உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/விண்வெளிச் சாதனைகள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

விண்வெளிச் சாதனைகள் · 253 / 391

37. விண்வெளிச் சாதனைகள் பே ரவையிலே காவல்துறை மானியம் குறித்த விவாதம் இரண்டாம் நாளாக 17.3.78 அன்று நடைபெற்றது. அந்த விவாதத்திலே கலந்துகொண்டு உரையாற்றினேன். "30.10.1977 அன்று கிண்டிப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்துவதற்காக அரசாங்கம் சோமசுந்தரம் கமிஷனை நியமித்திருக்கின்றது. அந்தக் கமிஷனின் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, காவல்துறை மானிய கொள்கைக் குறிப்பில் - கட்டுக்கடங்காத ஆர்ப்பாட்டக்காரர்கள் தடை உத்தரவுகளை மீறிக் கூடியதாகவும் அவர்கள் கற்கள், சோடா புட்டிகள், கொடிக் கம்புகள், தடிகள் ஆகியவற்றால் காவல்துறையினரைத் தாக்கியதாகவும், முறையாக எச்சரிக்கப்பட்ட பின் கண்ணீர்ப் புகை பிரயோகிக்கப்பட்டதென்றும், அது பலன் தராததால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்றும் அச்சிட்டு அரசே வெளியிட்டிருப்பது முறைதானா?"

என்று நான் பேரவையிலே பேசும்போது கேட்டேன். இந்திராகாந்திக்குக் கறுப்புக்கொடி காட்டிய போராட்டத்தையொட்டிக் கைது செய்யப்பட்ட திராவிடர் கழகத்தலைவர் மணியம்மையாரிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் மரியாதை இல்லாமல் பேசியது பற்றியும் அது பற்றிய விவரங்களை அம்மையாரே விசாரணைக் கமிஷன் முன்னால் வாக்குமூலமாக எழுதிக் கொடுத்திருக்கிறார்கள் என்பது பற்றியும் தெரிவித்து அதுபற்றி விசாரித்து அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பேரவையிலே பேசும் போது கேட்டுக் கொண்டேன்.

குடித்துவிட்டு வன்முறைகளில் ஈடுபடுகிறவர்கள் இருந்தால் அவர்கள் மீது வழக்குகளைப் போட வேண்டுமென்றும், அவர்களைத் தவிர்த்த மற்ற குடி வழக்குகளை வாபஸ் வாங்கி விட வேண்டுமென்றும் ஒரு "அரசு ஆணை" பிறப்பிக்கப்பட்டிருப்பதைப் பேரவையிலே ஏற்கனவே நான் படித்துக் காட்டிய போது, முதலமைச்சர் எம்.ஜி.ஆர், "இது அதிகாரிகளால் அனுப்பப்பட்டு விட்டது" என்றார்.

உடனே நான் "இது உள்துறையிலிருந்து அனுப்பப்பட்ட ஆணை; இவ்வளவு பெரிய கொள்கை விஷயத்தில் முதலமைச்சரின் கையெழுத்துப் பெறாமல் எப்படி அனுப்பினார்கள்?" என்று கேட்டேன். அதுபற்றி விசாரித்து அறிவிப்பதாக முதலமைச்சர் கூறியிருந்தார். ஆனால் அறிவிக்கவில்லை; இன்று காவல்துறை மானியத்திற்கு அளிக்கும் பதிலுரையிலாவது அறிவிக்க வேண்டுமென்றும் எனது உரையிலே கேட்டுக் கொண்டேன். இறுதியாக என் பேச்சை முடிப்பதற்கு முன் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

தி.மு.கழக ஆட்சி மீது கொடுத்த 54 புகார்களில் 28 புகார்கள் மட்டுமே சர்க்காரியா கமிஷனால் விசாரிக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள 26 குற்றச்சாட்டுகளுக்கும் கூட விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதிவாரத்தில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின. அண்டை மாநிலமான ஆந்திராவிலே நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் இந்திராகாந்தியின் தலைமையிலே செயல்பட்ட காங்கிரஸ் 175 இடங்களையும் பிரமானந்த ரெட்டி தலைமையிலே செயல்பட்ட காங்கிரஸ் 30 இடங்களையும் கைப்பற்றின.

முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக முதலில் அறிவித்திருந்த ஜி.ராஜாராம் இந்திராகாந்தியின் ஆலோசனையின் பேரில் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்ததால், சென்னாரெட்டி முதலமைச்சராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற தேர்தலில் மொத்த இடங்களில் 288ல் ஜனதா கட்சி 98 இடங்களிலும் பிரமானந்த ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் 69 இடங்களிலும் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் 62 இடங்களிலும் இதரக்கட்சிகள் மற்ற இடங்களிலும் வெற்றி பெற்றன.

மாநில அளவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பது யார் என்பதில் குழப்பம் நிலவியது. இறுதியாகக் காங்கிரசும் இந்திரா காங்கிரசும் மகாராஷ்டிரத்தில் கூட்டு முன்னணி அரசாங்கம் அமைப்பது என்ற ஒரு உடன்பாட்டிற்கு வந்தன. முதலமைச்சராக மகாராஷ்டிர மாநிலக் காங்கிரஸ் தலைவர் வசந்த் தாதா பாட்டீல் பதவி வகிப்பதென்றும் துணை முதலமைச்சராக இந்திரா காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரிபுடே பதவி வகிப்பதென்றும் முடிவெடுத்து மாநில ஆளுநர் சாதிக் அலியை இரு தரப்பினரும் சந்தித்துத் தங்களுக்கு 150 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் தங்களை அமைச்சரவை அமைக்க அழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

அடுத்து மகாராஷ்டிர மாநில சட்டசபை ஜனதா கட்சித் தலைவர் உத்தம்ராவ் பாட்டீலும் மாநில ஜனதா கட்சித்தலைவர் எஸ்.எம். ஜோஷியும் கவர்னரைச் சந்தித்துத் தங்களுக்கு 145 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் தங்களைத்தான் அரசு அமைக்க அழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இறுதியாக ஆளுநர் சாதிக் அலி காங்கிரஸ் கட்சி அமைச்சரவை அமைக்க ஒப்புதல் அளித்ததின் பேரில் 7.3.1978 அன்று வசந்த் ராவ் பாட்டீல் முதல்வராகவும், என்.கே.திரிபுடே துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களிலே தேவராஜ் அர்ஸ் தலைமையிலே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தம் 234 இடங்களிலே இந்திரா காங்கிரஸ் 152 இடங்களிலும் பிரமானந்தரெட்டி தலைமையிலான காங்கிரஸ் வெறும் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. கர்நாடக மாநில முதலமைச்சராக மீண்டும் தேவராஜ் அர்ஸ் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்றார். மேகாலயாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மொத்தமுள்ள அறுபது இடங்களில் காங்கிரஸ் கட்சி 20 இடங்களிலும் மலைத்தலைவர்கள் கட்சி 16 இடங்களிலும் எச்.எஸ்.பி.டி.பி. கட்சி 14 இடங்களிலும் சுயேச்சைகள் பத்து இடங்களிலும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக இருந்த போதிலும் அமைச்சரவை அமைக்க அது எடுத்த முயற்சிகள் வெற்றி பெறாததால் தன் முயற்சியை இறுதியாகக் கைவிட்டது. அங்கே மலைத்தலைவர்கள் கட்சி, மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் கோரிக்கை அமல் மாநாடு ஆகிய மூன்று பிராந்திய கட்சிகளும் கூட்டணியாகச் சேர்ந்து அமைச்சரவை அமைத்தன.

அஸ்ஸாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 1952 முதல் ஆளும் கட்சியாகவே இந்த மாநிலத்தில் இருந்த காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தது. மொத்தம் 126 இடங்களில் ஜனதா 53 இடங்களிலும், காங்கிரஸ் 26 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 11 இடங்களிலும் இந்திரா காங்கிரஸ் 8 இடங்களிலும் மற்ற இடங்களில் இதரக் கட்சிகளும் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இந்தத் தேர்தல்களிலே பிரமானந்த ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்ததால், தோல்விக்குப் பொறுப்பேற்று அந்தக் கட்சியின் தலைவராக இருந்த பிரமானந்த ரெட்டி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

