உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/ஜனதா ஆட்சியில் குழப்பம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

ஜனதா ஆட்சியில் குழப்பம் · 256 / 391

40. ஜனதா ஆட்சியில் குழப்பம் அமெரிக்க சி.ஐ.ஏ அமைப்பினர் அணுச் சக்தியால் இயங்கும் வேவு கருவி ஒன்றை இமயமலையில் நந்தாதேவி சிகரத்தில் சீனாவில் உள்ள அணுசக்தி நிலையங்களை வேவு பார்ப்பதற்காக வைத்ததாகவும், அக்கருவி நீர் அரிப்பின் காரணமாக உடைந்து போக வாய்ப்பு உள்ளதாகவும் அப்படி அது உடைந்தால் கங்கை நதியில் ஆபத்தான அணுக்கதிரியக்கம் கலக்க வாய்ப்பு இருப்பதாகவும் பல்வேறு வகையான அச்சுறுத்தும் செய்திகள் 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் ஏடுகளில் வெளிவந்து இந்தியா முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின.

நாடாளுமன்றத்திலும் இதுபற்றிப் பல உறுப்பினர்கள் கேள்விகள் கேட்ட பின்னர் பிரதமர் தேசாய் இந்த அணுச் சக்தி வேவு கருவி பற்றி 17.4.78 அன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்வார் என்ற அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து முதலில் இக்கருவி பற்றி வந்த செய்தி - கங்கோத்ரி கங்கையின் உற்பத்தித் தளம் அமைந்துள்ள பகுதியில் அணுக்கதிரியக்க வாய்ப்புள்ள உளவுக் கருவி வைக்கப்பட்டதால் - அது பெரிய பனிமலைப் பெயர்ச்சியில் சிக்கியதால் கருவி பழுதுபட்டு அணுக்கதிரியக்கம் உண்டாகிக் கங்கையின் நீரில் விஷம் கலந்திருக்குமோ என்ற கவலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.

இந்திய அணுச்சக்தி நிபுணர்கள், கார்வால் இமயமலைப் பகுதியில் ஆய்வு ஒன்றை அவசர அவசரமாக நடத்திவிட்டு 16.4.78 அன்று மாலை டெல்லி திரும்பினார். 1964ஆம் ஆண்டு ஏவுகணை அபிவிருத்திகள் பற்றித் தகவல் பெறுவதற்காக "இந்தியா அமெரிக்கா" கூட்டு முடிவின் அடிப்படையில் கங்கை நதியின் மேல் பகுதியில் உள்ள நந்தா தேவி மலையில் அணுச்சக்தியால் இயங்கும் உளவுக்கருவி வைக்கப்பட்டது என்று பிரதமர் நாடாளுமன்றத்திலே தெரிவித்தார்.

அப்போதிருந்த சர்வதேச நிலைமை, தொலைவிலும் அருகிலும் நடந்து கொண்டிருந்த விஞ்ஞான வளர்ச்சிகள் ஆகியவற்றை முன்னிட்டு இந்த முடிவை இரண்டு அரசுகளும் மேற்கொண்டன என்றும், பிரச்சினையை ஆராய்ந்து மதிப்பிட விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் எதிர்காலத்தில் அபாயம் ஏற்படாமல் பாதுகாக்க அவசியமான மேல் நடவடிக்கை பற்றி நிபுணர் உதவியுடன் குழு சிபாரிசுகளைத் தெரிவிக்கும் என்றும், கிடைத்துள்ள மறைமுகச் சான்றுகளின்படி அந்த சாதனத்தில் உள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் பயன் உள்ளதாக இருக்கக் கூடும் என்றும், அவ்வாறு இருந்தால் எதிர்காலத்தில் நச்சு விளைவுகள் ஏற்படா திருக்கக் கூடும் என்றும், இதுவரை அத்தகைய நச்சு விளைவுகள் ஏற்படாதது மகிழ்ச்சிக்குரியது என்றும் தேசாய் கூறினார்.

