உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/"ஜன கண மன" பாடிய
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

"ஜன கண மன" பாடிய · 263 / 391

47. "ஜன கண மன" பாடிய ஜனதா கட்சி மொ ரார்ஜி தேசாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தாரே தவிர நாடாளுமன்ற ஜனதா கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. புது அமைச்சரவை அமைப்பது யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 16.7.79 அன்று சரண்சிங் துணைப்பிரதமர் பதவியையும், ஜனதா கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, ராஜ் நாராயணன் கட்சியோடு இணைந்தார். அதையடுத்து ராஜ் நாராயணன் ஜனதா(எஸ்) கட்சித் தலைமையிலிருந்து விலகிக் கொண்டு, சரண்சிங்கை அந்தக் கட்சிக்குத் தலைவராக வழிவிட்டார்.

சரண்சிங், ராஜ் நாராயணன், எஸ்.என்.மிஸ்ரா ஆகியோர் குடியரசுத் தலைவரைச் சந்தித்துத் தங்களால் அமைச்சரவை அமைக்க முடியுமென்றும், மற்ற கட்சிகளின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்கள். ஆதாரத்துடன் அதனை நிரூபிக்குமாறு குடியரசுத் தலைவர் சஞ்சீவரெட்டி அவர்களிடம் கூறினார். நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது, அதுவும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது, பிரதமர் குடியரசுத் தலைவரிடம் அவைக்குத் தெரிவிக்காமல் ராஜினாமா தரலாமா என்ற பிரச்சனை நாடாளுமன்றத்திலே 16.7.79 அன்று எழுந்ததால், நாடாளுமன்றக் கூட்டம் காலவரையறையின்றித் தள்ளி வைக்கப்பட்டது.

17.7.79 அன்று ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 100 பேர் ஜெகஜீவன்ராம் அவர்களைச் சந்தித்து அவர் பிரதமராகத் தங்களுடைய ஆதரவைத் தெரிவிப்பதாதக் கூறினார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஸ்தாபனக் காங்கிரசின் தலைவர் என்ற முறையிலே ஒய்.பி.சவானுக்குக் குடியரசுத் தலைவர் கடிதம் மூலம் அமைச்சரவை அமைத்திட இயலுமா என்று எழுதிக்கேட்டார். அதன் பேரில் சவான் சரண்சிங்கிற்கு அனுப்பிய தகவலில், தான் பிரதமராக ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு சரண்சிங் பிரதமர் பதவி தனக்கு வேண்டுமென்றும், அதற்குச் சம்மதித்தால்தான் கூட்டு அமைச்சரவை அமைக்கச் சம்மதிப்பேன், இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை என்று தெரிவித்துவிட்டார். அதன்பின்னர் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, சரண்சிங்கை பிரதமராக ஏற்றுக் கொள்வதற்குச் சம்மதம் தெரிவித்தது. குடியரசுத் தலைவருக்கு சரண்சிங் தன்னை அமைச்சரவை அமைக்க அழைக்கும்படி கடிதம் எழுதினார்.

ஜெகஜீவன்ராமும் களத்திலிருந்து விலகிக்கொண்டு தேசாய் பிரதமராகத் தொடர தன்னுடைய ஆதரவைத் தருவதாகக் கூறினார். 23.7.79 அன்று குடியரசுத் தலைவர், தேசாய், சரண்சிங் இருவருக்கும் எழுதிய கடிதத்தில் அவரவர்களுடைய மெபான்மையை நிரூபிக்கும்படியும், 48 மணி நேரத்திற்குள் அதற்கான பட்டியலைத் தன்னிடம் தர வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். சரண்சிங்கிற்கு இந்திரா காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக 23.7.79இல் தெரிவித்தது.

18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க. தன்னுடைய ஆதரவை யாருக்குத் தெரிவிப்பது என்பதைத் தெரிவிக்க 24.7.79 அன்று டெல்லியிலே எம்.ஜி.ஆர். தலைமையிலே கூடி ஆலாசனை நடத்தி, முடிவில் தேசாய்க்கு தங்கள் கட்சியின் ஆதரவைத் தெரிவிக்க முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்ற அ.தி.மு.க. தலைவர் பாலாபழனூர் நிருபர்களிடம் கூறினார். 25.7.79 அன்று குடியரசுத் தலைவரிடம் தேசாய் கொடுத்த பட்டியலில் 279 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கியிருந்தன.

