நெஞ்சுக்கு நீதி
முன்னாள் பிரதமர்கள் கைது! · 244 / 391
28. முன்னாள் பிரதமர்கள் கைது! லா கூர் சிறையிலே அடைக்கப்பட்ட பூட்டோவைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. பூட்டோ பாகிஸ்தானின் பிரதமராக இருந்தபோது அவரை எதிர்த்த அகமதுகான் என்ற அரசியல் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைக்கு ஏற்பாடு செய்ததாக, பூட்டோ மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அகமதுகானின் மகன் கசூரி, எம்.பி., கொடுத்த புகாரில்; அவரும், அவரது தந்தையும் ஒருநாள் காரில் போய்க்கொணடிருந்த சமயம், பூட்டோ ஏற்பாட்டின் பேரிலேயே காரை நோக்கிச் சிலர் துப்பாக்கியால் சுட்டார்கள் என்றும், அதில் அவருடைய தந்தை குண்டு பாய்ந்து இறந்ததாகவும் கூறினார்.
மேலும் அவரும், அவரது தந்தையும் முன்பு பூட்டோவின் கட்சியில் இருந்ததாகவும், அவர் போக்குப் பிடிக்காமல் அக்கட்சியிலிருந்து விலகியதாகவும், அதனால் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொல்ல பூட்டோ ஏற்பாடு செய்ததாகவும், அதில் தன் தந்தை பலியானதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் பூட்டோவின் உத்தரவுப்படிதான் கொலை செய்தோம், என்று ஐந்து போலீஸ் அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்கள். பதவியிலிருந்த போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் இருவரைக் காரணமில்லாமல் சிறையில் போட்டதாகவும் பூட்டோ மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இராணுவத் தளபதி ஜியா-உல்-ஹக் வெளியிட்ட அறிவிப்பில் 1977 அக்டோபரில் தேர்தல் நடத்தப் போவதாகவும், வேட்பாளர்கள் சொத்துக் கணக்கை உடனே தெரிவிக்க வேண்டுமென்றும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகமாகச் சொத்துச் சேர்த்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்றும், கள்ளத்தனமாகச் சொத்துச் சேர்த்தவர்கள் அவைகளை ஒப்படைக்கத் தவறினால் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும், அவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அப்போது படித்துக் கொண்டிருந்த பூட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ தன் தந்தை கைது செய்யப்பட்டது பற்றிக் கூறும்போது தான் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது விடியற்காலை 4.30 மணி அளவில் மூன்று பேர் துப்பாக்கியுடன் தன் அறையில் நுழைந்து, எழுந்திருக்கச் சொன்னதாகவும், இரவு உடையில் இருப்பதால் எழுந்திருக்க இயலாது என்று தான் கூறியதாகவும், பணியாவிட்டால் சுட்டு விடுவதாக அவர்கள் மிரட்டியதாகவும்.
பின்னர் அவர்கள் வெளியேறி விட்டதாகவும் அப்போது அவரது தங்கை "சனம்" ஓடி வந்து, தங்கள் தந்தையை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, போய் விட்டதாகவும், அதனால் தாயின் உடல் நலம் திடீரென்று பாதிக்கப் பட்டுள்ளதாகவும் சொன்னார் என்றும் கண்ணீரோடு தெரிவித்தார். பாகிஸ்தானில் அக்டோபர் 18ந் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று இராணுவ தளபதி அறிவித்ததைத் தொடர்ந்து பூட்டோ விடுதலை செய்யப்பட்டார். விடுதலையடைந்த பூட்டோ தேர்தலில் போட்டி போடப் போவதாக அறிவித்துத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் 17.9.1977 அன்று இராணுவம் பூட்டோவை மீண்டும் கைது செய்தது. அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். பூட்டோவின் மீது கொலைக் குற்றம், நாட்டுக்கு எதிராக சதி செய்தது, இலஞ்சம் வாங்கிச் சொத்துச் சேர்த்தது போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பாகிஸ்தானில் பூட்டோ கைது செய்யப்பட்ட அதே 17.9.1977 அன்று இந்தியாவில் ஒரிசா மாநில முன்னாள் முதலமைச்சராக இருந்தவரும், 1977 ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான திருமதி நந்தினி மீது, அவர் முதல்வராக இருந்தபோது இலஞ்சம் வாங்கிதாக அவருடைய வீடுகளிலும், அவரது உறவினர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று, அவருடைய வருமானத்திற்கு அதிகமாக சுமார் ஏழு இலட்சம் ரூபாய்க்கு அவர் சொத்துக்கள் வாங்கியிருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டதின் கொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் வாங்குதல், சதி செய்தல் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நந்தினி கைது செய்யப்பட்டால் உடனடியாக ஜாமீனில் விட வேண்டுமென்று அவருடைய கணவர் முன் ஜாமீன் பெற்றிருந்தார். அதன்படி நந்தினி கைது செய்யப்பட்டதும், ஜாமீனில் விடப்பட்டார். ஜனதா கட்சியை விட்டு நந்தினியை விலக்க வேண்டுமென்று 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஜனதா கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினராக இருந்த நந்தினியை காங்கிரஸ், கட்சியில் சேர்ந்து விடும்படி இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, நந்தினி டெல்லியில் இந்திரா காந்தியைப் போய்ப் பார்த்தார்.
