உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/எதிர்க்கட்சி இலக்கணம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

எதிர்க்கட்சி இலக்கணம் · 238 / 391

21. எதிர்க்கட்சி இலக்கணம் தமிழ்நாட்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் எடுத்த எடுப்பிலேயே தி.மு. கழகத்திற்கு அறைகூவல் விடுத்துக் கடற்கரை கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அதைப்பற்றி நான் தெரிவித்த கருத்து வருமாறு:- "இப்போது எம்.ஜி.ஆர். அவர்கள் ஆளுங்கட்சித் தலைவராக வந்த பிறகு தி.மு.க. பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுமென அறிவித்துள்ளோம். தேர்தல் நேரத்து வாக்குறுதிகளை நிறைவேற்றிட அ.தி.மு.க.

அரசுக்கு ஆறு மாத கால அவகாசமாவது தேவை என்பதை நாமே சுட்டிக் காட்டியிருக்கிறோம். அதுவரையில் பொறுமையாக இருந்து, புதிய ஆட்சியின் நடைமுறைகளைக் கவனிப்போம் என்று கூறியிருக்கிறோம். காவிரி நீர்ப் பங்கீடு போன்ற மாநிலப் பிரச்சினைகளில் புதிய அரசு எடுக்கும் நல்ல முயற்சிகளுக்கு, தி.மு.க. ஒத்துழைப்புத் தரும் என்று உறுதி கூறியிருக்கிறோம். அவ்வாறே பொறுப்புடன் நடந்து கொள்வோம். ஆனால் நமது அறிவிப்புக்கு மாறாக முதல் நாளே முதல்வர் எம்.ஜி.ஆர்.

தி.மு.க.வைச் சவாலுக்கு அழைத்துப் பேசியிருப்பது முறையல்ல!" இவ்வாறு நான் கருத்து அறிவித்தது மட்டுமல்ல; 1977 ஜூலை முதல் நாள் சென்னையில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழுவில் மாநிலத்தை ஆளுவது எந்தக் கட்சி என்று கவலைப்படாமல் மாநில உரிமைகளுக்காக வாதாடவும் போராடவும் தி.மு.க. தயங்காது என்பதற்கு அடையாளமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முரசொலிமாறன் முன் மொழிந்த ஜி.இலட்சுமணன் எம்.பி.

வழிமொழிந்த அந்தத் தீர்மானம் மிக முக்கியமானது. தி.மு.க. ஆளுங்கட்சியாக இல்லாவிடினும் மாநிலத்து உரிமைக்காக மத்திய அரசுடன் வாதாடும் என்பதற்கு அந்தத் தீர்மானமும் ஓர் எடுத்துக்காட்டாகும். தீர்மானம் என்ன? "இப்போது மாநில அரசுகளின் அதிகாரவரம்புக்குள் இருக்கும் விற்பனை வரிக்குப் பதிலாக அடிஷனல் எக்சைஸ் டூட்டியை மத்திய அரசே விதித்து, அதற்குப் பதில் மாநிலங்களுக்கு உதவித்தொகை வழங்குவது என்று மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு, கூட்டாட்சி முறைக்கும் மாநில சுயாட்சித் தன்மைக்கும் ஊறு தேடும் முடிவாகவே ஆகிவிடுமென இச்செயற்குழு கருதுகிறது.

இப்போது மாநிலங்களுக்குள்ள பிரதான வருவாயே விற்பனைவரி ஒன்றுதான். அதையும் மாநிலங்கள், மத்திய அரசிடம் ஒப்புவித்துவிடும் நிலை உருவாகுமானால் முன்பே நிதி நெருக்கடியில் மத்திய அரசின் கையை எதிர்பார்த்து நிற்கும் மாநிலங்கள் மிகவும் இன்னலுக்குள்ளாகி விடுமென்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. விற்பனை வரியை எடுத்துக் கொண்டு என்னதான் நட்டஈடு (Compensation) கொடுப்பதற்கு மத்திய அரசு முன் வந்தாலும், அது சரிப்பட்டு வராது.

