உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/விழுப்புரத்தில் சாதிக்கலவரம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

விழுப்புரத்தில் சாதிக்கலவரம் · 258 / 391

42. விழுப்புரத்தில் சாதிக்கலவரம் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரி அவர்களுக்கும் எனக்கும் இருந்த உறவைப் பற்றியும், அன்பைப் பற்றியும் இந்தத் தொடரின் முதல் பாகத்திலேயே விரிவாக எழுதியிருக்கிறேன். அவர் பிறந்த பட்டுக்கோட்டை நகரிலே அவருக்கு ஒரு சிலையினை அமைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பொதுக்கூட்டத்தில் பட்டுக்கோட்டையிலே பேசும்போது எடுத்துக் கூறியிருந்தேன்.

அதற்கிணங்கச் சிலை அமைப்புக் குழு நிறுவப்பட்டு அதிலே பட்டுக் கோட்டை சீனிவாசன், நாடியம் ராமையா போன்றவர்கள் எல்லாம் இடம் பெற்று, கழக முன்னணியினரின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்று 1978-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 29-ஆம் தேதி அண்ணன் அழகிரி அவர்களுடைய சிலை திறப்பு விழா பட்டுக்கோட்டையிலே பொதுச்செயலாளர் பேராசிரியர் தலைமையிலே என்னால் நடத்தி வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவிற்கு முன்பு நானும் பேராசிரியரும் அழகிரியின் இல்லத்திற்குச் சென்று அவருடைய குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தோம்.

அழகிரியின் புதல்வர் துலீப் குடும்பத்தின் சார்பில் நன்றி கூறினார். 1951-ஆம் ஆண்டு முரசொலி வெளியிட்ட மலர் ஒன்றில் அழகிரியின் படத்தை வெளியிட்டிருந்தேன். அந்தப் படத்தைத் தேடிக் கண்டுபிடித்து, 1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திருச்சியிலிருந்து சென்னை சென்ற அந்தப் போர்ப்படைக்குத் தலைமை தாங்கும்போது அவர் எவ்வாறு இருந்தாரோ அதே தோற்றத்துடன் சிற்பி பழனி அவர்களால் அந்தச் சிலை மிகவும் எழிலுடன் செய்யப்பட்டிருந்தது.

1900 ஜூன் 28 ஆம் நாள் பிறந்த அழகிரி 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் நாள் மறைந்தார். இந்த 49 ஆண்டுகளில் பொது வாழ்வில் இருபத்தைந்து ஆண்டுக்ள ஈடுபட்டார். என்னுடைய இரண்டாவது மகனுக்கு நான் அவருடைய நினைவாகத்தான் அழகிரி என்று பெயர் வைத்தேன். அவர் மறைந்தபோது எனது விலாப்புறத்தில் 'புளோரசி' என்ற நோய் தாக்கிப் பெரும் காய்ச்சலோடு மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்டக்கழக மாநாட்டிற்குக் கூடச் செல்ல முடியாமல் இருந்த நேரம்.

எனினும் அவர் தஞ்சையிலே இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டுத் திருவாரூரிலிருந்து உடல் நலம் சரியில்லாத நிலையிலேயே தஞ்சை சென்று அவருக்கு என்னுடைய இறுதி மரியாதையைச் செலுத்தினேன். பட்டுக்கோட்டையில் அழகிரி சிலையைத் திறந்து வைப்பதற்கு முன்பு அதே நாளில் தஞ்சையிலே வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தரப்பட்ட வரவேற்பினை ஏற்றுக் கொண்டதோடு, தந்தை பெரியார் திருவுருவப் படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினேன்.

அந்தக் கூட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கோபால் அய்யர் தலைமையேற்கவும் பாலசுப்பிரமணிய அய்யர் வரவேற்புரையாற்றவும் அந்த மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் கலந்து கொண்டு சிறப்புற நடைபெற்றது. காவிரிப் பிரச்சினை பற்றியும், மத்திய மாநில உறவுகள் பற்றியும் நீண்ட நேரம் அந்தக் கூட்டத்திலே உரையாற்றினேன். இந்தி மொழியைத் திணிப்பது பற்றி அ.தி.மு.க. அரசு பிரதமருக்கு ஒரு கடிதம் 1978 மே திங்களில் எழுதியது.

