நெஞ்சுக்கு நீதி
காங்கிரசில் மீண்டும் பிளவு · 248 / 391
32. காங்கிரசில் மீண்டும் பிளவு வி மான விபத்திலிருந்து தப்பிய பிரதமர் மொரார்ஜிதேசாய் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் எனது சிறை முகவரிக்கே எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றேன். அது போலவே 2.12.1977 தேதியிட்டுத் தமிழக கவர்னர் பட்வாரி எனது சிறை முகவரிக்கு எழுதிய கடிதத்தில் "அன்புள்ள கருணாநிதி, புயல் வெள்ள நிவாரணப் பணிகளில் தங்களின் தீவிரமான ஒத்துழைப்பையும் பங்கையும் நான் பாராட்டுகிறேன்.
இது (புயல் வெள்ளம்) நாட்டிற்கு ஏற்பட்ட பேராபத்து. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். உங்கள் கட்சித் தொண்டர்கள் தங்களால் இயன்றவரை இந்த நற்பணிக்கு உதவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறிகிறேன். மிக்க நன்றி" என்று எழுதியிருந்தார்.
சிறையிலிருந்த எங்களுக்கு அக்கடிதம் பெரிதும் ஆறுதலாயிருந்தது. கழகத் தலைவர்களை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரியும் டிசம்பர் 9ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் மறியல் போர் நடத்திடத் தலைமைக்கழகச் சார்பில் விடுத்த அறிவிப்புக் கேற்ப அதற்கான ஏற்பாடுகளில் கழகத் தோழர்கள் இறங்கி, அதுபற்றிய செய்திகள் வந்தவண்ணமிருந்தன. எந்தெந்த தேதிகளில் யார்யாருடைய தலைமையிலே மறியல் போராட்டங்கள் நடைபெறவிருக்கின்றன என்பதெல்லாம் அன்றாட ஏடுகளில் வந்தன.
இதற்குப் போட்டியாக ஆளுங்கட்சியினர் என்னுடைய கொடும்பாவியைக் கொளுத்தப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததைப் பார்த்துவிட்டு, எம்.ஜி. ஆர். படங்களையும், கொடும்பாவிகளையும் கொளுத்திடக் கழகத் தொண்டர்கள் ஏற்பாடுகள் செய்வதாகச் சிறைக்கு எங்களுக்குச் செய்தி வந்தது.உடனே கழகப் பொறுப்பாளர், புலவர் கோவிந்தன் மூலம் தி.மு.கழகத்தினர் யாரும் எந்த இடத்திலும் யாருடைய படங்களையோ, கொடும்பாவிகளையோ கொளுத்துகின்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடக்கூடாது என்று திட்டவட்டமாகக் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது.
சிறை முகவரிக்கு புயல் நிவாரண நிதியாக என்னடைய பெயருக்கு மணியார்டர் மூலம் நிதியனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் மாநில அரசு அதற்கு இடையூறுகளைச் செய்திட்ட போதிலும், அதனையும் மீறி 7.12.1977 அன்று வரை வந்த மணியார்டர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தொகை எழுபதாயிரம் ரூபாயையும் தாண்டியது. 8.12.1977 ஆம் தேதியோடு எங்களுடைய ரிமாண்ட் காலம் முடிவுற்றதால், அன்று காலையிலேயே எழும்பூர் நீதிமன்றத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டோம்.
காவல் துறையினர் வழக்கம் போலவே ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தனர். கழகத் தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் நீதிமன்றம் இருந்த தெரு முழுவதும் நிரம்பியிருந்தனர். நீதிமன்றத்தில் அரசு துணை வழக்கறிஞர் வாதிடும் போது - அந்த வழக்குத் தொடர்பாக மேலும் ஆதாரங்களைத் திரட்ட அரசு தரப்பிற்கு சிறிது அதிகமான காலம் தேவைப்படுவதாகவும், எனவே எதிரிகளை பொறுப்பிலே விடுவதிலே அரசுக்கு மறுப்பு எதுவும் இல்லை என்றும், தாங்கள் காவல் நீடிப்புக் கோராததற்குக் காரணம் தங்களிடம் தக்க முகாந்திரம் இல்லை என்பதால் அல்ல என்றும், காவல்துறையினரின் புலனாய்வுகளுக்கு நீண்டகாலம் தேவைப்படுமென்பதால், தாங்கள் காவலை நீடிக்குமாறு வற்புறுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் அவர்கள் அவ்வாறு அறிவிக்கக் காரணம் தமிழகம் முழுவதும் டிசம்பர் 9ந்தேதி முதல் தி.மு.கழகத்தின் சார்பிலே அறிவிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய மறியல் போராட்டம்தான். அன்றைய தினம் நீதிமன்றத்தில் தி.மு.கழகத்தின் சார்பாக வாதாடிய பாளையங்கோட்டை சண்முகம் அவர்கள், தனது வாதத்தின் போது - "அரசு தரப்பு வழக்கறிஞர் மேலும் காவலை நீடிக்க வலியுறுத்தாத நிலையிலே பொறுப்பிலே விடுதலை என்ற கேள்விக்கே இடம் இல்லை.
