உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/"ஷா" கமிஷன் விசாரணை
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

"ஷா" கமிஷன் விசாரணை · 246 / 391

30. "ஷா" கமிஷன் விசாரணை -10-1977 அன்று பகல் 1 மணி அளவில் இந்திரா காந்தி மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிவந்து திறந்த கார் ஒன்றில் ஏறி தெற்கு வாசல் வழியாக நுழைந்தபோது, கருங்கடலைக் கண்டு அடைந்தார். அவரது காருக்கு முன்னால் சிலம்பம் ஆடி வந்த சில காங்கிரஸ்காரர்கள், கழகத்தினர் மீது கம்புகளை வீசிக் கலகத்தினைத் தூண்டிவிட்டனர். கருப்புக் கொடியுடன் அமைதியாகவும் அணிவகுத்து வரிசையாகவும் நின்றவர்கள் மீது காங்கிரசார் மிளகாய்ப் பொடியை வாரி இறைத்தனர்.

அதன்பின் இந்திரா காந்தியின் கார் கறுப்புக் கொடியைத் தாண்டி நகர முடியவில்லை. இந்த நிலையில் காவல்துறையினர் கழகத் தோழர்களை நோக்கிக் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். தடியடிப்பிரயோகம் நடத்திக் கூட்டத்தினரைக் கலைக்க முற்பட்டனர். இந்திரா காந்தி அந்தக் காருக்குள்ளேயே அமைதியாக அமர்ந்து கொண்டார். பல கழகத் தேழார்கள் தடியடிப் பிரயோகம் காரணமாகப் படுகாயமடைந்தனர். அன்று மாலை இந்திரா காந்தி பேசிய கலைஞர் கருணாநிதி ஸ்டேடியத்தில் "கலைஞர் கருணாநிதி ஸ்டேடியம்" என்ற பெயர்ப்பலகையை இந்திரா காங்கிரசார் உடைத்தனர்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்வதாக நிகழ்ச்சி நிரலிலே அறிவித்தபடி, இந்திரா காந்தி கருப்புக் கொடி போராட்டம் காரணமாகச் செல்லவில்லை. அன்று நள்ளிரவில் மதுரையில் தென்னரசு, பொன். முத்துராமலிங்கம் உட்பட பலரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும், ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கருப்புக்கொடி காட்டுவதற்காகத் திரண்டனர். அந்த நேரத்தில் திடீரென்று காவல்துறையினர் அவர்களிடம் வந்து, கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், கலைந்து செல்லுமாறும் கூறினர்.

ஆனால் தடையை மீறிக் கறுப்புக் கொடி காட்டுவோம் என்று கூறிய போராட்டத் தளபதிகள் அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி உட்பட ஐநூறு பேர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர்க் கூட்டத் தினரின் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாகத் தடியடி பிரயோகம் செய்தனர். கண்ணீர்ப்புகை வீசினர். இந்த அமளியின் காரணமாக இந்திரா காந்தி பேசுவதற்காக போடப்பட்டிருந்த விளக்குகள் எல்லாம் உடைக்கப் பட்டுத் தூளாயின.

காவல் துறையினரின் கண்ணீர்ப்புகை காரணமாக வானமே புகை மண்டலமாக ஆனது என்று "சமாச்சார்" நிறுவனமே அப்போது செய்தி வெளியிட்டது. திடீரென்று மற்ற நகரங்களிலே கறுப்புக்கொடி காட்டுவதற்கு அரசு தடை விதித்தது. அதுபற்றிச் செய்தியாளர்கள் என்னைக் கேட்ட போது, தடையை மீறிக் கறுப்புக்கொடி காட்டப்படும். கறுப்புக் கொடி காட்ட அனுமதிக்கப்பட்ட இடம் மறுக்கப்பட்டு விட்ட காரணத்தால் சென்னையிலே எல்லா இடங்களுமே கறுப்புக்கொடி காட்டுகின்ற இடங்களாக இருக்குமென்று அறிவித்தேன்.

