நெஞ்சுக்கு நீதி
திருச்சி மாநாடும் இந்தி · 260 / 391
44. திருச்சி மாநாடும் இந்தி ஆதிக்க எதிர்ப்பும் தி .மு.கழக வரலாற்றில் சிறப்புக்குரிய ஒரு இடத்தைப்பெற்ற நகரம் திருச்சி! ஏன், ஒரு திருப்புமுனையைக் கழகத்திலே உருவாக்கிய இடமும் கூட! தி.மு.கழகம் தேர்தலிலே ஈடுபடவேண்டுமென்ற கருத்துக்குத் தீர்மான வடிவம் கொடுத்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் பேருரையாற்றிய சரித்திரப் புகழ் பெற்ற மாநாடு திருச்சியிலே தான் நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, தி.மு.கழகம் தனது ஐம்பெரும் கொள்கையை வெளியிடுவதற்குக் காரணமாக அமைந்த மாநாடு திருச்சியிலே நடைபெற்றது.
கல்லக்குடி பேராட்டக்காவியம் எழுதிடக் குருதியில் எழுதுகோலைத் தோய்த்துக் கொடுத்ததும் திருச்சிப் பாசறைதான்! சீறிவரும் இந்திப் பகையை எதிர்த்துச் சின வேங்கைத் தமிழர் கூட்டம் தோள்தட்டி யெழுந்த போது, "செந்தமிழுக்குத் தீங்கு வந்த பின்னும் இந்தத் தேகம் இருந்தொரு இலாபமுண்டோ?"
எனக்கேட்டுத் தீயிட்டுத் தன்னைப் பொசுக்கிக் கொண்டு எலும்புத் துகள்களாக மாறினானே சிங்கத் தமிழன் சின்னச்சாமி, அந்த மாவீரன் மடிந்து கிடந்த மண்ணல்லவா திருச்சி மண்! அந்தத் திருச்சி மண்ணிலே தான், 1978-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 23, 24 சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தி.மு.கழகத்தின் இந்தி எதிர்ப்பு மாநில மாநாட்டினை நடத்துவதென்று முடிவெடுக்கப் பட்டது. மாநாட்டிற்குத் தலைவராக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் கோவிந்தன் அவர்கள்!
திறப்பாளர் யார் தெரியுமா? கழக மாநாடுகளில் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு விட்டதாகக் கழகத் தலைமையின் மீது குறை கூறப்பட்டதே; அந்தக் கோபால்சாமி தான்! நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சில திங்களிலேயே இந்த மரியாதையும் தரப்பட்டு, திருச்சி இந்தி எதிர்ப்பு மாநில மாநாட்டுத் திறப்பாளர் என அறிவிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களின் படத்தை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களின் படத்தைத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தளபதி கி.வீரமணியும், புரட்சிக் கவிஞர் படத்தினைக் கவிஞர் முடியரசனும், தளபதி அழகிரிசாமி படத்தினை மன்னை நாராயணசாமியும், இராமாமிர்தம் அம்மையார் படத்தினை அலமேலு அப்பாத்துரையும், தாளமுத்து நடராஜன் மற்றும் தீக்குளித்த தியாகிகளின் படத்தினை இளம்பரிதியும் திறந்து வைத்தார்கள்.
மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக அன்பில் தர்மலிங்கமும், செயலாளர்களாக தாழை மு.கருணாநிதி, புதுக்கோட்டை அ.பெரியண்ணன் ஆகியோரும், அமைப்புக் குழுவில் எம்.எஸ்.மணி, எம்.எஸ். வெங்கடாசலம், கு.காமாட்சி, ஏ.வி. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.வி. சாமியப்பன், அ.மலர்மன்னன், ஆ.துரைராசு, த.ஆறுமுகம், கே.எஸ். முருகேசன் ஆகியோரும், நிதிக்குழுவில் புதுக்கோட்டை ஏ.தியாகராச காடு வெட்டியார், திருச்சி எம். பாலகிருஷ்ணன், தஞ்சை எஸ்.நடராசன் எம்.எல்.ஏ., மன்னை கு.
பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை க. சிதம்பரம் ஆகியோரும், விளம்பரக் குழுவிலே ஆர். நாகசுந்தரம், ஜெ.எஸ்.ராசு ஆகியோரும், தொண்டர் படைத் தலைவராக எஸ்.ஏ.ஜி.ராபியும், துணைத் தலைவராக கீரை தமிழ்ச் செல்வனும் பணியாற்றினர். 16-12-78 தேசிய முரசொலியில் "அன்பில் அழைக்கிறார்" என்ற தலைப்பில் மாநாடு பற்றி நான் முதல் கடிதம் எழுதினேன். "அன்பில் அழைக்கிறார்" என்ற தலைப்பு அண்ணா அவர்கள் எழுதிய தலைப்பு. அதையே நானும் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் கடிதத்திற்குத் தலைப்பாக எடுத்துக் கொண்டு எழுதினேன்.
ஏனெனில் அண்ணா இருந்தபோது நடைபெற்ற அந்த மாநாட்டிற்கும், 78இல் நடைபெறும் இந்த இந்தி எதிர்ப்பு மாநில மாநாட்டிற்கும் வரவேற்புக் குழுத் தலைவர் அன்பில் தர்மலிங்கம்தான். 21-12-78 தேதியிட்ட முரசொலியில் "கூடுவோம்! கொடி உயர்த்துவோம்!"
என்ற தலைப்பில் திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து எழுதினேன். மாநாட்டில் கலந்து கொள்ள நானும் பொதுச் செயலாளரும் சென்னையிலிருந்து கார் மூலமாகவே செல்ல முடிவெடுத்து டிசம்பர் 22-ஆம் தேதி புறப்பட்டோம். சென்னையிலிருந்தே எங்களுக்கு வழி நெடுக வரவேற்பு. உளுந்தூர்பேட்டையிலிருந்தே மாநாட்டிற்கான வரவேற்பு வளைவுகள் ஏராளமாக வழியெங்கும் வைக்கப்பட்டிருந்தன. சாலையின் இருபுறமும் கழகக் கொடிகள்! வரவேற்புப் பதாகைகள்!
திருச்சியில் தங்கும் விடுதிக்குக்கூடச் செல்லாமல் நேராக மாநாட்டுப் பந்தலுக்கே வருவதாக முன்பே கூறியதன் பேரில், பந்தல் முகப்பில் எங்களை மாநாட்டு வரவேற்புக் குழுவினர் வரவேற்றனர். பின்னர் மாநாட்டுப் பந்தல் முழுவதையும் சுற்றிப்பார்த்தோம். 23-12-78 அன்று இந்தி எதிர்ப்பு மாநில மாநாட்டு ஊர்வலம். பல இலட்சம் மக்கள் அந்த ஊர்வலத்திலே பங்கேற்றனர். காலை 11 மணிக்கு திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையிலிருந்து தொடங்கிய ஊர்வலம் பிற்பகல் 2 மணி அளவில்தான் மாநாட்டுப் பந்தலை அடைந்தது.
ஊர்வலம் தொடங்கி மாநாட்டுப் பந்தலை அடையும் வரையில் தொடர்ந்து பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் கழகத் தோழர்கள் ஊர்வலத்திலே பங்கேற்றனர். ஊர்வலம் மாநாட்டுப் பந்தலை அடைந்ததும் மாநாட்டுத் தலைவர் புலவர் கோவிந்தன் எழுபதடி உயரக் கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். இந்தியை எதிர்த்து 1938-ஆம் ஆண்டில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ள திருச்சியிலிருந்து சென்னைக்குப் படை நடத்தி வந்த பட்டுக்கோட்டை அழகிரி ஏந்தி வந்த வில், புலி, கயல் சின்னம் பொறித்த கொடி இந்த ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டது.