அமெரிக்கப் பத்திரிகை "நியூஸ் வீக்" க்கு இந்திரா காந்தி அளித்த பேட்டியில் ஜனதா அரசு தன்னைக்கண்டு பயப்படுவதாகவும், தான் எங்கே சென்றாலும் ரகசிய போலீசார் தொடர்ந்து வருவதாகவும், தனக்கு வருகிற கடிதங்கள் பிரித்துப் பார்க்கப் படுவதாகவும், வெளிநாட்டில் நடைபெறும் ஒரு பொது நிகழ்ச்சியிலே கலந்து கொள்ளக் கூட அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அப்படிப்பட்ட சூழ்நிலைகளைக் கவனிக்கும்போது தன்னைக் கைது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார். செப்டம்பர் 12ந் தேதி பிரதமர் மொரார்ஜி தேசாயை இந்திரா காந்தி சந்தித்துப் பேசினார்.
பேச்சு விவரங்கள் என்ன என்பதை இருவருமே வெளியிடவில்லை. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களிலே இருந்து தீவிர அரசியலுக்குள் மீண்டும் நுழைந்தார். அதற்கு முன்னோடியாக அவர் ஆச்சர்யா வினோபா அவர்களையும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களையும் நேரில் சென்று சந்தித்தார். இதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 1ந் தேதியன்று நாடாளுமன்றத்தில் ஜனதா அரசு ஒரு வெள்ளை அறிக்கையினைத் தாக்கல் செய்தது.
அதிலே நெருக்கடி நிலை அமலிலே இருந்தபோது இந்திரா காந்தியின் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும், பத்திரிகைகள் அடக்கப்பட்டது பற்றியும் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. "அரசியலுக்குத் திரும்பத் திட்டமிடுகிறீர்களா?" என்று செய்தியாளர்கள் இந்திரா காந்தியைச் சந்தித்துக் கேட்டதற்கு அவர் எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை. ஆகஸ்ட் 4ந் தேதி இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் டெல்லியிலே உள்ள கர்நாடக பவனிலே ஒரு விருந்து ஏற்பாடு செய்தார்கள்.
அதற்கு காங்கிரஸ் பார்லிமெண்டரிக் கட்சித் தலைவர் சவான் அவர்களோ, அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பிரமானந்த ரெட்டி அவர்களோ வரவில்லை. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னூறு பேரில் சுமார் 150 பேர்கள் மட்டுமே அந்த விருந்தில் கலந்து கொண்டார்கள். இந்திரா காந்தி சற்றுத் தாமதமாக வந்து அந்த விருந்திலே கலந்து கொண்டார். கர்நாடகத்தைச் சேர்ந்த மாநிலங்கள் அவை உறுப்பினர் எப்.எம்.கான் பெயரில் தான் அந்த விருந்துக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
இதற்கு மறுநாள், ஆகஸ்ட் 5ந் தேதியன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்திரா காந்தி மீது ஒரு குற்றச் சாட்டினைத் தெரிவித்தார். அதாவது, இந்திரா காந்தி குடியிருந்த 1, சப்தர்ஜங் சாலை இல்லத்தில் சுமார் மூவாயிரம் எழுத்துச் சான்றுகள் எரிக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டினை வெளியிட்டார். உடனே இந்திரா காந்தி அந்தக் குற்றச்சாட்டினை மறுத்து பிரதமர் அவர்களுக்கே கடிதம் எழுதினார். உண்மையில் அரசாங்க எழுத்துச் சான்றுகள் எதுவும் அங்கே வைக்கப்பட்டதில்லை என்றும், பல ஆண்டுக்காலமாகத் தனக்குச் சொந்த முறையிலே வந்த கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், பத்திரிகைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட செய்திகள், போன்றவைகள் மட்டுமே அழிக்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்திலே தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் விவகாரங்களில் இந்திரா காந்தியை முக்கிய பங்கு பெறச் செய்வதற்காக அவருடைய ஆதரவாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சவான் அவர்களும், பிரமானந்த ரெட்டி அவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 1973ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி தமிழகத்திலே இருந்த போது பொது வாழ்விலே ஈடுபட்டிருப்போர் மீது கூறப்படும் இலஞ்ச ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டது. பொது வாழ்விலே ஈடுபட்டுள்ள முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற பேரவை, மேலவை உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், நகர்மன்றத் தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள் போன்றவர்கள் மீது கூறப்படும் இலஞ்ச ஊழல்களை விசாரிக்க ஒரு கமிஷன் அமைப்பது தான் அந்தச் சட்டத்தின் நோக்கம்.
சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன்படி விசாரணக் கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடாத்ரி நியமனம் பெற்றிருந்தார். அந்தச் சட்டத்தை இரத்து செய்ய அ.இ. அ.தி.மு.க. அரசின் சார்பிலே ஒரு மசோதா 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று, சட்ட அமைச்சர் நாராயணசாமி முதலியார் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதுபற்றிய விவாதத்திலே கழகத்தின் சார்பில் பேராசிரியர் கலந்துகொண்டு, பழைய சட்டத்திலே ஏதாவது தவறுகள் இருக்குமானால், தகுந்த திருத்தங்களைக் கொண்டு வந்து திருத்தம் செய்திருக்கலாம், அடியோடு இரத்து செய்வது சரியல்ல என்று கூறினார்.
இதற்குப் பதில், மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து, அதற்குப் பின்னர்ப் பழைய சட்டத்தை ரத்து செய்திருக்கலாமே என்றும்கூட, கடைசி நேரத்தில் கேட்டுப் பார்த்தும் சம்மதிக்காததால் பழைய சட்டத்தை இரத்து, செய்வதற்குத் தி.மு.கழகம் அவையிலே இருந்து உதவிட முடியாது என்று கூறி அவையிலிருந்து வெளி நடப்புச் செய்தது. பின்னர்ப் பழைய சட்டத்தை இரத்துச் செய்யும் மசோதா அவையிலே நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் இரத்து செய்யப்பட்டதின் காரணமாக; அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குத் தொடர வேண்டுமெனில் கவர்னரின் அனுமதி பெற வேண்டும் என்ற ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கிறது என்ற நிலை ஏற்பட்டது.
ஆகஸ்ட் திங்கள் இறுதி வாரத்தில் தென்னாற்காடு மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். நெய்வேலி நிகழச்சி என்னுடைய எடைக்கு எடை நாணயங்கள் வழங்கும் நிகழ்ச்சி. அதற்கு முன்பு சென்னையிலே அப்படியொரு நிகழ்ச்சி வடபழனியிலே நடைபெற்று எடைக்கு எடை பத்துக் காசு நாணயங்களாகப் போட்டு ஆயிரத்து நானூறு ரூபாய் கழக வளர்ச்சி நிதியாகத் தந்திருந்தார்கள். நெய்வேலி நிகழ்ச்சியிலே பல்வேறு வகை நாணயங்களை என்னுடைய எடைக்கு எடை என்று, மூவாயிரத்து நூற்று அறுபத்தெட்டு ரூபாய் என்ற அளவிற்கு கழக வளர்ச்சி நிதியாகத் தரப்பட்டது.
நெய்வேலி நிகழ்ச்சியிலே நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, நானும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரும் அடிக்கடி சட்டப் பேரவையிலே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதைப் பற்றியும், வணக்கம் தெரிவித்துச் சிரித்துக் கொள்வதைப் பற்றியும் பொதுமக்கள் ஒருமாதிரியாக எண்ணுகிறார்கள் என்றும், ஏனென்றால் நாங்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் கழக முன்னோடிகள் கந்தப்பன், புலவர் கோவிந்தன் போன்றவர்கள் எல்லாம் கைது செய்யப்படுகிறார்களே, அதென்ன வேடிக்கை என்றெல்லாம் கேட்டு, நான் அதற்கு விளக்கம் தரவேண்டுமென்றும், தனக்கு அதுபற்றிச் சந்தேகம் எதுவுமில்லை என்றாலும், ஒருசில கழகத் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தினை நான் போக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
நான் அதுபற்றி என்னுடைய பேச்சிலே குறிப்பிட்டு, அதற்கு விளக்கமும் அந்தக் கூட்டத்திலே அளித்தேன். அது வருமாறு:- "நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கேட்ட கேள்விக்கு இங்கேயிருக்கின்ற கிருஷ்ணமூர்த்தியையும், ஆற்காடு வீராசாமியையும் உதாரணமாக வைத்தே விளக்கிட விரும்புகிறேன். முன்பு நான் முதலமைச்சராகக் சட்ட சபையிலே உட்கார்ந்திருக்கும்போது எதிர் வரிசையிலே அ.தி.மு.க. நண்பர்கள் அமர்ந்திருப்பார்கள். அப்போது எனக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி எழுந்து எதிர்ப்பக்கம் போய், அ.தி.மு.க.
