உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/தமிழகத்தில் காவல் துறையினர்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

தமிழகத்தில் காவல் துறையினர் · 266 / 391

50. தமிழகத்தில் காவல் துறையினர் கிளர்ச்சி ஜனதா ஆட்சியின் குழப்பங்களையும் சீர்குலைவுகளையும் பம்பாய் மருத்துவமனையிலிருந்தவாறு ஆழ்ந்த கவலையுடன் கவனித்துக் கொண்டு மனம் தளர்ந்து போயிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள், ஓரளவு உடல் நலிவு நீங்கிய நிலையில், பாட்னாவில் தமது இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது 1979 அக்டோபர் 8 ஆம் நாள் அதிகாலையில் இயற்கை எய்தினார். அந்தச் செய்தி பின்வருமாறு ஏடுகளில் விவரிக்கப்பட்டு வெளியானது.

"இன்று அதிகாலை 5.10. மணிக்கு எழுந்த ஜெயப்பிரகாசர் தனது பணியாளரின் துணையுடன் எழுந்து முகத்தைக் கழுவிக் கொண்டு 5.40 மணிக்கு மீண்டும் படுத்துத் தூங்கிவிட்டார். அவர் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் 5.45 மணிக்கு ஜெகதீஷ் சிங், எம்.எல்.சி., ஜெயப்பிரகாசர் இல்லத்துக்கு வந்தார். ஜெயப்பிரகாசர் பேச்சு மூச்சின்றி இருப்பதைக் கண்டார் அவர். உடனே ஜெ.பி.யின் மருத்துவர் சி.பி. தாகூருக்குத் தகவல் தரப்பட்டது.

அவர் 5.50 மணிக்கு அதாவது ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்து விட்டார். ஜெ.பி.யின் நெஞ்சையெல்லாம் தடவிவிட்டு ஆக்சிஜன் செலுத்திப் பார்த்தார். ஆனால் பயனில்லை. ஜெ.பி.தூக்கத்திலேயே இறந்து விட்டார் என்பதை டாக்டர் தாகூர் உறுதி செய்தார். உடனே குடியரசுத் தலைவருக்கும், காபந்து அரசின் பிரதமர் சரண்சிங்கிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பம்பாயிலுள்ள அவரது சகோதரர் ஆர். பிரசாத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜெயப்பிரகாசரின் மரணச் செய்தி கேட்டுப் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது இல்லத்தில் கூடி, மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்திய வண்ணமுள்ளனர். ஜெயப்பிரகாசரின் இறுதி ஊர்வலம் பாட்னாவில் நடைபெறுகிறது. இறுதி ஊர்வலத்தில் இராணுவத்தினர் அணிவகுத்துச் செல்கின்றனர். குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார்."

அவரது தியாகத்தினால் ஈர்க்கப்பட்ட மக்களும் அவரது தூய உள்ளம் உணர்ந்து தொண்டாற்றியவர்களும் கண் கலங்கி நின்றனர். வானொலி, தொலைக்காட்சிகளில் தலைவர்களின் இரங்கலுரைகள் சோகமாக ஒலித்தன. ஜெயப்பிரகாசர் மறைவு குறித்து அதே அக்டோபர் 8-ஆம் நாள் மாலையில் சென்னைத் தொலைக்காட்சியில் நான் ஆற்றிய உரை வருமாறு:- "இந்திய பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களை இழந்து விட்டோம். உத்தமர் காந்தியடிகளுடைய தியாக உள்ளத்தையும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடைய வீர உள்ளத்தையும் ஒருங்கே பெற்றுத் திகழ்ந்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் ஆவார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர்களில் ஒருவர் இன்று நம்மைவிட்டுப் பிரிந்து சென்று விட்டார். இந்தியாவிற்கு சுயராஜ்யம் கிடைத்த பிறகு உத்தமர் காந்தியடிகள் தேவையற்ற ஒருவராக ஆகிவிட்டார். அதைப் போலவே தான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களும், அவர் கொண்ட முதல் இலட்சியம் நிறைவேறிய பிறகு எப்படி காந்தி அடிகள் தேவையற்ற ஒருவராகக் கருதப்பட்டு விட்டாரோ, அதைப்போலவே ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களும் கருதப்பட்டுவிட்டார் என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது.

