உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நினைவை விட்டு நீங்காத பிறந்த நாள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நினைவை விட்டு நீங்காத பிறந்த நாள் · 257 / 391

41. நினைவை விட்டு நீங்காத பிறந்த நாள் வாழ்த்துரைகள்! தி ராவிட முன்னேற்றக் கழகத்திற்கென இலக்கிய அணி ஒன்றினைத் தொடங்கிட வேண்டும் என்றும் இலக்கிய நிகழ்ச்சிகளை அந்த அணியின் சார்பிலே நடத்திட வேண்டுமென்றும் நான் நீண்ட நாளாகக் கருதியதற்கிணங்க, 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29 ஆம் நாள் சென்னை மாநகரில் சென்னை மாவட்ட இலக்கிய அணியின் துவக்க விழாவும், புரட்சிக்கவிஞரின் பிறந்த நாள் விழாவும் இணைக்கப்பட்டு நடத்தப்பட்டது.

அந்த விழாவிலே கலந்துகொண்டு இலக்கிய அணியினைத் தொடங்கி வைத்தேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது பிறந்த நாளை நாம் கொண்டாடுவது, நாம் தமிழர் என்று காட்டிக் கொள்வதற்காக அல்ல; நாம், தமிழர் என்பதால் தான் பாரதிதாசனுக்கு விழா எடுக்கிறோம் என்று அந்த விழாவிலே நான் பேசுகையிலே எடுத்துக் கூறினேன். மேலும் அந்த விழாவிலே நான் பேசும்போது புரட்சிக்கவிஞர் பற்றிக் குறிப்பிட்ட முக்கிய தகுதி - 'பராசக்தி' படம் தயாரிக்கப்பட்ட நேரத்தில் புரட்சிக்கவிஞர் எழுதிய "வாழ்க, வாழ்கவே, வளமார் எமது திராவிட நாடு" என்ற பாடலை அந்தப் படத்திலே இடம் பெறச் செய்யவேண்டுமென்று விரும்பிய நான் - படத்தயாரிப்பாளர்களிடம் என் விருப்பத்தைத் தெரிவித்து அவர்களும் ஒப்புக் கொண்ட பின்னர், புரட்சிக் கவிஞரை அணுகி அவரது அனுமதியைக் கேட்டேன்.

உடனடியாக மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். அதற்காக எவ்வளவு தொகை தர வேண்டுமென நான் கேட்டபோது அந்தப் பாடலை படத்திலே வைப்பதே தனக்குத் தருகின்ற பரிசுதான் என்று மகிழ்ச்சியோடு கூறினார் என்ற செய்தியை அந்தக் கூட்டத்திலே தெரிவித்தேன். அரசாங்கத்தின் சார்பில் கலைவாணர் அரங்கத்திலும் புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா நடத்தப்பட்டது. அந்த விழாவிலே பேசிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., பாரதிதாசன் கவிதைகளின் உரிமைகளை அரசு வாங்கிப் பொதுச் சொத்தாக்கும் என்றும், அவரது கவிதைகள் இந்தி உட்படப் பல மொழிகளிலே மொழி பெயர்க்கப்படும் என்றும், புரட்சிக் கவிஞரின் குடும்ப நல்வாழ்வுக்குத் தமிழக அரசு பொறுப்பேற்கும் என்றும் பல அறிவிப்புகளைச் செய்தார்.

ஆனால் அந்த அறிவிப்புகள் அமல்படுத்தப்படவில்லை. அந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கார்ட்டர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மசோதாவில் கையெழுத்திட்டு, அந்த நாட்டிலே அதனைச் சட்டமாகக் கொண்டுவந்தார். அதாவது அமெரிக்காவிலே உள்ள அரசுப் பணியாளர்களும், தனியார் தொழில் நிறுவனங்களிலே பணியாற்றுபவர்களும், அதுவரை 65வது வயதிலே கண்டிப்பாக ஓய்வு பெற வேண்டும் என்றிருந்த விதியை மாற்றி, அந்த அலுவலர்கள் விரும்பினால் அவர்களுடைய 70வது வயது வரை தொடர்ந்து பணியாற்றிடலாம் என்று அந்தச் சட்டத்தின் மூலம் அறிவித்தார்.

