நெஞ்சுக்கு நீதி
"மூப்பனாரின் பொன்னாடைக்குப் பதில் · 267 / 391
51. "மூப்பனாரின் பொன்னாடைக்குப் பதில் என்னாடை!..." கா ங்கிரசுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியொன்றை நிலையானதாகத் தரமுடியும் என்ற உறுதியை உதட்டளவில் மட்டுமே வழங்கிச் செயல் அளவில் காட்ட முடியாமல் வீழ்ச்சியுற்ற ஜனதா கட்சித் தலைமையிலான ஆட்சிக்குப் பிறகு, மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதற்கான நாடாளுமன்றத்தேர்தல் 1980 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 3ஆம் நாள் 226 தொகுதிகளுக்கும், ஜனவரித் திங்கள் 6ஆம் நாளன்று 316 தொகுதிகளுக்கும் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நானும் இந்திரா காந்தி அவர்களும் டிசம்பர் 26,27 ஆகிய இரண்டு நாட்களும் மின்னல் வேகத்தில் சென்னையில் தொடங்கிக் கன்னியாகுமரி வரையில் மிக நீண்டதொரு சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டோம்.
இந்திரா காந்தி, நான், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள், கே.டி.கோசல்ராம் ஆகியோர் ஒரே காரில் அமர்ந்தவாறு 26 ஆம் தேதி காலையில் சென்னையில் தொடங்கி வழி நெடுக நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இரவு முழுவதும் உறக்கமின்றி, 27ஆம் தேதி விடியற்காலை சிவகாசியில் சில நிமிடங்கள் மட்டுமே ஓய்வு எடுத்துக் கொள்ள முடிந்தது. அந்த நெருக்கடியிலும் பெ.சீனிவாசன் துலுக்கப்பட்டியில் ஒரு நிகழ்ச்சியென்று என்னை அழைக்கவே; இந்திரா அம்மையார் அவர்கள் எனக்கு ஓய்வளித்துவிட்டு, அவர்களே அந்த நிகழ்ச்சிக்குச் சென்று வந்ததும் அதன் பிறகு நான் தங்கியிருந்த விடுதி வாசலில் அவர்கள் காரில் வந்து காத்திருந்து என்னை அவர்களுடன் அழைத்துச் சென்றதும், நினைவில் பசுமையாக நிழலாடக் கூடியதாகும்.
எடுத்த செயலில் உறுதியுடன் ஓய்வின்றி உழைப்பதும், எளிமையாகப் பழகிவிடுவதும் இந்திரா காந்தியின் கூடப் பிறந்த குணங்கள் என்பது அந்த இரண்டு நாள் சூறாவளிச் சுற்றுப்பயணத்தில் நான் அறிந்து கொண்ட உண்மையாகும். ஜனவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் மொத்தம் 525 தொகுதிகளில் 351 தொகுதிகளைக் கைப்பற்றியது. சரண்சிங் தலைமையிலான மக்கள் கட்சி (ஜனதா) 41 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கட்சி 35 தொகுதிகளையும் ஜனதா கட்சி 32 தொகுதிகளையும் தமிழகத்தில் தி.மு.கழகம் 16 இடங்களையும் கைப்பற்றின.
தமிழகத்தைப் பொருத்தவரையில் புதுவையில் ஒரு தொகுதி உள்ளிட்ட நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் இரண்டே இரண்டு இடங்களை மட்டுமே எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் அமைந்த அ.தி.மு.க கூட்டணியினரால் கைப்பற்ற முடிந்தது. மற்ற 38 இடங்களில் தி.மு.கழகம் போட்டியிட்ட பதினாறு இடங்களிலும் வென்றது. 24 இடங்களில் போட்டியிட்ட இந்திரா காங்கிரஸ் 22 இடங்களில் வென்றது. புதுவை மாநிலச் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தி.மு.க.14 இடங்களிலும் இந்திரா காங்கிரஸ் பத்து இடங்களிலும், முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
எதிர் அணியான அ.தி.மு.க வுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காமல், அந்த அணியிலிருந்த ஜனதாவுக்கு மூன்று இடங்களும் மார்க்சிஸ்டுக்கு ஒரு இடமும் சுயேச்சைக்கு ஒரு இடமும் கிடைத்தன. ஜனவரி 10 ஆம் நாள் இந்திரா காந்தியை நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றக் காங்கிரஸ் உறுப்பினர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறதென்றும் அக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக என்னையும் வரவேண்டுமென்று இந்திரா அம்மையார் வலியுறுத்தவே நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
என்னுடன் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் பஞ்சாபின் குருநாம் சிங்கும், ஆந்திரத்தின் சென்னாரெட்டியுமாவார்கள். இந்திரா காந்தி அமர்ந்திருந்த மேடைக்கு எதிரிலேயே எங்கள் மூவருக்கும் முதல் வரிசையிலேயே நாற்காலிகள் போடப்பட்டன. எதிரே அமர்ந்திருந்த எங்களை அம்மையார் அவர்களே வலியுறுத்தி அழைத்து, அவருடன் மேடையில் உட்கார வைத்துக் கொண்டார்கள். கழகத்தின் சார்பில் காஞ்சிப்பட்டுச் சால்வையொன்றை இந்திரா காந்திக்கு அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தேன்.
