைவராக வாஜ்பேயி அவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
பாபு ஜெகஜீவன்ராம் அவர்களும், அவருடைய ஆதரவாளர்களும் ஜனதா கட்சியை விட்டு வெளியேறி ஜனதா (ஜெ) என்ற புதுக்கட்சியைத் தொடங்கினர். ஒரு மாத காலமே நீடித்த இந்தக்கட்சி பின்னர் தேவராஜ் அர்ஸ் தலைமையிலே இயங்கி வந்த அர்ஸ் காங்கிரஸ் கட்சியோடு இணைந்தது. ஜனதா கட்சியிலே பிளவை முதன் முதலாக உண்டாக்கி, மக்கள் கட்சி என்ற பெயரிலே புதிய கட்சியை ஏற்படுத்தி, மொரார்ஜி தேசாயின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரிதும் காரணமாக இருந்த சரண்சிங்கும், ராஜ்நாராயணனும் நீண்ட காலத்திற்கு ஒற்றுமையோடு இருக்கவில்லை.
அவர்களுக்கிடையிலேயும் பிளவு ஏற்பட்டு, ராஜ்நாராயணன் தனியாகப் பிரிந்து, சரண்சிங்கின் பிறந்த நாளுக்காகத் தரப்பட்ட 75 இலட்சம் ரூபாய் நிதி எங்கே என்று சரண்சிங்கைக் கேட்டு அறிக்கை விட்டதோடு, மக்கள்கட்சி அலுவலகத்தையும் கைப்பற்றுவதற்காக அடிதடி முயற்சிகளிலும் ஈடுபட்டார். மற்ற கட்சிகளிடையே இந்த நிலைமை இருந்தபோது, தி.மு.கழகமும், இந்திரா காங்கிரசும் சென்னையிலே அன்றாடம் பேச்சுவார்த்தை நடத்தி எந்தெந்தத் தொகுதியை எந்தக்கட்சி எடுத்துக் கொள்வது என்பது பற்றிய முடிவினை எடுத்துக் கொண்டிருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோதே சிலர் டெல்லி சென்று இந்திரா காந்தியிடம் இரண்டு கட்சிகளில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும் கட்சிக்கே முதல்வர் பதவி தர வேண்டுமென்று வலியுறுத்திய காரணத்தாலோ என்னவோ, ஏப்ரல் 10ஆம் தேதியன்று டெல்லியிலிருந்து பி.டி.ஐ. செய்தி நிறுவனம், மார்ச் 1ஆம் தேதி இந்திராகாந்தியும், கருணாநிதியும் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடுகள் (1) தி.மு.க.
இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் முதல் மந்திரி பதவி தி.மு.கழகத்திற்குக் கொடுக்கப்படும். (2) இரு கட்சிகளும் சமமான இடங்களில் போட்டியிடும்; என்று அறிவிக்கப்பட்டு, அனைத்து ஏடுகளும் அந்தச் செய்தியினை வெளியிட்டிருந்தன. நிருபர்கள் அந்தச் செய்தியையொட்டி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று என்னைக் கேட்டபோது, "நான் இதுபற்றி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை" என்று கூறினேன்.
தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.பி. சுப்பிரமணியத்திடம் நிருபர்கள் இதுபற்றிக் கேட்டபோது, "இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறினார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளைக் கவனிக்க காங்கிரஸ் மேல் இடத்தால் ராம்கோபால் ரெட்டி என்பவர் பார்வையாளராக அனுப்பி வைக்கப்பட்டு, தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைகளில் சில நாட்களாகக் கலந்து கொண்டிருந்தார்.
