உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/ஐ.ஏ.எஸ். அதிகாரி வாக்குமூலம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

ஐ.ஏ.எஸ். அதிகாரி வாக்குமூலம் · 239 / 391

22. ஐ.ஏ.எஸ். அதிகாரி வாக்குமூலம் அந்த அதிகாரியின் பெயர் இராயப்பா - கழக ஆட்சிக்காலத்தில் 1971ல் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு தலைமைச் செயலாளராக இருந்த அவரை, பதவி மாற்றம் செய்து வேறு ஒரு பொறுப்புக்கு நியமித்ததால் அதனை எதிர்த்து அவர் என்மீது வழக்கு கூடப் போட்டார். அதை நினைவில் வைத்துக்கொண்டு அவரைக் கொண்டு எனக்கெதிராக சர்க்காரியா கமிஷனில் வாக்கு மூலம் பெறலாமென்று மத்திய அரசின் அதிகாரிகள் முயற்சி செய்தனர்.

அதனையொட்டி 21.2.1977 அன்று அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசின்படி முன்பு அவர் அளித்திருந்த வாக்குமூலம், தானாகவே முன்வந்து அளித்ததா அல்லது அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட "ரெடிமேட்" வாக்குமூலத்தில் கையெழுத்திட்டாரா? வற்புறுத்தல், ஆசை காட்டல் ஏதாவது உண்டா? எனக் கேட்கப்பட்டிருந்தது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில் இராயப்பா ஐ.ஏ.எஸ். அளித்த பிரமாண வாக்குமூலம் வருமாறு:- "சர்க்காரியா விசாரணனைக் கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு சி.பி.ஐ.

அதிகாரியான சிவாஜி என்பவர் திருவண்ணாமலையில் உள்ள எனது விவசாயப் பண்ணையில் என்னைச் சந்தித்து; சி.பி.ஐ. மூத்த அதிகாரிகளில் ஒருவரான ராஜகோபாலன் கருணாநிதி மீதும் இதர அமைச்சர்கள் மீதும் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து என்னிடம் விவாதிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். என்னிடம் விவாதங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும்; பைல்களில் நான் எழுதியிருக்கும் குறிப்புகளையும், சுப்ரீம் கோர்ட்டில் நான் தாக்கல் செய்திருக்கும் பிரமாண வாக்கு மூலத்தையும் அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம் - என்றும் கூறினேன்.

அதற்குப் பத்து நாட்களுக்குப் பிறகு முன்கூட்டியே என்னிடம் தெரிவிக்காமல் அந்த ராஜகோபாலன் திருவண்ணாமலையில் என்னை வந்து சந்தித்தார். நான் முன்பு சிவாஜியிடம் கூறியதையே அவரிடம் திரும்பச் சொன்னேன். சில வாரங்களுக்குப் பிறகு எஸ்.எஸ்.எம். சுப்ரமணியம் என்னிடம் தொலைபேசிமூலம் பேசினார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்காடுவதற்காக 1972-ல் அவரிடம் தான் நான் சென்னையில் உள்ள என் பங்களாவை விற்றேன். சி.பி.ஐ.யில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பணியாற்றும் லட்சுமிநாராயணன் தனக்கு நெருங்கிய நண்பர் என்றும்; அவர் சென்னையில் இருக்கும்போதெல்லாம் - இரவு நேரங்களில் தன் வீட்டில் தன்னோடு குடிப்பது வழக்கம் என்றும் கூறினார்.

நான் உடனே சென்னைக்கு வரவேண்டுமென்றும்; சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.ஜி.யான லட்சுமிநாராயணன் சொல்கிறபடி ஒரு வாக்குமூலத்தில் நான் கையெழுத்துப் போட வேண்டும் என்றும்; அரசாங்கத்திடமிருந்து எனக்கு பென்ஷனும் இதர வசதிகளும் கிடைக்க லட்சுமிநாராயணன் உறுதி அளித்திருப்பதாகவும் - அவர் கூறினார். லட்சுமிநாராயணனைச் சந்திக்க நான் அக்கறை கொண்டிருக்கவில்லை - என்று நான் அவரிடம் தெரிவித்தேன்.

