நெஞ்சுக்கு நீதி
பிரான்சு நாட்டு தேர்தல் முறை · 251 / 391
35. பிரான்சு நாட்டு தேர்தல் முறை இன்பம் எப்போதாவது வரும், துன்பம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். அதுபோலவே 1978 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் கழகத்தின் தூண்களாக. விளங்கியவர்கள் மூன்றுபேர் அடுத்தடுத்து மறைந்தார்கள். முதலாவதாகக் கல்லக்குடியில் என்னுடைய தலைமையிலே நடைபெற்ற போராட்டத்தில் தண்டவாளத்தில் என் அருகே படுத்த ஐந்து பேருள் ஒருவரும், மணப்பாறை பகுதிகளிலே தொடர்ந்து கழகப் பணிகளை ஆற்றிவந்தவரும், 3.2.1978 அன்று சென்னையிலே நடைபெற்ற அண்ணா சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்தபோது கூட, வீடு தேடி வந்து என் உடல் நலம் பற்றி விசாரித்துச் சென்றவருமான மணப்பாறை கஸ்தூரி அடுத்த இரண்டு வாரத்திற்குள் 12.2.1978 அன்று திடீரென்று மறைந்து விட்டார்.
இந்தத் துயரம் மறைவதற்குள்ளாகவே 16.2.1978 அன்று சிந்தனைச் சிற்பி அண்ணன் சி.பி. சிற்றரசு அவர்கள் சென்னையிலே மருத்துவமனையிலே மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. மேலவையிலே உறுப்பினராக இருந்த சி.பி. சிற்றரசு அவர்களை மேலவைத் தலைவர் பொறுப்பிலே அமர வைத்ததும், கிரீன்வேஸ் சாலையிலே உள்ள அமைச்சர்களுக்கான வீடுகள் ஒன்றிலே அவர்கள் குடியேறி, அங்கே என்னையும் மற்ற அமைச்சர்களையும் அழைத்து விருந்தளித்து மகிழ்ந்ததும், அவரும் நானும் பல கூட்டங்களுக்குச் சென்று வந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவிற்கு வந்தன.
தி.மு. கழகத்தின் சார்பிலே அமைச்சரவை அமைந்த போது, சிற்றரசு அவர்களுக்கு எந்தவிதமான பதவிப்பொறுப்பையும் தரவில்லை என்று அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஒரு வருத்தம் இருந்து வந்தது; பின்னர் மேலவைத் தலைவராக அவர்கள் அமர்ந்த பிறகு மகிழ்ச்சியாக மாறியது. தான் சிரிக்காமல் மற்றவர்களையும் கூட்டத்தினரையும் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்தவர் சி.பி.சி. அவர் மறைந்த செய்தி கேள்விப்பட்டதும், அண்ணா நகரிலே இருந்த அவரது இல்லத்திற்கு நானும், அன்பில் தர்மலிங்கம், நீலநாராயணன் மற்றும் அண்ணா நகர் கழக நண்பர்கள் சோ.மா.
ராமச்சந்திரன், சா.முத்து, தெட்சணாமூர்த்தி ஆகியோரும் சென்று மலர்வளையும் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம். மூன்றாவது செய்தியாக 18.2.1978 அன்று, பேரறிஞர் அண்ணா அவர்களின் நெருங்கிய நண்பரும், மேலவையிலே உறுப்பினராக இருந்தவருமான காஞ்சிபுரம் சி.வி.இராஜகோபால் அவர்கள் விபத்திலே சிக்கி-அதாவது ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து சென்ற போது கீழே விழுந்து, பின்னால் வந்த பேருந்து அவர் மீது ஏறி இறந்துவிட்டார் என்று செய்தி வந்தது.
இவ்வாறு அந்தத் திங்களில் இந்த மூன்று பேரும் ஒருவர் பின் ஒருவராக இயற்கை அடைந்தனர். இந்தத் துக்கச் செய்திகள் என்னையும் கழகத்தையும் தாக்கிக் கொண்டிருந்தபோது, அ.தி.மு.க. ஆட்சியினரும் அமைச்சர்களும் நம்மீது கணைகளைத் தொடுத்துக் கொண்டேயிருந்தனர். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா அவர்கள் துவக்கியபோது-அண்ணாவைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டதாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
ஒரு கருத்தினை வெளியிட்டார். உடனடியாக நான் விடுத்த மறுப்பு அறிக்கையிலே "அய்யாவின் போக்கை ஏற்காமல்; அண்ணாவுக்கு ஆதரவாக நான் விடுத்த அறிக்கை அப்போதே "திராவிட நாடு" இதழிலே வெளிவந்திருக்கின்றது. ஆனால் தி.மு.க. தொடங்குவதற்கு எதிராக நான் எழுதியதாக எம்.ஜி.ஆர். கூறுகிறாரே, அந்த ஏட்டினைக் காட்டிட அவர் தயாரா?"
