உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பூட்டோ - ஸ்கைலாப்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பூட்டோ - ஸ்கைலாப் · 262 / 391

46. பூட்டோ - ஸ்கைலாப் ஜனதா ஆட்சி பா கிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பூட்டோவிற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை 6.2.1979 அன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அதையடுத்து பாகிஸ்தானிலே கலவரம் ஏற்படக்கூடும் என்பதற்காக பூட்டோவின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையிலே அடைக்கப்பட்டனர். பூட்டோவின் துணைவியாரும் மகளும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பூட்டோவிற்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை பற்றி இந்தியப் பிரதமர் தேசாய் அவர்களும், வெளியுறவு அமைச்சர் வாஜ்பாய் அவர்களும் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

எனினும் இந்தியக் குடியரசுத் தலைவர் சஞ்சீவரெட்டி, அமெரிக்க அதிபர் கார்ட்டர், இங்கிலாந்து பிரதமர் கல்லகன், ரஷ்ய அதிபர் பிரஸ்னேவ், போப்பாண்டவர், மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் எல்லாம் பாகிஸ்தான் அதிபருக்கு, பூட்டோவை விடுதலை செய்ய வேண்டுமென்று கடிதம் எழுதினார்கள். அவர்களுடைய கடிதங்களை எல்லாம் படிக்கவே பாகிஸ்தான் அதிபர் மறுத்ததோடு, பூட்டோவிற்கு மன்னிப்புக் கிடையாது என்றும் கூறினார்.

பூட்டோ கருணை மனுக் கொடுத்தால் அது குற்றத்தை ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடும் என்பதால், கருணை மனுக் கொடுக்கவில்லை என்ற போதிலும், 31.3.1979 அன்று அவருடைய கட்சி சார்பில் அவருடைய விடுதலை கோரிக் கருணை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் அதிபர் ஜியா இந்தக் கருணை மனுவையும் ஏற்க மறுத்துவிட்டார். 4.4.1979 அன்று அதிகாலையில் பூட்டோவைத் தூக்கிலிட ஜியா உத்தரவிட்ட போதிலும், அந்தச் செய்தி எந்த ஏடுகளிலும் வெளிவரவில்லை.

தூக்கில் போடப்படுவதற்கு முன்பாக பூட்டோவைக் கடைசி முறையாக வந்து பார்க்குமாறு பூட்டோவின் மனைவி நசரத், மகள் பெனாசிர் ஆகியோருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடிதம் அனுப்பியது. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் 3.4.79 அன்று சிறைக்குச் சென்று கடைசியாக பூட்டோவைச் சந்தித்து மூன்று மணி நேரம் அவருடன் இருந்தனர். அழுத கண்ணீருடன் திரும்பிய அவர்களைப் பார்த்துச் சிறை வாசலில் திரண்டிருந்த ஏராளமான மக்கள் கண்ணீர்விட்டனர்.

4.4.79 அன்று இந்திய நேரம் விடியற்காலை 2.30 மணி அளவில் பூட்டோ தூக்கிலிடப்பட்டார். பூட்டோ சிறையிலே இருந்தபோது எழுதி வைத்திருந்த குறிப்பு ஒன்றிலே "என் எதிரியைக் கொலை செய்ய உத்தரவிட்டதாக என் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது அபாண்டமான குற்றச்சாட்டு. ஒரு நன்றிகெட்ட துரோகியினால் (ஜியா) நான் தூக்குமேடையைச் சந்தித்திருக்கிறேன்" என்று எழுதி வைத்திருந்தார்.

1971ஆம் ஆண்டு பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் யாரைத் தளபதியாகப் போடலாம் என்று யோசித்தார். மூத்த தளபதிகள் சிலர் இருந்தும் அவர்களைத் தேர்ந்தெடுக்காமல் ஜியா உல் ஹக்கைத் தலைமைத் தளபதியாக பூட்டோ தான் நியமித்தார். ஆனால் ஜியா நன்றி மறந்து பூட்டோவின் ஆட்சியைக் கவிழ்த்ததுடன், கொலைக் குற்றஞ்சாட்டி அவரைத் தூக்கிலும் போட்டார். பூட்டோவின் மறைவு குறித்து "மாவீரன் மடிந்தான்" எனும் தலைப்பிலே நான் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள் இதோ!

