நெஞ்சுக்கு நீதி
தொழிலாளர்களுக்குத் துணை · 242 / 391
25. தொழிலாளர்களுக்குத் துணை நிற்கும் இயக்கம் ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் நிகழ்ச்சிகளை நினைவு கூறும் நேரத்தில் அந்தத் திங்கள் 16ஆம் நாள் நடைபெற்ற ஒரு சோக நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. "ராக் அண்ட்ரோல்" நடனத்தின் மூலமாக உலக முழுதுமுள்ள இளைஞர்களை இருபதாண்டுக் காலமாக மயக்கி வைத்திருந்தவன் கிரேஸ்லாந்தைச் சேர்ந்த எல்விஸ் பிரெஸ்லீ என்ற நடனக் கலைஞன். 1956 ஆம் ஆண்டு தனது 21வது வயதில் நடனக் கலை உலகில் புகுந்த பிரெஸ்லீ, 1977 ஆம் ஆண்டிற்குள் நூறு கோடி டாலர் சம்பாதித்த பெருமைக்குரியவன்.
ஆனால் பெருமைக்கும் புகழுக்கும் உரிய சில அற்புதக் கலைஞர்களை; அவர்களுடைய பழக்கவழக்கங்கள் விரைவிலேயே இறப்புலகிற்கு அனுப்பி வைத்துள்ள அதிர்ச்சி தரும் செய்திகளை வரலாற்றில் நாம் காணத் தவறவில்லை. அதைப்போலவே போதை மாத்திரைகளுக்கு அடிமையாகிவிட்ட எல்விஸ் பிரெஸ்லீ என்ற அந்த நடனக் கலைஞன் தனது 42வது வயதில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மறைந்து விட்டான். அதற்கு முதல் நாள், ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று இந்தியநாடு விடுதலை பெற்ற விழா, நாடு முழுதும் கொண்டாடப்பட்டது.
அன்று சென்னை தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். ஏற்றி வைத்தார். அவர் அப்போது உரையாற்றும்போது, "இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேறு எந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் அவர்கள் நாட்டிற்கு நல்லது செய்தால் அவர்களைப் போற்ற வேண்டியது மனிதத் தன்மையுள்ள ஒவ்வொருவருடைய கடமையாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தச் சுதந்திரக் கொடியை இங்கே ஏற்றி வைப்பது மேதகு ஆளுநர் என்ற முறையில் இருந்தது. அந்த முறையை மாற்ற வேண்டுமென்று கோரி, அதற்காகப் போராடி எல்லா முதலமைச்சர்களுக்கும் அந்த உரிமையைப் பெற்றுத் தந்த, கலைஞர் கருணாநிதி அவர்களை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்."
என்று குறிப்பிட்டார். அரசியலிலே எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், எதிர் எதிர் முனைகளிலே இருந்தாலும் அவரவருக்குத் தரவேண்டிய மரியாதையை எண்ணிப் பார்த்து அரசியல் நடைபெற்றது அந்தக்காலம். ஆம், விடுதலை நாள் விழாக்களிலேயும், குடியரசு தின விழாக்களிலும் ஆளுநர்தான் அதற்கு முன்பு கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வந்தது. கழக ஆட்சி இருந்தபோது, நான்தான் முதலமைச்சர் என்ற முறையிலே பிரதமருக்கு கடிதம் எழுதி, நேரில் சந்தித்து வாதாடி விடுதலை நாள் அன்று அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றுவது என்றும், குடியரசு நாள் அன்று ஆளுநர்கள் கொடியேற்றுவது என்றும் தமிழகத்திற்கு மட்டுமல்ல.
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமான ஒரு மாற்றத்தைக் கொண்டு வரச் செய்தவன். அதுபோலவேதான் சென்னை நகருக்கு பிரதமரோ, குடியரசுத் தலைவரோ வருகை தந்தால் விமான நிலையத்திலே ஆளுங்கட்சி ஒருபுறமும், எதிர்க்கட்சிகள் வேறுபுறமாக இரண்டு இடங்களிலே வரவேற்புத் தரும் புதுமையை இப்போது காண்கிறோம். அப்போது தி.மு.கழகம் எதிர்க்கட்சி என்றபோதிலும், 17.8.1977 அன்ற கழகத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களை வரவேற்க, முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் சென்றிருந்தது மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவனான நானும், கழகப் பொருளாளராக இருந்த சாதிக் அவர்களும் விமான நிலையம் சென்று மலர் மாலைகளை அணிவித்து சஞ்சீவ ரெட்டி அவர்களை ஒரே இடத்தில் வரவேற்றோம்.
சஞ்சீவ ரெட்டி அவர்கள் குடியரசுத் தலைவராகி முதல் முறையாக சென்னைக்கு அப்போதுதான் வந்திருக்கின்றார். 18.8.1977 அன்று காலையில் சென்னை சட்டப் பேரவை மண்டபத்திலே பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய படத்தினைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதற்காகத்தான் அவர் வந்திருந்தார். அந்த விழாவில் காமராஜர் அவர்களைப் பற்றிப் பெரிதும் பாராட்டியும், என்னைப் பற்றியும் சஞ்சீவ ரெட்டி அவர்கள் குறிப்பிட்டுப் பேசியதைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.
ஆளுநர் மாளிகையிலே தங்கியிருந்த குடியரசுத் தலைவரை மரியாதைக்காக நான் நேரில் சென்று சந்தித்தேன். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். வெளியே வந்ததும், செய்தியாளர்கள், "நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தீர்களே, என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்" என்று கேட்டனர்.
