உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/தி.மு.க - அ.தி.மு.க.
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

தி.மு.க - அ.தி.மு.க. · 264 / 391

48. தி.மு.க - அ.தி.மு.க. இணைப்புக்கான முயற்சி? ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் இறுதியில் நெல்லை மாவட்டத்தில் 29ஆம் தேதியன்றும், குமரி மாவட்டத்தில் 30ஆம் தேதியன்றும், மீண்டும் நெல்லை மாவட்டத்தில் 31ஆம் தேதியன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். காலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் மூன்று நாட்களிலும்! மூன்றாம் நாள் காலையில் நெல்லை மாவட்ட நிகழச்சிகளிலே கலந்து கொள்ளப் புறப்பட்டு, செட்டிகுளம், இருக்கத்துரை, புல்ல மங்கலம் ஆகிய ஊர்களில் கழகக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு ராதாபுரம் நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள வந்து கொண்டிருந்தபோது, செபாஸ்டியன் என்ற ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஓர் இளைஞன், காரில் நான் சென்று கொண்டிருந்போதே என்னைக் குறி பார்த்து ஐந்து அங்குல நீளமுள்ள உளி ஒன்றை மிக வேகமாக வீசினான்.

அந்த உளி காரின் முன் கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு என் நெற்றியை நோக்கி வந்தபோது, கண் இமைக்கும் நேரத்திற்குள் நான் அதைக் கண்டு குனிந்து விட்ட காரணத்தினால், அந்த உளி என் தலைக்குப் பின்னால் இருந்த கண்ணாடியிலே மோதிக் கீழே விழுந்தது. என் உடல் முழுவதும் காரின் கண்ணாடி சிதல்கள்! கழகத் தோழர்கள் உடனே அந்த வெறியனைக் கையும் களவுமாகப் பிடித்து அவன் தப்புவதற்குள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் காரணமாக என்னுடன் பயணம் செய்த தென்னரசு, மேலூர் மலைச்சாமி, வை.கோபால்சாமி, பாளை சண்முகம், தென்காசி கதிரவன், ஏ.எல். சுப்பிரமணியம், தூத்துக்குடி இரா. கிருட்டினன், நெல்லை நெடுமாறன் ஆகியோர் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர். நானே அவர்களை எல்லாம் தேற்றி என்னுடைய சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்தேன். உணர்ச்சி வயப்பட்டிருந்த கழகத் தோழர்களுக்கெல்லாம் கட்டுப்பாடுக் காத்திட வேண்டுமென்ற அண்ணாவின் அறிவுரையைக் கூறிவிட்டு, சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தேன்.

அன்றிரவு தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் கழகத் தோழர்கள் எல்லாம் இனி ஆளுக்கொரு கத்தி வைத்துக் கொள்ளத் தலைவர் அனுமதிக்க வேண்டுமென்று கூறினார். நான் பேசும்போது "கத்தியைத் தீட்டாதே; புத்தியைத் தீட்டு" என்ற அண்ணாவின் வாசகத்தை நினைவூட்டி, அனைவரும் அமைதி காத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். மறுநாள் மதுரையில் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து மூப்பனார், என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் ராதாபுரம் நிகழ்ச்சி குறித்து விசாரித்தனர்.

என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் எனக்கு முடிவு ஏற்படுத்த நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் இதுவும் ஒன்று என்ற வகையிலே இதனை எடுத்துக்கொண்டு, மறு நாள் சென்னையிலே அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள சென்னை வந்து சேர்ந்தேன். உளியை வீசிய செபாஸ்டியன் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இளைஞர் என்பதால் அவரைத் தப்புவிப்பதற்காக அவர் மனநோயாளி என்றெல்லாம் கூறப்பட்டது. எனினும் அது குறித்து வழக்கு நீதிமன்றத்திலே நடைபெற்றுத் திருநெல்வேலி மாவட்டத் துணை நீதிபதி உளிவீசிய இளைஞருக்கு ஓராண்டுக் காலக் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

1979ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 2-ஆம் நாள் எம்.ஜி.ஆர். அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையிலே இருள் மொய்க்கின்ற வகையிலே ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது பிற்படுத்தப்பட்ட மக்கள், அதற்கான சலுகைகளைப் பெறப் பெற்றோரின் வருமானம் ஒன்பதாயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்ற படுபாதகமான உத்தரவுதான் அது. அந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்திருந்தார்கள். அரசின் ஆணையை அறிந்து தமிழகமே கொந்தளித்தது.

