உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/காலம் கடந்த உண்மை
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

காலம் கடந்த உண்மை · 240 / 391

23. காலம் கடந்த உண்மை ஜூ லை 6 (1977) அன்று கூடிய தமிழகச் சட்டப் பேரவையில் அவைத்தலைவர் தேர்தல் நடைபெற்று மறைந்த குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது, பேராசிரியர் இரத்தினசாமி, நீதிபதி சந்திராரெட்டி போன்றவர்களுக்கு அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதற்கோணல் என்பார்களே அது போல பேரவையில் நீண்டகால உறுப்பினராகவும் பிறகு எதிர்க்கட்சித் தலைவராகவும் பிறகு எதிர்க்கட்சித் தலைவராகவும் விளங்கி விமான விபத்தில் இறந்து போன காங்கிரஸ் தியாகி பொன்னப்ப நாடார் அவர்களுக்கு அனுதாபத் தீர்மானம் கொண்டு வரவில்லை.

அதனை நான் அவையில் நினைவூட்டிய போது, அவையின் முன்னவராக இருந்த நிதியமைச்சர் நாஞ்சிலார் (கி.மனோகரன்) அவர்கள் "நாளை மறுநாள் வர இருக்கும் இரங்கல் தீர்மானங்களுடன் பொன்னப்ப நாடார் குறித்துத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும்" என்றார்.

அவர் குறிப்பிட்டபடி அடுத்த நாளுக்கு அடுத்த நாளும் பொன்னப்ப நாடாருக்கான இரங்கல் தீர்மானம் அவையில் கொண்டு வரப்படாததால் தி.மு.கழகம், ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. அதன் பிறகே மறுநாள் அந்த இரங்கல் தீர்மானம் அவையில் கொண்டு வரப்பட்டது. சட்டமன்ற மேலவையில் தி.மு.க. கட்சித் தலைவராக எம். சங்கரலிங்கம் அவர்களும் துணைத் தலைவராக கோ.சி.மணி அவர்களும் மேலவைக் கழக உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

சட்டப் பேரவையிலும், மேலவையிலும் தி.மு.கழகம் எதிர்க்கட்சிப் பொறுப்பில் இருந்தபோது நடைபெற்ற விவாதங்களையும் நிகழ்ச்சிகளையும் விருப்பு வெறுப்பின்றி எல்லா ஏடுகளுமே பாராட்டி எழுதின. விவாதங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள ஆவலுடையோர் பேரவை மேலவை விவாதங்கள் அச்சியற்றப்பட்ட நூல்களை எளிதாகப் பெறக் கூடுமென்பதால் அவைகள் அனைத்தையும் விளக்கி எழுதிட நான் முனையவில்லை. தி.மு.கழக ஆட்சியில் மதுவிலக்கை ஓரிரு ஆண்டுகள் ஒத்தி வைத்தது குறித்து இன்னமும்கூட (நான் இந்த மூன்றாம் பாகம் எழுதும் நேரத்திலும் கூட) பெரும் சர்ச்சைகள் கிளப்பப்படுகிற காரணத்தால் அது குறித்து 12.7.1977 அன்று அவையில் நடந்த விவாதத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவூட்டுகிறேன்.

மணிமாறன் (அ.தி.மு.க): "இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.கழகம் ஆட்சியில் இருந்த போது மதுவிலக்கை ரத்து செய்துவிட்டு நாங்கள் காந்தி வழி வந்தவர்கள் அண்ணா வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்" எதிர்க்கட்சித் தலைவர் (மு.க): "உறுப்பினர் எழுப்பியுள்ள மது விலக்குப் பிரச்சினை குறித்து மட்டும் விளக்கமளிக்க விரும்புகிறேன். இன்றைய தினம் முதலமைச்சராக இருப்பவர் அப்போது கோவையில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில் மதுவிலக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் குறித்து ஒரு மணி நேரம் பேசியிருக்கிறார் என்பதை ஞாபகமூட்டுகிறேன்.