திராவிடர் கழகமும் தடையை மீறும் என்றும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி கைது செய்யப்பட்டால், தானே கறுப்புக் கொடிப் போராட்டத்திற்குத் திராவிடர் கழகம் சார்பில் தலைமை தாங்கப் போவதாகவும் அன்னை மணியம்மையார் அறிக்கை விடுத்தார். இந்திரா காந்தி மதுரையிலிருந்து திருச்சி நோக்கிக் காரில் வந்தபோது வழிநெடுகக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. எதிர்ப்பு உணர்வைத் தாங்காது இந்திரா காந்தி அம்மையார் துப்பம்பட்டியிலிருந்து தனது வழியை மாற்றிக் கொண்டு திண்டுக்கல் சென்று, அங்கிருந்து புகை வண்டியில் திருச்சி சென்றார்.

திருச்சியிலே முன்கூட்டியே அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளையொட்டி கூட்டம் இரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சமாச்சார் நிறுவனம் கூட, தங்களுக்குக் கிடைத்த தகவல்படி, இந்திரா காந்தி திருச்சி வருகையை இரத்து செய்துவிட்டதாக அறிவித்தது. ஆனால் இந்திரா காந்தி, திருச்சியில் இறங்கி, கூட்டம் நடந்த இடத்திற்குச் சென்று அங்கேயிருந்த ஒருசிலர் மத்தியிலே ஓரிரு நிமிடங்கள் பேசியதாகப் பேர் பண்ணிவிட்டு, புகை வண்டியில் ஏறிச் சென்னை திரும்பினார்.

மதுரையிலே தாக்குதல் தீவிரமானதும் இந்திரா காந்தியுடன் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர்கள் பெரிய துணி கொண்டு இந்திரா காந்தியை மூடிக்கொண்டனர் என்றும், போலீசார் 16 கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி தடியடிப் பிரயோகம் நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர் என்றும் "சமாச்சார்" பின்னர்ச் செய்தி வெளியிட்டது. சென்னையிலே கறுப்புக்கொடி காட்ட அறிவிக்கப்பட்ட போராட்டத் தளபதிகள் கைது செய்யப்பட்டால், நானும், பேராசிரியரும் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு தலைமையேற்பதாக அறிவித்தோம்.

அக்டோபர் 30ந் தேதி விடியற்காலை முதலே சென்னை நகரில் பல இடங்களில் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கறுப்புக் கொடி காட்டுவதற்காகக் காவல்துறையினர் ஏற்கெனவே அனுமதித்திருந்த இடமான கிண்டி மேம்பாலம் நோக்கி சென்னை நகரிலிருந்து சாரைசாரையாகக் கறுப்புக் கொடியேந்திச் சென்ற கழகத் தோழர்கள் மீது தடியடிப் பிரயோகம் தொடர்ந்து நடைபெற்றது. நேரம் அதிகமாக அதிகமாகப் பல்லாயிரக்கணக்கிலே தோழர்கள் வரத் தொடங்கினர்.

தடியடிப் பிரயோகத்தால் அவர்களைக் கலைக்கக் காவல்துறையினரால் முடியாததால், கண்ணீர்ப் புகை பிரயோகம் ஆங்காங்கு நடைபெற்றது. திட்டமிட்டபடி கறுப்புக் கொடி காட்ட கிண்டி மேம்பாலம் நோக்கிச் சென்ற நீலநாராயணன், ஆற்காடு வீராசாமி, ஆர்.டி. சீத்தாபதி, பொன்னுரங்கம், எம்.எல்.ஏ., ஆயிரம் விளக்கு உசேன், ஆலந்தூர் பாரதி, என்.வி.என் செல்வம், கும்முடிப்பூண்டி வேணு மற்றும் பல முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் சென்ற தலைமை நிலையக் காரை உடை அணிந்த காவலர்களே சுற்றி வளைத்து அடித்து நொறுக்கினர். கூட்டத்தைக் கலைக்கப் பல வழிகளிலும் முயன்று தோற்ற அ.தி.மு.க அரசின் காவல்துறையினர் இறுதியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். துப்பாக்கிச் சூட்டில் தேனாம்பேட்டை கழகக் காளை தீனன் அந்த இடத்திலேயே இறந்து விட்டதாகவும், மற்றும் பலர் காயமடைந்து மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் தலைமைக் கழகத்திற்கு வந்தன.