அந்தக் கூட்டத்தில் அவர் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டவுடன்; நன்றியுரையின் தொடக்கத்திலேயே எனக்கும், சென்னாரெட்டி அவர்களுக்கும், குருநாம் சிங் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து, "இந்த வெற்றிக்கு அடிப்படைக் காரணம் இவர்கள் மூவருமே" என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அந்தத் தேர்தலில், கர்நாடகத்தில் முதலமைச்சராக இருந்த தேவராஜ் அர்சின் கட்சி பெரும் தோல்வியை அடைந்ததால், அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதைச் செய்தியாளர்கள் என்னிடம் சுட்டிக்காட்டி, தமிழகத்திலும் அதைப்- போல முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொல்வீர்களா என்று கேட்டனர். அதற்கு நான், "அப்படி நான் வற்புறுத்தவில்லை. மத்திய சென்னையில் தோல்வி ஏற்பட்டால் அது என் மானப்பிரச்சினை என்று ஏம்.ஜி.ஆர்.
தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரகடனப்படுத்தினார். ஒரு தொகுதியின் தோல்விக்கு மானப்பிரச்சினை என்ற சொல் பொருந்துமா பொருந்தாதா? இதற்கு விடை எம்.ஜி.ஆர்.தான் அளிக்க வேண்டும்" என்று கூறினேன். "இந்த வெற்றி உங்களுக்குக் கிடைத்த வெற்றியா?"
என்று கேட்டதற்கு, "தோழமைக் கட்சிகளின் தூய்மையான நல்லெண்ணத்துக்கும் ஒருவரையொருவர் காலை வாரிவிடாத தன்மைக்கும் கிடைத்த வெற்றியாகும்" என்று கூறினேன். புதுவையில் தி.மு.க., இந்திரா காங்கிரஸ் வெற்றியைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளும் சேர்ந்து கூட்டு அமைச்சரவை அமைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய, புதுவை மாநிலக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 12.1.1980 அன்று சென்னையிலுள்ள தி.மு.கழக சட்டமன்றக் கட்சி அலுவலகத்தில் என்னுடைய முன்னிலையிலும் பொதுச் செயலாளர் பேராசிரியர் முன்னிலையிலும் நடைபெற்றது.
புதுவை மாநிலத்தில் வெற்றி பெற்ற தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்களும், முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினரும் அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டனர். அதைப் போலவே புதுவையில் வெற்றி பெற்ற இந்திரா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலே வெற்றி பெற்ற ஆர்.வெங்கட்ராமன் முன்னிலையிலே நடைபெற்றது. அதன்பின்னர் இந்த மூன்று கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் கூட்டம் தி.மு.கழகச் சட்டமன்றக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்தக கூட்டத்திற்கு ஆர்.வெங்கட்ராமனும் வந்திருந்தார். அந்தக் கூட்டத்திலே அ.தி.மு.க. ஆட்சியிலே அமைச்சராக இருந்தவரும் சில மாதங்களுக்கு முன் அந்தக் கட்சியிலிருந்து விலகி தி.மு.கழகத்திலே சேர்ந்து மண்ணாடிப் பேட்டைத் தொகுதியிலே கழக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றவருமான டி.ராமச்சந்திரனை புதுவை மாநில முதலமைச்சர் பதவிக்கு நான் முன்மொழிய, ஆர்.வெங்கட்ராமன் வழிமொழிய ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தி.மு.கழகத்திற்கு முதலமைச்சர் பதவி தவிர மற்றும் இரண்டு அமைச்சர்கள் பொறுப்புக்களும், இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சர் பொறுப்புகளும் பேரவைத் தலைவர் பொறுப்பு இந்திரா காங்கிரசுக்கும், துணைத் தலைவர் பொறுப்பு தி.மு.கழகத்திற்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. தி.மு.கழகத்தின் சார்பில் அமைச்சர்களாக பெருமாள் ராஜாவும் வி.எம்.சி.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். கழகத் தலைமையிடமும் கழகத்தின்பாலும் உண்மையான அன்பு கொண்டு சங்கரன் கோவில் தொகுதியிலே பாடுபட்ட அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா 15.1.80 அன்று சென்னையிலிருந்து பேருந்து மூலம் ஊருக்குச் சென்று கொண்டிருந்தபோது உளுந்தூர் பேட்டை அருகிலே எதிரே வந்த சுற்றுலாப் பேருந்து ஒன்றுடன் இவர் சென்ற பேருந்து மோதிய காரணத்தால், சுப்பையாவும், மற்றும் ஐந்து பேரும் அந்த விபத்தின் காரணமாக மரணமடைந்தார்கள் என்ற செய்தியறிந்து உடனடியாக நெல்லைக்கு அவரது இறுதிச் சடங்கிலே கலந்து கொள்ளச் சென்றேன்.
