உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/சிறையிலிருந்து ஸ்டாலினுக்குக் கடிதம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

சிறையிலிருந்து ஸ்டாலினுக்குக் கடிதம் · 247 / 391

31. சிறையிலிருந்து ஸ்டாலினுக்குக் கடிதம் நா னும், பேராசிரியரும், மற்றும் கழக முன்னணியினரும் கைதானதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் சுமார் 70 பேருந்துகள் சேதமடைந்தன. சென்னை மைலாப்பூர் காவல் நிலையத்தில் தொண்டர் அணிச்செயலாளர் இளம்பரிதி அங்குள்ள காவலர்களால் பயங்கரமாகத் தாக்கப்பட்டார் என்ற செய்தியும் வந்தத. அக்டோபர் 31ந் தேதி டெல்லி செல்லும் வழியில் சென்னை வந்த மத்திய தொழில் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் செய்திகளையெல்லாம் கேள்வியுற்றுச் செய்தியாளர்களிடம் "கலைஞரும் அவரது தோழர்களும் ஆட்சியினரால் கைது செய்யப்பட்டது அறிந்து பெரிதும் வருந்துகிறேன்; மாநில ஆட்சியாளர் தங்களது அரசியல் எதிரிகளைப் பழி வாங்கும் போக்குடன் நடந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்திருந்ததை ஏடுகளிலே கண்டேன்.

அக்டோபர் 30ந் தேதி கிண்டி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மறைந்த கழகக் காளை தீனனின் இறுதி ஊர்வலம், சென்னை மாவட்டக் கழகத் தோழர்களின் இறுதி அஞ்சலியோடு நவம்பர் முதல் தேதி நடைபெற்றது. நாங்கள் சிறையில் அடைக்கப்பட்ட செய்தியினைக் கேட்டு, சென்னை புரசைப் பகுதியைச் சேர்ந்த பீட்டர் ஐசக் என்ற கழகத் தோழர் அதிர்ச்சி காரணமாக அன்றைய தினமே மரணமடைந்தார். எங்கள் கைது செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்து மறுபடியும் நினைவு வராமல் போன மற்றொரு தோழர், மதுரை கோரிப்பாளையம் முகமதியர் தெருவைச் சேர்ந்த மைதீன் பிச்சை.

நவம்பர் முதல் தேதி காலையில் சென்னை சிறைவாயிலில் குருசாமி என்ற கழகத் தோழர் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு "கலைஞரை விடுதலை செய்" என்ற முழக்கத்தோடு தீ வைத்துக்கொள்ள முற்பட்ட நேரத்தில் சிறைக்காவலர்கள் தடுத்து நிறுத்திக் காப்பாற்றினர். அதனைக் கேள்விப்பட்ட நான், கழகத் தோழர்கள் யாரும் அப்படிப்பட்ட செயல்களிலே ஈடுபடக் கூடாது என்ற கண்டிப்பான வேண்டுகோளை வெளியிட்டேன். பம்பாய் நகர தி.மு.கழகச் செயலாளராக இருந்த சேரன் மாதேவி செழியன், நான் கைதான செய்தி கேட்டு அதிர்ச்சியுற்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்ற செய்தியும் வந்தது.

தஞ்சையில் புகைவண்டி நிலையங்கள் எல்லாம் தாக்குதலுக்கு ஆளாயின. கண்ணீர்ப் புகை வீச்சும், பல இடங்களில் தொடர்ந்தது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டுமென்று கோரி 3.11.1977 அன்று சென்னையில் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் வேலை நிறுத்தம் செய்தன. சிறையிலே இருந்த அன்னை மணியம்மையாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயன்றதாகவும், அதற்காக முன்கூட்டியே சதி செய்ததாகவும் மற்றும் பல பிரிவுகளை உள்ளடக்கி சென்னை நீதி மன்றத்தில் "முதல் தகவல் அறிக்கை" நவம்பர் முதல் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது.

அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, பெரியண்ணன் உட்பட்ட திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை கழகத் தோழர்கள் 2.11.1977 அன்று காலையிலேயே கைது செய்யப்பட்டுத் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அன்று மதியம் 3 மணி அளவில் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிட்டதாகக் காவல் துறையினரே கூறி அனுப்பி வைத்து விட்டார்கள். மாணவர்கள் எழுச்சி தமிழகமெங்கும் பரவிப் பல இடங்களில் கல்லூரிகள் மூடப்பட்டன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது. 1.11.1977 தேதியிட்ட 'டைம்ஸ் ஆப் இண்டியா' ஏடு தனது தலையங்கத்தில் "தமிழகத்தின் சுவர்களில் எழுதப்பட்ட வாசகங்களைப் பார்த்து, உரிய நேரத்தில் தனது சுற்றுப்பயணத்தை இந்திரா காந்தி இரத்து செய்திருந்தால் தனக்கு ஏற்பட்ட சங்கடங்களைத் தவிர்த்திருப்பதோடு, விலை மதிப்பற்ற பல உயிர்களைச் சித்ரவதைக்கு ஆளாக்காமல் காப்பாற்றியிருக்க முடியும்" என்று எழுதியது.

கண்டன ஊர்வலம் நடத்திக் கைதாக முன் வந்த கழகத் தொண்டர்களிடம் "சிறையில் இடம் இல்லை, தயவு செய்து போய்விடுங்கள்" என்று காவல் துறையினரே ஆங்காங்கு கேட்டுக்கொண்டனர். நவம்பர் திங்கள் ஆறாம் நாள் மாநிலமெங்கும் கண்டன ஊர்வலமும் அடக்குமுறை எதிர்ப்புத் தினமும் கடைப்பிடிக்கத் தமிழ்நாடு ஜனதா கட்சி முடிவெடுத்து அறிவித்தது. திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாதன் காவலர்களால் குறிவைத்துத் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார்.

நவம்பர் 3ஆம் தேதி மாலையில் அதுவரையில் கைதாகாமல் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ரகுமான்கான், க. சுப்பு, செஞ்சி ராமச்சந்திரன், துரை. கலியமூர்த்தி, டி.கே. கபாலி, இளம்பரிதி, மணிமுடி, ரகுராமன், எலமந்தா மற்றும் டி. ஆர். பாலு ஆகியோர் தமிழக கவர்னர் பட்வாரி அவர்களைச் சந்தித்து நிலைமைகளை எல்லாம் விளக்கியதோடு, உடனடியாகச் சட்ட மன்றத்தினைக் கூட்ட ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர். முத்தமிழ்க் காவலர் கி.

ஆ. பெ. அவர்கள் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களையெல்லாம் உடனடியாக எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டுமென்று அறிக்கை விடுத்தார். 3.11.1977 அன்று இந்திரா காந்தி கர்நாடக மாநிலத்தில் சுற்றுப் பயணம். அந்த மாநிலத்திலும் அம்மையாருக்கு ஜனதா கட்சியினரும், தி.மு.கழகத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சேர்ந்து கறுப்புக் கொடி காட்டினார்கள். அங்கும் தடியடிப் பிரயோகம், கண்ணீர்ப் புகை தொடர்ந்தது.

சிமோகா என்ற ஊருக்கு பொதுக்கூட்டம் பேசுவதற்காகச் சென்றபோது அவரது காரை நோக்கிக் கற்களும் செருப்புகளும் வீசப்பட்டன. கல்வீச்சில் இந்திரா காந்தியின் வலது காதில் காயமேற்பட்டது. காதின் கீழ்ப்பகுதி அறுபட்டு இரத்தம் கொட்டியது. உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டுத் தையல் போடப்பட்டது. அதோடு பொதுக்கூட்டத்தில் பேச முற்பட்டு, அங்கும் கலவரம் ஏற்பட்டதால், சுருக்கமாகத் தன் பேச்சினை முடித்துக்கொண்டார்.