பிற்பகல் நிகழ்ச்சியின்போது அந்தக் கொடியை, அழகிரியின் படத்தினை மன்னை திறந்து வைத்த நேரத்தில் பட்டுக்கோட்டை அழகிரியின் மகன் ராமமூர்த்தி என்னிடம் வழங்கினார். மாநாட்டில் பொதுச் செயலாளர் முன்மொழிந்து நான் வழி மொழிந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் தமிழையும் மத்திய அரசின் ஆட்சிமொழி ஆக்குக என்று வலியுறுத்தியும், அனைத்து மாநில ஆட்சி மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாகச் சேர்த்து அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறச்செய்யவேண்டுமென்று வலியுறுத்தியும், அதுவரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய நான் எனது பேச்சின் இறுதியில் மறைமுகமாக இந்தி நுழைக்கப்படுவதை எதிர்த்து நமது மனக்குறையை வெளிப்படுத்தும் வகையில் 1979ஆம் ஆண்டு ஜனவரி 26 - குடியரசு நாளன்று இல்லங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றவேண்டுமென்றும், வீதிகள் தோறும் கறுப்புக்கொடி தோரணங்களைக் கட்ட வேண்டுமென்றும், ஊர்கள் தோறம் கழகத் தோழர்கள் கறுப்பு உடை அணிந்து மௌன ஊர்வலம் நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். மாநாட்டுத் தீர்மானத்தின்படி 25-1-79 அன்று இந்தி எதிர்ப்பு தியாகிகள் தினத்தன்று தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு விளக்கக் கூட்டங்களைக் கழகத்தின் சார்பிலே நடத்துவதென்றும், 26-1-79 அன்ற இந்தி ஆதிக்கக் கண்டன நாளாகத் தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடிகளைக் கழகத் தோழர்கள் தங்கள் இல்லங்களிலே ஏற்றுவதோடு, முக்கிய நகரங்களிலே கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலங்கள் நடத்துவதென்றும் 4-1-79 அன்று கூடிய நிர்வாகக் குழு முடிவெடுத்தது.
ஜனவரி 26 குடியரசு நாளன்று இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நடத்துகின்ற கண்டன நாள்-குடியரசு நாளைத் துக்கநாள் என்று அறிவிப்பதற்காக அல்ல என்றும், குடியரசு நாளன்று நமது துக்கத்தை வெளிப்படுத்துகிறோம் என்பதைக் காட்டுவதற்காகத்தான் என்றும் ஏடுகளின் வாயிலாகத் தெளிவாக்கினேன். திருச்சியிலே தி.மு.கழகம் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தியதற்குப் பிறகு 25-1-79 அன்று கோவையிலே அ.தி.மு.க. சார்பில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப் போவதாக அ.தி.மு.க.
அறிவித்தது. மேலும் இந்தி எதிர்ப்புப் பற்றிப் பேசுவதற்காகத் தமிழக அரசின் சார்பில் 23-1-79 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டுவதற்காக முதலமைச்சர் அழைப்பு அனுப்பியிருந்தார். அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டுவதாக அறிவித்த முதலமைச்சர், அதற்குச் சில நாட்கள் முன்பு நெல்லையிலே செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று உறுதியளித்திருப்பதைத் தான் நம்புவதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் அங்கே நிருபர்களிடம், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு விடுத்த அழைப்பிதழிலே குறிப்பிட்டதற்கு மாறாக, தி.மு.கழகமும், திராவிடர் கழகமும் இணைந்து 26-1-79 அன்று நடத்துவதாக அறிவித்திருந்த கறுப்புக்கொடி நிகழ்ச்சியைப் பற்றியும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலே கலந்தாலோசிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். எனவே, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி நானும், பி.
மாணிக்கம், அப்துல்சமது, செ.துரைசாமி ஆகியோரும் சேர்ந்து விடுத்த கூட்டறிக்கையில் 23-ஆம் தேதி கூட்டத்தில் முதல்வரின் அழைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு இந்தியை மறைமுகமாகவும் நேரடியாகவும் புகுத்தப்படுகின்ற நிலையைப்பற்றி மட்டுமே விவாதித்து முடிவெடுக்க வேண்டுமென்றும், அந்த ஒரு நோக்கத்தின் அடிப்படையிலேயே அந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறோம் என்றும் தெரிவித்தோம். 23-1-79-ல் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தி.மு.க.