இருந்தாலும் காவல்துறை, தீயணைப்புத் துறை போன்ற துறைகளிலே பணியாற்றும் அலுவலர்கள் மட்டும் 65-வது வயதிலே ஓய்வு பெற்றிட வேண்டுமென்றும் அந்தச் சட்டத்திலே கூறப்பட்டிருந்தது. மேலும் 27,000 டாலர்களுக்கு மேல் ஓய்வூதியப் பயனடைவோருக்கும் வயது நீடிப்புக் கிடையாது என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் பெர்டினாண்ட் ஈ மார்க்கோஸ், 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ல் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதற்குப் பின், 1978 ஏப்ரல் திங்களில்தான் முதல் தேசிய பொதுத் தேர்தலை நடத்த அனுமதித்தார்.

200 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய அவைக்கு முதலில் 165 உறுப்பினர்களை மட்டும் தேர்ந்தெடுக்கத் தேர்தல் கொண்டு வரப் போவதாக அறிவித்தார். அந்த நாட்டிலே 1973 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1976ல் திருத்தப்பட்ட அரசியல் சட்டம். பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக மார்க்கோஸ் நீடிக்க வழிவகை செய்ததோடு பிரதமர் பதவியையும் அவரே வகிக்கலாம் என்றும் உரிமை வழங்கியது. மேலும் தேசிய அவைக்கு எந்த விஷயத்திலாவது, எந்தக் காரணத்திலாவது செயல்பட முடியாத நிலை ஏற்படுமேயானால் அந்த நேரங்களில் மார்க்கோஸ் தனது முடிவுக்கேற்பப் புதிய சட்டங்களை அவையின் தலைவர் என்ற முறையில் ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியிருந்தது.

இத்தனையையும் மீறி "லேபன் கட்சி" (மக்கள் இயக்கம் ) மணிலா மாவட்டத்தில் மார்க்கோசின் என்.எஸ்.எம். கட்சியை எதிர்த்துப் போட்டியிட முடிவு செய்தது. லிபரல் கட்சி, மாணவர் அமைப்பு, தொழிலாளர் இயக்கம் போன்றவைகளின் கூட்டுடன் லேபன் கட்சியை சிறையிலே இருந்தவாறு, பதவியைப் பிடிக்கப் பாடுபட்ட ஜூனியர் எஸ். அக்கினோ தலைமை வகித்து நடத்தினார். தேர்தலில் அக்கினோவும், அவரது லேபன் கட்சி வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட்டார்கள்.

தேர்தலுக்குப் பின் லேபன் கட்சியைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் தேர்தலை நடத்திய குழுவிலே இருந்தவர்கள் அனைவருமே மார்க்கோஸினால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் வாக்குகள் எண்ணுவதிலே ஏராளமான தவறுகள் நடைபெற்றதாகவும் கூறி அரசின் நிர்வாகத்தைக் குற்றஞ்சாட்டினார்கள். 1965 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மார்க்கோஸ் 1986 வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.

1972ஆம் ஆண்டு அவர் பிறப்பித்த இராணுவச் சட்டம் 1981 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்தது. 1979 ஆம் ஆண்டில் மார்க்கோஸ் முறைகேடாக தேர்தலை நடத்தியபோது அவரை எதிர்த்துக் களத்திலே நின்ற அவருடைய அரசியல் எதிரியான ஜூனியர் அக்கினோ நாடு கடத்தப்பட்டு அமெரிக்காவிலே தங்கியிருந்தவர், 1983ல் பிலிப்பைன்ஸ் நாடு திரும்பியபோது கொலை செய்யப்பட்டார். இராணுவத் தலைவர்கள், கம்யூனிஸ்ட்களால் கூலிக்கு அமர்த்தப்பட்ட தனி மனிதன் ஒருவன் அக்கினோவைச் சுட்டதாக கூறினர்.