"நடந்து விடக்கூடாது என்று நாடுகள் பல கோரிக்கை விடுத்துத் தடுக்க நினைத்த அந்தக் காரியம் நடந்தே விட்டது. பாகிஸ்தான் நிலப்பரப்பைக் கட்டியாண்ட 'புகழ்மிக்க மனிதன்' பூட்டோ தூக்கில் தொங்க விடப்பட்டு அவன் உடலைப் புதைக்குழிக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். சர்வாதிகாரம் பேசியது பின்னணியிலிருந்து! அதற்கேற்ப நீதியின் உதடுகள் அசைந்தன! விளைவு, இஸ்லாமிய சமுதாயத்தின் ஏற்றமிகு விளக்கு ஒன்று அணைக்கப்பட்டுவிட்டது.

அவன் கடைசிவரையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கருணை மனுப் போட முடியாது என மறுத்துவிட்டான். ஆனால் அவனுக்காக போடப்பட்ட கருணை மனுக்கள் அத்தனையும் எதேச்சாதிகாரத்தின் காலடியில் விழுந்து கசங்கிக் கிழிந்து உருத்தெரியாமல் போய்விட்டன. ஒருவகையில் அந்த மனிதனுக்கு நிம்மதி தான்! "இதோ! அதோ!"

என்று நாள்தோறும் அவனைச் சித்ரவதை செய்து கொண்டிருந்தார்கள். இனி அவனுக்கு எந்தப் பிரச்சனை பற்றியும் கவலையில்லை. மிரட்டல்கள் அவன் அடக்கம் செய்யப்படும் இடத்திற்குச் சென்று அவன் உள்ளத்தை உலுக்க முடியாது. ஆட்சியார்கள் அதிகார வர்க்கத்தையும் ரதகஜதுரக பதாதிகளையும் வைத்துக் கொண்டு யாரையும் பழி தீர்த்துக் கொள்ள முடியும் என்பதற்கு பாகிஸ்தானில் பூட்டோவுக்குத் கிடைத்த பரிசே சான்று! பூட்டோ தலை சிறந்த இராஜதந்திரி!

அற்புதமான நிர்வாகி! அவன் இதயத்தில் ஊறிய இரக்க உணர்வு; முஜிபுர் ரகுமானை மரணப்படு குழியிலிருந்து காப்பாற்றி "பங்களாதேஷின்" அதிபராகவே ஆக்கியது! அந்தக் கருணை மிகுந்த செயலுக்குக் கைமாறாகக் கூட பூட்டோவுக்குக் கருணை காட்டப்- படாதது நெஞ்சு வெடிக்கும் வேதனைச் செய்தியாகும். மனிதச் சோலையில் எத்தனையோ பூக்கள் மலர்கின்றன! அவற்றில் பல மணம் வீசாத அழகு மலர்களாகத் திகழ்கின்றன! அத்தர் தரும் ரோஜாவும், அரிய மணம் பரப்பும் மல்லிகை முல்லையும், மயக்கும் மனோரஞ்சிதமும் புவியெனும் பூஞ்சோலையில் குலுங்குகின்றன!

அந்த மலர்களில் வாசமிகு மலராக விளங்கிய மனிதன் தான் பூட்டோ! இன்று அந்த மலரைக் கசக்கி எறிந்து விட்டார்கள். அந்த மலர் தானாக வாடி உதிர்ந்திருந்தால் இத்தனை அதிர்ச்சி ஏற்பட்டிருக்காது. அண்டத்தில் கோடானு கோடி கோள்கள் இருக்கின்றன. எண்ணிமாளாத அளவுக்கு நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில கோள்களைத் தானே, சில நட்சத்திரங்களைத் தானே உலகம் அறிந்திருக்கிறது. அப்படி உலகறிந்த ஒரு மனிதனுக்கு இப்படி ஒரு முடிவா?