சார்பில் நானும், ஏ.வி.பி. ஆசைத்தம்பி எம்.பி., அ.செல்வராசன் எம்.எல்.ஏ. ஆகியோரும் கலந்து கொண்டோம். அடுத்து வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் இந்தித் திணிப்புக்கு எதிராக ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்கள் என்னைக் கண்டபோது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் சார்பாக இல்லாமல், முதலமைச்சர் தனது முடிவுரையில் திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் ஜனவரி 26-ஆம் தேதி நடத்தவிருக்கிற இந்தி ஆதிக்க எதிர்ப்புக் கறுப்புக்கொடி நிகழ்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு நான் "கடந்த இரண்டொரு நாட்களாக முதலமைச்சருடைய பேச்சுக்களிலும் பேட்டிகளிலும் பிரதமர் இந்தியைத் திணிப்பதாக இல்லை என்ற கருத்தினைக் கூறி வருகிறீர்கள்; கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட அ.தி.மு.க. இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டையும் திடீரென அது வெறும் வீர வணக்க மாநாடுதான் என்று அறிவித்திருக்கிறீர்கள். இந்த சூழ்நிலையில் இந்தி ஆதிக்கத்திற்குத் தமிழகத்தில் இருக்கிற எதிர்ப்பைக் கறுப்புக் கொடி நிகழ்ச்சியின் மூலம் காட்ட வேண்டியது அவசியமாகிறது.
கறுப்புக் கொடி நிகழ்ச்சியால் சட்டசபையிலே இந்தித் திணிப்பிற்கு எதிராக நிறைவேற்றப் படுகின்ற தீர்மானத்திற்கு வலிமை ஏற்படுமே தவிரக் குந்தகம் எதுவும் ஏற்படாது. அதுமாத்திரமல்லாமல் நாங்கள் அறிவித்துள்ள கறுப்புக் கொடி நிகழ்ச்சி அரசாங்கத்திற்கோ, பொது மக்களுக்கோ எத்தகைய இடையூறும் விளைவிக்காத நிலையில் அமைதியாக நடைபெறும்" என்று சொன்னேன்.
ஏனென்றால் கோவையில் 25-ஆம் தேதி அ.தி.மு.க. நடத்தவிருந்த மாநாட்டிற்கு முதலில் ஒட்டிய சுவரொட்டியில் இந்தி எதிர்ப்பு மாநாடு என்றும், இரண்டாவதாக ஒட்டிய சுவரொட்டியில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு என்றும், மூன்றாவதாகக் கடைசியில் அவசர அவசரமாக ஒட்டிய சுவரொட்டியில் வீர வணக்க மாநாடு என்றும் போட்டிருந்தார்கள். இதற்கிடையில் 19-1-79 அன்று சென்னை வந்திருந்த பிரதமர் தேசாயிடம் நிருபர்கள் "இந்தித் திணிப்புப் பற்றித் தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறதே" என்று கேட்டதற்கு "நாட்டுப் பற்று உள்ளவராக இருந்தால், அவருடைய கடமை இந்தியைக் கற்றுக் கொள்வதேயாகும்.
அதைக் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சட்டத்தின் மூலம் வற்புறுத்தும் முறையில் அல்ல; யார் மீதும் திணிப்பதும் கிடையாது" என்றார். "இந்தியை எதிர்ப்பவர்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்" என்று மேலும் நிருபர்கள் கேட்டதற்கு "அவர்கள் நாளடைவில் முடிவாக ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள்.
இந்திப் பிரச்சினை, இந்திப் பிரச்சினை என்று அடிக்கடி பேசி ஏன் செத்த குதிரையைத் திரும்பத் திரும்ப அடிக்கிறீர்கள்" என்றார். இந்தி எதிர்ப்பைச் செத்த குதிரை என்று கூறிய தேசாய்க்கு திருச்சி விழா ஒன்றிலே பேசும்போது பதில் கூறினேன். "குதிரைகள் சில நேரத்தில் அதிக வேகமாக ஓடிக் களைப்புற்றிருந்தால் நல்ல மணலில் நான்கு கால்களையும் தூக்கிக் கொண்டு படுத்துத் தூங்கும். அதைப் பார்க்கின்ற சிலருக்குக் குதிரை செத்துப் போய்விட்டது என்று எண்ணத் தோன்றும்.
