நெஞ்சுக்கு நீதி
தி.மு.க. - இ.காங்கிரஸ் தேர்தல் · 265 / 391
49. தி.மு.க. - இ.காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு! .9.1979 காலையில் இந்திரா காந்தியைச் சந்திப்பதற்காக நான், தென்னரசு, ஆற்காடு வீராசாமி மூவரும் டெல்லி செல்வதாகத் திட்டமிட்டு, அன்று அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா என்பதால் காலையில் 5.30 மணி அளவிலேயே அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு விமான நிலையம் சென்றோம். ஆனால் அந்த விமானம் இயந்திரக்கோளாறு எனக் காரணம் கூறப்பட்டு இரத்துச் செய்யப்பட்டுவிட்டது.
அதன் காரணமாக இந்திரா காந்தியை அன்றைய தினம் சந்திக்க இயலாமல் செய்துவிட்டதாகச் சிலர் எண்ணி மகிழ்ந்தனர். விமானம் இரத்தானது பற்றி டெல்லியிலே இருந்த முரசொலிமாறனுக்குத் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துவிட்டு, அன்று இரவு 7.30 மணிக்குப் புறப்படும் விமானத்தில் நாங்கள் மூவரும் டெல்லி சென்றடைந்தோம். 10.30 மணிக்குத்தான் நாங்கள் சென்ற விமானம் டெல்லியை அடைந்தது. ஆனால் விமான நிலையத்திலே இறங்கியதும், இந்திரா காந்தி அம்மையார்; வீட்டிலே எனக்காகக் காத்திருப்பதாகவும், விமானம் எப்போது வந்தாலும் நேரடியாக அவரது வீட்டிற்கு வருமாறு தெரிவித்திருப்பதாகவும், முரசொலி மாறன் கூறினார்.
எனவே விமான நிலையத்திலிருந்து நேராக இந்திரா காந்தி வீட்டிற்குச் சென்றோம். அங்கே இந்திரா காந்தி, சி.எம்.ஸ்டீபன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆர்.வி.சாமிநாதன், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் என்னை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். நான்காண்டுகளுக்குப் பின்னர் நானும் இந்திரா காந்தி அம்மையாரும் அன்றுதான் சந்தித்தோம். பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே வீட்டிற்கு நான். என் குடும்பத்தினரோடு சென்ற போது எங்களை வரவேற்று அம்மையார் தானே உணவு பரிமாறிய அந்த நினைவுகள் எல்லாம் என் கண் முன்னால் தோன்றின.
அவருக்கும் 1971ஆம் ஆண்டு அவருடைய வெற்றிக்காக நான் பாடுபட்டது எல்லாம் நினைவிற்கு வந்திருக்கக்கூடும். பின்னர் இருவரும் சுமார் ஒருமணி நேரம் பேசினோம். பேச்சுவார்த்தையின் முடிவுகளை வெளியே அந்த நேரத்திலும் காத்திருந்த செய்தியாளர்களிடம் சி.எம்.ஸ்டீபன் தெரிவித்தார். அது வருமாறு:- "இந்திரா காங்கிரசுக்கும், தி.மு.கழகத்திற்கும் இடையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியிலும் இந்திரா காங்கிரஸ் போட்டியிடும்.
தி.மு.கழகம் மீதியுள்ள 17 தொகுதிகளில் போட்டியிடும். எந்தெந்தத் தொகுதிகள் யார் யாருக்கு என்பதை இரு கட்சித் தலைவர்களும் கூடிப் பேசி முடிவெடுப்பார்கள். யாருக்கு எந்தத் தொகுதி என்பதில் எந்தப் பிரச்சினையும் வராது. சென்னையிலிருந்து இன்று காலை டெல்லி வரும் விமானத்தில் ஒரு பயணி டெல்லி வருவதாக இருந்தது. அந்தப் பயணி டெல்லி வருவதை இங்கேயுள்ள மேலிடத்தினர் விரும்பவில்லை. தடுக்க விரும்பினர். திடீரென விமானம் இரத்தும் செய்யப்பட்டது சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
அவை தீர்க்கப்படவேண்டும். டெல்லி மேலிடம் தடுக்க விரும்பிய பயணி தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி தான்." இவ்வாறு சி.எம்.ஸ்டீபன் செய்தியாளர்களிடம் கூறினார். செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, தொகுதி பங்கீடு பற்றித் தெரிவித்ததோடு, இந்திரா காந்தியோடு தேர்தல் உடன்பாடு பற்றியும், பொதுவாக நாட்டில் இன்றுள்ள அரசியல் நிலைமைகள் குறித்தும், வருகிற பொதுத் தேர்தலை எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்தும் விவாதித்தோம்.
பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருந்தன என்றும் கூறினேன். 16-ந் தேதியன்று ஜனதா கட்சித் தலைவர் பாபு ஜெகஜீவன். அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து உரையாடினேன். பிஜுபட்நாயக்கையும் அவரது இல்லம் சென்று சந்தித்தேன். அங்கே கரூர் கோபால், மத்திய துணை அமைச்சரும் இருந்தார். பிஜு என்னைப் பார்த்து "கடைசியாக இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!"
என்றார். தி.மு.க., அ.தி.மு.க. இணைந்திட இப்போது எம்.ஜி.ஆர். சம்மதித்தாலும் நான் தயார் என்றேன். உடனே கோபால் தொலைபேசி மூலமாக சென்னைக்கு எம்.ஜி.ஆருடன் தொடர்பு கொண்டார். பிறகு, எம்.ஜி.ஆர். அந்த இணைப்பிலே ஆர்வம் காட்டவில்லை என்பதை கோபால் பிஜுவுக்கு விளக்கிய பிறகே அவர் உண்மையை உணர்ந்து சமாதானமடைந்தார். அடுத்த நாள் இரவு தஞ்சையிலே திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த பெரியார் பிறந்த நாள் விழாவிலே கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் 17ஆம் தேதி காலை டெல்லி விமானத்திலே புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தேன்.
16ஆம் தேதி சென்னை வந்த கர்நாடக மாநில முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ், எம்.ஜி.ஆரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசும்போது, இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.கழகத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள தேர்தல் கூட்டு கொள்கையற்றது. சர்க்காரியா கமிஷன் போட்ட இந்திரா காந்தியுடன் கருணாநிதி சேரலாமா என்றெல்லாம் கூறியிருந்தார். நான் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும், நிருபர்கள் "அர்ஸ் கூறியதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்" என்று கேட்டனர்.
"குரோவர் கமிஷன் (தேவராஜ் அர்ஸ் மீது) போட்ட சரண்சிங்கோடு தேவராஜ் அர்ஸ் கூட்டுச் சேரலாம் என்றால், நாங்களும் இந்திரா காங்கிரசோடு சேரலாம்." என்று பதில் கூறினேன். சென்னை திரும்பிய நான் சில மணித்துளிகள் கூட ஓய்வெடுக்கவில்லை. நேராக சென்னை அண்ணா சாலையிலுள்ள தந்தை பெரியார் சிலைக்குச் சென்று மாலை அணிவித்துவிட்டு, அங்கிருந்து தஞ்சை திராவிடர் கழக நிகழ்ச்சியிலே அன்று மாலையிலே கலந்துகொள்ள வேண்டுமென்பதற்காக எழும்பூர் புகைவண்டி நிலையத்திற்கு நேராகச் சென்று காலையில் புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் மூலமாக மாலையில் தஞ்சை சென்றடைந்தேன்.
என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி தொடர்ந்து நீடிப்பதில்லை என்றும் ஒவ்வொரு மகிழ்ச்சிக்குப் பிறகும் தொடர்ந்து ஒரு துயரம் வந்து சேரும் என்றும் நான் பலமுறை கூறியிருக்கிறேன். அந்த வகையில் டெல்லியிலிருந்து மகிழ்ச்சியோடு திரும்பிய எனக்கு திருச்சியிலே தனியார் மருத்துவனை ஒன்றிலே அனுமதிக்கப்பட்டிருந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. எனவே 17ஆம் தேதி இரவு தஞ்சையிலே திராவிடர் கழகச் சார்பில் நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவிலே உரையாற்றிவிட்டு திருச்சி சங்கிலியாண்டபுரம் சென்று மறைந்த ராதா அவர்களுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதையைச் செலுத்தினேன்.
