நெஞ்சுக்கு நீதி
இலங்கையில் தீப்பொறி · 243 / 391
27. இலங்கையில் தீப்பொறி நா வலர் நெருஞ்செழியன் அவர்கள் மக்கள் தி.மு.க. ஆரம்பித்தது பற்றியும், பின்னர் எம்.ஜி.ஆர் அமைச்சரவையிலே பங்கு பெற்று அந்தக் கட்சியோடு இணைந்தது பற்றியும் இத்தொடரில் ஏற்கனவே சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். "மக்கள் தி.மு.க."வின் பொதுக்குழு 7.9.1977 அன்று சென்னையிலே நடைபெற்று, நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம், "அண்ணாவின் கொள்கை வழிநின்று பாடுபட்டு வந்துள்ள திராவிட இயக்கங்களின் வழி வந்தவர்கள் பல அணிகளில் பிரிந்து நின்று செயல்படும் சூழ்நிலையை மாற்றிட அண்ணாவின் தம்பிகள் அனைவரையும் ஓர் அணியில் கொண்டு வந்திட தேவையான முயற்சிகளை எடுத்திட பொதுச் செயலாளர் நாவலருக்கு பொதுக்குழு அதிகாரம் வழங்குகிறது" என்பதாகும்.
இந்தத் தீர்மானம் பற்றிச் செய்தியாளர்கள் பேட்டியின் போது நாவலர், "பொதுக்குழு எனக்கு அளித்த அதிகாரத்தைப் பயன்படுத்திப் பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச இருக்கிறேன். தி.மு. கழகத்தைப் பொறுத்தவரையில் கருணாநிதி தவிர மற்றவர்களுடன் பேச முயற்சி மேற்கொள்ளப்படும். இந்தத் தீர்மானத்தையொட்டி, என்னிடம் பேச விரும்புவர்களுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
இதுபற்றி திருச்சி மாவட்டம் வரகனேரியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனார், "மக்கள் தி.மு.க.வின் பொதுக்குழு தீர்மானத்தைப் பார்த்தேன். மூன்று கட்சிகளும் எப்படி ஒன்றாக முடியும்? இன்று ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வுக்கு இணைய வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்கட்சியாக மக்கள் நம்பிக்கைக்கு உரிய இயக்கமாக தி.மு.கழகம் சேர வேண்டிய அவசியமும் அவசரமும் இல்லை.
'தி.மு.கழகம் இணைய ஒத்துவரவில்லை. மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் இணைந்துவிட்டது' என்று கூறப் போகிறார்கள். இந்த நாடகம் ஏன்? சேர விரும்புபவர்கள் நேராகச் சேர வேண்டியதுதானே" என்று கருத்துத் தெரிவித்துவிட்டார். இந்தப் பிரச்சினை பற்றி சிதம்பரம் நகரிலே நடைபெற்ற பொதுக்குழவிலே நான் விளக்கினேன். அதன் சுருக்கம் வருமாறு:- "கருணாநிதி தவிர மற்றவர்களிடம் பேசுவேன் என்று நாவலர் கூறியிருக்கிறார். கருணாநிதியையும், பேராசிரியரையும் மற்றவர்களையும் பிரித்து வைத்துத் தனிமைப்படுத்துவதன் மூலம் தி.மு.
கழகத்தை ஒழித்துவிடலாம் என்று யார் யாரோ பழைய காலத்தில் சில ஏமாளிகள் கருதியதைப்போல நாவலரும் கருதியிருக்கிறாரே என்பதை எண்ணி நான் மெத்தவும் வருத்தமடைகிறேன். இந்தப் பொதுக்குழுவிற்கு முன்பு செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து, நாவலருடைய பேட்டி பற்றிக் கருத்துக் கேட்டிருந்தால்-"சிதம்பரம் பொதுக்குழுவிற்கு நான் போகாமல் இருந்து விடுகிறேன். நாவலர் அவர்களே, சிதம்பரம் சென்று பொதுக்குழுவிலே இந்தக் கருத்தினை எடுத்துச் சொல்லி, அதனைப் பொதுக்குழு ஏற்றுக் கொள்ளுமானால் அந்த முடிவிற்குக் கட்டுப்பட நான் தயாராக இருக்கிறேன்" என்று சொல்லியிருப்பேன்.
