நெஞ்சுக்கு நீதி
இந்திரா காந்திக்குத் தண்டனையும் · 261 / 391
45. இந்திரா காந்திக்குத் தண்டனையும் தஞ்சை இடைத்தேர்தலும் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது சஞ்சய் காந்தியின் 'மாருதி' கார் தொழிற்சாலை பற்றி ஊழல் புகார் கூறப்பட்டது. நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டு, அது பற்றிய உண்மையை அறிவதற்காகத் தொழில்துறை அதிகாரிகள் நான்கு பேர் மாருதி தொழிற்சாலைக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணை நடத்திய அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியுற்று, மத்தியில் ஜனதா ஆட்சி ஏற்பட்டபோது, அந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் ஜனதா கட்சிச் செயலாளர் மதுலிமாயி எழுப்பினார். நாடாளுமன்றத்துக்காக தகவல் சேகரிக்கச் சென்ற அதிகாரிகளைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது, நாடாளுமன்றத்தின் உரிமையை மீறிய செயல் என்று அவர் குற்றஞ்சாட்டினார். இந்திரா காந்தி நாடாளுமன்றத்தின் உரிமையை மீறியிருக்கிறாரா என்பதை விசாரித்துத் தீர்ப்புக் கூற சமர்குகா தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது.
அந்தக் குழு இந்திரா காந்தி உட்பட முப்பது பேர்களை விசாரணை செய்தது. அந்தக் குழுவின் அறிக்கை 21.11.78 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்திரா காந்தி குற்றவாளியே என்றும், நாடாளுமன்றத்தின் உரிமைகளை இந்திரா காந்தி மீறியிருக்கிறார் என்றும், பொய் வழக்குப்போடுதல் ஆகிய குற்றங்களை இந்திரா காந்தியும் அவரது செயலாளர் ஆர்.கே.தவான், மற்றும் டி.சென் ஆகியோர் செய்திருக்கிறார்கள் என்றும், அவர்களைத் தண்டிக்க வேண்டுமென்றும், என்ன தண்டனை என்பதை நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டுமென்றும், அந்த அறிக்கையிலே கூறப்பட்டிருந்தது.
உரிமைப் பிரச்சினையில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்று விதியிலே கூறப்பட்டிருக்கிறதென்றால் - குற்றவாளியை எச்சரிக்கை செய்யலாம்; சபைக்கு அழைத்துக் கண்டனம் செய்யலாம்; கைது செய்து சபைக்குக் கொண்டு வந்து நிறுத்துமாறு உத்தரவிடலாம்; எம்.பி. பதவியைவிட்டு நீக்கலாம்; சிறைத் தண்டனை விதிக்கலாம். இதில் என்ன தண்டனை என்பதை மத்திய அரசு ஆலோசித்து அவையிலே தீர்மானமாகக் கொண்டு வர வேண்டும்.
ஜனதா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்ததால் தீர்மானம் எளிதாக நிறைவேற்றப்பட்டு விடும் என்று ஏடுகள் செய்தி வெளியிட்டன. நாடாளுமன்ற உரிமைகளை மீறியதற்காக இந்திரா காந்தியைச் சிறையில் தள்ளுவதோடு, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று 13.12.78 அன்று பிரதமர் தேசாய் இல்லத்தில் கூடிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பெரிய தண்டனையை வழங்கினால் ஏனைய கட்சிகள் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கமாட்டார்கள், ஜனதா கட்சி தனது பெரும்பான்மையை மட்டுமே வைத்துத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டி வரும் என்ற பிரதமர் தேசாய் தனது முன்னுரையிலே தெரிவித்த போதிலும், பின்னர்ப் பேசிய ஜனதா உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் கடுமையான தண்டனையையே வழங்க வேண்டுமென்று வாக்கெடுப்பின் மூலம் முடிவெடுத்தனர். இந்த முடிவு ஏடுகளில் வெளிவந்ததும் நான் விடுத்த அறிக்கையில் இந்திரா காந்தி உரிமையை மீறினார் என்பது தெளிவாக்கப்பட்டிருந்தாலும் கூட, தண்டனை வழங்கும் பிரச்சினையில் ஜனதா கட்சி; தான் எடுத்துள்ள முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
"கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்" என்பது திருக்குறள். எனவே வள்ளுவர் காட்டிய வழியில் ஜனதா அரசு, தனது முடிவை மறு சிந்தனை செய்வது நலமாகும். இந்திரா காந்தியும் நாடாளுமன்றத்தோடு ஒத்துழைப்பது ஜனநாயகத்திற்கு ஆக்கம் தருவதாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தேன். நாடாளுமன்றத்தில் ஒரு வார காலம் இந்தப் பிரச்சினை பற்றிக் கடுமையான விவாதங்கள் நடந்து முடிந்த பிறகு டிசம்பர் 19 ஆம் தேதியன்று இந்திரா காந்தியை அந்த நாடாளுமன்றத் தொடர் கூட்டம் முடியும்வரை சிறையிலிடவும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவரை விலக்கவும் கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
பிரதமர் தேசாய் கொண்டு வந்த அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 279 பேரும், எதிராக 138 பேரும் வாக்களித்தனர். 37 உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை. இந்திரா காந்தியைக் கைது செய்யுமாறு, நாடாளுமன்ற அவைத் தலைவர் மாலை 6 மணிக்கு ஆணை ஒன்றில் கையெழுத்திட, அந்த ஆணை இந்திரா காந்தியிடம் இரவு 8.45 மணிக்குத் தரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் இந்திரா காந்தியின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே. தவான், முன்னாள் சி.பி.ஐ.
தலைமை அதிகாரியான சென் ஆகியோரையும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடியும் வரை சிறையிலிட வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. (சி.பி.ஐ.யின் தலைமை அதிகாரியாக பதவி வகித்த இதே சென்தான், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சர்க்காரியா கமிஷன் விசாரணைக்காக வற்புறுத்தல் மூலமும் அச்சுறுத்தல் மூலமும் பலரிடம் பிரமாண வாக்குமூலங்கள் வாங்கிய அதிகாரியாகும்.) நாடாளுமன்றத்தில் இருந்தவாறே, இந்திரா காந்தி நேராகச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
இந்திரா காந்தி கைது செய்யப்பட்டதன் காரணமாகப் பல்வேறு மாநிலங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. பெங்களூரில் துப்பாக்கிச் சூடு நடத்துமளவிற்குப் போராட்டம் முற்றி நான்கு பேர் இறந்தனர். டெல்லி விமானம் ஒன்றே இந்திரா காந்தியை விடுதலை செய்ய வேண்டுமென்பதற்காகக் கடத்தப்பட்டது. தமிழகத்திலும் மூப்பனார் தலைமையிலே போராட்டம் நடைபெற்றுப் பலர் கைதாயினர். இதற்கிடையே சரண்சிங் - மொரார்ஜி தேசாய் ஆகியோருக்கிடையே மோதல் முற்றிய நிலையில் - சரண்சிங்கின் 77வது பிறந்த நாள் விழா என்ற பெயரால் சுமார் பத்து இலட்சம் பேர் கொண்ட மிகப் பெரிய பேரணி ஒன்றை டெல்லியிலே 23.12.78 அன்று நடத்தினர்.
சரண்சிங்கிற்கு இந்திரா காந்தி, சிறையிலிருந்தவாறே பூச்செண்டு அனுப்பி வாழ்த்துத் தெரிவித்தார். ஒரு வாரச் சிறைத் தண்டனைக்குப் பின்னர் 26.12.78 அன்று இந்திரா காந்தி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 1979ஆம் ஆண்டின் துவக்கமே தமிழகத்தில் சோகத்தில் தொடங்கியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகையன் 5.1.79 அன்று இரவு அ.தி.மு.க.வைச் சேர்ந்த போஸ் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.
இவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பே தனது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாகக் காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருந்த போதிலும், எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கையும் செய்யப்படாத காரணத்தால், அவர் தன்னுயிரைப் பலி கொடுக்க நேரிட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் கழகத்தின் சார்பில் மன்னை நாராயணசாமி, தாழை மு.கருணாநிதி, முத்துப்பேட்டை தர்மலிங்கம், ஏ.கே. சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னையிலே உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நானும் பேராசிரியரும் சென்று அந்தக் கட்சியின் தலைவர்கள் எம்.கல்யாண சுந்தரம், ப.மாணிக்கம், கே.டி.கே.தங்கமணி ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
பின்னர் 19.1.79 அன்று முருகையன் கொலை செய்யப்பட்ட இடத்தைச் சென்று பார்த்ததோடு, அவரது குடும்பத்தினரையும் சந்தித்து எனது ஆறுதலை தெரிவித்துக் கொண்டேன். அந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தின் ஏடுகள் புகைப்பட ஆதாரத்தோடு ஒரு செய்தியை வெளியிட்டிருந்தன. நடிகையாக இருந்த ஜெயலலிதாவிற்கு அமெரிக்கா செல்வதற்காக ரிசர்வ் வங்கி கொடுத்த அனுமதிச் சீட்டின் நகல்தான் அது! அந்த அனுமதிச் சீட்டிலே ஜெயலலிதா ஒரு நோயாளி என்றும், சிகிச்சை செய்து கொள்வதற்காக அமெரிக்கா செல்ல அனுமதி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர் நோயாளி என்றும் அமெரிக்கா சென்று சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்றும் தமிழதுக அரசின் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒரு உயர்அதிகாரி பரிந்துரை வழங்கியதாகவும் அதிலே குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையிலே ரிசர்வ் வங்கி ஜெயலலிதாவிற்குப் பத்தாயிரம் டாலர் அனுமதி வழங்கியதுதான் பெருத்த ஆச்சரியத்தைத் தந்தது. ஏனென்றால் குடியரசுத் தலைவருக்குக் கூட அந்தக் காலத்திலே அந்த அளவிற்கு அனுமதியை ரிசர்வ் வங்கி தந்திருக்காது.
இந்தச் செய்தி பல ஏடுகளிலும் பெரிதாக வெளியிடப்பட்ட போதிலும், அரசு தரப்பிலோ சம்பந்தப்பட்டவர் தரப்பிலோ எந்தவிதமான பதிலும் தரப்படவில்லை. காங்கிரஸ் கட்சியையும், இந்திரா காங்கிரஸ் கட்சியையும் ஒன்றாக இணைப்பது பற்றி 6.1.79 அன்று இந்திரா காந்தியும், சுவரன் சிங்கும் இந்திரா காந்தியின் இல்லத்திலே சந்தித்துப் பேசி இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து விடுவது என்பதில் உடன்பாடு கண்டனர். அதற்கான தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.
விசுவநாதம் அவர்கள் தமிழகத்திலே இரண்டு கழகங்களும் இணைய வேண்டுமென்ற எண்ணத்துடன் ஒரு செய்தியை வெளியிட்டு என்னையும் எம்.ஜி. ஆரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். அதுபற்றி நிருபர்கள் பின்னர் என்னைக் கேட்டபோது, "தனிப்பட்ட கருணாநிதி மாத்திரம் சொல்லக் கூடிய பதில் அல்ல அது; எங்களுடைய கட்சி எடுக்க வேண்டிய முடிவு அது" என்று கூறினேன்.
என்னைச் சந்தித்த முத்தமிழ்க் காவலர் அவர்களிடமும் அந்தக் கருத்தைத்தான் கூறினேன். ஆனால் அவர் எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது அவர் என்ன கூறினார் என்று தெரியவில்லை. ஆனாலும் அந்தப் பிரச்சினை அத்துடன் முடிந்தது. இதற்கிடையில் தஞ்சைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தமிழகத்திலே அமைச்சராகிவிட்ட காரணத்தால், தஞ்சைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட, அந்த இடத்திற்கும் நாகை நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத் தேர்தல்கள் வரவிருந்தன.
தஞ்சைத் தொகுதியிலே சிக்மகளூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுப் பின் நாடாளுமன்றம் எடுத்த நடவடிக்கை காரணமாகப் பதவியை இழந்த இந்திரா காந்தி போட்டிடயிடப் போவதாக ஏடுகள் செய்தி வெளியிட்டன. 8.1.79 அன்று இந்திரா காந்தியிடம் நிருபர்கள் அதுபற்றிக் கேட்டபோது, அதுபற்றி தான் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும், பல்வேறு மாநிலத் தலைவர்களும் தன்னைத் தஞ்சையிலே போட்டியிடுமாறு வற்புறுத்தி வருகிறார்கள் என்றும் அ.தி.மு.க.
