உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/என்.ஜி.ஓ. போராட்டமும் மணியம்மையார்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

என்.ஜி.ஓ. போராட்டமும் மணியம்மையார் · 252 / 391

36. என்.ஜி.ஓ. போராட்டமும் மணியம்மையார் மறைவும் நெ ருக்கடி நிலையின்போது சென்னை சிறைச்சாலையில் நடைபெற்ற கொடுமைகள் பற்றி விசாரிப்பதற்காகக் குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது ஆளுநர் பட்வாரி அவர்களால் நியமிக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் அளித்த அறிக்கை சட்டப்பேரவையில் 1.3.1978 அன்று வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், 2.2.1976 அன்று இரவு தடுப்புக்காவல் கைதிகள் பயங்கரமாக அடிக்கப்பட்டனர் என்றும், அவ்வாறு அடித்தபோது சிறைச்சாலை கண்காணிப்பாளர் வித்யாசாகர், ஜெயிலர் கயூம், உதவி ஜெயிலர் செந்தூர் பாண்டியன், முதன்மை தலைமை வார்டன் சுருளிராஜன் ஆகியேர் அங்கிருந்தனர் என்றும், இதில் பாண்டியனும், சுருளிராஜனும் காவல் கைதிகளை அடித்தனர் என்றும், தடுப்புக் காவல் கைதிகளை அவரவர் கட்சிகளிலிருந்து விலகுவதற்கான கடிதங்களைக் கொடுக்குமாறு சிறை அதிகாரிகள் கடுமையாகக் கட்டாயப்படுத்தினர் என்றும், தடுப்புக் காவல் கைதிகள் தெரிவித்தது போலச் சிறை அதிகாரிகள் உணவில் கலப்படம் செய்தார்கள் என்றும், 5.1.1977 அன்று இறந்த சிட்டிபாபு மாரடைப்புக் காரணமாக இறந்தார் என்றாலும், கடுமையாக நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை பெற்று வருகையில் தடுப்புகளில் தடுப்புக்காவல் கைதியாக வைக்கப்பட்டது குறித்து எரிச்சலும் துன்பமும் மனக்கசப்பும் அடைந்ததால் சிட்டிபாபுவின் மனநிலை மேலும் பாதிக்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை என்றும் முடிவாகக் கூறப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையை எம்.ஜி.ஆர். அரசு முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்தும் அரசு தனியே ஆணை பிறப்பிக்கும் என்றும் அரசு சார்பிலே அவையிலே தெரிவிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு துவக்கத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரை இல்லாமலேயே நேரடியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் என்ற அளவிலே தொடங்கியது. ஆளுநர் உரை இல்லாதது பற்றி அனைத்து எதிர்க்கட்சிகளும் எடுத்துக் கூறியுங்கூட, ஆளுங்கட்சி அது பற்றிக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ஆளுநர் உரை இல்லாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறித்துத் தி.மு.க. சார்பில் ரகுமான்கானும், ஜனதா கட்சி சார்பில் ஜேம்ஸ் அவர்களும் உரிமைப் பிரச்சினை கொண்டு வந்தனர். அந்த உரிமைப்பிரச்சினை 2.3.78 அன்று அவையிலே எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஆளுங்கட்சி சார்பிலே அதற்குப் பதிலளித்த அவை முன்னவர், "எதிர்க் கட்சித் தலைவருக்கு கவர்னர் பற்றித் திட்டவட்டமான ஒரு கருத்து உண்டு; கவர்னர் பதவியே அனாவசியம் என்று கூறியிருக்கிறார்.

அதனால் கவர்னர் உரை இல்லாதது பற்றி வரவேற்பார் என்று நினைத்தேன்" என்றார். அதற்கு விளக்கம் அளித்த நான், "கவர்னர் பதவி வேண்டுமா என்ற கேள்விக்குத் தி.மு.கழகத்தின் பதில் வேறு; கவர்னர் பதவி இருக்கின்ற வரையிலே அதற்குரிய மரியாதை மரபுகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையே தவிர - கவர்னர் பதவி தேவையில்லை என்கிற தீர்மானத்தை இந்த அவையில் ஆளுங்கட்சி சார்பில் கொண்டு வந்தால், அதை ஏற்கின்ற முதல் கட்சியாகத் தி.மு.கழகம் இருக்கும்.