மறுநாள் மைசூர் நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டன. 4.11.77 அன்று பெங்களூரில் இந்திரா காந்திக்குக் கறுப்புக் கொடி காட்டிய கழகத் தோழர்கள் மீதும் காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர். திராவிட மணி, சோழன் உட்பட 24 கழகத் தோழர்கள் அதில் காயமடைந்தனர். அக்டோபர் 30ந் தேதி கிண்டியில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மரணமடைந்து சில நாட்கள் வரை அது யார் என்றே கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது; சைதாப்பேட்டை ஜோன்ஸ் தெருவைச் சேர்ந்த சுப்ரமணியம் என்ற - ஜனதா கட்சியைச் சேர்ந்த பெரியவர் என்பது தெரிந்தது.

3.11.1977 அன்று கோவை நகருக்குச் சென்ற அ.தி.மு.க. அமைச்சர்கள் அரங்கநாயகம், காளிமுத்து ஆகியோருக்கு கோவை அண்ணா சிலை அருகில் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களாலும், பொது மக்களாலும் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. தமிழகம் இவ்வாறு கொந்தளிப்பில் இருந்த நேரத்தில் 4.11.77 அன்று இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அஸ்ஸாம் மாநிலத்திற்குச் சென்றபோது இடையில் விமானம் பழுதடைந்து அவசரமாக வயலிலே இறங்கிவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஐந்து விமானிகளும் கொல்லப்பட்டார்கள். ஆனால் தேசாய் அவர்களும் மற்றும் பயணிகள் 23 பேரும் உயிர் பிழைத்தார்கள். தேசாய் அவர்களின் மகன் காந்தி தேசாய் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. சிறையில் இருந்தவாறே பிரதமர் அவர்களுக்கு இதுபற்றித் தந்தி கொடுத்தேன். 29.10.1977 அன்று மதுரையிலே கைது செய்யப்பட்ட தென்னரசு, பொன். முத்துராமலிங்கம், காவேரி மணியம், அக்னிராஜ், வை.

கோபால்சாமி, பழக்கடை பாண்டி, நெல்லை நெடுமாறன், மலைக் கண்ணன் உட்பட 124 பேர்கள் மீது இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயன்றதாக வழக்குப் போடப்பட்டு ஜாமீன் மறுக்கப்பட்டது. கிண்டி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சென்னை மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கழகத் தோழன் பாபு, சிகிச்சை பயனின்றி 4.11.77 அன்று இரவு மருத்துவமனையிலே மறைந்து, துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினான்.

பாபு மறைந்த செய்தியை ஏடுகளிலே கண்டு கலங்கிக்கொண்டிருந்த நேரத்தில், 5.11.1977 அதிகாலை முதல் அறிவகம், முரசொலி அலுவலகம், அரசினர் தோட்டத்தில் உள்ள கழக அலுவலகம், போன்ற இடங்களிலும், ஆசைத்தம்பி, ஆற்காடு வீராசாமி, சீத்தாபதி ஆகியோர் இல்லங்களிலும் போலீசார் புகுந்து சோதனை நடத்திக் கொண்டிருப்பாதகவும் தலைமைக் கழகத்திலே இருந்த குப்புசாமி அவர்களைக் காவல்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகவும், அவர் எங்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று தெரியவில்லை என்றும் செய்திகள் வந்தன. முரசொலி மாறன் ஆளுநர் பட்வாரி அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காவல் துறையினரின் அத்து மீறிய செயல்கள் குறித்து விளக்கினார்.

அதன் பின்னர் குப்புசாமியை கைது செய்து வைத்திருப்பதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 6.11.77 அன்று சென்னை நகரமே குலுங்கத் தக்க வகையில் கழக முன்னணியினர் எல்லாம் சிறையிலே இருந்த நேரத்திலும் எங்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி மாபெரும் பேரணி கிண்டி ராஜ்பவனத்தை அடைந்து ஆளுநரிடம் மனு ஒன்றையும் அளித்தது. அதில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி நீதி விசாரணை ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

நானும் கழக முன்னணியினரும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டிருப்பது அறிந்து நாகர்கோவில் 13வது வட்ட உறுப்பினர் எம்.பேரின்பதாஸ் அதே நினைவாகவே இருந்து 3.11.77 அன்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார் என்ற செய்தியும் சிறைக்குக் கிடைத்தது. தமிழகத்திலே கறுப்புக் கொடியினை ஜனநாயக முறையிலே காட்டியவர்கள் மீது காவல்துறையினரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் - பல பிரிவுகளில் கொலை முயற்சி வழக்கு.