அக்கினோவின் ஆதரவாளர்களோ அந்தக் கொலையில் இராணுவத்திற்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறினர். இந்தக் கொலை பற்றி விசாரிக்க மார்க்கோஸ் அமைத்த விசாரணைக் குழு அந்தக் கொலையில் இராணுவத்திற்கு பங்குண்டு என்று கூறியது. ஆனால் வழக்கு நடைபெற்று 1985 டிசம்பரில் நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்தது. இந்த விடுதலைக்கு நாட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக 1986 பிப்ரவரியில் மார்க்கோஸ் தேர்தலை நடத்திட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட ஜூனியர் அக்கினோவின் துணைவி கரஸான் அக்கினோ, மார்க்கோஸின் முக்கிய தேர்தல் எதிரியானார். தேர்தலில் மார்க்கோஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதிலும், நாட்டு மக்களும், கிறித்துவமதத் தலைவர்களும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றஞ்சாட்டினர். கலவரம் முற்றி பிலிப்பைன்ஸ் நாடே கொந்தளித்தது. இராணுவத்தின் ஆதரவே மார்க்கோசுக்கு எதிராயிற்று. மார்க்கோசுக்கு ஆதரவாக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் எல்லாம் கொளுத்தப்பட்டன.

இறுதியாக மார்க்கோஸ் நாட்டை விட்டு ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு ஆளானார். திருமதி அக்கினோ பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஆனார். மார்க்கோஸ் ஆதரவாளர்கள் அதிகமாக இருந்த தேசிய சட்டப் பேரவையை அக்கினோ உடனடியாகக் கலைத்ததோடு புதிதாக ஒரு குழுவை நியமித்துப் புதிய அரசியல் சட்டத்தை எழுதிட ஆணையிட்டார். 1987 பிப்ரவரியில் பிலிப்பைன்ஸ் மக்கள் புதிய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.

1992 வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் குடியரசுத் தலைவராக திருமதி அக்கினோ நீடிக்க அரசியல் சட்டம் வழி செய்தது. 1987 மே திங்களில் புதிய சட்ட மன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1987 ஆகஸ்டு திங்களிலே சில இராணுவத் தலைவர்கள் திருமதி அக்கினோவின் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்த போதிலும் அதிலே அவர்கள் வெற்றி பெறவில்லை. எனினும் அக்கினோவின் ஆட்சி அதிலே சற்று ஆட்டம் கண்டது என்று மட்டும் கூறலாம். 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மே திங்களில் கழகத்தின் ஒன்றிய, நகர, நகரிய அமைப்புக்களின் தேர்தல்கள் நடைபெற்றன.

தேர்தல்களில் பலத்த போட்டி நிலவியது. தி.மு. கழகம் ஆட்சியைப் பிடிக்க இயலாமல் தோல்வியைத் தழுவிய நிலையிலேயும் தி.மு.கழகமே அழிந்து ஒழிந்துவிட்டது என்று ஏடுகளும் எதிர்க்கட்சிகளும் வர்ணித்த நிலையிலும் அமைப்புக்களிலே பொறுப்பு வகிப்பது யார் என்பதிலே கழகத் தோழர்கள் மத்தியிலே பெரும் போட்டி நிலவியது. அப்போது முரசொலியிலே "மாவட்டப் பாசறைகள் அமையட்டும்" என்ற தலைப்பிலே எழுதிய கடிதத்திலே இவ்வாறு எழுதினேன்.