"குடியரசுத் தலைவராக அவர் ஆவதற்கு முன்பிருந்தே, அவருக்கும் எனக்கும் ஆழமான நட்பு உண்டு. அந்த அடிப்படையில் பாசத்தோடு கலந்த ஒரு மரியாதைச் சந்திப்பு, அவ்வளவுதான்" என்று பதிலளித்தேன். மிசாக் கொடுமைகளும், நெருக்கடிக்கால நிலைமைகளும் முடிந்து தமிழகத்திலே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி அமைந்த பிறகும், தி.மு. கழகத்தின் மீது ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதனை ஏடுகள் பூதாகாரமாக வெளியிடுவது தொடர்ந்து கொண்டே இருந்தது.
உதாரணத்திற்கு ஒரேயொரு செய்தியைக் கூறவேண்டுமென்றால் - 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் முதல் வாரத்தில் ஒரு நாள் ஏடுகளிலே ஒரு செய்தி வந்தது. தி.மு.க. பிரமுகர் கைது! பழைய தி.மு.க. எம்.எல்.ஏ. கைது! கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கைது! தி.மு.க. தலைவருக்கு எதிராக வழக்கு! இத்தனையும் ஒரே செய்திக்குப் பல்வேறு ஏடுகள் தந்த பல விதத் தலைப்புகள்! கொளத்தூர் கோதண்டம் 30.12.1971 இல் கொளத்தூரிலிருந்து சென்னை வருவதற்கு ஒரு கூட்டுறவு நிறுவனத்தில் 19 ரூபாய் 40 காசு பிரயாணப்படி பெற்று, அதே நாளில் சென்னையில் இன்னொரு கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக 58 ரூபாய் 40 காசு வாங்கியிருக்கிறாராம்.
31.7.1975 இல் கொளத்தூரில் இருந்து சென்னை வருவதற்கு 68 ரூபாய் 50 காசும் சென்னையிலிருந்து கொளத்தூர் திரும்பிச் செல்ல 68 ரூபாய் 50 காசும் பிரயாணப்படி வாங்கியுள்ளாராம். ஆனால் உண்மையில் அவ்வாறு பயணம் செய்யவில்லையாம். இதுதான் புகார்! இப்புகார் தொடர்பாகக் கோதண்டம் கைது செய்யப்பட்டார். இதுபற்றி வழக்கு நடைபெற்றது. அது வேறு விவகாரம். ஆனால் பல ஏடுகளும் தலைப்பிட்டது போல, கோதண்டம் தி.மு. கழகத்திலே அப்போது இருந்தாரா என்றால் இல்லை.
அந்தச் செய்தி வெளிவந்ததற்கு ஒன்றரை ஆண்டுக் காலத்திற்கு முன்பாகவே அவர் தி.மு.கழகத்தைவிட்டு விலகி விட்டார். 1967 இல் அண்ணா இருந்தபோது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டுவரை பதவியிலே இருந்தவர். 1971 தேர்தலின் போது அவருக்கு தேர்தலில் போட்டியிடக் கழகம், அனுமதி கூடத் தரவில்லை. ஆனாலும் தி.மு.கழகத்தின் மீது எப்படியாவது பழி போட்டு இந்த இயக்கத்தை அழித்து விட வேண்டுமென்று சில ஏடுகள் அந்த அளவிற்குச் செயல்பட்டன.
1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் இறுதியில் - செப்டம்பர் திங்கள் முதல் வாரத்தில் சென்னையில் பல்லவன் போக்குவரத்துக் கழக அலுவலர்கள். அ.தி.மு.க. அரசிடம் பல கோரிக்கைகளை வைத்து, அவைகளை ஏற்காத காரணத்தால், அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களும் கலந்து பேசி வேலை நிறுத்தம் செய்தனர். ஆகஸ்ட் திங்கள் 31 ஆம் நாள் தொழிற்சங்கத் தலைவர்களான அந்தோணிப்பிள்ளை அவர்களும், ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களும் என்னைச் சந்தித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து விளக்கினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மூப்பனார் அவர்களையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கல்யாணசுந்தரம் அவர்களையும் சந்தித்ததாகவும், அவர்களும் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், தி.மு. கழகமும் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டனர். 'எல்லோரும் ஆதரித்தால் தொழிலாளர் போராட்டத்திற்கு தி.மு.கழகத்தின் ஆதரவு என்றைக்கும் உண்டு' என்று நான் பதிலளித்தேன்.
அதுகுறித்த நான் செய்தியாளர்களிடம் கூறும்போது - "தொழிலாளர்கள் கோருகின்ற இடைக்கால நிவாரணம் அதிகமென அரசு கருதினால், தொழிற் சங்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேசி, ஒரு சமரச உடன்பாட்டுக்க வரலாம். இருதரப்பினரும் விட்டுக் கொடுக்கும் தன்மையோடு கலந்து பேசி நல்ல முடிவுக்கு வருவது தான் அரசுக்கும், தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் தன்மைக்கும் ஏற்றதாக முடியும்.
