உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/மாங்கொல்லையில் கிடைத்த மாங்கனி!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

மாங்கொல்லையில் கிடைத்த மாங்கனி! · 250 / 391

34. மாங்கொல்லையில் கிடைத்த மாங்கனி! ஜனவரி முதல் நாள் பெட்ரோஜோகுவீன் கொமாரோ கார்டினல்! இவர் ஒரு பத்திரிகை ஆசிரியர் - வெளியீட்டாளர் நிகரகுவா நாட்டினைச் சேர்ந்தவர் - லா பிரன்சா (LA PRENSA) என்ற ஏட்டினை நடத்தி வந்தவர் - அந்த நாட்டின் ஆளுங்கட்சியையும், ஆட்சிமுறையையும் கடுமையாக விமர்சித்து எழுதியவர்- நாட்டின் அதிபர் அனஸ்டாசியோ சோமோஜா டி பாயில் அவர்களின் ஆட்சித் திறனை தன் பேனா முனையினால் தாக்கி எழுதி வந்தவர் - காரில் சென்று கொண்டிருந்த போது மூன்று நபர்களால் இயந்திர துப்பாக்கியால் துளைக்கப்பட்டார்.

இச்சம்பவம் நடந்த மறுதினம் இரவு நிகரகுவா நாட்டின் தலைநகரான மானாகுவாவில் (MANAQUA) பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கட்டிடங்களுக்கும், கார்களுக்கும் தீ வைத்தனர். பல கடைகள் சூறையாடப்பட்டன. காவல்துறையினர், இராணுவத்தினர் மீது கல்லெறிந்தனர். அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கி, ஒரு துணி நெய்யும் ஆலை, பல நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஜனவரி 12ஆம் தேதி கொமாரோ கார்டினலின் இறுதி யாத்திரை முடிந்த பின்னரும் வன்முறைச் சம்பவங்கள் அந்நாட்டிலே தொடர்ந்தன.

இரண்டு வாரங்களுக்குப் பின், கார்டினல் அவர்களின் மறைவைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஒரு பொது வேலை நிறுத்தமும், கடையடைப்பும் நடைபெற்றன. 25.1.1978 அன்று தமிழகத்திலே மொழிப்போர் தியாகிகள் தினம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நாளில், நிகரகுவா நாட்டிலே கன்சர்வேடிவ் கட்சி அந்நாட்டின் அதிபராக இருந்த சோமோஜா டி பாயில் அவர்களை உடனடியாக பதவி விலக வேண்டுமென்று கோரியது. ஆனால் அவரோ பதவியிலிருந்து கீழே இறங்க மறுத்து விட்டார்.

75 சதவிகிதத்திற்கு மேற்பட்ட கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையிலே உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. மாணவர்களும் போராட்டத்திலே இறங்கியதால், அவர்களைக் கலைக்க 30.1.1978 அன்று ஹெலிகாப்டர் மூலமாக மானாகுவாவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்திலே போராட்டத்திலே ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஆளுங்கட்சியை அதுவரை ஆதரித்து வந்த, அந்த நாட்டினைச் சேர்ந்த ஏழு கத்தோலிக்கக் குருமார்கள் கலவரம் அதிகரித்துவிட்ட நிலையிலே நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூகத்துறைகளிலே மாற்றம் தேவை என்று அறிக்கை விடுத்தனர்.

மதத்திற்கு மட்டுமின்றி மக்களுக்கும் நாட்டுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டுமென்பதற்கு அந்தப் பேராயர்கள் எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். நிகரகுவா நாட்டில் ஒரு பத்திரிகை ஆசிரியரைக் கொன்ற நிகழ்ச்சியும், அதனை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்த நிகழ்ச்சியும் நடைபெற்ற அதே காலக்கட்டத்தில், அதாவது 1978 ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் இந்தோனேஷிய நாட்டின் குடியரசுத் தலைவர் சுகார்தோ, அவருடைய ஆட்சிக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியை ஒடுக்கவேண்டுமென்ற எண்ணத்தோடு - எந்தக் காரணமும் தெரிவிக்காமல் தன் நாட்டில் நடைபெற்ற நான்கு பெரிய நாளிதழ்களுக்குத் தடை விதித்தார்.

