நெஞ்சுக்கு நீதி
இந்திரா காந்திக் கறுப்புக் கொடி · 245 / 391
29. இந்திரா காந்திக் கறுப்புக் கொடி நெ ருக்கடி நிலையின் போது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பல முறைகேடுகளைச் செய்ததாக இந்திராகாந்தி மீது புகார் கூறப்பட்டு அதன்மீது விசாரணை நடந்து வந்தது. பல கிரிமினல் குற்றங்களை அவர் செய்திருப்பதாக விசாரணை நடத்திய இரகசிய போலீசார் மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்தனர். அதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய மத்திய அரசு பிறப்பித்த ஆணையின் பேரில்தான் அவர் கைது செய்யப்பட்டார்.
பம்பாயில் பெட்ரோல் தொழிற்சாலை அமைக்க பிரான்சு நாட்டுக் கம்பெனிக்கு "டெண்டர்" வழங்கியதில் முறைகேடுகள் புரிந்தார் என்றும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இரண்டு கம்பெனிகளிடம் இருந்து 104 ஜீப்புகளைப் பெற்றுத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார் என்றும் இந்திரா காந்தி மீது குற்றஞ் சாட்டப்பட்டது. இந்திரா காந்தி அமைச்சரவையிலே அமைச்சர்களாக இருந்த எச்.ஆர்.கோகலே, டி.பி.மாளவியா ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.
மேலும் இந்திரா காந்தியிடம் செயலாளர்களாக இருந்த யஷ்பால்கபூர், ஆர்.கே.தவான் ஆகியோரும் தொழிலதிபர்கள் எம்.வி. அருணாசலம், ஆர்.பி.கோயங்கா ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். இந்திரா காந்தி கைது செய்யப்பட்டதும், "நீங்கள் ஜாமீன் கொடுத்துவிட்டு விடுதலை ஆகலாம்" என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
ஆனால் ஜாமீனில் விடுதலையாக அவர் மறுத்துவிட்டார். மத்திய அரசின் உள்துறை அமைச்சர் சரண்சிங், "இந்திரா காந்தி மீது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவில் அவர் செய்த மேலும் பல குற்றங்கள் அம்பலமாகும். நெருக்கடி நிலையின் போது எத்தனையோ தலைவர்களை அவர் விசாரணை இல்லாமல் சிறையில் அடைத்தார். நாங்கள் அப்படிச் செய்யவில்லை. செய்யவும் மாட்டோம். திட்டவட்டமான குற்றச்சாட்டின் பேரில்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்று கூறினார்.
அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்ட இந்திரா காந்தியை மறுநாள் ஆம் தேதியே டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. டெல்லி உயர்நீதிமன்றம் அதனை ஏற்று இந்திரா காந்தியை நீதிமன்றத்திற்கு வர நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அக்டோபர் 1ஆம் தேதி, ஷா கமிஷன் முன்னால் சாட்சியம் அளித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம், "ரிசர்வ் வங்கி கவர்னராக கே.ஆர்.
பூரியை நியமிக்கக் கூடாது என்று நான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. எனவே வேறுவழியின்றி மூன்று மாத இழுபறிக்குப் பிறகு நான் அதற்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று" என்று தெரிவித்தார்.
இந்திரா காந்தி 1976ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி தமிழகத்தில் நடந்த தி.மு.கழக ஆட்சியை அநியாயமாகக் கவிழ்த்து, அதனை நியாயப்படுத்த சர்க்காரியா கமிஷன் நியமித்தார் அல்லவா; அந்தச் சர்க்காரியா கமிஷனின் புலனாய்வுத் துறை அதிகாரியாகப் பணியாற்ற நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் - சி.பி.ஐ. அதிகாரி லெட்சுமி நாராயணன் ஐ.பி.எஸ். அதே சி.பி.ஐ. அதிகாரி லெட்சுமி நாராயணன்தான் இந்திரா காந்தியை அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்தவராவார்.
