நெஞ்சுக்கு நீதி
சிக்மகளூர் இடைத்தேர்தல் · 259 / 391
43. சிக்மகளூர் இடைத்தேர்தல் எழுபது கோடி கத்தோலிக்க கிறித்தவ மக்களின் மதத்தலைவர் போப்பாண்டவர் 6-8-1978 அன்று மாரடைப்புக் காரணமாகத் தனது 81-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தி உலகம் முழுவதுமுள்ள கிறித்தவ சசோதரர்களைத் துக்கத்தில் ஆழ்த்தியது. நான் வெளிநாடு சென்ற போது அவரை நேரில் சந்தித்தது பற்றியும், அவர் என்னை வரவேற்று உரையாடியது பற்றியும் இத்தொடரின் முதல் பகுதியிலே விவரமாக எழுதியிருக்கிறேன்.
எனவே அவரது மறைவுச் செய்தி என்னையும் பெரிதும் பாதித்தது. இயற்கை எய்திய போப்பாண்டவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் கியோவன்னி மொந்தினி என்பதாகும். 1963ஆம் ஆண்டு போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 15 ஆண்டுக் காலம் அந்தப் பதவியிலே இருந்து வந்தார். இவரை அடக்கம் செய்வதற்காக ஓக் மரம், வெள்ளீயம், சைப்ரஸ் என்ற மூன்று வகையிலான சவப்பெட்டி தயாரிக்கப்பட்டது. இவர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் கொண்ட "வெல்வெட்" பை ஒன்று அவரது பாதங்களுக்கடியில் வைக்கப்பட்டது.
புது போப்பாண்டவர் பதவியேற்கும் வரையில் வாடிகன் நகரிலே உள்ள கார்டினல்கள் அன்றாடம் கூடி, நிர்வாகத்தைக் கவனிப்பார்கள் என்றும் திருச்சபையில் 85 வயதான கார்டினல் கான்பலோனியரி, மறைந்த போப் அணிந்திருந்த படகும், படகோட்டியும் பொறித்திருந்த மீனவர் மோதிரத்ததை உடைப்பார் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் புதிய போப் புதிய கணையாழி அணிந்து தன் பணியைத் தொடங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது. புது போப்பாண்டவர், முன்னவர் மறைவு அறிவிப்பு வந்த 15 முதல் 18 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள கார்டினல்கள் ஒன்று கூடித் தேர்ந்தெடுப்பார்கள். 18-வது நாள் கார்டினல்கள் கொண்ட அமைப்புக் கூட்டம் நடைபெறும். புனித ஆராதனை நடத்தப்பட்ட பிறகு, 116 கார்டினல்களும் சிஸ்டைன் ஆலயத்தில் வாக்குப் பதிவுக்காகக் கூடுவார்கள். கதவுகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டு விடும். பின்னர்த் தேர்வு நடைபெறும். புது போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் வரை அவர்கள் வெளியே போக முடியாது. எந்த இனத்தவராக இருந்தாலும், எந்த நாட்டவராக இருந்தாலும் கத்தோலிக்க ஆணாக இருந்தால், போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.
முடிவு தெரிந்ததும் வாக்குச் சீட்டுகள் உள்ளே எரிக்கப்பட்டு, புகைபோக்கி வழியாக, புகை வெளியே தெரியும்படி செய்வார்கள். தேர்தல் இறுதி அடையாவிட்டால், வாக்குச் சீட்டுகளை ஈர வைக்கோலில் போட்டு எரிப்பார்கள். அப்போது கரும்புகை வெளியே வரும். அதைப்பார்த்து வெளியே, இருப்பவர்கள் இன்னும் தேர்தல் முடிவாகவில்லை என்பதைப் புரிந்துகொள்வார்கள். போப் தேர்ந்தெடுக்கப்பட்டால் வெறும் வாக்குச் சீட்டுகள் மட்டுமே எரிக்கப்படும்.
அப்போது இளம்புகை புகை போக்கி வழியாக வருவதைக் கண்டால், போப் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என்பதை வெளியே உள்ள மக்கள் தெரிந்து கொள்வார்கள். தேர்தலுக்காக கூடும் கார்டினல்களில் குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு பங்கும் அத்துடன் கூடுதலாக ஒரு வாக்கும் அதாவது 75 வாக்குகளைப் பெறுகிறவரே போப்பாண்டவராக வர முடியும். தேவையான வாக்குகளைப் பெற்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை திரும்பத் திரும்ப வாக்குப் பதிவு நடைபெறும்.
