நெஞ்சுக்கு நீதி
இந்திராமீது விசாரணையும் இயற்கை · 237 / 391
20. இந்திராமீது விசாரணையும் இயற்கை வைத்தியமும் தனக்குப் பிடிக்காதவர்கள் மற்றும் கட்சிகள், மாநில ஆட்சிகள் மீதெல்லாம் ஊழல்புகார்களைக் கூறிக்கொண்டே "எமர்ஜன்சி"யைப் பிரகடனப்படுத்தித் தன் விருப்பம் போல் எதேச்சாதிகாரம் நடத்திக் கொண்டிருந்த இந்திரா காந்தியின் "அலகாபாத் நீதிமன்ற வழக்கும் தீர்ப்பும்" என்பது பற்றி பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் எழுதிய "ஜட்ஜ் மெண்ட்" என்ற புத்தகம், இந்திராவின் ஆட்சி கவிழ்ந்தபிறகு மக்களிடம் புழக்கத்திற்கு வந்தது.
இந்திராவின் தேர்தல் செல்லாது என ராஜ்நாராயணன் அவர்கள் தொடர்ந்த வழக்கில் அதனை அலகாபாத் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. அவ்வாறு தீர்ப்பளித்த சின்காவின் பெயர் இந்திய பூபாகம் முழுவதும் ஆச்சரியத்துடன் உச்சரிக்கப் பட்டது. அந்தத் தீர்ப்பைத் தடுத்து நிறுத்திட பிரதமராக இருந்த இந்திரா காந்தி எவ்வாறு செயல்பட்டார் என்பதைத் தான் குல்தீப் நய்யாரின் "ஜட்ஜ் மெண்ட்" புத்தகம் விளக்குகிறது.
சில முக்கிய பகுதிகளை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறேன். "இந்திய வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது அலகாபாத் நீதிமன்றத்தீர்ப்பாகும். இந்திரா காந்தி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஊழல் புரிந்தவர்- என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி சின்கா! ஒருநாள் இந்திராவின் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி. சின்காவை அணுகினார். ஐந்து இலட்சம் ரூபாய் தருவதாகக் கூறினார்.
ஆனால் சின்கா பதிலே கூறவில்லை. இன்னொரு நாள் அலகாபாத் நீதி மன்றத்தைச் சேர்ந்த இன்னொரு நீதிபதி சின்காவைப் பார்த்து தீர்ப்புக்குப் பிறகு தங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவி காத்திருக்கிறது என்று கூறினார். ஆனால் சின்காவோ, அவரை வெறுப்புடன் பார்த்தார். பின்னர், தீர்ப்பைத் தள்ளிப்போடச் செய்யும் முயற்சிகள் நடந்தன. உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த கூட்டுச் செயலாளர் பிரேம் பிரகாஷ் நய்யார் உத்திரப் பிரதேசப் பிரதம நீதிபதியிடம் பிரதமர் இந்திராவின் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் முடிகிறவரை தீர்ப்பைத் தள்ளிவைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
இந்த விஷயத்தை பிரதம நீதிபதி அவர்கள் நீதிபதி சின்காவிடம் தெரிவித்தார். உடனே சின்கா வெகுண்டெழுந்து நீதிமன்றப் பதிவாளரை அழைத்து, ஜுன் 12-ந் தேதி (1975) தீர்ப்பு வழங்கப்படுமென்று அறிவிக்கச் செய்தார். இந்திராவின் சாம்ராஜ்ய ஒற்றர்கள் அலகாபாத் சென்று தீர்ப்பை டைப் செய்யும் நீதிபதி சின்காவின் உதவியாளரைப் பேசவைக்க எவ்வளவோ முயன்றனர். அந்த ஆசாமி வாய் திறக்கவே இல்லை. அவர் மிரட்டப்பட்டார். அதுவும் பலிக்கவில்லை.