எஸ்.ஆர்.ராதா(அ.தி.மு.க): "எதிர்க் கட்சித் தலைவர் கோவைப் பொதுக் குழுப் பற்றிக் குறிப்பிட்டார். இன்றைய முதல்வர் அன்றைக்கு அரசின் பணப்பற்றாக்குறை காரணமாகத்தான் மது விலக்கை ஒத்திவைக்க வேண்டுமென்ற முடிவை ஒப்புக் கொண்டு பேசினார். ரகுமான்கான் (தி.மு.க): "உங்கள் கட்சியின் கொள்கை மது விலக்கை தீவிரப்படுத்துவதாகுமென்றால் உங்கள் ஆட்சி நடைபெறும் புதுவையிலும் மதுவிலக்கை அமல்படுத்துவீர்களா? எதிர்க்கட்சித் தலைவர் (மு.க.): "இன்றைய முதல்வர் அன்றைக்கு கோவைப் பொதுக்குழுவில் பேசிய அதே கருத்துக்களைத் தான் மது விலக்கைப் பற்றி ஆனந்தவிகடனில் அவர் எழுதியுள்ள வாழ்க்கை வரலாற்றிலும் குறிப்பிட்டுள்ளார்.

மதுவிலக்கை ஒத்தி வைத்தோம். பிறகு தி.மு.க. ஆட்சியிலேயே பூரண மதுவிலக்குத் தீவிரமாகக் கொண்டு வரப்பட்டுவிட்டது." இப்படி விவாதம் நடந்த போது முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது இருக்கையில் மௌனமாக அமர்ந்திருந்தாரே தவிர குறுக்கிட்டு எந்த விளக்கமும் சொல்லவில்லை. ஏனெனில் உண்மையை அப்போது அவரால் மறுக்க முடியவில்லை. "உண்மையை மறைக்க முனைவது விதையைப் பூமிக்குள் மறைப்பது போலத்தான்" என நான் எழுதிய ஒரு வாசகம் எவ்வளவு சரியானது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டையும் இங்கே குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்.

1972ல் எம்.ஜி.ஆர் அவர்கள் கழகத்திலிருந்து தன்னை விலக்குகிற அளவுக்குக் கட்டுப்பாடற்ற முறையில் நடந்து கொண்டது ஏன் என்பது பற்றி நானும், பேராசிரியர் (அன்பழகன்) அவர்களும் நாவலர் (நெடுஞ்செழியன்) அவர்களும் எத்தனையோ ஆதாரங்களுடன் அப்போதே எடுத்துச் சொல்லியும் விஷயமுணர்ந்த தெளிவுடைய வட்டாரத்தினர் மட்டுமே அதனை நம்பினார்கள். எந்தவொரு மாநிலக் கட்சி செல்வாக்குப் பெற்று மக்களிடையே வேரூன்றினாலும் அந்தக் கட்சியின் செல்வாக்கைக் குறைப்பதற்கு அந்தக் கட்சிக்குள்ளேயிருந்து ஒரு பிரமுகரை வலைவீசிப் பிடித்து அந்தக் கட்சியைப் பிளந்து அந்த மாநிலத்தில் காங்கிரசைப் பலப்படுத்திக் கொள்ள நடைபெற்ற முயற்சிகளுக்குக் கணக்கேயில்லை.

காஷ்மீரத்தில் மாநில சுயாட்சிக் கொள்கையை முதன்மையாக வைத்து வளர்ந்த ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியை அவரது மறைவிற்குப் பிறகு அவரது மகன் பரூக் அப்துல்லா உறுதியுடன் வளர்த்து மாநில சுயாட்சிக் கொள்கைக்கு இந்தியா முழுதும் ஆக்கம் தேடியது பிடிக்காமல்தான் அவரது கட்சியை அவரது உறவினரான ஷா என்பவரைக் கொண்டே உடைத்து; ஆட்சியை மாற்றி கடைசியாக பரூக் அப்துல்லாவையே காங்கிரசின் கைக்குள் போட்டுக் கொண்டு காஷ்மீரில் பெரும்பிரச்சினை இன்றளவுக்கும் அடங்காத அளவுக்கு உருவெடுத்திருக்கிறது. பஞ்சாபில் மாநிலசுயாட்சிக் கொள்கையுடன் அகாலிதளம் என்ற மாநிலக் கட்சி மிக்க வலுவுடன் வளர்ந்தது கண்டு; அதனைப் பிளக்க பிந்தரன்வாலேயை உருவாக்கியதும் அவரைத் தனது ஆதரவாளராக ஆக்கிக் கொண்டு அகாலிதளத்தை அழிக்க முனைந்ததும் வரலாற்று உண்மையாகும்.