தென் ஆற்காடு மாவட்ட நண்பர்களுடன் தொடர்பு கொண்டு சுப்பையாவின் உடலை வேன் மூலமாகச் சங்கரன் கோவில் எடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்துவிட்டு நானும் தென்னரசுவும் புகைவண்டி மூலமாகப் புறப்பட்டோம். இந்திரா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.கோசல்ராம் அவர்களும் அன்று என்னுடன் சங்கரன் கோவில் வருவதாகத் தெரிவித்து உடன் வந்தார். சுப்பையாவின் இறுதி ஊர்வலத்திலே பங்கேற்று இரங்கல் உரையாற்றும்போது சுப்பையாவின் குடும்பத்தைக் கழகம் காப்பாற்றும் என்ற உறுதியையும் அளித்தேன்.
அந்த உறுதியைக் காப்பாற்றிடத்தான் பின்னர் அவரது இளவல் தங்கவேலுவுக்கு 1989 சட்டமன்றத் தேர்தலின் போது வாய்ப்பும் அளித்து அதன் பின்னர் அமைச்சர் பதவியையும் அளித்தேன். அவருக்கு அமைச்சர் பதவி அளித்ததின் மூலம் என் நெஞ்சுக்கு நான் நீதி வழங்கிக் கொண்டேன். ஆனால் அவர்? பிற்படுத்தப்பட்டோரைப் பாதிக்கும் வகையில் பொருளாதார அடிப்படையில் எம்.ஜி.ஆர். அரசு பிறப்பித்திருந்த இட ஒதுக்கீடு உத்தரவு திரும்பப் பெறப்படாத நிலையில் பல கோரிக்கைகள் பல்வேறு கட்சிகளால் வைக்கப்பட்டு அவைகள் ஏற்கப்படாததால் 19.1.80 அன்று தி.மு.கழகம் தனது செயற்குழுவைக் கூட்டி எந்த வகையிலே அரசின் உத்தரவை எதிர்த்துப் போராட்டத்திட்டங்களை அறிவிப்பது என்பதற்கான அறிவிப்பைச் செய்தது.
உடனே அ.தி.மு.க. அரசு 21.1.80 அன்று இதே பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டப் போவதாகத் தெரிவித்தது. 19.1.80 அன்று நடைபெற்ற கழகச் செயற்குழுவில் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பாதிக்கும் வகையில் அ.தி.மு.க. அரசு பிறப்பித்த உத்தரவினை வாபஸ் பெற வலியுறுத்தி மூன்று கட்டமாகப் போராட்டம் நடத்துவதென்றும், முதற்கட்டமாக அரசு அலுவலகங்களுக்குப் பேரணி நடத்தி முறையீடு அளிப்பதென்றும், இரண்டாவது கட்டமாக முதலமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் கறுப்புக்கொடி காட்டுவதென்றும், மூன்றாவது கட்டமாக அரசு அலுவலகங்களுக்கு முன்னால் மறியல் போராட்டம் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
அந்த முடிவினைச் செயற்படுத்தும் வகையில் மாவட்டக் கழகங்கள் எல்லாம் முனைப்பான ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கிவிட்டன. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலிலே அ.தி.மு.க.விற்கு ஏற்பட்ட பலத்த தோல்வியின் காரணத்தாலும், தி.மு.கழகம் மூன்று கட்டப் போராட்டங்களை அறிவித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டதாலும், அ.தி.மு.க. அரசு அவசர அவசரமாகத் தான் பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோர் சலுகைகளைப் பெற ஒன்பதாயிரம் ரூபாய்க்குக் குறைவாக ஆண்டு வருமானம் இருக்க வேண்டுமென்ற ஆணையினைத் திரும்பப் பெறுவதாக 24.1.1980 அன்று அறிவித்தது.