"கழகத் தோழர்கள் யாரும் யாரையும் தோற்கடித்துவிட்டதாக எண்ணிக்கொண்டு வெற்றி பெற்றவர்கட்குப் பாராட்டு விழாக்கள் நடத்திக் கொண்டிருக்கக்கூடாது. கழகப் பணியை யார் ஆற்றுவது என்ற போட்டியே தவிர இதில் மனக்கசப்புகளுக்கோ விட்டேனா பார்! என்ற பழிவாங்கும் உணர்வுகளுக்கோ சிறிதும் இடமில்லை! தேர்வு பெற்றோர்க்குப் பாராட்டு விழா எனில் அதில் தேர்வு பெறாதவர்களும் சேர்ந்த வாழ்த்திடக் கூடிய சுமூக நிலை இருந்திட வேண்டும்.

இல்லையேல் அந்தப் பாராட்டு விழாக்கள் பகை மூட்டும் விழாக்களாக மாறிவிடும். வாய்ப்பு இழந்தவர்களும் விரிந்த மனத்துடன் வாய்ப்பு இழந்தோரை அரவணைத்துக் கழகப் பணியாற்றிட வேண்டும். அடுத்த கட்டமாக மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பொறுப்புகளுக்கு அனுப்பவேண்டுமேயல்லாது போட்டியிடும் வேட்பாளர்கள் கழகத் தலைமையிலே உள்ள யார் பெயரையாவது இழுத்து "அவர் சொன்னார், இவர் சொன்னார், அதனால் நிற்கிறோம்" என்றெல்லாம் தங்கட்குத் தேவையான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது.

வீறாப்பைக் குறைத்து, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை உணர்த்தி அனைத்து மாவட்டக் கழகத் தளபதிகளும் தோளோடு தோள் நின்று தொகை தொகையாய் வரும் சோதனைகளை எதிர்த்து வாகை சூடுவோம் என்று எழுப்புகின்ற அந்த எக்காளக்குரல் எட்டுத்திக்கும் எதிரொலிக்கட்டும்! "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தோழர் ஒன்றாதல் கண்டே" எனும் விதத்தில் மாவட்டங்களில் நமது பாசறைகள் அமையட்டும்" என்று எழுதினேன்.

கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல்கள் எல்லாம் முடிவுற்றதால் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளை எல்லாம் தேர்ந்தெடுக்க ஜூன் திங்கள் 18ஆம் நாள் மதுரையிலே புதிய பொதுக்குழுவினைக் கூட்டுவதென்று அறிவிக்கப்பட்டது. கழகப் பொதுகுழு மதுரையிலே கூடுவதை முன்னிட்டு மதுரை மூதூரே ஜூன் திங்கள் 18ஆம் நாள் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று காலை 10.30 மணி அளவில் தமுக்கம் அரங்கில் பொதுக்குழுத் தொடங்கியது.

கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய தலைமைக் கழகப் பொறுப்புக்களுக்காக நடைபெற்ற தேர்தலுக்குக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி ஆணையாளராக இருந்து தேர்தலை நடத்தி வைத்தார். கழகத் தலைவர் பொறுப்புக்கு நானும், பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் பேராசிரியரும் பொருளாளர் பொறுப்புக்கு சாதிக் பாட்சாவும் ஆக ஒவ்வொரு வேட்பாளரே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால், மூவரும் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பலத்த கரவொலிகளுக்கிடையே ஆணையாளர் ஆசைத் தம்பி அறிவித்தார்.

தேர்தல் முடிவுகள் அதுதானென்று ஏற்கனவே தெரிந்திருந்த போதிலும் அந்த முடிவு அதிகாரப் பூர்வமாக ஆணையாளரால் அறிவிக்கப் படுவதைக் காணவும் கேட்கவும் எண்ணற்ற கழகத் தோழர்கள் பொதுக்குழுக் கூடிய அரங்கத்திற்கு வெளியே காத்திருந்தனர். அவர்கள் முடிவினை அறிந்ததும் வெளியே இருந்தவாறே கழகத்திற்கும் தலைமைக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அடுத்துப் பொதுக்குழுவில் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக அன்பில் தர்மலிங்கம், மு.கண்ணப்பன், வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், தென்னரசு, சீத்தாபதி ஆகியோரும் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக கோவை.