டெல்லியிலே இச்சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அக்டோபர் 7,8,9 ஆகிய நாட்களில் நெல்லை மாவட்டத்தில் கழகத்தின் சார்பாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தூத்துக்குடி இரா. கிருட்டிணன் தலைமையிலே கழக நண்பர்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் சீரோடும், சிறப்போடும் நடத்திக் கழக வளர்ச்சி நிதியாக மூன்று நாட்களிலும் மொத்தமாக அறுபத்தைந்தாயிரம் ரூபாயினை வழங்கினார்கள்.
இதற்கு சில நாட்களுக்கு முன் மதுரையிலே மாணவர் ஒருவர் மீது பதியப்பட்ட போலீஸ் வழக்கை இரத்து செய்ய வேண்டுமென மதுரை கல்லூரி மாணவர்கள் அவர்களது கல்லூரி வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் கற்களைத் தங்கள் மீது வீசியதாகக் கூறிக் காவல் துறையினர் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை வீசினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு மதுரை கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாகச் செல்ல முற்பட்டனர். நகரத்தில் தடை உத்தரவு அமுலில் இருப்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியபோதும் தடையை மீறி மாணவர்கள் ஊர்வலம் செல்ல முற்பட்டதால் 882 மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
போலீசாரின் உதவியோடு ஆளுங்கட்சியினைச் சேர்ந்தவர்களும் அந்தக் கலவரத்திலே. ஈடுபட்டுச் சில மாணவர்களை அடையாளங்கண்டு கடுமையாகத் தாக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லைக்குச் செல்லும் வழியில், நான் மதுரையிலே இறங்கி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வந்த மாணவர்களையெல்லாம் சந்தித்து ஆறுதல் கூறினேன். என்னுடன் மருத்துவமனைக்கு காவேரிமணியம், பொன். முத்துராமலிங்கம், பழக்கடை பாண்டி ஆகியோர் வந்தனர்.
மருத்துவமனையிலே இருந்த மாணவர்கள் தங்களை போலீசார் அடித்தது மட்டுமல்ல, அ.தி.மு.க.வினரும் சேர்ந்து அடித்தார்கள் என்று அழுதுகொண்டே கூறினார்கள். கைக்கெடிகாரம், மற்றும் அவர்களது பொருட்கள் பலவற்றையும் அவர்கள் களவாடிச் சென்று விட்டதாகவும் அந்த மாணவர்கள் என்னிடம் முறையிட்டார்கள். உண்மைகள் உலகத்திற்குத் தெரிய அந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணை ஒன்றை நடத்த அரசு முன் வரவேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டேன்.
நெல்லை மாவட்டத்திலே நான் மேற்கொண்ட அந்த மூன்று நாள் சுற்றுப்பயணம் குறித்து, எஸ்.எஸ். தென்னரசு அவர்கள் "நெஞ்சுயர்த்தி நிற்கிறது நெல்லை" என்ற தலைப்பிலே ஒரு அருமையான கட்டுரையை முரசொலியிலே எழுதியிருந்தார். அதிலே குற்றாலத்திலே உள்ள பழத்தோட்டம் பற்றியும் விவரமாக எழுதியிருந்தார். குற்றாலத்திலே உள்ள அந்தப் பழத்தோட்டம் - ஒரு சிறு அருவியையும் உள்ளடக்கியது தி.மு.கழக ஆட்சியிலே தனியார் ஒருவரிடமிருந்து அரசாங்கத்திற்காக விலைக்கு வாங்கப்பட்டது.
ஆனால் அதனை நான் எனக்குச் சொந்தமாக வாங்கிவிட்டதாகத் தமிழகம் முழுவதும் மாற்றுக் கட்சியினரால் அப்போது பெரிய குற்றச்சாட்டாகச் சொல்லப்பட்டது. ஐந்து இலட்ச ரூபாய் பெறுமானமுள்ள அந்தத் தோட்டம், தனியாரிடமிருந்து அரசாங்கத்திற்காக ஒன்றரை இலட்ச ரூபாய் விலைக்கு அப்போது வாங்கப்பட்டது. இப்போது அந்த இடம் கோடிக்கணக்கிலே மதிப்பிருக்கும். தி.மு.கழக ஆட்சியிலே தனியாரிடமிருந்து அரசாங்கத்திற்குச் சொத்து வாங்கப்பட்டது.