சரண்சிங் கொடுத்த பட்டியலில் 280 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கியிருந்தன. ஆனால் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 538 தான். ஆகவே பட்டியலில் உள்ள பெயர்களைக் குடியரசுத் தலைவர் பரிசீலனை செய்தார். இரு பட்டியலிலும் போலியாக இடம் பெற்றிருந்த பெயர்களை நீக்கிவிட்டுக் குடியரசுத் தலைவர் இறுதியாகப் பார்த்தபோது சரண்சிங்கிற்கு 262 உறுப்பினர்களுடைய ஆதரவும், தேசாய்க்கு 236 உறுப்பினர்களின் ஆதரவும் இருப்பது தெரிந்தது.

எனவே சரண்சிங்கை அமைச்சரவை அமைக்கும்படி குடியரசுத் தலைவர் கடிதம் எழுத அவர் பிரதமராக ஆனார். சரண்சிங் பிரதமராக ஆனது பற்றி நான் விடுத்த அறிக்கையிலே "முதல் தடவையாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வந்திருப்பது வரவேற்கத்தக்கது. சரண்சிங் பிரதமராக வருவதற்கு ஆதரவு அளித்த கட்சிகளையும் தலைவர்களையும் பாராட்டுகிறேன். அமைந்துள்ள ஆட்சி நிலையானதாக இருக்க வேண்டுமென்பது என் ஆசை.

மாநில சுயாட்சி, இந்தி ஆதிக்கத்திற்கு இட தராத நிலை இவற்றை சரண்சிங் தலைமையிலான மத்திய அரசின் மூலம் தி.மு. கழகம் எதிர்பார்ப்பது தவறல்ல" என்று குறிப்பிட்டேன். தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் நிருபர்கள் "உங்கள் கட்சி (அ.தி.மு.க.) மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம் ஆகியோரைக் கொண்ட ஜனதாவை ஆதரிப்பதாக அறிவித்திருந்தது; இப்போது உங்கள் நிலை என்ன?"

என்று கேட்டார்கள். அதற்கு எம்.ஜி.ஆர் "மத்தியில் நிலையான அரசு தேவை என்றும் நிலையான அமைச்சரவை யார் அமைத்தாலும் ஆதரவு தருவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தோம். அந்தக் கொள்கையில் மாற்றம் இல்லை" என்று கூறினார். தேசாய் நாடாளுமன்ற ஜனதா கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த இடத்திற்கு ஜெகஜீவன்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தேசாய் சந்திரசேகருக்கு எழுதிய கடிதத்தில் குடியரசுத் தலைவரிடம் தன் சார்பாகக் கொடுக்கப்பட்ட பட்டியலைச் சரியாக பரிசீலனை செய்யாமல் சில பெயர்கள் தனக்குத் தெரியாமலே சேர்க்கப்பட்டு விட்டன.

என்றும், இருந்தாலும் தவற்றுக்குப் பொறுப்பேற்றுத் தான் நாடாளுமன்ற ஜனதா கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அரசியல் வாழ்க்கையிலிருந்தும் ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்திருந்தார். 28.7.79 அன்று பிரதமராக சரண்சிங்கும், துணைப்பிரதமராக சவானும் மற்றும் ஏழு பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றார்கள். காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்ட சி.சுப்பிரமணியம் உட்பட ஆறு பேர் அவர்கள் கட்சிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அன்றைய தினம் பதவியேற்கவில்லை.

அ.தி.மு.க. தேசாய்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், சரண்சிங் அ.தி.மு.க.விற்கு அமைச்சர் பதவி மத்திய அமைச்சரவையில் தருவதற்கு முன்வந்து தன் விருப்பத்தை வெளியிட்டார். அதுபற்றி நிருபர்கள் என் கருத்தைக் கேட்டபோது, பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்ற பரந்த மனப்பான்மையில் சரண்சிங் இருப்பதாகக் கொள்ளலாம் என்று கூறினேன். 30.7.79 அன்று சி.சுப்பிரமணியம் உட்பட 17 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