மு.இராமநாதன், ரகுமான்கான், சுப.தங்கவேலன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1978 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 3ஆம் நாள் வழக்கம்போல என்னுடைய பிறந்த நாள். 55-வது பிறந்த நாள். அதுபற்றி 1.6.78 தேசிய முரசொலியில் எந்த நிலையிலும் நிதானம் இழக்காமல் கழகக் கட்டுப்பாடு காப்பேன் என்ற உறுதியினைக் கழகத் தோழர்கள் மேற்கொள்வதும், காழ்ப்பு உணர்ச்சிகளை நெஞ்சிலிருந்து நீக்கிவிடுவதும்தான் எனக்கு அந்தப் பிறந்தநாள் பரிசு என்று எழுதியிருந்தேன்.

2.6.78 அன்று மாலையில் சென்னை கலைவாணர் அரங்கில் இலக்கிய அணி சார்பில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரவு 7 மணியளவில் மதுரை மீரா குழுவினரின் நாதஸ்வர இன்னிசையுடன் விழாத் தொடங்கியது. விழாவிற்குப் பொதுச்செயலாளர் பேராசிரியர் தலைமை தாங்கினார். புலவர் அறிவுடை நம்பி வரவேற்புரையாற்ற விழாத்தலைவரை டாக்டர் நாதன் முன்மொழிய புலவர் ஆடலரசு வழிமொழிந்தார். முத்தமிழக் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் தொடக்க உரையாற்றினார்.

மேலும் அவரே உரையாற்றும்போது எனக்குப் பொன்னாடையும் போர்த்தி வாழ்த்து நல்கினார். இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் விழாவிற்கு வந்திருந்ததோடு என்னை வாழ்த்திச் சில பாடல்களும் பாடினார். அடுத்துக் கவியரசு முடியரசன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. செல்வி பொன்முடிச்சுடரொளி, கவிஞர் சிங்கார சடையப்பன், புலவர் இளம்பரிதி, புலவர் தொல்காப்பியன், கவிஞர் அரிமதி தென்னவன், கவிஞர் குடியரசு, குருவிக்கரம்பை சண்முகம், கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம், கவியரசு பொன்னிவளவன், பேராசிரியர் அப்துல் ரகுமான் ஆகியோர் கவிதையால் என்னை வாழ்த்தினர்.

புலவர் அண்ணாமலை நன்றி கூறி, என்னை ஏற்புரை ஆற்ற ஒலிபெருக்கியை வழங்கிய நேரம் நள்ளிரவு 12 மணியாகும். எனவே நான் சுருக்கமாகவே அனைவருக்கும் நன்றி கூறி என் உரையை முடித்துக் கொண்டேன். அந்த விழாவிற்குத் தலைமையேற்ற பேராசிரியர் அவர்கள் பேசும்போது "கலைஞரை வாழ்த்துகின்ற நாள் திருநாள்; அவருடைய வாழ்க்கையோடு கலந்திருக்கிற வரலாற்று நாள்! தமிழ் நாட்டின் வரலாற்றை உருவாக்கும் நாள். எனவே தமிழகத்தின் வரலாற்றை உருவாக்குகின்ற ஆற்றல் படைத்தவர் என்பதால்தான் முத்தமிழ்க் காவலர் வாழ்த்தித் தமிழ்த் தரணியில் உள்ள எல்லா மக்களும் வாழ்த்தக்கூடிய அந்த நிலைமையைக் கலைஞர் பெற்றிருக்கிறார்.