ஆட்சியின் ஊழல்களுக்கு எதிராகவும், சமூகப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்பட வேண்டுமென்பதற்காகவும் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு அதிக அளவில் அந்த நாளிதழ்கள் முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிட்டதுதான், அவை மூடப்பட்டதற்கான காரணம் என்று பலரும் நம்பினார்கள். 20.1.78 அன்று, இந்த நான்கு இதழ்களும் தடை செய்யப்பட்டதோடு பிரச்சினை முடியவில்லை. மறுநாள் மேலும் இரண்டு நாளிதழ்கள் தடைசெய்யப்பட்டன.

அதே நாளில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் இரண்டு பல்கலைக் கழகங்களைச் சுற்றிச் சூழ்ந்தனர். ஜாகர்தாவில் உள்ள இந்தோனேஷிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில், இரண்டாயிரம் மாணவர்கள் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் ஒன்று மிகவும் தாழ்வாகப் பறந்து மிரட்டியதன் காரணமாக அனைத்து மாணவர்களும் பயந்தோடினர். நாட்டிலே நடந்து கொண்டிருந்த அனைத்து மாணவர் பேரவை அமைப்புகளையும் அரசு உடனடியாகக் கலைத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று தடுக்கப்பட்டனர். மீண்டும் 23.1.78 அன்று ஒரு நாளிதழ் தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்தாலி நாட்டு அரசின் நிர்வாகப் பொறுப்புகளில் தங்களுக்கு நேரடி பங்கு வேண்டுமென்ற கம்யூனிஸ்ட் கட்சியின் 4.1.1978 தேசிய கோரிக்கையை இத்தாலியை ஆண்டு கொண்டிருந்த கிறித்துவ ஜனநாயக கட்சியின் தலைமை இயக்குநரகம் ஏகமனதாக நிராகரித்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, மற்றும் மூன்று சிறிய கட்சிகள் ஜூலை 1977இல் அரசின் பொருளாதார, சமூக, வன்முறையற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதாக ஒப்புக் கொண்டிருந்த போதிலும் அரசின் முடிவுகளில் தங்களுடைய நேரடி ஈடுபாடு இல்லாவிட்டால் நாட்டில் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாது என்று இப்போது வாதிட்டன.

12.1.1978இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கார்ட்டர் வழக்கத்திற்கு மாறாக, இத்தாலிய அரசின் கொள்கைகளை வகுப்பதில் ஜனநாயகத்திற்கு முரண்பட்ட ஒரு கட்சியின் தலையீடு பற்றி அமெரிக்காவின் கவலையைத் தனது துறையின் மூலமாகத் தெரிவித்துக்கொண்டார். 1943இல் முசோலினியின் வீழ்ச்சிக்குப் பின், இத்தாலியில் தொடர்ந்து ஆட்சியிலே உள்ள கிறித்துவ ஜனநாயகக் கட்சியின் 39வது பிரதமரான ஜியோலியே அண்ட்ராயிட்டி, குடியரசுத் தலைவர் ஜியோ வன்னிலியோவிடம் 16.1.78 அன்று தனது ராஜினாமாவைத் தாக்கல் செய்தார்.

எனினும், தொடர்ந்து காபந்து அரசின் பிரதமராக அவரை நீடிக்கவேண்டுமென்று குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார். பின்னர், 1978ஆம் ஆண்டு மார்ச் திங்களில் தனது கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினரையே பெரும்பாலும் உள்ளடக்கிய ஒரு புதிய ஆட்சியை பிரதமர் அண்ட்ராயிட்டி அமைத்தார். கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு காபினட் அந்தஸ்தில் எந்தப் பதவியும் தர வாக்குறுதி அளிக்கப்படாத போதிலும், அந்தக் கட்சியும், ஏனைய மூன்று சிறிய கட்சிகளும் கொள்கை முடிவுகளை எடுப்பதில் கலந்து கொள்ளும் உரிமையைப் பெற்று நாடாளுமன்ற ஆதரவைப் புதிய அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டன.