26-7-78 அன்று இந்திய நேரம் பகல் 3.32 மணிக்கு முதலில் கறுப்புப்புகை வெளியே தெரிந்தது. எனவே புதிய போப் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்கள். பின்னர் ஒருமுறை இரவில் கரும்புகை வந்தது. அதற்குப் பின்னர் மூன்றாவது முறை வெளிவந்த புகை, புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என்பதை அறிவிக்கும் வெண்புகையாக வெளியே வந்தது. அதனைக் கண்டு தேவாலயத்தைச் சுற்றிக் காத்திருந்த இலட்சக் கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் புதிய போப் புனித பீட்டர் தேவாலய பால்கனிக்கு அழைத்துவரப்பட்டார். அவரது இயற்பெயர் அல்பினோ லூசியானி. இவரும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரேயாவார். புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், புதிய பெயர் ஒன்றை அவர்கள் சூட்டிக் கொள்ள வேண்டும். இவர் தனது பெயரை முதலாவது ஜான்பால் என்று வைத்துக் கொண்டார். 23-வது ஜான் அவருக்கு பிஷப் தீட்சை கொடுத்ததால் அவரது பெயரிலிருந்து ஜான் என்ற பெயரையும், போப்பாண்டவர் ஆறாவது பால் தமக்கு 'கார்டினல்' தீட்சை கொடுத்ததால் அவரது பெயரிலிருந்து பால் என்ற பெயரையும் தேர்ந்தெடுத்து "ஜான்பால்" என்று வைத்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.
உலக கத்தோலிக்க கிறித்தவ மக்களின் புதிய மதத் தலைவராக இவர் செப்டம்பர் 3-ஆம் தேதியன்று புனித பீட்டர் ஆலயத்தில் பட்டாபிஷேகம் செய்து கொண்டார். ஆனால் என்ன கொடுமை! புதிய போப் முதலாம் ஜான் பால் ஒரு மாதம் கூட அந்தப்பதவியிலே நீடிக்க முடியவில்லை. செப்டம்பர் 28-ஆம் தேதியன்று இரவு படுக்கச் சென்றவர் தூக்கத்திலேயே இறந்து விட்டார் என்பது மறுநாள் காலையிலேதான் அறியப்பட்டது. மாரடைப்புக் காரணமாகத்தான் இவரும் இறந்தார் என்பது பின்னர் மருத்துவ சோதனையிலே தெரிந்தது.
இவருக்குப் பின் அடுத்த போப் ஆக போலந்து நாட்டைச் சேர்ந்த கரோல் வோசிடிலா 16-10-1978 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 1522 ஆம் ஆண்டிற்குப் பின் இத்தாலிய நாட்டைச் சேராத ஒருவர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இவர்தான்! கர்நாடக மாநிலம் சிக்மகளூர் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தல் 5-11-1978 அன்று நடைபெறுமென்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்திரா காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் அந்த இடைத் தேர்தலில் இந்திரா காந்தி வேட்பாளராகப் போட்டியிட வேண்டுமென்று பெரிதும் வலியுறுத்தியதின் பேரில், அவரும் ஒப்புக்கொண்டு 6-10-78 அன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ததோடு, அந்தத் தொகுதியிலே சுற்றுப்பயணம் செய்யவும் முற்பட்டார்.
இந்தத் தேர்தலிலே இந்திரா காந்தியை எதிர்த்து ஜனதா கட்சியின் சார்பிலே கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் வீரேந்திர பட்டீல் போட்டியிடுவார் என்று ஜனதா கட்சி சார்பிலே அறிவிக்கப்பட்டது. 13-10-78 அன்று வீரேந்திர பட்டீல் சென்னை வந்து என்னைச் சந்தித்து சிக்மகளூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தி.மு.கழகம் தனக்கு ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவரிடம் கழகத்தின் தலைமைச் செயற்குழு 14.10.78 அன்று நடைபெறுவதாகவும், செயற்குழுவிலே அதுபற்றிப் பேசி முடிவெடுக்கப்படுமென்றம் கூறினேன்.