பெரியார் அவர்கள் மறைந்து அதற்குப் பின்னர் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழிகாட்ட ஆற்றல் மிக்கவர் இல்லாமல் போய்விடுமோ என்ற ஐயம் ஏற்பட்ட நேரத்தில் கலைஞர் தந்தை பெரியார் மறைந்தாலும் அவருடைய இலட்சியம் மறையாத வகையில் அவருடைய குறிக்கோள் மறையாத வகையில் அதைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவராக விளங்குகிறார் என்ற எண்ணம் இன்று தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பிலுள்ள மக்களிடத்தில் விளங்கி வருகிறது. பகைக் கூட்டத்தை எதிர்க்கின்ற ஆற்றல் படைத்து அதன் மூலமாகத் தமிழ் மொழியைப் பாதுகாக்கும் உணர்விற்கு மேலும் மேலும் வலிவு தேடுகின்ற தொண்டிற்கு வடிவம் கலைஞர் அவர்கள்."

என்றெல்லாம் என்னைப் பலபடப் பாராட்டி அரியதோர் உரையினை அன்றைய தினம் ஆற்றினார். 3.6.78 அன்று காலை முதல் மாலை வர

ை ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களையெல்லாம் ஏற்றுக் கொண்டேன். எனக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்; அன்று ஒரு நாளில் மட்டும் கழகத்தோழர்கள் கழக வளர்ச்சி நிதியாக 5,197 ரூபாயை உண்டியலிலிட்டு வழங்கினார்கள். கழகத்தோழர்கள் தோழமைக் கட்சியினர் என்னை வாழ்த்தியதைப் போலவே செய்தியாளர்களும் அன்று என்னைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததோடு பிறந்தநாள் செய்தியாக என்ன கூறுகிறீர்கள் என்றும் கேட்டனர்.

"எத்தனையோ இடுக்கண்களுக்கும் இடையில் தி.மு.கழகத்தை வலிவு குன்றாத நிலையில் வளர்த்து வருகிற கழகக் கண்மணிகளுக்கு என்னுடைய பாராட்டுக்களை இந்த நாளில் தெரிவித்துக் கொள்கிறேன். உலகமெங்கும் உள்ள தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக தி.மு.கழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சிகரமான நாளிலேகூட இலங்கையில் தமிழர்கள் மீண்டும் அவதிக்கு ஆளாகிற சூழ்நிலை அரும்பி இருப்பதைக் கண்டு மிகுந்த கவலை கொள்கிறேன்.

அவர்களுடைய இன்னல் நீங்குவதற்கு விரைவில் வழி ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவைப் பொறுத்தவரை சமதர்ம சமுதாயமும் பகுத்தறிவுப் பேரொளியும் பரவிட வேண்டும் எனும் பொதுவான அவாவினை நான் தெரிவிக்கிற நேரத்தில் அரசியல் ரீதியாக மத்தியில் கூட்டாட்சியும் மாநிலங்களில் சுயாட்சியும் அமைய தி.மு.கழகம் தீவிரப் பணிகளில் இறங்குவதற்காகத் திட்டங்களைத் தீட்டும். தமிழர் நலன் காக்கவும் தமிழ் மொழிகாக்கவும் மக்களாட்சித் தத்துவத்தின் மாண்புகாக்கவும் தி.மு.

கழகம் என்றென்றும் அறப்போர்க் களத்தில் நிற்கிற சிப்பாயாகவே திகழும் என்ற உறுதியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத் தொண்டர்களைப் பொறுத்தவரையில் எதிர்ப்பு மழை பொழியும் பொழுது அவர்களுக்கு நான் குடையாகவும் அடக்குமுறை வெப்பம் தகிக்கும் போது அவர்கள் பயணம் தடைபடாதிருக்க அவர்களின் கால் செருப்பாகவும் நான் என்றென்றும் இருப்பேன். பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர், காயிதேமில்லத் போன்றவர்கள் வாழ்ந்து தமிழ்நாட்டுக்குக் காட்டிய வழியினில் தொடர்ந்து தொண்டாற்றுவேன்" என்று பிறந்த நாள் செய்தியாகத் தெரிவித்தேன்.

