நெஞ்சுக்கு நீதி
ஷா கமிஷனும் இந்திரா காந்தியும்! · 249 / 391
33. ஷா கமிஷனும் இந்திரா காந்தியும்! ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதியன்று சுதந்திரதின வெள்ளிவிழா முன்னிட்டு இந்தியாவின் நூறாண்டுக் கால வரலாறு அடங்கிய காலப் பெட்டகம் ஒன்று தயாரிக்கப்பட்டு, டெல்லி செங்கோட்டையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் புதைக்கப்பட்டது. இந்தக் காலப் பெட்டகத்திற்குள் எழுதி வைக்கப்பட்டுள்ள வரலாறு குறித்துப் பல சர்ச்சைகள் அப்போதே எழுந்தன. அதில் பல செய்திகள் மறைக்கப்பட்டுவிட்டன என்றும், பல முக்கிய தலைவர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டார்கள் என்றும் புகார் கூறப்பட்டது.
ஆனால் அதில் எழுதப்பட்டுள்ள விவரங்களை வெளியிட இந்திரா காந்தி அரசு கடைசிவரை மறுத்துவிட்டது. ஜனதா கட்சியின் அரசு அமைந்ததும், இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டு, அந்தக் காலப் பெட்டகத்தைத் தோண்டியெடுக்க முடிவெடுக்கப்பட்டு 1977 ஆம் ஆண்டு டிசம்பரில் அது தோண்டியெடுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் நெருக்கடி நிலை அமல் செய்தபோது, நடந்த அட்டூழியங்களையும், முறைகேடுகளையும் விசாரித்த நீதிபதி ஷா கமிஷன் முன், இந்தியா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான புகார்கள் வந்து குவிந்துவிட்டன.
அதனால் சில குறிப்பிட்ட புகார்களை மட்டும் அவர் நேரடி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, மாநில அரசுகள் சம்மந்தப்பட்ட புகார்களை அந்தந்த மாநிலங்களுக்கே அனுப்பிவிட்டார். தமிழ்நாட்டில் நடந்த முறைகேடுகள் பற்றிய 78 புகார்களை நீதிபதி ஷா மாநில அரசுக்கே அனுப்பிவிட்டார். அதன் பேரில் அந்தப் புகார்களை விசாரிக்க நீதிபதியாக எம்.அனந்த நாராயணனைத் தமிழக அரசு நியமித்தது. டெல்லியிலே நடைபெற்ற ஷா கமிஷன் முன்னால் வந்து சாட்சியம் அளிக்குமாறு இந்திராகாந்திக்கு நீதிபதி ஷா அழைப்பு அனுப்பினார்.
ஆனால் இந்திராகாந்தி சாட்சி சொல்ல வரவில்லை. அதற்குப் பதிலாக "ஷா கமிஷன் அமைத்ததே சட்ட விரோதமானது. எனவே சாட்சி சொல்ல வர முடியாது" என்று கூறினார். எனினும், நீதிபதி ஷா 5.12.77 முதல் 10.12.77 வரை நடக்கும் விசாரணைக்கு நேரில் வருமாறு இந்திராகாந்திக்கு மீண்டும் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு இந்திராகாந்தி அனுப்பிய பதிலில், "நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டது. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நடந்தது.
பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் பிரகடனப் படுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றைப் பற்றி விசாரிக்க எந்த விசாரணைக் கமிஷனுக்கும் அதிகாரம் இல்லை. பாராளுமன்றத்துக்குக் கொடுத்துவரும் உயர்ந்த மதிப்பையும் அதன் சுதந்திரத்தையும் கெடுப்பதற்குக் காரணமாக இந்த விசாரணைக் கமிஷன் அமைந்துவிடக் கூடாது" என்று தெரிவித்தார்.
இதற்கு நீதிபதி ஷா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். அரசியல் வாக்குவாதம் செய்வதற்காக இந்திராகாந்தியை நீதிமன்றத்திற்கு அழைக்கவில்லை என்றும், தற்போது, முதல்கட்ட விசாரணைதான் நடைபெறுகிறதென்றும், அதற்கு யாரையும் வற்புறுத்த மாட்டேன் என்றும், 'அத்துமீறல் நடந்துள்ளது' என்று தனக்கு நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அப்போது சம்மன் அனுப்பப்படும் என்றும் அப்போது வந்துதான் ஆகவேண்டுமென்றும் கூறினார்.