இந்த நிலையிலே இத்தாலியின் முன்னாள் பிரதமரும், ஆளுங்கட்சியான கிறித்துவ ஜனநாயக முன்னணியின் தலைவரும், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் என்ற எதிர்பார்ப்புக்கு உட்பட்டவருமான அல்டோ மோரோ, இடதுசாரி இயக்கத்தின் ஆயுதம் தாங்கிய கொரில்லாக்களால் 16.3.78 அன்று கடத்தப்பட்டார். அவரோடு சென்று ஐந்து மெய்க்காப்பளர்களும் கொல்லப்பட்டனர். நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்திற்குச் செல்லும்போது வழியிலே இச்சம்பவம் நடைபெற்றது.

12 தீவிரவாதிகள் 70 முறை துப்பாக்கியால் சுட்டு ஐந்து மெய்க்காப்பளர்களையும் கொன்றுவிட்டு, இவரைக் கடத்தினார்கள் என்று செய்தி வெளியிடப்பட்டது. இத்தாலி நாட்டின் தீவிர இடதுசாரி அமைப்பான சிவப்புப் படையினர் இச்சம்பவத்திற்குத் தாங்கள் பொறுப்பேற்பதாக அறிவித்தனர். தங்கள் இனத்தைச் சேர்ந்த 15 உறுப்பினர்களை 48 மணி நேரத்தில் விடுதலை செய்யாவிட்டால் அல்டோ மோரோவைக் கொன்று விடுவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

இந்தச் செய்தி உலகம் முழுவதும் அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தக் கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு அடிபணிய அந்த அரசு மறுத்து விட்டது. அவர்கள் வேண்டியபடி அந்த 15 பேரை விடுவிக்கவும் முன்வரவில்லை. அல்டோ மோரோவின் குடும்பத்தினர் அரசுக்குப் பல கடிதங்கள் எழுதினர். ஆனால் அரசு அந்த 15 பேரை விடுவிக்க மறுத்துவிட்டதால், சரியாக 54 நாட்கள் கழித்து, அதாவது அவர் கடத்தப்பட்டதற்கு 54 நாட்கள் கழித்து, காவல்துறைக்கு குறிப்பிட்ட ஒரு தெருவிலே, ஒரு காரின் 'டிக்'கிலே அல்டோ மோரோவின் உயிரற்ற உடல் இருப்பதாகவும், எடுத்துக் கொள்ளும்படியும் செய்தி கிடைத்தது.

அதுபோலவே அல்டோ மோரோ கொல்லப்பட்டிருந்தார். 15 பேர்களை விடுவித்து, அவரைக் கடத்தல்காரர்களிடமிருந்து விடுவிக்கவில்லை என்ற கோபம், அவரது குடும்பத்தாருக்கு இருந்ததால் அவரது உடல் அடக்கத்திற்கு அரசு பிரதிநிதிகள் யாரும் அழைக்கப்படவில்லை. எனினும் அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின் அரசின் சார்பில் மறைந்த அல்டோ மோரோவிற்கு அரசாங்க மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை அவர் உடல் இல்லாமலேயே, அவர் இறந்து கிடந்த தெருவிலே மலர் வளையங்களையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்துச் செலுத்தப்பட்டது.

1978ஆம் ஆண்டு பொங்கல்விழாவை முன்னிட்டுக் கழகத்தின் சார்பில் ஜனவரி 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் திருச்சியிலும் நடைபெற்றன. மூன்றாம் நாள் நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதற்காக திருச்சி சென்றிருந்த எனக்குச் சில நாட்களுக்கு முன் என்னை சென்னையிலே இல்லத்திலே வந்து சந்தித்துவிட்டுச் சென்றவரும், நான் திருச்சிக்குப் புறப்படுவதற்கு முன்புகூட, சென்னை மருத்துவமனையிலே நான் சந்தித்துவிட்டு வந்தவருமான பழம்பெரும் இயக்குநர் பீம்சிங் மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது.