அவரை நிருபர்கள் சந்தித்த போது, "முதல் மந்திரி பதவி பற்றி முடிவு செய்ய இன்னும் நேரம் வரவில்லை. தேர்தல் முடிந்த பிறகுதான் முதல் அமைச்சர் யார் என்று முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார். தமிழகத்தைச் சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்களின் தூண்டுதலின் பேரில் அவர் இவ்வாறு கூறியது கழகத் தோழர்களிடம் ஒரு கொந்தளிப்பையும், தமிழ்நாட்டு மக்களிடம் ஒரு ஐயத்தையும் ஏற்படுத்தப் பெரும் காரணமாக அமைந்தது.
ராம்கோபால் ரெட்டியின் பேட்டிக்குப்பின் நிருபர்கள் என்னைச் சந்தித்து, டெல்லி செய்தி உண்மையா? ராம்கோபால் ரெட்டி கூறுவது உண்மையா? என்பதை நீங்கள் அவசியம் தெளிவுபடுத்த வேண்டுமென்று வலியுறுத்தவே, "மார்ச் முதல் தேதியன்று நான் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்த போதே தமிழக சட்டமன்றத் தேர்தலில் சமமாகத் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வதென்றும், கூட்டணி ஆட்சிக்குத் தலைவராகக் கருணாநிதி இருப்பதென்றும் அன்றே முடிவானதுதான்" என்று தெளிவுபடுத்தினேன்.
தமிழ்நாட்டிற்கு வருகைதந்த மத்தியத் துணை அமைச்சர் வெங்கட சுப்பையா வேலூரில் நிருபர்களிடம் கூறும்போது "பிரதமர் இந்திரா காந்தியும், இந்திரா காங்கிரஸ் பாராளுமன்றக் குழுவும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் டெல்லியில் கூடி முதலமைச்சர் பதவி யாருக்கு என்று இறுதி முடிவு செய்வார்கள்."
என்று கூறினார். டெல்லியிலே இந்திரா காந்தியோடு உடன்பாடு ஏற்பட்டபோது உடன் இருந்த மத்திய நிதி அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் 14.4.1980 அன்று சென்னை வந்திருந்தபோது நிருபர்கள் அவரைச் சந்தித்து இதுகுறித்து விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் "இது தேவையற்ற விவாதம். இப்போது விவாதிக்கத் தேவையில்லாத பிரச்சினை. இந்திராகாந்தி கருணாநிதியிடம் என்ன சொன்னார் என்பது எம்.பி.சுப்பிரமணியத்திற்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஜனநாயக முறைப்படி கூட்டணிக்கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தலைவரைத் தேர்ந்தெடுக்கும். தமிழ்நாட்டின் தலைசிறந்த முன்னணி அரசியல்வாதிகளில் கருணாநிதியும் ஒருவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அவர் ஒரு முதிர்ந்த அரசியல்வாதி. ஏற்கெனவே முதலமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார். அவர் முதலமைச்சராக எல்லாத் தகுதியும் படைத்தவர். இந்தப் பதவிக்குத் தகுதி படைத்த வேறு சிலரும் இருக்கலாம். இந்த விஷயத்தில் எந்தவித முரண்பாடும் இருத்தல் ஆகாது.
தி.மு.க. வோடு இந்திரா காங்கிரஸ் கொண்டுள்ள உடன்பாடு உறுதியானது. இந்திரா காந்தி எப்போதுமே தனது உறுதிமொழியை மீறமாட்டார். பல்வேறு காரியங்களில் தனக்கு சற்று உடன்பாடு இல்லா விட்டாலும்கூட, இந்திரா காந்தியின் முடிவுகளைக் கருணாநிதி பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதனால் இந்திரா காந்திக்கு அவர் மீது தனி மதிப்பு ஏற்பட்டுள்ளது. யார் முதலமைச்சர் என்பது தேர்தல் வெற்றிக்குப் பிறகு முடிவாக வேண்டிய விஷயம்.