இப்படி ஒரு சுமூக நிலை ஏற்பட தி.மு.க. குறுக்கே நிற்கவில்லை. ஆனால் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிரச்சினையை விட்டுவிட்டு கலைவாணர் விழாவில் ஏதேதோ பேசியிருக்கிறார் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பஸ் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடந்து பஸ்கள் கொளுத்தப்பட்டன, தொழிலாளர்கள் கட்சிக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டார்கள் என்றெல்லாம் கூறியிருக்கிறார். முதல்வர் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கு யாரும் நினைவுபடுத்தவில்லை போலும்; அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தான் பஸ் தொழிலாளர் - மாணவர் இடையே கிளர்ச்சி ஏற்பட்டு - பேருந்துகள் கொளுத்தப்பட்டு, மாணவர், தொழிலாளர் இருசாராரிடையே பலர் காயமுற்று உமர் என்ற தொழிலாளி இறந்து விட்ட சம்பவம் எல்லாம் நடைபெற்றது. அதைமறந்து விட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் நான் முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்றதாகக் கூறியிருக்கிறார். அடுத்துத் தனியார் பஸ் முதலாளிகளைக் கொண்டு பஸ்களை விடச் சொல்லி வேலை நிறுத்தத்தை உடைக்க முயற்சிப்பது அண்ணாவின் தொழிலாளர் நலக் கொள்கைக்கே முற்றிலும் விரோதமானது" என்று தெரிவித்தேன்.
1.9.1977 அன்று பல்லவன் தொழிலாளர் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக எம். கல்யாணசுந்தரம் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதிலே நானும், பொருளாளர் சாதிக் அவர்களும், காட்டூர் கோபால், செ. குப்புசாமி, ஆர்.டி. சீதாபதி ஆகியோரும் கழகத்தின் சார்பிலே கலந்து கொண்டோம். மேலும் அந்தோணிப்பிள்ளை, ரங்கராஜன் குமாரமங்கலம், கே.எஸ். நாராயணன், கே.டி.கே. தங்கமணி, ரங்கசாமி, தா.பாண்டியன், எம்.
எஸ். ராமச்சந்திரன், ஏ.எம். கோபு, சடகோபன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்திலே பல்லவன் தொழிலாளர் பிரச்சினையில் அரசு கடைப்பிடிக்கும் தொழிலாளர் நல விரோதப்போக்கைக் கண்டித்து செப்டம்பர் 4-ந் தேதி அனைத்துக் கட்சி விளக்கக் கூட்டங்கள் நடத்துவது என்றும், செப்டம்பர் 6-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் கடையடைப்பு நடத்தவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதுபற்றிச் செய்தியாளர்கள் கேட்டபோது, "இவை நடைபெறுவதற்கு முன்னதாகவே போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினையில் இணக்கமான முடிவுகளுக்கு வருவதில் அரசாங்கம் முன் வருமானால் எங்களைப் போல் மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது" என்று கூறினேன்.
செப்டம்பர் 5,6 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த கழகப் பொதுக்குழு, செப்டம்பர் 9,10 ஆகிய நாட்களில் அதே சிதம்பரத்தில் நடைபெறுவதாக மாற்றி அறிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி அவர்கள் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. அவரது நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாகவும் செய்தி வந்ததின் பேரில் 2.9.1977 அன்று மாலையில் அவசரமாகப் புறப்பட்டு டெல்லி சென்றேன்.
மறுநாள் 3ஆம் தேதி மாலையில் சஞ்சீவ ரெட்டி அவர்களைச் சந்தித்து, உடல் நலம் விசாரித்தேன். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரமானந்த ரெட்டி அவர்களுடனும், உத்தரபிரதேச முதலமைச்சராக இருந்த ராம் நரேஷ் யாதவ் அவர்களுடனும், நானும், முரசொலி மாறனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். 4ஆம் தேதியன்று அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் பல்லவன் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் உடனடியாக சென்னை திரும்பினேன்.
ஆனால் 3ஆம் தேதியன்ற நடைபெற்ற பேச்சவார்த்தையின் போது இடைக்கால நிவாரணமாக 27 ரூபாய் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தர ஒப்புதல் தெரிவித்தனர். அதன் பேரில் எட்டு நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிந்து உடன்பாடு கையெழுத்தாயிற்று. எனவே 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த விளக்கப் பொதுக்கூட்டம், வெற்றி விழாப் பொதுக் கூட்டமாக மாற்றப்பட்டு நடைபெற்றது. தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆபத்து என்றால் சகல வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஓரணியிலே நிற்போம் என்று அந்தக் கூட்டத்திலே அறிவித்தேன்.
7.9.1977 அன்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம். மாவட்டக் கழகச் செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் ஒரே நாளில் 75 நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்தார். இறுதியாகச் செவ்வாய்ப் பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் சிறுசிறு தொகையாகக் கிடைத்த கழக வளர்ச்சி நிதி பதினைந்தாயிரம் ரூபாயைத் தந்தார். ஓமலூர் அரசினர் பொறியியல் கல்லூரித் தமிழ் மன்ற விழாவிலே அன்று நான் கலந்து கொண்ட போது, கழக அரசு தொடங்கிய "தமிழக வரலாறு" எழுதும் பணி தொய்வடையாது தொடர வேண்டுமென்றும், அதற்குப் புதிய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன்.
பல்லவன் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் போராட்டத்தை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்ட கழகத்தின் பொதுக்குழு 9.9.77 அன்று சிதம்பரத்தில் கூடியது. இலங்கைத் தமிழர் பிரச்சினை, காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, மொழிப்பிரச்சினை போன்றவைகளுக்காகப் பொதுக்குழுவிலே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவினையொட்டி மத்திய அரசு தபால் தலை வெளியிட வேண்டுமென்று ஒரு தீர்மானமும், வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவரும் சஞ்சீவ ரெட்டி விரைவில் நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென்று ஒரு தீர்மானமும் பொதுக்குழுவில் நிறை- வேற்றப்பட்டது.