அந்தக் கடிதத்தில் "மத்திய அரசு இலாக்காக்களில் துணைச் செயலாளர் மற்றும் அவரை விட உயர்ந்த அந்தஸ்திலே உள்ள அதிகாரிகள் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் இந்தி படிக்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் சில அரசியல் சக்திகள், அவர்கள் யார் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். அவர்கள் இங்கே மொழிப் பிரச்சினையைப் பயன்படுத்தி இலாபமடைய நினைக்கிறார்கள்" என்று எழுதியிருந்தது.

அந்தக் கடிதத்திற்கு பிரதமர் மொரார்ஜி தேசாய் எழுதிய பதில் கடிதத்தில்" "மொழிப் பிரச்சினை பற்றி ஆழ்ந்து பரிசீலித்த பிறகு இப்போதுள்ள நிலை பற்றி இக்கடிதத்தில் விளககிக் கூறியுள்ளேன். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7-ஆம் தேதியும், செப்டம்பர் 4-ந் தேதியும் பண்டிதநேரு கீழ்க்கண்ட இரண்டு உறுதி மொழிகளைப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 1. இந்தியுடன் சேர்ந்து ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக மாற்று மொழியாகக் காலவரம்பின்றி நீடிக்கும்.

அதைப் பயன்படுத்தும் வரம்பைக் குறைக்கக்கூடாது. 2. இந்தி ஆட்சி மொழியாவதால் பாதிக்கப்படக்கூடிய இந்தி பேசாத பகுதி மக்கள் விரும்பும் வரை மேற்கண்ட நிலையில் மாற்றம் எதுவும் கூடாது. இந்தியை எப்போது ஏற்றுக் கொள்வது என்று முடிவு எடுக்கும் பொறுப்பை இந்தி பேசாத பகுதி மக்களிடமே விட்டுவிட வேண்டும். இந்தி பேசும் பகுதி மக்களிடம் இதை விட்டு விடக்கூடாது. நேருவின் உறுதி மொழிக்குப் பிறகு 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ரேடியோவில் பேசும்போதும் மேற்கண்ட உறுதிமொழிகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அதன்படி 1963 ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டம் திருத்தப்பட்டது. அந்தச் சட்ட விதிகளை அமல்படுத்துவது ஒன்றே இப்போதுள்ள பிரச்சினை. காலப்போக்கில் பழைய நிலைகளே நீடித்து இருக்க முடியாது. போகப்போக மத்திய அரசின் அலுவல்களில் இந்தியைப் பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டே போவது இயல்பு. ஆனால் இந்தி பேசாத பகுதி மக்கள் மீது இந்தியைப் பயன்படுத்துமாறு அதை மத்திய அரசு திணிக்காது. ஆட்சி மொழிச் சட்ட விதிகளில் தமிழ்நாட்டுக்கு விசேஷமாக விதிவிலக்குக் கொடுக்கப்பட்டுள்ளதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

துணைச் செயலாளர் அந்தஸ்து உள்ள அதிகாரிகள் கூட இந்தி படிக்குமாறு கட்டாயப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதில் கட்டாயம் என்ற பிரச்சினைக்கே இடமில்லை. இந்தியைப் பயன்படுத்துவது அதிகரித்துக்கொண்டே போகும் சூழ்நிலையில் ஓரளவு இந்தியில் பணியாற்றத் தெரிந்திருப்பது அவசியமாகும். பிரதமர் இவ்வாறு இந்தித் திணிப்புப் பற்றிப் பட்டும் படாததும் போலத் திணிக்காமல் திணிக்கப்படும் என்பதை ஒப்புக் கொண்டு அந்தக் கடிதத்திலே எழுதியிருந்தார்.

இந்தக் கடிதம் வந்த நேரத்தில் சென்னைக்கு வந்திருந்த மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது- இந்தியை இணைப்பு மொழியாக அமல்படுத்த மத்திய அரசு செய்து வரும் சில முயற்சிகள் எங்களுக்கு உடன்பாடாக இல்லை. இந்தி மொழியைப் பெரும்பான்மையான மக்கள் பேசுவது உண்மைதான். ஆனால் இந்தி மொழியை இணைப்பு மொழியாகத் திணிக்கக்கூடாது. தானே முன்வந்து மற்றவர்கள் ஏற்கிறார்களா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.