கவர்னர் உரை இப்போதில்லை என்று அறிவித்ததற்கு மாறாக எப்போதும் இருக்காது என்று அவர்கள் சொல்வார்களேயானால், நான் அதை ஆதரித்து இருப்பேன். ஆனால் 'நாங்கள் கவர்னர் உரையை இப்போது வைக்கவில்லை. செப்டம்பரில் வைக்கப் போகிறோம்' என்று கூறியிருப்பதால்தான் கொள்கையை அறிவித்துவிட்டு நிதிநிலை அறிக்கை கொண்டு வரப்பட வேண்டாமா என்று கேட்கிறேன்.

கவர்னர் பதவி இருக்க வேண்டும் என்ற எண்ணம் தி.மு.கவிற்கு கிஞ்சிற்றும் கிடையாது. கவர்னர் பதவி இல்லாவிட்டால் கவர்னர் உரையை ஆற்றுவது யார் என்ற கேள்வி எழுமானால் - அப்போது ஏற்படுகிற அரசியல் மாற்றங்களில் மாநில சுயாட்சி கிடைத்து விடுமானால் முதலமைச்சரே கூட - கவர்னர் உரைக்குப் பதிலாக 'முதலமைச்சர் உரை' என்கிற தலைப்பிலே அரசின் கொள்கைகளை அறிவித்தோ அல்லது பேரவைத் தலைவரே கூட அந்த உரையை ஆற்றியோ அதன் மீது விவாதங்களை நடத்தலாம்.

அதற்குப் பின் நிதிநிலை அறிக்கை வைக்கப்படலாம்" என்று கூறினேன். ஆனாலும் கவர்னர் உரை அந்த 1978-ஆம் ஆண்டுத் துவக்கத்தில்; ஆற்றப்படாமலேயே நேரடியாக நிதிநிலை அறிக்கை வைக்கப்பட்டு, அதன்மீது நடைபெற்ற பொது விவாதத்தில் 1.3.78 அன்று நான் உரையாற்றினேன். ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு மாற்றப்பட்ட ஆசிரியர்கள் பற்றியும், மக்கள் குழுவில் ஆளுங்கட்சியினரைச் சேர்க்க அதிகாரி அனுப்பிய பட்டியல் ஆதாரத்தையும், அமைச்சர் ஒருவர் பெயரிலே காலனி ஒன்றுக்குப் பெயர் வைக்கப்பட்டு, அதற்குக் குறிப்பாகக் குடிநீர் வழங்கவேண்டுமென்று அமைச்சரே அனுப்பிய ஆணை நகலையும், கட்சி வளர்ச்சி நிதிக்காக அமைச்சர்களே முன்னின்று கட்டாய நிதி வசூல் செய்தது பற்றியும், கட்டாய அறுவை சிகிச்சைக்கு ஆள் பிடிக்க அரசு அதிகாரிகள் கெடுபிடி செய்வது பற்றியும், ஆளுங்கட்சி ஏடான நாளிதழ் ஒன்றை வாங்காத கல்வி நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை பற்றியும், குதிரைப்பந்தயம் ஆட அமைச்சருடைய காரிலே சென்ற பெண் அமைச்சர் ஒருவரின் தாயார் மற்றும் அமைச்சரின் பாதுகாவலர் பற்றிப் புகைப்பட ஆதாரங்களையும், ஒவ்வொன்றாக எடுத்துக்கூறி, குதிரைப்பந்தய மைதானத்திலே எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவை முன்னவரிடம் அளித்தேன்.

அந்தப் புகைப் படங்களை ஒவ்வொரு அமைச்சராக வாங்கிப் பார்த்து முணுமுணுத்தனர். நான் ஒருமணி நேரம் உரையாற்றிய பிறகு, பேரவைத் தலைவர் நிதி அமைச்சரைப் பதில் கூறுவதாக அழைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் பேசி முடித்தவுடன் உடனடியாக ஆளுங்கட்சி சார்பிலே அன்றைய தினமே பதிலளிப்பது முறை என்ற போதிலும், ஆளுங்கட்சி தரப்பிலே மறுநாள் பதிலளிப்பதாகப் பேரவைத் தலைவரிடம் கேட்டுக் கொண்டதால் வழக்கமாகப் பகல் 2 மணிக்கு முடிகின்ற அவை அன்றைய தினம் ஒருமணிக்கே முடிந்தது.