அன்று காலையிலே, அதே இடத்தில் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டமும் நடைபெற்றது. 10.9.1977 அன்று நடைபெற்ற இரண்டாவது நாள் பொதுக் குழுவில் பல உறுப்பினர்களும் பேசியதையொட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது "அரசியல் வஞ்சம் தீர்க்கும் முறையில், நெருக்கடி காலத்தில் கையாளப்பட்ட அக்கிரமான போக்கைப் பின்பற்றி, மேலும் கொடுமைப்படுத்துகிற நடவடிக்கைகளைக் கொண்டுள்ள அ.தி.மு.க. ஆட்சியின் பழிவாங்கும் போக்குப் பற்றி, பொதுக்குழுவில் எடுத்துச் சொல்லப்பட்ட ஒருமித்த கருத்துக்களின் தொடர்பாக தி.மு.கழகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுத்து உரிய நேரத்தில் அறிவிக்கும் அதிகாரத்தை கழகத் தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் பேராசிரியர் ஆகியோருக்கு இப்பொதுக்குழு அளிக்கின்றது" என்ற தீர்மானமாகும்.
இத்தீர்மானத்தை முன் மொழிந்தது புதுவை எம்.ஏ. சண்முகம். வழி மொழிந்தது - வீரபாண்டி ஆறுமுகம், தூத்துக்குடி இரா. கிருஷ்ணன், பொன். முத்துராமலிங்கம், நெல்லை நெடுமாறன், கொச்சப்பன், ஆகியோராகும். சென்னை சிறைச்சாலையிலே நெருக்கடி நிலை நேரத்திலே நடைபெற்ற கொடுமைக
ள் பற்றி விசாரிப்பதற்காக ஆளுநர் பட்வாரி அவர்கள் ஏற்கெனவே அமைத்த கமிஷனின் நீதிபதி இஸ்மாயில் அவர்கள் விசாரணையின் இறுதிக் கட்டத்தில் ஒருநாள் சென்னை சிறைச்சாலையை நேரில் பார்வையிடுவதற்காகச் சென்றபோது அங்கிருந்த கைதிகள் பலரும் சிறைச்சாலையிலே அரசியல் கைதிகளை அடித்தது உண்மைதான் என்ற செய்தியினை நீதிபதியின் காதிலே போட்டிருக்கின்றார்கள். அந்தக் காரணத்தினால், நீதிபதி அவர்கள் திரும்பிய பிறகு, அந்தக் கைதிகள் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்தச் செய்தி எங்களுக்குக் கிடைத்ததும், பேரவையிலே அதனை எடுத்துக் கூறினோம். அதிகாரிகளிடம் விவரம் கேட்டால் தவறான தகவல்களையே தருவார்கள். யாராவது ஒரு அமைச்சரை அனுப்பினால் உண்மை நிலவரம் தெரியும் என்று நான் முதல்வரிடம் கேட்டுக் கொண்டேன். உடனே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். எழுந்து அமைச்சர்களை விட ஒரு நீதிபதியையே அனுப்பி என்ன நடந்தது என்பதைத் தெரிந்து வரச் செய்கிறேன் என்று உறுதியளித்தார். ஆனால் அந்த உறுதிமொழிப்படி எந்த நீதிபதியையும் ஒரு மாதம் கழித்த பிறகும் அனுப்பவே இல்லை.
அது மாத்திரமல்ல, சிறைச்சாலையில் மிருகத்தனமாக நடந்து கொண்ட அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு முதல்வருக்கு எழுத்து மூலமான ஒரு முறையீட்டையே கொடுத்தேன். அதனையும் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்களிக்கப்பட்டதே தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நே ரிலே பார்க்கும் போதும் பேசும் போதும் சுமூகமாக நடந்துகொண்டு பின்னால் தி.மு.கழகத்திற்கு எதிராக எத்தகைய பழிவாங்கும் முறைகளைக் கையாளலாம் என்பதிலேயே அ.தி.மு.க.
ஆட்சியினர் அக்கறை காட்டினர். எந்தெந்த அளவிற்குக் கழகத்திற்கு இடையூறு தர முடியுமென்று பார்த்து அந்த வகைகளிலே எல்லாம் இடையூறு தந்தனர். உதாரணமாகத் தி.மு.கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15, தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17, அத்துடன் தி.மு.கழகம் பிறந்த நாள் ஆகிய மூன்றையும், இணைத்து முப்பெரும் விழா என்ற பெயரில் ஆண்டுதோறும் நடத்தி வருவதைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 15, செப்டம்பர் 17 ஆகிய நாட்களிலே முப்பெரும் விழாவினை நடத்துவது என்று முடிவெடுத்து அறிவித்திருந்தோம்.
ஆனால் செப்டம்பர் 17-ஆம் தேதியன்று, அ.தி.மு.க. சார்பிலே சென்னையிலே பெரியார் சிலை திறக்கப் போவதாக எல்லா ஏடுகளிலும் திடீரென செய்தி வெளியிட்டார்கள். எனவே கழகம் சென்னையில் நடத்தும் முப்பெரும் விழா செப்டம்பர் 18-ந் தேதி என்று எல்லா ஏடுகளுக்கும் மாற்றி அறிவித்தோம். உடனே செப்டம்பர் 17-ந் தேதி பெரியார் சிலை திறப்பு விழா என்று முன்பு அறிவித்தவர்கள், தங்கள் விழா செப்டம்பர் 18-ந் தேதி என்ற மாற்றி அறிவித்தார்கள்.
