நெஞ்சுக்கு நீதி
கை குலுக்கியவாறு கக்கிய நஞ்சு · 268 / 391
52. கை குலுக்கியவாறு கக்கிய நஞ்சு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 9 மணி அளவில் மத்திய அரசின் அமைச்சரவையின் அவசரக் கூட்டம் பிரதமர் தலைமையிலே நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பின்னர், தமிழ்நாடு உட்பட ஒன்பது மாநில அரசுகளைக் கலைப்பது என்று முடிவெடுத்தது. அமைச்சரவையின் முடிவினை மத்திய உள்துறை அமைச்சர் ஜெயில்சிங் குடியரசுத் தலைவரிடம் கொடுத்து ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத் தலைவரின் பிரகடனத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்.
1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் அடுத்த திங்களே அவர்கள் ஒன்பது மாநில அரசுகளின் ஆட்சியைக் கலைத்தார்கள். அதைப்போலவே குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டியார் அவர்கள் இப்போதும் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இல்லாத ஒன்பது மாநில அரசுகளைக் கலைத்துத் தனது பிரகடனத்தை வெளியிட்டார். பி.டி.ஐ., நிருபர்கள் என்னிடம் கருத்துக் கேட்டபோது, "1976-77 இல் இப்படி ஒரு முன்மாதிரியை உருவாக்கியவர்களும் அதை ஆதரித்தவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டிய முடிவுதான் இது" என்று கூறினேன்.
நான் இவ்வாறு கூறியதற்குக் காரணம் 1977 ஆம் ஆண்டு ஜனதா ஆட்சியிலே நடைபெற்ற சம்பவம்தான்! 1977 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்று மத்தியிலே ஆட்சி அமைத்ததையடுத்து ஏப்ரல் திங்களில் 29 ஆம் தேதியன்று மாலையில் மத்திய அமைச்சரவை கூடி மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சியினரால் ஆட்சி செய்யப்பட்டு வந்த ஒன்பது மாநிலச் சட்டப் பேரவைகளை ஜனதா அரசினர் கலைத்தனர்.
மத்திய ஜனதா அரசு இதுபோன்றதொரு நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்று யூகித்து காங்கிரஸ் கட்சி ஆண்ட சிலமாநில அரசுகள் உச்சநீதிமன்றத்திலே தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியதை அடுத்து மத்திய அமைச்சரவை ஒன்பது மாநில அரசுகளைக் கலைக்க முடிவெடுத்தது. ஆனால் அப்போது தற்காலிக குடியரசுத் தலைவராக இருந்த பி.டி.ஜாட்டி ஒன்பது மாநில அரசுகளையும் ஒட்டுமொத்தமாகக் கலைப்பது பற்றிய அமைச்சரவை பரிந்துரையை ஏற்க முதலில் தயக்கம் காட்டியதின் பேரில் மீண்டும் 30.4.77 அன்று அமைச்சரவை கூடி அதுபற்றி விவாதித்தது.
பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் சரண்சிங்கும், சட்ட அமைச்சர் சாந்தி பூஷணும் பி.டி.ஜாட்டியைச் சந்தித்து, அவருடைய பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்தனர். இறுதியாக 30ஆம் தேதி இரவு குடியரசுத் தலைவர் ஜாட்டி, காங்கிரஸ் கட்சி ஆண்ட மாநில அரசுகளான உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, இமாசலப் பிரதேசம் ஆகிய ஒன்பது மாநில ஆட்சிகளைக் கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
இந்த ஒன்பது மாநிலங்களுக்கும், ஏற்கனவே 1976 ஜனவரியில் தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்ற தமிழ்நாட்டிற்கும் சேர்த்து ஜூன் திங்கள் இரண்டாவது வாரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. இதனை முன் மாதிரியாக வைத்துக் கொண்டுதான் இந்திரா காந்தி அரசு 1980இல் ஜனதா கட்சி ஆண்ட மாநில அரசுகளையும் தமிழக அரசையும் கலைத்தபோது நான் கருத்துத் தெரிவித்தேன்.
