உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/"நெற்றிக்கண்ணைத் திறந்தாலும்..."
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

"நெற்றிக்கண்ணைத் திறந்தாலும்..." · 254 / 391

38. "நெற்றிக்கண்ணைத் திறந்தாலும்..." ஒரு மணவிழாவிலே கலந்து கொள்ளவும் சிறப்புக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவும் 1978-ஏப்ரல் 2-ஆம் தேதி மதுரைக்குச் செல்வதாக அறிவித்திருந்தேன். நான் மதுரை செல்லும் போது எனக்குக் கறுப்புக் கொடி காட்டப் போவதாகக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ப.நெடுமாறன் அறிவித்திருந்தார். மதுரை ஏடுகளிலே அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு உடனே எஸ்.எஸ்.தென்னரசு என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தார்.

காங்கிரசாரின் இந்த அறிவிப்பு கழகத் தோழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் தென் மாவட்டக் கழகச் செயலாளர்கள் எல்லாம் தன்னிடம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், காங்கிரசாரின் கறுப்புக் கொடியைச் சந்திக்க தி.மு. கழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார். உடனே 31.3.78 தேதியிட்ட முரசொலியில் "மதுரைக்கு வருகிறேன்" என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதினேன். மதுரை இந்திரா காங்கிரஸ் சார்பில் வெளியிட்ட அறிக்கையிலே "ஆயிரமாயிரம் வாஞ்சிநாதர்கள் நம்மிடம் உண்டு என்பதை நிலை நாட்டும் வகையில் விரைந்து வருக" என்று எழுதப்பட்டிருந்தது.

எதற்காக வாஞ்சிநாதன் என்று குறிப்பாக எழுதியிருந்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று தியாகியான வாஞ்சிநாதன்களாக மாறவேண்டுமென்ற விருப்பத்தின் காரணமாக அப்படி அந்த அறிக்கையிலே வெளியிட்டிருந்தார்களோ என்னவோ? எனவே "மதுரைக்கு வருகிறேன்" என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தை முடிக்கும் போது "உடன்பிறப்பே மதுரைக்கு வருகிறேன்! சென்னையிலிருந்து விடைபெற்றுக் கொண்டு மதுரைக்கு வருகிறேன்.

உயிர் வெல்லமெனக் கருதுகிறவன் பொதுவாழ்வுக்குத் தகுதியற்றவன், என்று போதித்த பெரியாரின் தொண்டன் நான்! எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற பேரறிஞர் அண்ணாவின் தம்பி நான்! விழுப்புண்களை விரும்பியேற்று மனம் தளராது கழகம் நடத்தும் உன்னை; உடன்பிறப்பாகப் பெற்றவன் நான்! எனவே மதுரை நிகழ்ச்சிகளைக் கட்டுப்பாடு குலையாமல் வன்முறைகட்குச் சிறிதும் உள்ளத்தில் இடம் தராமல் - அதே நேரத்தில் உறுதி குலையாமல் நாம் நடத்திடுவோம்" என்று எழுதினேன்.

இந்தக் கறுப்புக்கொடிப் போராட்டம் பற்றித் தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் அவர்கள் நெடுமாறனுக்குக் கொடுத்த தந்தியில் "உங்களுடைய ஆர்ப்பாட்ட அறிவிப்புப் பற்றிக் கட்சி மேலிடத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டது. அத்தகைய கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தேவையற்றது எனக் கருதப்படுகிறது. எனவே ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு விடுங்கள்" என்று தெரிவித்தார்.

கறுப்புக்கொடிப் போராட்டத்தைக் கைவிடும்படி இந்திரா காந்தியும் நெடுமாறனுக்குத் தந்தி அனுப்பினார். எனினும் கருப்புக்கொடி காட்டுவது உறுதி என்று நெடுமாறன் குழுவினர் அறிவித்தனர். மதுரைக்கு நான் எப்போது சென்றாலும் ஒவ்வொரு முறையும் முதல் முறையை விஞ்சிடத்தக்க விதத்திலே தான் வரவேற்பிருக்கும். ஆனால் இந்த முறையோ காங்கிரஸ்காரர்கள் கறுப்புக் கொடி எனக்குக் காட்டப் போவதாக அறிவித்த காரணத்தால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள் அனைவரும் மதுரையில் முதல் நாளே வந்து குவிந்து விட்டதாகவும் மதுரை புகைவண்டி நிலையத்தில் இறங்கி காருக்குச் செல்வது கடினம் என்பதால் கொடைரோட்டிலேயே இறங்கிவிடலாம் என்றும் தென்னரசு தொலைபேசியில் கூறியபோது காவேரி மணியம், பொன்முத்துராமலிங்கம் போன்ற முக்கிய நண்பர்களுக்கு மட்டும் கொடைரோட்டில் இறங்குகின்ற செய்தியைத் தெரிவிக்க வேண்டுமென்றும் அது தவிர கொடைரோட்டில் புகை வண்டி நிலையத்திலே வரவேற்பு வேண்டாமென்றும் கூறினேன்.