எதிர்க் கட்சிகள் எல்லாம் ஒரு அணியிலே திரண்டு அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெறவேண்டுமென்ற கோரிக்கையை வைத்தன. தி.மு. கழகத்தின் சார்பில் இதுபற்றி விவாதித்தது முடிவெடுக்க அவசரப் பொதுக்குழு சென்னையில் ஜூலை 14-ஆம் தேதி கூட்டப்பட்டது. திராவிடர் கழகத்தின் சார்பில் சேலத்தில் ஜூலை 14, 15 ஆகிய நாட்களில் பிற்படுத்தப்பட்டோர் உரிமைப் பாதுகாப்பு மாநாடு அறிவிக்கப்பட்டது. "எச்சரிக்கை தேவை! எழுச்சி தேவை!"

என்ற தலைப்பில் வகுப்புரிமைப் போராட்டம் குறித்தும், அ.தி.மு.க. அரசு பிறப்பித்த உத்தரவு காரணமாக எத்தகைய பாதகம் ஏற்படும் என்பது குறித்தும் நீண்ட கடிதம் எழுதினேன். அன்றைய தினம் சென்னையிலே கூடிய கழகப் பொதுக்குழுவிலே அ.தி.மு.க. அரசு பிறப்பித்த அபாயகரமான உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டுமென்றும், பொருளாதார அடிப்படையில் தாழ்ந்து கிடக்கின்ற ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு, அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களானாலும், தாழ்த்தப்பட்டவர்களானாலும், முன்னேறிய வகுப்பின- ரானாலும்.

அவர்களுக்கு பொது இட ஒதுக்கீட்டிலிருந்து குறிப்பிட்ட விகிதாசாரத்தை ஒதுக்குவதற்கான வேறு ஏற்பாடுகளை செய்யச் வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றினோம். 22.7.79 அன்று வகுப்புரிமைப் பாதுகாப்பு நாள் கூட்டங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. விருதுநகரில் நடைபெற்ற வகுப்புரிமைப் பாதுகாப்பு நாள் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அதேநாளில் சென்னை பெரியார் திடலில் என்.எம்.மணிவர்மா தலைமையிலே நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் பேராசிரியர் கலந்து கொண்டார்.

அந்த மாநாட்டில் ஒரு மாத காலத்திற்குள் அரசு உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால், அந்த உத்தரவின் நகல் எரியூட்டப்பட்டு அதன் சாம்பலை முதல் அமைச்சருக்கு அனுப்புவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற அந்தப் போராட்டம் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் கூறும்போது, திராவிடர் கழகத்தினர் அனுப்பும் சாம்பல், கோட்டைக்குள் வைக்கப்பட்டிருக்கும் பூந்தொட்டிகளுக்கு உரமாக அமையுமே தவிரத் தமிழக அரசை ஒன்றும் செய்யாது என்று கூறினார்.

தமிழக அரசு பிறப்பித்த 9000 ரூபாய் வருமான வரம்பை எதிர்த்து மாணவர்கள் உயர்நீதிமன்றத்திலே வழக்குத் தொடுத்தார்கள். விக்ரமன் என்ற மீனவ சமூகத்தைச் சேர்ந்த மாணவரும், ரகுபதி என்ற வேட்டுவகவுண்டர் வகுப்பைச் சேர்ந்த மாணவரும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிலே தமிழக அரசின் ஆணை காரணமாகப் பொறியியல் கல்லூரியில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று கூறி இவர்கள் வழக்குத் தொடுத்திருந்தார்கள்.