கேள்விக்குறி இதயத்தைப் பிழிந்தெடுக்கிறது! பூட்டோ - என்றைக்கும் வாழுகின்ற புகழ்மிக்க மனிதர்களிலே ஒருவராக ஆகிவிட்டார். தூக்குமேடை அவர் உறுதியைக் குலைக்கவில்லை..." பூட்டோவின் ஆட்சியைக் கவிழ்த்ததோடு அவரையும் தூக்கிலிட்டு சர்வாதிகாரியான ஜியா உல் ஹக், 1985ஆம் ஆண்டுதான் இராணுவச் சட்டத்தைத் தளர்த்தினார். அதற்கு முந்திய ஆண்டில் நாடு கடத்தப் பட்டு இங்கிலாந்து நாட்டிலே அடைக்கலமிருந்த பூட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ 1986இல் பாகிஸ்தான் திரும்பித் தன் தந்தை துவக்கிய பாகிஸ்தான் மக்கள் கட்சியைத் தலைமையேற்று நடத்தினார்.

1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் ஒரு விமான விபத்திலே ஜியா உல் ஹக் மரணமடைந்த பின் தான் பாகிஸ்தானிலே தேர்தல் நடைபெற முடிந்தது. 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களிலே நடை பெற்ற தேர்தலிலே பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், தூக்கிலிடப்பட்ட பூட்டோவின் மகளுமான பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் அரசின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு இஸ்லாமிய நாட்டிற்கு ஒரு பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதன் முதலில் பெனாசிர் பூட்டோதான்!

அமெரிக்க விண்வெளி நிபுணர்கள் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் பறக்க விட்ட "ஸ்கைலாப்" என்ற ராக்கெட், பூமிக்கு 185 மைல் தூரத்தில் பறந்து கொண்டிருந்தது. எரி பொருள் தீர்ந்துவிட்ட காரணத்தால் தூள் தூளாக நொறுங்கி, 1979ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் பூமியில் விழுமென்றும், அந்த ராக்கெட் துண்டுகள் மிகவும் வேகமாக பூமியில் வந்து விழுமாதலால், அது மக்கள் வசிக்கும் பகுதியிலே விழுந்தால் மிகவும் கடுமையாகச் சேதம் ஏற்படக் கூடுமென்றும், ராக்கெட் துண்டுகள் எந்தெந்த இடங்களிலே விழுமென்று விஞ்ஞானிகளால் திட்டவட்டமாகக் கூற இயலாதென்றும், ஆனால் நான்காயிரம் மைல் நீளமும் நூறு மைல் அகலமும் உள்ள பரப்பளவு பாதிக்கப்படுமென்றும் செய்தி வெளியாகி, அந்தச் செய்தி உலகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது.

ராக்கெட் விழக்கூடுமென்று விஞ்ஞானிகள் யூகித்த பகுதிகளில் சென்னை, பெங்களூர் உள்ளடங்கிய பகுதியும் இடம் பெற்றிருந்தது. இதுபற்றி இந்திய விஞ்ஞானி ஸ்ரீவஸ்தவா ராக்கெட் துண்டுகள் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து ஜூலை 27ஆம் தேதிக்குள் விழுமென்று எதிர்பார்க்கப்படுகிறதென்றும், ராக்கெட் துண்டுகள் விழும் பகுதிகளில் ஆக்சிஜன், நைட்ரஜன் வாயுக்கள் ரசாயன மாற்றம் அடையுமென்றும் பம்பாய், பூனா, புவனேஸ்வரம் போன்ற பகுதிகளும் பாதிக்கப்படலாமென்றும் தெரிவித்தார்.

85 டன் எடையுள்ள இந்த ராக்கெட் நொறுங்கி விழும்போது துப்பாக்கிக் குண்டு வேகத்தில் தாக்கும் என்றும், குண்டுகள் ஒவ்வொன்றும் இரண்டு டன் எடை உள்ளதாக இருக்குமென்றும், இந்தத் தாக்குதலின் போது பலர் உயிரிழக்கவும், கட்டிடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கவும் நேரிடுமென்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அமெரிக்கா நினைத்தால் பூஸ்டர் ராக்கெட்டை அனுப்பிப் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் ராக்கோட்டை மேலே தள்ளி விட இயலுமென்றும், ஆனால் அதற்கு எட்டுக் கோடி ரூபாய் செலவாகும் என்பதால் அமெரிக்கா பூஸ்டர் ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டிருப்பதாகக் காரணம் கூறுகிறார்கள் என்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் அமெரிக்காவிற்குக் கண்டனம் தெரிவித்தார்கள்.