அரசுச் சொத்துக்களைப் பதவியிலே இருப்போர் தங்கள் சொந்த நலனுக்காகக் கைப்பற்றிக் கொள்ளவில்லை. அந்தச் சுற்றுப் பயணத்தின் போது தான் முக்கூடல் சிவப்பிரகாசம் அவர்களும், வழக்கறிஞர் பாளையங்கோட்டை சண்முகம் அவர்களும் தி.மு.கழகத்திலே உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். அக்டோபர் 10ந் தேதி சென்னை திரும்பியதும், தி.மு.கழக ஆட்சியிலே பேரவைத் துணைத் தலைவராக இருந்து பின்னர்க் கழகத்திலேயிருந்து அ.தி.மு.க.விற்குச் சென்ற விருதுநகர் பெ.சீனுவாசனும், திருப்பூர் முத்துரத்தினமும் மீண்டும் தி.மு.கழகத்திலே தங்களை இணைத்துக் கொண்டனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகமாயிருப்பதாகக் கூறி, அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அந்தக்கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் டெல்லியிலே கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். அந்தக் கூட்டத்தில் அன்றைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பிரமானந்த ரெட்டி அவர்கள் கலந்து கொள்ளாவிட்டாலும் இந்திரா காந்தி தலைவராக விரும்பினால் தான் தலைவர் பதவியிலிருந்து விலகத்தயாராக இருப்பதாக முதலிலே தெரிவித்தார்.
ஆனால் இந்திரா காந்தி, காங்கிரஸ் தலைவராக ஆவதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பாராளுமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் ஒய்.பி.சவான் வீட்டில் முக்கிய தலைவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கமலபதி திரிபாதி, சுவரண்சிங், இதேந்திர தேசாய், சந்திரஜித் யாதவ், கரன்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திரா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆவதற்கு இந்தக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
உடனே இந்திரா காந்தி செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை அப்போது ஏற்கத் தான் விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். அவர் அவ்வாறு தெரிவித்த போதிலும், அவருடைய ஆதரவாளர்கள் பிரமானந்த ரெட்டி ராஜினாமா செய்ய வேண்டுமென்றும், இந்திரா காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டுமென்றம் கையெழுத்து வேட்டை ஒன்றை நடத்தினர். இந்திரா காந்தி அக்டோபர் 15ந் தேதி டெல்லியிலே கூடிய காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்திலே பேசும்போது, தனக்கெதிராக ஜனதா தலைவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே இரகசியப் பேச்சு நடந்து வருவதாகவும், தன்னைச் சிறையிலே தள்ளுவதற்குத் திட்டமிட்டுள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
"இது அபாண்டமான குற்றச்சாட்டு" என்று சவான் அவர்களும், பிரமானந்த ரெட்டி அவர்களும் உடனடியாக அறிக்கை விடுத்தனர். காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி பக்கமா? பிரமானந்தரெட்டி பக்கமா? என்ற குழப்பத்திற்கிடையிலே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மூப்பனார் தமிழ்நாடு காங்கிரஸ் இந்திரா காந்தியின் பக்கமே என்று அறிவித்ததோடு, தமிழ்நாட்டில் அக்டோபர் கடைசி வாரத்தில் இரண்டு நாட்கள் இந்திரா காந்தியின் சுற்றுப்பயணத்திற்காகத் தேதி வாங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திட ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்தார்.
இந்திரா காந்தி தமிழகம் வரும்போது எவ்வாறு நடந்து கொள்வது என்பதைப் பற்றி ஆராய்வதற்காக, தி.மு.கழகத்தின் அவசரச் செயற்குழு 27.10.1977 அன்று சென்னையிலே கூடியது. அந்தக் கூட்டத்தில் இந்திரா காந்தி 29,30 ஆகிய நாட்களில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்யும்போது கறுப்புக்கொடி காட்டுவதென்று முடிவெடுக்கப்பட்டது. சென்னையில் - சென்னை, தென்னாற்காடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் சார்பில் நீலநாராயணன், ஆற்காடு வீராசாமி, ஆர்.டி.