அதிகாரப் பூர்வமாக அழைக்காவிட்டாலும் அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் அதுபற்றித் தன்னைச் சந்தித்துப் பேசினார்கள் என்றும் கூறினார். நாகை, தஞ்சை நாடாளுமன்ற இடைத்தேர்தல்கள் 17.6.79 அன்று நடைபெறுமென்றும், வேட்பு மனுத்தாக்கல் செய்ய 23.5.79 இறுதி நாள் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. 1978இல் சிக்மகளூர் தொகுதியிலே வெற்றி பெற்ற இந்திரா காந்திக்கு மீண்டும் அதே தொகுதியிலே போட்டியிடலாம் என்ற எண்ணம் முதலிலே இருந்த போதிலும், கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ்க்கும், சஞ்சய் காந்திக்கும் இடையிலே ஏற்பட்ட அபிப்பிராய பேதம் காரணமாக இந்த முறை தேவராஜ் அர்ஸ் முழு ஒத்துழைப்புத் தருவாரா என்று இந்திரா காந்தி சந்தேகப்பட்டதால், தஞ்சையிலே போட்டியிடலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
அப்போது ஆங்கில மாலை ஏடு "மெயில்" தனது தலையங்கத்தில் இந்திரா காந்தி தஞ்சையிலே போட்டியிட்டால் தி.மு.கழகத்தின் சார்பிலே நான் போட்டியிடக் கூடுமென்றும், தஞ்சை எனக்குச் சொந்த மாவட்டம் என்பதாலும், "மிசா"க் கொடுமைகள் காரணமாகவும் தஞ்சையிலே இந்திரா காந்தி என்னை எதிர்த்துப் போட்டியிடுவது சரியான செயலாக அமையாது என்றும் எழுதியது. கடந்த முறை அந்தத் தொகுதியிலே நின்று வெற்றி பெற்ற அ.தி.மு.க., அது தாங்கள் நின்று வெற்றி பெற்ற தொகுதி ஆயிற்றே மீண்டும் அங்கே தாங்கள் நிற்பதுதானே முறை என்றோ, தாங்கள் நிற்கப் போவதாகவோ எதுவும் தெரிவிக்காததோடு, 12.5.79 இல் கூடிய அ.தி.மு.க.
செயற்குழுவிலே தஞ்சையிலே இந்திரா காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தரப்போவதாக அறிவிப்புச் செய்தது. தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியிலே போட்டியிட இந்திரா காந்தி முடிவெடுத்துவிட்டதாகவும், வேட்புமனுத் தாக்கல் செய்ய 21.5.79 அன்று தஞ்சைக்கு வருவாரென்றும் செய்தி கிடைத்து, தஞ்சை நகரச் சுவர்களில் காங்கிரஸ் தொண்டர்கள் கைச் சின்னத்தை வரைந்தனர். 15.5.79 அன்று நிருபர்களிடம் பேசிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தி தஞ்சையிலே போட்டியிட்டாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க.
காங்கிரசை ஆதரிக்குமென்றும், அதன் காரணமாக ஜனதா ஆட்சி மீது தனக்கு வெறுப்பு எதுவும் இருப்பதாகப் பொருள் அல்ல என்றும் தெரிவித்தார். தொடர்ந்து 20.5.79 தேதிய ஏடுகள் அனைத்திலும், இந்திரா காந்தி தஞ்சையிலே போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், 19.5.79 அன்று தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரையும், இந்திரா காங்கிரஸ் தலைவர் மூப்பனார் அவர்களையும் இந்திரா காந்தி சந்தித்துப் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், செய்திகள் வெளிவந்தன.
இந்திரா காந்தி எங்கே தங்குவது, எப்படி பிரச்சாரம் மேற்கொள்வது போன்ற விவரங்கள் எல்லாம்கூடப் பேசி முடிவெடுக்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மறுநாள் 21ஆம் தேதி வெளிவந்த ஏடுகள் முற்றிலும் மாறுபட்ட செய்தியைக் கூறின. இந்திரா காந்தி தஞ்சையிலே போட்டியிடப் போவதில்லை என்றும், அந்தக் கட்சியின் பார்லிமெண்டரி குழு அந்த முடிவினை எடுத்திருப்பதாகவும், அதையொட்டி இந்திரா காந்தியின் தஞ்சை வருகை இரத்துச் செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தன.
