உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/எதிர்க்கட்சி இலக்கணம்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

எதிர்க்கட்சி இலக்கணம்! · 241 / 391

24. எதிர்க்கட்சி இலக்கணம்! 'தி .மு.கழகத்தையும் அக்கட்சியின் ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டேயிருந்த பத்திரிகை என்ற முறையில் சொல்கிறேன். இந்தச் சட்டசபைத் தேர்தல்களில் கருணாநிதியும் அவர் கட்சியினரும் நடத்திக் காட்டியிருக்கும் சாதனை, சாதாரண மானதல்ல. ஊழல் புகார்கள், விசாரணைக் கமிஷன், பத்திரிகை விமர்சனங்கள், எம்.ஜி.ஆரின் எதிர்ப்பு இப்படி எல்லாவற்றையும் மீறி, தி.மு.க நாற்பத்தெட்டு இடங்களைப் பிடித்திருப்பது அக்கட்சியின் கடுமையான உழைப்புக்குக் கிடைத்துள்ள வெற்றி.

இப்படி ஒரு கருத்தினை "துக்ளக்" இதழ் வெளியிட்டதோடு "இப்படி உழைக்கக் கூடியவர்கள் அந்த உழைப்பைத் தேசீயப் பாதையில் செலுத்தினால்...? என்ற கேள்வியோடு முடித்திருந்தது. 1976 ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து ஓராண்டுக் காலத்திற்கு மேலாகத் தி.மு.கழகத்தின் மீது ஏவி விடப்பட்ட கொடுமைகள் எண்ணிக்கையில் அடங்கக் கூடியதா? ஜனதா கட்சி அரசிலே அமைச்சர்களாக இருந்தோர் சிலர் தமிழகத்தில் தி.மு.க.

அரசினால்தான் நெருக்கடி காலத்தில் பாதுகாக்கப்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தியும் தமிழ்நாட்டில் இரு காங்கிரஸ் கட்சிகளும் இணைவதற்கு குறுக்கே நின்றது தி.மு.கழக ஆட்சி தான் என்று கோள் சொல்லியும் யாரும் எதிர்த்திடத் துணியாமல் ஒடுங்கிக் கிடக்கும் போது ஒரு மாநில அரசின் ஆளும் கட்சியாக இருந்த தி.மு.கழகம் மத்திய அரசின் அவசர காலச் சட்டத்தை வரவேற்று ஆலவட்டம் சுற்றுவதற்குப் பதிலாக அரிமா என எழுந்த நின்று எதிர்ப்புக் குரல் கொடுப்பதா எனச் சீற்றம் கொண்டும் இந்தியாவிலே இந்திராவுக்கு எதிராக இரு தீவுகள், ஒன்று குஜராத் மற்றொன்று தமிழ்நாடு என ஆர்ப்பரித்தும் - கழகத்தைச் சுவடு தெரியாமல் அழித்துவிடக் கங்கணம் கட்டிக் காரியத்திலும் ஈடுபட்டனர் டெல்லி வட்டாரத்தினர்.

அத்தனைக்கும் தி.மு.கழகம் ஈடு கொடுத்தது. கழகத்தில் உறுதி படைத்தவர்களாயிருந்தவர்களைக்கூட "மிசா"க்களைக் காட்டி, மிரட்டி, உறுதி குலைய வைத்திட அதிகாரிகள் தூண்டப் பட்டனர். சி.பி.ஐ. பிரிவில் இருந்த அதிகாரிகளே அந்தப் பணியிலே ஈடுபட்டு ஆற்றிய காரியங்களை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அவர்கள் போட்ட தூண்டிலில் அப்போதும் சில சுயநலமீன்கள் சிக்கிடத்தான் செய்தன. ஆட்சியில் இருந்தவரையில் அனுபவித்த சிலபேர் இனிமேல் எதற்கு வம்பு என்று ஒதுங்கிக் கொண்டனர்.