இந்த வழக்கை நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், மோகன், ராமசாமி ஆகியோர் விசாரித்துத் தீர்ப்புக் கூறினார்கள். நீதிபதிகள் கோகுலகிருஷ்ணனும் மோகனும் அரசு ஆணை செல்லும் என்றும், நீதிபதி ராமசாமி செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர். இந்த இயக்கத்துடன் சேர்ந்து வளர்ந்த இருவர், அரசு ஆணை செல்லும் என்று தீர்ப்பளித்தது பிற்படுத்தப்பட்ட மக்களையும் என்போன்றோரையும் திகைப்பில் ஆழ்த்தியது. என் செய்வது; பெரும்பான்மை அடிப்படையில் இரண்டு நீதிபதிகள் அரசு ஆணை செல்லும் என்று கூறியதால்; அதுவே தீர்ப்பாக அறிவிக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக அப்படி ஒரு தீர்ப்புக் கூறப்பட்ட போதிலும், அ.தி.மு.க. அரசு அந்த உத்தரவைத் தானாகவே திரும்பப் பெற வேண்டிய ஒரு நேரமும் வரத்தான் செய்தது. அது எப்போது என்பதைத் தொடர்ந்து எழுதுகிறேன். 22.8.79 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இந்தியாவிலே உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளிலே கவனம் செலுத்த முற்பட்டன. எந்தெந்தக் கட்சிகள் யார் யாரோடு கூட்டணி அமைப்பது, உடன்பாடு கொள்வது என்பதற்கான பேச்சுவார்த்தைகளிலும், ஏடுகள் அது பற்றிய பல யூகங்களை வெளியிடுவதிலும் அக்கறை காட்டின.

ஆகஸ்ட் 25-ஆம் தேதியன்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சந்தித்துத் தேர்தல் உடன்பாடு பற்றி ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார். நிருபர்கள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டு உண்டா என்று கேட்டதற்கு, இப்படிப்பட்ட சந்தேகம் எழ வேண்டிய சூழ்நிலை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றார். டெல்லியில் சரண்சிங் அமைச்சரவையிலே இடம் பெற்றிருப்பதால், பொதுமக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளதே என்று மீண்டும் நிருபர் கேட்டதற்கு, தேசாய் பிரதமராக இருந்தபோது அவரை ஆதரித்த நேரத்தில்தான் தஞ்சை இடைத்தேர்தலில் இந்திரா காங்கிரசை ஆதரித்தோம்.

இந்திராவைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக வழக்கு இருந்தாலும், இந்திரா காங்கிரசுடன் கூட்டுச் சேருவதில் தவறில்லை என்று தி.மு.க.வினர் கருதுகிறார்கள். அதுபோல நானும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். கருணாநிதிமீதும், மற்ற தி.மு.க. நண்பர்கள் மீதும் வழக்கு இருந்தாலும் அ.தி.மு.க.-தி.மு.க. தேர்தல் கூட்டு வரக்கூடாது என்பதல்ல. வாதத்துக்காக நான் இதைச் சொல்கிறேன். மக்களின் உணர்வுகளைக் காலம் எப்படி மாற்றுகிறதோ அதற்கேற்பக் கூட்டு அமையும்.

கட்சித் தொண்டர்களுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டால் தலைவர்களால் என்ன செய்ய முடியும்? என்றார். நிருபர்களை என்னை அணுகி இந்திரா காங்கிரசோடு உறவுகொள்ள ஏதாவது முயற்சி நடைபெறுகிறதா என்று கேட்டதற்கு, "இந்தியாவின் நிலைத்த தன்மைக்காகவும், ஜனநாயகம் கேலிக்கூத்தாக ஆகிவிடாமல் காக்கப்படுவதற்காகவும், தமிழ்நாட்டில் மக்கள் விரோத சக்தியாக விளங்குகிற அ.தி.மு.க.வை எதிர்த்து முறியடிப்பதற்காகவும், தி.மு.கழகத்துக்கும் இந்திரா காங்கிரசுக்கும் இடையே தேர்தல் உடன்பாடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லாமல் போய்விடவில்லை" என்று கூறினேன்.

என்னுடைய இந்தக் கருத்துக்கு காரைக்கால் பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பதில் கூறினார். அது வருமாறு... "கருணாநிதி அவர்களே, உங்கள் கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்த எதையும் பேசாதீர். இந்திராவுடன் கூட்டுச் சேர்ந்தால் ஒரு சவால் விடுகிறேன். 1977 தேர்தலில் நாங்கள் (அ.தி.மு.க.) இந்திரா காங்கிரசுடன் கூட்டுச்சேர்ந்து பெற்ற இடத்தை நீங்கள் பெற முடியுமா? முடியாவிட்டால் உங்கள் பெயரை மாற்றிக் கொள்கிறீர்களா?