சில வாரங்களுக்குப் பிறகு எஸ்.எஸ்.எம். சுப்ரமணியம் மறுபடியும் என்னிடம் தொலைபேசி மூலம் பேசினார். எனது நலன் நாடுபவர் என்கிற முறையில் எனக்கு அறிவுரை கூற விரும்புவதாகவும்; சி.பி.ஐ. தலைவரது கோபத்திற்கு நான் ஆளாகக் கூடாது என்றும், லட்சுமிநாராயணன் சொல்கிறபடி நடக்காவிட்டால் எனக்கு பென்ஷனோ இதர வசதிகளோ கிடைக்காது - என்றும் அவர் கூறினார். இவ்வாறு 'பிரஷர்' கொடுப்பதே எனக்குப் பிடிக்காது என்றும்; எனவே லட்சுமி நாராயணனைச் சந்திக்க விரும்பவில்லை என்றும் நான் அவரிடம் தெரிவித்தேன்.

1976-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி நான் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் குடி புகுந்தேன். சர்க்காரியா கமிஷன் தனது விசாரணையைத் துவங்குவதற்கு முன்பு சி.பி.ஐ.யில் பணியாற்றும் ஸ்ரீராமுலு என் வீட்டிற்கு வந்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரி வைத்தியலிங்கம் ஒரு வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும்; பூச்சி மருந்து தெளிப்பு சம்பந்தமாக ஏக்கருக்கு ரூ.5 வீதம் சிபாரிசு செய்து பைலைத் தயார் செய்யும்படி என்னிடம் முதலமைச்சர் சொன்னதாகவும்; உடனே நான் வைத்தியலிங்கத்திற்குப் போன் செய்துவிட்டு முதலமைச்சர் அங்கீகாரத்திற்காகப் பைலை நேரடியாக அவருக்கு அனுப்பி வைத்ததாகவும் வைத்திலிங்கம் அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக - அவர் சொன்னார்.

அந்த அடிப்படையில் ஒரு வாக்குமூலம் 'டைப்' செய்து கொண்டு வந்திருப்பதாகவும், அதில் நான் கையெழுத்துப் போட வேண்டும் - என்றும் கேட்டுக் கொண்டார். அந்த 'பைல்' விவசாயச் செயலாளர் மூலமாக விவசாய அமைச்சருக்கும்; பின்னர் அவர் மூலமாக முதலமைச்சருக்கும் செல்ல வேண்டும் - என்று நான் குறிப்பிட்டிருக்கின்றேனா; அல்லது முதலமைச்சருக்கே நேரடியாகச் செல்ல வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறேனா என்று நான் அவரைக் கேட்டேன்.

நான் சரியான காரியத்தையே செய்திப்பதாகவும்; விவசாயச் செயலாளர் - பிறகு விவசாய அமைச்சர் மூலமாகவே பைலை 'மார்க்' செய்திருப்பதாகவும், அந்த 'பைல்' அடையாளம் தெரியாமல் மாற்றப்பட்டிருப்பதால் எனக்கு எப்படி வந்தது என்று சொல்ல முடியாதென்றும் அவர் கூறினார். விவசாயச் செயலாளருக்கு, விவசாய அமைச்சருக்கு - பின்னர் முதலமைச்சருக்கு 'பைல்' செல்ல வேண்டும் - என்று நான் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும்போது; நான் வைத்தியலிங்கத்திற்கு டெலிபோன் செய்து அவருக்கு பைலை அனுப்பியதாக நான் பொய் சொல்ல வேண்டும் - என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

- என நான் அவரிடம் கேட்டேன். 'டைப்' செய்யப்பட்ட அந்த வாக்குமூலத்தில் நான் கையெழுத்துப் போட மறுத்துவிட்டேன். எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யப் பின்னர் வருவதாகக் கூறிவிட்டு அவர் உடனே போய்விட்டார். அதன் பிறகு அவர் வரவேயில்லை. பூச்சிமருந்து தெளிப்புக் குற்றச்சாட்டு சம்பந்தமாக சர்க்காரியா கமிஷன் தாக்கீதின்படி நான் 1976 அக்டோபர் மாதம் 15ஆம் தேதி எனது வாக்குமூலத்தை அளித்திருந்தேன். பிறகு நீதிபதியால் எனது வாக்குமூலத்தின் சில பகுதிகள் நீக்கப்பட்டுவிட்டதாக நான் பத்திரிகைகளில் படித்தேன்.