இவ்வாறு காங்கிரசல்லாத மாநில அரசுகள் கலைக்கப்பட்டதையொட்டித் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் குறித்து என்னிடம் பேசவேண்டுமென்று பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அழைத்ததின் பேரில் நான் டெல்லி சென்றேன். என்னுடன் முரசொலிமாறன், ஆற்காடு வீராசாமி இருவரும் வந்தனர். டெல்லி விமான நிலையத்திலிருந்து நாங்கள் தங்கும் ஓட்டலுக்குச் சென்று, பயணக்களைப்பை நீக்கிக் கொள்ளக்கூட நேரமின்றி உடனடியாகப் பிரதமர் வீட்டுக்கு வருமாறு செய்தி வந்தது.
அதன்படி பிரதமரைச் சந்திக்கப் புறப்பட்டபோது மத்திய நிதி அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் அவரைத் தனது அலுவலகத்தில் காலை 11.30 மணிக்குச் சந்திக்குமாறு நேரம் குறித்துச் செய்தி அனுப்பியிருந்தார். முதலில் பிரதமரைச் சந்தித்தபோது அவர் இரண்டு முக்கியமான செய்திகளைச் சொன்னார். ஒன்று; சட்டமன்றத் தேர்தலில் கழகமும் காங்கிரசும் எப்படி இடங்களைப் பங்கிட்டுக் கொள்வது என்ற எண்ணிக்கை பற்றி ஆர்.வெங்கட்ராமன் அவர்களும் கழகச் சார்பில் நானும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்பதாகும்.
மற்றொன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் இளைய பெருமாள் அவர்களை மாற்றிவிட்டு எம்.பி.சுப்பிரமணியம் அவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதாகும். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்றுவது சம்பந்தமாக பிரதமர் எடுத்த முடிவில் எனக்கு விருப்பமில்லை. எனவே அந்த முடிவை மறுத்து அவரிடம் நான் வாதிட்டேன். "தங்கள் கட்சியின் உள்விவகாரத்தில் நான் தலையிட்டுப் பேசுவது நாகரீகமாகாது என்பதை உணர்வேன்.
இருந்தாலும் என் கருத்து உங்களுக்குப் பயன்படுமென்பதற்காகச் சொல்லுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கிடைத்துள்ள பெரிய வெற்றியின் போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றிய ஒருவரை அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு முக்கியமானவரை திடீரென இப்படி மாற்றி விடுவது வர இருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலைப் பெரிதும் பாதிக்கும்."
இந்த அடிப்படையில் என் வாதம் அமைந்தது. உடன் இந்திரா அம்மையாரின் முகம் மாறியது. "ஆர்.வி. இதில் பிடிவாதமாக இருக்கிறார். மூப்பனாரும் ஒப்புக் கொண்டுவிட்டார். அறிக்கை தயாராகிவிட்டதே! இனி என்ன செய்ய முடியும்?" என்று குழப்பமடைந்த அம்மையாரிடம் நான் சொன்னேன்; "அறிக்கை இன்னும் வெளியிடப்படாமல் இருந்தால், நிறுத்தி வைப்பது ஒன்றும் பெரிய காரியமல்லவே" என்று!
யோசிப்பதாக அம்மையார் கூறிவிட்டு, உடனே எங்களிடம் விடை பெற்றுக்கொண்டு பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றார்கள். நேரம் குறித்தபடி மத்திய நிதி அமைச்சர் ஆர்.வி.அவர்களைச் சந்திக்க, நாங்கள் அவரது அலுவலகம் சென்றோம். "ஒரு ஐந்து நிமிடம் தாமதமாக அமைச்சர் வருவதாகச் சொல்லியிருக்கிறார்" என்று அலுவலகத்தினர் கூறி எங்களை உபசரித்து அமர வைத்தனர்.
பத்து பதினைந்து நிமிடம் தாமதமாக உள்ளே நுழைந்த ஆர்.வி.அவர்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. சிவந்து காணப்பட்ட முகத்தைப் பார்த்து நான் அதிர்ச்சியுற்றேன்; என்னமோ ஏதோ நடந்து விட்டதென்று! அவர் உள்ளே நுழையும்போது சொல்லிக் கொண்டே வந்த வாசகம்; "என்னங்க கலைஞர்! எங்க திட்டத்தையெல்லாம் கெடுத்திட்டீங்களே!"