எனவே திருச்சி நிகழ்ச்சிகளை அவசர அவசரமாக முடித்துவிட்டு, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னை திரும்பினேன். இயக்குநர் பீம்சிங் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அப்போது நான் விடுத்த செய்தி இதோ:- "இயக்குநர் பீம்சிங் சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்து திடீரென நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். நான் சிறையிலிருந்து வெளிவந்ததும் என்னைக் காண நலிந்த உடலோடு பீம்சிங் வந்திருந்தார். அன்றைக்கே நான் அவரிடம் கண்கலங்க வேண்டிக் கொண்டேன்.

அலுவல்களைக் குறைத்துக் கொண்டு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று! சரி என்று தலையசைத்தார். இப்படியொரு நெடிய ஓய்வினை எடுத்துக் கொள்வார் என்று எனக்குத் தெரியாது. மருத்துவமனையில் இருந்த அவரைச் சென்று பார்த்தேன். கடைசியாகத் திருச்சிக்குப் போவதற்கு முன்புகூடப் பார்த்துவிட்டுத் தான் சென்றேன். திரும்பி வந்து அவரது மூச்சற்ற உடலைத்தான் கண்டேன். கழகத்தில் என்னுடன் நெருங்கிப் பழகுகிற நண்பர்கள் அனைவருக்கும் பீம்சிங்கின் மீது தனி அன்பும் மதிப்பும் நிறைய உண்டு.

எங்களுக்கிடையே கொள்கை வேறுபாடுகள் நிறைய உண்டெனினும் அதனையும் மீறிய அளவில் குன்றென நட்பு வளர்ந்திருந்தது. இயக்குனர்கள் கிருஷ்ணன், பஞ்சு வாயிலாக எனக்குக் கிடைத்த நட்புச் செல்வம்தான் பீம்சிங். அந்த அரிய கருவூலகத்தை இழந்துவிட்டேன். தொழில் ரீதியாகப் பழகிய பழக்கமல்ல, இதயத்தைத் தொடும் பாச உணர்ச்சியின் அடிப்படையில் ஏற்பட்ட நட்பு. கழக ஆட்சி கலைக்கப் பெற்று, நெருக்கடி நிலை நெருப்பென என் மீதும், கழகத்தினர் மீதும் கொட்டப்பட்ட போதும் என்னை அடிக்கடி வந்து சந்தித்து ஆறுதல் கூறுகிற கலையுலக நண்பர்கள் சிலரில் ஒருவராக அவர் இருந்தார்.

அந்த இனிய தோழரை இழந்து நிற்கிறேன். அவரது மறைவு கலை உலகிற்குப் பெருத்த இழப்பாகும். கற்பனை வளமிக்க ஒரு இயக்குநரைத் திரையுலகம் பறி கொடுத்து விட்டது. துன்பத்தில் துணை நிற்பதே நட்புக்கு இலக்கணம் என்ற நிலையில் வாழ்ந்து காட்டிய என் உண்மையான நண்பர்களில் ஒருவரைக் சாலம் கொத்திக் கொண்டு போய்விட்டது. பீம்சிங், ஆம், அந்தப்பெயர் என் இதய சுவரில் எழுதப்பட்டுள்ள அழியாத ஓவியங்களில் ஒன்றாகிவிட்டது. அவரது குடும்பத்தாருக்கு நான் எப்படி இரங்கலோ ஆறுதலோ தெரிவிக்க முடியும்?

நானே அந்தக் குடும்பத்தில் ஒரு அங்கமாயிற்றே!" 3.2.1978 - பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள், தி.மு.கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்திற்கு அருகில் ஒரு சிலை வைக்க அரசிடம் அனுமதி கேட்டு, அது மறுக்கப்பட்டது பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். திடீரென வள்ளுவர் கோட்டத்திற்கு முன்பு உள்ள இடத்தில் சென்னை மாவட்டக் கழகம் அண்ணா அவர்களின் சிலையை அமைத்துக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி வழங்கியது.