வடக்கே உள்ள குருஷேத்திரத்தில் பாரத யுத்தம் 18 நாட்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறும். குருஷேத்திரத்திற்கு அருகேயுள்ள டெல்லியிலே பாரதப்பிரதமர் யார் என்ற போராட்டம் ஜூலை 9ந்தேதி தொடங்கி, ஜூலை 2ல் முடிவுற்ற போதிலும், அது முற்றுப் புள்ளியா, கமாவா என்பது போகப்போகத் தான் தெரியும் என்று "பலரை அடையாளம் காட்டிய பதினெட்டு நாட்கள்" என்ற தலைப்பிலே நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டேன். ஆனால் குருஷேத்திரப் போராட்டம் 18 நாட்களிலே முடிந்தது.

டெல்லியிலே நடைபெற்ற போராட்டம் நான் எழுதியது போல முற்றுப்புள்ளியாகவில்லை. 1.8.79 அன்று சென்னையிலே எம்.ஜி.ஆர். தலைமையிலே கூடிய அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலே மத்திய அமைச்சரவையிலே அ.தி.மு.க. இடம் பெற முடிவு செய்தது. மேலும் 8.8.79 அன்று நிருபர்களிடம் பேசிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நாடாளுமன்றத்திலே 20.8.79 அன்று சரண்சிங் கொண்டு வரும் நம்பிக்கைத் தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்றும், அ.தி.மு.க.வின் 18 வாக்குகளால்தான் சரண்சிங் அமைச்சரவையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் நிச்சயமாக அ.தி.மு.க.வின் வாக்குகளை அவர்களுக்கு அளித்துக் காப்பாற்றுவோம் என்றும் கூறினார்.

ஆனால் இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சரண்சிங்ற்கு ஆதரவு தரக்கூடாது என்று அறிக்கை விடுத்தனர். நாடாளுமன்றத்தில் 20.8.79 அன்று சரண்சிங் நம்பிக்கை வாக்குக் கோருவார் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, 19.8.79 அன்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருமதி சத்தியவாணி முத்து, பாலா பழனூர் இருவரும் எம்.ஜி.ஆர். கூறியதின் பேரில் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

ஆம், இவர்கள் பதவியேற்றது 19.8.79ல் 20ந் தேதி என்ன நிலை தெரியுமா? 20ந்தேதி காலையில் குடியரசுத் தலைவரை, 24 நாட்களாக பிரதமராகப் பதவி வகித்த சரண்சிங் சந்தித்து, தனது அரசு ராஜினாமா செய்வதாகக் கூறியதோடு, நாடாளுமன்றத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடத்தும்படி சிபாரிசு செய்தார். நாடாளுமன்றத்தில் இந்திரா காங்கிரஸ் ஆதரவு தராது என்று தெரிந்ததின் பேரில் சரண்சிங் இந்த முடிவை மேற்கொண்டார். ராஜினாமா செய்தது ஏன் என்று சரண்சிங் விடுத்த அறிக்கையிலே, இந்திரா காங்கிரஸ் சார்பில் அவர்கள் மீதுள்ள ஒரு சில வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டதால், பிரதமர் பதவியை விடக் கொள்கை பெரிதெனக் கருதி ராஜினாமா செய்ய முன் வந்ததாகத் கூறியிருந்தார்.

நாடாளுமன்றத்தை ஒரு நாள் கூடச் சந்திக்காத பிரதமர் என்ற பெயர் சரண்சிங்கிற்கும், அமைச்சர் பதவியேற்ற மறுநாளே அரசு கவிழ்ந்தது என்ற பெருமை அ.தி.மு.க.விற்கும் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜெகஜீவன்ராம் தன்னை அமைச்சரவை அமைக்க அழைக்க வேண்டுமென்று பலமான கோரிக்கை வைத்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் இல்லத்திற்கு ஊர்வலமாகவே சென்று மனுக் கொடுத்தனர்.

ஆனால் அந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படாமல், 22.8.79 அன்று குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கலைத்தும், சரண்சிங் அரசை காபந்து அரசாக நீடிக்கக்கோரியும், நவம்பர்-டிசம்பரில் நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். இதற்கிடையில் 8.4.1979 அன்று தன்மான இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும், தி.மு.கழகத்தின் வலிவுமிக்க தூண்களில் ஒருவரும், வாலிபப் பெரியார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவரும், நிலைகுலையா நெஞ்சத்திற்குச் சொந்தக்காரரும், கழகத்தின் துணைப்பொதுச் செயலாளராக இருந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பி.