நேருவின் உறுதிமொழி நீடிக்க வேண்டும். இந்தியை இணைப்பு மொழியாகத் திணிக்க முயலுவது அபாயகரமானதாகும். உண்மையில் சொல்லப்போனால் இது இந்தித் திணிப்புதான். இப்படிச் செய்தால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் முளைக்கும். நாட்டு ஒற்றுமை குலையும். ஜனதா அரசின் இந்த மொழிக் கொள்கையைக் கண்டித்து எங்கள் கட்சி ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இந்தியை இணைப்பு மொழியாகத் திணிக்க என்ன அவசரம் வந்தது இவர்களுக்கு இப்போது?

இணைப்பு மொழி என்ற ஒன்றைக் கொண்டுவர காலவரம்பு எதும் இருக்கக்கூடாது. உங்கள் முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) இதுபற்றி ஒரு மாநாடு கூட்டியிருப்பதாகச் சொன்னார். அதற்கு என்னை ஏன் அழைக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார். வங்காள தேச புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க 1978 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் அந்நாட்டில் தேர்தல் நடைபெற்றது. அப்போது வங்காள தேசத்தின் மக்கள் தொகை 3 கோடியே 80 லட்சமாகும்.

ஆம், தமிழகத்தின் மக்கள் தொகையை விட மிகவும் குறைவாகும். ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் ஏழு பேர் போட்டியிட்டனர். என்றாலும் இராணுவத் தளபதி ஜியாவுர் ரகுமானுக்கும் முன்னாள் இராணுவ அதிகாரி உஸ்மானிக்கும் இடையேதான் பலத்த போட்டியிருந்தது. எனினும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஜியாவுர் ரகுமான் ஒரு கோடி வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இதே காலக்கட்டத்தில் இத்தாலி நாட்டிலே கருச்சிதைவினை அனுமதித்துப் புதிதாகச் சட்டம் அந்நாட்டின் செனட் கூட்டத்திலே 160-148 என்ற வாக்கெடுப்பு அடிப்படையிலே நிறைவேறியது.

வாடிகன் நகரிலே உள்ள கிறித்துவ அமைப்புகள் இந்தச் சட்டத்திற்குக் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தும் கூட இந்தப் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதாவது 18 வயது நிரம்பிய பெண்கள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தாராளமாகக் கருச்சிதைவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆனால் 18 வயதிற்குக் குறைவான பெண்கள் பெற்றோர் அல்லது காப்பாளர் அனுமதியுடன் கருச் சிதைவு செய்து கொள்ள அனுமதிக்கப்டுவர். 1978ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஸ்பெயின் நாட்டில் உள்ள துருக்கி தூதரின் கார் மீது கொரில்லாக்கள் சுட்டதில் அந்தத் தூதரின் மனைவி, அவரது மைத்துனர் கார் ஓட்டுநர் ஆகியோர் இறந்து போனார்கள்.

மாட்ரீட் நகரில் ஒரு ஒரு சாலைச் சந்திப்பில் சிக்னல் விளக்கிற்காக அந்தக் கார் நின்றபோது இச்சம்பவம் நடந்தது. அப்போது துருக்கி தூதர் ஜேசி குனெரால்ப் அந்தக் காரில் இல்லை. அருகிலிருந்த ஒரு காரிலிருந்து மூன்று இளைஞர்கள் இந்தத் தூதரின் காரின் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தங்கள் காரில் பறந்து விட்டார்கள். இவர்கள் ஆர்மீனிய கொரில்லாக்கள் என்று கூறப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வந்த அனாமதேய டெலிபோன் செய்தியில் ஆர்மீனியர்களின் படுகொலைக்கு நீதி வழங்கும் முறையில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது.

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் துருக்கி நாட்டில் பெருமளவிலான ஆர்மீனியர்கள் கொலை செய்யப்பட்டதையே அந்த டெலிபோன் செய்தியில் தெரிவிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. பர்மா நாட்டின் முன்னாள் பிரதமர் ஊநூவின் புதல்வர் சான் ஆங் யேமின்ட் 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் பர்மாவிலிருந்து தப்பி வெளியேறி இலண்டன் சென்று அங்கே அரசியல் தஞ்சம் கோரினார். அவருக்கு அரசியல் தஞ்சம் அளிப்பது பற்றி பிரிட்டிஷ் அரசு உடனடியாக முடிவினை அறிவிக்கவில்லை.