மாவட்டக் கழகச் செயலாளர் சீத்தாபதி மூலமாகவே கடிதம் வாயிலாக அளித்த அனுமதிக்கு உடனடியாக நன்றிக்கடிதம் எழுதச் சொன்னேன். மேலும் அண்ணா அவர்களின் நினைவு நாளான 3.2.1978 அன்று அண்ணா சிலை வள்ளுவர் கோட்டம் முன்பாகத் திறக்கப்படும் என்று விளம்பரமும் கழகத்தின் சார்பிலே செய்யப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த 1969 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் தி.மு.கழகம் காலையில் பெரியார் சிலையில் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை அமைதி ஊர்வலம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றது.

ஆளுங்கட்சியாகக் கழகம் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் 1978 ஆம் ஆண்டில் அந்த அமைதி ஊர்வலத்தோடு, சிலை திறப்புவிழா நிகழ்ச்சியையும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அண்ணா அவர்களின் அந்தச் சிலைக்கு இந்தியாவிலே இதுவரை எங்குமில்லாத அளவிற்கு அடிப்பீடம் அமைத்திட வேண்டுமென்று விரும்பிய நான் சேலம் சேர்வராயன் மலைத்தொடரில் அத்தகைய அரிதான கல் இருப்பதை நண்பர்கள் சென்னகேசவன், ஆர்.பி.

முருகன் ஆகியோர் மூலமாக அறிந்து அப்படியே அதனையும் கொண்டுவரச் செய்து அவசர அவசரமாக அந்தக் கல் அடிப்பீடமாக அமைக்கப்பட்டு, அதன் மீது தற்போது இருந்து வரும் அண்ணா சிலை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழாவும் மிகச் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. இதற்கிடையில் 25.1.78 அன்று மொழிப்போர் தியாகிகள் தினம் தி.மு.கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. திடீரென்று ஏற்பட்ட மலேரியா சுரம் காரணமாக அந்த ஆண்டு மொழிப்போர் தியாகிகள் தினத்தில் நான் கலந்து கொள்ளவில்லை.

பேராசிரியர் அவர்கள்தான் மதுரையிலே கலந்து கொண்டார். அவரது அன்றைய உரை குறித்துத் தென்னரசு "அமுதும் தேனும் எதற்கு அன்பழகர் இருக்கையிலே எமக்கு" என்ற தலைப்பில் அருமையானதொரு கட்டுரையை எழுதியிருந்தார். 26.1.78 அன்று வேலூர் கோட்டை வெளிமைதானத்தில் ஜனதா கட்சியின் பிரச்சாரக் குழு சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற ஜனதாக் கட்சித் துணைத்தலைவர் எஸ்.என். மிஸ்ரா பேசும்போது - "நெருக்கடி நிலைக் காலத்தில் சுதந்திரத்தினத்தையோ, குடியரசு தினத்தையோ சுதந்திரமாகக் கொண்டாட முடியவில்லை; தற்போதுதான் இவ்விழாக்களைக் சுதந்திரமாக கொண்டாட முடிகிறது.

தமிழ் நாட்டில் அப்போது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த தி.மு.கழகம்தான் நெருக்கடி நிலையைக் கண்டித்து இந்தியாவிலேயே முதன்முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அதை ஒருபோதும் மறுக்க முடியாது" என்று கூறினார். நெருக்கடி நிலை நேரத்திலே தி.மு.கழகத்தின் பணி எத்தகையது என்பதை, பதவிப் பொறுப்பிலே இருப்போர் மறந்துவிட்ட நிலையிலே, எஸ்.என். மிஸ்ரா அவர்களின் மனம் திறந்த பேச்சு பாராட்டுதற்குரிய பேச்சாக அமைந்தது.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இந்திரா காங்கிரஸ் கட்சிக்குத் தனது ஆதரவை நல்கி, ஜனதா கட்சியை முழ