ஏனென்றால் திராவிட இயக்கங்கள் எல்லாம் ஒன்றாக வேண்டும் என்பதில் எனக்கோ, இங்குள்ளவர்களுக்கோ வேறுபாடான கருத்துக்கள் கிடையாது." இதற்குப் பின்னர் தான் 18.9.1977 அன்று சென்னையில் அ.தி.மு.க சார்பிலே நடைபெற்ற பெரியார் சிலை திறப்பு விழாவிலே கலந்து கொண்ட நாவலர் அவர்கள் அந்த மேடையிலே மக்கள் தி.மு.க. அ.தி.மு.க.வுடன் இணைந்ததாக அறிக்கை கொடுத்தார். அதுபற்றி எம்.ஜி.ஆர். பேசும்போது 19ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழுவில் மக்கள் தி.மு.க.வை இணைப்பது பற்றிப் பேசப்படும் என்றும், அப்போது நிச்சயமாக அந்த இணைப்பு ஏற்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அவ்வாறே மறுநாள் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் மக்கள் தி.மு.க. இணைப்பு ஏற்கப்பட்டதாகவும், அப்படி அ.தி.மு.க.வோடு இணைகிறவர்கள் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற நெறிமுறைப்படி கட்சியில் சேருகிற எந்த உறுப்பினர் மீதாவது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் முறையாக ஆதாரத்தோடு சுமத்தப்படுமானால் அப்படிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறவர்கள் கழகத்தால் நியமிக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் நீதிபதியின் விசாரணைக்கு உட்பட வேண்டும் என்ற நடைமுறைகள் கண்டிப்பாக அமல் நடத்தப்பட வேண்டும் என்பதையும் பொதுக்குழு முடிவு செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்தத் தீர்மானத்தின் பிற்பகுதி ஒருவர் விஷயத்திலேகூட நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்ட 1977ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்தன. இந்தியாவில் பெண் பிரதமராக திருமதி இந்திராகாந்தி அம்மையார் ஆட்சி செய்த காலக் கட்டத்திலேதான் இலங்கையிலே ஸ்ரீமாவோ பண்டார நாயகா அவர்கள் ஆட்சிக் கட்டிலிலே இருந்தார்.
ஆமாம் 1995ஆம் ஆண்டிலே இலங்கை அதிபராக இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் திருமதி சந்திரிகா அவர்களின் அன்னை தான் 1977ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், பின் மகள் என்று மூன்றுபேர் அதிபராக இலங்கையிலே ஆட்சியின் தலைமைப் பீடத்திலே இருந்திருக்கின்றார்கள். இந்தியாவிலே தந்தை நேரு, அவருடைய மகள் இந்திராகாந்தி, பின் அவருடைய மகன் ராஜீவ்காந்தி என்று மூவரும் பிரதமராக இருந்திருக்கின்றார்கள்.
மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானிலோ பூட்டோவும், அவரது மகள் பெனாசிர் பூட்டோவும் பிரதமர் பொறுப்பினை வகித்திருக்கிறார்கள். 1977ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டார நாயகாவின் இலங்கை சுதந்திரக் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. அதுவரை இலங்கையிலே எதிர்க்கட்சியாக இருந்த ஜெயவர்த்தனே அவர்களது ஐக்கிய தேசியக் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறியது.
தனிஈழம் கோரி - உதயசூரியன் சின்னத்தைத் தாங்கி, அத்தேர்தலில் போட்டியிட்ட "தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி"க் கட்சியும், தான் அதற்குமுன் பெற்றிருந்த இடங்களை விட அதிகமாகப் பெற்று, இலங்கை நாடாளுமன்றத்திலே பிரதான எதிர்க்கட்சியாக ஆயிற்று. தமிழர் விடுதலை முன்னணி பெற்ற இந்த வெற்றி குறித்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்து தமிழர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் நாவலர் அமிர்தலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துத் தந்தி ஒன்றினை தி.மு.கழகத்தின் சார்பிலே அனுப்பினேன்.
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக அப்போது பொறுப்பேற்ற நாவலர் அமிர்தலிங்கம் அவர்களும், அவரது துணைவியார் மங்கையற்கரசி அம்மையார் அவர்களும் பின் நாட்களில் என்னுடைய குடும்பத்தினரோடும், கழகத்தினரோடும் எந்த அளவிற்கு பாசத்தோடும், நெருக்கத்தோடும் பழகினார்கள் என்பதைப் பற்றிப் பின்னர் எழுதுகின்றேன். 21.8.1977! இலங்கையிலிருந்து ஏராளமான தொலைபேசிகள் எனக்கு வந்தவண்ணம் இருந்தன. அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட காரணத்தால் நின்று போனது.