சென்னையிலிருந்து நான் புறப்படும் போதே என்னுடன் தாங்களும் கட்டாயம் வரப் போவதாகக் கூறிக் கொண்டு மன்னை நாராயணசாமி, ஆற்காடு வீராசாமி, சீத்தாபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.செல்வராசன், து.புருசோத்தமன், தி.சு.நல்லதம்பி, மருதூர் இராமலிங்கம் ஆகியோர் உடன் வந்தனர். இவர்களைத் தவிர இரவோடிரவாக காரிலேயே டி.ஆர்.பாலு மற்றும் அண்ணாநகர் கழகத் தோழர்கள் சா.முத்து, சு.வே.தெட்சிணாமூர்த்தி, ராமமூர்த்தி, ஜி நடராஜன், பெருமாள் ஆகியோர் மதுரை வந்தனர்.

புகைவண்டியில் சென்ற என்னை அன்றிரவு முழுவதும் தூங்கவிடவில்லை. வழியிலேயே அனைத்துப் புகைவண்டி நிலையங்களிலும் கழகத் தோழர்களின் கூட்டம்! வாழ்த்து முழக்கங்கள்! என்னைக் காண வேண்டுமென்ற துடிப்பு! உடன் வந்த உதவியாளர் அவர்களுக்குச் சமாதானம் கூற முடியாமல், என்னை எழுப்புவதற்கும் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கையில் நானே எழுந்து வந்து கழகத் தோழர்களுடன் ஓரிரு நிமிடம் இருந்து விட்டு உள்ளே சென்று படுப்பதுமாக இருந்ததில் கொடை ரோடு வந்து விட்டது.

மதுரை புகைவண்டி நிலையத்தில் இறங்க முடியாது என்பதால் கொடைரோட்டில் இறங்கத் திட்டமிட்டோம். ஆனால் கொடை ரோடு புகைவண்டி நிலையமே மதுரை புகைவண்டி நிலையமாக ஆகிவிட்டது. காலை 5 மணிக்கு கொடை ரோடு செல்ல வேண்டிய பாண்டியன் துரித வண்டி துரிதத்தை இழந்து 7 மணி அளவில்தான் கொடை ரோடு சேர்ந்தது. புகைவண்டி நிலையத்தில் தென்னரசு தா.கிருட்டினன், காவேரி மணியம், பொன். முத்துராமலிங்கம் மலைக்கண்ணன், வை.கோபால் சாமி, அக்னிராஜ், தங்கபாண்டியன், சுப.தங்கவேலன், மதுரை தாவூத், புதுக்கோட்டை பெரியண்ணன், காடுவெட்டி தியாகராஜன், வழக்கறிஞர் இராமநாதன், துரை மாணிக்கம், பழனி கிருஷ்ண மூர்த்தி, திண்டுக்கல் பொன்.சீனிவாசன், மற்றும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கழகத் தொண்டர்கள் முன்னணியினர்.

கொடை ரோட்டில் இரகசியமாக இறங்கி மதுரைக்குச் செல்வதாக ஏற்பாடு செய்திருந்த போதிலும் மதரை சென்றடையும் சாலையின் இரு மருங்கிலும் திரண்டிருந்த உடன்பிறப்புகளின் வாழ்த்துக்களை ஏற்றவாறு மதுரைக்குள் நுழைந்தேன். மதுரையிலோ தென் மாவட்டங்களே திரண்டிருந்தன. மதுரையிலே காலையில் பழக்கடை பாண்டி இல்ல மணவிழாவிலே கலந்து கொண்டேன். சிறப்புக் கூட்டத்தில் அன்றைய தினம் நான் பேசுவதற்குத் தரப்பட்ட தலைப்பு "நெற்றிக்கண்ணைத் திறந்தாலும்..."