எனவே தேர்தலுக்கு முன்பே யார் முதலமைச்சர் என்பதைப் பிரச்சினையாக்க வேண்டியதில்லை. இன்று நான் கருணாநிதியைச் சந்திக்கவில்லை. தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடப்பதால் சந்திக்க முடியவில்லை. டெலிபோனில் பேசினோம். நான் இந்த மாதம் 17ஆம் தேதி சென்னை வரும்போது சந்திப்பேன். இந்தப் பிரச்சினைக்கு இதோடு முடிவு கட்டுவது நல்லது" என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறிய ஆர். வெங்கட்ராமன் அன்றைய தினமே நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவிலே பேசும்போது, "முதலமைச்சராக ஜனநாயக நாட்டில் யாரும் வரலாம். ஆனால் எங்கள் கூட்டணியில் அவர்தான் முதலமைச்சர் என்று இப்போதே கூறுவது இருகட்சித் தொண்டர்களின் உறவையும் பிரிக்க நடக்கும் முயற்சியாக அமையக்கூடாது. யார் முதலமைச்சர் என்று இப்போது எப்படிச் சொல்ல முடியும்? சரி சமமாகப் போட்டியிடுகிறோம்.
யார் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவார்களோ அந்தக்கட்சி எம்.எல்.ஏக்களுக்கே அந்த உரிமை இருக்கிறது. எனவே தேர்தலுக்குப் பின்தான் அதுபற்றி முடிவாகும்." என்று பேசி அதுவும் ஏடுகளிலே வெளிவந்தது. தேர்தலுக்கு முன்னால் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் காங்கிரஸ் கட்சி தேவையில்லாமல் இப்படியொரு பிரச்சினையைச் கிளப்பி ஒவ்வொருவரும் ஒரு கருத்தைக் கூறியதால், தி.மு.கழகத்தின் ஆட்சி மன்றக்குழுக் கூடி ஆலோசித்தது.
கழகத்தின் முன்னணியினர் கூட்டணியின் வெற்றியை இந்தக் கருத்துக்கள் பெரிதும் பாதிக்கும் என்றும், காங்கிரசார் ஒற்றுமையோடு செயல் படமாட்டார்கள் என்றும், ஆர்.வெங்கட்ராமன் அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சிச் சார்பில் முதல்வர் பதவி என்பதால், தி.மு. கழகம் பெரும்பான்மையான இடங்களிலே வெற்றிபெற காங்கிரசார் ஒத்துழைப்பு நல்கமாட்டார்கள் என்றும், நம்முடைய தோழர்கள் மத்தியிலே இந்தப் பேச்சு பெரிதும் பாதிக்கும் என்றும் கூறினார்கள்.
முதலமைச்சர் பதவி பற்றிக் குழப்பமான ஒரு நிலையிலே தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தையைத் தொடருவதிலே பயனில்லை என்று கூறிப் பேச்சுவார்த்தையைக் காங்கிரஸ் கட்சியோடு தி.மு.கழகம் நிறுத்திக் கொண்டது. நிருபர்கள் என்னிடம் முதலமைச்சர் பதவி பற்றி டெல்லி சென்ற இந்திராகாந்தியோடு பேசுவீர்களா என்று கேட்டதற்கு, முதலமைச்சர் பதவி எனக்கோ, தி.மு. கழகத்திற்கோ வேண்டுமென்று கேட்பதற்காக நான் டெல்லி போகவேண்டிய அவசியமில்லை.
மார்ச் மாதம் 1ஆம் தேதி இந்திரா காந்தியுடன் பேசி முடிவெடுக்கப்பட்ட விஷயம் இது. இதைப் பற்றித் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பிரதமரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என்று கூறிவிட்டேன். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்றும், மே 28-ஆம் தேதி 114 தொகுதிகளுக்கும், மே 31-ஆம் தேதி 120 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்குமென்றும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது.
வேட்பு மனுதாக்கல் செய்ய ஒரு வாரமே இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் போக்கு, கழகத்தைப் பெரிதும் பாதித்தது. மேலும் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவினர் தங்களுக்குத் தனியாக 30 இடங்கள் வேண்டுமென்றும், சஞ்சய் காந்தியை டெல்லி சென்று சந்திக்கப் போவதாகவும் அறிக்கை விட்டனர். தி.மு.கழகம் காங்கிரஸ் கட்சியோடு பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டதால், எம்.பி. சுப்பிரமணியமும், மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களும் டெல்லி சென்று பிரதமரிடம் விவரம் கேட்டார்கள்.