ராக்கெட் விழுந்து பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நஷ்ட ஈடு தருவதாக அமெரிக்கா அறிவித்தது. ஆபத்து ஏற்படப் போகிறது என்பது தெரிந்தும் அதனைத் தடுக்காமல், நஷ்டஈடு கொடுப்போம் என்று கூறுவது பொறுப்பற்ற செயல் என்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டனம் தெரிவித்தார்கள். பல நாடுகளும் இதுபோன்று கண்டனம் தெரிவித்ததின் பேரில், ஜூன் திங்கள் இறுதியில் அமெரிக்கா, ஏவுகணைகளை அனுப்பி உடைந்துவிழும் துண்டுகளில் பெரும்பாலானவற்றைக் கடலில் விழுகின்ற அளவிற்கு ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்தது.

எனினும் உடைந்து விழும் 50க்கு மேற்பட்ட துண்டுகளில் ஒருசில மக்கள் வாழும் பகுதிகளிலே விழக்கூடிய அந்தத் துண்டுகள் பெரும்பாலும் இந்தியாவிலும் ஐரோப்பா கண்டத்தின் சில பகுதிகளிலும் விழுவதற்கான வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்ததோடு, ஜூலை 10ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதிக்குள் விழக்கூடுமென்றும், தற்போது நாள் ஒன்றுக்கு 1மைல் என்ற அளவிற்குக் கீழே வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் 2,800 கிலோ எரிபொருள் அதிலே மீதமிருப்பதாகவும், கடைசி நேரத்தில் அந்த எரி பொருளைப் பயன்படுத்தி ராக்கெட்டை உடைந்து விழும்போது கடலிலே விழக்கூடிய அளவிற்கு ஏற்பாடுகளைச் செய்ய முயற்சி செய்வதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ராக்கெட் பீதி மக்களைப் பெரிதும் பாதித்தது. எங்குப் பார்த்தாலும் அனைவரும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். அந்த ராக்கெட்டின் பெயரால் அதாவது "ஸ்கைலாப்" என்பது பற்றி வார இதழ்கள் பலவற்றிலே துணுக்குகளும், கட்டுரைகளும் வெளிவந்தன. பல ஏடுகள் பிரபல ஜோஸ்யர்களிடம் நிலவரங்களைக் கேட்டு வெளியிட்டு, விஞ்ஞானிகள் வெளியிடும் தகவல்களுக்கு முரண்பட்ட தகவல்களை வெளியிட்டனர். வெளிநாட்டு மக்கள் விஞ்ஞானிகள் கூறுவதை நம்பிட, நம் நாட்டிலோ மக்கள்கூட அல்ல, ஏடுகளே, விஞ்ஞானிகளை விட்டுவிட்டு ஜோஸ்யர் என்ன கூறுகிறார் என்பதைக் கேட்டுச் செய்தியாக்கினர்.

6-7-79 அன்று வாஷிங்டனில் விஞ்ஞானிகள் வெளியிட்ட செய்தியில் ஜூலை 11 அல்லது 12ஆம் தேதிக்குள் ஸ்கைலாப் பூமியிலே விழக்கூடுமென்று தெரிவித்தனர். பூமியிலிருந்து 120 மைல் தூரத்திற்கு ஸ்கைலாப் நெருங்கி விட்டதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி இந்திய அரசு அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்தினர். வானவெளியில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் பல நாடுகளால் அனுப்பப்பட்டவை முறையாகச் சுற்றி வந்து கொண்டிருந்த நிலையில் 14-5-1973 அன்று அமெரிக்காவில் "கென்னடி முனை"யிலிருந்து அனுப்பப்பட்ட இந்த ராக்கெட், வானத்திலே அப்போது பறந்து கொண்டிருந்த ராக்கெட்டுகளிலேயே பெரிதாக இருந்தது.