என்பதுதான். அதாவது இளைய பெருமாள் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு எம்.பி.சுப்பிரமணியம் அவர்களை அப்பதவியில் அமர்த்தியிருப்பதாக வெளிவரவேண்டிய அறிக்கையை, பிரதமர் இந்திராவைச் சந்தித்து நான் தடுத்துவிட்டேனாம்; இதுதான் அவருக்கு அவ்வளவு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்திய நிகழ்ச்சி. ஆனால் ஒன்று; அன்றைக்கு எனது குறுக்கீடு காரணமாக அந்த மாற்றம் உடனடியாகத் தடுக்கப்பட்டிருந்தாலும் கூட, பிறகு பத்து பதினைந்து நாட்கள் கழித்துத் தமிழ்நாடு காங்கிரஸ் பெரும் புள்ளிகள் வற்புறுத்தல் காரணமாக நிறைவேற்றப்பட்டு இளைய பெருமாள் அந்தப் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்பதுதான் முக்கியம்.
சிரமப்பட்டு ஆத்திரத்தை அடக்கிக் கொண்ட ஆர்.வி. அவர்கள் பிறகு எங்களுடன் சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கத் தொடங்கினார். நான் டெல்லியிலிருந்தவாறே பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களிடத்திலே தொடர்பு கொண்டு பேசினேன். யார் யாருக்கு எத்தனைத் தொகுதிகள் என்று எண்ணிக்கைக் கணக்கை மட்டும் ஆர்.வி.அவர்களிடம் பேசினேன். தி.மு.கழகம் 109 தொகுதிகளில் போட்டியிடுவதென்றும், இந்திரா காங்கிரஸ் 109 தொகுதிகளில் போட்டியிடுவதென்றும் எஞ்சியுள்ள 16 இடங்களில் தோழமைக்கட்சிகள் போட்டியிடுவதென்றும் தி.மு.க.
தலைமையில் ஆட்சி அமைப்பதென்றும் இறுதியாக முடிவு செய்யப்பட்ட போதிலும் அன்றைய தினம் ஆர்.வி.அவர்களுடன் தோராயமாக ஒரு உடன்பாடு தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து ஏற்பட்டவுடன் ஆர்.வி.யும் நானும் கைகுலுக்கிக் கொண்டோம். அப்போது என் கையைக் குலுக்கிக் கொண்டே ஆர்.வி.அவர்கள் சொன்ன சொல் இன்னமும் என் மனத்தில் உறுத்திக் கொண்டிருக்கிறது. இதனை நான் பல மேடைகளில் கூடச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறேன். அவர் சொன்ன அந்தச் சொல்; "கலைஞரே!
நாமிருவரும் சேர்ந்து மூப்பனை ஒழிப்போம்" என்பதாகும். நான் உடனே திடுக்கிட்டுச் சொன்னேன், "இப்படியொரு பகைமை உணர்வுடன் காங்கிரஸ் கட்சி தமிழகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தால் இருவருக்கும் தோல்விதான் கிடைக்கும்" என்று சொல்லிக் கொண்டே என் கையை உருவிக் கொண்டேன்.
ஏதோ ஒரு பாரம் நெஞ்சில் விழுந்ததுபோல அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பினோம். டெல்லியில் அந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளும் - மாற்றங்களும் - குழப்பங்களும் ஏற்பட்டன என்பதையும், அவை சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் அணியின் வெற்றியை எப்படிப் பாதித்தன என்பதையும் மறந்து விடுவதற்கில்லை. சட்டமன்றத் தேர்தலிலே கட்சியின் உத்தியை வகுப்பதற்காக அ.தி.மு.க.
சார்பிலே ஒரு உயர்மட்டக்குழு 24.2.80 அன்று அந்தக் கட்சியின் செயற்குழுவிலே அமைக்கப்பட்டபோது, முதலிலே ஒன்பதுபேர் அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், பேரவையிலே அவை முன்னவராகவும் இருந்த நாஞ்சிலாரின் (நாஞ்சில் மனோகரன்) பெயர் முதலிலே விடப்பட்டுவிட்டதாகவும், பின்னர் தான் சேர்க்கப்பட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்த அவர், அந்தத் தேர்தல் குழுவிலேயிருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் கட்சியிலே தனக்கு உரிய மரியாதை தரப்படாததால் அவர் மனம் புழுங்கிய நிலையிலே இருப்பதாகவும் யு.என்.ஐ. நிறுவனம் செய்தி தெரிவித்ததாக, 'தினமணி' ஏடு முதல் பக்கத்திலேயே பெரிதாகச் செய்தி வெளியிட்டது.