அப்போது அவர்களிடம் இந்திராகாந்தி, "தி.மு.க., இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் முதலமைச்சர் பதவி தி.மு.கழகத்திற்குக் கொடுக்கப்பட வேண்டும். மார்ச் 1ஆம் தேதி கருணாநிதியுடன் நான் நடத்திய பேச்சின்போது இவ்வாறு உடன்பாடு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.கழகத்தினரும் இந்திரா காங்கிரசாரும் ஒற்றுமையோடு செயலாற்றி வெற்றி தேடித் தந்தனர். அதே போன்ற உணர்வுடன் சட்டசபை தேர்தலிலும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்."
என்று கூறியதாக அனைத்து ஏடுகளும் செய்தி வெளியிட்டன. இந்திராகாந்தி இவ்வாறு கூறியது பற்றித் தொலைபேசி மூலம் எனக்கும் தெரிவித்தனர். இந்திரா காந்தியுடன் மார்ச் 1ஆம் தேதி இந்த முடிவை எடுத்தபோது உடனிருந்த ஆர்.வெங்கட்ராமன் முதலிலேயே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களிடம் தனிப்பட்ட முறையிலாவது இதனை உறுதிப்படுத்தியிருந்தால், பேச்சுவார்த்தையும் தடைப்பட்டிருக்காது. தேவையில்லாமல் தேர்தல் முடிவையே பாதிக்கத்தக்க வகையில் ஒரு நிலைமையும் ஏற்பட்டிருக்காது.
இந்திரா காந்தியின் விளக்கத்திற்குப் பிறகு நான் விடுத்த அறிக்கையிலே "கலந்து பேசி எடுக்கப்படும் முடிவுகளில் இந்திராகாந்தி தெளிவாகவும், திட்டவட்டமாகவும் இருப்பார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும். நமது கூட்டணிக் கட்சிகளின் உறவைக்கெடுக்க யார் எத்தகைய சூழ்ச்சியில் ஈடுபட்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத் தேர்தலில் காட்டிய அதே ஆர்வத்துடனும் நட்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் சட்டமன்றத் தேர்தலிலும் பணியாற்றித் தமிழ் நாட்டின் நிலையான நல்வாழ்விற்கு வழிவகுக்க நாம் சூளுரை மேற்கொள்ள வேண்டும்."
என்று கேட்டுக் கொண்டேன். இதே நேரத்தில் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு கொள்வது பற்றி ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் ஜனதா கட்சியின் தலைவர் பா.ராமச்சந்திரன் கூறும் போது, ஜனதா கட்சிச் சார்பில் எம்.ஜி.ஆரிடம் முதலில் 60 தொகுதிகள் கேட்டதாகவும், பின்னர் 46 தொகுதிகளாவது தருமாறு கேட்டதாகவும், ஆனால் 26 தொகுதிகளை மட்டுமே தர முடியுமென்று எம்.ஜி.ஆர். கூறி விட்டதால் ஜனதா கட்சி 44 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என்றும் கூறினார்.