மேலும் வீரேந்திரபட்டீல் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று கோரிக் கடிதமும் கொடுத்தார். இது மட்டுமின்றி சிக்மகளூர் தேர்தல் பொறுப்பாளராக ஜனதா கட்சி சார்பில் நியமிக் கப்பட்டிருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும் ஜனதா கட்சிக்கு ஆதரவு கோரிக் கடிதம் எழுதியிருந்தார். சிக்மகளூர் நாடாளுமன்றத் தொகுதியில் தமிழர்கள் சுமார் 85 ஆயிரம் பேர் அப்போது வாக்காளர்களாக இருந்தார்கள். அக்டோபர் 14ந் தேதி கழகத்தின் தலைமைச் செயற்குழு சென்னையிலே நடைபெற்றது.
டிசம்பர் திங்களிலே திருச்சியிலே இந்தி எதிர்ப்பு மாநில மாநாடு நடத்துவது உட்படப் பல தீர்மானங்கள் நிலைவேற்றப்பட்டன. சிக்மகளூர் தொகுதியிலே ஜனதா கட்சி வேட்பாளர் வீரேந்திர பட்டீல் அவர்களை ஆதரிப்பது என்றும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. சிக்மகளூர் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. இந்திரா காந்தியை ஆதரிக்கப் போவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 12ந் தேதியன்று வீரேந்திர பட்டீல் தனது வேட்பு மனுவை ஜனதா கட்சியின் சார்பில் தாக்கல் செய்தார்.
தி.மு.கழகம் தேர்தலிலே ஜனதாக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததோடு மாத்திரமல்லாமல், ராமகிருஷ்ண ஹெக்டே அவர்கள் என்னை நேரில் வந்து அழைத்ததையொட்டி 2-11-78 அன்ற சிக்மகளூரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திலே கலந்து கொண்டு வீரேந்திர பட்டீலுக்கு வாக்களிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தேன். சிக்மகளூரில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தைப் பற்றி "இந்தியன் எக்ஸ்பிரஸ்" எழுதும்போது, "பதினாறு நாட்களாக இங்கே நடந்து வரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலேயே மிகப்பெரிய கூட்டம் அது" என்று எழுதியிருந்தது.
சிக்மகளூர் தொகுதியிலே வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கட்சிப் பாகுபாடின்றி அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டு என்னை வரவேற்றதோடு; என்னுடைய உரையை ஆர்வத்தோடு கேட்டனர். அந்தக் கூட்டத்திற்கு முதுபெரும் தலைவரான நிஜலிங்கப்பா தலைமை தாங்கினார். ஆச்சார்யா கிருபளானி, வீரேந்திர பட்டீல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.டி.ரணதிவே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சாலுவாலிகா தலைவர் வட்டல் நாகராஜ் ஆகியோர் அந்தக் கூட்டத்திலே உரையாற்றினர்.
அந்தச் சுற்றுப் பயணத்தின்போது என்னுடன் ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, ஆர்.டி.சீத்தாபதி, கோவை தேவசகாயம், பழக்கடை பாண்டியன் ஆகியோர் உடன் வந்திருந்தனர். எனக்கு முன்னால் அந்தக் கூட்டத்திலே பேசிய மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், "இரண்டு முறை என்னுடைய உயிரைக் காப்பாற்றியவர் கலைஞர் கருணாநிதி. இந்தப் பொதுக் கூட்டத்தின் மூலமாக அவருக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எமர்ஜன்சி நேரத்தில் என்னுடைய உயிரைப்போக்கக்கூடிய தருவாயில் கடைசி நிமிடத்தில் காப்பாற்றியவர் கலைஞர் கருணாநிதி.
அவருக்கு நான் ஓராயிரம் நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் செய்த நன்றியை நான் சாகும் வரை மறக்க மாட்டேன்" என்றார். எமர்ஜன்சி சமயத்தில் ஜார்ஜ் பெர்னாண்டசை போலீசார் தேடி அலைந்ததும், அவரைச் சுட்டுக்கொன்றாவது பிடிக்க வேண்டுமென்று அலைந்ததும், அப்போது தி.மு.க. ஆட்சியில் அவர் தமிழ்நாட்டில் வந்து மறைந்திருந்ததும் நினைவிற் கொள்ளதக்கதாகும். அந்தக்கூட்டத்தில் அவ்வாறு பேசிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூட, கடந்த இரண்டு மூன்று முறை சென்னைக்கு வந்தபோது தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
அவர்களைத்தான் சந்தித்தாரே தவிர என்னைச் சந்திக்கவில்லை. அதனை மனத்தில் வைத்திருந்த நான் சிக்மகளூர் கூட்டத்தில் பேசும்போது "ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களை, தலைமறைவாக இருந்த நேரத்தில் அடிக்கடி சந்திக்கின்ற வாய்ப்பை நான் பெற முடியவில்லை. அந்த வாய்ப்பை இந்தத் தேர்தல் மூலம் ஏற்படுத்திக் கொடுத்த இந்திரா காந்தி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டேன்.