என்று கேட்டேன். பின்னர் அந்தக் குற்றச்சாட்டினை அப்படியே விட்டுவிட்டார்கள். 1967 முதல் 1977 வரை திரையுலகில் நேரடியாகப் பங்கு பெறாமல் இருந்த என்னை 1978 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பல ஆண்டுக் காலமாக என்னுடன் பழகி வந்த இயக்குநர் பஞ்சு அவர்கள் சிவசுப்பிரமணியம் என்ற கோவை மாவட்ட நண்பர் தயாரிக்கவிருக்கும் ஒரு படத்திற்குக் கதையும் உரையாடலும் எழுதித்தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். "நெஞ்சுக்கு நீதி" என்ற இந்தத் தொடரின் பெயர்தான் அந்தப் படத்திற்கும் சூட்டப்பட்டது.
இது பற்றிய விளம்பரங்கள் வெளிவரத்தொடங்கியதும், 11.2.1978 அன்று பாளையங்கோட்டையிலே நடைபெற்ற ஒரு அரசு விழாவில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான் மீண்டும் சினிமாவிலே நடிக்கப் போவதாகவும், சில படங்களில் தான் நடித்துப் பாதியிலே இருப்பதாகவும், அவைகளை முடித்துக் கொடுப்பதோடு, புதிய படங்களிலும் நடிப்பேன் என்றும் அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த டாக்டர் பி.சி. ராய் ஒரு சிறந்த டாக்டர் அவர் ஒரு கதவைத் திறந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்.
மறு கதவைத் திறந்து கொண்டு முதல் அமைச்சர் வேலையைப் பார்ப்பார் என்றும், அதுபோலவே தானும் முதல்வராக இருந்து கொண்டே நடிப்பேன் என்றும் அறிவித்தார். பின்னர் மதுரையிலே நடைபெற்ற ஒரு மணவிழாவிலும் இன்னும் இரண்டு மாதத்தில் நடிக்கப் போவதாகவும் உறுதிப்படுத்தினார். இந்த அறிவிப்புப் பற்றி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம். கல்யாணசுந்தரம் அவர்கள் விடுத்த அறிக்கையில் "எம்.ஜி.ஆர். பதவியில் இருந்து கொண்டு படத்தில் நடித்தால், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படும்" என்று கூறினார்.
இதற்கு எம்.ஜி.ஆர். பதில்கூறும் வகையில் ஏற்கனவே தான் ஒப்பந்தம் செய்து கொண்ட படங்களையும், இன்னும் முடிவடையாமல் இருக்கும் படங்களையும் நடித்து முடிப்பதால் முதலமைச்சர் பணி எந்தவிதத்திலும் பாதிக்காது என்றார். இதற்கிடையே வழக்கறிஞர் சந்திரசேகரன் என்பவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிக்கக்கூடாது என்று உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 20.2.1978 அன்று சென்னையிலே "நெஞ்சுக்கு நீதி" படத்தின் துவக்க விழாவினை அந்த நிறுவனத்தினர் மிகவும் சிறப்போடு செய்தனர்.
திரைப்பட உலகினைச் சேர்ந்த பல நண்பர்கள் அந்த விழாவிலே கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதற்கு முதல் நாள், ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியிலே கழக வேட்பாளராகப் போட்டியிட்ட கழகத் தோழர் சி.சுப்பிரமணியம் அவர்களை ஆதரித்து, அந்தத் தொகுதியிலே பல்வேறு நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டேன். என்னுடன் ஆற்காடு வீராசாமி, மதுராந்தகம் ஆறுமுகம், கும்முடிப்பூண்டி வேணு, இரா. மாசிலாமணி, வி.பி.
அகிலன், செங்குன்றம் ஏழுமலை ஆகியோரும் வந்திருந்தனர். ஜாம்பியா நாட்டின் பிரதமர் மெய்ன்ஸ் சோனா, இலண்டன் "டைம்ஸ்" பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்திராகாந்தி இந்தியாவிலே கொடுமைப்படுத்தப்படுவதாக எழுதியிருந்தார். இதற்கு இந்திய அரசு தனது கடுமையான கண்டனத்தை 9.3.78 அன்று அதன் தூதரகம் மூலமாகத் தெரிவித்தது, உடனே ஜாம்பியா நாட்டின் பிரதமர் சோனா, ஜாம்பியாவிலே இருந்த இந்தியத் தூதுவர் பி.எஸ்.