25.4.80 அன்று தி.மு.க.விற்கும் இந்திரா காங்கிரசிற்கும் எந்தெந்தத் தொகுதிகள் என்று முடிவு செய்து அறிவித்தோம். அந்த முடிவு எடுப்பதற்கு அடிப்படையாக முதலில் 234 தொகுதிகளில் முஸ்லீம் லீக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என ஒதுக்கிவிட்டுப் பிறகுதான் எஞ்சியுள்ள தொகுதிகளைப் பிரிக்க வேண்டுமென நான் வற்புறுத்தினேன். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், இ.காங்கிரசுக்கும் உடன்பாடு ஏற்பட வேண்டுமென்பதில் தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் சமது அவர்களும் அதிக அக்கறை காட்டி அதற்காகப் பணியாற்றியவர் என்பதை நான் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
எனவே முதலில் அவருடன் கலந்து பேசி முஸ்லீம் லீக் கட்சிக்கான சட்டமன்றத் தொகுதிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதன்படி, முஸ்லீம் லீக் கட்சிக்கு எட்டு இடங்கள் போக, மீதமுள்ள 226 இடங்களில் தி.மு.க.விற்கு 113 இடங்களும், காங்கிரசிற்கு 113 இடங்களும் என்று ஒதுக்கப்பட்டு, தி.மு.க.வும், காங்கிரசும் தங்களுக்குரிய இடங்களிலேயிருந்து அவரவர்களுடைய தோழமைக்கட்சிகளுக்கு நான்கு இடங்கள் வீதம் ஒதுக்கிட வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது.
அந்த வகையிலே தேசிய பார்வர்டு பிளாக் கட்சிக்கு 2 இடங்களும், பசும்பொன் பார்வாடு பிளாக் கட்சிக்கு 2 இடங்களும், உழைப்பாளர் முன்னேற்றக் கட்சிக்கு 2 இடங்களும் இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒரு இடமும், கிறித்தவ ஜனநாயக முன்னணி கட்சிக்கு ஒரு இடமும் என்று பிரித்துக் கொள்ளப்பட்டன. 27.4.80 அன்று சென்னை வடபழனி சிங்காரவேலர் திடலில் நடைபெற்ற தி.மு.க. சிறப்பு மாநாட்டில் தி.மு.கழக வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டேன்.
ஆனால் நான் போட்டியிட்ட அண்ணாநகர் பற்றி முதல் பட்டியலில் நான் என்னுடைய பெயரை அறிவிக்கவில்லை. காரணம் என் மனம் வேதனையான நிலையிலே இருந்ததுதான். இரண்டு திங்கள்களுக்கு முன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகமும் இந்திரா காங்கிரஸ் கட்சியும் கூட்டுச் சேர்ந்து மகத்தான வெற்றிபெற்ற காரணத்தினால் இந்தத் தேர்தலிலும் அந்தக் கூட்டணியே வெற்றிபெறும் என்று எதிர்பார்த்துக் கழகத்தின் சார்பிலே ஏராளமானவர்கள், கழகத்திற்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்தவர்கள், நீண்டகாலம் உழைத்தவர்கள் எல்லாம் வாய்ப்புக் கேட்டிருந்தார்கள்.
மேலும் அ.தி.மு.க.விலே முன்னணித் தலைவர்களாக இருந்து விட்டு, அந்தக் கட்சியை உதறிவிட்டுத் தி.மு.கழகத்திலே தங்களை இணைத்துக் கொண்டவர்களும் வாய்ப்புக் கேட்டிருந்தார்கள். தி.மு.கழகம் போட்டியிடும் தொகுதிகள் 109 என்ற அளவில் எண்ணிக்கை குறைந்த நிலையிலே அந்தப் பட்டியலிலே யாரைச் சேர்ப்பது, யாரை விடுவது என்பது பெரும் மனக்குழப்பத்
தை ஏற்படுத்தியது. வாய்ப்பினைக் கேட்டவர்களில் பலர் அந்தக் கூட்டத்திலே என் கண் முன்னால் தெரிந்தார்கள். அவர்களின் பெயரைப் படிக்காவிட்டால் அவர்களின் மனம் என்ன பாடுபடும் என்பதையெல்லாம் மேடையிலிருந்து நான் எண்ணிப்பார்த்தபோது, என் பெயரை அன்றைய தினம் என்னால் படிக்க முடியவில்லை. கழகத்திற்காகப் பாடுபட்ட இவர்களின் மனத்தை நோகச் செய்துவிட்டு, இந்தத் தேர்தலிலே நாம் நின்று வெற்றிபெற்று முதல்வராக ஆக வேண்டுமா என்று எண்ணினேன்.