இதன் எடை 85 டன். இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அமெரிக்கா இந்த ராக்கெட்டை வானவெளியில் பறக்க விட்டிருந்தது. இந்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ராக்கெட் நொறுங்கி விழும் நேரத்தில் எல்லா ஊர்களிலும் காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தயார் நிலையிலே இருக்க வேண்டுமென்று கூறியது. குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி அவர்கள் ஸ்கைலாப் அபாயத்திலிருந்து மக்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென்று கூறினார்.

ராக்கெட் இந்தியாவில் விழாமலிருக்க இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. தொழிலதிபர்கள் முன் எச்சரிக்கையாகத் தங்கள் தொழிற்சாலைகளை "இன்சூர்" செய்தனர். இத்தாலிய அரசு குறிப்பிட்ட ஆறு மணி நேரத்திற்கு அவர்கள் நாட்டிற்குள் விமானங்கள் பறக்கவே தடை அறிவித்தது. "ஸ்கைலாப்" பற்றி உலகம் முழுவதும் பரபரப்பான செய்திகள் வந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் 7-7-79 அன்று தமிழகம் முழுதுமுள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சியினரின் வன்முறைத் தாக்குதல்களைக் கண்டித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

சென்னையிலே உழைப்பாளர் சிலை அருகிலே நான், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாணசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வி.பி.சிந்தன், முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் சமது, ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான ரமணிபாய், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கருணாகரன், மற்றும் இந்தக் கட்சிகளைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். 9-7-79 அன்று நள்ளிரவில் அமெரிக்க விஞ்ஞானிகள் விடுத்த செய்தியில் 11-7-79 அன்று இரவு 7.58 மணி அளவில் ஸ்கைலாப் விழக்கூடும் என்றும், பெரும்பாலும் அட்லாண்டிக் கடலிலே இந்த ராக்கெட் விழக்கூடுமென்றும் அறிவித்தனர்.

இந்த நேரத்தில் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று தமிழக அரசு சார்பிலே அறிவிக்கப்பட்டது. இவ்வாறு உலகம் முழுவதையும் பயமுறுத்திக் கொண்டிருந்த ஸ்கைலாப் 11-7-79 அன்று இரவு 10 மணிக்கு சென்னைக்குத் தென்கிழக்கே 3,9000 மைல் தூரத்தில் கடலிலே விழுந்தது. கடலில் விழுவதற்கு முன்பு அது தீப்பிடித்து எரிந்தது. பயங்கர சத்தத்துடன் சுக்கல் சுக்கலாக வெடித்து நூற்றுக்கணக்கான மைல் பரப்பில் சிதறிக் கடலிலே விழுந்தது.

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதித்து விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த இந்த ஸ்கைலாப், உலகம் முழுவதையும் ஒரு மாதம் பயமுறுத்திவிட்டு, இறுதியாக எந்த உயிருக்கும் எந்த பொருளுக்கும் சேதம் ஏற்படுத்தாத நிலையிலே கடலிலே மூழ்கித் தன்னுடைய அஸ்தியைக் கரைத்துக் கொண்டது. ஸ்கைலாப்பின் முடிவைத் தொடர்ந்து; இந்திய நாட்டில் ஜனதா ஆட்சியின் முடிவும் நெருங்கிக் கொண்டிருந்தது என்றே சொல்லலாம். அதுவரை சரண்சிங்கிற்கு மத்திய அமைச்சர் பதவியை மட்டுமே மீண்டும் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய ஆதரவாளர்கள் துணைப் பிரதமர் பதவியும், உள்துறை இலாகாவும் அவருக்குத் தரவேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால் பிரதமர் தேசாய் சரண்சிங்கிற்கு மீண்டும் உள்துறை இலாகாவையும் கொடுக்க முடியாது, துணைப் பிரதமர் பதவியும் கிடையாது என்று உறுதியாகச் சொன்னார். எனினும் சில நாட்களுக்கு பிறகு பிரதமர் சற்று இறங்கி வந்து, சரண்சிங், ஜ

ெகஜீவன்ராம் ஆகிய இருவரையும் துணைப் பிரதமர்களாக நியமிப்பதாகவும், ஆனால் சரண்சிங்கிற்கு உள்நாட்டு இலாகாவைத் தர முடியாதென்றும் மேலும் சரண்சிங் ஆதரவாளரான ராஜ் நாராயணனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி தர முடியாதென்றும் கூறினார். இதற்கு 2.1.79 அன்று சரண்சிங், தேசாய் அமைச்சரவையில் இனி சேரவேமாட்டேன் என்று அறிவித்தார். ஆனால் 24.1.79 அன்று அவரே தேசாய் அமைச்சரவையில் துணைப்பிரதமராகப் பொறுப்பேற்றார்.