பிறகு அக்டோபர் 28-ஆம் தேதி இரண்டாவது வாக்குமூலம் அனுப்பும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால் அதில்கூட எனது முந்தைய வாக்குமூலத்தின் சில பகுதிகள் நீக்கப்பட்டது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. அதற்கான காரணங்களும் காட்டப்படவில்லை. அதற்குச் சில தினங்களுக்கு முன்பு ஐ.ஜி. லட்சுமிநாராயணன் எனது வீட்டிற்கு வந்து; தான் சி.பி.ஐ.யில் ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்று அறிமுகம் செய்து கொண்டார். தான் நீதிபதி கிருஷ்ணய்யரின் சகோதரர் என்றும் கூறினார்.

தான் எனது இரசிகர்களில் ஒருவர் என்றும்; முன்பு நான் கருணாநிதியை எதிர்த்து வழக்குப் போட்ட துணிவைப் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கருணாநிதி என்னைப் பதவி மாற்றம் செய்துவிட்டதால் எல்லோரும் அவருக்கு எதிராக நான் வாக்குமூலம் கொடுப்பேன் - என்று எதிர்ப்பார்த்ததாகவும்; முதலில் நான் கொடுத்திருந்த வாக்குமூலம் பிராசிகியூஷன் தரப்பிற்கு உதவும் வகையில் இல்லையென்றும்; இதனால் மேலிடத்தார் கோபமடைந்திருப்பதாகவும் - அவர் தெரிவித்தார்.

எனது இரசிகர் - நலன் நாடுபவர் - என்கிற முறையில் இன்னொரு வாக்குமூலத்திற்கான நகலைத் தயாரித்துத் தன் கையோடு கொண்டு வந்திருப்பதாகவும்; அவர் தயாரித்துக் கொண்டு வந்திருக்கும் வாக்குமூலத்தின் நகலை நான் அங்கீகரித்து அதை அப்படியே சமர்ப்பித்துவிட்டால் என்னுடைய 'பென்ஷன்' கிடைப்பதற்கு உறுதியளிப்பதாகவும்; எனது வருங்காலம் பிரகாசமாக இருக்குமென்றும் - அவர் சொன்னார். ஓய்வு நேரத்தில் நான் படித்துப் பார்ப்பதற்காக அந்த வாக்கு மூலத்தின் நகலை உங்களிடமே விட்டுச் செல்கிறேன் என்று கூறி அதை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

(ஐ.ஜி.) லட்சமி நாராயணன் கொடுத்த நகலிலிருந்து சில பாராக்களை மாற்றி; சில புதிய பாராக்களைச் சேர்த்து நான் எனது இரண்டாவது வாக்கு மூலத்தை அனுப்பி வைத்தேன். சி.பி.ஐ.யில் ஐ.ஜி.யாகப் பணியாற்றும் லட்சுமி நாராயணன் கொடுத்த வாக்குமூல நகல் இன்னும் என்னிடமே இருக்கிறது. வீராணம் திட்டம் பற்றிய குற்றச்சாட்டுக் குறித்து 11.8.76 அன்று இன்னொரு சி.பி.ஐ. அதிகாரி என் வீட்டிற்கு வந்தார். நான் கையெழுத்துப் போடுவதற்காக டைப் அடித்து ஒரு வாக்கு மூலத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும்; அது இதர ஆபீசர்கள் சொன்னதற்கு ஒத்திருப்பதாகவும் - அவர் கூறினார்.

நான் அந்த வாக்குமூலத்தைப் பார்ப்பதற்கும் மறுத்துவிட்டேன். சுப்ரீம் கோர்ட்டில் எனது பிரமாண வாக்குமூலத்தில் சொன்னதையும், பைலில் முன்பு எழுதியிருப்பதையும் சுருக்கமாக அவரிடத்தில் 'டிக்டேட்' செய்தேன். முதலில் இரண்டு வாக்குமூலங்களை நான் தாக்கல் செய்த நேரத்தில், வாக்குமூலங்கள் எப்படி அதிகாரிகளால் பெறப்பட்டன - என்று என்னிடம் கேட்கப்படவில்லை; எனவே அப்போது அவை குறித்துத் தெளிவாகக் கேட்டிருப்பதால் இவைகளையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறேன்.

இவ்வாறு இராயப்பா தனது பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். இராயப்பா தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது தெரிந்ததே. அவருக்கே இந்த கதி - என்பது குறிப்பிடத்தக்கது. ("எமர்ஜன்சி") நெருக்கடிக் காலத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தித் தி.மு.க. மீது களங்கம் சுமத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு இது ஓர் உதாரணம்.