முப்பெரும் விழாவினையொட்டி, கழகத்தின் சார்பிலே அண்ணா அவர்களுக்கு ஒரு சிலையினை, அண்ணா அறிவாலயத்துக்கு அருகே திறக்கவும் சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பிலே ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான அனுமதியினைக் கேட்டு அரசுக்கு எழுதியிருந்தோம். இந்த இரண்டு சிலை திறப்பு விழாத் தேதிகளிலும் மோதுதல் கூடாது என்பதற்காக, கழகத்தின் விழாவினை இரண்டொரு நாட்களுக்குப் பின்னர் வைத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
1974-ஆம் ஆண்டு, தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா சாலையில் தந்தை பெரியார் சிலையினைத் திறந்தபோது, எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. சார்பில் அதே நாளில், தி.மு.க. விழாவிற்குப் போட்டியாக, அண்ணா மேம்பாலத்தருகே பெரியார் சிலைக்கான பீடம் கட்ட ஒரு அடிக்கல் நாட்டு விழாவினை நடத்தினார்கள். அண்ணா பாலத்தின் ஒரு பக்கத்தில் பெரியார் சிலையை வைத்தால் மற்ற பகுதிகளில் பார்வையாக இராது.
வேறொரு பொருத்தமான இடம் தேர்ந்தெடுங்களேன் என்று அரசின் சார்பிலே கூறியபோது, "முடியாது, அங்கேதான் இடம் வேண்டும்". என்று அவர்களே வரைபடம் கொண்டு வந்து கொடுத்து அனுமதி கேட்டார்கள். அவ்வாறே தி.மு.கழக அரசு அனுமதியும் கொடுத்தது. 1974-இல் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்திலேதான் மூன்றாண்டுக் காலம் சும்மாயிருந்துவிட்டு, 1977-இல் அவசர அவசரமாக சிலை திறக்கப் போவதாக அறிவித்தார்கள். தி.மு.கழகத்தின் சார்பிலே அண்ணா அறிவாலயத்திற்கு அருகே அண்ணா சாலையோரத்தில், தியாகராயர் சாலை முனையில் போக்குவரத்திற்கோ, எதிர்காலத்தில் சாலையை விரிவுபடுத்தும் திட்டம் இருந்தால் அதற்கோ, இடையூறு இல்லாத ஒரு இடத்தில் அண்ணா சிலை வைக்க அனுமதி கேட்கப்பட்டது.
முதலமைச்சரிடம் இதுகுறித்துக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ப.உ. சண்முகம் அவர்களும் பேசிப்பார்த்தார். 1974-இல் அவர்கள் போட்டி விழா நடத்தியது போல் இல்லாமல் அண்ணா சிலை திறப்பு விழாவினைத் தனியாக செப்டம்பர் திங்கள் 25-ஆம் தேதியன்று கூட மாற்றி வைத்துக் கொள்வதாகவும் தெரிவித்தோம். அரசு பொறியாளர்கள் கூட முதலில் நேரில் பார்த்து அந்த இடத்திற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. பின்னர்தான் எழுத்து மூலமாக அண்ணா சிலை அமைக்க அந்த இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுக் கடிதம் வந்தது.
சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பிலேதான் அந்த அண்ணா சிலை வைக்கப்படவிருந்ததால், சென்னை மாவட்டக் கழகத்தின் அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக நானும் பேராசிரியரும் கலந்து கொண்டோம். அந்தக் கூட்டத்தில், செப்டம்பர் 25-ஆம் தேதியன்று ஆட்சியைக் கண்டித்துக் கண்டனக் கூட்டங்கள் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றினோம். இந்த இடப்பிரச்சினை சம்பந்தமாக முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசிட, சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் சீதாபதி நேரம் கேட்டபோதுகூட, முதலமைச்சர் அவருக்கு நேரம் தரவில்லை; அண்ணா சிலைக்கு இடம் அனுமதிக்காததைக் கண்டித்து அரசு விழா ஒன்றிலே பங்கேற்க முதலிலே ஒப்புதல் கொடுத்திருந்த ப.உ.
சண்முகம், அரசு விழாவிலே கலந்து கொள்ளப் போவதில்லை என்ற பின்னர் அறிவித்து விட்டார். அ.தி.மு.க. அரசு அண்ணா சிலை வைக்க இணங்கி வரவில்லை என்றால் என்ன செய்வது என்பது பற்றி மீண்டும் தலைமைக் கழகம் கலந்தாலோசித்து எப்படி இந்தப் பிரச்சினையை அணுகுவது என்பது பற்றி, முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என்ற பேராவூரணி பொதுக் கூட்டத்திலே நான் அறிவித்தேன். உலகத் தமிழ் மாநாட்டின் போது கடற்கரையிலே சிலைகள் பலவற்றை அமைத்த நேரத்தில், கம்பருக்கும் சிலை அமைக்க வேண்டுமென்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருத்திருமன், அண்ணா அவர்களை அணுகிக் கேட்டதுதான் தாமதம், முதலமைச்சர் அண்ணா அட்டியின்றி அதற்கு உடனே ஒப்புக் கொண்டார்.