ஆசைத்தம்பி கழக நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்வதற்காக அந்தமான் சென்றிருந்தபோது, மூளை நரம்பு வெடித்து மரணமடைந்தார் என்ற பேரிடி போன்ற செய்தி கிடைத்தது. ஏப்ரல் 10ஆம் தேதி வரை அந்தமானிலிருந்து சென்னைக்கு விமானம் கிடையாதென்றும், அதுவரை அங்கே அவரது உடலை வைத்துக் கொள்வதற்கான வசதிகளும் அந்தமானிலே இல்லை என்றும் அங்கிருந்து கழகத் தோழர்கள் கண்ணீரோடு பேசினர். ஆசைத்தம்பியோடு அந்தமான் சென்றிருந்த அவரது துணைவியார் பரமேஸ்வரி எப்படியும் தனது கணவரின் உடலையாவது தாயகத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று விரும்புவதாக அவர்கள் கூறினர்.

அப்போது டெல்லியிலே இருந்த முரசொலி மாறனிடம் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான விமானத்தின் மூலம் ஆசைத்தம்பியின் உடலைக் கொண்டு வர ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறினேன். முரசொலி மாறன், முதலில் மத்திய அமைச்சர் அத்வானியிடமும், பின்னர்ப் பேரவைத் தலைவராக இருந்த ஹெக்டேவிடமும் முயற்சி செய்து, வெற்றி பெறாததால், பின்னர் சரண்சிங்கிடம் பேசி அவரது தலையீட்டின் காரணமாக 10.4.79 அன்று காலை 11.45 மணி அளவில்தான் ஆசைத்தம்பியின் உடல் தாங்கிய தனி விமானம் சென்னைக்கு வந்தது.

ஆசைத்தம்பியைக் கழகம் இழந்து நின்ற நேரத்தில் தமிழகச் சட்டமன்றத்திலே நடைபெற்ற ஒரு வேதனையான நிகழ்ச்சியைப் பற்றியும் நான் குறிப்பிட்டாக வேண்டும். அந்தமானிலே ஆசைத்தம்பியின் சடலத்தை வைத்துக் கொண்டு அவருடைய துணைவியார்! தமிழகத்திலோ அவரது உடலையாவது கடைசியாகக் கொண்டு வர முடியுமா என்று கண்ணீரோடு கழகத்தினர் துடித்துக் கொண்டிருந்த நாள் 9.4.1979. அந்த நாளிலே தமிழகச் சட்டப்பேரவையிலே, பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான துரை முருகன், ரகுமான்கான், கே.சுப்பு ஆகிய மூன்று பேரையும் எந்த விதமான விளக்கமும் கேட்காமல், சட்டமன்றக் கூட்டத்தொடர் முடியும் வரையில் சட்டசபைக்குள் மட்டுமல்ல, சட்டமன்ற வளாகத்திற்குள்ளேயே அனுமதிக்கக்கூடாது என்று ஆளுங்கட்சியின் சார்பிலே தீர்மானம் கொண்டு வந்து முதலமைச்சர் முன்னிலையிலேயே நிறை வேற்றினார்கள்.

எதற்காகத் தெரியுமா? 7.4.79 அன்று துரைமுருகன் பேரவையில் ஒரு ஒழுங்கு பிரச்சினை எழுப்ப அனுமதி கேட்ட போது அனுமதி மறுக்கப்பட்டதையொட்டிக் கழக உறுப்பினர்களுக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே காரசாரமான பேச்சுவார்த்தைகள்; விவாதங்கள்; அதையடுத்து அமளிகள்! அன்றைய தினம் நான் பேரவைக்குச் செல்லவில்லை. ஆளுங்கட்சியினரை நோக்கி ரகுமான்கான் செருப்பைத் தூக்கிக் காட்டியதாகவும், துரைமுருகன் ஒலி பெருக்கியை உடைத்துவிட்டதாகவும், சுப்பு சட்டசபையைச் செத்த சபை என்று கூறியதாகவும் இவர்கள் மீது உரிமைப் பிரச்சினை கொண்டு வரப்பட்டது.

ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களில் சிலர் வேட்டியைத் தூக்கிக் காட்டியது பற்றியும், செருப்பையும் "பேப்பர் வெயிட்"டையும் எதிர்தரப்பினரை நோக்கி வீசியது பற்றியும், ஏடுகளிலே செய்திகள் வந்திருந்த போதிலும் அவர்கள் மீது எந்த நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 7.4.79 அன்று இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற போதே, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பேராசிரியர் எழுந்து, "எனக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் எனது கட்சி உறுப்பினர்கள் ஒரு சிலர் என்ன செய்தார்கள் என்பதை நான் கவனிக்கவில்லை.

எனினும் அவர்கள் தவறாகப் பேசியிருந்தால், நடந்து கொண்டிருந்தால், தி.மு.கழகத்தின் சார்பில் ஆழந்த வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் ஆளுங்கட்சி சார்பில் உள்ளவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள் என்பதை அவரவர் உள்ளுணர்வுக்கு விட்டு விடுகிறேன்" என்று கூறியிருந்தார்.

அதற்குப் பின்னரும் 9.4.79 அன்று அவர்கள் மூன்று பேரையும் அவையிலிருந்து வெளியேற்ற ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். உடனே பேராசிரியர் எழுந்து, ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அன்று முறைகேடாக நடந்து கொண்டிருக்கின்றார்கள்; மேலும் நான் கழகத்தின் சார்பில் வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குப் பின்னரும் இவ்வாறு உரிமைப் பிரச்சினை கொண்டுவருவது முறையல்ல என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கரய்யா, இதுபற்றி அலுவல் ஆய்வுக் குழுவிலே பேசித்தான் முடிவெடுக்க வேண்டுமென்றும், ஜனதா கட்சி சார்பில் ஜெபமணி, அன்பழகன் அன்றே மன்னிப்புக் கேட்டுவிட்டார். எனவே இது பற்றிப் பேசி முடிவெடுப்பது தான் நல்லதென்றும், மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அழகிரிசாமி, முஸ்லீம் லீக் சார்பில் அப்துல் லத்திப், இந்திரா காங்கிரஸ் சார்பில் சேலம் ஆறுமுகம் ஆகியோரும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடிப்பேச

ி முடிவெடுக்கலாம் என்றே தெரிவித்தார்கள். இறுதியாக நான் கூறியாதாவது, "பேரவைத் தலைவரவர்களே, பேசக்கூடிய நிலையில் இன்று நான் இல்லாவிட்டாலும், பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று இந்தப் பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வெந்த புண்ணில் வேல் என்பார்கள், அதைப் போல நாங்கள் ஆழ்ந்த துயரத்தில் இருக்கின்ற இந்த நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு தீர்மானம் இங்கே முன் மொழியப்படுகிறது என்று கேள்விப்பட்டு நாங்கள் அவசரமாக வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

இன்று காலை 8.30 மணியளவில் அவைத்தலைவரான உங்களோடு நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மறைந்த ஆசைத்தம்பி குறித்து அனுதாப தீர்மானம் வருகிறதா, அதிலே எல்லா கட்சித் தலைவர்களும் பேசுகின்ற நிலை உருவாக்கப்படுகிறதா என்று கேட்டேன். நாங்கள் அப்படித் தான் எதிர்பார்த்தோம். ஏனென்றால் ஒரு முக்கியமான சுயமரியாதை வீரர், சமூகத்தொண்டர், தமிழ்நாட்டுப் பொது வாழ்வில் பெரியாரோடு, பேரறிஞர் அண்ணாவோடு கலந்து பணியாற்றிய ஒருவர் மறைந்துவிட்ட நேரத்தில் எல்லாக் கட்சித் தலைவர்களும் பேசக் கூடிய சூழ்நிலை இங்கு உருவாகும் என்று எதிர்பார்த்துத்தான் அதனைக் கேட்டேன்.