இந்தச் செய்தி வந்த சில நாட்களுக்குப்பின், நாஞ்சிலார் அ.தி.மு.க.விலிருந்து விலகினார். அப்போது அவர் விடுத்த நீண்ட அறிக்கையிலே, "கடந்த இரண்டரை ஆண்டுக் காலமாக, ஏன் அதற்கு முன்னும் அவமானப்படுத்தப்பட்டேன்; புறக்கணிக்கப்பட்டேன், புண்படுத்தப்பட்டேன், தமிழகம் முழுமையும் உள்ள உடன்பிறப்புக்களுக்கு இவை புதிய செய்திகள் அல்ல. அண்மையில் நடைபெற்ற கழகத்தின் செயற்குழுவில் அமைச்சர்களை விமர்சனம் செய்யும் போக்கு மேலோங்கி நின்றது.
சில அமைச்சர்கள் தலைமையின் அர்ச்சனைக்கு ஆளாயினர்; மற்றும் சில அமைச்சர்களுக்கு மகுடங்கள் சூட்டப்பட்டன. நான் எம்.ஜி.ஆரைத் தனியே சந்தித்தபோது; 'இனிமேல் நான் யாரையும் நம்பப் போவதில்லை' என்று திடுக்கிடும் வகையில் அவர் சொன்னபோது நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன்.
கடந்த காலத்தில் எம்.ஜி.ஆரால் எடுக்கப்பட்ட முடிவுகளும் விடுக்கப்பட்ட அறிக்கைகளும் தொடுக்கப்பட்ட கண்டனக் கணைகளும் நிச்சயமாகக் கூட்டுச் சிந்தனையின் குழந்தைகள் அல்ல. என்னால் கட்சிக்குக் களங்கம் ஏற்பட்டதில்லை. நான் எம்.ஜி.ஆரிடம் எதிர் பார்த்தது அங்கீகாரம் - பாராட்டு - நம்பிக்கை! நானும் மனிதன் தானே! எதிர்பார்த்தது எட்டாக்கனி என்ற நிலை ஏற்பட்டபோது கவலையால் துளைக்கப்பட்டேன். தர்ம சங்கடமான வேதனை எம்.ஜி.ஆருக்கும், இதயப்பளு எனக்கும் இருக்க வேண்டியதில்லை எனும் முடிவுக்கு வந்தேன்.
அவரே எனது முடிவை மனதார விரும்பி ஏற்கக்கூடும். அவரிடம் நான் வைத்திருக்கும் மரியாதை நிரந்தரமானது. திராவிடப் பாரம்பரியம் எனும் சுடர் விளக்கை அணையாமல் பாதுகாக்க எனது வாழ்நாள் முழுமையும் பாடுபடுவேன்" என்று கூறியிருந்தார். தொடர்ந்து 3.3.80 அன்று மாலையில் நாஞ்சிலார் தி.மு.கழகச் சட்டமன்றக் கட்சி அலுவலகத்தில் என் முன்னிலையிலும், பேராசிரியர் முன்னிலையிலும் தி.மு.கழகத்திலே தன்னை மீண்டும் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
நாஞ்சிலாரோடு அன்றைய தினம் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் அட்சயகோபாலும் கழகத்திலே தன்னை இணைத்துக் கொண்டார். அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதைக் கண்டித்து 2.3.80 அன்று அ.தி.மு.க. பேரணி ஒன்றை சென்னை அண்ணா சாலையிலே நடத்தியது. திட்டமிட்டு, தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்களை வரவழைத்து, அந்தப் பேரணியிலே வன்முறைக்கு வித்திடப்பட்டது. ஆட்சி கலைக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தை அந்தக் கட்சியினர் அன்றைய தினம் அந்தப் பேரணியிலே காட்டினர்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்குச் சொந்தமான சாந்தி திரையரங்கம் திட்டமிட்டுத் தாக்கப்பட்டதோடு, அவருடைய பேனர்கள் எல்லாம் கிழித்துத் தீயிடப்பட்டன. அண்ணா சிலையிலிருந்து ஆயிரம் விளக்கு வரையில் இருமருங்கிலும் உள்ள கடைகள், விளம்பரப் பலகைகள், கண்ணாடி ஷோகேஸ்கள் எல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டன. கடைகளிலேயிருந்து இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டன. அண்ணா சாலையிலே உள்ள காவல் நிலையமும் தாக்கப்பட்டு, காவல் நிலைய வாசலிலே நின்ற காவல்துறை வாகனங்களுக்கெல்லாம் தீ வைக்கப்பட்டது.