என்னுடன் அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, தென்னரசு ஆகியோர் வந்திருந்தனர். மறைந்தவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டேன். என்னுடன் நடிகவேளுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தவர்கள் அந்த மூவருமே; இதை நான் எழுதும்போது இல்லை என்பதை எண்ணும்போது என் இதயம் குலுங்குகிறது! சென்னை வந்த இந்திரா காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஸ்டீபன் அவர்களைச் சந்தித்த செய்தியாளர்கள் "ஏன் அ.தி.மு.க.- வோடு உறவைத் துண்டித்துக் கொண்டீர்கள்" என்று கேட்டபோது, "அ.தி.மு.க.வை விடத் தி.மு.கழகம் நம்பிக்கைக்குரிய கட்சி என்பதை நாங்கள் கண்டோம்.
எனவேதான் தேர்தல் உடன்பாடு கொள்வதற்கு நாங்கள் அக்கட்சியைத் தேர்ந்தெடுத்தோம். அ.தி.மு.க.வும் அதன் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனும் நம்புவதற்கே முடியாதவர்கள். அண்மையில் டெல்லியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது அ.தி.மு.வும் அதன் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனும் மிகவும் சந்தர்ப்பவாதத்தோடு நடந்து கொண்டார்கள். எம்.ஜி.ராமச்சந்திரன் கட்சிக்குக் கட்சி தாவினார். பிரதமருக்கு முன்னும் மத்திய நிதியமைச்சருக்கு முன்னும் நடுக்கம் கொள்கிற ஒரு முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்.
எம்.ஜி.ராமச்சந்திரனிடம் சில விவகாரங்கள் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவர் மத்திய அரசின் முன் இப்படி பலவீனப்பட்டவராய் இருக்கமாட்டார். அண்மையில் டெல்லியில் எம்.ஜி.ராமச்சந்திரன் இந்திராகாந்தியைச் சந்திப்பதற்கு நேரம் கேட்டார். ஆனால், சொன்னபடி வரவில்லை. அவர் முன்னதாக சரண்சிங்கைச் சந்தித்ததும், சரண்சிங் அவரை ஒரு குட்டுக் குட்டி விட்டதுமே காரணம். தஞ்சை இடைத்தேர்தலின்போது இந்திரா காந்திக்குத் தந்த ஆதரவை கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டார் எம்.ஜி.ராமச்சந்திரன்.
அ.தி.மு.க.வுடன் உறவு கொள்ளக் கூடாது என்று எங்கள் கட்சி தீர்மானித்ததற்கு இதுவும் ஒரு காரணம். தி.மு.கழகத்திற்கும் எங்களுக்கும் ஏற்பட்டுள்ள கூட்டு முடிவானது. இனிமேல் அ.தி.மு.க.விற்குக் கதவைத் திறக்கமாட்டோம்." என்று ஸ்டீபன் கூறினார். அப்போது ரேபரேலி தொகுதியில் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் இந்திரா காந்தி, நெருக்கடி நிலையின் போது பத்திரிகை தணிக்கை கொண்டு வரப்பட்டது பற்றிக் குறிப்பிட்டு, இனி பத்திரிகை தணிக்கை கொண்டு வரப்பட மாட்டாது என்றும் நெருக்கடி நிலை நேரத்தில் நடந்த தவறுகளுக்காக வருந்துகின்றேன் என்றும் பேசினார்.
இந்திரா காங்கிரஸ் - தி.மு.க. உறவு ஏற்பட்டது குறித்துத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து, எதிர்ப்பாகப் பேசி வந்த தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் செயலாளர் நெடுமாறன் அந்தக் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைய பெருமாள் நியமிக்கப்பட்டார். அதையொட்டி தி.மு.கழகச் சட்டமன்றக் கட்சி அலுவலகத்திற்கு மூப்பனார், இளைய பெருமாள், திண்டிவனம் ராமமூர்த்தி, ப.சிதம்பரம், நாமக்கல் பாலசுப்பிரமணியம் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் வந்திருந்தனர்.
ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு மேல் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் அன்று ஒருவருக்கொருவர் மனம்விட்டு உரையாடினர். இதற்கிடையில் சென்னை வந்த மொரார்ஜி தேசாய் அவர்களும் எம்.ஜி.ஆரும் சந்தித்துப் பேசினார்கள். அப்போது பா.ராமச்சந்திரன், ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர், கே.ராஜாராம் ஆகியோர் உடன் இருந்தனர். பேச்சு வார்த்தை முடிவில் அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது ஜனதா கட்சிக்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே தேர்தல் உடன்பாடு கொள்கை அளவில் ஏற்பட்டதாகவும், மற்ற விவரங்கள் எல்லாம் பின்னர் முடிவு செய்யப்படுமென்றும் கூறினார்கள்.
இதனையடுத்து, அக்டோபர் 1, 2 ஆகிய நாட்களில் தமிகத்திலே சுற்றுப்பயணம் வருவதாக அறிவித்திருந்த பிரதமர் சரண்சிங் தனது பயணத்தை இரத்துச் செய்ததோடு, டெல்லியிலே தமிழக முதலமைச்சரைச் சந்தித்துப் பேசிய பின்னர்தான் தமிழகச் சுற்றுப்பயணத்தை உறுதி செய்யவியலுமென்று தெரிவித்தார். அதன் பேரில் 28.9.79 அன்று எம்.ஜி.ஆர். டெல்லி சென்று பிரதமர் சரண்சிங்கைச் சந்தித்துப் பேசினார். அந்த ஆண்டு தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவையும் தி.மு.கழகத்தின் சார்பிலே சென்னையிலே இந்திரா காந்தியை அழைத்து நடத்த வேண்டுமென்று திட்டமிட்டு, நான் டெல்லி சென்றிருந்த போது அவர்களிடம் கேட்டதையேற்று, செப்டம்பர் 30ஆம் தேதியன்று வருவதாகக்கூறி அதன்படி அந்த விழாவிலே கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்திரா காங்கிரசும், தி.மு.கழகமும் சில ஆண்டுகளுக்குப் பின் ஒன்றாக நடத்தும் விழா அது என்பதால், அந்த விழாவிற்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இரண்டு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இலட்சக்கணக்கிலே திரண்டனர். அன்று காலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இரண்டு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் கூடி இந்திரா காந்திக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து இந்திரா காந்தி திறந்த காரில் ஊர்வலமாக அரசினர் தங்கும் விடுதி "மல்லிகை"க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சில நிமிட நேர ஓய்வுக்குப் பிறகு இந்திரா காந்தி அவருடைய கட்சி ஊழியர் கூட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். சென்னையிலே இந்திரா காந்தியை நிருபர்கள் சந்தித்தபோது அவர்கள் கேட்ட முக்கிய கேள்விகள் சிலவும், அதற்கு இந்திரா காந்தி அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுடன் இந்திரா காங்கிரஸ் கூட்டுச் சேர வாய்ப்பு இருப்பதாகப் பேசப்படுகிறதே? இந்திரா காந்தி:- (கோபத்துடன்) நாங்கள் அ.தி.மு.க.
அல்ல; அடிக்கடி முடிவை மாற்றிக்கொள்ள! இப்போது உறுதியான தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்துள்ளோம். எனவே எங்களுடைய உடன்பாடு உறுதியானது; இறுதியானது. எங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒரு போதும் உடைக்க மாட்டோம். கடந்த காலத்தில் தி.மு.க. எங்களோடு இணைந்து நின்று செயல்பட்டிருக்கின்றார்கள். எனவே எங்களுக்குள் கருத்து வேறுபாடு - கசப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. கேள்வி:- எம்.ஜி.ஆர். உங்களுக்கு நண்பராக இருந்தவர்; உங்களுடைய நெருக்கடி நிலையை ஆதரித்தவர்; அவரோடு ஏன் உறவை முறித்துக் கொண்டீர்கள்?