28.2.1978 அன்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில், பிரமானந்த ரெட்டியின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு, தற்காலிகத் தலைவராக ஸ்வரண்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற மேலவையில் (ராஜ்ய சபை) மூன்றில் ஒரு பங்கு இடங்களை (73) பூர்த்தி செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் மார்ச் 27 முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அந்தத் தேர்தலில் தமிழகத்தின் சார்பில் ஆறு இடங்கள் காலியாகி அந்த இடங்களுக்குப் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பும் வெளிவந்தது. அது போலவே தமிழகச் சட்டமன்ற மேலவைக்குச் சட்டப் பேரவை உறுப்பினர்களிலிருந்து ஏழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டது. தி.மு.கழகம் பேரவையில் 48 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த நிலையில் ராஜ்ய சபைக்கு ஒரு உறுப்பினரையும், சட்டமன்ற மேலவைக்கு ஒரு உறுப்பினரையும் தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பினைக் கொண்டிருந்தது.

அந்த இரண்டு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க தி.மு.கழக ஆட்சிமன்றக் குழு 12.3.1978 அன்று சென்னையிலே நடைபெற்றது. வாய்ப்புகள் இரண்டு பேருக்கு மட்டுமே என்ற போதிலும் கோரிக்கைகள் ஏராளமாக வந்தன. கழகத்தின் மூத்தவர்கள் தங்களது நீண்ட கால உழைப்பைப் பற்றியும் தியாகங்கள் செய்தவர்கள் தங்கள் தியாகங்களைப் பற்றியும் எழுதித் தங்களுக்கே வாய்ப்புத் தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். ஆட்சிமன்றக் குழு நீண்ட ஆலோசனைக்குப் பின் சேலம் மாவட்டக் கழகச் செயலாளரும் நெருக்கடி நிலை நேரத்தில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டவருமான வீரபாண்டி ஆறுமுகத்தைச் சட்டமன்ற மேலவை வேட்பாளராகவும் மாநில மாணவர் கழக இணை அமைப்பாளராகச் செயல்பட்ட வை.கோபால்சாமியை மாநிலங்களவைக்கு வேட்பாளராகவும் தி.மு.க.

சார்பிலே நிறுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. 13.3.1978 அன்று வை.கோபால்சாமி தனது வேட்பு மனுவை நான் முன் மொழிந்திட பேராசிரியர் வழி மொழிந்திடத் தாக்கல் செய்தார். வீரபாண்டி ஆறுமுகம் 14.3.78 அன்று தனது வேட்பு மனுவை நான் முன்மொழிந்திடத் தாக்கல் செய்தார். அதே ஏப்ரல் திங்களில் சென்னை பட்டதாரிகள் தொகுதி சார்பில் நடைபெறவிருந்த மேலவை உறுப்பினர் தேர்தலில் கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட மாணவர் தி.மு.க.

அமைப்பாளராக இருந்த மிசா. கணேசன் நிறுத்தப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ஆறு பேர்கள் மட்டுமே போட்டியிட்ட காரணத்தால், கழக வேட்பாளர் வை.கோபால்சாமி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக 18.3.78 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற மேலவைக்கு எட்டுப் பேர்கள் போட்டியிட்ட காரணத்தால் அதற்கு மட்டும் தேர்தல் நடைபெற்றுக் கழக வேட்பாளர் வீரபாண்டி ஆறுமுகம் வெற்றி பெற்றார். 1978ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 13 ஆம் நாள் டெல்லியிலே ஷா கமிஷன் தனது இடைக்கால அறிக்கையை மத்திய உள்துறையிடம் தாக்கல் செய்தது.

அந்தக் கமிஷன் அதுவரை விசாரித்த 25 குற்றச்சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளில் இந்திராகாந்தி குற்றவாளியே என்ற முடிவினைத் தெரிவித்திருந்தது. 1978 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கணக்கிடும்போது ரஷ்ய விண்வெளி வீரர்கள் யூர் ரொமான்கோ, ஜார்ஜ் கிரெஷ்கோ ஆகியோர் விண்வெளியில் 11.12.1977லிருந்து உலகைச் சுற்றி வலம் வரும் பாதையில் "சல்யூட்-6" என்ற விண்வெளிக் கலத்தில் விண்வெளியிலேயே 85 நாட்களுக்கு மேலாக இருந்தது ஒரு குறிப்பிடப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும்.