அ.தி.மு.க.வினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே அன்றைய தினம் அண்ணா சாலையிலே ஒரு பெரும் போரே நடைபெற்றது. அ.தி.மு.க.வின் இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் மேலும் ஏராளமான அ.தி.மு.க. முன்னணியினர் அந்தக் கட்சியிலிருந்து விலகி தி.மு.கழகத்திலே சேர்ந்தனர். குறிப்பாகத் தமிழக அரசின் திட்டக்குழுத் துணைத் தலைவராக இருந்த கோவை செழியன் இந்தச் சம்பவத்திற்கு அடுத்த நாளே கழகத்திலே அடுத்த இணைந்தார்.
அப்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணம் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நேரில் வர முடியாத நிலையிலும் தன் கணவர் மூலமாக, தன்னையும் தி.மு.கழகத்திலே இணைத்துக் கொள்வதாகக் கடிதம் எழுதிக்கொடுத்தனுப்பினார். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்த நாவலருக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் அனுப்பிய கடிதத்திலே - "மருத்துவமனையிலே அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த எனக்கு வேவு பார்க்க ஆட்களை அனுப்புவதும் - அச்சமூட்டத்தக்க வகையிலே ஆட்களை அனுப்புவதும் அ.தி.மு.க.
தலைமை செய்த காரியங்கள். சந்தேகத்தின் நிழல் என்மீது படர ஆரம்பித்துவிட்டது. எனவே விடைபெறுகிறேன்" என்று எழுதியிருந்தார். அடுத்து, அ.தி.மு.க. அமைச்சரவையிலே உணவு அமைச்சராக இருந்த எட்மண்ட், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கடைய நல்லூர் ரசாக், மேலவை உறுப்பினர் கே.அறிவழகன், கவிஞர் நா.காமராசன், அ.தி.மு.க.விலே பொதுக் குழு உறுப்பினராக இருந்த முல்லைவேந்தன் மற்றும் ஏராளமானவர்கள் கழகத்திலே தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
மதுரையிலே சிறப்புக் கூட்டம் ஒன்றிலே கலந்து கொள்வதற்காக நான் சென்றிருந்த போது, கோவை மாவட்டக் கழக முன்னோடிகளில் ஒருவரான தேவசகாயம் மூளையில் நரம்புவெடித்து ஆபத்தான நிலையிலே மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டிருப்பதாகவும், பிழைப்பது சிரமம் என்
றும் செய்தி கிடைத்தது. உடனே சென்னைக்குத் தொடர்பு கொண்டு, சென்னையிலேயிருந்த சாதிக்பாட்சா, மு.கண்ணப்பன், கோவை இராமநாதன் ஆகிய மூவரையும் கோவைக்குப் புறப்படச் சொல்லிவிட்டு, நானும் மதுரை நிகழ்ச்சிகளை இரத்துச் செய்துவிட்டுக் கோவைக்குப் பயணமானேன். மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் தேவசகாயத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அவருடைய இறுதி நிகழ்ச்சியிலே கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பினேன். டெல்லியலே தமிழகச் சட்டமன்றத் தேர்தல் உடன்பாடு பற்றிப் பேசியபோது, தி.மு.கழகத்திற்கு 109 இடங்களும், மீதியுள்ள 16 இடங்கள் தோழமைக்கட்சிகளுக்கும் என்றும் பேசி முடிவெடுத்திருந்த போதிலும், உடன்பாடு பற்றிய விவரங்களை வெளியே கூறவேண்டாமென்று முடிவெடுத்திருந்ததால், அதுவரை இந்த விவரம் வெளியே யாருக்கும் கூறப்படாமல் இருந்து வந்தது.