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் நிகழ்ச்சிக்கு இந்திரா காந்தி முதலில் அறிவித்த வழியினை விட்டு வேறு வழியாகச் சென்றார். காஞ்சிபுரத்திலும் கறுப்புக் கொடி காட்டுவதற்காகப் பல்லாயிரக் கணக்கிலே தோழர்கள் திரண்டதால் அங்கும் கட்டுமிராண்டித் தாக்குதல் காவல்துறையினரால் நடைபெற்றது. பல கழகத் தோழர்கள் காயமடைந்தனர். காஞ்சிபுரத்தில் இந்திரா காந்தி பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மாற்றுவழியாகச் சென்று சங்கராச்சாரியரை மட்டும் இந்திரா காந்தி பார்த்துவிட்டு, சென்னை திரும்பினார். காஞ்சிபுரம் தடியடியில் கலசப்பாக்கம் திருவேங்கடம், பாபு ஜனார்த்தனம், வேலூர் சகி, வேலூர் நடராஜன் மற்றும் பல கழகத் தோழர்கள் காயமடைந்து மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டனர். காலை 9.45 மணி அளவில் நான், பேராசிரியர், சாதிக், ப.உ. சண்முகம், ஏ.வி.பி.ஆசைத் தம்பி, துரைமுருகன், மு.கண்ணப்பன் ஆகியோர் தடையை மீறிக் கறுப்புக் கொடி காட்டுவதற்காக ஒரு அணிவகுப்பிற்குத் தலைமை வகித்துச் சென்றபோது சென்னை மறைமலை அடிகள் பாலத்திற்கு அருகே நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டோம்.

எங்களைக் கைது செய்து அண்ணாசாலை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு எங்களுக்கு முன்பே கைது செய்யப்பட்ட அன்னை மணியம்மையார் அவர்களும், வீரமணியும், மற்றவர்களும் வைக்கப்பட்டிருந்தனர். சைதாப்பேட்டையில் கழகத் தொண்டர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்து விரட்டியடித்ததைத் தொடர்ந்து, சென்னை நோக்கி வந்த ரெயில்களை மறித்துக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலபேர் கொல்லம் எக்ஸ்பிரஸ் புகைவண்டியை நிறுத்தி பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததின் காரணமாகப் பத்துப் பெட்டிகள் எரிந்து சாம்பலாயின.

1977ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இறுதி நாட்களிலே இந்திரா காந்திக்குத் தமிழகத்திலே கறுப்புக் கொடி காட்டிய அந்தக் காலக் கட்டத்திலே டெல்லி மாநகரத்திலே "ஷா" கமிஷன் - தனது மூன்று வார இடைவெளிக்குப் பின்னர்க் கூடி, தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் விசாரணை நடைபெற்றுப் பல முக்கிய சாட்சிகள் சாட்சியங்களை அளித்தனர். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையின்போது தணிக்கை அமல் செய்யப்பட்ட நிலையில் நடைபெற்ற அக்கிரமங்களைப் பற்றியெல்லாம் இந்திய நாட்டின் பல பத்திரிகைகளின் ஆசிரியர்கள் சாட்சியங்கள் அளித்தனர்.