1973 இல் அமெரிக்க விண்வெளிவீரர்கள் எட்வர்ட் கிப்சன், ஜெரால்ட் கார், வில்லியம் ரோச் ஆகியோர் 84 நாட்கள் ஒரு மணி 16 நிமிடம். விண்வெளியில் இருந்து ஒரு சாதனையை ஏற்படுத்தியிருந்தார்கள். அந்தச் சாதனையை ரஷ்ய வீரர்களின் சாதனை விஞ்சியதால், அமெரிக்காவில் ஹூஸ்டன் விண்வெளி நிலையத்தில் உள்ள அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள் ரஷ்யாவின் விண்வெளி வீரர்களுக்குத் தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள்.

சோயுஸ் 28 என்ற விண்வெளிக்கப்பல் 3.3.78 அன்று சல்யூட் - 6 விண்வெளி ஆய்வு நிலையத்துடன் இணைந்தது. சோயுஸ் 28-இல் விளாடி மிர்ரெமெக் கர்னர் அலெக்ஸ் குபாரேவ் ஆகியோர் சென்று ஏற்கனவே சல்யூட் 6-இல் இருந்த இரண்டு விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். இந்த நான்கு விண்வெளிவீரர்களும் ஒன்றாகச் சேர்ந்து பரிசோதனையைத் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் எட்டு நாட்கள் அங்கிருந்து ஆய்வுகளை நடத்தி விட்டு மீண்டும் சோயுஸ் 28 கலத்தில் பத்திரமாகப் பூமிக்குத் திரும்- பினர்.

16.3.1978 அன்று 96 நாட்கள் விண்வெளியில் இருந்தோம் என்ற ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டு சோவியத் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பினர். தமிழ்நாடு ஜனதா கட்சியின் முதல் மாநில மாநாடு கோவை மாநகரில் 1978 ஆம் ஆண்டு 11,12 ஆகிய நாட்களில் நடைபெற்றது. 12-ஆம் தேதி மாநில மாநாட்டு நிறைவுரையில் பேசிய பிரதமர் மொரார்ஜி தேசாய் "இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இந்தித் திணிப்பு நடைபெறாது. இந்தப் பிரச்சினையில் தேசிய பொதுக்கருத்து ஏற்படும் வரை அரசாங்கம் கட்டாயமாக இந்தியைத் திணிக்கும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

நான் இந்தியைத் திணிக்க விரும்புவதாகவும் - ஜனதா கட்சி இந்தியைத் திணிக்க விரும்புவதாகவும் தமிழ் நாட்டிலும் மற்றும் சில பகுதிகளிலும் ஏராளமான பிரச்சாரம் நடைபெறுகின்றது. அந்தப் பிரச்சாரம் உண்மையில்லை. யார் மீதும் இந்தியைக் கட்டாயப்படுத்துவது என்ற பேச்சே இல்லை" என்று கூறினார்.

ஆனால் தொடர்ந்து அங்கே பிரதமர் மொரார்ஜி தேசாய் பேசியதுதான் ஐயத்திற்குரியதாக அமைந்தது. "இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற 17 மொழிகள் இருக்கின்றன. அம்மொழி மக்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள விரும்புகின்றனர். ஆகையால் அவர்களுக்கு ஒரு பொது மொழி தேவைப்படுகிறது. எல்லா மொழிகளும் சமமான முக்கியத்துவம் உள்ளவைதான். ஆனால் நமக்கு ஒரு பொதுவான இணைப்பு மொழி தேவைப்படுகிறது. எல்லா மொழிகளும் சமமான முக்கியத்துவம் உள்ளவைதான்.

ஆனால் நமக்கு ஒரு பொதுவான இணைப்பு மொழி தேவைப்படுகிறது. எந்த மொழியாவது இந்தியைக் காட்டிலும் அதிகப்படியான மக்களால் புரிந்து கொள்ளப்படுவதாக இருந்தால் அம்மொழியைப் பொதுமொழியாக ஏற்றுக் கொள்வதைப் பற்றி எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் மக்களில் ஐம்பதிலிருந்து அறுபது சதவிகிதத்தினரால் புரிந்து கொள்ளப்படும் ஒரே மொழி இந்தி மொழிதான்" என்று கூறினார்.