படிக்கும் போது என் பெயரைப் படிக்காததால், கூட்டத்திலே இருந்த தொண்டர்கள் "அண்ணா நகர், அண்ணா நகர்" என்று கூச்சலை எழுப்பினர். அதற்கு நான் நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் அந்தத் தொகுதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினேன். கூட்டத்திற்குப் பிறகு, அதிர்ச்சியுற்ற பொதுச் செயலாளரும், முன்னணியினரும் வியப்போடு என்னைக்கேட்டு, வலியுறுத்திய பின்னர் என் பெயர் கழகத்தின் இரண்டாவது பட்டியலிலேத் தான் இடம் பெற்றது.
அ.தி.மு.க. கூட்டணியைப் பொருத்தவரை, அ.தி.மு.க. 168 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 12 இடங்களிலும், காமராஜ் காங்கிரஸ் 7 இடங்களிலும் மற்ற இடங்களிலே அவர்களுடைய ஏனைய தோழமைக் கட்சிகளும் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலிலோ பெரும் குழப்பமே ஏற்பட்டது. வாய்ப்புத் தரப்படாதவர்கள் எல்லாம் வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டனர்.
அவர்களை எல்லாம் சமாதானப்படுத்த ஆர்.வெங்கட்ராமனும், ஸ்டீபனும் சென்னை வந்து பெரும் முயற்சியிலே ஈடுபட்டனர். அறிவிக்கப்பட்ட பிறகு பல தொகுதிகளிலே வேட்பாளர்கள் மாற்றப்பட்டதால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு என்று அறிவிக்கப்பட்ட தொகுதிகள் ஒவ்வொன்றிலும் காங்கிரஸ் கட்சிச் சார்பிலே மூன்று நான்கு பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். காங்கிரஸ் கட்சி அலுவலகமே போர்க்களமாக இருந்தது.
கட்சியின் தலைவர் எம்.பி. சுப்பிரமணியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விமான நிலையத்திலும் அவர் டெல்லியிலிருந்து திரும்பும்போது கறுப்புக் கொடி காட்டப்பட்டது. சிறுபான்மை சமுதாயத்தினர் அறவே புறக்கணிக்கப்பட்டு விட்டதாகவும், நீண்டநாள் காங்கிரஸ்காரர்களைப் புறக்கணித்துவிட்டு, கட்சிமாறிகளுக்கும், பதவி சுகம் தேடி வந்தவர்களுக்கும் இடம் தந்து விட்டதாகவும் கூறி எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சம்பந்தமாக எழுந்துள்ள காழ்ப்பு நிலை, அதன் காரணமாக காங்கிரஸ்காரர்களிடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு, எதிர்ப்புணர்வு ஆகியவற்றை பிரதமரிடம் எடுத்துச் சொல்லி, கடைசி நிமிடத்திலேனும் ஒரு நல்ல தீர்வு காண்பதற்கும், கட்சி நெருக்கடியான கட்டத்திலே இருந்தபோது கட்சிக்கு விசுவாசமாக இருந்த துரை.ராமசாமி, தென்காசி முத்துச்சாமி கரையாளர் போன்றவர்களுக்கு இடமளிக்கச் செய்வதற்கும் மூப்பனார் டெல்லியிலே இந்திரா காந்தியிடம் பேசி வருகிறார் என்று 'தினமணி' செய்தி வெளியிட்டது. தொலைவில் டெல்லியில் இருந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்குத் தெரியாமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியிலே நடைபெற்ற சம்பவங்கள் அவர்களில் சிலர் உருவாக்கிய குழப்பங்கள் எல்லாம் தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்பதை அப்போதே எனக்குச் சூசகமாக உணர்த்திவிட்டன.