இந்த வழக்கு முழுமையும் அரசியல் உள்நோக்கத்தோடு திணிக்கப்பட்டதாகும். இங்கே குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் நாட்டை விட்டு ஓடி விட மாட்டார்கள். அவர்களைப் பொறுப்பிலே விடக் கோரி நாங்கள் மனு எதையும் தாக்கல் செய்யமாட்டோம். மேலும் சர்க்காரே ரிமாண்ட் நீடிப்பைக் கேட்காத போது ஜாமீன் பிரச்சினையே எழவில்லை" என்று குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கழகத் தலைவர்களையும், முன்னணியினரையும் நிபந்தனையின்றி விடுவித்து, இனிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சம்மன் அனுப்பப்படுகிறபோது நீதி மன்றத்திற்கு வந்தால் போதுமானது என்று தீர்ப்புக் கூறி எங்களை அனுப்பினார். நீதிமன்றத்திலிருந்து நாங்கள் அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான கழகத் நாங்கள் தோழர்கள் சூழ்ந்து வர ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டோம்.
நேராக அண்ணா சாலை வந்து, அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, கடற்கரை காமராஜர் சாலை சென்று அண்ணாவின் சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, அரசினர் தோட்டத்தில் உள்ள தி.மு.கழக சட்டமன்றக் கட்சி அலுவலகத்திற்குச் சென்றோம். நாற்பது நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலையான நாங்கள் அ.தி.மு.க. ஆட்சியின் அடக்கு முறைக்கு, துப்பாக்கிச் சூட்டிற்குக் களப்பலியான கழகக்காளையர் சைதாப்பேட்டை தீனன், திருவல்லிக்கேணி பாபு ஆகியோர் இல்லங்களுக்கு அன்றைய தினமே சென்று, அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு-இருவர் குடும்பத்திற்கும் தனித்தனியே ஐந்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தி.மு.கழகத்தின் சார்பிலே வழங்கினோம்.
தீனன், பாபுவினுடைய தியாக வரலாறுகள் கழகச் சரித்திரத்தில் என்றும் மறையாமல் மங்காமல் நிலைத்திருக்கும் என்று அங்கே குழுமியிருந்த கழகத் தோழர்களிடையே பேசும்போது தெரிவித்தேன். செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து சிறைவாசம் பற்றிக் கேட்டனர். "நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் நாற்பது நாட்கள் எங்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்தார்" என்றும் "கழகத்தவர்களின் விடுதலை குறித்தும், அரசின் போக்கைக் கண்டித்தும் நடைபெறுவதாக இருந்த அறப்போராட்டங்களை ஒத்தி வைக்கும்படி அனைத்துக் கழக அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம்" என்றும், 11.12.1977 முதல் 16.12.1977 வரை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நானும், பேராசிரியரும், கழக முன்னணியினர் சிலரும் செல்லப் போகிறோம்" என்றும் தெரிவித்தேன்.
அவ்வாறு அறிவித்தவாறு 11ஆம் தேதி புறப்பட்டு புயல் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றோம். தென்னாற்காடு, தஞ்சை மாவட்டச் சுற்றுப்பயணத்தை முடிக்கவே மூன்று நாட்கள் ஆகிவிட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கச் சென்ற எங்களைச் சுற்றி, மக்கள் வெள்ளம் சூழ்ந்து கொண்டு புயல் நிவாரண நிதியைப் போட்டி போட்டுக் கொண்டு அளித்தனர். திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, மன்னார்குடியை நோக்கி எங்களுடைய வேன் சென்று கொண்டிருந்தது.