இது போன்ற காரியத்தில் ஈடுபட்டு பிந்தரன்வாலேயை வளர்த்த காங்கிரஸ் இயக்கம் பின்னர் அவரையே எதிர்த்து அமிர்தசரஸ் ஆலயத்திற்குள் இராணுவத்தை அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அந்த அதிரடிப் போரில் அமிர்தசரஸ் ஆலயத்திற்குள்ளேயே பிந்தரன்வாலேயும் ஆயிரக்கணக்கான சீக்கியர்களும் பிணமாக்கப்பட்டனர். அகாலி தளமும் சிதறுண்டு போயிற்று. நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ஜூனியர் விகடன் (23.3.1992) என்ற தமிழ்வார ஏட்டில் வெளிவந்துள்ள தொடர்கட்டுரையின் ஒரு பகுதியை எழுத்துப் பிசகாமல் அப்படியே தந்திட விரும்புகிறேன்.

"ஜூனியர் விகடன்" எஸ்.எஸ். வாசன் என்ற பிரபல காங்கிரஸ்காரரும் ஜெமினி ஸ்டுடியோ அதிபரும் ஆனந்தவிகடன் நிறுவனருமான செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் புதல்வர் பாலசுப்பிரமணியம் அவர்களால் நடத்தப்படுகிற ஏடு! அந்த ஏட்டில் "போலீஸ் மனிதர்கள்" என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது. நான் இங்கே குறிப்பிடுவது 13-வது தொடராகும். போலீஸ் உளவுத்துறை அதிகாரி ஒருவர்; அவர் பணியாற்றிய போது நாட்டில் நடந்த சில நடப்புகளைக் கூறுகிறார்.

அதைத்தான் வாசகர்களாகிய நீங்கள் இப்போது படிக்கப் போகிறீர்கள். அவர் கூற்று பின்வருமாறு- "எம்.ஜி.ஆரைத் தி.மு.க.விலிருந்து வெளியே கொண்டுவர ஒரு பெரிய நாடகம் நடத்தினோம். அந்த நாடகத்தை எப்படி நடத்தினோம் தெரியுமா?" என்று ஆரம்பித்த சி.ஐ.டி.அதிகாரி தொடர்ந்து சொல்லத் தொடங்கினார். "எதிர்க்கட்சிகளை உடைப்பதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டித் தரும் பொறுப்பும் சில சமயம் உளவுத்துறையின் தலையில் விழும்.

அதைச் செய்ய வேண்டுமானால் அந்தக் கட்சியிலுள்ள தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களுக்கு என்னென்ன பலவீனங்கள் உண்டு, அவர்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் உள்ள செல்வாக்குப் போன்ற புள்ளிவிவரங்கள் இன்டெலிஜன்ஸ் அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகி விடும். 1971... அப்போது தி.மு.க. பதினைந்து எம்.பி.க்களை வைத்திருந்தது. அரசியலில் கருணாநிதி ஒரு சூப்பர்மேனாக இருந்த நேரம்...

மாநில சுயாட்சிக் கொள்கையை உரமூட்டி வளர்த்துக் கொண்டிருந்தார். தன்னுடைய மாநிலத்தில் தான் சிறப்பான ஆட்சி என்றும் முழங்கினார். இந்தக் குரல்கள் எல்லாம் பிரதமர் இந்திரா காந்தியின் காதிலும் விழுந்து கொண்டிருந்தன. தமிழ் நாட்டைச் சுற்றியுள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தான் ஆண்டு கொண்டிருந்தது. தமிழ்நாடு மட்டும் ஒரு தீவாக தி.மு.க.வின் கையில் இருந்தது. தி.மு.கழக எம்.பி.க்களின் ஆதரவு இந்திராகாந்தியின் அரசுக்குத் தேவைப்பட்டது.

அதே சமயத்தில் கருணாநிதி தன்கைக்குள் இருக்க வேண்டும் என்றும் நினைத்தார் இந்திராகாந்தி. இதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தார். தி.மு.க.வை உடைத்துவிட்டால்தான் அந்தக் கட்சி காங்கிரஸ் உதவியைத் தமிழ்நாட்டில் நாடும் என்று முடிவெடுத்தார்."