அமைச்சரின் கார் குதிரைப்பந்தய மைதானத்திலே இருந்தது பற்றிய என்னுடைய குற்றச்சாட்டுக்கு சில நாட்கள் கழித்து 6.3.1978 அன்று அவை முன்னவர் நாஞ்சிலார், சம்பந்தப்பட்ட அமைச்சர் என்னுடைய குற்றச்சாட்டிற்குப் பதிலாக எழுதிய கடிதத்தை அவையிலே படித்தார், அதில், குறிப்பிட்ட நாளன்று அமைச்சர் வீட்டிலே இருந்த போது, அவருடைய தாயார் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியோடு குதிரைப்பந்தய மைதானத்திற்குச் சென்றது உண்மைதான் என்றும், அது வருந்தத்தக்க நிகழ்ச்சி என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும், வருங்காலத்தில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று வன்மையாகக் கண்டித்திருக்கிறேன் என்றும், தன் கவனத்திற்கு அப்பாற்பட்டு நடந்து விட்ட நிகழ்ச்சிக்குத் தன் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் எழுதியிருந்தார்.

இடைக்கால நிவாரணம் உட்படப் பல்வேறு கோரிக்கைகளுக்காகத் தமிழக அரசு அலுவலர்கள் சார்பில் என்.ஜி.ஓ. சங்கத்தினர் 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் திங்களிலே மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். தி.மு.க. சார்பில் பேரவையில் அந்தப் போராட்டம் குறித்துப் பேசிய கழக உறுப்பினர் க.சுப்பு, "அரசு அலுவலர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் ஒரு நிகழ்ச்சியிலே பேசும்போது, பொதுமக்களே அதைப்பார்த்துக் கொள்வார்கள் என்று கூறியது வன்முறையைத் தூண்டிவிடக்கூடியதாகும்; முதல்வரின் பேச்சின் தொடர்ச்சியாகத்தான், பட்டினப்பாக்கத்தில் அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் மீது சோடா பாட்டில் தாக்குதல் நடைபெற்றுள்ளது" என்றார்.

நான் பேசும் போது, "என்.ஜி.ஓ.வினரின் கிளர்ச்சியை மக்களை வைத்துச் சந்திப்பேன் என்று பேசியதற்கு முதல்வர் எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வெளியே பேசியதை ஜேம்ஸ் அவர்கள் நேரில் கேட்டதைப்போல, கழக உறுப்பினர் சிலரும் கேட்டிருக்கிறார்கள். அங்கு அவர் பேசும்போது தான் வீதிக்கு வருவேன் என்றும், போலீஸ் துணை நாடாமல் பொது மக்களை வைத்துச் சந்திப்பேன் என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு பேசுவது பிரச்சினையைத் தீர்க்க உதவாது.

கிளறிவிடத்தான் உதவும் என்ற வகையில் எங்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் வெளிநடப்புச் செய்கிறோம்" என்று கூறி வெளிநடப்புச் செய்தோம். வேலை நிறுத்தம் தொடர்ந்ததால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு அலுவலர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்தது. தேனாம்பேட்டை மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரேயுள்ள பரந்த வெளியில் அமைதியாக உட்கார்ந்திருந்த அரசு அலுவலர்கள் ஆளுங்கட்சி தூண்டுதல் காரணமாக பயங்கரமாகத் தாக்கப்பட்டார்கள்.

என்.ஜி.ஓ. சங்கப்பொதுச் செயலாளராக இருந்த சுப. சீத்தாராமன் சென்ற கார் மீது விபத்து ஏற்படுத்தவும் முயற்சி நடைபெற்றது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நடைபெற்ற அரசு அலுவலர்களின் அந்தப் போராட்டம் மார்ச் திங்கள் 15-ஆம் தேதி வரை நீடித்து, அதன் பின்னர் அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்ததின் பேரில் வேலை நிறுத்தத்தை என்.ஜி.ஓ. சங்கத்தினர் வாபஸ் பெற்றனர். பழம்பெரும் தேசியத் தலைவர்களில் ஒருவரான கோவிந்த வல்லப பந்த் அவர்களின் ஆறாவது நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் சஞ்சீவரெட்டி அவர்கள், "தேசிய வளர்ச்சியில் மத்திய மாநில அரசுகள் அண்ணன் தம்பிகளல்ல; இரண்டுமே கூட்டாளிகள் அதிகாரங்களையும், பொறுப்புகளையும் கிராமங்கள் வரை பரவலாக்க வேண்டும்.