அவர் மறைந்த போது தன்னுடைய குறிக்கோள் எல்லாம் நிறைவேறிவிட்டது என்கிற மன நிறைவோடு மறைந்தாரா? இல்லை. ஏன்? ஏன்? இந்தக் கேள்வியை ஒவ்வொரு இந்தியனும் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டுமென்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் மறைந்த இந்த நாளில் நான் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஜெப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் இந்தியத் திருநாட்டின் மண்ணின் விடுதலைக்காக நடத்திய போராட்டங்கள் சாதாரணமானவைகளல்ல.

ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்கு மேல் சிறைச்சாலையிலே அவர் வாடியிருக்கிறார். அமெரிக்க நாட்டிலே கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலே கல்வி பயின்று - அந்தக் கல்வி பயிலுவதற்கும் ஒரு ஆப்பிள் தோட்டத்திலே வேலை பார்த்து அதிலே கிடைக்கின்ற ஊதியத்தைக் கொண்டு, கல்வி பயின்று, - அமெரிக்காவிலே வாழ்ந்த காலத்திலே மார்க்சிச கொள்கைகளிலே மனத்தைப் பறிகொடுத்து, சோஷலிச சித்தாந்தங்கள் அவருடைய உள்ளத்தைக் கவர்ந்து - பின்னர் இந்தியாவிற்கு வந்த பிறகு இந்த மண்ணின் விடுதலைக்காகப் பாடுபட்டுப் பலமுறை சிறை சென்று, ஒருமுறை சிறைச்சாலையிலே இருந்து தப்பிய நேரத்தில் பிடிக்கப்பட்டு - பனிக்கட்டியில் படுக்க வைக்கப்பட்டு - பயங்கர சோதனைகளுக்கெல்லாம் ஆளாக்கப்பட்டு - அந்தக் காலக்கட்டத்தில் எல்லாம் மனம் குலையாமல் மாவீரராகத் திகழ்ந்து போரிட்ட அந்த மனிதகுலப் பெரியவரை, மாவீரரை இன்றைக்கு நாம் இழந்து தவிக்கிறோம்.

1942-ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு," "செய் அல்லது செத்து மடி" என்கிற இரண்டு முழக்கங்களை முன் வைத்து இந்திய விடுதலைப் போராட்டம் உச்சக் கட்டத்திற்குச் சென்ற காலகட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஹசாரிபாக் சிறைச்சாலையிலே அடைப்பட்டு, அங்கேயிருந்து தப்பி வெளியேறினார். எப்படி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையனை விரட்டுவதற்காக ஒரு படை தயாரித்தாரோ, அதைப் போலவே தானும் ஒரு படை தயாரிக்க வேண்டுமென்று இந்தியாவின் எல்லை முகப்பிலே இருந்து முயற்சிகளை மேற்கொண்டார்.

நேதாஜியின் முயற்சிகள் பட்டுப்போனது போலவே ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் முயற்சிகளும் பட்டுப்போய் விட்டன என்றாலும் இந்தியாவின் சுதந்திரம் துளிர்த்து மலர்ந்து விட்டது. ஆனால் அந்தச் சுதந்திரத்தின் முழுப் பயனை மக்கள் அடையவேண்டும் என்பதற்காகப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் மனக்குறையோடு இன்று நம்மிடமிருந்து மறைந்துவிட்டார். அந்தக் குறையை நீக்க அவரது அடிச்சுவட்டில் நாமெல்லாம் நடத்திட வேண்டும்.

ஜெயப்பிரகாஷ் அவர்கள் என்பால் எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதும், அவருடைய இதயத்திலே இந்த எளியவனுக்கு ஒரு இடம் என்றைக்கும் ஒரு மூலையிலே ஒதுக்கப்பட்டிருந்தது என்பதும் நான் நினைத்து நினைத்து ஏங்கக் கூடிய ஒன்றாகும். வாழ்க ஜெயப்பிரகாஷ் அவர்களுடைய புகழ்!"

மறைந்த ஜெ.பி. அவர்களின் சாம்பல் கலசங்கள் 25.10.79 அன்று சென்னை ராஜாஜி மண்டபத்திலே பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. மறைந்த பெரியவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி மண்டபம் சென்ற ஜெ.பி.யின் சாம்பல் கலசங்களின் மேல் மலர்மாலைகளை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன். மத்திய அரசு; சமூக விரோதிகள் எனக் குற்றஞ்சாட்டித் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்க் கைது செய்ய வகை செய்யும் வகையில் ஒரு அவசரச் சட்டத்தைப் பிரகடனம் செய்தது.