சகாயை அழைத்து - தனது மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் தான் எழுதியது ஜாம்பியா அரசின் கருத்தோ அல்லது ஜாம்பியா அதிபரின் கருத்தோ அல்ல என்றும், பிரதமர் தேசாயிடமும், ஜனதா கட்சியின் தலைவர்களிடமும் தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் ஜாம்பியா பிரதமர் தெரிவித்தார். ஜாம்பியாவின் அதிபர் கென்னத் கவுண்டா அவர்களும் பிரதமர் மொரார்ஜி அவர்களுக்குச் சொந்த முறையிலே எழுதிய கடிதத்தில் தனது மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சி நடைபெற்ற அதே காலக்கட்டத்தில் - பல இடங்களைச் சுற்றிப்பார்ப்பதற்காக இரண்டு பேருந்துகளிலே சென்று கொண்டிருந்த இஸ்ரேலியர்களை 11.3.1978 அன்று இரவு பாலஸ்தீன கொரில்லாக்கள் கடத்திச் சென்றார்கள். அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த சண்டையில் 37 பேர் கொல்லப்பட்டார்கள். அல் பதக்குரில் என்ற கொரில்லா படை இந்த வன்முறையில் ஈடுபட்டதாகப் பொறுப்பேற்று அறிவித்தது. எகிப்து - இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அவர்கள் அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது.
சமாதானப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்று ஜனாதிபதி கார்ட்டருடன் விவாதிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலிய பிரதமர் மெனா சம்பெகின் தனது பயணத்தை ஒத்திவைத்து விட்டார். இரண்டு வண்டிகளிலே வந்த சுமார் 80 பேர்களையும் ஒரே பேருந்தில் ஏற்றிக் கொண்டு 11 கொரில்லாக்களும் டெல் அவீவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது பின் தொடர்ந்தே போன போலீசார் அந்தப் பேருந்தின் டயர்களை நோக்கிச் சுட்டதால் - அந்த பேருந்து கவிழ்ந்து சிறிது நேரத்திற்கெல்லாம் வெடித்தது.
இதில் 37 பேர் இறந்ததோடு 100 பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. எகிப்து அதிபர் சதாத் அவர்கள் மேற்கு ஆசிய மண்டலத்தில் சமாதான சூழ்நிலை நிலவவேண்டுமென்று விரும்பிய இந்தியா போன்ற நாடுகளின் விருப்பத்திற்கேற்பத் தாமாகவே இஸ்ரேலிடம் சமாதான தூது சென்றார். அதையொட்டிய முயற்சிகளுக்குப் பின் இக்கடத்தல் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. 15-3-78 அன்று இஸ்ரேல் தென் லெபனானில் பத்து மைல் தூரம் உள்ளே புகுந்தது.
இஸ்ரேல் பிரதமர், தென் லெபனானில் பாலஸ்தீன கொரில்லாக்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதல் இது என்றும், அங்கிருந்து விரட்டப்பட்ட கொரில்லாக்கள் மீண்டும் திரும்பமாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் உடன்பாடு காணப்பட வேண்டுமென்றும், அதுவரை இஸ்ரேல் படைகள் தென்லெபனானில் இருந்து வருமென்றும் கூறினார். இந்த வாதத்தை எகிப்து அதிபர் சதாத் நிராகரித்தார். தென் லெபனானில் புகுந்துள்ள இஸ்ரேலியப் படைகளை பாலஸ்தீன கொரில்லாக்கள் பல கிராமங்களில் தாக்கிவிடும் நிலையும், அதனைத் தொடர்ந்து ஓடித் தப்பித்துக்கொள்ளும் சூழ்நிலையும் நிலவியது.