அவசர நிலை காலத்தில் மொத்தம் 253 பத்திரிகையாளர்கள் இந்தியாவில் சிறையிலே அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 110 பேர் மிசாச் சட்டத்தின் கீழும், 60 பேர் பாதுகாப்பு விதிகளின் கீழும், 83 பேர் வேறு காரணங்கள் காட்டப்பட்டும் சிறைகளிலே வைக்கப்பட்டிருந்தனர். அரசு அதிகாரியான - முன்னாள் பிரதம தகவல் அதிகாரி டாடர் பாஜி சாட்சியமளிக்கையில் ஸ்டேட்ஸ்மேன் ஏடு இந்திரா காந்தி பற்றிய செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடாமல் இருந்தது என்றும், அதுபற்றி அந்தப் பத்திரிகை ஆசிரியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறு தனக்கு மேலிடம் ஆணையிட்டதாகவும் சாட்சியம் கூறினார்.

துக்ளக் சோ சாட்சியம் கூறும்போது - பல செய்திகளைக் குறிப்பிட்டு அவைகள் எல்லாம் நெருக்கடி நிலையின் போது தனது பத்திரிகையிலே பிரசுரிக்கத் தணிக்கை அதிகாரி அனுமதிக்கவில்லை என்றும், பல கேலிச் சித்திரங்கள் எல்லாம் தடுக்கப்பட்டன என்றும் கூறியதோடு, மொரார்ஜி தேசாய் அவர்களுக்குப் பிறந்தநாள் விழா செய்தி கூட வெளியிட அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சாட்சியமளித்தார். தணிக்கை அதிகாரிகளைச் சோதனை செய்வதற்காகவே வானொலியிலே கூறப்பட்ட ஒரு செய்தியையே அப்படியே எடுத்து 'துக்ளக்' இதழிலே போட அனுமதி கேட்டு தணிக்கை அதிகாரிக்கு அனுப்பியதாகவும் அதற்கும் மறுப்புத் தெரிவித்தபோது - என்ன காரணம் ?

என்று கேட்டதற்கு ஏதாவது மறைமுகமான உள்நோக்கம் இருக்கலாம் என்று பதில் கூறப்பட்டதாகவும் சோ கூறினார். இப்படிப்பட்ட தணிக்கைக் கொடுமைகளுக்கு முரசொலியும், தி.மு.கழகமும் ஆளானது பற்றி இரண்டாம் பாகம் இறுதிப் பகுதியில் எழுதியிருக்கிறேன். தணிக்கை அதிகாரிகளை ஏமாற்ற எப்படியெல்லாம் மாற்றிச் செய்திகளை முரசொலியிலே வெளியிட வேண்டியிருந்தது! சிறை பிடிக்கப்பட்டவர்கள் யார் யார் என்று பத்திரிகையிலே வெளியிடக் கூட அனுமதிக்கப்படவில்லை.

எனவே பிப்ரவரி 3ந் தேதி அண்ணா சமாதிக்கு வர முடியாதவர்கள் யார் தெரியுமா? என்ற தலைப்பிலே அந்தப் பெயர்கள் எல்லாம் வெளியிடப்பட்டன. அதனைப் படித்துக் கழகத் தோழர்கள் அனைவரும் உண்மையைத் தெரிந்து கொண்டார்கள். ஷா கமிஷன் முன்னால், மெயின் ஸ்ட்ரீம் பத்திரிகை ஆசிரியர் நிகில் சக்ரவர்த்தி கூறும்போது - தன்னுடைய பத்திரிகையிலே இந்திரா காந்தி பற்றித் தவறாக எழுத மாட்டேன் என்று வாக்குறுதி தர வேண்டுமென்று முன்னாள் மத்திய அமைச்சர் சுக்லா கேட்டதாகவும், ஆனால் தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