தீர்ப்பின் முன் பகுதி முதலிலேயே டைப் செய்யப்பட்டிருந்தாலும் அது வாதங்கள் அடங்கிய பகுதியே ஆகும். இறுதித் தீர்ப்பு வரிகள் ஜுன் 11-ந் தேதியன்று சின்கா முன்னிலையில்தான் "டைப்" செய்யப்பட்டன. அதை டைப் செய்த "நேகிராம் நிகாம்" எனப் பெயர் கொண்ட அந்த உதவியாளரை யார் கண்ணிலும் படாமல் ஊரைவிட்டு எங்கேயோ மறைந்துவிடும்படி சொல்லி விட்டார் சின்கா. இதனால்தான் தீர்ப்பு என்னவென்று இந்திராவின் சாம்ராஜ்யத்துக்குத் தெரியவில்லை.
இதைப்போன்ற பல ஊழல் புகார்கள் கோடிக்கணக்கில் வெளிக்கொணரப்பட்டு நாடாளுமன்றத்திலேயே அவை விவாதத்திற்கு வந்தன. இல்லாத குற்றச்சாட்டுகளைத் தி.மு.க. ஆட்சியின் மீது கூறி 1976-ல் அந்த ஆட்சியைக் கலைத்த இந்திராவும் அவரது குடும்பத்தினரும் சகாக்களும் அடுக்கடுக்ககச் செய்துள்ளதாகச் சொல்லப்பட்ட ஊழல்கள் எல்லாம் அம்பலத்திற்கு வந்தன. 1977 ஜூன் 24-ஆம் நாள் மேற்கு வங்கத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிர்மயி பாசுவும் மற்றும் சில உறுப்பினர்களும் இந்திரா காந்தியையும் சஞ்சய் காந்தியையும் கைது செய்திட வேண்டும் என்கிற அளவுக்குக் கடுமையான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற அவையில் எடுத்துரைத்தனர்.
அதற்கென ஜோதிர்மயிபாசு தனிநபர் தீர்மானமொன்றே கொண்டு வந்து அதனை முன் மொழிந்து பேசினார். நண்பர் பாசு பேசியதின் சுருக்கம் வருமாறு - "இந்தத் தீர்மானம் என்னால் கொடுக்கப்பட்ட பிறகு அரசாங்கம், நீதிபதி ஷா கமிஷனை நியமித்தது. கமிஷனை வர- வேற்கிறேன். அதன் வேலைகள் விரைவாக நடக்க வேண்டும். தாமதமானால் சாட்சியங்கள் அழிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி பல தவறுகளையும் ஊழல்களையும் செய்துள்ளார்.
பல பேரங்களை நடத்தி கமிஷன்கள் பெற்றிருக்கிறார். அரபு நாடுகளுக்கு இங்கிருந்து தொழிலாளர்களை அனுப்புகிற ஓர் அமைப்புடன் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். அஃதன்னியில் இந்திய விமானப்படைக்கு விமானங்கள் வாங்குவது பற்றிய செயற்குறிப்புக்குப் பின்னே மறைந்திருந்தவர் சஞ்சய் காந்தி! அரசாங்க வர்த்தகக் கார்ப்பரேஷன் மூலம் இத்தாலிய நிறுவனம் ஒன்றுக்கு சர்க்கரை விற்றதும், போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களை வாங்குவதில் பேரம் நடைபெற்றதுமான விஷயங்களும் விசாரிக்கப் படவேண்டும்.
ஒரு இளம் பெண்ணுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமை பற்றிய ஜகோடா விவகாரம் தொடர்பாகவும் விசாரிக்கவேண்டும். நான் விபரங்களை அளிப்பது விரும்பத்தக்க ஒன்றாக இருக்காது என்பதால் இப்போது அளிக்கவில்லை. சஞ்சயின் மாமனார் கர்னல் ஆனந்த் பல உளவு அமைப்புகளுக்காக உளவு வேலை பார்த்து வந்தவர். அவரும் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் நெருக்கடிக் கால அத்துமீறல்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து உடந்தையாக இருந்த அமைச்சர்களும் விசாரணைப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்.