ஒதுங்கிக் கொள்வதில் ஏற்பட்ட வெட்கத்தால் சில பேர் காரணங்களைக் கற்பித்து உறுமிக்கொண்டும் வெளியேறினர். கழகத்தின் முன்னணியிலேயே பெரும் பிளவை ஏற்படுத்தி இந்தக் கொள்கைக் கோட்டையைத் தகர்த்துவிடவும், டெல்லி வட்டாரம் தனது தளபதிகளைப் பணப் பேழையுடன் அனுப்பி வைத்தது. கழகத்தின் செயற்குழு கூடுகிறதென்றால் அதற்கு நான்கு நாட்கள் முன்னதாக யஷ்பால் கபூர், "கரன்சி" எனும் அணு ஆயுதத்துடன் சென்னை நகரை முற்றுகையிடுவார்.

முடிந்ததைச் செய்வார். கோபுரத்துப் பொம்மைகள் ஒன்றிரண்டு அதில் சிதறி வீழ்ந்தனவே தவிர, அண்ணா உருவாக்கிய இந்த இலட்சியக் கோவிலை யாராலும் இடித்திட இயலவில்லை. கழகத் தொண்டன், தன் கையை உயர்த்திக் கழகத்தைக் காப்போம் எனச் சபதம் பூண்டான். பிறகு அவன் ஓயவே இல்லை! உறங்கவே இல்லை! உழைத்தான், உழைத்தான், இன்னமும் உழைத்துக் கொண்டேயிருக்கின்றான். நல்ல எண்ணத்தோடுதான் "துக்ளக்" தேசியப்பாதையில் தி.மு.கழகம் தனது உழைப்பினைச் செலுத்த வேண்டுமென்று எழுதியது.

தி.மு.கழகம் மாநிலக் கட்சியாக இருந்தாலுங்கூட, அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் அனைத்திந்தியப் பிரச்சினைகளில் அது ஈடுபட வேண்டிய நேரத்தில் எல்லாம் அந்தப் பொறுப்பினைத் தட்டிக் கழித்ததில்லை. அவசரகாலச் சட்டம் கூட அனைத்திந்திய பிரச்சினைதானே? அதனை எதிர்த்து அமைப்பு ரீதியாக இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது தி.மு.கழகம்தானே! அந்த வகையிலேதான் இந்தியாவிலே வெளியார் ஆக்கிரமிப்புகள் தலைகாட்டிய போதெல்லாம் அதனை எதிர்த்து, இந்திய நாட்டு மக்களின் ஒற்றுமையை உலகுக்கு அறிவித்திடத் தி.மு.கழகம் முன்னணியில் நின்று செயல்பட்டிருப்பதை யார்தான் மறுத்திட இயலும்?

15-7-1977 அன்று தமிழகச் சட்டமன்றப் பேரவையிலேயே ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திலே கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலே உரையாற்றினேன். அப்போது ஆளுங்கட்சியினரைப் பார்த்து - "மாநில சுயாட்சி கேளுங்கள், உங்களுக்குத் துணை நிற்கிறோம்" என்றும், "மொழிப் பிரச்சினையில் நேருவின் உறுதி மொழிகள் சட்டத்தில் இடம்பெறத் தீர்மானம் கொண்டு வாருங்கள்" என்றும் "தேர்தல் அறிக்கையிலே கூறியிருப்பதை எல்லாம் நிறைவேற்றுங்கள்" என்றும் "குடியரசுத் தலைவர் ஆட்சியிலே நடைபெற்ற கொடுமைகளுக்கெல்லாம் விசாரணை நடத்துங்கள்" என்றும் கேட்டுக் கொண்டேன்.

அன்றைய தினம்தான், பேரவையிலே உரையாற்றும்போது முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., "மொழிக் கொள்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருப்போம்" என்று தெரிவித்தார்.

18-7-1977 அன்று கர்நாடக மாநில தி.மு.கழக அலுவலகக் கட்டிட நிதிக்காக பெங்களூரில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். கூட்டத்தின் வாயிலாகக் கிடைத்த 12,000 ரூபாய் நிதியினை அந்த மாநில தி.மு.கழக அமைப்பாளராகச் செயல்பட்ட திராவிட மணி அவர்களிடம் அளித்தேன். சென்னை மத்திய சிறைச்சாலையிலே 1976-ஆம் ஆண்டு நடைபெற்ற 'மிசா'க் கொடுமைகள் பற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் விசாரணை, 1977 ஜூன் திங்கள் இறுதி வாரத்தில் தொடங்கி, அன்றாடம் நடைபெற்றது.