ஆனால் பேரவைத் தலைவர் மட்டும் அந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து, வேறுயாரையும் அதிலே பேச அனுமதிக்காத நிலையில் மௌனம் கடைப்பிடிப்பதோடு முடித்து விட்டீர்கள். அதன் பிறகு இந்தத் தீர்மானம் வருவது பற்றி நம்மிருவரிடையே உரையாடல் தொலைபேசியிலேயே நடைபெற்றது. அப்போது தாங்கள் என்னிடம் ஏற்கனவே எதிர்க்கட்சித் துணை தலைவர் பேராசிரியரும், மற்றுமுள்ள கட்சிகளின் தலைவர்களும், பேரவை துணைத்தலைவரோடும், மின்வாரியத்துறை அமைச்சரோடும், அவையின் முன்னவரோடும் அன்று கலந்து பேசியதாகவும், இன்று கேள்வி நேரத்தில் நான் முன்கூட்டி வந்து விட்டால், அவை முன்னவரோடு கலந்து பேசி ஒரு முடிவெடுக்க வாய்ப்பு ஏற்படுமென்றும் அறிவித்தீர்கள்.

நீங்களும் இருக்க வேண்டுமே என்று நான் தங்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்குத் தாங்கள் துணைத்தலைவர் இன்று வர நேரமாகும். நான் தான் இன்று கேள்வி நேரத்தின் போது அவையில் இருந்தாக வேண்டும். கேள்வி நேரத்தின் போதே நீங்கள் வந்து விடுங்கள்; அப்போது அவை முன்னவரும் வெளியே வந்து உங்களோடு பேசி எப்படி இந்தத் தீர்மானத்தை கொண்டுவரலாம் என்று பேசி இந்த மன்றத்தின மரபுகளைச் செம்மைப்படுத்தலாம் என்பதற்கான ஒரு வழி வகுக்க ஏதுவாக இருக்குமென்று அறிவித்தீர்கள்.

அதை எதிர்பார்த்துத்தான் கேள்வி நேரம் ஏப்படியும் பத்து மணி வரையிலே நடைபெறும். அதற்குள் போய்விடலாம் என்று 9.30 மணிக்குப் புறப்பட்டு 9.40 மணிக்கு இங்கே வந்தேன். ஆனால் திடீரென்று எதிர்பாராதவிதமாக இன்று கேள்வி நேரத்தைப் பத்து மணிக்கு முன்பாகவே முடித்துவிட்டு, இப்போது இந்தத் தீர்மானம் முன் மொழியப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர்களும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேராசிரியரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியாவிலே பல மாநிலச் சட்டமன்றங்களிலும் சரி, நாடாளுமன்றங்களிலும் சரி, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எனவே அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் நாமும் வழி காட்டிகளாகக் கொள்ள வேண்டுமென்று கருதுபவனல்ல நான். அப்படி விரும்புகின்றவனும் அல்ல. அதைத் தூண்டி விடுகிறவனும் அல்ல. அண்மையில் கூட மாநிலங்கள் அவையில் இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கல்பனாத் ராய் இங்கு ரகுமான்கான் எதைத் தூக்கிக் காட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாரோ, அதே கருவியைத் தூக்கிக் காட்டினாரென்றும், அதற்காக யாரும் மன்னிப்புக் கூடக் கேட்டு கொள்ளவில்லையென்றும், அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் அங்கே எடுக்கவில்லை என்றும் எனக்குத் தகவல்.

பேராசிரியர் குறிப்பிட்டதைப் போலக் காரணங்கள் எதுவாக இருந்தாலும் தாங்கள் குற்றஞ்சாட்டுவதற்கோ, கொஞ்சம் வேகமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ உரிய காரணங்களாக இருந்தாலும், அதற்காக நடைபெற்ற செயல்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை என்று நான் கூறமாட்டேன். ஆளுங்கட்சி தரப்பிலிருந்தும் அப்படிப்பட்ட செயல்கள் செய்யப்பட்டதாகச் சொன்னார்கள். அவை முன்னவர் அது எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை என்றார். ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் கூட, வேட்டியைத் தூக்கி ஆளுங்கட்சி உறுப்பினர் காட்டியதாக வந்திருக்கிறது.

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் கூட அப்படி நடந்ததாக ஒரு செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக நான் அறிகின்றேன். ஆளுங்கட்சியின் சார்பிலும் ஆத்திரமான சொற்கள் வீசப்பட்டன. ஆளுங்கட்சியிலே இருப்பவர்கள் அன்றையதினம் இந்த அவை மரபு கெடக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்க, அதற்காக எதிர் தரப்பிலும் அப்படி உருவாக்கித் தீரவேண்டுமென்று நான் சொல்ல மாட்டேன். எதிர்க்கட்சி உருவாக்கியதால் ஆளுங்கட்சியும் உருவாக்க வேண்டுமென்று முன்னவரோ, முதல்வரோ விரும்பமாட்டார்கள்.