ஜனதா கட்சி மத்தியிலே ஆட்சிக்கு வந்த பிறகு அந்தக் கட்சியின் வெற்றிக்காக அரும்பாடுபட்ட தி.மு.கழகத்தை என்ன காரணத்தாலோ மதிக்கத் தவறிய நிலையில் சிக்மகளூர் தேர்தலில் ஜனதா கட்சியின் வேட்பாளரைத் தி.மு.கழகம் ஆதரிக்க வேண்டுமா என்ற எண்ணம் கழகத் தோழர்கள் மத்தியில் மாத்திரமல்ல, எந்தக் கட்சியையும் சாராத பொது மக்களுக்கும் அந்த எண்ணம் இருந்தது. அதற்கு அந்த சிக்மகளூர் கூட்டத்திலே விளக்கம் அளித்தேன்.
அது வருமாறு:- "ஜனதா கட்சி மத்தியிலே ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, இந்தியாவிலே பல பகுதிகளுக்கும் ஏற்பட்ட விமோசனம் தமிழகத்திற்கும் ஏற்படுமென்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ, தமிழகத்தின் மீது டெல்லியிலே உள்ள ஜனதா கட்சித் தலைவர்களுடைய பார்வை விழவில்லை. விழாவிட்டாலும் அதற்காக எனக்குக் கோபம் கிடையாது. கோபம் தலைவர்கள் மீது இருந்தால் கூட, அதை இப்படிப்பட்ட நேரங்களில் காட்டிக்கொள்ள நான் தயாராக இல்லை.
கோவிலிலே இருக்கிற பூசாரி மீது கோபம் இருக்கலாம். அதற்காகப் பக்தர்கள் கோவிலில் இருக்கிற ஆண்டவனை வணங்காமல் போய் விடமாட்டார்கள். அதைப் போலவே ஜனதா கட்சித் தலைவர்கள் மீது எங்களுக்குக் கோபம் இருக்கலாம். அதற்காக ஜனநாயகம் என்கிற ஆண்டவனை நாங்கள் வணங்காமல் போய்விடமாட்டோம். இந்த ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளோடு ஜனதா கட்சியை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறோம்" என்று கூறினேன்.
நான் பேசிய பின் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீண்டும் ஒருமுறை ஒலிபெருக்கியைப் பிடித்து "நான் இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தபோது எனக்கு நிதி உதவி வழங்கியவர் கருணாநிதி. என்னைப் பிடிப்பதற்காகத் தேடிக் கொண்டிருந்த போலீசாரைப் பற்றி எனக்குத் தகவல் கொடுத்து வந்தவரும் கலைஞர் கருணாநிதிதான். அந்தப் பயங்கரமான நாட்களில் ஒருமுறை அல்ல. இரண்டு முறை கலைஞர் கருணாநிதி என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.
அவருக்கு என் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் கூறினார். இதுவும் அப்போது "இந்து" ஏட்டில் செய்தியாக வந்துள்ளது. சிக்மகளூர் தொகுதியில் 1-11-78 அன்று ஜனதா கட்சியினருக்கும் இந்திரா காங்கிரஸ் கட்சியினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. கலவரத்தை அடக்க போலீசார் தடியடி நடத்திக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினார்கள். கலவரம் அதிகமானதால் போலீசார் இறுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இதில் காயத்ரி என்ற 19 வயதுள்ள மாணவி இறந்தார். மற்றும் 60 பேர் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த மாணவியின் சாவுக்குக் கண்டனம் தெரிவித்து மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்தத் தொகுதியில் 5-ஆம் தேதி வாக்குப் பதிவு என்றால் அதற்கு முதல்நாள் 4-11-78 அன்று தமிழகத்திலே பலத்த மழை பெய்து பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன. தமிழ் நாட்டை நோக்கி வந்த புயல் கடலூர் அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயல் மழை காரணமாக 12 பேருக்கு மேல் இறந்தனர் என்று முதல் கட்டமாகச் செய்தி வந்தது.