அதிகாரக் குவிப்பு முறையால் ஒருசிலர் மட்டுமே அடிப்படை முடிவுகளை எடுக்கிறார்கள். ஒருமைப்பாட்டுக்கு வழி வகுப்பதில் முக்கியமான பங்கு வகிப்பது மொழி. இந்தி மொழி விஷயத்தில் அவசரமோ பொறுமை- யின்மையோ காட்டக்கூடாது. தங்களது விருப்பத்துக்கு மாறாக நாட்டின் எந்தப் பகுதியிலுள்ள மக்கள் மீதும் இந்தியைத் திணிக்கக் கூடாது. நவீன உலகின் பலகணி ஆங்கிலம். எனவே ஆங்கிலம் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும்" என்ற உரையாற்றினார்.

மொழி பற்றிக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டதைப் போன்றே பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களும் நாடாளுமன்றத்தில் 28.2.78 அன்று "எவர் மீதும் இந்தியைத் திணிக்கும் பேச்சே இல்லை" என்று ஒரு விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசுகையில் உறுதியளித்தார்.

தமிழ்நாட்டில் ஐந்தாவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1971 இல் என் தலைமையில் இரண்டாம் முறையாக அமைந்த தமிழக அமைச்சரவையில் 1972 ஜனவரி முதல் தேதியிலிருந்து 1975 மே 31 ஆம் தேதிக்கு உட்பட்ட இடைக்காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட - அதிகார அத்துமீறல்கள், நிர்வாக முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை கொடுப்பதற்காக உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணசாமி நாயுடு அவர்களைக் கொண்ட ஒரு நபர் விசாரணைக் கமிஷன் தமிழக அரசினால் 4.3.78 அன்று அறிவிக்கப்பட்டது. 1-ந் தேதி பேரவையிலே ஆளுங்கட்சியினர் மீது அடுக்கடுக்கான ஆதாரங்களோடு நான் சாட்டிய குற்றச்சாட்டுகளின் காரணமாக எடுக்கப்படும் பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்த விசாரணைக் கமிஷன் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

விசாரணைக் கமிஷன் நீதிபதியின் அன்றைய வயது 81. 1956-ஆம் ஆண்டே பதவியிலிருந்து ஓய்வு பெற்றவரைத் தேடிப்பிடித்து, ஆறு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை தர வேண்டுமென்ற ஆணையுடன் அந்தக் கமிஷன் அறிவிக்கப்பட்டது. 16.3.1978 அன்று, தந்தை பெரியார் அவர்களுக்குப் பின் திராவிடர் கழகத்தைத் தலைமையேற்றுச் சிறப்புடன் நடத்திச் சென்வரும், நாளெல்லாம் பகுத்தறிவுக் கொள்கை வழி நின்றவரும் ஆதிக்கப்புயல் எதுவானாலும் அதை எதிர்த்து நின்று போராடியவரும், கொள்கைக்கு முரணான அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்பதில் முனைப்புடன் செயல்பட்டவரும், அமைதியாக இயக்கத்தை நடத்தி வந்தவருமான அன்னை மணியம்மையார் இயற்கையடைந்தார்.

16-ந் தேதி காலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு, அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை தரப்பட்டும் பயனின்றிப் பிற்பகல் 1மணி அளவில் மறைந்தார். சட்ட மன்றத்தில் நாங்கள் எல்லாம் இருந்த போது பகல் 1.30 மணி அளவில் பேரவைத் தலைவர் எழுந்து மணியம்மையார் மறைவுச் செய்தியைக் கூறி ஒரு நிமிட நேரம் அமைதி கடைப்பிடிக்கக் கேட்டுக் கொண்டார். அவையும் அத்துடன் அன்று கலைந்தது. அங்கிருந்தே, நான், பேராசிரியர், சாதிக் மூவரும் மருத்துவமனைக்கு விரைந்தோம்.

பேரவைத் தலைவர், முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் அமைச்சர்களும் மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனையிலிருந்து மணியம்மையாரின் உடல் பெரியார் திடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மணியம்மையார் மறைவு குறித்து நான் விடுத்த இரங்கல் செய்தியில் - "மகளிர் குலமணி விளக்காகவும், அறிவியக்கத்தின் ஒளிச் சுடராகவும், தெளிந்த சிந்தனையும் திடமான நெஞ்சமும் கொண்ட வீராங்கனையாகவும் விளங்கியவர்கள் அன்னை மணியம்மையார் அவர்கள்!