காபந்து சர்க்கார் இத்தகைய ஒரு சட்டத்தைக் கொண்டு வரலாமா என்று இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களும், ஏடுகளும் எதிர்த்த போதிலும், முதலில் இந்த அவசரச் சட்டத்திலே கையெழுத்திட மறுத்த குடியரசுத் தலைவர் பின்னர் ஒப்புதல் அளித்தார். தி.மு.கழகத்தின் சார்பில் குடியரசுத் தலைவருக்கு நானும் நீண்ட தந்தி ஒன்றின் மூலமாக வேண்டுகோள் விடுத்தும் பயன் எதுவும் ஏற்படவில்லை. மத்திய அரசைத் தொடர்ந்து தமிழக அரசும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்குத் தடை விதித்து ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருந்தது.

இவைகள் தவிர தமிழகத்திலே காவல் துறையினருக்கு சங்கம் வைத்துக் கொள்ள அனுமதி தருவதாகக் கூறி, பொம்மை சங்கத்திற்கு அங்கீகாரம் கொடுத்து, நாற்பதாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட நைனார்தாஸ், பிரிட்டோ ஆகியோர் தலைமையில் இருந்த சங்கத்திற்கு அங்கீகாரம் கொடுக்க மறுத்ததன் காரணமாகக் காவல்துறையினரின் போராட்டமும் 1979ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் சேர்ந்து கொண்டது. போலீசாரின் இந்தப் போராட்டத்திற்கு அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் ஆதரவு கொடுத்தனர்.

ஆனால் அ.தி.மு.க. பிரச்சினைக்குரியவர்களை அழைத்துப் பேசி முடிவுகாண்பதற்குப் பதிலாகக் காவல்துறையினரின் அந்தப் போராட்டத்தை நான்தான் தூண்டி விடுவதாகக் கூறியதோடு, அரசு ஆதரவு ஏடான மக்கள் குரல், "யார் போராட்டத்தைத் தூண்டி விட்டார்களோ, அவர்களுடைய குடும்பத்தாருக்குப் பாதுகாப்பு எங்கிருந்து கிடைக்குமென்று எம்.ஜி.ஆர். கேட்டார்" என்றும் செய்தி வெளியிட்டது.

மேலும் அந்த ஏடு, "இந்தப் பேராட்டத்திற்குக் காரணம் கருணாநிதிதான் என்று எம்.ஜி.ஆர். குற்றஞ்சாட்டினார்" என்றும் எழுதியிருந்தது. காவல்துறையினரின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகத் தமிழக அரசு இராணுவத்தை வரவழைத்தது. சென்னையிலுள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பாக நின்றிருந்த போலீசாரைச் சுற்றி வளைத்து இராணுவம் அடித்து நொறுக்கியது. 200க்கு மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர். காவல்துறையினர் போராட்டம் குறித்து 19.10.1979 அன்று நான் விடுத்த அறிக்கையில் "தமிழ்நாட்டில் எந்தப் பிரிவினர் தங்கள் கோரிக்கைகளுக்காகக் கிளர்ச்சி நடத்தினாலும் பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மறைமுகமாக் கூறிக் கிளர்ச்சிக்காரர்கள் மீதும், எதிர்க்கட்சியினர் மீதும் தனது கட்சியின் குண்டர்களை ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்திடத் தூண்டுவது அ.தி.மு.க.

ஆட்சியின் வாடிக்கையான முறையாக இருந்து வருகிறது. இப்போது நடைபெறுகின்ற போலீசார் போராட்டத்தையும் தனது கட்சியின் இருபது இலட்சம் உறுப்பினர்கள் சமாளிப்பார்கள் என்று முதலமைச்சர் பேசியிருப்பது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல அமைந்துள்ளது. இத்தகைய வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களைக் கைவிட்டுச் சட்டம், ஒழுங்கு, அமைதியைக் காக்க கௌரவப் பிரச்சினை பார்க்காமல் உடனடியாக முதலமைச்சர் அவர்கள் போலீஸ் துறையில் பொம்மை சங்கங்களின் அங்கீகாரத்தை மாற்றி உண்மையான சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்க முன்வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன்.