ஆனால் கர்நாடகத்தில் இந்திரா காந்திக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அந்த மாநில நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி சம்பவம் நடந்த சில நாட்களிலேயே நிபந்தனையின்றி விடுதலை செய்து தீர்ப்பளித்தார். ஆனால் தமிழகத்திலே அ.தி.மு.க. அரசு தொடுத்த அந்த வழக்கு எத்தனை ஆண்டுக் காலத்திற்கு நடைபெற்றது? அரசாங்கப் பணமும், கழகத்தினர் அதற்காகச் செலவழித்த நேரமும் கொஞ்ச நஞ்சமல்ல!

10.11.1977! தீபாவளி நாள் அது. கழகத்தினர் அதனைக் கொண்டாடுவதில்லை. அதனால் சிறையிலிருந்த எங்களை தீபாவளி பாதிக்கவில்லை. அதே நாளில் தமிழக எழுத்துலகிலே மர்ம நாவல்கள் எழுதிப் புகழ்பெற்றவரும், "கல்கண்டு" என்ற வார இதழை ஆசிரியராக இருந்து நடத்தியவரும், கேள்வி-பதில் பகுதி மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருந்தவரும், திரு.வி.க. அவர்களால் தமிழ்வாணன் என்று பெயர் சூட்டப்பட்டவருமான தமிழ்வாணன் திடீரென மறைந்தார் என்ற செய்தி வந்தது.

தீபாவளிக்குப் பின், நவம்பர் 12ந் தேதி, நாங்கள் சிறையிலே இருக்கும்போது தமிழகம் எங்கும் பலத்த மழையுடன் பெரும் புயலும் தாக்கிற்று. புயல் காரணமாக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கடுமையான சேதம். நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்தன. பல கட்டிடங்கள், குடிசைகள் அழிந்தன. சென்னை எழும்பூரிலிருந்து தெற்கே செல்லும் அனைத்துப் புகை வண்டிகளும் இரத்து செய்யப்பட்டன. அரசு தந்த கணக்குப்படியே இந்த விபத்துக் காரணமாகத் தமிழகத்தில் 481 பேர்கள் இறந்ததாகவும், அவர்களின் பிணங்கள் மட்டுமே மீட்கப்பட்டதகவும் தகவல்கள் தரப்பட்டன.

சிறையில் இருந்தவாறே பிரதமர் மொரார்ஜி அவர்களுக்குத் தமிழகத்திலே ஏற்பட்ட புயல் வெள்ளம் பற்றித் தந்தி மூலமாகத் தெரிவித்து, போதுமான நிதி உதவியினை மத்திய அரசு உடனடியாக மாநில அரசுக்கு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். தி.மு.கழகத்தின் சார்பில் தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்காக 25,000 ரூபாய் அளிக்க முடிவெடுத்து அதற்கான காசோலையைத் தலைமைச் செயலாளரிடம் எடுத்துச் சென்று தர வேண்டுமென்று தலைமைக் கழகத்திற்குச் செய்தி அனுப்பினேன்.

அதன் பேரில் புலவர் கோவிந்தன், செ.கந்தப்பன், க.சுப்பு, மதுராந்தகம் ஆறுமுகம், மருதூர் ராமலிங்கம் ஆகியோர் அந்தக் காசோலையைத் தலைமைச் செயலாளரிடம் அளிக்கத் தலைமைச் செயலகம் எடுத்துச் சென்ற போது, அவர் வேறு பணியிலே இருப்பதாகக் கூறிவிட, மற்ற அதிகாரிகளும் அலட்சியம் செய்திடப் பின்னர் நேராக அவர்கள் கவர்னர் இல்லம் சென்று அவரும் ஊரிலில்லாத காரணத்தால் அவரது செயலாளரிடம் அந்த நிதியினைக் கொடுத்து வந்தனர். மேலும் வெள்ள நிவாரண நிதியாகக் கழகச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்கிடவும் முன் வந்தார்கள்.