வந்த செய்திகளோ நெஞ்சைக் குலுக்கும் வகையில் இருந்தன. அங்கு வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களும், இந்திய நாட்டுத் தமிழர்களும் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பற்ற ஒரு பயங்கர சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும், இலங்கை காவல்துறை, தமிழர்கள் மீது எடுத்த கடும் நடவடிக்கையின் விளைவாக அமளி ஏற்பட்டு, சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி, பல தமிழர்களின் ஆவி பறிபோய் விட்டது என்றும், தமிழர்களின் கடைகள் சூறையாடப்படுவதாகவும், நாடு முழுதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
நான் உடனடியாக இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களுக்கு இலங்கைத் தமிழர் நலன் காக்க இலங்கை விவகாரத்தில் உடனடியாகத் தலையிடுங்கள் என்று கேட்டு விவரமான தந்தி ஒன்றைக் கொடுத்தேன். 22.8.1977 அன்று இரவு 10 மணி அளவில் இலங்கையிலிருந்து தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்ட "சுதந்திரன்" இதழாசிரியர் மகேசன் "தாங்க முடியாத கொடுமை நடைபெறுகிறதென்றும், இலங்கை வாழ் தமிழர்களன்னியில், இந்தியப் பிரஜா உரிமையுள்ள தமிழர்களும் வேட்டையாடப்படுகின்றார்கள் என்றும், வன்முறை - கற்பழிப்புப் போன்ற கொடுமைகளைத் தாங்க முடியாமல் பல பகுதிகளிலுமிருந்து ஐயாயிரம் தமிழர்கள் கொழும்புக்கு சிதறி ஓடி வந்திருப்பதாகவும், அவர்களை, யாழ்ப்பாணம் பகுதிக்குக் கொண்டு செல்ல முயற்சிகளைத் தமிழர் தலைவர்கள் மேற்கொண்டிருப்பதாகவும்" அழுதுகொண்டே கூறி - "உங்களை நம்பித்தான் - தமிழ் நாட்டு மக்களை நம்பித்தான் இருக்கிறோம்" என்றார்.
உடனடியாக நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் கலந்து பேசி, மறுநாளே அதாவது 24.8.1977 அன்றே காலை 9 மணியளவில் சென்னை அண்ணாசாலை, அண்ணா சிலையிலிருந்து பேரணி ஒன்றை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு காட்டுவதற்காக எடுப்பதென்றும், இலங்கை துணை ஹைகமிஷனர் அலுவலகம் சென்று முறையீடு ஒன்றைத் தருவதென்றும், 24ந் தேதியன்று சென்னை நகரம் முழுதும் கடையடைப்பு(பந்த்) நடத்துவதென்றும் கழகத்தின் சார்பிலே அறிவித்தோம். சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் சீதாபதி நீண்ட அறிக்கை ஒன்றினை விடுத்து, பேரணியிலே கழகத்தோழர்கள் கழகக் கொடியுடன் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
இலங்கைத் தமிழர்களுக்காக நடைபெறும் ஊர்வலம், கடையடைப்பு வெற்றி பெற உதவ வேண்டுமென்று திராவிடர் கழகத்தலைவர் அன்னை மணியம்மையார் அறிக்கைமூலம் கேட்டுக் கொண்டார். திராவிடர் கழகத்தின் சார்பிலே, பிரதமருக்கு அவர் தந்தி ஒன்றும் கொடுத்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றித் தி.மு.கழகம் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதைக் கைவிட வேண்டுமென்று சட்டமன்றப் பேரவையிலே ஆளுங்கட்சி சார்பிலே கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதுபற்றிச் செய்தியாளர்கள் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரை சந்தித்துக் கேட்டபோது - "திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கெனவே தீர்மானித்தபடி, அர்த்தால், ஊர்வலம், கடையடைப்பு ஆகியவை நடந்தே தீரும். இதில் எந்தவித மாற்றமுமில்லை" என்று கூறிவிட்டார்.