சீத்தாபதி ஆகியோர் தலைமையிலும்; திருச்சியில் - திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் சார்பில், கோ.சி.மணி, எல்.கணேசன், எம்.எஸ். வெங்கடாசலம் ஆகியோர் தலைமையிலும்; மதுரையில் மதுரை, இராமனாதபுரம், திருநெல்வேலி, கோவை, குமரி ஆகிய மாவட்டங்களின் சார்பில் எஸ்.எஸ். தென்னரசு, காவேரி மணியம், பொன். முத்துராமலிங்கம், கோவை. ராமனாதன், வை. கோபால்சாமி ஆகியோர் தலைமையிலும்; காஞ்சிபுரத்தில் - செங்கற்பட்டு, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களின் சார்பில் சி.வி.எம்.
அண்ணாமலை, எஸ்.முருகையன், வி.பி.அகிலன், டி.ஆர். மாசிலாமணி ஆகியோர் தலைமையிலும் கறுப்புக்கொடி காட்டப்படும் என்றும், இந்த நான்கு இடங்களிலும் எந்தெந்த மாவட்டங்கள் எங்கெங்கே கலந்து கொள்கிறதோ அந்தந்த மாவட்டச் செயலாளர்களும் தலைமையேற்று நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. கறுப்புக்கொடி காட்டுவதற்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் என்னைக் கேட்ட போது, "இந்தியாவில் ஜனநாயகத்தை வேரறுக்கும் வகையில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தி எழுத்துரிமை, பேச்சுரிமை இவைகளை நசுக்கி அதை எதிர்த்துக் குரல் கொடுத்த காரணத்திற்காக தமிழ்நாட்டில் தி.மு.கழக அரசைக் கவிழ்த்து-கவிழ்த்த பிறகு கவிழ்த்ததற்கான கற்பனைக் காரணங்களைக் காட்டி விசாரணைக் கமிஷன்-பொய் வழக்கு-அவதூறுப் பிரச்சாரம் இவற்றின் மூலம் தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவுள்ள தி.மு.கழகத்தை மாசுபடுத்தத் திட்டமிட்டு நூற்றுக்கணக்கானவர்களை மிசாக்கைதிகளாக ஓராண்டுக் காலம் சிறையில் அடைத்தும், பல்லாயிரக் கணக்கானவர்களைச் சிறையில் பூட்டியும், சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் போன்றோரைச் சிறையில் பலியாக்கியும் இன்னமும் தான் அன்று செய்த நடவடிக்கைகள் நியாயமானவைகள்தான் என்று பிடிவாதமாகக் கூறிக் கொண்டி- ருக்கும் இந்திரா காந்தியின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் அண்ணா வழியில் கட்டிக்காக்கும் ஜனநாயகத்தைப் பேணிப்பாதுகாக்கும் வகையில் அமைதி வழியில் தி.மு.கழகம் கறுப்புக் கொடி காட்டுகின்றது" என்று கூறினேன்.