சி.ஐ.ஏ. மீது பழி சுமத்துவதில் பயனில்லை; இரண்டு அரசுகளின் மிக உயர் மட்டத்தில் இந்தப் பிரச்சினை முழுவதும் முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் விளக்கமளித்தார். பிரதமரிடம் இம்மாதிரி கருவியினை வைத்தது தேவைதானா என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டபோது, நான் யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை; ஆனால் நான் இருந்திருந்தால் இதை அனுமதித்திருக்க மாட்டேன் என்று பதில் கூறினார். இத்துடன் இந்தப் பிரச்சினைக்கு நாட்டிலே ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதற்கு முன் 10.4.78 அன்ற நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் டாக்டர் பி.சி.சுந்தர், 1973ல் இந்திராகாந்தியின் ஆட்சியில் டெல்லியில் புதைக்கப்பட்டு, ஜனதா ஆட்சியிலே டிசம்பர் திங்களில் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்ட "இந்திய வரலாறு" அடங்கிய காலப் பெட்டகம் பற்றிய விவரங்களை - இதுவரை வெளி உலகத்திற்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்த விவரங்களையெல்லாம் வெளியிட்டார். அந்தக் காலப் பெட்டகத்திலே உத்தமர் காந்தியின் பெயர் ஒரேயொரு இடத்திலே மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அகிம்சையில் நம்பிக்கை கொண்டிருந்த காந்தியடிகளின் தலைமையில் விடுதலை இயக்கம் 1920ல் தொடங்கியது என்ற ஒரேயொரு வாக்கியம்தான் அது என்றும், இந்தியாவின் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பணிகள் கூடச் சரியாகக் குறிப்பிடப்படவில்லை என்றும், அரசியல் சட்டம் பற்றித் தவறான தகவல்கள் அதிலே எழுதப்பட்டிருந்ததாகவும், தேவையற்ற சம்பவங்கள் முக்கியத்துவம் கொடுத்து, எழுதப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் அவையிலே தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் அந்தக் காலப் பெட்டகத்தை உப்பு சப்பில்லாத, அரைகுறையான, தவறுகள் மலிந்த பெட்டகம் என்று வர்ணித்தார். இந்தக் காலப் பெட்டகத்தைப் பற்றித் "தினமணி" ஏடு தனது தலையங்கத்திலே அப்போது "ஜாலப் பெட்டகம்" என்ற தலைப்பிலே கண்டித்து எழுதியிருந்தது. ஏப்ரல் திங்கள் இறுதியில் அதாவது 27.4.78 அன்று இந்தியாவின் வடமேற்கில் பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் திடீரென இராணுவப் புரட்சி நடைபெற்றது.

அங்கு ஐந்தாண்டுக் காலமாக ஆட்சியில் அதிபராக இருந்த முகமது தாவூத், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது தாவூத் 1973ல் மன்னர் ஆட்சியை எதிர்த்து, புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின் ஐந்தாண்டுகளாக அவர்தான் ஜனாதிபதியாக இருந்து வந்தார். ஏப்ரல் 27 அன்று அவருக்கெதிராக இராணுவத்தினர் புரட்சி நடத்தினார்கள். ஜனாதிபதி மாளிகையை 40 இராணுவ டாங்கிகள் சூழ்ந்து கொண்டு பீரங்கியால் சுட்டன.

ஜனாதிபதி மாளிகை தீப்பிடித்து எரிந்தது. ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூல் நகரில் தெருக்களிலும் விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களிலும் இராணுவத்தினருக்கும் அதிபர் தாவூத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும்போர் நடைபெற்றது. ரேடியோ நிலையத்தை இராணுவம் கைப்பற்றியது. இராணுவத் தளபதி அப்துல் காதர் ரேடியோவில் "ஏகாதி பத்தியவாதிகளின் ஆட்சி ஒழிந்தது. மக்களின் கைக்கு ஆட்சி வந்து விட்டது" என்று கூறினார்.