பல கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள சாராயமும், கம்பளத் துணி வகைகளும் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட போது, அவற்றுக்கு இறக்குமதி சுங்கவரியிலிருந்து விலக்களித்து உத்திரவிட்டார் பிரதமராக இருந்த இந்திராகாந்தி. பத்திரிகைகள் மீது திணிக்கப்பட்ட சென்சார் முறை பற்றி விசாரணை தேவை. நான்கு செய்தி நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு அதற்கு இந்திராவின் நெருங்கிய நண்பர் முகமது யூனூஸ் தலைவராக ஆக்கப்பட்டார்.
பத்திரிகைத் தணிக்கை இந்திராவுக்கு நிதி திரட்டவும் அரசியல் சேவை செய்யவும் பயன்படுத்தப் பட்டது. சிறைகளில் காவல் வைக்கப்பட்ட கைதிகளுக்கு எதிராகச் சொல்லொணாக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. பெண் என்றும் பாராமல் புலனாய்வு அதிகாரிகள் சிறையிலிருந்த பெண் ஒருவரின் மார்பகத்தில் சிகரெட் நெருப்பால் சுட்டிருக்கின்றனர். சிறையில் உள்ள வேதனையான நிலைகள் பற்றி எனக்கு நேரடி அனுபவம் உண்டு. நெருக்கடிக் காலத்தில் என்னை நான்கு வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றினர்.
தார்பங்கா சிறையிலிருந்த போது சிறைக்குள்ளே வெள்ளம் புகுந்தது. நான்கு நாட்கள் வெள்ளம் வடியவில்லை. எங்களை வேறு சிறைக்கும் மாற்றவில்லை. இத்தகைய கொடுமைகளுக்கும் ஊழல்களுக்கும் காரணமானவர்கள் மீது விசாரணை நடத்த முதற்கட்டமாக இந்திரா காந்தியும். சஞ்சய் காந்தியும் கைது செய்யப்பட வேண்டும்."
இவ்வாறு ஜோதிர்மயிபாசு தொடங்கி வைத்த இந்த விவாதத்திற்குப் பதில் அளித்த உள்துறை அமைச்சர் சரண்சிங் அவர்கள், "விசாரணைச் கமிஷன் ஆராய இருக்கும் விஷயங்கள் மிகவும் விரிவானவை. யாரும் அதன் பிடியிலிருந்து தப்ப முடியாது" என்று பெரும் ஆரவாரத்துக்கிடையே கூறினார்.
கடந்த காலத் தவறுகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும், உரிமைகளைப் பறிக்கும் இந்திரா அரசின் செயல்பாடுகள், சட்டங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெறுவதிலும் ஜனதா அரசு, மத்தியிலே அக்கறை காட்டிய போதிலும் ஆச்சார்ய கிருபளானி போன்ற தவைவர்கள் ஜனதா அமைச்சர்களைப் பற்றி வெளிப்படையாகவே குறைகளை அறிவித்தனர். 1977 ஜூன் 26 அன்று காந்தி அமைதி நிலையக் கட்டிட விழாவில் பேசிய கிருபளானி அவர்கள்; முந்தைய இந்திரா காங்கிரஸ் அமைச்சர்களின் ஆடம்பரத்தை ஜனதா அமைச்சர்களும் கொண்டொழுகுகிறார்கள் என்றும், அமைச்சர்கள் எளிமையான வாழ்க்கை வாழும் வண்ணம் மக்கள் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டுமென்றும் கூறினார்.