இந்திரா காந்தி:- அவர் எனக்கு நண்பராக இருக்கலாம். ஆனால் ஜனதாவுக்கு மிகவும் பயந்து நடுங்குகிறவராகவும் இருக்கிறார். எம்.ஜி.ஆரை நம்ப முடியவில்லை. தஞ்சை இடைத்தேர்தல் நேரத்தில் இது நாட்டுக்கே தெரிந்த ஒன்று. எனவே நட்புக்காக அரசியலைப் பாழ்படுத்திக் கொள்ள முடியாது. ஜனதாவுடனும், சரண்சிங் கட்சியுடனும் உறவு வைத்திருப்பவரோடு இந்திரா காங்கிரஸ் எப்படி உடன்பாடு வைத்துக் கொள்ள முடியும்? கேள்வி:- சர்க்காரியா கமிஷன் தி.மு.க.
மீது போட்டது பற்றி? இந்திரா காந்தி:- வலது கம்யூனிஸ்டும், அ.தி.மு.க.வும் என்னை வற்புறுத்தினார்கள். அதனால் சர்க்காரியா கமிஷன் போடப்பட்டது. ஆனால் ஜனதா தலைவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு செய்த ஊழல்களோடு ஒப்பிடும்போது, கருணாநிதியின் மீது சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றுமே இல்லை. அன்று மாலையில் கடற்கரையில் நடைபெற்ற பத்து இலட்சம் பேர் கலந்து கொண்ட அந்தப் பொதுக் கூட்டத்திற்குக் கழகப் பொதுச் செயலாளர் சாதிக் பாட்சா வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் இளையபெருமாள், ஆர்.வி.சாமிநாதன், மூப்பனார், சிவாஜிகணேசன், அப்துல் சமது ஆகியோர் உரையாற்றிய பின் நான் உரையாற்றினேன். இறுதியாக இந்திரா காந்தி உரையாற்றிட அவரது பேச்சினை ப.சிதம்பரம் மொழி பெயர்த்தார். நான் பேசும்போது, டெல்லியிலே உடன்பாடு கண்டுவிட்டு, இந்திரா காந்தி வீட்டைவிட்டுப் புறப்படும் நேரத்தில் அவர்கள் கூறியதை நினைவூட்டினேன். ஆமாம், அப்போது இந்திரா காந்தி என்னிடம் "புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கிறோம்" என்று சொன்னார்.
உடனே நான், "இல்லை, இல்லை, பழைய அத்தியாயத்தைத் தான் தொடருகிறோம்." என்று குறிப்பிட்டேன். 1969 ஆம் ஆண்டு தி.மு. கழகச் சார்பில் நாடாளுமன்றத்திலே உறுப்பினர்களாக இருந்த 24 உறுப்பினர்களும் இந்திரா காந்திக்கு எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதையும் கூறி, என் பேச்சை முடிக்கும் போது ஆங்கிலத்திலே இவ்வாறு கூறினேன். "We do not want a 'Tamasha' at Delhi. We want a Government, a good Government and a stable Government.
We believe that only Thirumathi Indira Gandhi can give
us a stable Government." (டெல்லியிலே ஒரு கேலிக் கூத்து நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஒரு அரசினை - நல்ல அரசினை - ஒரு நிலையான அரசினைத்தான் விரும்புகிறோம். திருமதி இந்திரா காந்தியால் மட்டுமே ஒரு நிலையான அரசினைத் தந்திட முடியுமென்று நாங்கள் நம்புகிறோம்.) அன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும் போது, தன்னுடைய பிறந்த வீடும் (தி.மு.கழகம்) புகுந்த வீடும் (காங்கிரஸ்) ஒன்றாகச் சேர்ந்தது கண்டு பூரிப்படைகிறேன் என்று பேசினார்.
இந்திரா காந்தி அந்தப் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, "நாங்கள் தவறு செய்திருக்கிறோம்; அதை உணர்ந்து நாங்கள் செய்த தவறுகளை ஏற்றுக் கொண்டு, அந்தத் தவறுகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். நாங்களும் மனிதர்கள்தான்; மனிதர்கள் எல்லோரும் தவறு செய்யக் கூடியவர்கள் தான்! தவறுகள் செய்த பிறகு அதை உணர்ந்து, தவறுகளில் இருந்து தன்னை மாற்றிக் கொள்கிறாரா என்றுதான் நீங்கள் பார்க்க வேண்டும்.