ஒரே ஒருநாள் அறிவிப்புத்தான்! ஓங்கு புகழ் தமிழ்க்குலத்தின் ஒப்பற்ற பேரணியை சென்னை மாநகரம் அன்று கண்டது! தமிழ்க் குருதி பாய்ந்தோடும் தமிழ் நிலத்து மாந்தர் எல்லாம் இலங்கையிலே கொடுமைகளுக்கு ஆளாகும் தங்கள் உடன்பிறப்புகளுக்காகக் கண்ணீர் சிந்தி, கண்டனம் தெரிவித்து, அர்த்தால் நடத்தி, அண்ணன் வழியில் அமைதி கெடாது ஐந்து இலட்சம் பேர் கொண்ட பேரணியையும் நடத்திக் காட்டினர். தி.மு.கழகத்தின் தலைமைக்கழக அறிக்கை 23.8.1977 காலையிலே ஏடுகளிலே வெளிவந்தது.
அதுவும் எல்லா ஏடுகளிலும் அல்ல. மறுநாள் 24.8.1977 காலையில் கடல்தான் கொந்தளித்ததோ என்னும் விதத்தில் அண்ணா சாலையிலே பேரணி நடைபெற்றது. எந்தவிதமான வற்புறுத்தலும் இன்றி அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுக் கிடந்தன. திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களின் அறிக்கைக்கிணங்க, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வீரமணி அவர்களும், திராவிடர் கழகத் தோழர்களும் அந்தப் பேரணியிலே கலந்து கொண்டனர்.
மற்றும் உலகத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தினர், ஆசிரியர் மன்றத்தினர், மாணவ மணிகள், தொழிலாளத் தோழர்கள், மகளிர் அணியினர் என்று ஆயிரமாயிரவர் மொத்தத்தில் ஐந்து இலட்சத்திற்குக் குறைவில்லாமல் அந்தப் பேரணியில் பங்கேற்றனர். கதராடையும், குல்லாயும் அணிந்த இரண்டு முதியவர்கள் காங்கிரஸ் மூவண்ணக் கொடியுடன் அந்தப் பேரணியில் உணர்ச்சி முழக்கமிட்டதைக் கண்டு உடலெல்லாம் எங்களுக்குப் புல்லரித்துப் போயிற்று.
22.8.1977 அன்று சட்டப்பேரவையில் அவை முன்னவர் நாஞ்சிலார் அவர்களிடம் இலங்கைப் பிரச்சினை பற்றி மன்றத்தில் வரம்புக்கு உட்பட்டுக் கருத்துக்களைச் சொல்லலாமே என்று வேண்டுகோள் விடுத்தேன். முதலில் அதற்கு ஒத்துக்கொண்ட அவை முன்னவர், பின்னர் என் கோரிக்கையை ஏற்க இயலாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை சட்ட சபையில் பேசக்கூடாத ஒரு பிரச்சினை என்ற அடிப்படையில் அந்தத் தயக்கம் காட்டப்பட்டதே தவிர, ஆளுங்கட்சிக்கு அதில் அக்கறையில்லை என்று நான் அன்றும் கருதிடவில்லை.
பின்னரும் கருதிடவில்லை. கட்சித் தலைவர்கள் யாரும் பேசாமலே அவை முன்னவர் மட்டுமே ஒரு விளக்கம் சுருக்கமாகத் தரலாமே என்ற யோசனையையும் கூடச் சொன்னேன். அந்த யோசனையும் ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தால், 22.8.1977 அன்று சட்டப்பேரவையிலே இலங்கைப் பிரச்சினை பற்றிய ஒலியே எழுப்பப்படாமல் போய்விட்டது. அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்து பேசலாமே என்றுகூட ஒரு யோசனை சொல்லிப் பார்த்தேன் முதலில் ஒப்பினார்கள்.
பிறகு அன்று முழுவதும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அன்றிரவு சட்டமன்ற தி.மு.கழக கட்சி அலுவலகத்திற்கு ஐம்பதுக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கண்ணீர் வடிய வந்து எங்களைச் சந்தித்தனர். கொழும்பிலிருந்தும் இலண்டன் மாநகரில் உள்ள தமிழ் மக்களின் சார்பிலும் தொலைபேசிகள் வந்து கொண்டேயிருந்தன. எல்லாமே கதறல்கள்; கண்ணீர்க் கதைகள்தான். எனவே தான் வேறு வழியின்றி உடனடியாகப் பேரணியும், அர்த்தாலும் தி.மு.கழகத்தின் சார்பிலே அறிவிக்கப்பட்டது.