23.10.79 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் எம். கல்யாண சுந்தரம் தலைமையிலே நடைபெற்றது. தி.மு.க. சார்பில் நான், பேராசிரியர், சாதிக்பாட்சா, கே.சுப்பு ஆகியோரும், இந்திரா காங்கிரஸ் சார்பில் மூப்பனார், இளையபெருமாள் ஆகியோரும், முஸ்லீம் லீக் சார்பில் அப்துல் சமதும், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கே.டி.கே.தங்கமணி, கே.எம். சுந்தரம் ஆகியோரும், தொ.மு.ச.

சார்பில் செ.குப்புசாமியும், உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் சார்பில் ஆர். குசேலரும், குடியரசு கட்சி சார்பில் சக்திதாசன், பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆண்டித்தேவர், ஜனநாயக முன்னணிக்கட்சி சார்பில் கிளமெண்ட் ஆகியோரும் கலந்துகொண்டு காவல்துறையினரின் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்திட வேண்டுமென்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்தியும், தவறினால் 26.10.79 அன்று சென்னையிலே அனைத்துக்கட்சித் தலைவர்களின் கண்டனக் கூட்டம் நடைபெறுமென்றும் முடிவெடுக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்தக் கூட்டத்திலே கலந்த கொள்ள அழைப்பு விடுத்தும் அவர்கள் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. 24.10.79 அன்று காவல்துறை சார்நிலை அலுவலர் சங்கத் தலைவர் நைனார்தாஸ் நெல்லையிலே கைது செய்யப்பட்டார். மத்திய - மாநில அரசுகள் பிறப்பித்த அவசரச் சட்டங்களைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சியினரும் கலந்தகொண்ட கண்டனப் பேரணிகள் 24.10.79 அன்று நடைபெற்றன.

காவல்துறையினர் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை நண்பர்கள் தமிழகமெங்கும் கைது செய்யப்பட்டனர். 26.10.79 அன்று சென்னை புரசைவாக்கத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அதிலே நான் பேசும்போது இது காவல்துறையினரைத் தூண்டுகின்ற கூட்டமல்ல; அரசைக் கேட்டுக் கொள்கின்ற கூட்டம் என்று கூறி உடனடியாக அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

கைது செய்யப்பட்ட நைனார்தாஸ் வேலூர் சிறைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கே சித்ரவதை செய்யப்படுவதாக வெளியே செய்தி பரவியது. அரசு காவல்துறையினர் சார்பாகக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஆயிரத்திலிருந்து மூவாயிரத்திற்குக் கொண்டு வந்தது. இவர்களின் பிரச்சினை பற்றிச் சட்டமன்றத்திலே ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கொடுத்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாத காரணத்தால், 29.10.79 அன்று தி.மு.கழகமும், இந்திரா காங்கிரசும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தன.

தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டனத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, 27.10.79 அன்று தீர்மானத்தை முன்மொழிந்து அரசின் பல்வேறு முறைகேடுகளையும், தவறுகளையும் பட்டியலிட்டு பேராசிரியர் உரையாற்றினார். அந்தக் கண்டனத் தீர்மானத்தின் மீது 3.11.1979 அன்று நான் உரையாற்றும் போதுதான், புகழ் பெற்ற பல்கேரியா கப்பல் பேர ஊழல்பற்றி இருபதுக்கு மேற்பட்ட எழுத்துப் பூர்வமான ஆதாரங்களையும், கடிதங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அவையிலே எடுத்து வைத்து, அரசு மீது மறுக்க முடியாத குற்றச்சாட்டினை எடுத்து வைத்தேன்.

அனைத்து ஆதாரங்கள், கடிதங்களை எல்லாம் முன்கூட்டியே நகல் எடுத்து நான் பேசி முடித்ததும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் அளித்திடச் செய்தேன். கப்பல் பேர ஊழல் பற்றிய குற்றச்சாட்டு தவிர, மருத்துவக் கல்லூரி மாணவர் தேர்விலே நடைபெற்ற ஊழல் குறித்தும், கீழ்மேட்டூர் மின்திட்டத்தில் நடை பெற்ற ஊழல் பற்றியும், அவையிலே ஆதாரங்களை எடுத்து வைத்து அதற்கெல்லாம் ஆட்சியாளர்களின் பதில் என்ன என்று கேட்டேன்.