என்பதாகும். சிறப்புக் கூட்டம் கலையரங்கத்திலே நடைபெறுவதாகத் தான் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பொதுக் கூட்டமாகத்தான் நடத்திட முடிந்தது. சிறப்புக் கூட்டத்திற்காக யாரிடமும் நிதி வசூல் முன் கூட்டிச் செய்யப்படவில்லை. நுழைவுக் கட்டணம் மூலமாக மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் வசூலானதாகத் தெரிவித்தார்கள். அதில் செலவு போக உள்ள தொகை கழக வளர்ச்சி நிதிக்காகவும் மதுரை நகர் மாவட்டக்கழகக் கட்டிட நிதிக்காகவும் தரப்பட்டது.

இதே நிகழ்ச்சியில் மேடையில் தென்னரசு தான் எழுதிய "தென் இந்தியாவின் போர்வாள் - கலைஞர்" என்ற நூலை வெளியிட்டு, முதல் பிரதியை என்னிடம் அளித்தார். கூட்டத்திற்கு மதுரை மாநகர் பொறுப்புக் குழுத்தலைவர் காவேரிமணியம் தலைமை வகித்தார். கூட்டத்தில் தீப்பொறி ஆறுமுகம், சக்தி கோதண்டம், தென்னரசு, அக்னிராஜ், தாவூத், மலைக்கண்ணன், மலைச்சாமி, தங்க பாண்டியன், எம்.எஸ். வெங்கடாசலம், கா.மு.கதிரவன், பொன். முத்துராமலிங்கம், திரவியம், பெரியண்ணன், ஆர்.டி.சீத்தாபதி, வை.கோபால்சாமி, பி.டி.ஆர்.பழனிவேல் ராசன், மன்னை நாராயணசாமி ஆகியோர் உரையாற்றினர்.

ஆற்காடு வீராசாமி, "சட்ட சபையில் எம்.ஜி.ஆர்." என்ற தலைப்பிலே பேசினார். இறுதியாக நான் உரையாற்றினேன். அந்தக் கூட்டத்தில் பேசும்போது வை.கோபால்சாமி, "நெல்லை மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான 'வாஞ்சிநாதன்கள்' வந்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

அதுபற்றி என் பேச்சிலே குறிப்பிடும்போது "கோபால்சாமி நெல்லை மாவட்டத்திலிருந்து வாஞ்சிநாதன்கள் வந்திருக்கிறோம் என்றார். வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வரலாறு நமக்குத் தெரியும். நான் சொல்வேன் - தேவை "வாஞ்சிநாதன்கள்" அல்ல; "வாஞ்சைநாதன்கள்" தான் தேவை. என் மீது வாஞ்சை கொண்ட நாதன்கள் மட்டுமல்ல; நான் சார்ந்துள்ள கொள்கையின் மீது வாஞ்சையுள்ள நாதன்கள் - அண்ணாவின் இலட்சியத்தின் மீது வாஞ்சையுள்ள நாதன்கள் - பெரியாரின் இலட்சியத்தியன் மீது வாஞ்சையுள்ள நாதன்கள் தான் தேவை" என்றேன்.

"நெற்றிக் கண்ணைத் திறந்தாலும்" என்ற தலைப்பைப் பற்றிக் குறிப்பிடும் போது நான் மதுரையில் உங்கள் மத்தியிலே இப்படியெல்லாம் பேசுகின்ற காரணத்தால் டெல்லியின் நெற்றிக்கண் இன்னும் கூடத் திறக்கப்படலாம். நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரன் பரம்பரைதான் தி.மு.கழகத்தின் பரம்பரை. நெற்றிக்கண் கதை என்ன? பரமசிவன் மனைவி பார்வதியின் கூந்தலுக்கு உள்ள மணம் இயற்கை மணமா? செயற்கை மணமா?