தவறுகளைச் செய்த நான், நாட்டு மக்களுக்கு ஒரு உறுதி மொழியைத் தந்திருக்கிறேன். அன்று நடைபெற்ற தவறுகள் மீண்டும் நடைபெறாது. நான் செய்த குற்றங்கள் மீண்டும் நடைபெறாது. நான் செய்த குற்றங்கள் என்று என்மீது சுமத்தப்பட்டவைகளில் பல காரியங்கள் என்னுடைய கவனத்திற்கே வராமல் நடைபெற்ற காரியங்களாகும். நான் பிரதமராக இருந்தவள் என்ற முறையில் அந்தக் காரியங்களுக்கும், தவறுகளுக்கும் முழு அளவில் தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்.
தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி இங்கே பேசும்போது காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.கழகத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள நட்புத் தொடரவேண்டுமென்று கூறினார். அதே உணர்வு தான் எனக்கும் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.கழகத்திற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் நிலைமைகள் தெளிவாகவே அப்போது தெரிந்தன. ஒன்று உடன்படுவோம்; அல்லது மாறுபடுவோம். உடன்பாடும் இல்லாமல், வேறுபாடும் இல்லாமல் வெளியே அதாவது வெளிப்பூச்சுக்கு உடன்படுவதைப் போலக் காட்சி அளித்துவிட்டுத் திரைக்குப் பின்னால் இரகசியமான நடவடிக்கைகளை தி.மு.கழகம் எடுத்ததே கிடையாது.
தி.மு.கழகத்தின் தலைவர் கருணாநிதி அவர்கள், நண்பராக இருந்தாலும், விரோதியாக இருந்தாலும் இரண்டிலும் உறுதியாக இருப்பவர்; ஒரு நோக்கத்தை வைத்து, ஒரு இலட்சியத்தை வைத்து, சில கொள்கைகளை வைத்து, தேசிய அடிப்படையிலே மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலே இரண்டு கட்சிகளும் இணைந்து உடன்பாடு கொண்டிருக்கின்றன."
என்று கூறினார். அப்போது வெளிவந்த "டைம்ஸ் ஆப் இந்தியா" இந்திரா காந்தியின் சென்னை வருகை குறித்து எழுதும்போது, "விமான நிலையத்தில் எங்கெல்லாம் இடம் இருந்ததோ, அங்கெல்லாம் மக்கள் கூட்டம்தான்! விமான நிலைய மாடி, கூரை, மரங்கள், திறந்த வெளி, எங்கும் மக்கள் வெள்ளமாகக் காட்சி அளித்தது. ஒரு பிரபல பத்திரிகையின் புகைப்படக்காரர் கூறுகையில் தனது முப்பதாண்டு அனுபவத்தில் விமான நிலையத்தில் இப்படியொரு சிறப்பான பெரும் வரவேற்பைத் தான் பார்த்தது இல்லை என்றார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவரது தளபதிகளும், இந்திரா காங்கிரஸ் தலைவர் இளையபெருமாளும் இந்திராவை வரவேற்றனர். இந்திராவை மக்கள் வெள்ளம் சூழ்ந்து அவரை வேனுக்கு அழைத்துச் சென்றது, பெரும் பாடாகிவிட்டது. தி.மு.க. வேனில் இந்திரா ஏறினார். தி.மு.க. தொண்டர்கள் வெள்ளையில் கறுப்பு சிவப்பு கோடு போட்ட உடையணிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். அவர்கள் வண்டியில் இந்திராவையும், கருணாநிதியையும் பெரும்பாடு பட்டுப் பாதுகாப்பாக ஏற்றினார்கள்.
'மல்லிகை' எனும் தங்கும் விடுதிக்குச் செல்லும் வழி நெடுக வரவேற்பு வளைவுகள், தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருந்தனர். வழி நெடுக வரவேற்பளித்தனர். சென்னை மெரினா கடற்கரையில் நடந்த மிகப்பெரிய கூட்டங்களில் இந்திரா காந்தி அன்று கலந்து கொண்ட கூட்டமும் ஒன்று. மக்கள் வெள்ளம் அலை மோதியது" என்று குறிப்பிட்டிருந்தது.