தொடர்ந்து பெய்த மழை காரணமாக உதகமண்டலத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள், ஓட்டல்கள், கடைகள் இடிந்து தரைமட்டமாயின. இதன் காரணமாக மட்டும் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள். கடலில் மீன் பிடிக்கச் சென்ற நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பவில்லை. கோத்தகிரி அருகே வெள்ளம் கரைபுரண்டு ஒரு கிராமமே அடியோடு அழிந்தது. வெள்ளத்தில் மட்டும் 11 பேர் இந்தக் கிராமத்தில் இறந்தார்கள்.
இந்தப் பெருமழை காரணமாக சிக்மகளூர் தொகுதியில் வாக்குப் பதிவு குறைந்த அளவே ஆனது. பல வாக்குச் சாவடிகள் பிற்பகலில் காலியாகக் கிடந்தன. வாக்குப் பதிவு நாளன்றும் பல இடங்களில் அந்தத் தொகுதியில் கலவரம் நடைபெற்றன. இறுதியாக இந்திரா காந்தி 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கட்சித் தலைமையிலே ஏற்பட்ட முரண்பட்ட போக்குகளும், ஆட்சியில் சாதனைகளை நிகழ்த்தாததும்தான் ஜனதாக் கட்சித் தோல்விக்குக் காரணம் என்று பெர்னாண்டஸ் கூறினார்.
இந்திரா காந்தியின் வெற்றி குறித்து யு.என்.ஐ. செய்தியாளர் என்னைக் கருத்துக் கேட்டபோது, "சிக்மகளூர் இடைத் தேர்தலில் இந்திரா காந்தி பெற்ற வெற்றியின் காரணமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு ஒரு பிரசித்தி பெற்ற தலைவர் கிடைத்திருக்கிறார். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பல்வேறு கொள்கைகளில் வேறுபாடு கொண்டவைகளாக இருந்தாலும் இந்தியாவில் நிரந்தரமாக ஜனநாயகத்தை வாழவைத்து மக்களின் உரிமைகளைப் பாத
ுகப்பதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டுமென்பதே என் விருப்பமும் வேண்டுகோளுமாகும்" என்று சொன்னேன். 12-11-1978 அன்று புதுவையில் நடைபெற்று வந்த அ.தி.மு.க. அமைச்சரவை கலைக்கப்பட்டது. சட்டசபையும் கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது. புதுவை அமைச்சரவையைக் கலைக்க வேண்டுமென்று கோரிப் பதினாறு சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, குடியரசுத் தலைவர், பிரதமர் தேசாய் ஆகியோருக்கு மனுக் கொடுத்ததின் அடிப்படையிலும், புதுவை கவர்னர் குல்கர்னி மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையிலும் புதுவை அமைச்சரவை கலைக்கப்பட்டது.
புதுவையில் அ.தி.மு.க. அமைச்சரவை பதவியேற்று 17 மாதங்களே ஆகியிருந்தன. அதற்கு முன்பு அந்த மாநிலத்தில் அமைச்சரவைப் பொறுப்பேற்ற அ.தி.மு.க. கட்சியன் ஆட்சி சில நாட்களே நீடித்தன. இந்த முறை ஆட்சி அமைத்த நாள் முதல் அவர்கள் கட்சிக்குள்ளே ஏற்பட்ட குழப்பம், இரண்டு பேருக்கு மேல் அமைச்சர்களையே அமைக்க முடியாத அளவிற்கு கோஷ்டி தகராறு, இருந்த இரண்டு அமைச்சர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் - ஒருசில திங்களிலேயே ஆட்சியினர் நடத்திய ஊழல்கள் காரணமாக இறுதியாக வேறு வழியின்றி ஆட்சி கலைக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.
ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கவர்னர், குடியரசுத் தலைவர் துணை கொண்டு கலைப்பதற்கான அதிகாரத்தைத் தரும் 356வது பிரிவை அடியோடு நீக்க வேண்டுமென்று ஜனதா ஆட்சியில் மாநிலங்கள் அவையே தி.மு.கழகத்தின் சார்பில் முரசொலி மாறன் கொண்டு வந்த திருத்தத் தீர்மானத்தை ஆதரிக்க எம்.ஜி.ஆர். கட்சியினர் மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனிய பண்பும் எளிய தோற்றமும் கொள்கைப் பிடிப்பில் குன்றா உறுதியும், இயக்க வளர்ச்சியிலே தீவிர ஈடுபாடும் கொண்ட கழக மறவரும் தொழிற்சங்கத் தலைவருமான காட்டூர் கோபால் 15-12-1978 அன்று கோவை மாவட்டத்தில் உள்ள காட்டூர் தனியார் மருத்துவமனையிலே மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியைக் கழகப் பொருளாளர் சாதிக் பாட்சா கண்களில் கண்ணீர் வழிய வழிய என்னிடம் தெரிவித்த போது பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினேன்.