அது பற்றிய அறிவிப்பைச் செய்தியாளர்களிடம் கூறிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோருக்கு அதுவரை இருந்த 31 சதவிகிதம் என்ற ஒதுக்கீட்டை ஐம்பது சதவிகிதமாக உயர்த்துவதாகவும் அறிவித்தார். பிற்படுத்தப்பட்டோர் தலையிலே அ.தி.மு.க அரசினால் விழவிருந்த ஆபத்து, தி.மு.கழகமும், திராவிடர் கழகமும், தமிழகத்திலே உள்ள ஏனைய எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து போராடிய காரணத்தினால் நீங்கியது. ஆம்; போர்க்குரல் தொடர்ந்ததால் ஒரு சமூக அநீதி களையப் பட்டது.
அன்றைய தினம் செய்தியாளர்களிடம் எம்.ஜி.ஆர். கூறும்போது மது அருந்த அரசு அனுமதி அதுவரை 45 வயது என்றிருந்தது முப்பது வயதாகக் குறைக்கப்படும் என்றும், அதற்கான அனுமதி பெற மருத்துவர்களின் சான்றிதழ் இனித் தேவையில்லை என்றும் அனுமதி பெறக் கட்டணம் நூறு ரூபாய் என்றிருந்தது 25 ரூபாயாகக் குறைக்கப்படும் என்றும் மதுவிலக்குச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டுச் சிறையிலிருந்தவர்களுக்குத் தண்டனைக் காலம் இரத்துச் செய்யப்படும் என்றும், தனியார் வீடுகளில் அல்லது ஓட்டல் அறைகளில் மது அருந்தினால் காவல் துறை இனிமேல் நடவடிக்கை எடுக்காது என்றும் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதற்கிடையே 18.1.80 அன்று பிற்பகல் பிரதமர் இந்திரா காந்தி கேரளாவிற்குச் சென்று திரும்பும் வழியில் மீனம்பாக்கம் விமான- நிலையத்திலே சிறிது நேரம் தங்கினார். விமான நிலையத்தில் பிரதமரை நானும் பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் சாதிக்பாட்சா ஆகியோர் கழகத்தின் சார்பில் சென்று வரவேற்றோம். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமரிடம் ஒரு நிருபர், நாடாளுமன்றத் துணை சபாநாயகர் பதவியை தி.மு.கழகத்திற்கு வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறீர்களே அதனைத் தி.மு.க.ஏற்றுக் கொண்டதா என்று கேட்டபோது, பிரதமர் இந்திரா காந்தி அருகிலே இருந்த என்னைக் காட்டி அதுபற்றி என்னிடம் கேட்கும்படி கூறினார்.
ஆமாம், நாடாளுமன்றத் துணை சபாநாயகர் பதவியைத் தி.மு.க. ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்திரா காந்தி தொலைபேசி மூலமாகவும், நேரிலும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தி.மு.கழகம் அதனை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்ற முடிவினை எடுக்கும் பொறுப்பினைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே விட்டோம். அதன்படி நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்களின் கூட்டம் டெல்லியிலே முரசொலி மாறன் தலைமையிலே கூடி, ஆலோசனை நடத்தித் துணை சபாநாயகர் பதவியை தி.மு.கழகம் ஏற்றுக் கொள்வதென்றும், தபால் தந்தி அலுவலகத்திலே ஒரு அலுவலாளராகப் பணியாற்றியவரும் வட சென்னைத் தொகுதியிலே கழகத்தின் சார்பிலே நின்று வெற்றி பெற்றவருமான ஜி.லெட்சுமணனைத் துணை சபாநாயகராக ஆக்குவதென்றும் முடிவெடுத்து அதன்படி அவரை நாடாளுமன்றத் துணை சபாநாயகராவும் தி.மு.கழகம் ஆக்கியது.