மேலும் தி.மு.கழகத் தலைமைக் கழகத்தின் சார்பில் கழகத் தோழர்கள் அறப்போரை நிறுத்திவிட்டு வெள்ள நிவாரணப் பணிகளிலே ஈடுபடவேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டது. கழகத்தின் சார்பில் புலவர் கோவிந்தன் அவர்களையும், மண்ணை நாராயணசாமி அவர்களையும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பில் ஆறுதல் கூறவும் செய்தேன். அ.தி.மு.க. அரசின் வெள்ள நிவாரணப் பணிகள் பற்றி இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் "மிகச் சிறிய அளவிலேதான் அரசால் காரியங்கள் செய்யப்பட்டுள்ளன" என்றும், "அரசு என்று ஒன்று இருக்கும் அறிகுறியே இல்லை" என்றும் எழுதியது.

தமிழகத்திலே ஏற்பட்ட புயலை அடுத்து இரண்டொரு நாட்களில் ஆந்திராவிலும் இதைவிடப் பெரும் புயல் ஒன்று அடித்துப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஆந்திர முதலமைச்சர் வெங்கல் ராவ் அவர்களுக்கும் ஆறுதல் தந்தி ஒன்றை சிறையிலிருந்தவாறே அனுப்பினேன். தமிழக வெள்ள நிவாரண நிதிக்காகக் கழகத்தின் சார்பில் நிதி தர விரும்புவோர் என்னுடைய சிறை முகவரிக்கு ஐந்து ரூபாய்க்குக் குறையாமல் மணியார்டர் மூலம் நிதி அனுப்பி வைக்கலாம் என்று கழகத்தின் சார்பிலே அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு சிறையிலே இருந்தவாறும் தமிழகத்தின் வெள்ள நிவாரணப் பணிகளிலே எங்களை ஒப்படைத்துக் கொண்டோம். இடையில் கிண்டி துப்பாக்கி சூடு பற்றி விசாரிக்க அரசு, நீதிபதி பி.எஸ்.சோம சுந்தரம் அவர்களைக் கொண்டு நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டது. நவம்பர் 14ஆம் தேதியுடன் எனக்கும், என்னுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ரிமாண்ட் முடிந்து விட்டதால், 14 ஆம் தேதியன்று நாங்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அரசாங்க வக்கீல் எங்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்களும் சாட்சிகளும் இருக்கின்றன என்றும் ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவோமென்றும் கூறியதால், ரிமாண்ட் மேலும் நீடிக்கப்பட்டுத் திரும்பவும் சிறைக்கு அனுப்பப்பட்டோம்.

9.11.77 அன்று தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கழகத் தலைவர்களையும் தொண்டர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யும் வரையில் நடைபெற்று வரும் அறப்போராட்டத்தைக் தொடர வேண்டுமென்றும் சிறை செல்வோர் இனி ஜாமீனில் வெளிவரத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட

்டது. நவம்பர் 15 ஆம் தேதி முதல் சென்னை நகரில் மாவட்ட தி.மு.க.சார்பில் தொடர் மறியல் போர் நடைபெறும் என்றும் முதல் நாள் போராட்டத்திற்குச் சட்டமன்ற உறுப்பினர் மணிமுடி தலைமை வகிப்பார் என்றும் சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பிலே அறிவிக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நாவலர் அமிர்தலிங்கம் பிரதமர் மொரார்ஜிக்கு அனுப்பிய தந்தியில் "கலைஞரையும் தலைவர்களையும் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது ஜனநாயக மரபுகளுக்கு ஒரு பலத்த அடியாகும்.

எனவே உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். தந்தி கொடுத்தது மாத்திரமல்ல, யாழ்ப்பாணம் நகரிலே எங்களின் விடுதலைக்காக ஒரு மாபெரும் பேரணியை நடத்தித் தூதுவராலயத்தில் மனு ஒன்றையும் கொடுத்தார்கள். இலங்கையைப் போலவே இலண்டன் மாநகரில் வாழும் தமிழர்கள் சுமார் 7 மணி நேரம் எங்களின் விடுதலை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் ஏடுகள் செய்தி வெளியிட்டன. டெல்லியில் அப்போது நடைபெற்ற எக்ஸ்போ - 77 என்ற கண்காட்சியில் கலை நிகழ்ச்சி ஒன்றுக்குத் தலைமை தாங்கச் சென்ற முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குக் கறுப்புக் கொடி காட்ட டெல்லி தமிழர்கள் கறுப்புக் கொடியோடு வழியிலே காத்திருந்த போது, எம்.ஜி.ஆர் அந்த வழியைத் தவிர்த்து வேறு சுற்று வழியாகச் சென்று விட்டார்.