சட்டமன்றத்தில் அதுவரை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக இருந்த துரை. ராமசாமிக்கு இந்திரா காங்கிரஸ் கட்சியிலே இடம் தராத காரணத்தால், கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, அ.தி.மு.க. ஆதரவோடு அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டார். அவர் விலகியதன் காரணமாக ஈரோடு, தாராபுரம், மூவலூர், வெள்ளக்கோவில், காங்கேயம் ஆகிய இடங்களில் வட்டார கமிட்டிகளில் உள்ள எல்லா காங்கிரஸ் உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக இந்திரா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் கட்சி தேர்தல் வேலைகளைப் புறக்கணிப்பது என்று ஒரு மனதாக முடிவெடுத்து ஏடுகளில் செய்தி வெளியிட்டது. தி.மு.கழகத்தைப் பொருத்தவரை 8.5.80 அன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு முறையான தேர்தல் பணிகளிலே ஈடுபட்டது. மே திங்கள் முழுவதும் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அந்த ஒரு மாதமும் என்னுடைய அந்தப் பிரச்சார வேனிலேயே குடியிருந்தேன் என்று கூடச் சொல்லலாம்.
மதியம் கொஞ்சம் தயிர் சாதம். அதையும் ஏதோ ஒரு மரத்தடியிலே நிறுத்தி வேனில் அமர்ந்தபடியோ அல்லது அந்த மரத்தடியிலோ அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, தொடர்ந்து நிகழ்ச்சிகள்தான். ஒவ்வொரு நாளும் விடிந்த பிறகுதான் நிகழ்ச்சிகள் முடியும். அதற்குப் பிறகு ஓய்வு என்ற பெயரால் சுமார் இரண்டு மணி நேரம். அந்த நேரத்திலும் சென்னைக்கும், மற்றும் பல மாவட்டங்களுக்கும் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு செய்யப்பட வேண்டிய காரியங்களைத் தெரிவிப்பதோடு, ஆங்காங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்து தகுந்த ஆலோசனைகளை வழங்கிவிட்டு, தங்கியிருக்கும் மாவட்டக் கழக முன்னணியினர்களை எல்லாம் அழைத்து அவர்களிடம் நிலைமைகளைக் கேட்டறிந்து தகுந்த பதில்களையும் கூறிவிட்டு, மறுநாள் பிரச்சாரத்திற்குப் புறப்படுவேன்.
இடையில் மே திங்கள் 12, 13 ஆகிய நாட்களில் தமிழகத்திலே தேர்தல் சுற்றுப் பயணம் செய்த பிரதமர் இந்திரா காந்தியுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். அந்த சமயத்தில் தமிழகக் காங்கிரசாரின் நடவடிக்கைகளையும் அதனால் தேர்தல் முடிவு பாதிக்கப்படக்கூடும் என்பதையும் அவரிடம் தெரிவித்தேன். இத்தனைக்கும் பிறகு நடைபெற்ற அந்தச் சட்டமன்றத்தேர்தலிலே தி.மு.க. இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறவில்லை.
தி.மு.கழகம் 38 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 30 இடங்களிலும், முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. 17 இடங்களிலும் 17 இடங்களிலும் ஏனைய இடங்களில் அ.தி.மு.க. தோழமைக் கட்சிகளும் வெற்றி பெற்றன. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அணி 92 இலட்சம் வாக்குகளையும், தி.மு.கழகக் கூட்டணி 83 இலட்சம் வாக்குகளையும் பெற்றன. சதவிகித அடிப்படையிலே பார்த்தால்கூட அ.தி.மு.க. கூட்டணிக்கு 49.23 சதவிகிதமும், தி.மு.க.
கூட்டணிக்கு 44.47 சதவிகிதமும் வாக்குகள் கிடைத்தன. அதாவது அந்த அணியினரை விட 4.75 சதவித வாக்குகள்தான் குறைவு. இருந்தாலும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அ.தி.மு.க. தமிழகத்திலே ஆட்சி அமைத்தது.