அதிபர் தாவூத்தும் அவரது குடும்பத் தினரும் நெருங்கிய நண்பர்களும் அடியோடு அழிக்கப்பட்டு விட்டதாகவும் ஆப்கான் நாடு முழுவதும் இராணுவத்தின் வசம் ஆகி விட்டது என்றும் இராணுவ தளபதி காதர் அறிவித்தார். 1977 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் நாள் மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கும், 30 ஆம் நாள் சென்னை, காஞ்சிபுரத்திற்கும் இந்திராகாந்தி வருகை தந்தபோது தி.மு.கழகம் ஜனநாயக முறையில் கறுப்புக்கொடி அறப்போராட்டத்தை முறைப்படி அறிவித்து நடத்தியமைக்காக நானும் பொதுச்செயலாளர் பேராசிரியரும் மற்றும் கழக முன்னணியினரும் கைது செய்யப்பட்டு நாற்பது நாட்களுக்கு மேல் சிறையிலே காவலில் வைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்திலே நீதிபதியே எங்களை விடுதலை செய்த பிறகு, அந்தப் பிரச்சினை அதோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என்று எண்ணியிருந்தேன்.

ஏனெனில் அதே வாரத்தில் கர்நாடகம் போன்ற வேறு மாநிலங்களிலே இந்திராகாந்திக்குக் கறுப்புக்கொடி காட்டியமைக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் இரண்டொரு நாட்களிலேயே விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். ஆனால் தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சிக்கு எங்களைப் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்ததால் 24.5.1978 அன்று அ.தி.மு.க. அரசு சென்னை எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நான் உட்பட 135 பேர் மீது 15 பயங்கரச் சட்டப்பிரிவுகளின் கீழ் இந்திராகாந்தியைக் கொலை செய்ய முயன்றதாகப் பொய் வழக்குப் போட்டு - அதற்கான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இந்திராகாந்தியும் இந்த வழக்கிலே ஒரு சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். எங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது பற்றிய செய்திக் குறிப்பினைத் தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தித் துறையே ஆங்கிலத்திலும், தமிழிலும் அவசரம் அவசரமாகத் தயாரித்துப் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தது. அதில் குறிப்பாக "புலன் விசாரணையில் தி.மு.கழகத்தலைவர் கருணாநிதியும் அவரது சகாக்களும் ஒன்று கூடி இந்திராகாந்தி தமிழ்நாட்டிற்கு வந்த போது கறுப்புக்கொடி காட்டுவது என்ற முறையில் அவர் செல்லும் வழியெல்லாம் பெருத்த கலகம் விளைவித்து, அதனால் ஏற்படும் குழப்பத்தைப் பயன்படுத்தி அவரைக் கொலை செய்வதென்று திட்டமிட்டனர் என்பது தெளிவாயிற்று.

ஏற்கெனவே திட்டமிட்டப்படி கலகத்தை முன்னின்று நடத்த மு.கருணாநிதி தன்னுடைய சகாக்களை கலகம் நடத்தும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்" என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு போடப்பட்ட வழக்குப் பற்றித் திருச்சியிலே செய்தியாளர்கள் என்னிடம் கருத்துக் கேட்டனர். "சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கொள்கைக் குறிப்பில் சென்னை ஹால்டா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தை நியாயப்படுத்தி எழுதப்பட்டிருந்தது.