தொடர்ந்து ஷாகமிஷன் விசாரணை நடத்தியபோது நெருக்கடி நிலை பிரகடனத்தில் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது கையெழுத்துப் போட்ட அசல் பிரகடனம் காணப்படாதது குறித்து விசாரிக்க, இந்திராகாந்தி நேரில் சாட்சியம் சொல்ல வேண்டுமென்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்திராகாந்தி ஏற்கனவே ஷா கமிஷன் முன்சாட்சியம் அளிக்க மறுத்திருப்பதால் சம்மன் அனுப்ப முடிவு செய்து, 1978 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 9,10,11 ஆகிய நாட்களில் விசாரணை நீதிமன்றத்திற்கு இந்திராகாந்தி வரவேண்டுமென்று ஆணை பிறப்பித்தார். இந்திராகாந்தி 9.1.78 அன்று ஷாகமிஷனுக்கு வந்தார்.
அவருடன் அவரது குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் நீதிமன்றத்திற்கு அன்று வந்திருந்தார்கள். இந்திரா காந்தியின் வழக்கறிஞர் பிராங்க் அந்தோணி விசாரணைக் கமிஷன் நடைமுறைகள் குறித்துச் சட்டப்பிரச்சினைகளைக் கிளப்பி வாதிட்டார். அவருடைய வாதங்களுக்குப் பதிலளித்து அரசு வழக்கறிஞரும், கமிஷன் வழக்கறிஞரும் வாதம் புரிந்தனர். வழக்கறிஞர் பிராங்க் அந்தோணி எழுப்பிய வாதங்களை நீதிபதி ஷா புறக்கணித்தார்.
நெருக்கடி நிலை கால அக்கிரமங்கள் பற்றிய புகார்களில் சில சமாந்தப்பட்டவரையில் வாக்குமூலம் தருவது கட்டாயமாகும் என்று இந்திரா காந்தியிடம் ஷா கமிஷன் தெரிவித்தது. கமிஷன் உத்தரவிட்டபடி, வாக்குமூலம் சமர்ப்பிக்கச் சட்டப் பூர்வமாகவோ அல்லது அரசியல் சாசன பூர்வமாகவோ தான் கட்டுப்படவில்லை என்று இந்திராகாந்தி தெரிவித்ததால், ஷா கமிஷன் முன் பிரமாணம் கூறி வாக்குமூலம் தாக்கல் செய்ய மறுத்ததற்காக இந்திரா காந்தி மீது டெல்லி மாஜிஸ்ட்டிரேட் ஒருவர் முன், வழக்குத் தொடரவேண்டுமென்று 11.1.78 அன்று நீதிபதி ஷா உத்தரவிட்டார்.
16.1.1978 அன்று திருச்சியில் என்னைச் சந்தித்த நிருபர்கள் "சர்க்காரியா கமிஷனை நீங்கள் புறக்கணித்ததற்கும், ஷா கமிஷனை இந்திரா காந்தி புறக்கணித்ததற்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று கேட்டார்கள். "நாட்டில் ஜனநாயகம் இல்லாத சூழ்நிலையில் சர்க்காரியா கமிஷன் விசாரணை நடைபெற்றது. தி.மு.க.தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள், பத்திரிகைகளில் வானொலியில் வெளி வர முடியாத சூழ்நிலையில் அது நடைபெற்றது.
புகார் மனு கொடுத்தவர்களையோ, சாட்சிகளையோ குறுக்கு விசாரணை செய்ய இடமளிக்காத சூழ்நிலையில் சர்க்காரியா கமிஷன் விசாரணை நடைபெற்றது. எனவே நாங்கள் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டோம். ஷா கமிஷன் நடைமுறைகளைக் காணும்போது அதில் குற்றம் சாட்டப் பட்டவர்களுடைய வாக்குமூலங்கள், விளக்க அறிக்கைகள் அனைத்தும் நாட்டுக்கு அறிவிக்கப்படுகிற அளவிற்கு உரிமையுள்ள சூழ்நிலையில் அது நடைபெறுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
நெருக்கடி காலத்தில் எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அதிகாரிகள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டார்கள் என்று ஷா கமிஷன் விசாரணையிலிருந்து தெரிகிறது. அந்த அடிப்படையில் சர்க்காரியா கமிஷன் விசாரணையில் கலந்து கொள்ளாததற்கு நாங்கள் அறிவித்த காரணங்கள் நியாயமானவை என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். நாங்கள் அப்போது சொன்ன காரணங்களையும், இப்போது இந்திராகாந்தி சொல்லும் காரணங்களையும் ஒன்றாகக் கருத முடியாது.