குறிப்பாகக் கப்பல் பேர ஊழல் பற்றித் தமிழகத்து ஏடுகள் மாத்திரமின்றி அனைத்திந்திய ஏடுகள் எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டதோடு என்னையும் நேரில் பேட்டி கண்டு தொடர்ந்து அந்த ஊழல் பற்றிப் பல விவரங்களையும் வெளியிட்டன. நான் இந்தக் குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்ததற்கு. மறுநாள் முதலமைச்சர் தனது பதிலுரையை வைக்கும்போது, "எவ்வளவு பலவீனமான இயந்திரத்தை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறோம் என்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சாட்டிய குற்றச்சாட்டுகளே சான்று" என்றாரே தவிர, ஆதாரப்பூர்வமான முறையிலே எதையும் அவரால் மறுத்திட இயலவில்லை.

அவருடைய பேச்சின் போது இடையிலே குறுக்கிட்டுப் பேசிய நான், கப்பல் பேர ஊழல் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியை வைத்து விசாரிக்க அரசு தயாரா என்று கேட்டபோது, முதலமைச்சர், கருணாநிதியின் சவாலை ஏற்றார் என்று அனைத்து ஏடுகளும் செய்தி வெளியிட்டன. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை வைக்கப்படவே இல்லை. ஆம், கடைசிவரை அந்த விசாரணை நடத்தப்படவில்லை. மருத்துவக் கல்லூரி மாணவர் தேர்வு பற்றிப் பேரவையிலே நான் எடுத்து வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்று சில நாட்களுக்குப் பின் சென்னை உயர்நீதிமன்றம் மாணவர் ஒருவர் தொடுத்த வழக்கிலே தீர்ப்புக் கூறியது.

அந்தத் தீர்ப்புக்குப் பின் தமிழகத்து அரசியல் கட்சிகள் எல்லாம் அ.தி.மு.க. அரசு பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை அறிக்கைகள் வாயிலாகத் தொடர்ந்து விடுத்தன. 29.11.79 அன்று சென்னை வடபழனியிலே பொதுச் செயலாளர் பேராசிரியரின் தலைமையிலே நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்ட

த்தில் நாடாளுமன்றக் கழக வேட்பாளர்களின் முதல் பட்டியலை அறிவித்தேன். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் சென்னையிலே நடைபெற்ற முஸ்லிம் இளைஞர் மாநாட்டில் நானும், சஞ்சய் காந்தியும் குலாம் நபி ஆசாத்தும் கலந்து கொண்டு உரையாற்றினோம். மிகக் குறைந்த நேரமே அவருடன் பழகிய போதும் என்னுடன் பண்போடும் மிகுந்த மரியாதையோடும் அவர் பழகியதும், பேசியதும் என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். 1.12.79 அன்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.கழகத் தேர்தல் சிறப்பு மாநாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, கழக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலையும் அறிவித்தேன்.

புதுவைச் மாநில சட்டமன்றத் தேர்தலிலே தி.மு.கழகம் 15 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 13 இடங்களிலும் என்று கூட்டணி அமைத்துக் கொண்டு அங்கும் கூட்டாகப் போட்டியிட்டன. சரண்சிங் அமைச்சரவையிலே அ.தி.மு.க. சார்பிலே இரண்டு பேர் அமைச்சர்களாகப் பதவி வகித்த நிலையிலே கூட அந்தத் தேர்தலிலே அ.தி.மு.க. சரண்சிங் கட்சியை 'அம்போ'வென விட்டு விட்டு, ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்துக்கொண்டு அ.தி.மு.க. 24 இடங்களிலும் ஜனதா பத்து இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களிலும் என்று பங்கீடு செய்து கொண்ட நிலையிலே போட்டியிட்டன.

எனவே அதுபற்றிக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருமதி அனந்தநாயகி விடுத்த அறிக்கையிலே, "சரண்சிங்கின் மக்கள் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து மத்தியில் அமைச்சரவை அழைத்தபோது அந்த அமைச்சரவையிலே அ.தி.மு.க.வும் சேர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தேவையான இலாகாவையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். அரசியல் நாணயம், நாகரீகத்தின்படி அதே அமைப்பு, அதே கூட்டு தமிழ் நாட்டிலும் அமைக்கப்படலாம் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் அ.தி.மு.க.விற்கு எள்ளளவும் அந்த எண்ணம் இல்லை என்பதை நாங்கள் கடைசி நேரத்திலாவது புரிந்து கொண்டோம். இனிமேல் அ.தி.மு.க.வுடன் கூட்டுப் பற்றிப் பேசுவதில் அர்த்தம் இல்லை. எனவே தனித்துப் போட்டியிடப் போகிறோம்" என்று தெரிவித்தார்.