அந்தத் துப்பாக்கிச் சூடு பற்றி விசாரணை நடத்த அரசாங்கமே சோமசுந்தரம் விசாரணைக் கமிஷனையும் நியமித்திருந்தது. எனவே அரசாங்கமே ஒரு நீதி விசாரணைக் கமிஷனை நியமித்து விட்டு, அந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அரசு சார்பிலே அவையிலே வைத்த கொள்கைக் குறிப்பிலே அந்தச் சம்பவத்தை நியாயப்படுத்திக் கூறியிருப்பது முறைதானா என்று நான் முன்பே கேட்டிருக்கிறேன். இப்போது மீண்டும் அந்த விசாரணைக் கமிஷன் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அந்த நிகழ்ச்சி பற்றி எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யாத நிலையில் இப்போது அரசாங்கம் அவசர அவசரமாக எங்கள் மீது வழக்குப் போட்டிருப்பது, அந்த விசாரணைக் கமிஷன் நடவடிக்கையிலே குறுக்கிடுவது ஆகும்" என்று கூறினேன்.

இந்த வழக்குதான் 5.8.1995 அன்று ஏடுகளிலே 'உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி விடுதலை' என்று செய்தி வந்ததே, அதற்கான மூல காரணமான வழக்கமாகும். 1978-ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சி இந்த வழக்கை எங்கள் மீது போட்டது, வழக்கைப் பலப்படுத்து- வதற்காக ஏற்கெனவே கழகத்திலே இருந்தவரும், அவர் அமைச்சராக ஆக்கப்படவேண்டும் என்று அண்ணாவினிடத்திலே என்னால் பரிந்துரைக்கப்பட்டு அமைச்சராக ஆக்கப்பட்டவரும், பிறகு என்னுடைய அமைச்சரவையிலே அமைச்சராக இருந்தவருமான பாவலர் முத்துசாமி அப்ரூவர் ஆக்கப்பட்டார்.

"கருணாநிதிதான் கொல்லச் சொன்னார், சுட்டு விரலைக் காட்டிக் சொன்னார்" என்று அவர்தான் சாட்சி சொன்னார். வழக்கு நடைபெற்று சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் அந்த 135 பேரில் நான், பேராசிரியர், வீராசாமி, ப.உ.சண்முகம், சாதிக்பாட்சா உள்ளிட்ட 55 பேர் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டோம். மதுரையில் கைது செய்யப்பட்ட தென்னரசு, கோவை ராமனாதன், ரகுமான்கான், பொன்.முத்துராமலிங்கம், வை.கோபால்சாமி போன்றவர்கள் மீது இரண்டாண்டுக் காலம் தண்டனையை எதிர்த்து தி.மு.

கழகம் மேல்முறையீடு செய்தது. அதன்மீது விசாரணை நடைபெற்றது. அதே நேரத்தில் எங்களை அந்த வழக்கிலிருந்து விடுவித்தார்கள் அல்லவா, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அ.தி.மு.க. அரசு உயர்நீதிமன்றத்தில் எங்களையும் தண்டிக்க வேண்டுமென்று மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே 1989 இல் தி.மு.கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. வந்தவுடன் நான் என்ன செய்திருக்க வேண்டும்? எங்கள் மீதுள்ள வழக்கை எம்.ஜி.ஆர்.

அரசு அப்பீல் செய்திருக்கிறதா; அதை உடனடியாகத் திரும்பப் பெறுகிறேன் என்று கூறியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொல்லவில்லை. நீதியின் வழிக்கே அதை விட்டுவிட்டேன். நீதி என்ன சொல்கிறதோ அதற்குக் கட்டுப்படுகிறேன் என்று இருந்து விட்டேன். அதைப் போலவே தண்டிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்திருந்தார்களே, அதிலும் தி.மு.கழக ஆட்சி தலையிடவில்லை. 1978-ல் தொடரப்பட்ட அந்த வழக்கு 1994 வரையில் நடைபெற்றது.