மீண்டும் எங்களுக்குத் தரப்பட்ட காவல் நீடிப்பு நவம்பர் 26ந் தேதியோடு முடிவடையவிருந்ததால், 26.11.1977 அன்று நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அன்றையதினம் நீதிமன்றமே காவலர்களால் நிரம்பியிருந்தது. எங்களைக் காண வந்த கழகத்தினர் காலையிலிருந்து விரட்டியடிக்கப்படுவதாகக் கூறினார்கள். அந்தத் தாக்குதலையும் சகித்துக் கொண்டு ஆயிரக் கணக்கிலே தோழர்கள் எங்களை நீதிமன்றத்திலே வரவேற்றனர். வேனுக்குக் குறுக்காகத் தாய்மார்கள் படுத்தனர்.

நீதிபதி அந்த முறையும் அரசு தரப்பு வழக்கறிஞரின் ஆலோசனைப்படி டிசம்பர் 8ந்தேதி வரை காவல். நீடிப்புக்கு உத்தரவிட்டு, மீண்டும் எங்களைச் சிறைக்கு அனுப்பி வைத்தார். 28.11.1977 அன்று சென்னை மத்திய சிறையில் நாங்கள் எல்லாம் இருந்தபோது ஸ்டாலினுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக எனக்குச் செய்தி வந்தது. மத்திய சிறையில் இருந்தவாறே அன்று நான் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் இதோ- அன்புள்ள ஸ்டாலின், உனக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி.

சாந்தாவுக்கு என் வாழ்த்துக்களைக் கூறவும். 1953ல், திருச்சி சிறையில் ஆறுமாத தண்டனை பெற்று நானிருந்த போது நீ கைக் குழந்தை! வீட்டிலிருந்து என்னைக் காண வருபவர்களோடு குழந்தையாக இருந்த நீயும் வருவாய். இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைச் சிறையில் மிசாக் கைதியாக (1976) ஓராண்டு நீ இருந்த போது நான் உன்னைக் காண வந்து கொண்டிருந்தேன். உன்னுடனும் கழக உடன் பிறப்புக்களுடனும் தம்பி மாறன் மிசாக் கைதியாக இருந்த போது அவனுக்கோர் பெண் பிறந்தது.

அந்தக் குழந்தையும் தன் தந்தையைப் பார்க்கச் சிறைச்சாலைக்குத்தான் வந்து கொண்டிருந்தது. இப்போது உனக்குப் பிறந்திருக்கிற என் பேரனும் என்னைப் பார்க்கச் சிறைக்கு வருவான் என்று கருதுகிறேன். இந்த அனுபவங்கள் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா? இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல-நமது இயக்கமாம் பெரிய குடும்பத்தில் எத்தனையோ உடன் பிறப்புக்களுக்கு இப்படிப்பட்ட சிறை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. பொது வாழ்வு பூங்கா விநோதமல்ல!

புயலை எதிர்த்து நிற்பது! இதைப் புரிந்து கொள்ளாத சில பேர், இன்னமும் நாட்டிலே இருக்கிறார்கள். பாவம்; அவர்கட்காக நான் பரிதாபப்படுகிறேன். புதிய பேரனுக்கு என் வாழ்த்துக்கள். அன்பு மு. கருணாநிதி அன்று நான் கடிதத்திலே வாழ்த்திய என் பேரன் உதயநிதி தற்போது லயோலா கல்லூரியிலே பட்டப்படிப்புப் படிக்கும் மாணவனாகவும், மாறனின் மகள் அன்புக்கரசி மருத்துவக் கல்லூரி மாணவியாகவும் வளர்ந்து நிற்கின்றார்கள்!