அதற்கான அறிக்கை 23.8.1977 அன்று காலையிலே ஏடுகளிலே வந்த பிறகு பேரவையிலே அவை முன்னவர் வேலைநிறுத்தமும் பேரணியும் தேவையில்லை என்று வேண்டுகோள் விடுத்தார். 24.8.1977 அன்று தி.மு.கழகம் பேரணி நடத்திய அதே நேரத்தில் பேரவையிலே இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட நேரம் குறிக்கப்பெற்றது. அன்று மாலையிலே கூடப் பேரவையிலே அந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தால் தி.மு.கழகம் அதிலே கலந்து கொண்டிருக்க முடியும்.
மற்ற மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் முதலமைச்சரின் உரைகள் மாற்றி வைப்பதற்காக வெல்லாம் என்னுடன் தொலைபேசியி- லாவது கலந்து நேரத்தினை மாற்றி வைத்துக் கொண்ட ஆளுங்கட்சி, இந்தத் தீர்மானம் கொண்டு வருவது பற்றியோ நேரம் குறிப்பது பற்றியோ எந்தவிதக் கருத்துப் பரிமாற்றமும் கொள்ளவில்லை. எப்படியோ 22.8.1977 இல் ஏற்பட்ட தயக்கம் மாறி, 24.8.1977 காலையில் இலங்கைத் தமிழர்களுக்காகப் பேரவையிலே ஒரு தீர்மானம் கொண்டு வரப்படக் காரணமே தி.மு.கழகம் அன்று அறிவித்த பேரணியும், அர்த்தாலும்தான் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரிந்து, அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதற்காக எங்களுடைய மனநிறைவையும் தெரிவித்துக் கொண்டோம்.
இலங்கைத் தமிழர்களுக்காக 1961 இல் பேரறிஞர் அண்ணா எந்தச் சென்னைத் தெருக்களிலே குரல் எழுப்பினாரோ, அதே சென்னைத் தெருக்களிலே மீண்டும் 1977 ஆம் ஆண்டு தி.மு.கழகம் அதே இலங்கைத் தமிழர்களுக்காகக குரல் கொடுத்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி பிரதமர் மொரார்ஜி தேசர்ய் அவர்களுக்கு நான் கொடுத்த தந்திக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று அவர் எனக்கு பதில் தந்தி கொடுத்திருந்தார். அதில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மத்திய அரசு ஏற
்கனவே இலங்கை அரசுக்கு எடுத்துரைத்திருப்பதாகவும், தனது மனித சக்திக்கும் மற்ற மூல ஆதாரங்களுக்கும் உட்பட்டு எந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட முடியுமோ அந்த அளவுக்குச் சிறப்பாக இலங்கை அரசு செயல்பட்டு வருவதாகவும், இந்திய மக்கள் இதுபற்றிக் குழப்பம் அடையத்தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தார். இலங்கையில் சிங்களவர் வெறித்தாக்குதலுக்கு ஆளாகி,அகதி முகாம்களில் நலியும் தமிழர்களுக்கு உதவியாக இந்திய அரசு அரிசியோ, கோதுமையோ அனுப்பி வைக்க வேண்டுமென்றும், இலங்கை அரசுக்கு அகதி முகாம்களை நடத்த இந்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டுமென்றும் அப்போது வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து, மாநிலங்கள் அவை கழக உறுப்பினர் முரசொலி மாறன் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த யோசனையை ஆலோசிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி தெரிவித்தார். இது இலங்கையிலே ஏற்பட்ட நிலை என்றால், இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானிலே ஏற்பட்ட மாறுதலும் சாதாரணமானதல்ல. பாகிஸ்தானில் 1977 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பூட்டோவின் கட்சி பெரும்பான்மையான இடங்களிலே வெற்றி பெற்று, பிரதமராக பூட்டோ பொறுப்பேற்றது பற்றியும், பின்னர் ஜூலைத் திங்கள் 5ஆம் நாள் பிரதமர் பூட்டோ ராணுவக் காவலில் வைக்கப்பட்டது பற்றியும் - ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் ஜியா-உல்-ஹக் ராணுவ ஆட்சியை அறிவித்தது பற்றியும் ஏற்கெனவே எழுதியிருந்தேன்.
அதைத் தொடர்ந்து மூன்று வார சிறைத்தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட பூட்டோ மீண்டும் செப்டம்பர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பூட்டோ லாகூருக்குக் கொண்டு செல்லப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார்.