இந்தித் திணிப்பு இல்லை, இல்லவே இல்லை என்று கூறிக் கொண்டே இது போன்ற வகையிலே மறைமுகமாக இந்தியினைத் திணிப்பதற்கான எண்ணத்திலேதான் மத்தியிலே ஆட்சிக்கு வருபவர்கள் எல்லாம் இருந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு காங்கிரஸ் பிரிவினரும் சேர்ந்து ஆட்சி அமைத்த போதிலும்; காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக நியமனம் பெற்றிருந்த ஸ்வரண்சிங் பேசும் போது காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியாகத் தொடர்ந்து செயல்படு- மென்றும் சகலமட்டங்களிலும் உட்கட்சி ஜனநாயகம் பேணிக்காக்கப் படுமென்றும் கூறினார்.

அவர்களுடைய காரியக் கமிட்டி நிறைவேற்றிய தீர்மானத்திலே இந்திரா காங்கிரஸ் கட்சியும், ஜனதாக் கட்சியும் பிற்போக்கு பிராந்திய வகுப்பு வாதக் கட்சிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் காரியக் கமிட்டிக் கூட்டத்திலே பேசிய பலரும் இந்திராகாந்தியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். அந்தக் கூட்டத்திலே பேசிய சங்கர் தயாள் சர்மா இரண்டு காங்கிரஸ் கட்சிகளும் இணைப்பு என்பது சரணாகதி என்றும், உறுப்பினர்களின் சுயகௌரவப் பிரச்சினை என்றும், வருங்காலத்தில் இந்திரா காங்கிரஸ் சஞ்சய் காங்கிரஸ் ஆகிவிடும் என்றும் கூறினார்.

16.3.78 அன்று பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புப் பணிகள் குறித்த மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அ.தி.மு.க உறுப்பினர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவனாக இருந்த என்மீது ஒரு குற்றச்சாட்டைக் கூறினார்.

உடனே நான் எழுந்து இந்தக் குற்றச்சாட்டுப் பற்றி முதலமைச்சர் பேசும் போது விளக்கினால் எனக்கு உதவியாக இருக்கும் என்று கூறினேன். அதற்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் "கோப்புகளைப் பார்த்தது போல, மாதிரி என்று அந்தக் கருத்தினைச் சொல்லியிருக்கிறார். போல, மாதிரி என்பதெல்லாம், போலி என்பதன் மறுபெயர் என்று கூடச் சொல்லலாம். நான் அப்படி எடுத்துக் கொள்கிறேன். இருந்தாலும் உறுப்பினருக்கு இன்னமும் நேரம் இருக்கிறது.

அவர் சொல்லியதற்கு ஆதாரமில்லை என்றால் வருத்தத்தோடு திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது" என்றார். பேரவைத் தலைவர் முனு ஆதி அவர்கள் ஆதாரம் இருக்குமானால் அந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு பேச வேண்டுமே தவிர, இருக்கிறது, இருக்கிறது என்று சொல்லாமல் அந்த ஆதாரத்தை உடனடியாகக் காட்டினால் நான் தீர்ப்புச் சொல்லமுடியும். ஆகவே அந்த உறுப்பினர் அந்தப் பிரச்சினையில் எனக்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்றும் இப்போது அந்தப் பிரச்சினையை விட்டு விட்டு வேறு பிரச்சினையைப் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதற்கு முதலமைச்சர் எழுந்து, "நீங்கள், இதிலே தீர்ப்புக் கூறும்வரையில் இந்தச் செய்தி பதிவேட்டில் ஏற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கேட்டு அவ்வாறே பேரவைத் தலைவர் அவர்களும் உத்தரவிட்டார். இந்தப் பிரச்சினை பற்றி 20.3.1978 அன்று பேரவைத் தலைவர் தன் தீர்ப்பைக் கூறும் போது, "அ.தி.மு.க. உறுப்பினர் நாஞ்சில் வின்சென்டிடம் இதுபற்றி விளக்கம் கேட்டதற்கு - குற்றச்சாட்டைச் சொல்லி இது உண்மையா, பொய்யா என்பதை முதல்வர் கண்டுபிடிக்க வேண்டுமென்று தான் சொல்வதற்கு முன்னால் குறுக்கீடுகள் வந்து விட்டன என்று விளக்கமளித்திருக்கிறார்.