பெரியாருக்குத் துணையாக இருந்து தன்மான இயக்கத்தையும், திராவிடர் கழகத்தையும் வளர்த்தார்கள் என்பது மட்டுமல்ல, பெரியாருக்குப் பிறகும் அவரது கொள்கைகளைக் காக்க ஓயாது உழைத்தார்கள். ஓய்வில்லாத பணிதான் அவரது உயிரையும் கொள்ளை கொண்டுவிட்டது. சென்ற வாரம் கூட அவர்களைச் சந்தித்து உரையாடி, ஓய்வு எடுத்துக்கொண்டு உடல்நலம் பேணுமாறு கேட்டுக் கொண்டேன். அன்னை மணியம்மையாரின் மறைவு செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகின்ற ஒன்றாகும்.

நமது தி.மு.கழகத்தின்பாலும், கழகத்தினர்; மீதும் அளவற்ற அன்புகொண்ட ஒரு தாய் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டோம். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணிக்கும், மற்றுமுள்ள நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைக் கழகச் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று எழுதியிருந்தேன்.

வேலூரில் கனகசபை - பத்மாவதி ஆகியோரது புதல்வியாய் 10.3.1917ல் பிறந்த மணியம்மையார், வேலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவகுப்புவரை படித்த பின், 1943 முதல் திராவிடர் கழக நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்றார். 1949இல் தந்தை பெரியாரின் வாழ்க்கைத் துணைவியானார். 23.12.1973 அன்று தந்தை பெரியார் மறைந்த பின், திராவிடர் கழகத்தின் தலைவரானார். இந்திராகாந்தி தமிழகம் வந்தபோது- அவரை எதிர்த்து நடைபெற்ற கறுப்புக் கொடிப் போராட்டத்தில் உடல் நலம் நலிவுற்றிருந்த நிலையிலும் அன்னை மணியம்மையார் கலந்து கொண்டு சிறை சென்றார்.

சிறையிலே உடல்நலம் கெட்டு - மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் விடுதலைசெய்யப்பட்டார். பேச்சுரிமையை நிலைநாட்டுவதற்காக 1947இல் மணியம்மையார் கும்பகோணத்தில் 144 தடையை மீறியமையும், பின்னர்த் தடைமீறி "பொன்மொழிகள்" என்ற நூலை வெளியிட்டு ஒரு திங்கள் சிறைவாசம் ஏற்றமையும் அவரது கொள்கைப் பற்றுக்கும் அஞ்சா நெஞ்சத்திற்கும் உதாரணங்களாகும்! அம்மையாரின் மறைவினையொட்டி, தி.மு.கழகம் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் ஒரு வார காலத்திற்குக் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க

விட வேண்டுமென்று கழகப் பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டார். ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மணியம்மையாரின் உடல் பெரியார் துயிலும் இடம் அருகிலேயே 17.3.78 அன்று மாலையில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிப் பயணம் புறப்படுவதற்கு முன் தி.மு.கழகத்தின் சார்பில் நானும், பேராசிரியர் அவர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம். முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.,மூப்பனார், ப.உ.சண்முகம், சி.வி.எம்.அண்ணாமலை, முத்தையா செட்டியார், மற்றும் பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலம் 5.30 மணிக்கு பெரியார் திடலை அடைந்து, நான், பேராசிரியர், அன்பில் தர்மலிங்கம், கி.வீரமணி, அமைச்சர்கள் ஆர். 'எம்.வீரப்பன், பொன்னையன் ஆகியோர் அவரது உடலை அடக்கம் செய்யும் இடத்தில் இறக்கி வைத்தோம். 19.3.1978 தேதியிட்ட முரசொலியில் "யார் எங்கே இருந்தாலும்" என்ற தலைப்பில் மணியம்மையாரின் மறைவு குறித்து நீண்ட கடிதம் ஒன்று எழுதினேன். அதன் சில பகுதிகள் வருமாறு:- "பெரியார் அவர்கள் நீண்டகாலம் உயிர் வாழ்வதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்து, அவரது உடல் நலத்தை, தனது உணவு உறக்கம் பற்றிக் கவலைப்படாது காத்திட்ட பெருமை அன்னை மணியம்மையாரைச் சாரும், இளமைப்பருவம் தொட்டே தன்மான இயக்கத்தில் தன் உள்ளத்தைப் பறி கொடுத்து இறுதியாகக் கண் மூடும் வரையில் தமிழ்ச் சமுதாயத்தின் கண்களைத் திறப்பதில் ஈடுபட்டிருந்த ஒரு ஒப்பற்ற மாதர் குல திலகத்தை நாம் இழந்துவிட்டோம்.