அரசியல் தஞ்சம் கோருபவர்கள் எவருக்கும் தஞ்சம் அளிப்பது இங்கிலாந்து அரசின் மரபு என்ற போதிலும் சாங் ஆங் விவகாரத்தில் பர்மா அரசின் கருத்தை இங்கிலாந்து அரசு தெரிந்து கொள்ளவிரும்பியது. பர்மாவில் அப்போது ஆட்சியிலே இருந்த ஜெனரல் நேவின் அரசு, சான் ஆங்கை பர்மாவுக்குத் திருப்பியனுப்புமாறு அதிகார சார்பற்ற முறையில் பிரிட்டிஷ் அரசைக் கேட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டது. சான் ஆங், அவரது மனைவி, மகன், மாமியார் ஆகியோர் பர்மாவிலிருந்து தப்பி, பர்மிய போலீசாருக்கும் ஷான் மாகாண இராணுவத்தினருக்கும் வழியில் எதிர்ப்பட்ட கலகத்தலைவர்களுக்கும் இலஞ்சம் தந்து பாங்காக் சென்றார்கள்.

சான் ஆங் பர்மாவிலிருந்து கிளம்பும் போது அவரிடமிருந்த 8000 பவுனும் பாங்காக் செல்வதற்குள் செலவழிந்து விட்டதால் அங்கிருந்த நண்பர்களிடம் கடன் உதவியைப் பெற்று அவர்கள் இலண்டன் அடைந்தனர் என்று ஏடுகளில் செய்திகள் வந்தன. ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர் தாரகியின் அரசைக் கவிழ்க்க முயற்சி செய்ததாக, ஆப்கன் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷா பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அப்துல்காதர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களது முயற்சி தோல்வி அடைந்ததாகவும், ஆப்கன் ரேடியோ 18.8.78 அன்று அறிவித்தது.

ஏப்ரல் 27ந் தேதி ஆப்கானிஸ்தானில் தாவூத் ஆட்சியைக் கவிழ்த்த இராணுவப் புரட்சியில் பாதுகாப்பு அமைச்சர் காதர் முக்கியப் புள்ளியாக இருந்தவர். இந்தப் புரட்சிக்குப் பிறகுதான் தாரகி ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார். கைதான பாதுகாப்பு அமைச்சர் அப்துல் காதருடன் ஆப்கானிஸ்தான் இராணுவ பிரதம தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷாபூரும் ஜாமரியா மருத்துவமனை தலைவர் டாக்டர் மீர் அலியும் கைது செய்யப்பட்டார்கள்.

18ந் தேதி ஆப்கானிஸ்தானில் இந்த நடவடிக்கை என்றால் மறுநாள் 19.8.78 அன்று ஈரான் நாட்டில் உலகிலேயே பெரிய எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை அமைந்துள்ள அபாடான் நகரில் ரெக்ஸ் என்ற திரைப்பட அரங்கு அனைத்து வாயில்களும் வெளியிலிருந்தபடி பூட்டப்பட்ட பிறகு எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய ஆக்டோன் எரிபொருளை தியேட்டரின் நான்கு புறமும் கொட்டி தியேட்டருக்குத் தீ வைக்கப்பட்டது. தியேட்டருக்குள் இருந்த 430 பேரும் உயிருடன் எரிந்து சாம்பலாயினர்.

பத்துப் பேர் மட்டுமே அந்தத் தீ விபத்திலிருந்து தப்ப முடிந்தது. இந்தக் கொடுமையான சம்பவத்திற்குக் காரணம் ஈரான் நாட்டில் நவீன வசதிகள் பெருகி மக்கள் நவீன வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது ஈரான் நாட்டு மன்னரின் திட்டமாகும். ஆனால் அந்த நாட்டின் பழைய சம்பிரதாயவாதிகள் அதனை எதிர்த்தனர். புதுமையின் சின்னங்களாக விளங்கும் திரைப்பட அரங்குகள், வங்கிகள், கடைகள், கட்டிடங்கள் அவர்களுடைய வன்செயல்களுக்கு இலக்குகளாயின.