என்பது கேள்வி. இந்தக் கேள்வி எப்படி வந்தது என்றால், வசந்த மண்டபத்தில் அருகே அமர்ந்திருந்த மகாராணியின் கூந்தலிலிருந்து வந்த மணம் இயற்கை மணமா என்ற சந்தேகம் மன்னனுக்கு ஏற்பட்டது. அந்தச் சந்தேகத்தை அவரே தீர்த்துக் கொண்டிருக்கக் கூடாதா? அதற்காக விவாதமே நடந்தது. அதில் பரமசிவன் புலவனாக வரவேண்டிய கட்டாயம் இறுதியில் ஏற்பட்டது. நக்கீரன் "பெண்கள் கூந்தலுக்குச் செயற்கை மணம்தான்; இயற்கை மணம் கிடையாது" என்றான்.

சிவபெருமான ஏற்கனவே இயற்கை மணம் உண்டு என்று தருமி வாயிலாக, தவறாகச் சொல்லிவிட்டான். நக்கீரன் மறுக்கிறான். தான் சொன்னதைச் சாதாரண மனிதன் மறுப்பதா என்று ஆண்டவன் நினைக்கிறான். இந்திராகாந்திக்கு வரவில்லையா நம்மீது கோபம். நான் பிரதமர், நான் நெருக்கடிக் காலப்பிரகடனம் செய்கிறேன்: அதைச் சாதாரண முதலமைச்சர், சாதாரண கருணாநிதி, சாதாரண தி.மு.கழகம் மறுப்பதா என்று கேட்டார்கள் அல்லவா? சர்வாதிகாரமா? ஜனநாயகமா?

எது சிறந்தது என்ற பிரச்சினைக்குப் போகாமல் எப்படி இந்திராகாந்தி செயல்பட்டரோ, அதைப் போலத் தான் இயற்கை மணமா, செயற்கை மணமா, எது உண்மை என்ற பிரச்சினைக்குப் போகாமல் சிவபெருமான் செயல்பட்டார் என்பது மதுரையில் நடந்த கதை. நக்கீரன் உறுதியாக மறுக்கிறான்; நெற்றிக் கண்ணைத் திறப்பேன் என்கிறார் சிவபெருமான். "நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே" என்கிறான் நக்கீரன். "ஆட்சியைக் கலைப்பேன்" என்றார்கள் - ஆட்சியைக் கலைத்தாலும் சரி நீங்கள் நடத்துவது சர்வாதிகாரம்தான் ஜனநாயகமல்ல என்றோம் நாம்" என்று குறிப்பிட்டேன்.

மேலும் மதுரைக் கூட்டத்திலே என்னுடைய பேச்சை முடிக்கும் போது "இந்திராகாந்தி பிறப்பித்த அவசர காலச் சட்டம் சர்வாதிகாரத்திற்கு வழி வகுப்பதுதான் - கொடுமை நிறைந்ததுதான் - இதைச் சொல்ல நாங்கள் தயங்க மாட்டோம். வரவர இந்திராகாந்தி அம்மையாரே அதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருகிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது" என்று கூறினேன்.

இதற்கு மறுநாள் - அ.தி.மு.க. அரசு சார்பிலே நடத்தப்பட்ட கைத்தறிக் கண்காட்சி விழா ஒன்றிலே கலந்து கொள்ள வந்த மத்திய தொழில் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களைச் சந்தித்த செய்தியாளர்கள், என் மதுரை பேச்சுப் பற்றிக் கேட்டபோது பெர்னாண்டஸ் "திருமதி இந்திராகாந்தி ஒரு பாஸிஸ்ட் என்பதை திரு. கருணாநிதி நன்கு உணர்ந்தவர். எனவே இந்திராகாந்தியை ஆதரிக்கும் வகையில் எதையும் அவர் செய்ய மாட்டார்" என்று கூறினார்.

பெர்னாண்டஸ் அவர்களின் இந்தப் பதில் அனைத்து ஏடுகளிலும் வெளிவந்த காரணத்தினால் அதற்கு விளக்கம் தரவேண்டிய நிலையில் 11.4.78. தேதியிட்ட முரசொலியில் "பெர்னாண்டஸ் கவனத்திற்கு" என்ற தலைப்பிலே நான் எழுதிய கடிதத்திலே - இந்திராகாந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது தி.மு.க. தான் என்பதை நண்பர் பெர்ணான்டஸ் மறந்திருக்க நியாயமில்லை: இன்று ஜனதா அரசின் அமைச்சர்களாக இருக்கிற பலரும் மிசாக் கைதிகளாக இருந்தபோது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.கழகம் சூளுரைக் கூட்டங்கள் நடத்தியதையும், துண்டு அறிக்- கைகளை நாடு முழுவதும் பரப்பியதையும் இலட்சக்கணக்கான மக்கள் கூடிய மாநாடுகளை நெருக்கடிக் கால எதிர்ப்பு மாநாடுகளாக நடத்தியதையும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்தான் மறந்திருக்க முடியும்.