அந்த விழாவினையொட்டி எம்.ஜி.ஆர். அண்ணா சிலை அமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது கூட, முதலில் அந்தச் சிலையை பூக்கடைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில்தான் அமைக்க வேண்டுமென்றார். நான்தான் அவருக்கு எடுத்துச் சொல்லி இப்போது அண்ணாசிலை அமைந்துள்ள இடத்தினை வலியுறுத்தி எடுத்துக்கூறி அவ்வாறே வைக்கப்பட்டது. தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, விருத்தாச்சலத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை, போக்குவரத்துக்கு சற்றுச் சங்கடமான இடத்திலே வைப்பதற்கு அனுமதி கேட்டார்கள்.
அதுபற்றி அதிகாரிகள் கூறிய கருத்துக்களை மறுத்துவிட்டு, அவர்கள் கோரிய இடத்திலேயே காமராஜர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை எல்லாம் எடுத்துக்கூறி, விரைவிலே அ.தி.மு.க. அரசு, அண்ணாசிலையை வைத்திடத் தி.மு.கழகத்திற்கு அனுமதி வழங்கிட முன்வரும் என்று தெரிவித்தேன். 18.9.1977 அன்று தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் பேசிய எம்.ஜி.ஆர்., சென்னை மாவட்டத் தி.மு.கழகம் அண்ணா சிலை வைப்பதற்கு வேறு இடம் கேட்டால் தருவதாகக் குறிப்பிட்டார்.
அதனையேற்று சைதாப்பேட்டையில் மறைமலை அடிகள் பாலத்திற்கு அப்பால் மீனம்பாக்கம் செல்லும் சாலையும், ராஜ் பவனம் செல்லும் சாலையும் சந்திக்கும் இடத்திலே உள்ள மையப் பகுதியிலே அண்ணா சிலை வைத்திட அனுமதி கேட்டு, அரசுக்கு சென்னை மாவட்டத் தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் நான் பேசும் போது, இந்த இடமும் தகுதியானதல்ல என்றால், வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரே கோடம்பாக்கம் நெடுஞ்சாலையும், திருமலைப்பிள்ளை சாலையும் சந்திக்கும் இடத்திலோ அல்லது வள்ளுவர் கோட்டத்திற்கு நேர் எதிரேயோ அனுமதி தரலாம்.
இதையும் மறுத்துவிட்டால், அண்ணா சிலையினை தி.மு.க. வைப்பதற்கு அவர்கள் அனுமதி கொடுக்கத் தயாராக இல்லை என்று நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று கூறினேன். 25.9.1977 அன்று கழகம் நடத்திவிருந்த கண்டனக் கூட்டத்திற்குள் அதற்கான அனுமதியை அரசு வழங்கி விடுமென்று எதிர்பார்த்ததும் வீணாயிற்று. இடையில் செப்டம்பர் 11ஆம் தேதி செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டேன். அந்த ஒரு நாள் நிகழ்ச்சிகள் வாயிலாக மட்டும் கழக வளர்ச்சி நிதியாக ரூபாய் 9,639 தலைமைக் கழகத்திற்குக் கிடைத்தது.
மறுநாள் சென்னை திரும்பியதும் 12.9.1977 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனையிலே ராணி அண்ணியார் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதை அறிந்து உடனடியாக மருத்துவமனை சென்று அண்ணியார் அவர்களிடம் உடல் நலம் கேட்டறிந்தேன். என்னுடன் ஆற்காடு வீராசாமி, சீதாபதி ஆகியோர் வந்தனர். 1977ஆம் ஆண்டு செப்டம்பர் 14ந் தேதி அன்று கேரள மாநில ஆளுநராக, முன்னாள் தமிழக அமைச்சராக இருந்த திருமதி ஜோதியம்மாள் அவர்களை மத்திய அரசு நியமனம் செய்து அறிவித்திருந்தது.
அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் எங்களுக்கிடையே எத்தனையோ மாறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்களது குடும்பத்திற்கும் என்னுடைய குடும்பத்திற்கும் இடையே நல்ல தொடர்பு உண்டு. எனவே அவர்கள் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியினை, தஞ்சை மாவட்டச் சுற்றுப்பயணத்திலே இருந்த நான் ஏடுகள் மூலமாக அறிந்து வாழ்த்துத் தந்தி ஒன்றை உடனடியாக அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். தி.மு.கழகத்தின் சார்பிலே வீராசாமியை நேரிலும் அனுப்பி வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் செய்தேன்.
பின்னர் ஒருநாள் சென்னை திரும்பிய பிறகு நானும் நேரில் சென்று அம்மையார் அவர்களை வாழ்த்தினேன். சென்னை மாவட்டத் தி.மு.கழகத்தின் சார்பில் 17.9.1977 அன்று சென்னை ஆச்சாரப்பன் தெருவிலே மாவட்டக் கழக அவைத் தலைவர் அ. செல்வராசன், எம்.எல்.ஏ. தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. அந்த விழாவிலே என்னுடன் கழகப் பொருளாளர் சாதிக், திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையார், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ந் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், நீண்டகாலமாக என்பால் அன்புமிகக் கொண்டு பழகி வந்தவருமான பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் அழைப்பின் பேரில் அன்று அ.தி.மு.க. சார்பிலே நடைபெறவிருந்த பெரியார் சிலை திறப்பு விழாவிலே கலந்து கொள்வதற்காக சென்னை வந்து, கிண்டி ஆளுநர் மாளிகையிலே தங்கியிருந்தார். நானும் சாதிக் அவர்களும் நேரில் கவர்னர் மாளிகை சென்று பாபு ஜெகஜீவன்ராம் அவர்களை மரியாதைக்காகச் சந்தித்து உரையாடித் திரும்பினோம்.