இரண்டும் வெவ்வேறானவை" என்று கூறினேன். ஷா கமிஷன் உத்தரவின்பேரில் இந்திரா காந்தி மீது டெல்லி தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 9.2.78 அன்று அந்த வழக்கு விசாரணைக்கு வருமென்றும், அன்றையதினம் இந்திரா காந்தி நீதி மன்றத்திற்கு வரவேண்டுமென்றும் தலைமை மாநகர மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். சென்னை நந்தனத்தில் வீட்டு வசதி வாரிய அலுவலகம் ஒன்று "கருணாநிதி மாளிகை" என்ற பெயரில் இருந்தது.
அ.தி.மு.க. அரசு 1977 ஆம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் அதிகாரிகளை அனுப்பி அந்தக் கட்டிடத்திலே இருந்த என்னுடைய பெயரை அகற்றுமாறு பணித்து அவர்களும் அந்தப் பணியிலே ஈடுபட உடனே அங்கிருந்த கழகத் தோழர்களும் பொதுமக்களும் திரண்டு காரணம் கூறாமல் எதற்காகப் பெயர்ப் பலகையை அகற்றுகிறீர்கள் என்று கேட்டவுடன் அதிகாரிகள் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டுச் சென்று விட்டார்கள். எனினும் இரண்டு நாட்கள் கழித்துப் பெயர்ப் பலகையை எடுக்க முயன்ற அரசு அதிகாரிகளைத் தடுத்ததாகக் கூறி சைதாப்பேட்டை 119வது வட்டக் கழகத் தோழர்கள் சைதை கிட்டு, அய்யாதுரை, 108 வது வட்டக் கழகத் தோழர் பலராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சைதை காவல் நிலையத்திலே வாக்கப்பில் அடைக்கப்பட்டார்கள்.
அதுபற்றி விசாரிக்கச் சொன்னபோது என் பெயரை அகற்ற வேண்டுமென்பதற்காகவே பொதுவாக ஒரு ஆணை, அதாவது உயிரோடு வாழ்கின்ற தலைவர்களின் பெயரால் அமைந்துள்ளவைகளை அது கட்டிடமாக இருந்தாலும் பூங்காவாக இருந்தாலும், வேறு நிறுவனங்களாக இருந்தாலும், அவைகளுக்கு அந்தப் பெயர்கள் சூட்டப்படக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் பேரில் தான் கருணாநிதி மாளிகை என்ற பெயர் எடுக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்கள். பொதுவாக உயிரோடு இருப்பவர்களின் பெயர் கூடாது என்ற அறிவிக்கப்பட்டதால் அசோக் நகரில் ராணி அண்ணா திருமண மண்டபத்திலும் ராணி அண்ணாவின் பெயரை அகற்றப் போவதாக அறிந்தேன்.
உடனே 1.1.78 அன்று நான் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு விடுத்த ஒரு வேண்டுகோளில் என் பெயர் எங்கு சூட்டப்பட்டிருந்தாலும் அவற்றை அடையாளம் தெரியாமல் அழித்து விடுவதற்கு மட்டும் தனி ஆணை ஒன்று பிறப்பித்துவிட்டு, பொதுவாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். மேலும் பெரியவர் பக்தவத்சலம், நாவலர் நெடுஞ்செழியன், ராணி அம்மையார், கி.ஆ.பெ. விஸ்வநாதம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், மற்றும் ஆங்காங்கு மாநகராட்சி, நகராட்சி மன்றத் தலைவர்களாக இருந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டேன்.
இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல், 2.1.78 அன்று சைதை சட்டமன்றக் கழக உறுப்பினர் து.புருசோத்தமன், ஸ்ரீதரன், அண்ணல் தங்கோ மற்றும் 27 பேர்கள் மீது அதிகாரிகளைத் தடுத்துத் தாக்க முயன்றதாகப் பொய்வழக்கு ஒன்று போடப்பட்டது. உயிரோடிருப்பவர்களின் பெயரால் எதற்கும் பெயர் இருக்கக் கூடாது என்று ஆணையிட்டவர்களே பின்னர், உயிரோடிருந்த ஆலந்தூர் மோகனரங்கம், அன்னை தெரசா, எம்.ஜி.ஆர். போன்றவர்களின் பெயரிலே மாளிகைகள், பல்கலைக் கழகங்களுக்குப் பெயர் சூட்டிய விந்தையும் தமிழகத்திலே நடந்தது.
(அதே அ.தி.மு.க. ஆட்சியிலே 1993, 1994ஆம் ஆண்டுகளில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் எத்தனை இடங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளன என்பதும் மனத்திலே கொள்ளத்தக்கது.) 31.12.1977 அன்று; அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்த தேவராஜ் அர்ஸ் அமைச்சரவை காங்கிரஸ் கட்சியிலே ஏற்பட்ட பிளவு காரணமாகவும், பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டதன் பேரிலும், கவர்னர் மத்திய அரசுக்கு - குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்து அதன் காரணமாக அங்கே ஆட்சி கலைக்கப்பட்டுக் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.
அடுத்த நாள், 1978ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் தனது துணைவியாருடனும், மற்றும் பல அதிகாரிகளுடனும் மூன்று நாள் சுற்றுப் பயணமாக டெல்லி வந்தார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பயணம் செய்வதற்காகவே அமெரிக்காவிலிருந்து தனி கார் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. அந்தக் காரிலே தான் மூன்று நாட்களும் அவர் பயணம் செய்தார். கார்ட்டரின் வருகையால் இந்தியா மகிழ்ந்திருந்த அதே நாள் 1.1.78 அன்று இரவு 8.15 மணி அளவில் பம்பாயிலிருந்து துபாய் செல்வதற்காக 213 பேர்களுடன் புறப்பட்ட "அசோக சக்ரவர்த்தி" என்ற ஏர் இந்தியா போயிங் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் இயந்திரக் கோளாறு காரணமாக பிந்த்ரா அருகே விழுந்து, அதில் பயணம் செய்த அத்தனை பேரும் கடலில் மூழ்கினர்.
2.1.78 அன்று டெல்லி நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்த வரவேற்பில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். அவரை வரவேற்றுப் பேசிய இந்தியக் குடியரசுத் தலைவர் சஞ்சீவரெட்டி, இரு நாடுகளுக்குமிடையே தெளிவான உறவு ஏற்பட கார்ட்டரின் பயணம் உதவுமென்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவுடன் அரசியல் பொருளாதார ஒத்துழைப்பைத் தொடர்ந்து பராமரித்து வரவும், அதனை அதிகரிக்கவும் அமெரிக்கா ஆவலாக உள்ளது என்றார் கார்ட்டர்.
அமெரிக்கக் குடியரசுத் தலைவரும், இந்தியப் பிரதமரும் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக தாராப்பூர் அணுமின் நிலையத்திற்கு மேலும் 7.6 டன் யுரேனியம் அனுப்ப கார்ட்டர் ஒப்புக் கொண்டார். 1978ஆம் ஆண்டு ஜனவரி 1, 2 ஆகிய நாட்களில் டெல்லியிலே இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் தனி மாநாடு ஒன்றை நடத்தி காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு விட்டது என்றும் இனி காங்கிரஸ் கட்சிக்கு இந்திரா காந்திதான் தலைவர் என்றும் அறிவித்தார்கள்.
