உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/விவசாயிகளின் மாபெரும் போராட்டம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

விவசாயிகளின் மாபெரும் போராட்டம் · 255 / 391

39. விவசாயிகளின் மாபெரும் போராட்டம் .4.1978 அன்று இஸ்மாயில் கமிஷன் அறிக்கை மீது பேரவையிலே விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திலே தி.மு. கழகத்தின் சார்பிலே நானும் கலந்து கொண்டு - சென்னை சிறைச்சாலையிலே நடைபெற்ற சித்ரவதைகள் பற்றி விவரித்து, சிட்டிபாபு தன் கைப்பட எழுதி வைத்திருந்த நாட்குறிப்பிலேயிருந்து பல உண்மைகளை எல்லாம் படித்துக்காட்டி, இனியும் காலதாமதம் செய்யாமல் எந்தெந்த அதிகாரிகள் குற்றச்சாட்டிற்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றார்களோ அவர்கள் மீதெல்லாம் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

அரசின் சார்பிலே பதிலுரையாற்றும்போது, விரைவிலே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது. ஊராட்சி அமைப்புகளின் 8-வது அகில இந்திய மாநாட்டுக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். அதிலே மத்திய மாநில அதிகாரங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதாவது "அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும் என்பதை முக்கியமாக ஒரு சாரார் சந்தேகக்கண் கொண்டு நோக்குவதே நமது நாட்டில் பஞ்சாயத்து ஆட்சிமுறை வெற்றி பெறாமல் போனதற்கான காரணமாகும்.

நமது மக்கள் சுயாட்சிக்குத் தகுதியற்றவர்கள் என்றும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுவிட்டால் நாடு சிதறுண்டு போகும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஏராளமான மக்கட் தொகையையும் பல்வேறு மாறுபட்ட வட்டார பிரச்சிகளையும் கொண்ட இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் அதிகாரங்களைப் பரவலாக்குவதால் ஆபத்தில்லை. அப்படிப் பரவலாக்கா விட்டால்தான் ஆபத்து என்பதையே நான் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறேன். ஏராளமான அலுவல்களை ஒரே இடத்தில் குவித்து வைப்பது வெளித்தோற்றத்துக்கு வேண்டுமானால் வலுவானதாகத் தோன்றலாம்.

ஆனால் உள்ளார்ந்து நோக்குவோமேயானால் அதனால் பல கடும் சிரமங்கள் ஏற்படும். எல்லா அதிகாரங்களையும் தன்னிடத்தே குவித்து வைத்துள்ள வலிமை வாய்ந்த மத்திய அரசு ஜனநாயகப் பாதையிலிருந்து தடம்புரண்டு மேலும்மேலும் எதோச்சிகார நிலையை அடையும் என்பது தெள்ளத் தெளிவானது என்று நான் 1961 ஆம் ஆண்டே எழுதியிருக்கிறேன். எனது அச்சம் உண்மையென்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஏராளமான அதிகாரங்களைத் தன்னிடத்திலே குவித்து வைத்திருந்த இந்திராகாந்தி எப்படியெல்லாம் ஜனநாயகத்திலிருந்து தடம் புரண்டு சர்வாதிகாரத்தைத் திணிக்க முயன்றார் என்பதை நாம் கண்கூடாகப் பார்த்துவிட்டோம்" என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதியிருந்தார்.

இந்தியா முழுவதும் இந்தக் கருத்துப் பரவலாக எடுத்துப் பேசப்பட்டது. 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தமிழகச் சட்டமன்ற மேலவைக்கு ஆசிரியர் தொகுதி, பட்டதாரி தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. ஆளுங்கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகங்கள், ஏராளமான பணச்செலவு ஆகியவற்றை மீறிக் கழகத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அந்தத் தேர்தலிலே வெற்றி பெற்றார்கள். குறிப்பாக நெல்லை, குமரி மாவட்ட ஆசிரியர் தொகுதியில் கழக வேட்பாளர் சங்கரலிங்கம் அவர்கள் 4,058 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அந்தத் தொகுதியிலே அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் வெறும் 207 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் தொகையை இழந்தார். அதுபோலவே தஞ்சை - திருச்சி ஆசிரியர் தொகுதியில் கழக வேட்பாளர் மீனாட்சி சுந்தரம், அ.தி.மு.க ஆதரவு வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு என்ற அளவில் பட்டதாரி இல்லாத மீனாட்சி சுந்தரம் பெரும்பான்மையான பட்டதாரி ஆசிரியர்களின் வாக்குகளைப் பெற்று - பட்டதாரி ஆசிரியர் ஒருவரைத் தோற்கடித்தார்.