அன்று மாலையிலே நடைபெற்ற அ.தி.மு.க. நடத்திய அந்த பெரியார் சிலை திறப்புவிழா நிகழ்ச்சியிலே அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மூப்பனார் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். அவரைப் பற்றி எம்.ஜி.ஆர். தன் பேச்சில் குறிப்பிடும், போது, "சாதி கூடாது என்று சொல்லியவர் அய்யா பெரியார். அப்படிப்பட்ட அய்யா அவர்களை சாதியின் பெயரால் அழைக்கப்படும் "மூப்பனார்" அவர்கள் பாராட்டியிருக்கிறார்" என்றார்.
அந்த விழாவிலே கலந்து கொண்டிருந்த திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் பேசும் போது, தி.மு.கழக ஆட்சியிலே நிறைவேற்றப்பட்ட, தகுதியடைந்தவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அர்ச்சகராக ஆகலாம் என்ற சட்டம் முடக்கப்பட்டிருக்கும் நிலையைப் பற்றிக் கூறி, அய்யா அவர்களின் மனத்திலே அது பெரும்முள்ளாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டு, அது களையப்பட மத்திய அரசும் மாநில அரசும் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அம்மையாரின் இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்க முற்பட்ட முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
"கோயிலே வேண்டாமென்று சொன்ன பெரியார் அவர்கள், கோயிலிலே எல்லா சாதியினரும் அர்ச்சகராக இருக்கலாம் என்று எப்படி சொல்லியிருப்பார்" என்று ஒரு கேள்வியையே பதிலாக அளித்தார். இந்தப்பிரச்சினைக்குப் பெரியார் அவர்களே ஒரு நல்ல பதிலை அதற்கு முன்பே அளித்திருந்தார். வைக்கம் போராட்டத்தில் வெற்றி பெற்றதற்காக நடைபெற்ற பாராட்டு விழாவிலே உரையாற்றும் போது பெரியார் அவர்கள் இதுபற்றி என்ன சொன்னார் தெரியுமா?
"உயர் சாதிக்காரர் தெருவிலே நாமும் நடந்து செல்ல வேண்டும் என்று, விருப்பத்தால் அங்க பிரவேசித்திடவில்லை. நமது போராட்டம் எல்லா இடங்களிலும் மனித உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதுதான்! தெருவிலே எல்லா மனிதனுக்கும் சம உரிமை என்று நாம் சத்தியாகிரகம் செய்து வெற்றி பெற்றது, கோயில்களுக்கும் பொருந்தும். அங்கும் மனிதனின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது". அதாவது கோயில்கள் இருக்கும் வரையில் அங்கு அர்ச்சனைகள் நடைபெறும் வரையில் அங்கே மனித சமூகத்தின் சமநீதி காக்கப்பட வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்தாகும்.
"ஆண்டவனை பூஜிக்கும் அர்ச்சனை முறைகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து வகுப்பினரும் அர்ச்சகராக உரிமை வேண்டும்" என்பது தான் கழக அரசின் சட்டமாகும். இதெல்லாம் தெரியாமல் அந்த விழாவிலே மணியம்மையாரைப் பார்த்துப் பெரியார் எப்படி எல்லா சாதியினரும் அரச்சகராக இருக்கலாம் என்று சொல்லியிருப்பார் என்று கேள்வி கேட்கப்பட்டது. தொடர்ந்து அந்த விழாவிலே பேசும் போது, முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., "சென்னையிலே அண்ணா சாலையில் கருணாநிதி சிலை உள்ளது.
அது அங்கே இருக்கலாமா, இருக்கக் கூடாதா என்பதை கோர்ட்டு தீர்மானிக்கும். கோர்ட்டின் தீர்ப்புப்படி நாங்கள் செயல்படுவோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை பொறுமையோடு இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆத்திரத்தில் எதையும் செய்துவிட வேண்டாம்" என்றும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலாக நான் முரசொலியிலே எழுதிய கடிதத்தில் "அண்ணா சாலையில் உள்ள என் சிலையைப் பற்றி முதலமைச்சர் பேசியிருக்கிறார். அந்தச் சிலை வைத்தது திராவிடர் கழகத்தார். பெரியாரின் ஆணையை அவர்கள் நிறைவேற்றினார்கள். நான் அந்தச் சிலை வேண்டாமென்று அப்போது எவ்வளவோ வாதாடினேன். அன்னை மணியம்மையாரும், நண்பர் வீரமணியும் கேட்கவில்லை. அந்தச் சிலை வைத்ததை எதிர்த்து அ.தி.மு.க. நண்பர் ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார்.