எனது 55-வது பிறந்தநாளையொட்டி மூத்த தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதிய வாழ்த்துக் கவிதையில்- மலைபோற் பருத்த மறுவெல்லாம் இன்று சிலைபோற் சிறுத்ததுவும் - இலையாய்க் கலைஞர் அருட்செல்வ கையோங்கி வாழ்க தலைவர் பதவி தக! என்று எழுதியிருந்தார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் 3.6.78 தேதியிட்ட "விடுதலை"யில் என்னை வாழ்த்தும் போது "தமிழனைத் தலைநிமிரச் செய்த தலைவர் தந்தை பெரியார் அவர்களிடம் தன்னை ஒப்படைத்தே கலைஞர் பொது வாழ்க்கையைத் துவக்கினார்.

அந்நாள் முதல் தந்தையின் தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவிடம் தன்னை ஒப்படைத்த நாள் வரை அவரது கடும் உழைப்பு உவமை சொல்ல முடியாத உழைப்பு. எதிர் நீச்சல் என்பது அவருக்குப் பழகிப் போன ஒன்று! அடிக்க அடிக்க எழும் பந்து போல் எதிர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க ஈரோடு போன நான் ஏன் நீரோடு போக வேண்டும் என்று கேட்டு, தமிழர் தம் உரிமைக் குரலாய் விளங்கும் உத்தமத் தலைவரை இன்று உலகம் வாழ்த்துகிறது. அவர் மீது வீசப்படும் குப்பைகள் அவரது ஆற்றல்மிகு அறிவுப் பயிருக்கு இடப்படும் உரம் ஆகும் என்பதை நாடும் நல்லவர்களும் கண்டு வருகிறார்கள்.

தணலில் இட்ட தங்கம், புடம் போட்டதால் பொன்னொளி பரப்புவதில் முன்னிலும் முனைப்பானதைப் போலக் கலைஞர் சந்திக்கும் துயரங்கள் எல்லையற்ற தொல்லைகள் அவரது சிறப்புக்கு மேலும் மெருகூட்டும். பிறவிப் போர் வீரராக அவர் குவித்திடும் கள வெற்றிகளில் தமிழினம் தலைநிமிரும்; தன்மான ஒளி பரவும். ஆற்றலின் உருவமே, அஞ்சாமையின் இலக்கணமே, நீவிர் வாழ்க வாழ்க என்று வாழ்த்தும் நன்றியுள்ள தமிழ் நெஞ்சங்களிடையே நாமும் இணைந்து வாழ்த்துகிறோம்.

அய்யா அண்ணா கொள்கைகளை அவனியெங்கும் பரப்புவதே அவரது தொண்டாக என்றும் இருக்கட்டும்" என்று எழுதியிருந்தார். அந்த ஆண்டு எனது பிறந்தநாள் விழாவில் கழகத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினரும், 1993ல் கழகத்தை எதிர்த்துப் புதுக்கட்சி கண்டவருமான வை.கோபால்சாமி பேசியதும் நினைவிலே கொள்ளத் தக்கதாகும். அது வருமாறு "நபிகள் நாயகத்தின் பெருமையைக் கூறும் இஸ்லாமிய சகோதரனுக்கு எத்தகைய உணர்வு ஏற்படுமோ, அதைப்போல் இயேசு நாதரின் மகிமையைப் போதிக்கும் கிறித்துவ நண்பனுக்கு எத்தகைய உணர்வு கிளர்ந்தெழுமோ, அதைப்போல பகவத்கீதையை உபன்யாசம் செய்யும் இந்து மதக்காரனுக்கு என்ன உணர்வு முகிழ்க்குமோ அதைப்போல அண்ணாவின் கொள்கைக் காவலனும் தமிழ்க் குலத் தலைவருமான கலைஞரைப் பற்றி அவர்தம் பிறந்தநாளாம் இப்புனிதத் திருநாளில் பேசும் வாய்ப்புப் பெற்ற கழகத் தொண்டனும் புனிதமான உணர்வைப் பெறுகிறான்.