ஆற்காடு வீராசாமி, மு.க. ஸ்டாலின், தியாக மறவன் சிட்டிபாபுவின் துணைவியார் ராஜலட்சுமி, விருதாசலம் எம். செல்வராஜ், கவிஞர் வேழவேந்தன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, மறைந்த விடுதலை சம்பந்தம் உட்படப் பலர் தங்களது சிறைக் கொடுமை அனுபவங்களைச் சாட்சிகளாக அந்தக் கமிஷன் முன்னால் அளித்தனர். 1977-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 23ஆம் தேதியன்று, சென்னை பனகல் பூங்கா அருகிலே, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 75-வது பிறந்த நாள் விழாவினை, மறைந்த என்னுடைய அருமை நண்பர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் என்னை அழைத்து மிகச் சிறப்போடு நடத்தினார்.

அந்தக் கூட்டத்திலே நான் குறிப்பிட்ட சில கருத்துக்கள் என்மனதிலே இன்றும் நிழலாடுகின்றன. அதனை நான் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளிலும் குறிப்பிடுவதுண்டு. அதாவது "கவிஞர் கண்ணதாசன் என்னைத் தாக்குவதும், திடீரென்று என்னைப் பாராட்டுவதும் மாறி மாறி வருகிற வாடிக்கையாகிவிட்ட காரணத்தினால் இப்போது அவசரப்பட்டு நன்றி தெரிவிக்கத் தயாராக இல்லை. ஏனென்றால் மீண்டும் என்றைக்குத் தாக்குவாரோ எனக்குத் தெரியாது.

ஆனால் ஒன்றை மட்டும் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் என்னைத் தாக்கி எழுதினாலும், தாங்கி எழுதினாலும் இரண்டிலுமே நான் அதிக ஆத்திரம் அடைவதில்லை. காரணம் தாக்கினாலும், தாங்கினாலும் அதிலே தமிழ் கொஞ்சுகிற காரணத்தினால் நான் அவர் தாக்குகின்ற நேரத்தில் ஏதோ ஓரிரு முறையைத் தவிர வேறு எந்த நேரத்திலும் மனம் புண்பட்டதில்லை. எனக்கும் கவிஞருக்கும் பகை உண்டு என்று மற்றவர்கள் கருதத்தக்க அளவுக்கு ஒரு சூழல் உருவாகி, இரண்டு மூன்றாண்டுக் காலம் ஒருவரையொருவர் சந்திக்காமலும், பேசிக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளாமலும் இருந்தோம்.

அந்தக் காலக்கட்டத்தில் ஒருநாள் நான் படத்திற்கான கதை வசனங்களை எழுதிக் கொண்டிருந்தபோது, அவசரமாக ஒரு தகவல் அறிய - நான் தங்கியிருந்த இடத்திலிருந்து மேகலா நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் நானே தொடர்புகொண்டேன். மேகலா நிறுவனத்தில் உள்ளவர்கள் 'ஹலோ' என்று சொல்லுகின்ற அதே நேரத்தில் இடையில் கவிஞர் கண்ணதாசன் குரலும் அந்தத் தொலைபேசியில் ஒலிக்கின்றது.

சில நேரங்களில் தொலைபேசிகளில் நாம் பேசும் போது குறுக்கு வழியாக (Cross Talk) மற்றவர்களின் பேச்சு வந்து விடுவதுண்டு. அதைப்போல அவர் வேறு யாரிடமோ தொடர்பு கொள்ள முனைந்திருக்கிறார். நான் அப்போதும் அவரது குரலைத் தெரிந்துகொண்டு "யார், கவிஞரா?"

என்கிறேன். அவர் "யார் கலைஞரா?" என்று வியப்புடன் கேட்கிறார். பிறகு நாங்கள் தொடர்ந்து பேசுகிறோம். "என்ன, நான் உங்களைத் தாக்கி எழுதுகிறேனே, அதை எல்லாம் படித்து வருகிறீரா?" என்று கேட்கிறார். அதற்கு நான், "படிக்கிறேன், எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கி எழுதுங்கள், ஆனால் என்றைக்காவது ஒருநாள் ஒருவரையொருவர் மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனத்திலே வைத்துக்கொண்டு எழுதினால், தாக்குகிற நேரத்தில் பகை உணர்ச்சி உள்ளத்திலே நிச்சயமமாக இருக்காது" என்று நான் குறிபிட்டேன்.