எல்லோரும் சேர்ந்து இந்த மன்றத்தின் மரபுகளைக் காப்பாற்ற வேண்டுமென்பதில் நாங்கள் வேறுபடுபவர்களல்ல. அலுவல் ஆய்வுக் குழுவில் கூடிப்பேசி முடிவெடுப்போம் என்ற நிலை வந்தபிறகு, இப்படி அவசரப்பட்டு ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுவது தேவைதானா?... எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்தாலும் தவறாக நடந்தால் அது பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல. அதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும், புரையோடிக் கொண்டிருக்கின்ற சில விஷயங்களைப் பற்றி விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுவினைக் கூட்டி, இதைப் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்பை அவை முன்னவர் அளித்ததால் நலமாக இருக்கும்.

மரபைக் காப்பாற்றுவதில் நான் ஒத்துழைக்க வேண்டுமென்றார். நிச்சயமாக ஒத்துழைப்பேன் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." நான் இந்த அளவிற்குக் கூறியதற்குப் பின்னரும், கழக உறுப்பினர்கள் மூவரையும் வெளியேற்றுவதற்கான தீர்மானத்தைப் பேரவைத்தலைவர் படித்து, அதனை நிறைவேற்றித் தர அவையைக் கேட்டுக் கொண்டார். அப்போது நான் மீண்டும் எழுந்து, "கழகத்தின் சார்பில் எங்களுடைய கருத்தையும் வேண்டுகோளையும் எடுத்து வைத்தோம்.

இருந்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தண்டனை வழங்கிய மூன்று பேருக்கு அல்ல; 47 பேருக்கும் என்ற வகையில் நாங்கள் 47 பேரும் இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவோடு வெளியேறுகிறோம்" என்று கூறி வெளிநடப்புச் செய்தோம்.

பின்னர் அந்தத் தீர்மானத்தை எதிர்த்த ஐந்து எதிர்க்கட்சிகளும்கூட வெளிநடப்புச் செய்தன. இவ்வளவு பிரச்சினைகளும் அவையிலே நடைபெற்ற போது முதலமைச்சர் அவையிலே இருந்தபோதிலும் ஒரு வார்த்தை கூட எழுந்து தெரிவிக்கவே இல்லை. மீண்டும் பேரவையிலே 11.4.79 அன்று பிரதான எதிர்க்கட்சி இல்லாமல் சட்டமன்றம் நடப்பது அழகல்ல. எனவே பிரதான எதிர்க்கட்சியை அவைக்கு அழையுங்கள் என்று அவையிலே இருந்த மற்ற எதிர்க்கட்சிகள் எல்லாம் வேண்டுகோள் விடுத்த போதும் அந்த கோரிக்கையை ஆளுங்கட்சியினரும் அரசும் ஏற்கவில்லை.

தி.மு.கழகம் சட்டமன்றத்திற்குச் செல்லாத நிலையில் மக்களின் பிரச்சினைகளை எடுத்துத் தெரிவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமே என்பதற்காக சென்னையிலே ஒவ்வொருநாளும் ஒரு இடத்திலே, சட்டமன்றத்திலே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் மானியக் கோரிக்கை குறித்துப் பொதுக் கூட்டத்திலே மக்கள் மத்தியிலே பேசுவதென்று முடிவெடுத்து, அதன்பபடி கூட்டங்கள் ஏற்பாடு செய்து அதிலே நானும் பேராசிரியரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினோம். அது மாத்திரமல்ல, சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களான துரைமுருகன், ரகுமான்கான், கே.சுப்பு ஆகிய மூவரையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு நாட்கள் வீதம் சிறப்புக் கூட்டம் கழக நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்து அந்த மாவட்டங்களிலே பேசுவதற்கான தொடர் கூட்டங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டன.

கழக உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போதிலும், அதையும் கழகத்திற்கும் நாட்டிற்கும் பயன்படக் கூடிய வகையிலே மாற்றிக் கொண்டு பணியாற்றினோம்.