இஸ்ரேல் படைகள் உடனடியாக லெபனானிலிருந்து வாபஸ் வாங்க வேண்டுமென்று ஐ.நா. பந்தோபஸ்து சபையில் 18-3-78 அன்று ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. லெபனானில் பாலஸ்தீனிய கொரில்லாக்களுக்கு இராணுவ உதவி அனுப்ப விரும்பும், எந்த நாட்டிற்கும் சிரியா நாட்டின் வானவெளியும் நில வழியும் அனுமதிக்கப்படுமென்று சிரியா அதிபர் ஹபீஸ் - அல் - ஆஸாத் 18-3-78 அன்று தெரிவித்தார். ஐ.நா. பந்தோபஸ்து சபை 19.3.78 அன்று இஸ்ரேல் படையின் வாபசை மேற்பார்வையிட 4,000 பேர் கொண்ட ஐ.நா.
படையை தென் லெபனானுக்கு அனுப்ப முடிவு செய்தது. 23-3-1978 மாலை 6 மணி முதல் தென் லெபனானில் போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்து, தற்காலிகமாக அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணப்பட்டது. 90 வயதான ஆச்சார்யா கிருபளானி அவர்கள் 17-3-1978 அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தான் பொது வாழ்விலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும், சுதந்திரத்திற்கு முன்போ அல்லது பின்போ எந்தச் சர்க்காருடனும் தமக்குத் தொடர்பு எதுவும் இல்லை என்றும் அனைத்து சர்க்கார்களும் குறை உள்ளவைதான் என்றும், சிலவற்றில் குறை மற்றவைகளைக் காட்டிலும் குறைவாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதே காலகட்டத்தில் அதாவது 1978 மார்ச் திங்களில் உலகப் பெரும் நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் உலக மக்களின் கவனத்தையெல்லாம் கவர்ந்தது. பிரான்சில் பொதுத் தேர்தல் முறை எப்போதும் இரண்டு கட்டமாக நடைபெறும். முறைப்படி ஒரு தொகுதியிலே ஒருவர் வெற்றிபெற பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றால் மாத்திரம் போதாது. மொத்தம் பதிவான வாக்குகளில் பாதிக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றாக வேண்டும்.
அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவிற்குப் பிறகு மொத்தம் 492 தொகுதிகளில் 68 பேர்கள் பாதிக்கு மேல் வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதி 423 தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க 19.3.1978 அன்று இரண்டாம் முறையாக வாக்குப் பதிவு நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவில் மிகக் குறைவான வாக்குப் பெற்றவர்கள் இரண்டாவது கட்டப் போட்டியில் நிற்கத் தகுதி இழந்தவர்களாவர். இரண்டாவது கட்டத் தேர்தலில் இடது சாரிக் கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு பல தொகுதிகளில் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துத் தேர்தல் களம் புகுந்தன.
இதன் காரணமாக ஆளும் கட்சியான வலதுசாரி கூட்டணி கட்சிகளும் பல இடங்களில் தொகுதி உடன்பாடு கண்டு போட்டியிட்டன. பிரான்சில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் இறுதியாக மத்திய வலதுசாரி கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்று, இடதுசாரி கூட்டணியைத் தோற்கடித்தன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பூட்டோ மீது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த மார்ச் திங்களில் அவருக்கு எந்த நேரத்திலும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற செய்தி பரவலாக வெளியிடப்பட்டது.
அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அப்பீல் செய்ய அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று செய்தி வெளியிட்ட பாகிஸ்தானின் மூன்று பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். பூட்டோவின் மனைவி அவரது இல்லத்திலேயே வீட்டுக் கைதியாக வைக்கப்பட்டார். பூட்டோவின் கட்சியைச் சேர்ந்த "முசாலா" என்ற பத்திரிகையின் லாகூர் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தி அதனுடைய ஆசிரியர் சையத் பத்ருத்தீன், உதவி ஆசிரியர் சஹீர் காஷ்மீரி மற்றும் செய்தி ஆசிரியர் டாசிப் ஆகியோ ரையும் கைது செய்தார்கள்.
இந்தக் கொலை வழக்கிலே தனக்கு நியாயமான வாய்ப்புத் தரப்படவில்லை என்று கூறி நான்கு மாதமாக நடைபெற்ற விசாரணையை பூட்டோ புறக்கணித்தார். 18.3.1978 அன்று லாகூர் உயர்நீதிமன்றம் பூட்டோவிற்கு, கொலைக் குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்து, அவர் தூக்கிலேற்றப்படவேண்டுமென்று தீர்ப்புக் கூறியது. தண்டனையை ஆட்சேபித்து மேல் முறையீடு செய்ய அவருக்கு ஏழு நாட்கள் மட்டுமே அவகாசம் தரப்பட்டது. பூட்டோவுடன் இதர எதிரிகளாக சேர்க்கப்பட்டிருந்த பெடரல் பாதுகாப்புப் படையின் நான்கு மாஜி அதிகாரிகளுக்கும் மரணதண்டனையை நீதிமன்றம் விதித்தது.