"அப்படிப்பட்ட பகை உணர்ச்சியோடு நான் எழுதவில்லை" என்றார் அவர். அந்தக் கவிஞரது நினைவினைப் போற்றும் வகையிலே எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, காரைக்குடியிலே ஒரு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டதே தவிர, அதற்கான நிதி ஒதுக்கப்படாமல் இருந்தது. 1989 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.கழக ஆட்சி ஏற்பட்ட பொழுது காரைக்குடியிலே கவிஞரது நினைவினைப் போற்றும் வகையிலே அந்த மணிமண்டபத்தினைக் கட்டிட, உடனடியாக நிதியனை ஒதுக்கி, பல முறை அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி அந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

அந்த மணி மண்டபத்தின் திறப்பு விழாவினைச் சிறப்பாக நடத்த எண்ணியிருந்த நேரத்தில் 1991 ஆம் ஆண்டு துவக்கத்திலே கழக ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு வந்த இந்த ஆட்சியிலே, அந்த மணி மண்டப அடிக்கல் நாட்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த என் பெயர் பொறிக்கப்பட்ட அந்த நினைவுக் கல்லையே அப்புறப்படுத்திவிட முயன்று, பசும்பொன் மாவட்டக் கழகச் செயலாளர் தா.கிருட்டினன் மற்றும் காரைக்குடி சித.சிதம்பரம் போன்றோர் கொடுத்த எதிர்ப்புக் குரலால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

அந்த மணி மண்டபத்தின் திறப்பு விழாவினைக்கூடக் காரைக்குடியிலே நடத்திடாமல் அந்த மாவட்டத்திலே வேறு ஒரு இடத்திலே (சிவகங்கையிலே) நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இணைந்த ஒரு விழாவிலே கலந்துகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, கவிஞர் கண்ணதாசனின் மணிமண்டபத் திறப்பு விழாவினை அந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக - ஒரு கல்லைக் கொண்டு வந்து வைக்கச் சொல்லி அங்கேயே அதனைத் திறந்து வைத்ததாக நாட்டிற்கு அறிவித்து, பின்னர் அந்தக் கல்லைக் கொண்டுபோய்க் காரைக்குடியிலே அந்த மண்டபத்திலே வைத்துவிட்டார்கள். அந்த மாபெரும் கவிஞனை அ.தி.மு.க.

ஆட்சியினர் அந்த அளவிற்கு அலட்சியம் செய்து அவமானப்படுத்தினர். கழக அரசைக் கலைப்பதற்கு முன்பு 1975 ஆம் ஆண்டு இறுதியில் இந்திரா காங்கிரசாரும், அப்போது அவர்களோடு கூட்டுறவாக இருந்த அ.இ.அ.தி.மு.க.வினரும் சேர்ந்து தி.மு.கழக அரசு இந்திராகாந்தி அம்மையார் கொண்டு வந்த இருபது அம்சத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று கூறிப் பேரவையிலே ஒரு கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். கழக அரசு மீது நம்பிக்கை இல்லை, எனவே கலைக்கப்பட வேண்டுமென்று வாதங்களை எல்லாம் எடுத்து வைத்தார்கள்.

அப்போது அ.தி.மு.க. உறுப்பினராக இருந்த பெ. சீனிவாசன், நான் அந்தக் கண்டனத் தீர்மானத்திற்குப் பதிலளித்துக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்டு, "நீங்கள் இந்த நெருக்கடி நிலை வந்த நேரத்தில் பொதுக் கூட்டத்திலும் நிருபர்களிடமும் கூடக் கண்டித்தீர்கள்; அந்த அவை மூலம் உடனடியாக ஏன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கக் கூடாது?"

என்று கேட்டார். உடனடியாக அவருக்கு நான் அளித்த பதில், "போர் வீரனுக்குத் தெரியும், எந்தக் கையில் வாள் வைப்பது, எந்தக்கையில் கேடயம் வைப்பது என்று!" என்பதாகும். அந்தக் கண்டனத் தீர்மானத்திற்கு நான் அளித்த மொத்தப் பதிலுரையும் கழக அரசு எந்த அளவிற்கு இந்திரா காந்தி அம்மையார் இருபது அம்சத் திட்டங்கள் என்று அறிவித்தவைகளை எல்லாம், அவர்கள் அறிவிப்பதற்கு முன்பேயே தமிழகத்தில் நிறைவேற்றியிருக்கின்றது என்பதற்கான விவரங்கள், புள்ளி விவரங்கள் அடங்கியதாகும்.