அந்தோ! குடியரசு அலுவலகத்தில் துணை ஆசிரியனாக முப்பதாண்டுகளுக்கு முன்பு ஈரோடு நகரில் பணியாற்றிய அந்த நாட்கள் பசுமையாக என் மனத்தில் அசைந்தாடுகின்றன. பெரியாருடைய மாளிகையில் அவருக்கு அருகே அமர்ந்து நானும், தவமணி ராசனும், ஏ.பி. சனார்த்தனமும், கருணானந்தமும் ஒவ்வொரு நாளும் உணவருந்தும் போது எங்களுக்குப் பரிவோடு உணவு பரிமாறித் தாய் அன்பைப் பொழிந்தவர் மணியம்மையார். இன்று அந்தத் தாயை நிகர்த்த தன்மானச் சுடர் விளக்கு அணைந்துவிட்டது.

குடியரசில் கூடியிருந்த நண்பர்களாம் நாங்களும் இன்று ஒருவரையொருவர் பார்ப்பதே அரிதாகி விட்டது. ஆட்கள் மாறலாம்-அரசியல் அலைகளில் கிளிஞ்சல்கள் ஒதுங்குவதுபோல எங்கெங்கோ ஒதுங்கி விடலாம். ஆனால் அந்தக் கொள்கைகள்? ஆம்-அந்தக் கொள்கைகள் வைரம் பாய்ந்தவை! நிலை குலைகின்றவர்களால் கொள்கைகளை அழித்துவிட முடியாது! சுயமரியாதை இயக்கம்-திராவிடர் இயக்கம் இவைகள் தோன்றிய காலத்திலிருந்து பலர் இயற்கையாக மறைந்தும், பலர் கொள்கைகளுக்குத் துரோகம் செய்துவிட்டுச் சுயநலம் பாராட்டி வேறிடம் பாய்ந்தும் பல சோதனைகளை ஏற்க வேண்டியும் இருந்ததென்றாலும், அன்று பெரியாரால் எடுத்து வைக்கப்பட்ட புரட்சிகரமான கொள்கைகள் பேரறிஞர் அண்ணா அவர்களால் முழக்கப்பட்ட இலட்சியங்கள் அல்லது குறிக்கோள்கள் இன்றளவும் உறுதி வாய்ந்த நெஞ்சங்களில் சலனத்திற்கோ, சபலத்திற்கோ ஆட்படாமல்தான் ஆழப் பதிந்திருக்கின்றன.

...துணிவும் கனிவும் தூய அன்பும் கொண்ட அன்னையை இழந்துவிட்ட நிலையில் திராவிடக் கழகத்தினர் உடனடியாகக் கூடித் தங்களை வழி நடத்திச்செல்லும் பொதுச் செயலாளராக நண்பர் வீரமணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அன்னை மணியம்மையார் இருந்தபோது அவர்களின் விருப்பப்படி வீரமணி எடுத்துக்கொண்ட பொறுப்பை இப்போது திராவிடர் கழக மத்தியச் செயற்குழு உறுதியாக்கி நிலைப் படுத்தியிருக்கிறது.

கொள்கையில் குன்றா ஆர்வமும், ஓயாது உழைக்கும் திறனும் அறிவுத் தெளிவும் கொண்டவர் நண்பர் வீரமணி என்பதை நாடு நன்கறியும். பெரியார் அவர்களும் அன்னை மணியம்மையார் அவர்களும் வழி நடத்திச் சென்ற ஒரு இயக்கத்தை வழி நடத்தும் பெரும்பொறுப்பை ஏற்றுள்ள வீரமணி அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்! யார் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் பெரியாரின் கொள்கைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ, நடைமுறைப்படுத்தப்பட்டால்தான் அந்தச் சமுதாயம் தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்பதை மறவாமல் பணியாற்ற வேண்டுமென்று இந்தத் துக்ககரமான நேரத்தில் எடுத்துக் கூறுவதை என் கடமையாகக் கருதுகிறேன்."

இவ்வாறு 'முரசொலி' கடிதத்திலே நான் எழுதியிருந்தேன்.