ஆனால் களைப்பு நீங்கிய பிறகு குதிரை எழுந்தால் முன்பை விட வேகமாகப் பாய்கின்ற ஆற்றல் அந்தக் குதிரைக்கு நிச்சயமாக ஏற்படும். எனவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தி எதிர்ப்பு செத்த குதிரையாக அல்ல, அது களைப்புற்று உறங்கிக் கொண்டிருந்த குதிரையாக இருந்தது. ஆனால் திருச்சியில் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குப் பிறகு அந்தக் குதிரை எழுந்து கம்பீரமாக நிற்கிறது. பாய்வதற்குத் தயாராக இருக்கிறது.
அந்தக் குதிரையின் பாய்ச்சலை ஜனவரி 25,26 ஆம் தேதிக்குப் பிறகு இந்திய நாடு காணத் தான் போகிறது" என்று கூறினேன். நாட்டுப் பற்றுள்ளவர்கள் இந்தியைப் படித்தே தீர வேண்டுவென்று அவர் கூறியதற்கு, "அப்படியென்றால் இந்தியைப் படிக்க மாட்டேன் என்று சொல்கிறவர்கள் எல்லாம் தேசத் துரோகிகளா? நாட்டுத் துரோகிகளா?"
என்றும் கேட்டேன். கர்நாடக முதலமைச்சராக இருந்த தேவராஜ் அர்ஸ் அவர்கள் கூட தேசாயின் மொழி பற்றிய அந்தப்பேச்சைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். ஆனால் தமிழக முதலமைச்சரிடம் தேசாய் கூறிய செத்த குதிரை என்பதற்கு விளக்கம் கேட்டபோது, "சட்டப்படி இந்தியை திணிக்க மாட்டோம் என்று தேசாய் கூறியிருக்கிறார். திணிப்பு இல்லாத போது அந்தப் பிரச்சினைக்கு இடம் இல்லை என்பதால் செத்த குதிரை என்று கூறியிருக்கிறார்.
இந்திரா காந்தி 1971-ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதியை எப்படி நம்பினோமோ அதேபோல் இப்போதும் தேசாய் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் நம்புகிறோம்" என்று கூறினார். தி.மு.கழகத்தின் 26-ஆம் தேதிய கறுப்புக் கொடி ஊர்வலத்தையொட்டி, சென்னையிலே போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத் தலைநகரமான பெங்களூரில் கறுப்புக் கொடி ஊர்வலம் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் தலைமையிலே நடத்த தி.மு.கழகம் அனுமதி கேட்டு, அந்த மாநில அரசு அனுமதி கொடுத்திருந்தது.
தமிழகத்திலே பிறப்பித்த தடை உத்தரவை நீக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் தி.மு.- கழகம் தடையை மீறி ஊர்வலம் நடத்துமென்றும் ஓர் அறிக்கை மூலமாகத் தெரிவித்தேன். உடனே தமிழக அரசு தி.மு.கழகம் நடத்தும் கறுப்புக்கொடி ஊர்வலத்திற்குத் தடை கிடையாது என்று காவல்துறை மூலம் அறிவித்தது. மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஜனவரி 26-ஆம் தேதிய கறுப்புக் கொடி ஊர்வலத்தைக் கைவிட வேண்டுமென்று எழுதிய
கடிதமொன்று 24-ஆம் தேதி என் கைக்குக் கிடைத்தது. கழகம் அவரது வேண்டுகோளை ஏற்க முடியாத நிலைக்குக் காரணம் என்ன என்பதையும் பிரதமரின் பேச்சுக்களையும் எடுத்துக்காட்டி 24-ஆம் தேதியன்றே அவருக்கு நீண்டதோர் பதில் கடிதம் எழுதினேன். இந்தி எதிர்ப்பு தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம் கறுப்புக் கொடி விளக்கக் கூட்டமாக சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் சென்னை மாவட்டக்கழகத் துணைச் செயலாளர் அ.ஜார்ஜ் தலைமையிலே நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். மறுநாள் கறுப்புக்கொடி ஊர்வலம். கழகத் தோழர்கள் எல்லாம் கறுப்புஉடை அணிந்தனர். கழகத் தோழர்கள் இல்லங்களில் எல்லாம் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டன. சென்னையிலே என் தலைமையிலும், கோவையில் பேராசிரியர், திருச்சியில் சாதிக் பாட்சா, மதுரையில் ஏ.வி.பி. ஆசைத்தம்பி ஆகியோர் தலைமையிலும் கறுப்புக் கொடி ஊர்வலங்கள் நடைபெற்றன. சென்னை பெரியார் திடலிலே ஊர்வலம் தொடங்கி அண்ணா அறிவாலயத்திலே ஊர்வலம் முடிந்தது.