ஏனெனில் முதலாவதாக மாநிலங்கள் அரசியல் சட்டத்தில் தரப்பட்டிருக்கும் உரிமையையும் பிரதான நிதி ஆதாரத்தையும் இழக்கின்றன. எந்த நட்டஈடும் இவற்றை ஈடு செய்ய முடியாது. இரண்டாவதாக ஆண்டுதோறும் அதிகரித்து வரும் தன்மைக்கேற்ப (Buoyancy) எந்த நட்டஈடும் அமைவது கடினம் என்பதை நாம் அனுபவ ரீதியாகக் கண்டிருக்கிறோம். 1956லிருந்து விற்பனை வரிக்குப் பதிலாக சர்க்கரை புகையிலை ஜவுளி ஆகியவற்றின் மீது அடிஷனல் எக்சைஸ் டூட்டி வசூலிக்கப்படுகிறது.

ஆனால் விற்பனை வரிப் பெருக்கத்திற்கேற்ப மத்திய அரசு மாநிலங்களுக்குத் தரும் தொகை இருந்திடவில்லை என்கிற குறை மாநிலங்களுக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படுவதாலேயே மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்படும் என்பதற்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை. உதாரணமாக இரயில்வே கட்டணங்கள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் மீது வரி விதிக்கப்பட்டால் அது மாநிலங்களுக்குத் தரப்பட வேண்டுமென அரசியல் சட்டம் கூறுகிறது.

1961-ல் இந்த வரி நீக்கப்பட்டுப் பயணிகளின் டிக்கெட் கட்டணத்துடன் இந்த வரி இணைக்கப்பட்டு இதற்குப் பதிலாக மத்திய அரசு மானியம் வழங்குகிறது. நிதிக்குழுவே இப்பங்கீட்டு வேலையை மேற்கொண்டும் இதில் நியாயம் கிடைக்கவில்லையென்று மாநிலங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. (உண்மையில் இந்த வரி, வரியாகவே தொடர்ந்து விதிக்கப்படுமேயானால் 1973-74 மதிப்பீட்டின்படி ரூபாய் 36 கோடி மாநிலங்களுக்குக் கிடைத்திருக்கும்.

ஆனால் அதற்குப் பதிலாக மாநிலங்களுக்குக் கிடைப்பதோ ரூபாய் 16 கோடிதான் இதை 6-வது நிதிக்குழுவே சுட்டிக் காட்டியிருக்கிறது.) இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அதிகாரத்தைப் பரவலாக்குவதில் நம்பிக்கை கொண்ட மத்திய ஜனதா கட்சி ஆட்சி; இந்த விஷயத்தில் அவசரம் காட்டாமல் இருக்கிற மாநில அதிகாரத்தையும் பறிக்கிற செயலை மேற்கொள்ள வேண்டாமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்தத் தீர்மானத்தைப் போலவே மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரிப் பிரச்சினை குறித்த தீர்மானமும், சேலம் இரும்பாலைப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டுமென்ற தீர்மானமும், கல்பாக்கம் அணுமின் நிலையம் பணிகளும், நெய்வேலி இரண்டாவது சுரங்கப் பணிகளும் விரைவுபடுத்தப்படவும், தொடங்கப்படவும் வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானங்களும் சென்னைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

ஜூலை 4ஆம் நாள் காஷ்மீர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மொத்தம் 76 இடங்களில் மிகப் பெரும்பான்மையான இடங்களை ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி பெற்றதுடன் ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் முறையே பனிரெண்டு பத்து இடங்களைப் பெற்று ஷேக் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. அந்தத் தேர்தல் முடிவு குறித்து முரசொலியில் "அகில இந்திய அரங்கில் மாநில சுயாட்சியின் வெற்றி" எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரை காஷ்மீரின் அமைதியைக் கெடுப்பதற்கு காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல் ஜனதா கட்சிகூட எந்த அளவுக்குக் காரணமாயிருந்தது என்பதை அறிந்துகொள்வதற்கு வாய்ப்பாக என்றுமே விளங்கக்கூடியதாகும்.