துணை சபாநாயகராக இருந்து கொண்டே அவர் கழகத்திற்கு எதிரியாக மாறினார். என்ன செய்வது; மீண்டும் நெஞ்சுக்கு நீதி தான்! முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தியுடன் அ.தி.மு.க. ஒத்துழைக்கும் என்று நிருபர்களிடம் தெரிவித்தார். மத்திய அரசில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த ஆர்.வெங்கட்ராமனிடம் யு.என்.ஐ. செய்தியாளர் எம்.ஜி.ஆர். கூறியது பற்றி என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டபோது இந்திரா காங்கிரசுக்கும் அ.தி.மு.கவிற்கும் இடையே எந்தவித ஒட்டோ உறவோ கொள்வது பற்றிய கேள்விக்கே இடம் இல்லை என்றும் இந்திரா காந்திக்கும் அது போன்ற எண்ணம் கிடையாதென்றும் தெரிவித்தார்.
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் 19.1.80 அன்று வெற்றி விழாவும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவும் இணைந்து மாபெரும் பொதுக்கூட்டம், அந்தத் தேர்தலிலே வேலூர் நாடாளுமன்றத் தொகுதியிலே தி.மு.க., இந்திரா காங்கிரஸ் ஆதரவுடன் முஸ்லிம் லீக் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற அப்துல்சமது தலைமையிலே நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மூப்பனார் திடீரென ஒலிபெருக்கி முன்வந்து "முற்போக்குக் கூட்டணியை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியடையச் செய்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என் அருமை நண்பர் டாக்டர் கலைஞர் அ
வர்களுக்கு இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறேன்" என்று கூறித் தான் கொண்டு வந்த பொன்னாடையை எனக்குப் போர்த்தினார். உடனே நான் "மூப்பனார் அவர்களே, என்னைப் பாராட்டிப் பொன்னாடையை நீங்கள் போர்த்தினீர்கள்; உடனடியாக என்னிடம் பொன்னாடை கையில் இல்லாத காரணத்தால் நான் என்னாடையையே தங்களைப் பாராட்டிப் போர்த்துகிறேன்" என்று கூறி நான் அணிந்திருந்த சால்வையை மூப்பனாருக்கு பலத்த கைத்தட்டலுக்கிடையே போர்த்தினேன்.
அன்று தி.மு.கழகத்தின் வெற்றி குறித்துக் கவிஞர் குடியரசு எழுதிய புதுக் கவிதை வரிகளில் சில பகுதிகள் வருமாறு:- "தலைவரே, உன் அனுபவங்கள் தனி மனிதனின் நெளிவுசுளிவுகள் அல்ல! ஓர் சமுதாயத்தின் பாதிப்புகள்! நீ பல நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டாய் - அதை வேதனையாக நினைக்கவில்லை - மாறாக யோக நிலையாக மாற்றிக் கொண்டாய்! தலைவா! உன்னைப் பழிவாங்க நினைத்தவன் யார்? இறைவனால் படைக்கப்பெற்ற முதல் முட்டாள்! அறிவே இறைவனாயிற்றே, அவன் எப்படி முட்டாளைப் படைப்பான் என்று கேட்பாய்!
உன்னைப் போன்ற ஞான தீபத்தைப் படைத்த இறைவன்; முட்டாள்களை நீ எப்படி முறியடிக்கிறாய் என்று பார்க்க அவனுக்கே ஓர் ஆசை போலும்! துர்பாக்கியத்தைத் தூர்வாரும் பொறுப்பு உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது! என் உடன்பிறப்பே! என் கலைஞரே! பெரியாரும் அண்ணாவும் இல்லாத குறையை நீ நிரப்பிவிட்டாய்! எங்கள் தலைமுறையின் தலைநட்சத்திரமே! உன் தலைமையை வெறுத்தவர்கள் தலை இல்லாமல் போய்விட்டார்கள். கட்சி நடத்தும் எவருக்கும் இலக்கணப் புத்தகம் நீ தான்..."
இப்படி அந்தக் கவிதை நீண்டு கொண்டே போகிறது. நாடாளுமன்றத்தில் இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திரா காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் பல்வேறு மாநில அரசுகள் கலைக்கப்படக் கூடும் என்ற செய்தி இந்தியா முழுவதும் அனைத்து ஏடுகளிலும் தொடர்ந்து வெளிவந்தபோது, தமிழகத்திலும் அ.தி.மு.க.ஆட்சி கலைக்கப்படலாம் என்று செய்தி வந்ததால் முதலமைசர் எம்.ஜி.ஆர். 5.2.80 அன்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திப்பதற்காக டெல்லி சென்றார்.