அந்த ஊர்வலத்தைக் கண்ட வெளி மாநில பத்திரிகைகள் எல்லாம் கருங்கடலே சென்னைத் தெருக்களிலே நீந்தி வந்தது என்று எழுதின. ஊர் வல முடிவில் கூட்டத்தினர் முன்பாக இந்தி எதிர்ப்புச் சூளுௗரையை நான் முன் மொழிந்திட அனைவரும் வழி மொழிந்தனர். 19-1-1979 அன்று இந்திப் பிரச்சினை பற்றி சென்னையிலே நிருபர்களிடம் பேசிய பிரதமர் தேசாய் தேவையில்லாமல் ஒரு பிரச்சினையை எழுப்பினார். பாண்டிச்சேரியிலே அரசியல் ஸ்திரத் தன்மை ஏற்படுவதற்கு அந்த மாநிலம் தமிழ்நாட்டோடு இணைவது அவசியம் என்றும், தேவையானது என்றும் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில்தான் பிரதமர் அந்தக் கருத்தைத் தெரிவித்தார் என்று ஏடுகள் எழுதியபோதிலும் வெளிப்படையாக அதை யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் பிரதமர் தெரிவித்த அந்தக் கருத்து புதுவை மாநிலத்தில் பெரும் கலவரத்திற்குக் காரணமாக அமைந்து விட்டது. புதுவையைத் தமிழகத்தோடு இணைப்பது என்ற அந்த முடிவுக்கு எதிராக 22-1-1979 அன்று முழு அடைப்புப் புதுவையிலே நடைபெற்றது. ஒருகடை கூடத் திறக்கப்படவில்லை.
பிரதமரின் அந்தக் கருத்துப் பற்றி நிருபர்கள் என்னைக் கேட்டபோது, புதுவை மாநில அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் அந்த மாநில மக்களின் எண்ணங்களையும் அறிந்த பிறகுதான் இது பற்றிக் கருத்துக் கூற வேண்டும் என்று கூறினேன். தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் இதுபற்றிக் கேட்டதற்கு, "இது மத்திய அரசு முடிவு செய்யவேண்டிய விஷயம். மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக இருந்தாலும், சில முடிவுகளை எடுக்கத்தான் வேண்டியிருக்கும்.
எனினும் நான் மக்களின் விருப்பத்தை மதிக்கிறேன்" என்றார். இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் புதுவையிலும், காரைக்காலிலும் கிளர்ச்சிகள், கலவரங்கள் அதிகமாயின. தடியடி, கண்ணீர்ப்புகை, துப்பாக்கிச்சூடு அனைத்தும் நடந்தன. துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர் உயிரிழந்தார். இரண்டு நாட்கள் ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டதோடு, வன்முறையில் இறங்கும் எவரையும் கண்டவுடன் சுடுவதற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
26-ஆம் தேதி குடியரசு தினவிழா நிகழ்ச்சியையும் புதுவை மக்கள் அறவே புறக்கணித்தனர். சிலர் தந்த தவறான ஆலோசனையின் காரணமாக இணைப்புப்பற்றி பிரதமர் அறிவித்ததை உடனடியாக மறு பரிசீலனை செய்யவேண்டுமென்று நான் பிரதமரைக் கேட்டுக் கொண்டேன். 27-1-79 அன்று மீண்டும் புதுவையிலே துப்பாக்கிச் சூடு நடைபெற்று மேலும் ஒருவர் பலியானார். பிரச்சினை பெரிதான காரணத்தால், பிரதமர் தேசாய், "பாண்டிச்சேரியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பது பற்றி மத்திய அரசு இன்னும் எந்தவித முடிவும் எடுக்கவில்லை.
இது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் பரிசீலிக்கப்படும்" என்றார். இந்த உறுதிமொழிக்குப் பின்னர் தான் புதுவையிலே அமைதி திரும்பியது.