வேனில் நான், பேராசிரியர், மன்னை நாராயணசாமி மற்றும் முன்னணியினர் இருந்தோம். மன்னார்குடிக்குப் பத்துக் கல் தொலைவு இருக்கும் போதே எதிரே எங்கள் வேனை நோக்கி ஒரு கழகத்தோழர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவர் எங்கள் வேனை மறித்ததும், மன்னை, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு, அவரை அழைத்து என்ன விவரம் என்று கேட்டார். மன்னார்குடி கீழ்ப்பாலம் அருகே அ.தி.மு.க.வினரும், காங்கிரசாரும் ஐநூறு பேருக்கு மேல் கூடிக்கொண்டு எங்களுக்குக் கறுப்புக்கொடி காட்டுவதற்காக தயாராக இருப்பதாகவும், காவலர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக நின்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
உடனே மன்னை நாராயணசாமி எங்களிடம் தான் முன் செல்வதாகவும், எங்களை பத்து நிமிடம் தாமதமாக காப்பி அருந்திவிட்டு வரும்படியும் கேட்டுக் கொண்டு வேறொரு காரில் ஏறி மன்னையை நோக்கிச் சென்று விட்டார். நாங்களும் சில நிமிட தாமதத்திற்குப் பிறகு புறப்பட்டோம். அந்தப் பத்து நிமிடகால தாமதத்தில் மன்னார்குடி கீழ்ப்பாலத்தில் மன்னை அவர்கள் ஒரு மாயாஜாலத்தையே நடத்தியிருந்தார். கறுப்புக்கொடி காட்ட வந்தவர்கள் பாலத்திற்குக் கீழேயுள்ள தண்ணீர் இல்லாத ஆற்று மணலிலே ஓடிக் கொண்டிருந்த காட்சியைக் கண்டோம்.
பாலத்தின் மீது பத்தாயிரத்திற்கும் குறையாத கழகத் தோழர்கள் இருவண்ணக்கொடியேந்தி எங்களை வரவேற்றனர். அவர்கள் அனைவரும் எங்களைக் கண்டதும் உணர்ச்சி வயப்பட்டு வாழ்த்து முழக்கமிட்டனர். தலையிலே முண்டாசுடன் மன்னை எங்கள் வேனை நெருங்கி எங்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். சாலை முழுவதும் சிதறிக்கிடந்த கற்கள் அந்த சிறு இடைவெளியிலே அங்கே என்ன நடைபெற்றிருக்கும் என்பதை எங்களுக்கு உணர்த்தியது. காவலர்கள் கண்ணீர் புகை வீசாமல் இருந்தால் பல கொலைகள் அங்கே நடைபெற்றிருக்குமென்றும் அதற்குள் கறுப்புக் கொடி காட்ட வந்தவர்கள் காணாமல் போய்விட்டனர் என்றும் கூறி, எங்களை நேராகப் பயணியர் விடுதிக்கு மன்னை அழைத்துச் சென்றார்.
அங்கே என்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் "இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை எதிர்த்தும், அவர் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காகவும் தி.மு.கழகம் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டியது. ஆனால் இன்று அ.தி.மு.க. உதவியோடு காங்கிரசார் எங்களுக்குக் கறுப்புக் கொடி காட்ட முனைந்துள்ளார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். பொது வாழ்வுக்கு வந்த பின் உயிருக்குப் பயப்படக்கூடாது. இனி அ.தி.மு.க.
காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களுக்கு, தி.மு.கழகமும் கறுப்புக் கொடி காட்டும்" என்று கூறினேன். இந்த அறிவிப்புக்கு மறுநாளே, அ.தி.மு.க. சார்பில் யாரும் கறுப்புக் கொடி காட்டக் கூடாது என்று எம்.ஜி.ஆர். அறிக்கை விட்டார். அதைத் தொடர்ந்து, மூப்பனார் அவர்களும் அவரது கட்சியினர் யாரும் கறுப்புக்கொடி காட்டக்கூடாதென்ற அறிக்கை விடுத்தார். திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் இந்திராகாந்திக்கு ஆதரவாகவும் பக்தவத்சலம், சி.சுப்ரமணியம், ஓ.வி.