நண்பர்களோடு குலாவி மகிழ்ந்து பேசுவதை நான் பல நேரங்களிலே பார்த்திருக்கிறேன். இவர் கோவை செழியனோடு (அ.தி.மு.க.) பேசுவார். நண்பர் வீராசாமி அ.தி.மு.க.விலே இருந்த பெ. சீனுவாசனோடும், எட்மண்ட் போன்றவர்களோடும் பேசிக் கொண்டிருப்பார். இப்படி அவர்கள் பேசிய நேரத்தில் எனக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே இல்லை. ஏதோ தோழமை உணர்வோடு பேசுகிறார்கள். இருந்தாலும் கட்சிக் கொள்கையிலே நிச்சயமாக உறுதியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான், அவர்கள் பேசுவதை இரசித்துக் கொண்டிருப்பேன்.
பேசி முடித்துவிட்டு, பிறகு என் பின்னால் வந்து கிருஷ்ணமூர்த்தி உட்காருவார். "என்ன குலாவினீர்கள்?" என்று கேட்பேன். என்ன பேசினார்கள் என்பதைச் சொல்வார். இப்போதும் அதைத்தான் "நான் அவர்களோடு பேசியபோது என்னைக் கேட்டீர்களே, இப்போது நான் கேட்கிறேன். சொல்லுங்கள்" என்று என்னை நோக்கிக் கேட்டிருக்கிறார்.
ஆனால் நான் கேட்ட வழியில் அவர் கேட்டாரா என்றால் இல்லை. நான் அவரிடம் தனியாகக் கேட்பேன். அவர் இலட்சக்கணக்கான மக்களின் முன்னால் என்ன பேசினீர்கள் என்று கேட்டிருக்கின்றார், அதுதான் சங்கடம். அலுவலகத்திற்குச் சென்ற கணவன் எப்போது வருவான் என்ற மனைவி மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றாள். கணவன் வருகிறான், வருவதைப் பார்த்ததும் மனைவிக்குப் புன்னகை ஏற்படுகின்றது. பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.
தெருக்கோடியில் வருகிறவனை இன்னொரு பெண் சந்திக்கிறாள். இரண்டு பேரும் நின்று பேசிக் கொண்டிருக்கின்றார்கள். பிறகு அவள் போய் விடுகிறாள். இவன் வீட்டிற்கு வருகிறான். வந்து வீட்டிற்குள் நுழைந்ததும், "யாரோ ஒரு பெண்ணோடு பேசினீர்களே, யார் அவள்?"
என்று மனைவி கேட்கிறாள். "ஒன்றுமில்லை, எழும்பூர் செல்ல வழி எப்படி என்று கேட்டாள்" என்கிறான் கணவன். "எழும் பூருக்குத்தான் வழி கேட்டாளா? அல்லது பீச்சுக்குப் போகலாமா என்று கேட்டாளா?" என்று கணவன் மீதுள்ள உரிமை காரணமாகக் கேட்கிறாள். அதைப் போலத்தான், கிருஷ்ணமூர்த்தி சந்தேகத்தோடு, "எம்.ஜி.ஆரோடு பேசினீர்களே, என்ன பேசினீர்கள்?"
என்று கேட்கிறார். நான் சத்தியமாக அந்தக் கணவன் சொன்னதைப் போலக் கிருஷ்ணமூர்த்திக்குச் சொல்கிறேன்-" எழும்பூருக்கு வழி கேட்டதைப் போல"த்தானே தவிர வேறல்ல. கட்சிகளுக்கிடையே கொள்கை வேறுபாடுகள் வேறு, இலட்சிய வேறுபாடுகள் வேறு, இன்னம் சொல்ல வேண்டுமேயானால், தமிழ்நாட்டின் அரசியல் பாரம்பரியத்தைப் பார்த்தால், பெரியார் அவர்கள் ஊர்வலமாகச் சென்ற நேரத்தில் - ராஜாஜியைக் கடுமையாக எதிர்த்துப் பெரியார் பேசிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், ஊர்வலமாக பெரியார் ராஜாஜி குடியிருந்த வீதியில் போனபோது ராஜாஜி அவர்கள் வெளியே வந்து பெரியாருக்கு மாலை அணிவித்தார்.