கழகத்தின் சார்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப்பேரவையைத் தொடங்கியதிலிருந்து அதன் பொதுச் செயலாளராக இருந்து அருந்தொண்டாற்றி வந்த அவர் தொழிலாளர்களின் பிரச்சினைகளில் முன்னின்று அதற்காகப் பலமுறை சிறையேகிய செம்மல், ஐம்பது வயதுகூட ஆகாத நிலையில் அவரது முடிவு கழகத்தைப் பெரிதும் பாதிக்கச் செய்தது. காட்டூர் கோபால் அவர்களின் படத்திறப்பு விழா நடைபெற்ற டிசம்பர் திங்கள் 27-ஆம் தேதி அதே நாளில் பழம்பெரும் நீதிக்கட்சிக்காரரும், தமிழ்த் தொண்டரும், கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான விருதுநகர் தமிழ்த்தென்றல் வி.வி.ராமசாமி அவர்கள் விருதுநகரில் இயற்கை அடைந்தார் என்ற செய்தி கிடைத்தது.
தன்மான இயக்கத்திலே நீண்ட நாட்களாக ஈடுபட்டு, பெரியாரின் அருமைத் தொண்டராகவும், பேரறிஞர் அண்ணாவின் அன்புக்குரியவராகவும் என் போன்றவர்களுக்கெல்லாம் உற்ற துணைவராகவும் விளங்கிய வி.வி.ஆர். அவர்களின் மறைவு திராவிட இயக்கத்திற்கு மற்றுமோர் பெரும் இழப்பாகும். இடையில் 7-12-78 அன்று தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகியோரிடத்தில் நீங்காப் பற்றுக் கொண்டவரும், நான் எழுதிய "பராசக்தி" திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டவருமான நேஷனல் பெருமாள் இயற்கை எய்தினார் என்ற வேதனையான செய்தியும் கிடைத்தது.
நான் எழுதிய படத்தைத் தயாரித்தவர் என்பது மாத்திரமல்ல; என் அன்புக்குரிய இனிய நண்பர் அவர். பகுத்தறிவு இயக்கத்தில் நீங்கா பற்றுக் கொண்டவர். பராசக்தி படத்துடன் இரத்தக் கண்ணீர், பெற்றமனம், தங்கதுரை போன்ற திரைப்படங்களையும் தயாரித்தவர் அவர். 1973ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது சட்டப்பேரவையில் சென்னை மாநாகராட்சி மன்றத்தில் நடைபெற்ற மஸ்டர்ரோல் முறைகேடுகள் பற்றி எதிர்க்கட்சியினர் புகார் கூறினர்.
உடனே முதல்வராக இருந்த நான் அவையிலே அப்போதே எழுந்து, மாநகராட்சி மன்றத்திலே நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் பற்றி முறைப்படியாக நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும், மாநாகராட்சி மன்றமும் உடனடியாகக் கலைக்- கப்படும் என்றும் கூறினேன். மேலும் தொடர்ந்து அந்த வழக்கை விசாரிப்பதற்காகக் கழக அரசினால் தனியாக ஒரு நீதிமன்றமே அமைக்கப்பட்டு, நீதிபதி பக்கிசங்கர் அந்த வழக்கினை விசாரித்து 1978ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இறுதியிலே தீர்ப்புக் கூறினார்.
மொத்தம் 103 பேர் மீது வழக்கு நடைபெற்றதில் 32பேர் விடுதலை செய்யப்பட்டு, 71 பேர்களுக்கு நீதிபதி தண்டனை வழங்கியதோடு, அவர்கள் மேல்முறையீடு செய்து கொள்ளவும் அனுமதி வழங்கியிருந்தார். தண்டிக்கப்பட்ட 71பேரில் தி.மு.க.,அ.தி.மு.க., இந்திரா காங்கிரஸ், ஸ்தாபனக் காங்கிரஸ், ஜனதா மற்றும் மாநகராட்சி மன்ற அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