ஜனதா தலைவர்களின் நினைவாற்றலில் எனக்கு நம்பிக்கை இருப்பதால் அவர்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன். இந்திராகாந்தி அறிவித்த நெருக்கடி நிலையும், அதன் தொடர்பாக அதிகார வர்க்கம் செயல்பட்ட தன்மையும் குறிப்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளும் பாசிசத்தின் மறுபதிப்பு என்ற அளவில் தி.மு.கழகம் கருத்து அறிவித்து எதிர்ப்பினைக் காட்டியது. ஆனால் இப்போது நிலைமை என்ன?

பாசிசப் போக்கை வளர்க்கும் நெருக்கடி நிலை இப்போதில்லை. மிசா இல்லை. எனினும் அந்தப் பாசிச முறைப் படி அன்றைக்குத் தொடங்கப் பெற்ற விசாரணைகள், வழக்குகள், அதிகாரிகளை மிரட்டி வாங்கிய சாட்சியங்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அப்ரூவர்களாக்கும் மோசடிகள், குறிப்பிட்ட ஒரு கட்சியை ஒடுக்குகின்ற நோக்கம், அதற்காகக் கையாளப்படும் நடவடிக்கை அனைத்தும் இன்றைய ஜனதா ஆட்சியிலும் தொடர்கின்றனவா? இல்லையா? இந்திரா ஆட்சியில் விசாரணைக் கமிஷன் முன் நின்று குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்திலும் தண்டிக்கப்பட்டு, தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்த கூட்டத்திலே ஜனதா ஆட்சி மலர்ந்து, வழக்கு வாபஸ் பெறப்பட்டு - இன்றைக்கு "பாதல்" அவர்கள் பஞ்சாப்பின் முதலமைச்சராக இருக்கிறார்.

இவையனைத்தும் பாசிச ஆட்சியில் தொடரப்பட்டு வழக்குகள் என்றும் விசாரணைகள் என்றும் கூறி, எனவே மேல் நடவடிக்கை இல்லை என்று மத்திய அரசு வெளிப்படையாக அறிவித்தது. தி.மு.கழகத்தினர் மீது அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன், அதன் தொடர்பான வழக்குகளும் அந்த பாசிச காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேதானே தொடங்கின. அவர்களுக்கு ஒரு நியாயம்; மற்றவர்கட்கு ஒரு நியாயம் என்கிறதா மத்திய ஜனதா அரசு! பாதல் மீது வந்த விசாரணைகள், வழக்குகள் மட்டும் பாசிச ஆட்சியில் வந்தவை; தி.மு.க.

மீது வந்த விசாரணைகள், வழக்குகள் எல்லாம் பாசிச ஆட்சியில் வராதவை என்று வாதிடுகிறதா மத்திய அரசு? விசாரணைகளுக்கும், வழக்குகளுக்கும் அஞ்சி நடுங்கி நான் இதனை எழுதவில்லை. ஊருக்கு நியாயம் பேசுகிறவர்கள் சற்றுத் தங்களையும் திரும்பிப் பார்த்துக் கொள்ளவேண்டுமென்று உணர்த்துவதற்காக இதனைக் கூறுகிறேன். ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா, ஜார்ஜ் பெர்னாண்டஸ் முதலியவர்கள் எல்லாம் கடைந்தெடுத்த பாசிஸ்ட்கள் என்றும் கொலை வெறியர்கள் என்றும் கடுமையாக நெருக்கடிக் காலத்தில் எம்.ஜி.ஆர் பேசி ஏடுகளிலேயே வந்துள்ளன.