35 இடங்களை நாங்கள் பெற்றோம். நீங்கள் உண்மையான தமிழன் என்றால் உண்மை திராவிடத் தொண்டன் என்றால், அத்தனை இடங்களையும் பிடியுங்கள். மேட்டில் நிறுத்தி மாலை போடுகிறேன். இதை அகங்காரமாகச் சொல்லவில்லை. கருணாநிதியால் முடியாது இது. 1971இல் தி.மு.க.வில் 25 எம்.பிக்கள் இருந்தார்கள். ஒருவராவது டெல்லியிலே மந்திரியாக முடிந்ததா?"

எம்.ஜி.ஆரின் இந்தச் சவால் பேச்சு 29.8.79 தேதியிட்ட தினத்தந்தியில் பெரிதாக வெளியிடப்பட்டது. செப்டம்பர் 6ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். டெல்லியிலே இருந்தார். அன்று மாலையில் அவர் இந்திரா காந்தியைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. அதற்குக் காரணம்; எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட குழப்பம் என்று 'எக்ஸ்பிரஸ்' போன்ற ஏடுகள் எழுதின. குழப்பத்திற்குக் காரணம்; அதே நாள் காலையில் அவர், பிரதமர் சரண்சிங்கைச் சந்தித்தபோது "அ.தி.மு.க., இந்திரா காங்கிரசுடன் உறவு கொள்வதாக இருந்தால் காபந்து சர்க்காரில் மத்தியில் அமைச்சர்களாக இருக்கும் இரண்டு அ.தி.மு.க.

அமைச்சர்களும் பதவி விலகி விடுவதுதான் நியாயமாகும்," என்று சரண்சிங், எம்.ஜி.ஆரிடம் கூறிவிட்டார். எனவே எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தியைச் சந்திக்காமலே திரும்பிவிட்டார். அதே செப்டம்பர் 6ஆம் தேதி மாலையில் டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர் பிஜுபட்நாயக் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு, முக்கியமான அரசியல் விஷயம் பேச வேண்டுமென்றும் சென்னைக்கு வந்து என்னைச் சந்திப்பதாகவும் கூறினார். நானும் அவர் என்னை சென்னைக்கு வந்து சந்திப்பதை ஒப்புக் கொண்டேன்.

இதற்கிடையில் ஏடுகளில் தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் இணைப்பதற்கான முயற்சிகளில் பிஜுபட்நாயக் ஈடுபடப் போவதாகச் செய்திகள் வந்தன. செப்டம்பர் 9ஆம் தேதி வேலூர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த என்னிடம் இது பற்றிக் கேட்டனர். "பூம்புகாரில் நிருபர்களிடம் பேசிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் ஒன்றாக இணைவதில் என்ன தவறு என்று கூறியிருக்கிறார். ஆனால் அதே நாள் மாலையில் காரைக்கால் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.

நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றி பெறாது என்று அறைகூவல் விடுத்துப் பேசியிருக்கிறார். எதற்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்" என்று கருத்துப்படப் பதில் அளித்தேன். என்னிடம் தொலைபேசியில் கூறியவாறு 12.9.79 அன்று பிஜுபட்நாயக் சென்னையில் என் வீட்டில் என்னைச் சந்தித்துத் தி.மு.க., அ.தி.மு.க. இணைப்புக் குறித்துப் பேசினார். நீண்ட நேரம் இருவரும் விவாதித்த பிறகு; ஏற்கனவே நான் கழகப் பொதுச் செயலாளருடனும் கழக முன்னணித் தலைவர்களுடனும் கலந்து பேசி எடுத்த முடிவுக்கேற்ப ; இரு கட்சிகளும் இணைந்திடச் சில நிபந்தனைகளைச் சொன்னேன்.

1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில் இயங்க வேண்டும். 2. அக்கட்சிக்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. 3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும். 4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.க.வில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை. 5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.

6. முக்கியமான விஷயம்; எம்.ஜி.ஆர். அவர்கள் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூகநீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். இவற்றைக் கேட்டவுடன்; பிஜு பட்நாயக் அவர்கள் மிகவும் மகிழ்ந்து உற்சாகத்துடன் "இந்த நிபந்தனைகளை எம்.ஜி.ஆர்.ஏற்றுக்கொள்ள எந்தக் கஷ்டமும் இருக்காது. நான் இப்போதே எம்.ஜி.ஆர். இல்லம் செல்கிறேன்.