அளகேசன் ஆகியோர் பிரமானந்த ரெட்டிக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர். காங்கிரஸ் கட்சியிலே இவ்வாறு குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் 19.12.77 அன்று வங்கதேச ஜனாதிபதி ஜியாவுர் ரகுமான் டெல்லிக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி, பிரதமர் மொரார்ஜிதேசாய், பாதுகாப்பு அமைச்சர் ஜெகஜீவன்ராம், வெளிவிவகாரத்துறை அமைச்சர் வாஜ்பாய், மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இரு நாடுகளுக்கிடையே நட்புறவு சீராக வளர்ச்சி அடைந்துள்ளது குறித்துத் திருப்தி அடைவதாக ஜியாவுர் ரகுமான் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களும் ஜியாவுர் ரகுமான் அவர்களும் இருமுறை சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு நிலைகள் பற்றி நீண்ட நேரம் பரிசீலித்தனர். நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடி நிலையை ஆதரித்து வந்தது. 1977ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் டெல்லியில் நடைபெற்ற அந்தக் கட்சிக் கூட்டத்தில் நெருக்கடி நிலையை ஆதரித்தது தவறு என்று முடிவு செய்தது.
செயற்குழு எடுத்த இந்த முடிவின் போது, நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது அந்தக் கட்சியின் தலைவராக இருந்த டாங்கே, கலந்து கொள்ளாததோடு கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பொறுப்பிலிருந்தும் தான் விலகிக் கொள்வதாகவும், பதவியில் நீடிக்கத் தனது உடல் நிலை இடம் கொடுக்கவில்லை என்றும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். 1962 ஆம் ஆண்டு முதல் பதினைந்து ஆண்டுகளாக அந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர் அவர். அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என்றும் மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் அந்தக் கட்சியின் மாநாட்டுக்கு முன் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுப்பது சரியில்லை என்றும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜேஸ்வரராவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
திரைப்பட உலகிலே பேசாத படங்களின் காலத்திலேயே ஹாலிவுட் திரையுலகத்தின் முடிசூடா மன்னனாகத் திகழந்தவர் சார்லி சாப்ளின். அவர் நடித்த சிட்டி லைட்ஸ், கோல்ட் ரஷ், டிக்டேட்டர், த கிட் போன்ற படங்கள் திரை உலகில் நிலையான புகழுக்குரியவை. ஐம்பதாண்டுக் காலத்திற்கும் மேலாகத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர். 'சினிமாத்துறை நமக்கு அளித்த ஒரே மேதை சார்லி சாப்ளின்தான்' என்ற ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்களாலேயே பாராட்டப்பட்டவர்.
நான்குமுறை திருமணம் செய்து கொண்டவர். இவரது மகள் ஜெரால்டின் சாப்ளினும் திரை உலகில் நுழைந்து சிறந்த நடிகையாகப் புகழ் பெற்றார். இலண்டன் நாடக கொட்டகையில் திரை தூக்கும் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கிய சார்லி சாப்ளின் பின்பு அமெரிக்கா சென்று உலகம் புகழும் நடிகனாக உயர்ந்தார். அவர் 1977ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஜெனீவா நகரில் தனது 88-வது வயதிலே மரணமடைந்தார்.
இதற்கு முதல்நாள் 24.12.77 அன்று தந்தை பெரியார் நினைவு நாளையொட்டிப் பெரியார்திடலில் நடைபெற்ற "பெரியார் களஞ்சியம்" நூல் (முதல் தொகுப்பு) வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு உரையாற்றினேன். 26.12.77 அன்று மயிலை மாங்கொல்லையிலே நடைபெற்ற மூதறிஞர் ராஜாஜி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உரையாற்றினேன். 29.12.77 அன்று சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கவர்னர் பட்வாரி அவர்களை அழைத்து தி.மு.கழகத்தின் சார்பில் திரட்டப்பட்ட புயல் நிவாரண நிதியினை வழங்கினோம்.
பேராசிரியர் தலைமையிலே நடைபெற்ற அந்த விழாவிலே கலந்து கொண்டு பட்வாரி அவர்கள் அந்த நிதியினைப் பெற்றுக் கொண்டார். தி.மு.கழகத்தின் சார்பிலே முதலிலே அளிக்கப்பட்ட 25,000 ரூபாயை அன்னியில் மேலும் மூன்று இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதியினை கவர்னரிடம் நான் அன்று அளித்தேன். இந்த நிதியிலே மணியார்டர் மூலமாக எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் நிதியும், வெள்ளப்பகுதிகளைப் பார்க்கச் சென்ற நேரத்தில் என்னிடம் தரப்பட்ட ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தொகையும் அடங்கும்.
இந்த விழாவிலே துணைப் பொதுச் செயலாளர் ப.உ.சண்முகம் வரவேற்புரையாற்ற, பொருளாளர் சாதிக் நன்றி கூறினார்.