அ.தி.மு.க.வின் நிலையிலே கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டதால் தஞ்சையிலே இந்திரா காந்தியை நிறுத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டதாகக் கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆர்.வி. சாமிநாதன், "19.5.79 அன்று இரவு 7 மணி வரை எம்.ஜி.ஆர்., மூப்பனார், நான் (ஆர்.வி.சாமிநாதன்) ஆகிய மூவரும் டெல்லியில் பேசிக் கொண்டிருந்த போது, இந்திரா காந்திக்கு அ.தி.மு.க. ஆதரவு பற்றி எவ்வித சந்தேகமும் இல்லாதவாறுதான் எம்.ஜி.ஆர்.
பேசினார். ஆனால் நள்ளிரவுக்குப் பிறகு குறிப்பாக பிரதம மந்திரி மொரார்ஜியை எம்.ஜி.ஆர். சந்தித்துவிட்டுத் திரும்பிய பிறகு எம்.ஜி.ஆரின் நிலையில், பேச்சில் மாற்றம் தென்பட்டது. இதைப்பார்த்து நிலைமையைப் புரிந்து கொண்ட பிறகு தஞ்சைத் தொகுதியிலே இந்திரா காந்தியை நிறுத்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது" என்று தொடர்ந்து கூறினார்.
இந்தச் செய்தியைப் பார்த்ததும் 6.5.79 அன்றே, தஞ்சையில் நடைபெற்ற கழக வழக்கறிஞர்கள் மாநில மாநாட்டில் நான் குறிப்பிட்டதுதான் என் நினைவிற்கு வந்தது. அதாவது, "அ.தி.மு.க. இந்திரா காங்கிரஸ் கட்சியை இடைத் தேர்தலில் ஆதரிப்பதாக அறிவித்த போதிலும், பிரதமர் தேசாய் நாளை அ.தி.மு.க. தலைமையைக் கூப்பிட்டு மிரட்டினால் இந்திரா காந்தியை நட்டாற்றில் விட்டு விடுவார்கள். எனவே அ.தி.மு.க.வை நம்பி இந்திரா காந்தி ஏமாற வேண்டா
ம்" என்று நான் பேசியது சில நாட்களிலேயே உண்மையானது. இந்திரா காந்தி தஞ்சைத் தொகுதியிலே போட்டியிடும் திட்டம் கைகூடாவிட்டாலும், இந்திரா காங்கிரசிற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே முறைப்படி இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஒருமாதிரியான தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அதாவது இந்திரா காங்கிரஸ் தஞ்சையிலே போட்டியிடுவதென்றும், நாகையிலே அ.தி.மு.க. போட்டியிடுவதென்றும் முடிவெடுத்தனர். நாகைத் தொகுதியை, ஏற்கெனவே அந்தத் தொகுதியிலே நின்று வெற்றி பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்ததோடு தஞ்சையிலே தி.மு.கழகம் போட்டியிட முடிவு செய்த நேரத்தில் வேட்பாளர் யார் என்று தேர்ந்தெடுப்பதிலே ஒரு பெரும் பிரச்சினை ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டத் தி.மு.கழக முன்னாள் செயலாளரும் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்னை நாராயணசாமி மாவட்ட உணர்வோடு அந்தத் தேர்தலிலே எல்.கணேசனை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்றார். கழகத்தின் வேறு சில மூத்த தலைவர்களும், குறிப்பாகத் தஞ்சை நகரக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எல்.நடராசன், அந்தத் தேர்தலில் அந்தத் தொகுதியிலே அன்பில் தர்மலிங்கத்தை நிறுத்துவதுதான் பொருத்தமாக இருக்குமென்றும் தெரிவித்தனர்.