அதைப்போலவே காமராஜர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அப்போது காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அண்ணா அவர்கள் தண்டலம் என்ற
இடத்திற்கு காமராஜரை அழைத்து ஒரு பெரிய வரவேற்பளித்து; அந்தத் தொகுதி மக்களுடைய குறைபாடுகளை எல்லாம் விளக்கினார். இதெல்லாம் தமிழ்ப் பண்பாடு. சட்டமன்றத்திலே கூட, காமராஜர் அவர்களும், அண்ணா அவர்களும் அடிக்கடி எத்தனையோ விஷயங்களைப் பேசி மகிழ்ந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதைப் போலத்தான் சட்டசபையிலோ அல்லது சபாநாயகர் அறையிலோ சட்டமன்ற நடவடிக்கைகளைப் பற்றி நானும் எம்.ஜி.ஆரும் பேசியிருப்போமேயல்லாமல் யாரும் சந்தேகப்படுவதைப்போல எந்தத் தேதியில் தி.மு.கழகமும், அ.தி.மு.க.வும் ஒன்றாய்ச் சேரலாம் என்று பஞ்சாங்கம் பார்ப்பதற்காக அல்ல."
இவ்வாறு அந்தக் கூட்டத்தில் நான் விளக்கம் கூறி ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எந்த அளவிற்கு அவையிலே நடந்து கொள்ள வேண்டுமென்பதை விளக்கினேன். 28.9.1977 அன்ற பொது உடமைக்கட்சித் தலைவர்களில் ஒருவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலே நீண்ட காலம் இருந்து 1973இல் அந்தக் கட்சியிலே இருந்து பிரிந்து தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி என்று புதுக் கட்சியைத் துவங்கியவரும், பல தியாக முத்திரைகள் பெற்றவரும், என்னுடைய சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவருமான மணலி கந்தசாமி அவர்கள் மாரடைப்புக் காரணமாகத் தன் சொந்த ஊரில் மரணமடைந்தார்.
தீவிர கம்யூனிஸ்டாக வாழ்வைத் தொடங்கிய அவர் ஜனதா கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் கண்ணை மூடினார் என்பது ஒரு அரசியல் விசித்திரம்! பாகிஸ்தானிலிருந்து வங்க தேசம் (பங்களாதேஷ்) பிரிந்ததிலிருந்து வங்க தேச அதிபராக இருந்த முஜிபுர் ரக்மான் 15.8.1975 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அதிலிருந்து அங்கே இராணுவ ஆட்சிதான் நடைபெற்று வந்தது. 2.10.1977 அன்று அங்கே ஆட்சிக்கு எதிராக இராணுவப் புரட்சி ஏற்பட்டது.
ராணுவத்தில் ஒரு பகுதியினர் ஜியாவுர் ரகுமானைக் கொலை செய்யவும், ஆட்சியைக் கைப்பற்றவும் முயன்றார்கள். ரேடியோ நிலையத்தைக் கூடக் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆனால் ஜியாவுர் ரக்மானின் ஆதரவு ராணுவத்தினர் புரட்சிக்காரர்களை எதிர்த்துத் துப்பாக்கிச் சண்டை நடத்தினார்கள். ஜியாவுர் ரக்மான் ஆதரவு படைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், புரட்சிக்காரர்களை அதிக அளவிலே சுட்டுத் தள்ளினார்கள். ஜியாவுர் ரக்மானைக் கொல்வதற்காகக் சென்ற புரட்சிக்காரர்களை, ஜியாவுர் ரக்மானின் மெய்க்காவல் படையினர் சுட்டுக் கொன்றார்கள்.
புரட்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு, ஜியாவுர் ரக்மான் உயிர்தப்பியதோடு, ரேடியோ நிலையமும் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அதில் ஜியாவுர் ரக்மான், தான் உயிருடன் இருப்பதாகவும், புரட்சி ஒடுக்கப்பட்டு விட்டது என்றும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு மறுநாள் 3.10.1977 அன்று இரவு 7 மணிக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி புதுடெல்லியில் அவரது இல்லத்திலே கைது செய்யப்பட்டார்.