தமிழ்நாடு தெற்கு பட்டதாரி தொகுதியில் கழக ஆதரவு பெற்ற வேட்பாளர் தர்மராஜ் சந்தோஷம் அவர்கள் நமது கழகத்தின் முன்னோடிகளில் ஒருவரான மதுரை பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அவர்களின் உறுதுணையோடு வெற்றிபெற்றார். தமிழ்நாடு வடக்கு பட்டதாரிகள் தொகுதியிலே கழகத்தின் ஆதரவையும் பெற்ற வேட்பாளர் ஏ.ஆர். தாமோதரன் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றிகள் தமிழகத்திலே தி.மு.கழகம் எதிர்க்கட்சியான பின்னரும் சோர்ந்துவிடவில்லை என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டின!

சுயமரியாதை இயக்கத்தின் பழம்பெரும் வீரர்களில் ஒருவரும், பெரியாரின் அருமைத் தொண்டராக இருந்தவரும் - பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்புக்குரியவராக விளங்கியவரும் தளபதி அழகிரிசாமி அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்தவரும் தஞ்சைத் தரணியில் கழகம் வளர்க்கப் பாடுபட்டவர்களில் ஒருவருமான பேராவூரணி குழந்தை அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி 17.4.1978 அன்று என்னைத் திடுக்கிட வைத்தது. அவரது குடும்பமே சுய மரியாதைக் குடும்பம்.

அவரால் உருவாக்கப்பட்ட தன்மான இயக்கத்தின் போர் வாட்கள் பலபேர் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளிலே இன்றும் கழகம் வளர்க்கப் பாடுபட்டு வருகின்றனர். என்பால் நீங்காத பற்றுக் கொண்ட பேராவூரணி குழந்தை அவரது மறைவு என்னைப் பெரிதும் அதிர்ச்சியுறச் செய்தது. 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியிலே அ.தி.மு.க வேட்பாளராக நின்று எஸ்.டி. சோமசுந்தரம் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார்.

ஆனால் 1978 மார்ச் திங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து, சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்ட்ட உறுப்பினர்களில் ஒருவராக, அ.தி.மு.க சார்பில், மேலும் நான்காண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலே நீடிக்கலாம் என்ற நிலையிலே இருந்த எஸ்டி.சோமசுந்தரம் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இது தமிழக அரசியலிலே ஒரு கேள்விக் குறியை எழுப்பியது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலே இருப்பவர், அந்தப் பதவியில் நீடிக்கலாம் என்கிற நிலைமையிலே மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால்; அவர் அமைச்சராகப் போகிறார் என்று ஏடுகளும், அரசியல் அரங்கினரும் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் மேலவை உறுப்பினராகவோ, சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்கு நாட்களுக்குள் இரண்டில் ஒரு பதவியை ராஜினாமா செய்யவேண்டும். ஆனால் ஏப்ரல் 15ஆம் தேதி நாளிதழ்களில், எஸ்.டி.சோமசுந்தரம் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், அது 13ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துவிட்டதாகவும், ராஜினாமாவை மேல்சபை துணைத் தலைவர் ஏற்றுக் கொண்டதாகவும் செய்தி வந்தது.

இதிலிருந்து அவர் அமைச்சராகப் போவதாக வந்த செய்திகள் பொய்யானது. மேலும் எதற்காக அவர் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், எதற்காக ராஜினாமா செய்தார் என்பதெல்லாம் தமிழக அரசியலிலே ஒரு வேடிக்கைக் கதையாகவே முடிந்தது. திருச்சியிலே 78ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களிலே நடைபெற்ற இந்திரா காங்கிரஸ் கட்சி மாநாட்டிற்காக வந்தபோது, இந்திரா காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது நெருக்கடி நிலையின்போது ஏற்பட்ட சிரமங்களுக்காகத் தான் வருத்தமும் வேதனையும் தெரிவித்து விட்டதாக வெளிப்படையாகக் கூறினார்.

"தமிழ்நாட்டில் தி.மு.- கழக அரசை உங்களுடைய அரசு டிஸ்மிஸ் செய்ததே?" என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "தி.மு.க.வின் பதவிக்காலம் முடிவடையும் தருவாயில் இருப்பதாக உள்நாட்டிலாகா அதிகாரிகள் அப்போது என்னிடம் கூறினர்" என்று இந்திரா காந்தி பதிலளித்தார்.