ஆனால் இப்போது ஜார்ஜ் பெர்னாண்டஸ், "எனக்கு எம்.ஜி.ஆரும் நண்பர்; கருணாநிதியும் நண்பர்" என்று கூறியிருப்பதைக் கண்டால் அரசியல் மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதையும் அவை தவிர்க்க முடியாதவை என்பதையும் அறிந்து கொள்ளலாம் என்றும் அந்தக் கடிதத்திலே விளக்கமாக எழுதியிருந்தேன்.

மதுரையில் நெடுமாறன் தலைமையிலே எனக்குக் கறுப்புக் கொடி காட்டுவதற்காக சுமா

ர் 500 காங்கிரஸார் ஊர்வலமாக வந்த போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலே கலந்து கொள்ள வந்த ஒருவரிடமிருந்து வேல், கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களை மதுரை தெற்கு வாசல் காவல்துறை அதிகாரி கைப்பற்றிதாகவும் ஏடுகளிலே மறுநாள் செய்தி பார்த்தபிறகுதான் அப்படியொரு நிகழ்ச்சி நடைபெற்றதாக எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் நான் மதுரையிலே தங்கியிருந்த அன்று ஒருநாள் முழுவதும் எந்த நிகழ்ச்சியிலும் யாரும் எனக்கு எதிரிடையாகக் கறுப்புக் கொடி காட்ட முன்வரவில்லை.

முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பது பற்றிய பிரச்சினையில் அவரே பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் வருமான வரிப் பாக்கிக்காக தான் பெரிய தொகையைச் செலுத்த வேண்டியிருக்கிறது என்றும் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பதால் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு வருமான வரியைச் செலுத்துவது இயலாத காரியம் என்றும் தன் வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்ள தான் மீண்டும் நடிக்க அனுமதி தரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பிரதமர் மொரார்ஜி தேசாய் எழுதிய பதிலில் எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்க தனது அனுமதி தேவையில்லை என்று கூறிவிட்டார். "உன்னை விட மாட்டேன்" என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பதற்கான படப்பிடிப்பில் 14.4.1978 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொள்வார் என்றும் அந்தப் படத்தில் கதாநாயகியாக லதா நடிப்பார் என்றும் தினத்தந்தியில் முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தி வெளியிடப்பட்டது. இதன்படி 14.4.78 அன்று பிரசாத் ஸ்டுடியோவில் நிதியமைச்சர் நாஞ்சிலார் தலைமையில் படத்தின் துவக்கவிழா நடைபெற்றது.

முதலில் இந்தப் படத்தின் துவக்க விழாவிற்குத் தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் தலைமை தாங்குவார் என்றுதான் அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஓ.வி.அளகேசன்; ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அது குறித்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தும் அரசால் அநீதி இழைக்கப்பட்டும் விவசாயிகள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் நடிப்பதும் அந்தப் படத்தி்ன் துவக்க விழாவிற்கு ஆளுநர் தலைமை வகிப்பதும் தமிழக மக்களின் வேதனையைக் கேலி செய்வதோடு அவர்களை இழிவுபடுத்துகின்ற செயலுமாகும் என்று தெரிவித்திருந்தார்.

என்ன காரணத்தாலோ ஆளுநர் படத்துவக்க விழாவிற்குச் செல்லவில்லை. அந்த விழாவிலே முதல்வர் உரையாற்றும்போது விழாவிலே கலந்து கொள்ள ஆளுநர் தயாராக இருந்ததாகவும், தான்தான் அவருக்குத் தர்ம சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டாமென்று கருதி வரவேண்டாமென்று கூறிவிட்டதாகவும் தெரிவித்தார். விழாவிலே தமிழக அமைச்சர்கள் அனைவரும் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். நாட்டுக்கு உதவும் நல்ல படங்களில் தான் தொடர்ந்து நடிப்பேன் என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அந்த விழாவிலே அறிவித்தார்.

இதுபற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகதீசன் என்பவர் முதலமைச்சர் பதவி அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் முழு நேரம் உழைக்கும் பணி. இதற்காக அவர் சம்பளம் வாங்குகிறார். எனவே அவர் திரைப்படத்திலே நடிக்கத் தொடங்கியிருப்பதால் முதலமைச்சர் பதவியை அவர் இழந்துவிட்டதாக அறிவிக்க வேண்டுமென்று கோரி ஒரு வழக்கினைத் தாக்கல் செய்தார். எனினும் அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்த படமும் வெளிவரவில்லை.