இவருக்கு நிதித்துறை தரப்பட்டது. ஜெகஜீவன்ராமும் மற்றொரு துணைப்பிரதமராக ஆனார். சரண்சிங்கைத் துணைப்பிரதமராக ஆக்கிய போதும் பிரச்சனை தீரவில்லை. 23.6.79 அன்று முன்னாள் மத்திய அமைச்சரும் சரண்சிங்கின் நண்பருமான ராஜ் நாராயணன் ஜனதாக் கட்சியை விட்டு ராஜினாமா செய்தார். ஜனதாக் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை மீறிவிட்டதாகவும் பிரதமர் தேசாய் அதற்காக ராஜினாமா செய்ய வேண்டுமென்றும் புதிய கட்சியைத் தான் தொடங்கப் போவதாகவும் அறிவித்தார்.

அதேநாளில் அரியானா முதலமைச்சர் தேவிலால் அவர்களும் தன்னுடைய சட்டசபை ஜனதாக் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அதே நாளில் துணைப்பிரதமர் சரண்சிங்கும் ஜனதா தலைமையைக் கடுமையாகத் தாக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜனதாக் கட்சியிலே 23-ஆம் தேதி இந்த மூன்று நெருக்கடி என்றால், மறுநாள் 24-ஆம் தேதி டெல்லியிலே கூடிய இந்திரா காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கர்நாடக மாநில முதலமைச்சரும், சில மாதங்களுக்கு முன்பு இந்திரா காந்தி சிக்மகளூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது அவருடைய வெற்றிக்காக அரும்பாடுபட்டு வெற்றி பெறச் செய்தவருமான தேவராஜ் அர்ஸை இந்திரா காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தது.

கட்சியை விட்டு நீக்கப்பட்ட அர்ஸ் உடனடியாக "கர்நாடக காங்கிரஸ்" என்ற பெயரிலே புதிய கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியின் சார்பிலே 4.7.79 அன்று பெங்களூரில் இந்திராவிற்கு எதிராக ஒத்த கருத்துடைய காங்கிரசார் மாநாடு ஒன்றையும் கூட்டினார். இந்த மாநாட்டில் அப்போது சி.சுப்ரமணியம், ஒ.வி.அளகேசன் ஆகியோரெல்லாம் சென்று கலந்து கொண்டனர். அந்த மாநாட்டிலே பேசும்போது சி.சுப்ரமணியம் சஞ்சய் காந்தியைக் கடுமையாகத் தாக்கி, சஞ்சய் காந்தி அரசியலிலே நுழைவது ஒரு குடம் பாலிலே ஒரு துளி விஷத்தைக் கலப்பது போன்றது என்றார்.

இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி அர்ஸ் தலைமையிலே உள்ள கட்சியிலே சேர்ந்தார்கள். அதன் காரணமாக நாடாளுமன்றத்திலும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து மாறி, மீண்டும் ஸ்தாபனக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஓய்.பி.சவான் எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார். இப்படி இரண்டு கட்சியிலும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் 9.4.79 அன்று நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது.

முதல் நாளன்றே ஜனதாக் கட்சியிலிருந்து 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியைவிட்டு விலகி, அதிலே ஒன்பது பேர் ராஜ் நாராயணன் தலைமையைப் பின்பற்றியும், மீதி இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்துவிட்டதாக அறிவித்தனர். மொரார்ஜி தேசாய் மீது எதிர்க்கட்சியின் சார்பில் நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொடுக்கப்பட்டு 11.7.79 அன்று விவாதத்திற்கு அந்தத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தத் தீர்மானத்தை இந்திரா காங்கிரஸ் கட்சி ஆதரிக்குமென்று இந்திரா காந்தி தெரிவித்தார்.