திருச்சி மாநாட்டில் பேசும்போது, இந்தி பேசாத மக்களின் மீது இந்தியைத் திணிக்கக்கூடாது என்றும், இந்தியைத் திணிக்க ஜனதா கட்சி முயற்சிப்பதாகவும் தாம் பிரதமராக இருந்தபோது சர்வாதிகாரியாக நடந்து கொண்டதாகக் கூறுவது தவறு என்றும், உலகில் எங்காவது ஒரு சர்வாதிகாரி தேர்தல் நடத்த உத்தரவிடுவாரா என்றும் கேட்டார். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின் போது ஜனதா கட்சியை மிகத்தீவிரமாக எதிர்த்த அ.தி.மு.க.

தமிழகத்திலே ஆட்சிக் கட்டிலிலே ஏறியதும், மத்தியிலே ஆட்சியிலே இருந்த ஜனதா கட்சியின்பால் நெருக்கத்துடன் பழகத் தொடங்கியது. மத்திய இராணுவ அமைச்சர் ஜெகஜீவன்ராம் அவர்களின் 71வது பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிப்பதற்காகவே தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நேரில் டெல்லி சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அ.தி.மு.க. நிதியமைச்சர் நாஞ்சிலார் அவர்களிடம் 10.4.78 அன்று நிருபர்கள் ஜனதா கட்சியோடு அ.தி.மு.க.

உறவு எப்படியிருக்கிறது என்று கேட்டதற்கு, அகில இந்திய அளவில் மிகச் சிறப்பாக இருக்கிறது என்றும் மாநில அளவில் தேறி வருகின்றது என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்ததிதன் காரணமாக நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் இரண்டாகப் பிரிந்தது. மொத்தமுள்ள 153 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இந்திரா காங்கிரசில் 71 பேரும், காங்கிரஸ் கட்சியில் 68 பேரும், மற்றவர்கள் நடுநிலையும் வகித்த காரணத்தால், அதுவரை மொத்தக் காங்கிரசுக்கும் சேர்த்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஓய்.பி.சவான் தன் பதவியை இழக்க நேரிட்டது.

புதிய எதிர்க் கட்சித் தலைவராக இந்திரா காங்கிரசைச் சேர்ந்த சி.எம். ஸ்டீபன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் திங்கள் மூன்றாவது வாரத்தில் கல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய இந்திராகாந்தி தம்மைச் சுற்றி ஓர் ஆதரவாளர் கூட்டம் இயங்குவதாகவும், அதன் ஆலோசனையின் பேரில் தாம் நடப்பதாகவும் கூறப்படுவதை மறுத்ததோடு முன்பு அப்படி சிறு கோஷ்டிகள் இயங்கியது உண்டு என்றும், ஆனால் தற்போது அப்படி எதுவும் இல்லை என்றும் மனம் திறந்து கூறியது மக்கள் மத்தியிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவியது.

மேலும் டெல்லியிலே தொழிலாளர் கூட்டம் ஒன்றிலே பேசிய இந்திராகாந்தி, நெருக்கடி நிலையின் போது தொழிலாளர்களுக்குத் தான் போனஸ் தர மறுத்தது தவறுதான் என்பதை ஒப்புக் கொண்டு உரையாற்றினார். மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், விவசாயக் கடன் வசூலைத் தள்ளிப்போட வேண்டும், வரி பாக்கிக்காக ஜப்தி செய்யக் கூடாது என்பது போன்ற ஒன்பது கோரிக்கைகளை முன் வைத்துத் தமிழக விவசாய சங்கத்தினர் 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் வாரத்தில் போராட்டம் ஒன்றைத் தொடங்கினார்கள் 8.4.78 அன்று இரவு தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவரான நாராயணசாமி நாயுடு திண்டுக்கல்லில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியம் கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ஆற்காடு மாவட்டம் போளூர் அருகே சாலையில் குறுக்கே தடைகளை வைத்துப் போக்குவரத்தைத் தடை செய்ததாகக் கூறி அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் 17 பேருக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விவசாயிகளின் போராட்டத்தையொட்டி வேடசந்தூர் பகுதி முழுவதும் ஆயுதமேந்திய போலீசார் ஏராளமாக வரவழைக்கப்பட்டுக் குவிக்கப்பட்டனர். பகல் 1.30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரத்தைத் தாண்டியது. கூடிவிட்ட விவசாயிகளைக் கலைக்க, காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் போலீசார் மீது கற்களை வீசினர். போலீசார் விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நான்கு விவசாயிகள் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார்கள். ஒருவர் மருத்துவ மனைக்குச் செல்லும் வழியிலே இறந்தார். காசிப்பாளையம் சுப்ரமணியம், அய்யா கவுண்டன்பட்டி சின்னசாமி, விடுதலைப்பட்டி சின்னசாமி, நாவலூர் நாச்சிமுத்து மற்றொரு அடையாளம் தெரியாத நபர் ஆக ஐந்துபேர் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக உயிர் இழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விவசாயிகள் போராட்டம் காரணமாகத் தமிழக அரசு இராணுவத்திற்கு அழைப்பு விடுத்து, தமிழகம் முழுவதும் இராணுவம் வந்து குவிந்தது. கோவையில் விவசாயிகள் போராட்டம் காரணமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதைக் கண்டித்து ஒருநாள் முழுவதும் கடையடைப்பு நடத்தப்பட்டது. பெரிய நாயக்கன்பாளையம், மதுக்கரை ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் பேருந்துகளை ஓட்ட முயன்ற போது, கல் வீச்சுக்கு ஆளாயினர். இரண்டு பேருந்துகள் முழுவதுமாகச் சேதமடைந்தன.