அதற்கான வேலைகளைச் செய்ய இன்டெலிஜன்ஸ் உயர் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார். உதவிக்கு காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும் அனுப்பப்பட்டிருந்தார். அந்த காங்கிரஸ் பிரமுகர் இன்டெலிஜன்ஸ் அதிகாரிகளோடு உட்கார்ந்து திட்டம் போட்டுக் கொடுத்தார். எனக்குக் கூட அப்போது வேறு ஒரு மாநிலத்தில்தான் பணியிருந்தது. ஆனால் தமிழக அரசியல் தெரியும் என்பதால் தான் எனக்கு 'ஸ்பெஷல் ட்யூட்டி' போட்டிருந்தார்கள். தி.மு.க.வில் முக்கியப் புள்ளிகள் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தபோது எம்.ஜி.ஆர்.

தான் முன்னணியில் இருந்தார். அதனால்தான் அவரைத் தி.மு.கவிலிருந்து இழுக்க முயற்சி செய்தோம். அப்போது ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.! வருமானமும் அவருக்கு அதிகமாக இருந்த நேரம்... இதைக் கருத்தில் கொண்டு வருமான வரி அதிகாரிகள் அடுத்து வருவாய்க் கண்காணிப்பு அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate) என்று எல்லா அதிகாரிகளும் எம்.ஜி.ஆர். வீட்டை முற்றுகையிட்டு அவரைக் குடைந்தெடுத்தார்கள்.

அப்போது அவர் ஒரு சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக வெளிநாடு சென்று வந்திருந்தார். அதற்கான கணக்கு வழக்குகளையும் விசாரித்தார்கள். ஆனால் இதற்தெல்லாம் பெரும் பின்னணி இருப்பது அவருக்குத் தெரியாது! இந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆருடன் பேச என்னை அனுப்பினார்கள். நான் போன போது எம்.ஜி.ஆர். மிகவும் சோர்வாக இருந்தார். நானே வலிய பேசி "பிரச்னைகளைச் சமாளிக்க டெல்லிக்குப் போய் அம்மாவை (இந்திரா காந்தி) பாருங்க...

எல்லாம் சரியாகப் போய் விடும்" என்று யோசனை சொன்னேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் எம்.ஜி.ஆர்.! பிறகு நானே, முக்கியமான காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் மூலமாக 'அம்மா'வை மீட் பண்ணுங்க என்று கூறி, வழிகாட்டிக் கொடுத்தேன். அதன்படியே எம்.ஜி.ஆர். அந்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் தன் வழக்கறிஞர், ஆடிட்டருடன் சென்று பிரதமர் இந்திராவைச் சந்தித்தார். சந்திப்பு நடந்து எம்.ஜி.ஆர்.

உற்சாகமாகத் திரும்பினார். இப்படித்தான் மெதுவாகத் தொடங்கித் தி.மு.க.வில் உட்பூசல் உண்டாக்கிக் கடைசியில் 1972ல் எம்.ஜி.ஆரைத் தி.மு.க.விலிருந்தே வெளியேற வைத்தோம்..." என்று முடித்தார் அந்த அதிகாரி. ஜூனியர் விகடன் வார இதழில் வந்துள்ள இந்த உண்மையை இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நானும் ஏனைய தி.மு.க. தலைவர்களும் பல ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தபோது "இப்படியும் இருக்குமா?"

என்று (ஆராய்வதற்கு அவகாசமில்லாதவர்கள்) எங்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். ஆனால் அந்த உண்மை இருபது ஆண்டுகள் கழித்து சாட்சியத்துடன் வெளிவந்துள்ளது. மாநில சுயாட்சி கேட்டு வளர்ந்து வலுப்பெற்ற கழகத்தைப் பிளந்து கட்டுக்கோப்பை உடைத்திட மத்திய காங்கிரஸ் அரசு கையாண்ட சூழ்ச்சியில் சம்பந்தப்பட்ட அதிகாரியே தெரிவித்திருப்பதை நான் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா? எனினும்; அண்ணாவின் "கட்டுப்பாடு" மந்திரத்தை நெஞ்சில் நிறுத்திப் பணியாற்றிய நாங்கள்; எதையும் தாங்கும் இதயத்துடன் எதிர்க்கட்சியாக இருந்து மக்கள் பணியைத் தொடர்ந்தோம்.