சந்தர்ப்பத்தின் சாகசத்தாலோ இயக்க வரலாற்றின் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாகவோ உயர்ந்தவரல்ல கலைஞர். உழைப்பால் ஒப்புமை காட்ட இயலாத ஆற்றலால், மாற்றாரையும் தலை வணங்கச் செய்யும் தியாகத்தால் தமிழ்நாட்டின் வரலாற்றில் தனக்கெனத் தனியிடம் கண்டவர் கலைஞர். காரல்மார்க்ஸ்க்குக் கிடைத்த மாவீரன் லெனினைப் போல, விடுதலை முழக்கம் செய்த மாஜினிக்குக் கிடைத்த கரிபால்டியைப் போல, புத்தனுக்குக் கிடைத்த அசோக மன்னனைப் போல, ராஜராஜனின் பெருமையை மேலும் உயர்த்திடத் தோன்றிய ராசேந்திரனைப் போல, காஞ்சித் தலைவனுக்கு நம் கலைஞர் வழித்தோன்றல் ஆனார்.

இத்தனை ஆற்றலும் கொண்ட தலைவர் கலைஞர் மதிநுட்பமும் ராஜதந்திரமும் கொண்ட அரசியல் மேதை எனக் கூறினால், பின்னர் ஏன், கட்சியில் உடன் இருந்த துரோகிகளை அவரால் இனம் கண்டுகொள்ள முடியவில்லை என்ற சிந்தனைக்குரிய கேள்வி உங்களிடையே எழலாம். இயேசுநாதரின் இறுதி நாட்களைப் பற்றி விவிலியத்தில் படித்தபோது இந்தக் கேள்விக்கு விடையும் எனக்குக் கிடைத்தது. உடன் இருந்த சீடர்களில் ஒருவன் இரவு பகல் பூராவும் அருகிருந்து பழகிய சீடன் ஒருவன், இயேசுவை வெள்ளிக் காசுகளுக்காக ரோமத்தூதர்களுக்கு காட்டிக் கொடுத்தான்.

இயேசுநாதர் ஜூடாஸ்தான் காட்டிக் கொடுக்கப்போகிறான் என்பதை முன்னரே அறிந்தவராகத்தான் "என்னோடு இருந்து இப்போது அப்பத்தைப் புசிப்பவர்களில் ஒருவன்தான் என்னை விலை பேசப்போகிறான்" என்று குறிப்பிட்டார். மேலும் எனது சீடர்களில் இன்னொருவனாகிய 'சீமோன்' என்பவனும் என்னை எதிரிகள் வசம் ஒப்படைக்க ஏதுவாயிருப்பான் என்றார். இயேசுவின் விரல் விட்டு எண்ணக்கூடிய சீடர்களிலேயே இப்படி துரோகிகள் என்றால் இலட்சக்கணக்கானவர்களை அரவணைத்து வழிநடத்தும் கலைஞரின் பாசறையில் ஓரிரு துரோகிகள் முளைத்ததில் வியப்பேதும் இல்லை.

இவன் தனக்கு விசுவாசமின்றித் துரோகமிழைப்பான் என்று தெரிந்தும் இயேசு சேர்ந்து இருந்ததைப் போலத் தான் கலைஞரும் பல துரோகிகளைக் கண்டு கொண்டும் காலம் அந்தத் துரோகிகளின் முகத்திரையைக் கிழிக்கும் எனக் கருதியிருந்தார்..." இப்படிப் பேசினார் அன்றைக்கு, வை.கோபால்சாமி!