சேலம் அருகே வெண்ணந்தூரில் அரசு ஜீப் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட இராணுவ லாரிகள் வலம் வந்தன. 11.4.78 அன்று வடஆற்காடு மாவட்டம் ஒடுகத்தூரில் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றது. இதில் ஒருவர் மரணமடைந்தார். ஆண்டிப்பட்டியில் 64 பேரும், வடஆற்காட்டில் 110 பேரும், மற்றப் பகுதிகளில் 229 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப் பூர்வமாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து 11.4.78 அன்று நான் விடுத்த அறிக்கையில் "விவசாயிகளின் போராட்டத்தை அரசாங்கம் உரிய நேரத்தில் அக்கறையுடன் கவனித்திருந்தாலோ அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலோ இத்தகைய தொடர்ச்சியான கிளர்சசிகளைத் தவிர்த்திருக்க முடியும் என்றே அனைத்துக் கட்சித் தலைவர்களும் கருதுகின்றனர். விவசாயிகள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு குழுவினைத் தமிழக அரசு அமைத்தது.

அந்தக் குழுவின் பரிந்துரைகள் வருவதற்கு முன்பே, விவசாயிகளிடம் ஜப்தி, மின்சாரத் துண்டிப்புப் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதைக் குறை கூறி அந்தக் குழுவிலிருந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் விலகிக் கொண்டு தங்கள் பிரச்சினை பற்றி ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துப்போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் இதையும் நான்தான் தூண்டி விடுவதாக அ.தி.மு.க. அமைச்சர்கள் கூறுகிறார்கள். கழகம் எந்தப் போராட்டம் நடத்துவதாக இருந்தாலும் முன்கூட்டி அறிவிப்பு விட்டு அறப்போராட்ட முறையில்தான் நடத்தும் என்பது நாடறிந்த உண்மை.

இந்தக் கிளர்ச்சியை நாங்கள் தூண்டி விடுகிறோம் என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும். இப்படி எதிர்க்கட்சிகளின் மீது வீண் பழி சுமத்துவதில் அக்கறை காட்டாமல் விவசாயிகளின் பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதில் அரசு அக்கறை காட்டுமானால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்" என்று தெரிவித்தேன்.

11.4.78 அன்று திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி, ஓடைப்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆரோக்கியசாமி என்பவர் கொல்லப்பட்டார். வடஆற்காடு, சேலம் மாவட்டங்களிலே சாலைகளிலே எழுப்பப்பட்ட தடைகளை அகற்ற முடியவில்லை. விவசாயிகளின் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியதால் தலைமைச் செயலகத்திலே அவசர அவசரமாக அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டம் கூட்டப்பட்டு நிலைமைகள் விவாதிக்கப்பட்டன.