என்னுடைய அந்த உரை பின்னர் "வாளும் கேடயமும்" என்ற பெயரிலே சிறு புத்தகமாக வெளியிடப்பட்டது. நான் அப்போது "கேடயம்" என்று குறிப்பிட்டது சர்க்காரை! "வாள்" என்று குறிப்பிட்டது கழகத்தின் தீர்மானத்தை! தி.மு. கழகத்தின் செயற்குழு தீர்மானத்தை! தி.மு.கழகத்தின் செயற்குழு தீர்மானம் அவசரக் காலச் சட்டத்தை எதிர்த்தது. அது "வாள்". கழக அரசு அவசரக் காலச் சட்டத்தால் தமிழ்நாட்டு மக்கள் மீது விழக் கூடிய கணைகளை எல்லாம் தடுக்கிற வகையிலே இருந்தது.

ஆகவே அது "கேடயம்" என்று குறிப்பிட்டேன். சட்டமன்றத்திலே நான் உரையாற்றி, சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்பேட்டில் இடம்பெற்ற உரைதான் "வாளும் கேடயமும்" ஆனால் தி.மு.கழக அரசு கலைக்கப்பட்டு - குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், "வாளும், கேடயமும்" என்ற அந்தப் புத்தகத்தை விற்கக்கூடாது, வாங்கக்கூடாது என்ற தடையாணை பிறப்பிக்கப்பட்டது. எனவே 1977 ஆம் ஆண்டு ஆளுநர் உரை மீது நடந்த விவாதத்தின் போது, அந்தத் தடை நீக்கப்பட வேண்டுமென்றும், முதலமைச்சர் அந்தத் தடையை அகற்றுவாரேயானால் நலமாக இருக்குமென்றும் என்னுடைய உரையிலே குறிப்பிட்டேன்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பதிலளிக்கும் போது அதுபற்றி எதுவுமே கூறவில்லை. ஏழு ஆண்டுக்காலம் முதலமைச்சராக இருந்துவிட்டு 1977 தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவன் என்றாகி, அவையின் விவாதங்களிலே நான் கலந்து கொண்டபோது ஆளுங்கட்சிக்கு ஒரு எதிர்க்கட்சி ஆக்கபூர்வமான யோசனைகளைச் சொல்லவேண்டுமென்ற இலக்கணத்தை மறந்துவிடாமல் பணியாற்றினேன். சட்ட மன்ற விவாதங்களில் "வெப்பம்" இருப்பதைக் காட்டிலும் "ஒளி" இருப்பதே வரவேற்கத் தக்கதாகும்.

வெப்பம் வெறுப்புணர்வுக்கு வித்திடும். ஒளி விளக்கத்திற்கு வழி வகுக்கும். யாருடைய கொள்கையையும் யாரும் விட்டுக் கொடுக்காமல் நியாயத்திற்காக வாதாடுகிறபோது நிமிர்ந்து நின்ற ஜனநாயக அடிப்படையில் பிரச்சினைகளை எடுத்து வைத்து, கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு கடமையாற்றுகின்ற இடமாகத்தான் சட்டமன்றங்கள் விளங்கிட வேண்டும். அ.இ.அ.தி.மு.க. அரசின் சார்பிலே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீது பொது விவாதம் நடைபெற்று, 3-8-1977 அன்று நான் உரையாற்றினேன்.

அந்த உரையின் துவக்கத்திலே கூட "இந்த நிதிநிலை அறிக்கையின் மீது கருத்து மாறுபாடுகளை நானும் கூற வேண்டியவனாக இருந்தபோதிலும், "கன்னி நிதி நிலை அறிக்கை" என்று குறிப்பிட்டு இந்த மன்றத்திலே இதனை வைத்துள்ள நிதி அமைச்சர், அருமை நண்பர் மனோகரன் அவர்களை நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்" என்றுதான் குறிப்பிட்டேன்.