அந்த வகையில்தான் ஐந்து திரைப்பட அரங்குகள் கொளுத்தப்பட்டன. அந்த வரிசையில்தான் ரெக்ஸ் திரைப்பட அரங்கும் கொளுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். உலக நாடுகள் முழுவதும் இந்த நிகழ்ச்சியைக் கண்டனம் செய்தன. இதன் உச்சகட்ட நிகழ்ச்சியாக ஈரான் நாட்டின் பிரதமர் ஜாஷீத் அமுஜேகார் தன் பதவியை ராஜினாமா செய்தார். எனவே 27.8.78 அன்று ஜாபர் ஷரீட் இமாமி புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார். தனது அரசு மத இலட்சியங்களுக்குத் தலை வணங்கும் என்றும், இஸ்லாமிய விதிகளை மதிக்கும் என்றும் புதிய பிரதமர் பொறுப்பேற்றதும் அறிவித்தார்.

26.8.78 அன்று திருவனந்தபுரம் செல்லும் வழியில் சென்னை வந்த இந்திராகாந்தியை மீனம்பாக்கம் விமான நிலையத்திலே செய்தியாளர்கள் சந்தித்தபோது தி.மு.க. இந்திராகாங்கிரஸ் உறவு பற்றிக் கேள்வி கேட்டதற்கு, "எங்களுடைய கட்சி தனக்கென்று சில கொள்கைகளை திட்டங்களை இலட்சியங்களை வகுத்துக்கொண்டு அந்தப் பாதையில் செயல்படுகிறது. இதனையேற்றுக் கொண்டு எங்களோடு ஒத்துழைக்க அல்லது இணக்கமாகச் செயல்பட முன் வருகின்ற கட்சிகளோடு ஒத்துப் போவதில் இந்திரா காங்கிரஸ் கட்சிக்குச் சிரமம் ஏதும் இல்லை" என்று கூறினார்.

நெருக்கடிக் கால அத்துமீறல்களுக்காக இந்திராகாந்தி, அவரது மகன் சஞ்சய் காந்தி, பன்சிலால், சுக்லா போன்ற பலர் மீது 11.7.78 அன்று ஆறு வழக்குகளை டெல்லி நீதிமன்றங்களிலே மத்திய அரசு தாக்கல் செய்தது. சி.பி.ஐ. தாக்கல் செய்த ஆறு "முதல் தகவல் அறிக்கை"களில் மூன்றில் இந்திராகாந்தி முக்கிய எதிரியாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்குகள் எல்லாம் ஷா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலே அமைந்தவையாகும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு காங்கிரஸ் கட்சிகளும் சேர்ந்து அமைத்த கூட்டணி அமைச்சரவை ஒரு சில திங்களே நீடித்தன. ஜூலைத் திங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 38 சட்டமன்ற உறுப்பினர்களும் 8 மேலவை உறுப்பினர்களும் கூட்டணி அமைச்சரவைக்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக அறிவித்தனர். அமைச்சரவையிலிருந்த நான்கு அமைச்சர்கள் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா ச

ெய்தனர். ராஜினாமா செய்த இந்த நான்கு அமைச்சர்களில் ஒருவரான சரத்பவார் தலைமையிலே ஜனதா கட்சியின் ஆதிக்கம் உள்ள ஒரு அரசு பின்னர் அமைக்கப்படலாம் என்ற செய்தியும் பரவலாக வெளிவந்தது. 12.7.78 அன்று சரத்பவார் முதலமைச்சராக, 178 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி அந்த ஆதரவு கடிதங்களையும் கவர்னர் சாதிக் அலியிடம் கொடுத்தார். மகாராஷ்டிராவில் இருந்த கூட்டணி அமைச்சரவைக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் போக்குவதற்காகக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இந்திரா காங்கிரஸ் கட்சி, கூட்டணி அரசிலிருந்து தான் விலகிக் கொண்டு காங்கிரஸ் முதலமைச்சர் வசந்த்ராவ் பாட்டீல் ஆட்சியை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது.

அந்த மாநிலத்திலே ஜனதா கட்சியின் ஆதிக்கம் வராமல் தடுக்கத் தாங்கள் இந்த முடிவை எடுப்பதாகவும் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரும் துணை முதலமைச்சருமான திர்புடே தெரிவித்தார். இந்திரா காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு ஒரு தந்திரப் பொறி என்றும் யாரும் அதில் ஏமாற வேண்டாம் என்றும் சரத்பவார் கூறினார். 16.7.78 அன்று டெல்லியிலே கூடிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு மகாராஷ்டிர மாநிலத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் உள்ள கூட்டணி அமைச்சரவையிலிருந்து விலகி எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டுமென்று முடிவு செய்தது.