சஞ்சய் காந்தியின் சினத்துக்கு உள்ளானார்கள் என்பதைத் தவிர மற்றபடி ஒரு குற்றமும் செய்யாத பத்து அரசு அதிகாரிகள் நெருக்கடிநிலை காலத்தில் மிசாச் சட்டத்தின் கீழ்க் காவலில் வைக்கப்பட்ட போது தங்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத கஷ்டங்களை அந்த அதிகாரிகளின் மனைவிமார்கள் ஷா கமிஷன் முன்னால் எடுத்துக் கூறினார்கள். அவர்களில் ஒருவரான திருமதி வாலியா கண்களிலிருந்து நீர் தாரைதாரையாக வழிய 'மிசா' என்று ஒன்று கூடவே கூடாது, நாங்கள் விலங்குகளைப் போல் நடத்தப்பட்டோம் என்றார்.

சி.பி.ஐ., டி.ஐ.ஜி.யான எ.பி.முகர்ஜி, "அதிகாரிகளை இம்சிக்க சி.பி.ஐ. பயன்படுத்தப்பட்டது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது நியாயமில்லை என்ற நிலையில், அவர்கள் மீதான புலன் விசாரணையைத் தொடர்ந்து நடத்தியது தங்களுக்கு மிகுந்த மனக் கஷ்டத்தை அளித்தது" என்றார்.

ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர், ஹரிதேவ் ஜோஷி "இந்திரா காந்திக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக 1975 ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதியன்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பேரணியில் கலந்து கொள்வதற்காக நூற்றுக்கணக்கான மாநில அரசு அலுவலர்களை அனுப்பியதும், டிரக் வண்டிகளை ஏற்பாடு செய்ததும் தவறுதான்" என்று ஒப்புக் கொண்டார்.

போயிங் விமானம் வாங்குவது பற்றிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு முன்னாள் சிவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ரகுராமையா சொன்னதால் தான் கையெழுத்திட்டதாக ஒரு அதிகாரி சாட்சியம் தந்திருக்கிறாரே என்று அந்த முன்னாள் அமைச்சரிடம் நீதிபதி ஷா கேட்டபோது, அப்போது பிரதமராயிருந்த இந்திரா காந்தி போயிங் விமான பேரத்தை முடிக்கலாம் என்று சொன்னதின் பேரில்தான் அதிகாரிகளை மேற்கொண்டு அதிலே நடவடிக்கை எடுக்கத் தான் கூறியதாக ஒப்புக்கொண்டார். ஜெய்ப்பூர் முன்னாள் மகாராணி காயத்ரி தேவியும், குவாலியர் முன்னாள் மகாராணி ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவும் நெருக்கடி நிலையின் போது தாங்கள் அரசியல் நோக்குக் கொண்ட பழி வாங்கும் நடவடிக்கைக்கு உள்ளாகி, டெல்லி திகார் சிறையிலே கொலைகாரிகள், விபச்சாரிகள் ஆகியோருடன் சேர்த்து அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகச் சாட்சியம் அளித்தனர்.

இந்த அளவிற்கு ஷா கமிஷன் முன்னால் அன்றாடம் நவம்பர் திங்கள் முழுவதும் சாட்சியங்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தன. அந்தச் செய்திகளை எல்லாம் சிறையிலே இருந்தவாறு நாங்கள் படிக்க நேரிட்டது. ஆம், இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயன்றதாகவும், அதற்காக முன் கூட்டி சதி செய்தோம், கலவரம் செய்தோம் என்றும், அரச அலுவலர்களைப் பணியாற்ற விடாது காயங்கள் ஏற்படுத்தியதாகவும், தீ வைத்ததாகவும், வீடுகளில் புகுந்து சொத்துக்களுக்கு நாசம் செய்தோம் என்றும் 11 செக்ஷன்கள் படியும், ரெயில்வே சொத்துக்களைச் சேதப்படுத்தியதாக ரெயில்வே சட்டப்படி மூன்று செக்ஷன்கள்படியும் ஆகமொத்தம் 14 செக்ஷன்களில் என் மீதும், பேராசிரியர், சாதிக், ப.உ.