ஆனால் சில நாட்களுக்கு முன் இந்திரா காங்கிரஸ் கட்சியை ஆதரித்துத் தஞ்சையிலே தேர்தல் பணியாற்றிய அ.தி.மு.க நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஜனதா அரசைத் தங்கள் கட்சி ஆதரிக்குமென்று அறிவித்தது 11.7.79 அன்று மேலும் 12 ஜனதாக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், 12.7.79 அன்று மேலும் 22 ஜனதாக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து விலகி ராஜ் நாராயணன் தலைமையிலான கட்சியிலே சேர்ந்தார்கள். இதனால் மொத்தம் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 30க்கும் மேல் பெரும்பான்மையோடு இருந்த ஜனதாக்கட்சியின் நிலை 253 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அளவிற்கு குறைந்தது.

12-ஆம் தேதி மாலையில் மத்திய அமைச்சர்கள் ரபிராய், ஜானேஸ்வர் மிஸ்ரா, ஜக்பீர்சிங் ஆகிய மூவரும் பிரதமரை எதிர்த்து ராஜினாமா செய்தார்கள். இவர்கள் மூவரும் சரண்சிங்கின் ஆதரவாளர்கள். இவர்களுடன் சேர்ந்து மேலும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனதாக் கட்சியிலிருந்து விலகி ராஜ் நாராயணன் கட்சியிலே சேர்ந்து அவருடைய கட்சியின் எண்ணிக்கையை 56க்குக் கொண்டு வந்து, ஜனதாக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 244 ஆகக் குறைத்தனர்.

மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் எட்டு பேர் ஜனதாக் கட்சியை விட்டு விலகி, ராஜ் நாராயணன் கட்சியிலே சேர்ந்தார்கள். சரண்சிங் தலைமையிலே மத்தியிலே அமைச்சரவை அமைக்கப்படுமானால் இந்திரா காங்கிரஸ் அதற்கு ஆதரவு தருமென்று அந்தக் கட்சியின் சார்பிலே அறிவிக்கப்பட்டது. 13.7.79 அன்று மத்திய அமைச்சர் பகுகுணா மற்றும் நான்கு துணை அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள். 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேசாயை எதிர்த்து வாக்களிப்பதாக 13-ஆம் தேதி முடிவு செய்தது.

14.7.79 அன்று மத்திய அமைச்சர் பட்நாயக், மற்றும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனதாக் கட்சியிலிருந்து விலகி ராஜ் நாராயணன் கட்சியிலே சேர்ந்தார்கள். மத்திய அமைச்சர்கள் வாஜ்பாய், பெர்னாண்டஸ் போன்றவர்கள் பிரதமர் தேசாயைச் சந்தித்துத் ராஜினாமா செய்யும்படி கேட்டதற்கு, தேசாய் ராஜினாமா செய்யமாட்டேன் என்றும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைச் சந்திக்க தயாரென்றும் அறிவித்தார். அதன் பின்னர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மற்றும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகினார்கள்.

15.7.79 அன்று பிற்பகல் துணைப்பிரதமர் ஜெகஜீவன்ராம் பிரதமரைச் சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார். "பெரும்பான்மையான ஜனதாக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் பிரமராக நீடிப்பதை எதிர்க்கிறார்கள்; சரண்சிங் மற்றக்கட்சிகளோடு சேர்ந்து பிரதமராக முயற்சி செய்து வருகிறார். அதனைத் தடுக்க நீங்கள் ராஜினாமா செய்வதுதான் ஒரே வழி. ராஜினாமா செய்ய நீங்கள் மறுத்தால் நான் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுவேன்" என்று ஜெகஜீவன்ராம் உறுதியைத் தெரிவித்ததின் பேரில், பிரதமர் தேசாய் ஜனதா தலைவர் சந்திரசேகருடனும், மூத்த அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகு பதவியை விட்டு விலகத் தீர்மானித்தார்.

15.7.79 அன்று மலை 6.30 மணிக்கு தேசாய் குடியரசுத் தலைவரைச் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.