மரணதண்டனை விதிக்கப்பட்ட பூட்டோ சிறையில் அதுவரை விசேஷ பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்ததை மாற்றி, மரண தண்டனை பெற்றவர்களுக்காக ஒதுக்கப்படும் தனி அறைக்குக் கொண்டு போகப்பட்டார். பூட்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை ஆட்சேபித்து 20.3.1978 அன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். பூட்டோ கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் டிக்காகானை போலீசார் காவலில் வைத்தனர்.
பூட்டோவுடன் மரண தண்டனை விதிக்கப் பட மற்ற நான்கு பேரும் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். பிரிட்டிஷ் இண்டிபென்டெண்ட் டெலிவிஷன் நியூஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு, பாகிஸ்தான் தலைமை இராணுவம் சட்ட நிர்வாகி ஜியா-உல்-ஹக் அளித்த பேட்டியில் - "நீதி வழங்கப்பட வேண்டும். பூட்டோ சட்டத்திற்கு அப்பாற்பட்டவரல்லர்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூட்டோவிற்கு அரசியல் தஞ்சம் தரத் தயார் என்று துருக்கி தெரிவித்தது. 25.3.1978 அன்று பூட்டோ உச்சநீதிமன்றத்தில் தனது மரண தண்டனையை எதிர்த்து அப்
பீல் செய்தார். ஐ.நா.வின் செயலாளர் வால்ட்ஹைம் பாகிஸ்தான் அதிபர் ஜியாவுக்கு அனுப்பிய தந்தியிலே பூட்டோவுக்கு மன்னிப்பு அளிக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பூட்டோ அப்பீல் செய்து கொண்ட அதே 25ஆம் நாள் ஒரு பர்மிய போக்கர் விமானம் ரங்கூன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் கீழே விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் பயணம் செய்த 44 பயணிகள், 4 விமான சிப்பந்திகள் அனைவரும் மாண்டனர்.
அதே 25ஆம் தேதி ஆஸ்திரேலிய தலைநகரமான கான்பாவில் இந்தியத் தூதுவர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்பாகக் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக அகற்றப்பட்டது. பூட்டோ அப்பீல் செய்து கொண்ட அதே 25ஆம் தேதி மேற்கு வங்க சட்டசபையில் மத்திய மாநில உறவுகள் பற்றி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் மீது பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு மத்திய அரசைப் பலவீனமாக்கும் குறிக்கோள் தங்களுக்குக் கிடையாது என்றும், அதிக பொறுப்புள்ள -ஆனால் குறைந்த அளவு அதிகாரங்களும், உரிமைகளும் உள்ள மாநிலங்கள் வலிமையுள்ளதாக இருந்தால்தான் தேவையற்ற கட்டுப்பாடுகள் இன்றி மத்திய அரசின் மேல் ஆதிக்கமின்றி மாநிலங்கள் செயல்பட முடியும் என்று கூறினார்.
மேற்கு வங்க அரசு நிறைவேற்றிய தீர்மானத்தைப் போலவே, 3.3.1978 அன்றே கேரள மாநில சட்டசபையிலும் - மாநில அரசுகளுக்கு அதிக நிதி ஆதாரங்களும் கூடுதல் அதிகாரங்களும் கிடைப்பதற்கான வகையில் அரசியல் சாசனத்தில் மாறுதல்கள் செய்யுமாறு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யும் தனி உறுப்பினர் தீர்மானம் ஒன்று நிறைவேறியது. அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் அந்தோணி, 16.3.1978 அன்று டெல்லியில் கூடும் தேசிய அபிவிருத்த கவுன்சில் கூட்டத்தில் மத்திய மாநில உறவு பற்றியும், நிதி வசதிகள் பற்றியும் பிரச்சினை எழுப்பவிருப்பதாகவும், இந்த உறவுகள் குறித்து முழு விவாதம் தேவை என்றும், பலம் பொருந்திய மத்திய அரசும், பலத்த மாநில அரசுகளும் இருக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும் கூறினார்.
இந்தத் தீர்மானங்கள் எல்லாம் 1974 ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் தி.மு.கழக ஆட்சியின் சார்பாக நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானத்தை முழுவதுமாக பிரதிபலிக்காவிட்டாலும், அத்தீர்மானத்துக்குத் துணையாக விளங்கின.