பத்திரிகை சுதந்திரம், நீதிமன்ற சுதந்திரம், சட்ட ஆட்சி ஆகியவற்றை மீட்டுக் கொடுத்தமைக்காக ஜனதா அரசைப் பாராட்டலாமெனினும், அமைச்சர்கள் சிறிய மாளிகைகளில் குடியேறிட மறுத்துப் பெரிய பெரிய மாளிகைகளுக்காக அலைவதைப் பார்த்து வருத்தப்படுகிறேன் என்றும் கிருபளானி அந்தக் கூட்டத்தில் பேசினார். அவர் வருத்தத்தை மட்டுமல்ல; இந்தி பேசாத மாநில மக்களின் வருத்தத்தையும் சம்பாதிக்கிற வகையில் பிரதமர் மொரார்ஜி அவர்கள் இந்தியை இந்திய மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று பேசினார்.
நாடாளுமன்றத்திலே ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியில்தான் பதில் சொல்வேன் என்று அமைச்சர் ராஜ்நாராயணன் அடம்பிடித்து அதனால் அவையில் பெரும் அமளி எழுந்தது. "மொழிப் பிரச்சினையைக் கிளறவேண்டாமென்றும், எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய இத்தகைய பிரச்சினைகளில் சர்ச்சையை உருவாக்கக் கூடாது" என்றும் அவைத் தலைவர் சஞ்சீவரெட்டி குறிப்பிட்டார்.
ராஜ்நாராயணன் பேசியது சரியல்ல என்று பிரதமர் மொரார்ஜி அவர்களுக்குக் கருத்து மாறுபாடு இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் கூட ஒரு பிரச்சினையில் இருவரும் ஒத்த கருத்துள்ளவர்கள் என்பதை உலகுக்கு அறிவித்தார்கள். அந்தத் தேவையற்ற அறிவிப்பு ஜனதா ஆட்சியையே கேலிக்குரியதாக ஆக்கியது. இந்திய நாட்டின் பட்டிணங்களில் வசிக்கும் படித்த மக்கள் மாத்திரமல்ல, பட்டிக்காடுகளில் வாழும் பாமர மக்கள் கூட அந்த அறிவிப்புக் கண்டு "சே!"
என்று முகத்தைச் சுளித்தனர். அத்தகைய "அற்புதமான" அறிவிப்பு தான் என்ன? "காலையிலும் மாலையிலும் ஒவ்வொருவரும் தங்களது சிறுநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அதனை அருந்துவது உடம்புக்கு மிகவும் நல்லது. எனக்கு நாள்தோறும் அதுதான் பழக்கம்."
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சரான ராஜ்நாராயணன் கூற, அதனை ஏடுகள் எல்லாம் பரபரப்புடன் வெளியிட்டன. இதுபற்றி மொரார்ஜியிடம் நிருபர்கள் கேட்டபோது "நான் கூட அந்த இயற்கை வைத்தியத்தைக் கையாண்டு வருகிறேன். அது மிகவும் உடல்நலத்துக்கு நல்லது" என்று அலட்டிக்கொள்ளாமல் பதில் அளித்தார்.
மொரார்ஜியின் திடகாத்திரத்தைப் பார்த்திடும் மக்களுக்கு அந்த இயற்கை வைத்தியத்தின் மீது இலேசான சபலம்கூடத் தட்டியது. இந்திய நாட்டு மருத்துவத் துறையினரிடையே இது பெரும் ஆய்வுக்குரிய விஷயமாக மாறிற்று. மொரார்ஜி நீண்டநாள் வாழ்கிறாரே; அது சிறுநீர் வைத்தியத்தினால்தான் என்றெண்ணிய மக்கள் ஏமாறும் வண்ணம் ராஜ் நாராயணன் நீண்டகாலம் வாழாமல் நோய் வாய்ப்பட்டு இறந்தது அந்தப் புதிய இயற்கை வைத்தியத்தின் சிறப்பையும் செல்வாக்கையும் குறைப்பதாக அமைந்தது எனலாம்.
இதைப்போய் இயற்கை வைத்தியம் என்று ஒரு பிரதமரும், பொறுப்புள்ள ஒரு அமைச்சரும் சொல்கிறார்களேயென்று திண்ணைக்குத் திண்ணை மக்கள் பேசலாயினர்.