இதற்கிடையில் எந்த இந்திரா காந்தியை நான் கொலை செய்யச் சதி செய்தேன் என்று வழக்குத் தொடுத்தார்களோ அதே இந்திரா காந்தியும் நானும் ஒரே காரில் ஏறிக்கொண்டு 1980-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தோம். 1994-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டு, எல்லோரும் விடுவிக்கப்பட்டோம். ஆனால் 94-ல் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சியால் அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

உயர்நீதிமன்றம் தந்த தீர்ப்பா, சரி பர- வாயில்லை விட்டுவிடுவோம் என்று விடவில்லை. மாறாக உச்சநீதி மன்றத்திற்கு கருணாநிதியும், மற்றும் 135 பேர்களும் கொலைக் காரர்கள்தான்; அவர்களை விடக் கூடாது என்று அரசாங்கச் சார்பிலே அப்பீல் செய்தார்கள். அந்த அப்பீல் வழக்குதான் விசாரிக்கப்பட்டு, கடந்த 4.8.1995 அன்று "ஜெயலலிதா அரசு போட்ட வழக்கை தள்ளுபடி செய்கிறோம்; எல்லோரையும் விடுதலை செய்கிறோம்" என்று உச்சநீதிமன்றத்திலே தீர்ப்புக் கூறப்பட்டது.

நெருக்கடி நிலையைத் தாண்டி மிகுந்த சிரமத்திற்கிடையே மத்தியிலே ஆட்சியைப் பிடித்த ஜனதாக் கட்சியிலே ஒற்றுமை நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. மிகப் பெரும் சோதனைகள் பல துயரங்களுக்குப் பின் மத்தியிலே ஆட்சியிலே அமர்ந்த ஜனதாக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஓராண்டுக் காலத்திற்குக் கூடத் தங்களது ஒற்றுமையைக் கட்டிக் காத்திடவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் எந்த நிலையிலே தாங்கள் இருந்தோம், யார் யார் தங்களுக்கு உதவினார்கள் என்பதையெல்லாம் அடியோடு மறந்தார்கள்.

பழைய காங்கிரஸ், ஜனநாயகம், பாரதீய கிரந்தி தளம், சோஷலிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து உருவான கட்சிதான் ஜனதா. ஆனால் ஆட்சியிலே அவர்கள் அமர்ந்த அந்த ஓராண்டுக் காலத்திற்குள்ளேயே அந்தக் கட்சிகளின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிப் பேசி வந்தனர். அதன் காரணமாக ஜனதாக் கட்சி எந்த நேரத்திலும் பிளவைச் சந்திக்கக் கூடிய நெருக்கடி நிலைக்கு ஆளானது. டெல்லியிலே நடைபெற்ற ஜனதாக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சரண்சிங் அவர்களும், வெளிநாட்டுத்துறை அமைச்சர் வாஜ்பாய் அவர்களும் ஜனதாக் கட்சியிலே ஒரு குழுவினர் தங்களைத் தாக்கிப் பேசி வருவதாகவும் அவர்கள் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினர்.

கட்சியில் யார் மீதும் குரோத எண்ணம் கிடையாதென்றும் கட்சியைத் திறமையாக வழி நடத்திச் செல்ல முயற்சி மேற்கொள்ளவேண்டுமென்றும் ஜனதாக் கட்சியின் தலைவர் டாக்டர் சந்திரசேகர் கூறினார். ஜனதாக் கட்சியின் பிளவைத் தடுக்க அந்தக் கட்சியின் ஐம்பெரும் தலைவர்களான மொரார்ஜி தேசாய், சரண்சிங், ஜெகஜீவன்ராம், வாஜ்பேய், சந்திரசேகர் ஆகியோர் பிரதமர் வீட்டில் சந்தித்து நெடுநேரம் பேசினார்கள். பலன்தான் எதுவும் ஏற்படவில்லை.