கறுப்புக் கொடி எந்த இடத்தில் காட்டப்படும் என்று கேட்டதற்கு ஆங்காங்குள்ள காவல்துறை அதிகாரிகளிடம் பேசிவிட்டு, எந்தெந்த இடங்களை ஒதுக்குகிறார்கள் என்பதை அறிந்து முடிவு செய்வோம் என்று கூறினேன். இந்தப் போராட்டம் குறித்து நான் குறித்து நான் விடுத்த அறிக்கையொன்றின் சுருக்கம் வருமாறு:- "ஆட்சிப் பொறுப்பில் இல்லாதவருக்குக் கறுப்புக் கொடி காட்டலாம் என்ற முன் மாதிரியை 1976 ஆம் அண்டு காங்கிரசார் ஏற்படுத்தி, நான் சென்ற இடமெல்லாம் கறுப்புக் கொடி காட்டினர் என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கழகம் எடுத்துள்ள இந்த முடிவு, இந்திரா காந்தியின் ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து தான்! இந்திரா அரசு புரிந்த கொடுமைகளால் ஏற்பட்ட இரத்த வடுக்களை ஒரு கையால் தடவிக் கொண்டே, இன்னொரு கையால் ஏந்துவர் இலட்சக்கணக்கானோர் கறுப்புக் கொடிகளை! சிறையில் பிணமான சிங்கம் சிட்டிபாபுவை நினைத்துக் கண்ணீர் விட்டவாறு, கழகத்தூண் சாத்தூர் பாலகிருஷ்ணனை எண்ணிப் பெருமூச்சு விட்டவாறு, தமிழினத்து மக்கள், தங்கள் கரங்களில் கறுப்புக் கொடி பிடித்து, இந்திராவின் செயல்களுக்கு எதிர்ப்பினைத் தெரிவிப்பர்!
குறிப்பிடப்பட்டுள்ள நான்கு இடங்களில் மட்டுமல்ல; இந்திரா காந்தி செல்லுகிற இடமெல்லாம் கருங்கடலின் அலைகள் எழுந்தது போலக் கறுப்புக் கொடிகள் ஓங்கி உயரட்டும்! எந்தவொரு இடத்திலும் நாம் கட்டிக் காக்கும் அண்ணா வழியை மறந்திடலாகாது! கண்ணியம்-கட்டுப்பாடு இரு கண்களென விளங்கட்டும்! இந்த அறப்போர், தமிழர்கள் தன்மானமற்றவர்களல்ல என்பதை நிலைநாட்ட! தமிழ்நாட்டு மக்கள் ஜனநாயகத்தை இழக்க ஒருபோதும் சம்மதியார் என்பதை உலகுக்கு உணர்த்த!
கொடி கட்டி ஆண்ட அம்மையார் காணட்டும் கோடானு கோடி கறுப்புக் கொடிகளை! கொடுமையைக் கொலுவேற்றிக் குதூகலித்த அம்மையார் செல்லுமிடமெல்லாம் கறுங்கொடிச் சேனையைக் காணட்டும்! தமிழன் யாரையும் தாழ்த்தான், யாருக்கும் தலை தாழான் என்பதை அவனி அறியச் செய்ய அரியதோர் வாய்ப்பு! வெள்ளத்தை வெற்றி கொள்ளும் வகையில் கருங்கொடி பெருகிடுக! உள்ளத்திலோ அண்ணன் காட்டிய வழி பதித்திடுக! ஜனநாயகத்தைக் காத்திடக் குரல் கொடுத்தது குற்றமென ஆயிரமாயிரம் அடக்குமுறைக்கணைகளை, அவதூறு எரியீட்டிகளைப் பாயவிட்ட பாரதத்து முன்னாள் பிரதமரின் பார்வை செல்லும் திசையெல்லாம் பறக்கட்டும் கறுப்புக் கொடி!
உணரட்டும் தமிழ் இனத்தின் நெஞ்சக்கொதிப்பை சர்வாதிகாரக் குணம் கொண்டோர்! பகலில் எப்படி வந்தது இந்தக் காரிருள் என வியப்புறும் வண்ணம் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறையட்டும் கறுப்புக்கொடி!" இந்த அறிக்கை மட்டுமின்றி, அக்டோபர் 28ந் தேதியன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணச் செட்டித் தெருவில் நடைபெற்ற கறுப்புக்கொடி விளக்கப் பொதுக் கூட்டத்திலும் கலந்
து கொண்டு உரையாற்றினேன். திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் விடுத்த அறிக்கையில் திராவிடர்க் கழகத் தோழர்களும் கறுப்புக் கொடி காட்டி, தமிழர்களின் எதிர்ப்பினை இந்திரா காந்திக்கு உணர்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மதுரை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கறுப்புக் கொடி காட்டும் என்று அந்தக் கட்சியின் மதுரை நகர் கிளைக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவித்தார்கள். இந்திரா காந்தி 1977, அக்டோபர் 29ந் தேதியன்று காலை 9.40 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்தே 11.45 மணி அளவில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று - அங்குப் பொதுக் கூட்டம்; பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்சி சென்று அங்கு இரவு பொதுக்கூட்டம்; பின்னர் புகைவண்டி மூலம் சென்னை திரும்பி, 30ஆம் தேதியன்று காலையில் காஞ்சிபுரம் நிகழ்ச்சி; இரவு சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டம் என்ற நிகழ்ச்சி நிரல் ஏடுகளில் அறிவிக்கப்பட்டிருந்தது.