அந்தக் கட்டுரையின் சில பகுதிகளை இங்கே குறிப்பிடுகிறேன். "காஷ்மீரில் ஷேக் அப்துல்லா மீண்டும் தனது தலைமையை உறுதிப்படுத்தியுள்ளார். அம்மாநிலச் சட்டமன்றத்தில் அவரது கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. வாழ்நாளில் பெரும்பகுதி தன் சொந்த மாநிலத்தைவிட்டு நாடு கடத்தி அஞ்ஞாத வாசம் செய்ய வைத்து வழக்கு நீதிமன்றம் என அவதூறுகளை அடுக்கடுக்காய் வீசி, அரசியல் ரீதியாக அவரைக் கொலை செய்துவிட டில்லி ஆட்சி எவ்வளவோ முயன்றது.

அவரது மனைவி மீது தேசவிரோத வழக்குத் தொடரப்பட்டது. எடுபிடிகளைக் கொண்டு அங்கே பொம்மை ஆட்சி அமைக்கப்பட்டது. ஆட்சியிலிருந்துதான் அந்தச் சிங்கத்தை அப்புறப்படுத்த முடிந்ததே தவிர காஷ்மீரத்து மக்கள் மனத்திலிருந்து அவரை அகற்ற முடியவில்லை. வேறுவழியின்றி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது டில்லி அரசு அவரோடு உடன்பாடு செய்து கொண்டது. மிகவும் விசித்திரமான சூழ்நிலையில் ஷேக் மீண்டும் முதலமைச்சரானார்!

அதாவது, சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் இந்திரா காங்கிரசைச் சேர்ந்தோர்! ஆனால் ஷேக் அப்துல்லா முதலமைச்சராகவும் அவரால் நியமிக்கப்பட்டவர்கள் அமைச்சர்களாகவும் ஆனார்கள். ஆனால் இந்த நல்ல காரியத்தை அவரது கட்சியினர் நீடிக்க விடவில்லை. திடீரென்று காங்கிரஸ் கட்சி முதல்வருக்குத் தந்த ஆதரவைத் திரும்பப் பெற்றது. அங்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது. அதற்குப்பின் பதவிக்கு வந்த ஜனதாவும் இதுபோன்ற தவற்றைச் செய்தது.

ஷேக் அப்துல்லாவைப் பழிவாங்க விரும்பிய வகுப்புவாத- இந்தியாவை எதிர்க்கின்ற பாகிஸ்தான் ஆதரவுக் கும்பலொன்றை ஜனதா நம்பி ஏமாறக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் ஆதரவை ஜனதா ஏற்றுக் கொண்டது வாய்ப்புக் கேடானது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒரு வேளை அத்தகைய தன்மை கொண்டோரின் மனத்தை மாற்றி விட்டதாக ஜனதா நினைத்திருக்கலாம். ஆனால் இதுவே ஷேக் அப்துல்லாவிற்கான மக்கள் ஆதரவை அதிகரித்தது. அவர்மீது ஊழல் புகார், இலஞ்சக் குற்றச்சாட்டு முதலியவை கூறப்பட்டன.

ஒரு மத்திய அமைச்சர் இதுபற்றி விசாரிப்பதற்கு ஒரு கமிஷன் அமைப்பதாகவும் கூறினார். இதையெல்லாம் மீறி இருதய நோயால் உடல் நலிவுற்றிருந்த போதும் கூட ஷேக் அபரிமிதமான வெற்றி பெற்றுள்ளார். ஷேக் அப்துல்லாவின் கட்சி பெற்றிருக்கிற உறுதியான வெற்றி மாநிலசுயாட்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். அதே நேரம் 72 வயதான ஒரு தலைவரை அவரது 40 ஆண்டுக் காலத்துத் தலைமையிலிருந்து விரட்டுவதற்கு ஜனதா கட்சி செய்த முயற்சியின் தோல்வியுமாகும்.