இன்றைக்கே உங்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறேன்" என்றார். அதற்கு நான்; "அவரைச் சந்திப்பதில் எனக்கொன்றும் மறுப்பு இல்லை. சந்திப்பதற்கு முன்பு கழக முன்னோடிகள் அனைவரிடமும் நான் கலந்து பேச வேண்டும். பொதுச் செயலாளர் வெளியூர் சென்றுள்ளார். இன்று மாலையில் தான் வருகிறார். அவரையும் மற்றவர்களையும் கலந்து பேசிக் கொள்கிறேன். எனவே சந்திப்புக்கு நாளைய தினம் ஏற்பாடு செய்யுங்கள்" என்றேன். மறு நாள் 13.9.79 அன்று சந்திக்க முடிவாயிற்று.

அதற்குள் மாநில முழுவதுமுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்கள் அனைவரும் 13ந்தேதி காலையில் சென்னை வந்து சேர்ந்திடவே - அவர்களின் கருத்துக்களையும் நானும் பொதுச்செயலாளரும் கேட்டறிந்தோம். அதன்பிறகு அன்று 11 மணியளவில் பிஜுபட்நாயக் முன்னிலையில் நானும் எம்.ஜி.ஆரும் சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் சந்தித்

துப் பேசினோம். அப்போது கழகப்பொதுச் செயலாளர் பேராசிரியர், அ.தி.மு.க. சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். பிறகு நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் அந்த விடுதியின் வேறொரு அறையில் தனிமையில் பேசினோம். பிஜுபட்நாயக்கிடம் நான் தெரிவித்த கருத்துக்களும் நிபந்தனைகளும் உண்மைதானா என்று எம்.ஜி.ஆர். வியப்புடன் கேட்டார். இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில் இயங்க வேண்டுமென்பதற்கு தி.மு.க.

என்ற பெயரில் தான் ஏற்கனவே பல இடங்களில் கட்டிடங்கள், சொத்துக்கள் இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், தி.மு.க. என்பதுதான் அண்ணா உருவாக்கிய கழகம்; எனவே அந்தப் பெயரே நிலைக்கலாம் என்பதையும் அவரிடம் விளக்கினேன். அண்ணாவின் படத்தைப் பதித்துள்ள கொடியே இணைந்து விடப்போகும் கட்சியின் கொடியாக இருக்கட்டுமென்றும் கூறினேன். மற்றும் பிஜுபட்நாயக்கிடம் கூறிய மற்றவைகளையும் எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன். அவர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு கட்சிகளின் செயற்குழு, பொதுக்குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் கூட்டி இரு கட்சிகளின் இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அறுதியிட்டுக் கூறினார்.

பின்னா இருவரும் நாங்கள் தனித்துப் பேசிக்கொண்டிருந்த அறையிலிருந்து வெளியே வந்து பிஜுபட்நாயக்கிடமும் அங்கிருந்த இருகட்சிகளின் தலைவர்களிடமும் பேச்சின் முடிவு குறித்துத் தெரிவித்தோம். செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு கை குலுக்கினர். புகைப்படமெடுத்தனர். நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்தபோதும் நான், எம்.ஜி.ஆர் இருவருமே இரு கட்சிகளின் செயற்குழு, பொதுக்குழுக்களில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படுமென்று கூறினோம்.

இந்தச் சந்திப்பு நடைபெற்ற அதே நாளில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார், எம்.ஜி.ஆர். இருவரும் சந்தித்துப் பேசியதாகவும் சில ஏடுகள் செய்தி வெளியிட்டன. செப்டம்பர் 13-ஆம் தேதி நாங்களிருவரும் பிஜுபட்நாயக் முன்னிலையில் சந்தித்துப் பேசியதற்கு மறுநாள் 14.9.79 அன்று வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.க., அ.தி.மு.க. இணைப்புப் பற்றி உறுதியான கருத்து எதுவும் தெரிவிக்காதது மட்டுமல்ல; அவரை மேடையில் வைத்துக் கொண்டே அவரது அமைச்சர்கள் தி.மு.கழகத்தையும், என்னையும் மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகவும் தாக்கிப் பேசியிருக்கிறார்கள்.