எனவே அவர் பேசியதற்குத் தகுந்த ஆதாரமில்லை என்பதுதான் தெளிவாகிறது. இது மாதிரி குற்றச்சாட்டை ஒருவர் மீது ஒருவர் சொல்லிவிட்டு - அவ்வாறு இருக்கின்றதா என்று சொல்லி அதிலிருந்து விலகிக் கொள்வதில் அவையின் கண்ணியம் காக்கப்படுவதில்லை என்று நான் கருதுகிறேன். அ.தி.மு.க. உறுப்பினர் தகுந்த ஆதாரங்கள் எனக்குக் காட்டவில்லையாதலால் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் பற்றிய குறிப்புகள் எல்லாம் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட வேண்டுமென்றும் உத்தர விடுகிறேன்" என்று தீர்ப்பளித்தார்.

தற்போது ஜாம்பியா என்றழைக்கப்படும் ரொடீசியாவின் வெள்ளை நிற ஆட்சியின் பிரதமரான இயான் ஸ்மித்துக்கும் நாட்டின் மிதவாத கறுப்பு இனத் தலைவர்கள் மூன்று பேருக்கும் இடையே கறுப்பு இன மக்களின் ஆட்சி அந்நாட்டில் ஏற்படுவது பற்றி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அடிப்படையில் இந்த ஒப்பந்தம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாகச் செயல்பட, கொரில்லா போர்முறையை மேற்கொண்டுள்ள புரட்சித் தலைவர்களான நிகோமா, ராபர்ட் முகாபே ஆகியோரின் ஆதரவைப் பெற வேண்டுமென்று வலியுறுத்தின.

இந்த இரண்டு தலைவர்களுமே அரசிலே தங்கள் கட்டுப்பாடு வரும்வரை அரசிற்கு எதிரான கொரில்லா போரினைத் தொடருவதாக அறிவித்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் 14.3.78 அன்று நடைபெற்றபோது ரொடீசியாவில் செய்யப்பட்ட ஒப்பந்தம் விவாதத்திற்கு வந்தது. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் 15 பேரில் ஐந்து பேர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மீதம் கலந்துகொண்ட பத்து உறுப்பினர்களுமே 10-0 என்ற வாக்குப்படி அந்த ஒப்பந்தம் ஏற்கத் தக்கதல்ல என்று அனுமதி மறுத்தனர்.

இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தம் ஒரு முன்னேற்றமான நடவடிக்கை என்று கருதிய போதிலும் கொரில்லா போர்முறையைக் கடைப்பிடித்து வரும் கறுப்பு இன விடுதலை இயக்கத்தினரின் ஒப்புதல் பெறாமல் ஒப்பந்தம் வெற்றி பெற இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். 1978 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்கர் சரண்சிங் "மிசா"ச் சட்டம் இரத்துச் செய்யப்படுமென்றும் அதற்கான தனி மசோதா கொண்டு வரப்படவிருக்கிறது எனறும் பலத்த கரகோஷத்திற்கிடையே அறிவித்தார்.

இந்த 'மிசா'ச் சட்டத்தின் கீழ்தான் ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காதவர்கள் என்று தோன்றிய அரசியல் தலைவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அந்த அநீதியை எதிர்த்து நீதிமன்றங்களை நாடும் அடிப்படையான சட்ட உரிமை கூட மறுக்கப்பட்டது. ஏன், நீதி தேவதையே அந்த இரண்டாண்டுக்ள 'மிசா'ச் சட்டத்திற்கு உட்பட்டுச் சிறையிலே இருந்தாள் என்பதை நாடறியும். இந்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தின் சிறையிலே அடைக்கப்பட்டிருந்த ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் இனி அவர்கள் 'மிசா' என்ற அடைமொழியுடன் தங்கள் பெயரையும் இணைத்து அழைக்கப்படுவார்கள் என்றே நான் குறிப்பிட்டிருந்தேன்.

அந்தச் சட்டம் 1978-இல் இரத்தானபோதிலும் கழகத்தினர் சிலருக்கு இன்னமும் அந்த 'மிசா' அடைமொழி அவர்களுடைய பெயரோடு ஒட்டிக் கொண்டு, கழகத் தோழர்கள் அழைக்கப்படுவதைக் காணலாம்.