தீர்ப்பு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். பெரியார் விழாவில் கூறியிருப்பது மறைமுகமாக ந
ீதிமன்ற உரிமையில் தலையிடுவதுபோல் தோன்றுகிறது. வேண்டாம். நான் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. தயவு செய்து இப்போதே அண்ணாசாலையில் உள்ள என் சிலையை அப்புறப்படுத்திவிட்டு அவரது ஆசையைத் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அண்ணா சாலையில் இருந்துதான் என் சிலையை அகற்றலாமே தவிர "அண்ணாவின் தம்பிகளில் ஒருவன்" என்ற அந்தப் பட்டியலில் இருந்தும், "அய்யாவின் மாணவர்களில் ஒருவன்" என்ற அந்தப் பட்டியலில் இருந்தும் என்னை அகற்றுவதற்கு யாரும் இந்த நாட்டில் பிறக்கவும் இல்லை; பிறக்கப்போவதுமில்லை" என்று எழுதினேன்.
திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராயநகரில் 19.9.1977 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆரின் பேச்சுக்கு மணியம்மையார் அவர்களும் வீரமணி அவர்களும் பதில் அளித்தார்கள். "கலைஞர் சிலை வைக்கப்பட்டது எந்தத் தனிப்பட்டவரின் விருப்பமும் அல்ல; அது தந்தை பெரியாரின் கட்டளை; கலைஞர் சிலை பற்றிச் சவால் விடுவது பெரியாரையே சவாலுக்கு அழைப்பது போன்றதாகும்" என்றும் அர்ச்சகர் பிரச்சினை பற்றியும் வெகுவாக தங்களது கருத்துக்களையும் பெரியாரின் கருத்துக்களையும் தெரிவித்தார்கள்.
1976-ஆம் ஆண்டு தி.மு.கழக அமைச்சரவை கலைக்கப்பட்டதும், 3.2.1976 அன்று மத்திய அரசு சர்க்காரியா கமிஷனை நியமித்து - என் மீதும் கழக அமைச்சர்கள் சிலர் மீதும் கூறப்பட்ட 28 புகார்கள் பற்றி விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களிலேயும் சென்னையிலே விசாரணை நடைபெற்றது. தி.மு.க. சார்பிலே மூத்த வழக்கறிஞர் ஜி.ராமசாமி அவர்கள் வழக்கறிஞர்கள் ந.கணபதி, நல்லியண்ணன், ஆகியவர்களின் உதவியோடு வாதங்களைத் தொடர்ந்து எடுத்து வைத்தார்.
அந்த விசாரணை தொடர்வது பற்றி அறிந்த ஜனதா கட்சியின் முன்னாள் செயலாளர் ராஜிந்தர் பூரி அவர்கள் விடுத்த அறிக்கை ஒன்றினை "பிளிட்ஸ்" ஏடு சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டிருந்தது. அது வருமாறு:- "பஞ்சாப் மாநில முதல்வராக இருக்கிற பிரகாஷ் சிங் பாதல் மீது போடப்பட்ட விசாரணைக் கமிஷன் அவர் மீதான குற்றச் சாட்டுகளில் நான்கை உறுதிசெய்து, அவர் குற்றவாளியே என்று அறிவித்தது. நெருக்கடி நிலையின் போது இந்த விசாரணைக் கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பாதலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
ஆனால் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாதல் மீதான வழக்குகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் திரு.கருணாநிதியின் நலைமை என்ன? நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டபோது கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட அந்த முதல் நாளிலிருந்தே கருணாநிதியும் தி.மு.கழகமும் அதை முழு மூச்சுடன் எதிர்த்தனர் தலைமறைவாக வந்து தங்கி, நெருக்கடி நிலையை எதிர்ப்போருக்கு கருணாநிதியின் தமிழகம் விருந்தோம்பும் சரணாலயமாக மாறியது.
இப்போது மத்திய அரசின் ஜனதா அமைச்சர்களாக இருக்கிறார்களே பலபேர், அவர்கள் நெருக்கடி நிலையின் போது தலைமறைவாக இடம் விட்டு இடம் ஓடிக்கொண்டிருந்தபோது, அவர்களை கருணாநிதி உபசரித்துப் புகலிடம் தந்தார், பாதுகாப்பும் வழங்கினார். கடந்த மார்ச் திங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜெய்ப்பூர் கூட்டம் ஒன்றில் பேசிய இப்போதைய ஜனதா கட்சியின் தலைவர் சந்திரசேகர் "கருணாநிதி நெருக்கடி நிலையை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது பழி தூற்றி அரசியல் ரீதியில் வஞ்சம் தீர்ப்பதற்காகத்தான் சர்க்காரியா கமிஷனை இந்திரா நியமித்தார்" என்று பேசினார்.
ஜெகஜீவன்ராம் அவர்களும் சாந்தி பூஷ்ணும் இதே கருத்தைத்தான் சொன்னார்கள். ஆனால் இன்றளவும் சர்க்காரியா கமிஷன் விசாரணை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. கருணாநிதி உண்மையிலேயே அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்று ஜனதா அரசு கருதுகின்றது. ஜனதா கட்சியினர் பதவிக்கு வந்துவிட்டார்கள். ஆனால் கருணாநிதி தேர்தலில் தோற்று இன்று பதவியை இழந்த நிலையில் இருக்கிறாரே, அதுதான் கருணாநிதி மீதான வழக்குகளைத் திரும்பப் பெறாத அளவுக்கு அவர் செய்த குற்றம் என்று ஜனதா அரசு கருதுகிறதா?"
இவ்வாறு ராஜிந்தர் பூரி அவர்கள் தி.மு.கழகத்தின் தொண்டர்கள் உள்ளத்திலே கேள்விக்கணையாக இருந்த எண்ணத்தினை "பிளிட்ஸ்" பத்திரிகையில் அப்படியே வெளியிட்டிருந்தார்.