ு மூச்சாக எதிர்த்தது. ஆனால் 1978 ஆம் ஆண்டு துவக்கத்திலே நடைபெற்ற கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரேயொரு இடத்தைப் பெற்றுக் கொண்டு ஜனதா கட்சிக்கு அந்தத் தேர்தலிலே முழு ஆதரவு தருவதாக உடன்பாடு கொண்டது. அந்தத் தேர்தலிலே கர்நாடக மாநிலத்திலே தி.மு கழகம் ஐந்து இடங்களிலே போட்டியிட்டது. ஒரு தொகுதிக்கு மட்டும் ஒப்புக் கொண்டு விட்டதைக் கேள்விப்பட்ட கர்நாடக மாநில அ.தி.மு.க தொண்டர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

தங்கள் கட்சிக் கொடிகளைத் தாங்களே இறக்கினர். 1978ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் முதல் வாரத்தில் தி.மு. கழகம் சென்னை மாநகரிலே அண்ணா சிலை திறப்பு விழாவினை- சீரோடு நடத்திக் கொண்டிருந்த நேரத்தில்-அண்டை நாடான இலங்கையிலே ஆட்சி முறையிலே ஒரு பெரும் மாற்றம் செய்யப்பட்டது. அது வரையில் அந்த நாட்டிலே பிரதமர் ஆட்சிமுறை மாற்றப்பட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி முறையிலே அந்த நாடு தொடர்ந்து செயல்படும் என்பதற்கான மாற்றங்கள் நடைபெற்றன.

இந்த மாற்றத்தை 23.7.1977 வரை இலங்கையிலே பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டார நாய்காவின் சுதந்திர கட்சி கடுமையாக எதிர்த்தது. 1977 தேர்தலிலே வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்ற ஜெயவர்த்தனே, பிரதமர் பதவியைவிட்டு விலகி, 4.2.1978 அன்று குடியரசுத் தலைவராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 6.2.1978 அன்று ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக இருந்த ரணசிங்கே பிரேமதாசா புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார்.

பிரதமராக இவர் பொறுப்பேற்றபோதிலும் அனைத்து அதிகாரங்களும் குடியரசுத் தலைவருக்கே உரியது என்ற முறையிலே மாற்றம் காணப்பட்டது. இந்தியாவிலே அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி 1969 இல் இரண்டாக உடைந்ததற்கும், 1978இல் இரண்டாக உடைந்ததற்கும் சஞ்சீவரெட்டி அவர்கள் எப்படியோ ஒரு வகையிலே காரணம் என்று "இந்து" செய்தியாளர் கருத்துத் தெரிவித்திருந்தார். 1969இல் காங்கிரஸ் கட்சிப் பிளவு, சஞ்சீவரெட்டி அவர்கள் எப்படியோ குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிட்டதன் காரணமாக ஏற்பட்டது எப்படி உண்மையோ, அதுபோலவே 1978 இல் காங்கிரஸ் பிளவும், சஞ்சீவிரெட்டி குடியரசுத் தலைவராகப் போட்டியிட்டதால்தான் என்று அந்தச் செய்தியாளர் எழுதியிருந்தார்.