சேப்பாக்கம் அரசினர் விடுதியில் நாங்கள் சந்தித்துப் பேசிய பிறகு வேலூர் பொதுக்கூட்டத்திற்கு இடையில் என்ன நடந்தது என்று தெரியாது. வேலூருக்குப் பிறகு இணைப்புப் பற்றிப் பேச்சுத் தொடரவில்லை. வேலூர் கூட்டத்துப் பேச்சுக்களினால் புண்பட்ட தி.மு.கழக முன்னணியினரும்; இணைப்பு என்பதில் தங்களுக்குள்ள மாறுபாடான கருத்தைத் தலைமைக்குத் தெரிவிக்கத் தொடங்கினர். யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தினர், என்னை அணுகி, "தொடர் நடவடிக்கை என்ன?"

என்று கேட்ட போது "இரு தரப்பிலும் தொடர் நடவடிக்கை இல்லை. இரு கட்சிகளின் தேர்தல் உடன்பாடுகள் வெவ்வேறாகத் தானிருக்கக் கூடுமெனக் கருதுகிறேன்" என்று பதில் அளித்தேன். பிஜுபட்நாயக், தனது முயற்சி வெற்றி பெற்றுவிட்டது என்ற மகிழ்ச்சியுடன் டெல்லியிலிருந்து எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்து இணைப்புக்கான அடுத்த முயற்சிகள் எப்படியிருக்கின்றன என்று விவரம் கேட்டார். நான் அவரிடம் வேலூரில் நடைபெற்ற அ.தி.மு.க.

கூட்டம் பற்றியும் அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரும் மற்ற அமைச்சர்களும் பேசிய கருத்துக்கள் இணைப்புக்கான அடிப்படையில் இல்லாதது மட்டுமல்ல; இணைப்புக் கூடாது என்ற நிலையில் இருந்தது என்பதையும் எனவே தி.மு.க. முன்னணியினரும், பல்வேறு மட்டங்களில் உள்ள செயல்வீரர்களும் இணைப்புக்கு இப்போது சாதகமாக இல்லையென்று கூறினேன். அவர் என்னை உடனே புறப்பட்டு டெல்லி வருமாறு கேட்டுக்கொண்டார். இதற்கிடையே இந்திராகாந்தி அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்தவரும், இந்திராகாந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த ஸ்டீபன், முரசொலிமாறனுடன் தொடர்பு கொண்டு-இந்தியாவின் நன்மைக்காகவும், ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டுமென்பதற்காகவும் நடந்தவைகளையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் தி.மு.க.வுடன் இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு கொள்ள விரும்புவதாகத் தெரிவித்து; இரண்டு மூன்று முறை மாறனிடம் அக்கருத்தை வலியுறுத்தவே, மாறன் அதுபற்றி எனக்குத் தகவல் தெரிவித்தார்.

1971ஆம் ஆண்டுக்கு முன்பு பிரதமர் இந்திராகாந்தி வங்கிகளை தேசிய உடமை ஆக்கியது, மன்னர் மானியங்களை ஒழித்தது போன்ற செயல்களுக்காகத் தி.மு.க.வும், இடது சாரி கட்சிகளும் அவரை ஆதரித்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரா காந்தியின் ஆதரவு பெற்ற வேட்பாளரான வி.வி.கிரியை ஆதரித்து வெற்றி பெறவும் செய்தது ஒரு கட்டம். அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. இந்திரா காங்கிரசுடன் உடன்பாடு கொண்டு நாடாளுமன்றத்திற்கு மட்டும் இந்திரா காங்கிரசுக்கு ஒன்பது இடங்களை விட்டுக் கொடுத்து வெற்றி பெறச்செய்தது.

அதன் பின்னர் 1975ல் நெருக்கடிக் காலப் பிரகடனம்-தி.மு.க. எதிர்ப்பு. 1976இல் ஆட்சிக் கலைப்பு - மிசாக் கொடுமை - இத்தனைக்கும் பிறகு, மீண்டும், தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு கொள்ள 1980ல் இந்திராகாந்தி பெருமுயற்சி எடுத்து; என்னையும் உடனடியாகப் புறப்பட்டு டெல்லிக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறுகிறார் என்றால்; அது அரசியலில் ஒரு பெரிய திருப்பு முனைதான்! அந்த திருப்புமுனைக்குத் தி.மு.க.

எப்படிச் சம்மதித்தது? ஏன்? அதனால் தி.மு.க.வுக்கு மீண்டும் ஒரு படிப்பினை ஏற்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கான பதில் நான் தொகுத்துக்கூற இருக்கும் நிகழ்ச்சிகளிலேயே கிடைக்கும்.