பிளவு அதிகரித்ததன் காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் சரண்சிங்குக்கும், இராணுவத்துறை அமைச்சர் ஜெகஜீவன் ராமுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த மத்திய அமைச்சர் பட்நாயக் மேற்கொண்ட முயற்சியும் வெற்றிபெறவில்லை. இது ஒருபுறமிருக்க பிரதமர் தேசாய்க்கும், சரண்சிங்குக்கும் இடையேயும் தகராறு முற்றியது. பிரதமர் தேசாயின் மகன் காந்திதேசாய் பற்றிக் கூறப்பட்ட ஊழல் புகார்கள் பற்றி தேசாய்க்கு சரண்சிங் கடிதம் எழுத அதற்கு தேசாய் "ஆதாரமற்ற புகார்கள் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டா

ம். உங்கள் குடும்பத்தினர் பற்றியும் புகார்கள் வந்தன. நான் அதனைப் பொருட்படுத்தவில்லை" எனப் பதில் எழுத அதற்கு சரண்சிங் "விசாரணைக் கமிஷன் அமைத்து இந்த ஊழல் புகார்கள் பற்றி விசாரிக்கலாம்" என்று எழுத அதற்கு பிரதமர், "வெறும் வதந்திகளின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது" என்று பதில் எழுத இவ்வாறு இருவருக்குமிடையே கடிதப்போர் நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற ஜனதாக் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் தேசாய் "இன்னும் ஆறு மாதத்தில் ஜனதாவில் உட்கட்சித் தகராறு தீராவிட்டால் - அதனைத் தீர்த்து வைக்க முடியாவிட்டால் ஜனதாக் கட்சியிலிருந்து முதலில் வெளியேறும் ஆள் நானாகத்தான் இருப்பேன், கட்சியில் ஒற்றுமை குலைந்து போகுமானால் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறி விடுவேன்" என்று கூறினார்.

தேசாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சரண்சிங் பலமுறை தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து கடிதம் கொடுத்ததாகவும், பிரதமர் அவைகளை ஏற்கவில்லை என்றும் 'இந்து' செய்தி வெளியிட்டது. 25.4.78 அன்று திடீரென சரண்சிங்குக்கு இதயத் துடிப்பில் கோளாறு ஏற்பட்டு, ஆறுமுறை வாந்தி எடுத்தன் காரணமாக டெல்லி வெலிங்டன் மருத்துவமனையிலே முதலில் சேர்க்கப்பட்டு, பின்னர் இந்திய வைத்திய விஞ்ஞானக் கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இரண்டு வாரம் மருத்துவமனையிலே தங்கி சிகிச்சை பெறவேண்டுமென்றும் மருத்துவர்கள் கூறினர். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சரண்சிங் அவர்களைச் சந்தித்து உடல் நலம் கேட்டனர். நெஞ்சுவலி, வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையிலே சிகிச்சை பெற்றுவந்த சரண்சிங் மருத்துவமனையில் இருந்தவாறே, மத்திய அமைச்சர் ராஜ் நாராயணன் மூலமாக, ஜனதாக் கட்சியின் காரியக் கமிட்டி, மத்திய பார்லிமெண்டரி போர்டு ஆகியவற்றின் உறுப்பினர் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்து, ராஜினாமா கடிதத்தைக் கட்சியின் பொதுச் செயலாளர் மதுலிமாயி அவர்களிடம் கொடுக்கச் செய்தார்.

சரண்சிங்கின் இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம், அவரது ஆதரவாளர்களான அரியானா முதல்வர் தேவிலால், உத்தர பிரதேச முதல்வர் ராம் நரேஷ் யாதவ் ஆகியோரை பதவியிலிருந்து விரட்ட தேசாய் முயற்சித்து வந்ததுதான் என்று சொல்லப்பட்டது. இந்த முதலமைச்சர்கள் தனது ஆதரவாளர்கள் என்பதால், இவர்களை மாற்றக்கூடாது என்பது சரண்சங்கின் எண்ணம். ஆனால் அரியானா முதல்வர் தேவிலால் ஜனதாக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் நம்பிக்கை வாக்குப் பெறவேண்டுமென்று தேசாய் கட்டாயப்படுத்தியதால், சரண்சிங் மேலே குறிப்பிட்ட பதவிகளை ராஜினாமா செய்தார்.