அன்பில் தர்மலிங்கமும் மன்னை நாராயணசாமியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்; ஒருவரையொருவர் 'மச்சான்' முறை வைத்து அழைத்துக் கொள்ளக் கூடியவர்கள். இருந்த போதிலும் இந்தத் தேர்தலிலே ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றார்கள். இதுபற்றி முடிவெடுக்க ஆட்சி மன்றக்குழு இரண்டு நாட்கள் தஞ்சையில் நடைபெற்றது. இறுதியாக ஒரு முடிவெடுக்கப்பட்டது. ஏற்கெனவே இதுபோன்றதொரு பிரச்சினை கோவை மாவட்டதிலே. ஏற்பட்டபோது; அப்போது வேட்பாளராக நிற்க விரும்பி வாய்ப்புத் தராமல் பின்னர் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தலில் கழக வேட்பாளராக நிறுத்துவதாக உறுதி தந்து, அதன்படியே வாய்ப்பும் தந்து நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்ட கே.ஏ.
கிருஷ்ணசாமியை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு, தஞ்சை நாடாளுமன்ற இடைத் தேர்தலில் கழக வேட்பாளராக அன்பில் தர்மலிங்கத்தை நிறுத்துவதென்றும், பிறகு 1980இல் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் வரும்போது எல்.கணேசனை கழக வேட்பாளராக நிறுத்துவதென்றும் ஆட்சி மன்றக் குழுவிலேயே முடிவெடுத்து, அதனை அறிவிப்பாகவும் செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதன்படி தஞ்சைத் தொகுதியில் கழகத்தின் சார்பிலே அன்பில் தர்மலிங்கமும், இந்திரா காங்கிரஸ் சார்பிலே சிங்காரவேலுவும், நாகைத் தொகுதியிலே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக கே.முருகையனும், அ.தி.மு.க.
வேட்பாளராக மகாலிங்கமும் போட்டியிட்டனர். தஞ்சைத் தொகுதியிலே அ.தி.மு.க. அழையா விருந்தாளியைப் போல இந்திரா காங்கிரஸ் வேட்பாளருக்காகச் சொந்த பணத்தைச் செலவிட்டு அதிகாரத்தைப் பயன்படுத்திப் பணியாற்றியது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆர்.வி. சாமிநாதன் நிருபர்களிடம் அந்தத் தேர்தல் பற்றிக் கூறும் போது "தஞ்சைத் தேர்தலிலே அ.தி.மு.க எங்களுக்கு இப்போது ஆதரவு அளிக்கலாம். ஆனால் இந்திரா காந்தியைத் தஞ்சைத் தேர்தலில் போட்டியிட அழைத்துவிட்டு, கடைசி நிமிடத்தில் எம்.ஜி.ஆர்.
செய்த துரோகத்தை நாங்கள் என்றும் மறக்க முடியாது. தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கட்சி எம்.ஜி. ஆரை மன்னிக்கவே மன்னிக்காது; தன்மானம் உள்ள எந்த காங்கிரஸ் தொண்டனும் எம்.ஜி.ஆர். செய்த துரோகத்தை, இந்திர காந்திக்கு ஏற்பட்ட இழுக்கை மறக்கவே மாட்டான், மறக்கவும் முடியாது" என்று கூறினார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையே நடைபெற்ற அந்தத் தேர்தலில் நாகைத் தொகுதியிலே தி.மு.கழக ஆதரவுக் கூட்டணி வேட்பாளர் முருகையனும் தஞ்சையிலே இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் சிங்காரவேலுவும் வெற்றிபெற்றனர். தி.மு.கழகம் தஞ்சைத் தொகுதியிலே வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும் தேர்தலுக்கு முன்பு எல்.கணேசனுக்குக் கழகம் கொடுத்த வாக்குறுதியைக் கைவிட்டுவிடவில்லை. எப்படி அதற்கு முன்பு கே.ஏ. கிருஷ்ணசாமிக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற அவரை நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்குக் கழகம் தேர்ந்தெடுத்து அனுப்பியதோ அதுபோலவே எல்.
கணேசனையும் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களைத் தேர்தலிலே வேட்பாளராக நிற்கவைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கினோம். கே.ஏ. கிருஷ்ணசாமியின் முன் மாதிரியைப் பின் பற்றி இவரை நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்பியதாலோ என்னவோ, இவரும் அவரைப் பின்பற்றிக் கழகத்திற்கும் கழகத் தலைமைக்கும் துரோகம் செய்து விட்டுப்போனார். அதையெல்லாம் எண்ணிப் பார்த்து என் நெஞ்சுக்கு நானே வழங்கிக் கொள்ளும் நீதி தானே இந்த நெஞ்சுக்கு நீதி!