ஆனால் திடீரென்று புதிதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட எம்.பி.சுப்பிரமணியம் டெல்லியிலே செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த விவரங்களை வெளிப்படுத்தி விட்டார். உடனே தமிழகச் செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து, "உங்களிடம் பலமுறை இதுபற்றி நாங்கள் கேட்டபோது நீங்கள் விவரம் கூறவில்லை. ஆனால் திடீரென எம்.பி. சுப்பிரமணியம் டெல்லியிலே போய் இந்த முக்கிய விவரத்தைக் கூறியிருப்பது உங்களுக்குத் திருப்திதானா?"
என்று கேட்டனர். அதற்கு நான், "இது தேவை இல்லாத கேள்வி. வேறு விவரங்கள் எதையும் நான் கூற விரும்பவில்லை" என்று கூறினேன். தொடர்ந்து ஒரு நிருபர், "எம்.பி.சுப்பிரமணியத்திற்கு நடைபெறும் பாராட்டுக் கூட்டத்திலே கூட, காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மட்டும்தானே கலந்து கொள்கிறார்கள்; தி.மு.கழகத்தினர் யாரும் சேர்க்கப்படவில்லையே" என்று கேட்டார்.
அதற்கும் நான், "இரண்டு கட்சிகளும் தனித்தனியாகக் கூட்டம் போடுவதும் விழாக்களை நடத்துவதும் தவறல்ல" என்று கூறினேன். மீண்டும் ஒரு நிருபர், "எம்.பி.சுப்பிரமணியம் காங்கிரஸ் கட்சித் தலைவராக வந்ததிலிருந்து முன்பு காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த இளைய பெருமாளுக்கும் உங்களுக்கும் இருந்த நெருக்கம் - தொடர்பு இப்போது இல்லை என்றும், இப்போதுள்ள தலைவர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்றும் கருதப்படுகிறதே, அதுபற்றித் தங்கள் கருத்து என்ன?"
என்று கேட்டதற்கு, "உங்களுடைய கற்பனைகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல இயலாது" என்று கூறினேன். மீண்டும் அதே நிருபர், "முன்பிருந்த அதே ஒத்துழைப்பு இப்போதும் இருக்கிறதா?" என்றதற்கு, "இருக்கிறது, இன்று காலையில்கூட எம்.பி. சுப்பிரமணியம் என்னுடன் தொலைபேசியிலே பேசினார். மாலையிலே என்னை வந்து சந்திப்பதாகவும் கூறியிருக்கிறார்" என்று கூறினேன்.
செய்தியாளர்கள் கேட்ட இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நான் இதுபோல் பதில் கூறிச் சமாளித்தேன் என்றபோதிலும், கழக முன்னணியினர் பலரும் இதே கேள்விகளை என்னைத் தனிமையிலே சந்தித்துக் கேட்டபோது, அதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை தான். இந்திராகாந்தி அம்மையார் நல்ல தூய்மையான நோக்கத்தோடு தி.மு.கழகத்துடன் உறவுகொள்ள முன்வந்தபோதிலும், தமிழகத்திலே உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்குள் இருந்த அபிப்பிராய பேதம், உள்கட்சிக் குழப்பம் காரணமாக; நாடாளுமன்றத் தேர்தலின்போது கழகத்தோழர்கள் எந்த அளவிற்கு உள்ளன்போடு உழைத்தார்களோ, அந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சட்டமன்றத் தேர்தலின்போது பணியாற்ற முன்வரவில்லை.
மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் சிலர், மத்திய அரசிலும் முக்கியப் பொறுப்பிலே இருந்தவர்களின் ஒத்துழைப்போடு - தி.மு.கழகத்தை விட காங்கிரஸ் அதிகமான இடங்களிலே வெற்றிபெற்றால் முதலமைச்சர் பொறுப்பு தங்களுக்குக் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டார்கள். இந்தச் செய்தி எனக்கும் அப்போது கிடைக்கத்தான் செய்தது. குறிப்பாக நான் போட்டியிட்ட அண்ணா நகர் தொகுதியிலே என்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.
வேட்பாளருக்கு - மத்தியில் முக்கிய அமைச்சர் பொறுப்பில் இருந்த ஒருவரே, சென்னையிலுள்ள ஒரு தொழில் நிறுவனத்தினரிடம் கூறி நிதி உதவி செய்ததோடு - தனிப்பட்ட முறையில் என்னைத் தோற்கடிக்கவும் பெரும் முயற்சிகள் எல்லாம் நடைபெற்றதாக எனக்குத் தெரிந்தது.