20.10.1977! தி.மு.கழகத்தை இந்திரா காந்தியும், ஏன்; இந்தியத் திருநாடு முழுவதும் புரிந்து கொண்ட நாள் அது! சுயமரியாதை இயக்கத்தின் வாரிசுகள்தான் தி.மு.கழகத்தின் தொண்டர்கள் என்பதை உலகத்திற்கு அன்றைய தினம் உணர்த்திக் காட்டினார்கள். 27ந் தேதி செயற்குழுவிலே தீர்மானம்! ஒரேயொரு அறிக்கை! சென்னையிலே மட்டும் ஒரு விளக்கப் பொதுக் கூட்டம்! 29ந் தேதி தமிழகமே கிளர்ந்தது! சென்னை விமான நிலையத்தில் 29ந் தேதி காலையில் இந்திரா காந்தி வந்து இறங்கினார்.
30ந் தேதியன்றுதான் சென்னை நகரில் இந்திரா காந்திக்கு நிகழ்ச்சி இருந்தபடியால், அன்று தான் சென்னையிலே கறுப்புக் கொடி காட்டுவதாக ஏற்பாடு! இருந்தாலும் ஆர்வமிக்க கழகத் தோழர்கள் 29ந் தேதி காலையில் விமான நிலையம் சென்று விட்டனர் கறுப்புக் கொடிகளுடன்! முன்னாள் மாநகராட்சி மன்ற உறுப்பினர், சைதை ஆர்.எஸ்.ஸ்ரீதரனை மீனம்பாக்கம் விமான நிலையத்திலே, இந்திரா காந்திக்கு நேர் எதிரே சென்று கறுப்புக் கொடி காட்டினார் என்பதற்காக, அ.தி.மு.க.
ஆட்சியின் காவல்துறையினர் மாட்டை அடிப்பதைப் போல அடித்தனர். தடியடிப் பிரயோகம் நடத்தி, கறுப்புக்கொடி காட்டச் சென்ற கழகத்தினரை அடித்து விரட்டி விட்டு, எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக அடிப்பட்ட ஆர்.எஸ்.ஸ்ரீதரன் உட்பட, சைதை கிட்டு, கோ.தம்பிரான், மோகனசுந்தரம் உட்பட 25 பேர்களை மட்டும் கைது செய்தனர். கழகத்தினர் நூற்றுக்கணக்கான புறாக்களைப் பிடித்து, அதற்குக் கறுப்பு வண்ணம் தோய்த்து, விமானம் இறங்குகின்ற நேரத்திலே கறுப்புப் புறாக்களை வானத்திலே பறக்க விட்டனர்.
சென்னையை விட்டு, மதுரைக்கு இந்திரா காந்தி புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணி அளவிலேயே தென்னரசு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இரண்டு மைல் நீளத்திற்குக் கழகத் தோழர்கள் கறுப்புக் கொடியோடு நின்று கொண்டிருப்பதாகவும்; எங்கெங்கும் கறுப்புக் கொடியே காணப்படுவதாகவும் தெரிவித்தார். மதுரை, நெல்லை, கோவை, முகவை, குமரி மாவட்டக் கழகத் தோழர்கள் அந்தந்த மாவட்டக் கழக செயலாளர்கள் தலைமையிலே மதுரையிலே சூழ்ந்தனர்.