அந்தக் கட்சியைச் சேர்ந்த வேறு சிலர் சரண்சிங் அமைச்சரவையிலிருந்து அ.தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பினார். அவைகளுக்கெல்லாம் பதில் சொல்ல முற்பட்ட முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., சரண்சிங் கட்சியுடன் உறவு ஏற்படாததால் மத்திய அரசில் உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்ற பிரச்சினை எழவில்லை என்றும், இங்குள்ள அரசியல் நிலைமை வேறு; துரோகம் செய்துவிட்டதாக அனந்தநாயகி கூறுவதற்கு அர்த்தமே இல்லை என்றும் தருகிறோம் என்று சொல்லிவிட்டுத் தராமல் போனால் அது துரோகம், பேச்சு வார்த்தை எதுவுமே நடைபெறவில்லை.

அது எப்படித் துரோகம் ஆகும் என்றும் கூறினார். சிவகங்கை, தொகுதியில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட ப.சிதம்பரம், ஆர்.வி. சாமிநாதன் ஆகிய இருவரது பெயரையும் இந்திரா காங்கிரஸ் கட்சி அறிவித்து, இருவருமே வேட்பு மனுத்தாக்கல் செய்தபிறகு அதிகார பூர்வமான வேட்பாளர் ஆர்.வி.சாமிநாதன் என்று மேலிடம் அறிவித்ததால், ப. சிதம்பரம் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதோடு கட்சியிலிருந்தும் அரசியலிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

கடலூர், திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதிகளில் அந்த மாவட்டத்தில் இல்லாத இரண்டு காங்கிரஸ்காரர்களை வேட்பாளராக நிறுத்த இந்திரா காந்தி முடிவு செய்ததை அறிந்த நான் அந்தத் தொகுதிகளில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி அவர்களும், முத்துக்குமரன் அவர்களும்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டுமென்று இந்திரா காந்தி அவர்களிடம் எடுத்துரைத்து அவ்வாறே அவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

பிரதமர் சரண்சிங், அவரது அமைச்சரவையிலே அமைச்சர்களாக இருந்த அ.தி.மு.க. அமைச்சர்கள் இருவருக்கும் எழுதிய கடிதத்திலே மத்தியில் ஜனதா அரசு அமையப் பாடுபடப் போவதாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது. எனவே என் அமைச்சரவையிலே அ.தி.மு.க. நீடிப்பது சரியல்ல; இருவரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று தெரிவித்ததன் பேரின் நான்கு மாதங்கள் அமைச்சர்களாகப் பதவிவகித்த அ.தி.மு.க. அமைச்சர்கள் திருமதி சத்தியவாணி முத்து அம்மையாரும், பாலா பழனூரும் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

10.12.1979 அன்று சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நானும், இந்திரா காந்தியும் கலந்து கொண்டோம். ஐதராபாத்திற்குச் செல்லும் வழியில் சென்னையிலே போட்டியிடும் மூன்று வேட்பாளர்களையும் ஆதரித்து இந்திராகாந்தி உரையாற்றினார். காங்கிரஸ் வேட்பாளராக தென் சென்னையிலே ஆர். வெங்கட்ராமனும் தி.மு.க. வேட்பாளர்களாக மத்திய சென்னையிலே டாக்டர் கலாநிதியும், வடசென்னையிலே ஜி.லெட்சுமணனும் போட்டியிட்டார்கள்.

கொட்டும் மழையிலே நடைபெற்ற அந்தக் கூட்டத்திலே பல்லாயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவைத் தாண்டிய போதும் காத்திருந்து பேச்சைக் கேட்டனர். இந்திராகாந்தியின் ஆங்கில உரையை முரசொலி மாறன் தமிழிலே அன்று மொழி பெயர்த்தார். அம்மையாரை ஆந்திராவிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த சென்னாரெட்டியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.