பூவிருந்தவல்லி அருகே மிகப்பெரிய மரங்கள் சாலைகளின் குறுக்கே வெட்டிப் போடப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைப்பட்டது. செய்தியாளர்

கள் இப்பிரச்சினை பற்றி மீண்டும் என்னைச் சந்தித்துக் கேட்டபோது, "இந்தப் பிரச்சினையில் மேலும் அரசு பிடிவாதம் காட்டுவதும், கௌரவப் பிரச்சினையாகக் கருதுவதும் திசை திருப்புகின்ற முறையில் எதிர்க்கட்சிகளின் மீது அரசியல் நோக்குடன் பழி சுமத்துவதும் வருந்தத் தக்கது. விவசாயிகளின் போராட்டம் திடீரெனக் குமுறி எழுந்தமைக்கும் அதைத் தடுப்பது தவிர்க்க முடியாமல் போனதற்கும் என்ன காரணம் என்பதையும் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசின் அணுகுமுறை எவ்வாறு இருந்தது என்பதையும் ஆராய்ந்து நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற வகையில் ஒரு நீதி விசாரணைக் குழுவுக்கான ஏற்பாட்டை அரசாங்கம் உடனடியாகச் செய்திட வேண்டும்.

அந்தக் குழுவில் ஒரு நீதிபதியும், பொது மக்களின் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும்" என்றும் கூறினேன். விவசாயிகள் கிளர்ச்சியைத் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் பகுதிகளையும், துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்ற இடங்களையும் பார்வையிட்டு ஆங்காங்கேயுள்ள விவசாயப் பெருங்குடி மக்களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து தி.மு.கழகத் தலைமைக்கு அறிக்கை தருவதற்காக தி.மு. கழகத் தலைமை, நிலைய ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக்குழுவில் கழகப் பொருளாளர் சாதிக், அன்பில் தர்மலிங்கம், மு.கண்ணப்பன், புலவர் கோவிந்தன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, கோ.சி.மணி, அக்கினிராஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு நீதி விசாரணை இல்லை என்றும், இலாகா பூர்வமான விசாரணை மட்டுமே நடைபெறப் போவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 24, 25 ஆகிய நாட்களில் விவசாய சங்கத்தலைவர்களுடன் முதல்வர் எம்.ஜி.ஆர்.

பேச்சுவார்த்தை நடத்தினார். 25ஆம் தேதிய பேச்சுவார்த்தைக்காகத் தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்த நாராயணசாமி நாயுடுவிற்கு அங்கேயே நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அங்கேயே தலைமைச் செயலக மருத்துவர் முதல் சிகிச்சை அளித்து, பின்னர் சென்னை அரசு பொது மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டார். விவசாய சங்கத் தலைவர்களும், முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மற்றும் அமைச்சர்களும் பலமுறை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் பிரச்சினை தீரவில்லை.

விவசாயிகளின் பிரச்சினை பற்றி தி.மு.கழகத்தின் சார்பில் கலந்து பேசி முடிவெடுக்க 19.4.78 அன்று சென்னையில் கழகத்தின் தலைமைச் செயற்குழு கூடியது. தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட விவசாயிகள் போராட்ட ஆய்வுக் குழு போராட்டம் நடைபெற்ற பகுதியிலே சென்று நடத்திய ஆய்வு பற்றிய அறிக்கையைச் செயற்குழு முன்னால் வைத்தனர். அந்த அறிக்கையில் அரசின் அடக்குமுறைதான் போராட்டத்திற்குக் காரணம் என்று தங்களது முடிவுரையிலே குறிப்பிட்டிருந்தார்கள்.

மேலும் பல இடங்களிலே முன் அறிவிப்பின்றித் தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிப் பிரயோகங்கள் நடத்தப்பட்டன என்றும், விவசாயக்கடன் பாக்கிக்காக விவசாயிகளின் வீட்டிலுள்ள வானொலிப் பெட்டி, சுவர்க்கடிகாரம், எருமை மாடுகள் முதலியவைகளை ஜப்தி செய்த காரணத்தினால்தான் விவசாயிகள் மத்தியில் போராட்ட உணர்வு ஏற்பட்டதாகவும் கழக ஆய்வுக் குழு கூறியது. அந்த அறிக்கையைச் செயற்குழு விவாதித்து, விவசாயிகளின் போராட்டத்திற்கான காரணங்களை ஆராய உயர்நீதிமன்ற நீதிபதியும், பொது மக்கள் பிரதிநிதிகளும் கொண்ட ஒரு விசாரணைக்குழுவை அரசு அமைக்க வேண்டுமென்றும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையிலே இருக்கக்கூடிய விவசாயிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றியது.

23.4.78 முதல் ஒரு வாரத்திற்கு தி.மு.கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் அடக்குமுறை கண்டனக் கூட்டங்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகள் கிளர்ச்சிக்கு மூன்று மாத காலம் வரையில் நல்ல தீர்வுகாண அரசு முன்வரவில்லை பின்னர்க் கண்ட தீர்வும் வெறும் கண்துடைப்புத் தீர்வாகவே அமைந்தது.