அவர்கள் கூட்டிய கூட்டத்திலே எத்தனைப் பேர் கலந்து கொண்டார்கள் என்பது பற்றி முரண்பட்ட தகவல்கள் செய்தியாளர்களுக்குத் தரப்பட்டது. அ.இ.கா.க. உறுப்பினர்கள் 664 பேரில் 347 உறுப்பினர்கள் மட்டுமே தங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்று அறிவித்தனர். செய்தி வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் குறைவான உறுப்பினர்களே கலந்து கொண்டதாகத் தெரிவித்தனர். பிரமானந்த ரெட்டி தலைமையிலே உள்ள காங்கிரஸ் காரியக்கமிட்டி 2.1.78 அன்று அவசர அவசரமாகக் கூடி, இந்திரா காந்தியும் மற்ற ஏழுபேரும் காரியக் கமிட்டியிலிருந்து விலகியதாக எழுதிக் கொடுத்ததை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் இந்திரா காந்தியின் ஆதரவாளராக இருந்ததால், பிரமானந்த ரெட்டி மூப்பனாரை நீக்கிவிட்டு, ஓ.வி.அளகேசன் அவர்களை அந்தப் பதவியிலே நியமித்தார். இந்திரா காந்தியின் குழுவினர், தங்களது காரியக் கமிட்டி, பிரமானந்த ரெட்டியையும், ஓய்.பி.சவானையும் இந்திய தேசிய காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். இதற்கு ஓய்.பி.சவான், இந்திராகாந்தி பிரதமராகத் தன்னைத்தானே அறிவித்துக் கொள்ளவில்லையே என்று, ஜனதா கட்சி இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
பிரமானந்த ரெட்டி தலைமையிலே உள்ள காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னம் தரப்படக் கூடாதென்று தேர்தல் கமிஷனிடம் இந்திரா குழுவினர் கேட்டுக் கொண்டனர். பிரமானந்த ரெட்டி குழுவினரோ, தங்களுக்குத்தான் பசுவும் கன்றும் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென்று முறையீடு செய்தனர். 1978ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் ஐந்து மாநிலங்களுக்கும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்ததால், இரு தரப்பினரும் பசுவும் கன்றும் சின்னத்தைப் பெற தேர்தல் கமிஷன் முன் வாதம் செய்தனர்.
இருதரப்பு வாதத்தையும் கேட்டபிறகு தேர்தல் கமிஷன் 23.1.78 அன்று அளித்த தீர்ப்பில் பிப்ரவரியில் நடைபெறும் தேர்தலில் பிரமானந்த ரெட்டி தலைமையிலே உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பசுவும் கன்றும் சின்னம் அனுமதிக்கப்படுமென்றும், மேலும் இந்தச் சின்னத்துக்காக உரிமை கொண்டாடி இந்திரா காந்தி தலைமையிலுள்ள கட்சி செய்துள்ள மனு சம்பந்தமாக, தலைமை தேர்தல் கமிஷனருக்குத் திருப்தி ஏற்படுத்துவதற்கு மேற்கொண்டு ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பிக்கும் வரை, அந்தக் கோரிக்கை பைசல் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தது. தேர்தல் கமிஷன் அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்திலே இந்திரா காந்தியின் பிரிவினர் மேல்முறையீடு செய்தனர்.
23.1.1978 அன்று வட இந்தியாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திராகாந
்தி நெருக்கடிக் காலத்தில் நடந்த எல்லாத் தவறுகளுக்கும், கொடுமைகளுக்கும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். அனைத்திற்கும் தாமே முழுப் பொறுப்பேற்பதாகவும் கூறினார். தவறுகளுக்கும், கொடுமைகளுக்கும் காரணமானவர்கள் அவற்றிற்கு பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாவிட்டாலும், தான் அந்தத் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதாகக் கூறினார். இதற்கிடையில் தமிழகத்திலே 2.1.1978 அன்று அ.தி.மு.க. அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஒன்றைக் கழகத்தின் சார்பிலே கொடுத்து, ஜனவரி 4, 5 ஆகிய நாட்களில் அதற்கான விவாதம் அவையிலே நடைபெற்றது.
முன்மொழிந்து பேசும்போது நான், "நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அவையிலே வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு தி.மு.கழகச் சார்பிலே கொண்டு வரப்படவில்லை; இதனைக் கொண்டு வந்த நோக்கம் அரசு ஆறு மாதகாலத்தில் செய்துள்ள தவறுகளை எண்ணிப் பார்த்துத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்" என்று கூறினேன்.
ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க் கட்சியான தி.மு. கழகமும் அந்த ஓராண்டுக் காலத்தில் எப்படிச் செயல்பட்டன என்பது பற்றி டெல்லியிலிருந்து வெளிவரும் "இந்தியா டுடே" (India Today) ஆங்கில ஏடு 1978-ஆம் ஆண்டு ஜனவரி இதழிலே ஒரு கட்டுரை மூலமாக வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பாக, "நூற்றுக் கணக்கான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழ்நாட்டு அரசியல் பந்தயத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான கருணாநிதியிடத்தில் தோற்று வருகிறார்.
எம்.ஜி.ராமச்சந்திரனும், அ.தி.மு.க.வும் கருணாநிதியிடத்திலே ஈடுகொடுக்க இயலவில்லை. கருணாநிதி தற்போது ஆட்சிப் பொறுப்பில் இல்லை என்றாலும், இந்திரா காந்திக்கு எம்.ஜி.ஆர். தந்து வருகிற ஆதரவையும், தமிழ்நாட்டில் புயலால் ஏற்பட்ட பேரழிவையும் பயன்படுத்திக் கொண்டு அரசியலில் எம்.ஜி.ஆர். உடைய சாதுர்யமற்ற தன்மையை கருணாநிதி அம்பலப்படுத்தி விட்டார்" என்று எழுதப்பட்டிருந்தது.
அதுமாத்திரமல்ல; கல்கத்தாவிலிருந்து வெளிவரும் "சண்டே" (Sunday) ஆங்கில ஏடு "ஒரு சினிமா நடிகரும்கூட, நாடாளுவதற்கு முடியுமென்பதை 1977-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். நிரூபித்துள்ளார். ஆனால் அந்த நடிகர் திறமையாகவும் நாடாள முடியும் என்பதை அந்த ஆண்டின் இறுதிக்குள் அவரால் நிரூபிக்க முடியவில்லை. இந்திரா காந்திக்கு எதிராக தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தை சமாளிப்பதிலும் கூட எம்.ஜி.ஆர். பெரும்தவறு செய்து விட்டார்.
அரசியல் முதிர்ச்சி பெற்ற தி.மு.கழகத்தின் தலைவரான கருணாநிதியோ சட்ட மன்றத்தினுள் தனது மதி நுட்பமான தாக்குதல்களாலும், வெளியே பொதுமக்களிடம் உள்ள நேர்த்தியான உறவாலும் பிரச்சாரத்தாலும் வெற்றிமேல் வெற்றி குவித்து வருகிறார். அரசை தாக்குவதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் அவர் தவற விடுவதில்லை. இவ்வளவு தோல்விகளுக்குப் பிறகும் தனது கட்சித் தொண்டர்களை தன்னிடத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
தனது கட்சியின் செயல்வேகம் அளவோடு - எப்படி அதிகமாகப் போகாமலும், அதே நேரத்தில் செயலற்று விடாமலும் இருக்க வேண்டுமென்பது - மிகுந்த புத்திகூர்மையுள்ள கருணாநிதிக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கின்றது" என்று எழுதியது. ஜனவரி திங்கள் முதல் வாரத்திலேயே அமெரிக்க குடியரசு தலைவர் கார்ட்டர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துவிட்டு திரும்பிய ஓரிரு நாட்களிலேயே குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமேயானால் 6.1.78 - அன்று பிரிட்டிஷ் பிரதமர் ஜேம்ஸ் கல்லகன் இந்தியாவிற்கு வருகை தந்தார்.
கல்லகன் வருகை தந்துவிட்டு திரும்பிச் சென்ற சென்ற சில நாட்களுக்குப்பின் மத்திய அரசு இனி ஆயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீர் பிரகடனத்தை வெளியிட்டது. அந்த அறிவிப்பு இந்திரா காந்தி மற்றும் அவர்களது தரப்பினரிடம் உள்ள அதிகப்பணத்தை முடக்குவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு என்று விமர்சிக்கப்பட்டது. அந்த நோட்டுகள் செல்லுபடி ஆகாது என்று அறிவிக்கப்பட்டது பற்றி செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, "அது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இந்த நோட்டுகள் வங்கிகளில் கொடுத்து முறையாக மாற்றும் போது நோட்டுகள் கிடைத்த வகை, இடம் முதலியன குறித்து ஆய்வு செய்யும்போது வங்கியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்திட வேண்டும்" என்று கூறினேன்.