- இவ்வாறு ஒரு ஏடு எழுதியிருக்கிறது. காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு இணைந்த போது இந்திரா அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி தேசப்பாதுகாப்பு செய்தித் தொடர்புகள், வெளிநாட்டு விவகாரம், நாணயச் செலாவணி, வெளிநாட்டு வர்த்தகம் ஆகிய அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசின் வசம் இருக்கும். மீதியுள்ள அனைத்து அதிகாரங்களும் மாநிலங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்தியச் சட்டங்களில் எதை வைத்துக் கொள்வது?

எதைச் செயல்படுத்தாமல் ஒதுக்குவது என்று தீர்மானிக்கிற உரிமை காஷ்மீர் மாநிலத்திற்கு உண்டு. இது அரசியல் சட்டத்தில் 370 ஆவது பிரிவின்படி காஷ்மீரத்திற்குத் தரப்பட்டிருக்கிற உரிமையாகும். எனது கட்சியான தேசிய மாநாடு தான் மாநில சுயாட்சியைக் காக்கும். காங்கிரஸ் ஜனதா என்கிற அகில இந்தியக் கட்சிகளால் மாநில சுயாட்சியைக் காக்க முடியாது. என்று தேர்தல் காலத்தில் ஷேக் தெளிவாகக் கூறியிருந்தார். இப்போது ஜனதா கட்சியில் அங்கம் வகிக்கிற ஜனசங்கத்தினர் அரசியல் சட்டத்தில் 370 வது பிரிவிற்கு முன்பு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர்கள்.

ஆனால் காஷ்மீர் பிரச்சினை சிக்கல் மிகுந்தது; மென்மையாகக் கையாளப்பட வேண்டியது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். நிலைமை மோசமாகாமலிருக்கும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஏனெனில் ஷேக் அப்துல்லா ஜெ.பி.யின் நண்பர்; பிரதமர் மொரார்ஜியிடமும் பற்று வைத்திருப்பவர். எனவே எல்லைப் புற மாநிலத்தில் தொல்லை இருக்காது என எதிர்பார்க்க இடமுண்டு. இருபதாண்டுக் கால அஞ்ஞாத வாசத்திற்குப் பிறகு மீண்டும் காஷ்மீரச் சிங்கம் அரியணை ஏறியிருக்கிறது.

குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக நினைத்தார்கள்; கொள்கைத் தங்கமாக வெளிவந்திருக்கிறார்! கொள்கை வைரம் படைத்தவர்களுக்கெல்லாம் ஷேக் அப்துல்லா ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். அவருக்கு நம் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். அவர் நீண்ட காலம் வாழவேண்டும் என்று மீண்டும் வாழ்த்துகிறோம்."

இந்தக் கட்டுரை வெளிப்படுத்தும் ஒளியுமிழும் உண்மை என்ன? மாநில சுயாட்சிக் குரல் எங்குக் கேட்பினும் அதனை உரிமைக் கீதமாக எண்ணி மகிழ்ந்திடவும் எழுச்சி கொள்ளவும் அதற்கு ஆதரவு தரவும் தி.மு.கழகம் தயாராக இருந்தது - இருக்கிறது என்பதைத் தான்! மத்திய அரசு தனக்குள்ள அதிகாரச் செல்வாக்கை வைத்துக் கொண்டு மாநில அரசு தனக்குப் பிடிக்காத அரசாக இருந்தால் எப்படியெல்லாம் சூதுவலை பின்னும் என்பதற்கு டில்லி இந்திரா அரசு தி.மு.க.

அரசின் மீது சர்க்காரியா கமிஷன் என்ற பெயரால் அதிகாரிகளையெல்லாம் எவ்வாறு வளைத்து என்மீதும் சில அமைச்சர்கள் மீதும் ஏவி விட்டது என்பதற்கு என் ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி 1977 ஜூலை மாதம் சர்க்காரியா கமிஷனுக்கு அனுப்பிவைத்த பிரமாண வாக்குமூலமே சரியான உதாரணமாகும்.