அன்றைய தினம் மாலையிலே பிரதமர் இந்திரா காந்தியை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சந்திப்பார் என்றும் ஏடுகளிலே செய்தி வந்தது. ஆனால் அன்று அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. இந்திராகாந்தி காய்ச்சல் காரணமாக ஓய்வெடுப்பதால் மறுநாள் காலையிலே சந்திப்பதாகத் தெரிவித்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆனாலும் மறுநாளும் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. மாறாக எம்.ஜி.ஆர்.தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த நாஞ்சிலாரை டெல்லியிலே தங்கியிருந்து இந்திராகாந்தி நேரம் கொடுத்த பிறகு சந்தித்துப் பேசுமாறு தெரிவித்துவிட்டு அவரும் பண்ருட்டி ராமச்சந்திரனும் தமிழகம் திரும்பிவிட்டனர்.
1979 ஆம் ஆண்டு தஞ்சையிலே நாடாளுமன்ற இடைத்தேர்தலிலே இந்திராகாந்தி அம்மையார் போட்டியிட முதலிலே ஒப்புக்கொண்டுவிட்டு, பின்னர் பிரதமராக அப்போதிருந்த மொரார்ஜிதேசாய் கோபத்தின் காரணமாக இந்திரா காந்திக்கு எம்.ஜி.ஆர்.ஆதரவு தராதது பற்றிய எண்ணம் இந்திரா காந்திக்கு இன்னும் போகவில்லை என்பது இதிலிருந்து நாட்டிற்குப் புரிந்தது. 1980ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் முதல் வாரத்தில் டெல்லியிலிருந்து திரும்பிய மூப்பனார் அவர்களைச் செய்தியாளர்கள் சந்தித்து மாநில அரசுகள் கலைக்கப்படுவதாக பத்திரிகைசளில் செய்தி வருகிறதே உண்மையா என்று கேட்டனர்.
அதற்கு மூப்பனார், "1977 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி அப்போது இந்திரா காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாநிலச் சட்டமன்றங்களை ஜனதா அரசு கலைத்து மறுதேர்தல் நடத்தியது. அதுபோல் இப்போது இந்திரா காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலச் சட்டமன்றங்களைக் கலைக்க வேண்டுமென்று பல மாநிலங்களிலிருந்து கோரிக்கைகள் வந்திருக்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரையில் அ.தி.மு.க.அரசு இந்திரா காங்கிரசுடன் உடன் பட்டுப் போவதற்கான சமிக்ஞைகளைக் காட்டிய போதிலும் மாநிலச் சட்டமன்றங்களைக் கலைப்பது சம்பந்தமாக மத்திய அரசு எடுக்கும் முடிவு தமிழகத்திற்கும் பொருந்தும்.
தமிழகத்திற்கெனத் தனி விதிவிலக்கு இருக்க முடியாது. டெல்லியில் இந்திரா காங்கிரஸ் மேலிடத்துடன் தொடர்புகொண்டு ஏதாவது ஒருவகையில் உடன்பாடு காணும் முயற்சிகளை அ.தி.மு.க மேற்கொண்டிருப்பதாக எனக்குத் தகவல் எட்டியுள்ளது." என்று கூறினார். பிப்ரவரி 10ஆம் தேதியன்று தி.மு.கழகச் சட்டமன்றக் கட்சி அலுவலகத்தில் முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் நான், பேராசிரியர், சாதிக் பாட்சா, இந்திரா காங்கிரஸ் கட்சித்தலைவர் இளையபெருமாள், மரகதம் சந்திரசேகர், கே.டி.கோசல்ராம், திண்டிவனம் இராமமூர்த்தி, துரை.ராமசாமி, அன்பரசு, அப்துல் சமது, ஆண்டித்தேவர் ஆகியோர் கலந்து கொண்டோம்.
அந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சியின் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றி 15.2.80 அன்று ஆளுநரிடம் மாபெரும் பேரணி ஒன்று நடத்தி முறையீடு செய்வதென்றும், குடியரசு தலைவரைச் சந்தித்து அவரிடமும் குற்றச்சாட்டுப் பட்டியலைத் தருவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறே 15.2.80 அன்று பிற்பகல் சென்னை அண்ணா சாலை காமராஜர் சிலையிலிருந்து மாபெரும் பேரணி புறப்பட்டு கிண்டி கவர்னர் மாளிகையை அடைத்தது. முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புகார் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்தோம்.