மேலும் அங்கே அமைச்சரவை அமைப்பதற்காக ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேருவதில்லை என்றும் அவர்களின் ஆதரவைக் கோருவதில்லை என்றும் முடிவு செய்தது. காங்கிரஸ் கட்சி இவ்வாறு முடிவெடுத்த போதிலும் ஜனதா கட்சி, விவசாயத் தொழிலாளர்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டசபை மகாராஷ்டிர முற்போக்குக் காங்கிரஸ் கட்சி ஆகியவை அடங்கிய புதிய கூட்டணி சரத்பவாரைத் தங்களது தலைவராகத் தேர்ந்தெடுத்திருப்பதை அறிவிக்கும் கடிதம் ஒன்றை 17.7.78 அன்று ஆளுநரிடம் கொடுத்தது.

இந்த மனுவை ஆளுநர் ஏற்றுக்கொண்டதின் பேரில் மகாராஷ்டிரத்தில் 18.7.78 அன்று புதிய கூட்டணி அரசு சரத் பவாரை முதலமைச்சராகக் கொண்டு பதவியேற்றது. 1978 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் இறுதியில் விழுப்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், சாதி இந்துக்களுக்கும் இடையே சாதிக் கலவரம் மூண்டது. இதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 12 பேர் கைகால்கள் கட்டப்பட்டு, கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட செய்தி தமிழகத்தை மட்டுமல்ல, இந்திய துணைக் கண்டத்தையே உலுக்கியது.

ஐநூறுக்கும் மேற்பட்ட குடிசைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. காய்கறி மீன் மார்க்கெட்டுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இலட்சக்கணக்கிலே நட்டம் ஏற்பட்டது. இருநூறுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், நிலைமைகளைக் கண்டறியவும் தி.மு.கழகத்தின் சார்பில் மூவர் குழு ஒன்றை 29.7.78 அன்றே விழுப்புரத்திற்கு அனுப்பி வைத்தேன். இந்தக் குழுவிலே கழகப் பொருளாளர் சாதிக் பாட்சா, வழக்கறிஞர் சந்திரன் ஜெயபால், சட்டமன்ற உறுப்பினர் சு.பாலன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

நாடாளுமன்ற மக்கள் அவையிலே இந்தச் சம்பவம் குறித்துக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி எடுத்துரைத்துத் தமிழகத்திலே அரசு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை என்றார். அவர் பேசும்போது குறுக்கிட்டு பிரதமர் மொரார்ஜி தேசாய் விழுப்புரத்தில் காவல் துறையினர் முன்கூட்டியே போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதில் நிர்வாகம் தோல்வி அடைந்திருக்கிறது. காவல்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முதல் அமைச்சரின் கவனத்திற்கு இதைக் கொண்டு வந்து இதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்குமாறு கூறியிருக்கிறேன் என்று சொன்னார். விழுப்புரத்தில் கலவரம் நடந்த பகுதிகளை எல்லாம் 2.8.78 அன்று நானும் சென்று பார்த்தேன். கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் காயம்பட்டவர்கள் இல்லங்களுக்கெல்லாம் சென்று, அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும், நிவாரணப் பணிகளுக்காகவும், தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் 25,000 ரூபாய்க்கான காசோலையை விழுப்புரம் தலைமை நிலைய துணைத் தாசில்தாரிடம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் விழுப்புரம் பழனியப்பன் மூலமாக ஒப்படைத்தோம்.

கவவரப் பகுதிகளைப் பார்க்கச் சென்ற என்னுடன் வீராசாமி, தென்னரசு, கந்தப்பன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் உடன் வந்தனர். விழுப்புரம் கலவரப் பகுதிகளைப் பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று டெல்லியிலிருந்து அனுப்பப்படும் என்று பிரதமர் தேசாய் அறிவித்திருந்தார். இதற்குத் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தனது எதிர்ப்பை தெரிவித்ததோடு விழுப்புரம் கலவரம் பற்றி நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் இந்த நேரத்தில் மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்தப் புகுதிக்கு வந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் பாராளுமன்ற சபாநாயகருக்குத் தந்தி மூலமாகத் தெரிவித்தார்.

இதனை மத்திய அரசு பரிசீலித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை விழுப்புரத்திற்கு அனுப்பும் திட்டத்தை இரத்து செய்தது. பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து விழுப்புரம் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்க 83,200 ரூபாய் நிதியும் பிரதமரால் வழங்கப்பட்டது.