குடியரசுத் தலைவராக சஞ்சீவரெட்டி அவர்களை நிறுத்த பிரதமர் மொரார்ஜி தேசாய் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் என்ற முறையில் ஓய்.பி.சவான் அவர்களை அழைத்துப் பேசியபோது, அவர் சஞ்சீவி ரெட்டியைக் குடியரசுத் தலைவராக ஆக்குவதற்கு ஒப்புக்கொண்டு வந்துவிட்டதுதான் - இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியை உடைக்க முக்கியமான காரணம் என்று "இந்து" செய்தியாளர் எழுதியதோடு - இந்திராகாந்தி, தான் கட்சித் தலைவராக இருந்திருந்தால் தன்னைத்தானே கூப்பிட்டு யோசனை கேட்டிருப்பார்கள் என்று நினைத்ததின் விளைவே 1978இல் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளந்ததற்குக் காரணம் என்று அவர் எழுதியிருந்தார். மேலும் "மெயில்" ஏட்டில் பிரபல பத்திரிகையாளர் இந்தர்ஜித் எழுதிய கட்டுரையில் இந்திராகாந்தியை ஆதரிப்பவர்களில் பலர் பிராமணர்கள் என்றும் அவருக்கு நெருங்கிய ஆலோசகர்களாக இருந்தவர்களில் பலரும் உயர் வகுப்பு பிராமணர்கள் என்றும், உதாரணத்திற்கு டி.பி.மிஸ்ரா, கமலபதி திருபாதி போன்றவர்கள் என்றும் எழுதியிருந்தார்.

பசுவும் கன்றும் சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்படாததன் காரணமாக, இந்திராகாந்தி தேர்தல் கமிஷனின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொண்டார். உச்சநீதி மன்றமும், தேர்தல் கமிஷன் அளித்த தீர்ப்பில் தலையிட மறுத்து, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளிவிட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷனிடம் இந்திரா காந்தி தங்கள் கட்சிக்கு இரண்டு காளை மாடுகளுடன் உழவன் இருப்பதைப் போன்ற சின்னத்தைத் தருமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கும் பிரமானந்த ரெட்டியின் குழுவினர் இரட்டை மாட்டுக் காளைச்சின்னம் காங்கிரஸ் கட்சியின் பழைய சின்னம் என்றும், அதனை இந்திரா காந்தியின் குழுவினருக்குத் தரக் கூடாதென்றும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி குழுவினருக்குப் புதிய சின்னமாகக் "கை சின்னம்" தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டது. மேலும் இந்திரா காந்தியின் கட்சியை அகில இந்தியக் கட்சியாகவும் அங்கீகரித்துத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

"மாங்கொல்லையில் கிடைத்த மாங்கனி" 11.12.1978 அன்று தேதியிட்ட முரசொலியில் நான் எழுதிய கடிதத்தின் தலைப்புதான் இது. 1978 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் பேசுகையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பெரும்பான்மையினராக உள்ள சமுதாய விடுதலை குறித்தும், இந்திரா காந்தியின் சாதிவெறிச் செயல்களுக்கான சான்றுகளையும் எடுத்துக் காட்டியதோடு இந்திராகாந்திக்கு ஒரு அறை கூவலும் அந்தக் கூட்டத்திலே விடுத்தார்.

என்ன அறைகூவல் தெரியுமா? "கோவில்களில் அர்ச்சகராக பிராமணரல்லாத பிற சமூகத்தினரும் பணிபுரியலாம் என்ற சட்டத்தைத் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கொண்டுவரும் என்று ஒரு உறுதி மொழியினை இந்திரா காந்தி கொடுப்பாரா?" இதுதான் மாங்கொல்லையில் கிடைத்த மாங்கனி! ஜெகஜீவன் ராம் அன்று கேட்ட கேள்விக்கு அன்று இந்திராகாந்தியும் பதில் சொல்லவில்லை. இன்றுவரை அந்தக் கேள்விக்கு வேறு யாரும் விடைதரவும் முன்வரவில்லை.

ஏன், ஜெகஜீவன்ராம் அவர்களே, மத்திய அமைச்சரவையிலே பல ஆண்டுக் காலம் அமைச்சராக இருந்த போதிலும், இந்தச் சட்டத்தைக் கொண்டுவர அவராலும் முடியவில்லை. தந்தை பெரியார் எப்படி நிறைவேறாத இந்த விருப்பத்தைத் தன் மனத்திலே புதைத்தபடியே மறைந்தாரோ, அது போலவே ஜெகஜீவன்ராம் அவர்களும் இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை நிறைவேறாத நிலையிலேதான் உயிர்விட்டார்.