ஜனதாக் கட்சியில் நடைபெற்றுவரும் உட்கட்சி பூசல் காரணமாக மத்திய அரசில் முடிவுகளை எடுக்கும் அரசு இயந்திரம் அப்படியே நின்று போயிருக்கும் நிலை உருவாகியுள்ளது என்று ஜி.கே. ரெட்டி எழுதினார். ஏப்ரல் திங்கள் இறுதியில் ஜனதா கட்சிக்குள் இருந்த உட்குழப்பத்தைத் தீர்ப்பதற்காக இரண்டு நாட்கள் செயற்குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் சார்பிலே நடைபெற்றது. அதிலும் ஜனதா உட்குழப்பம் தீர வழியேற்படவில்லை. "எந்தக் கட்சியும் அல்லது கூட்டணியும் இவ்வளவு பெரும்பான்மையோடும் செல்வாக்கோடும் ஆட்சிப்பீடம் ஏறியதாக வரலாறும் கிடையாது.

அது போல இவ்வளவு விரைவில் எந்தக் கட்சியும் தனது செல்வாக்கைப் போக்கிக் கொண்டதும் கிடையாது" என்றும் ஜி.கே.ரெட்டி அந்தக் கட்டுரையிலே தொடர்ந்து எழுதியிருந்தார். மத்திய அமைச்சராக இருந்த ராஜ் நாராயணன் ஜனதாக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து டாக்டர் சந்திரசேகர் பதவி விலக வேண்டுமென்று அறிவித்ததையடுத்துக் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக ராஜ் நாராயணன் ஆட்சிமன்றக் குழுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று தேசாய் தெரிவித்தார்.

ஆட்சிமன்றக் குழுவிலும் ராஜ் நாராயணனிடம் விளக்கம் கேட்பது என்பது என்னிடம் விளக்கம் கேட்பதைப் போன்றது என்று சரண்சிங் தெரிவித்தார். 25.6.78 அன்று பிரதமர் தேசாய் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு ராஜ் நாராயணன் அடிபணிய வேண்டும். இல்லாவிட்டால் அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார். இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் சரண்சிங் அவர்களும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராஜ் நாராயணன் அவர்களும் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

எனினும் இருதரப்பினரையும் தொடர்ந்து சந்தித்து சமரசம் காண நடைபெற்ற முயற்சி 6.7.78 அன்று தற்காலிகமாக வெற்றி கண்டது சரண்சிங் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு செயற்குழுவிலும், பார்லிமெண்டரி குழுவிலும் தொடர்ந்து உறுப்பினராகப் பணியாற்ற வேண்டுமென்று கட்சியின் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. கட்சியின் தலைவர் சந்திரசேகர் அந்தத் தீர்மானத்தின் நகலைத் தனது சொந்தக் கடிதத்துடன் இணைத்து சரண்சிங்கிற்கு அனுப்பிவைத்தார்.

தீர்மானத்தை சரண்சிங் அவர்களும் வரவேற்றுக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாகத் தான் எழுதிக்கொடுத்த கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். இவ்வாறு ஏற்பட்ட சமரசம் ஒருமாதம் கூட நீடிக்கவில்லை. சரண்சிங்கிற்கு மீண்டும் அமைச்சர் பதவி தரவேண்டுமென்று அவருடைய ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் தன் மகன் காந்தி தேசாய் மீது சரண்சிங் கூறிய ஊழல் புகார்களைத் திரும்பப் பெற்றால்தான் அமைச்சர் பதவி தரமுடியுமென்பதில் பிரதமர் தேசாய் உறுதியாக இருந்தார்.

இதனால் மீண்டும் ஜனதாக் கட்சியிலே புயல் வீசத் தொடங்கியது.