சண்முகம், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, நீலநாராயணன், வீராசாமி, துரைமுருகன், கண்ணப்பன், சீத்தாபதி, சா.கணேசன், ஆயிரம் விளக்கு உசேன், ஆலந்தூர் பாரதி, புருசோத்தமன் உட்பட 29பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு, அங்கிருந்து நேராக சென்னை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே சிறை வைக்கப் பட்டிருந்தோம்.

திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையார், பொதுச் செயலாளர் கி.வீரமணி உட்பட 21பேர் மீது தடை உத்தரவை மீறியது, சட்ட விரோதமாகக் கூடியது என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களும் 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டனர். மேலும் சென்னையில் தடையை மீறியதாகக் கைது செய்யப்பட்ட விருதாசலம் செல்வராஜ் அணியைச் சேர்ந்த 14 பேர்களும் இதே மாதிரி 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டனர். இந்த அணியினர் இரண்டொரு நாட்களில் ஜாமீனில் அனுப்ப

ப்பட்டனர். என் மீதும், மற்றும் கழக முன்னணியினர் மீதும் பல பிரிவுகளில் வழக்குத் தொடுத்துச் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி பரவிப் பல இடங்களில் பதட்ட நிலை உருவாயிற்று. பேருந்துகள் வழி மறிக்கப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. கல்லூரிகளை விட்டு மாணவர்கள் வெளியேறினர். இதன் காரணமாக ஆங்காங்குக் கைதுப் படலங்களும் அதிகரித்தன. இந்திரா காந்திக்குக் கறுப்புக் கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அரிபட் மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த 150 பேர்கள் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர்.

எழும்பூர் நீதிமன்றத்திலிருந்து நான் காவல்துறை வேனுக்குள் செல்வதற்கு முன் இரண்டொரு செய்தியாளர்கள் அந்த இடத்திலும் என்னை நெருங்கிக் கைது செய்யப்பட்டிருப்பது பற்றிக் கருத்துக் கேட்டார்கள். "ஜெயப்பிரகாசரை இந்திரா அரசு கைது செய்தபோது அவர் விநாச காலே விபரீத புத்தி என்றார். அதனைத் தமிழில் சொல்ல வேண்டுமென்றால் கெடுவான் கேடு நினைப்பான்" என்று நான் பதில் கூறினேன்.

சென்னையைப் போலவே தமிழகத்தின் பல நகரங்களிலும் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையிலிருந்து புகைவண்டிகள் எதுவும் புறப்பட முடியாத நிலை; அது போலவே சென்னைக்கும் எந்தப் புகை வண்டிகளும் வரவில்லை. கிண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது - மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த கேரளக் கல்வி அமைச்சரும், என்னுடைய நெருங்கிய நண்பருமான முகமது கோயா அவர்கள் வழியிலே யாரென்று தெரியாமல் தாக்குதலுக்கு ஆளானார்.

பின்னர் அவர் யாரெனத் தெரிந்ததும், கழகத்தோழர்கள் உடனடியாக, அவர் கார் பழதடைந்த நிலையில் வேறொரு ஆட்டோ பிடித்து, அவரைப் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை எழும்பூர் கமிஷனர் அலுவலகத்தில் நாங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த போதே எங்களுக்கு இச்செய்தி கிடைத்ததால், அங்கேயிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கமலநாதன், ஜி.லெட்சுமணன் இருவரையும் மீனம்பாக்கம் இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி அங்கே சிகிச்சை பெற்று வந்த கோயாவைச் சந்தித்து, நான் நேரடியாக வர முடியாத நிலையிலே கைதாகியிருக்கும் காரணத்தைத் தெரிவித்து, நடைபெற்ற நிகழ்ச்சிக்காக மிகவும் வேதனைப்படுவதாகக் கூறிவிட்டு வருமாறு செய்தேன்.