உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அரசியலில் ராஜகுருக்கள்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அரசியலில் ராஜகுருக்கள்! · 236 / 391

19. அரசியலில் ராஜகுருக்கள்! இந்தச் சட்டமன்றத் தேர்தலில் கழகம் எதிர்க்கட்சியாகப் பொறுப்பேற்றிடவும், ஜனதா கட்சி பத்து இடங்களைப் பெற்றிடவுமான நிலை ஏற்பட்டு அச்செய்தி கேட்ட பிரதமர் மொரார்ஜி தேசாய் புதுடெல்லியில் ஜுன் 18-ல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது, "தமிழ்நாட்டில் ஜனதா கட்சி எதிர்காலத்திலாவது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

நாவலர் நெடுஞ்செழியன் உருவாக்கிய மக்கள் தி.மு.க என்ற கட்சிக்கு எம்.ஜி.ஆர். தேர்தலில் தொகுதிகளை ஒதுக்கிட முன்வராவிடினும் அந்தப் புதிய கட்சியின் புரவலராக இருந்த ஆதித்தனாருக்கு மட்டும் அவர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட சாத்தான் குளம் தொகுதியை விட்டுக் கொடுத்தார். ஆனால் அந்தத் தொகுதியில் ஆதித்தனார், ஜனதா கட்சி வேட்பாளரிடம் தோற்றுப் போனார். சென்னை அண்ணா நகர் தொகுதியில் நான் வெற்றி பெற்றேன்.

புரசைவாக்கம் தொகுதியில் பொதுச்செயலாளர் பேராசிரியரும் ஆயிரம்விளக்குத் தொகுதியில் பொருளாளர் சாதிக்பாட்சாவும் மற்றும் 45 இடங்களில் கழகத்தின் முன்னணித் தோழர்களும் பெருவெற்றி பெற்றனர். 19.6.77 அன்று தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற்று என்னைத் தலைவராகவும், பேராசிரியர் அவர்களைத் துணைத் தலைவராகவும், மாயூரம் கிட்டப்பா அவர்களைக் கட்சிக் கொறடாவாகவும் தேர்ந்தெடுத்தனர். அன்று மாலை தியாகராய நகர் பனகல் பூங்கா அருகில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது.

48 பேரைக் கொண்ட எதிர்க் கட்சியான தி.மு.க.வின் பின்னால் 43 இலட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் 129 பேரைக் கொண்ட ஆளுங்கட்சியான எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வுக்குப் பின்னால் 52 இலட்சம் வாக்காளர்கள்தான் இருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்தால் எதிர்க் கட்சியான தி.மு.க.வின் பலத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது என்ற கருத்து அந்தக் கூட்டத்தில் எடுத்துச் சொல்லப்பட்டபோது கழகச் செயல்வீரர்கள் உற்சாகம் பெற்று எழுச்சி கொண்டனர். தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டால் இப்படியொரு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்காது என சிலச் ஏடுகள் எழுதின.

சென்னை மாநகரில் மட்டும் 14 தொகுதிகளில் கழகம் 13 தொகுதிகளில் வென்றது. "சாதனைச் சரித்திரம் படைத்த தி.மு.கழகம் ஆட்சிக்கு வராதது தமிழ்ச் சமுதாயத்திற்கு பெரிய இழப்பு" என்று திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் உருக்கமிகுந்த ஓர் அறிக்கை வெளியிட்டார்.

கழகம் ஆளும் கட்சியாகாவிடினும் சட்ட மன்றத்தில் எதிர்க் கட்சியாகத் திறம்படப் பணியாற்றக் கூடியவர்கள் வெற்றி பெற்றதில் தமிழக மக்கள் பெரும் ஆறுதலடைந்தனர் என்றே கூறவேண்டும். அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 10 இடங்களில் நின்று ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது; அதைக் குறிப்பிட்டு எழுதிய இந்து ஏடு; தி.மு.க.வுடன் உடன்பாடு கொண்டு ஆறு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்த முஸ்லீம் லீக் இப்போது அ.தி.மு.க.வுடன் உடன்பாடு கொண்டு ஒரு இடத்தை மட்டுமே பெற்றுள்ளது என விளக்கியிருந்தது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுற்ற ஏழு மாநிலங்களில் முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்றார்கள். ஏழிலும் ஜனதா அரசுகள் அமைந்தன. ஒரிசாவில், நீலமணி ரவுத்ராய்-அரியானாவில், தேவிலால்-மத்தியபிரதேசத்தில், கைலாஷ் சந்திரஜோஷி - இமாசலத்தில், சாந்தகுமார் - ராஜஸ்தானில், பய்ரோன்சிங் செகாவத் - பீகாரில், கர்பூர்தாகூர், உத்திரப்பிரதேசத்தில், ராம்நரேஷ் யாதவ் - முதலமைச்சர்களாயினர். பஞ்சாபில் ஜனதா ஆதரவுடன் அகாலி தள அரசு பலராம்ஜி தாஸ் தாண்டன் தலைமையில் அமைந்தது.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்.தான் முதலமைச்சர் எனத் தீர்மானமாகியும் கூட அவர் தனது படப்பிடிப்பு வேலைகளையெல்லாம் ஒரு வழியாக முடித்துவிட்டுத்தான் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என நாட்களைத் தள்ளிப் போட்டார். இந்தக் கால கட்டத்தில் "இந்தியா டுடே" என்ற ஆங்கில ஏடு, ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. அச்செய்தி திரேந்திர பிரம்மச்சாரி என்ற சாமியாரைப் பற்றியது. "பண்டித நேருவுக்கு யோகாசனம் என்றால் பிடிக்குமல்லவா?

அதை வைத்து திரேந்திர பிரம்மச்சாரி நேரு குடும்பத்திடம் அறிமுகமானார். 1961-62-ல் தனது யோகாஸ்ரமத்துக்கு அரசினர் பங்களா ஒன்றைக் கேட்டு அவர் மனுச் செய்திருந்தார். ஒரு அரசாங்க அதிகாரி பங்களா தரமுடியாதெனக் கோப்பில் எழுதினார். அதிகாரியின் ஆட்சேபணையைப் புறக்கணித்துவிட்டு அமைச்சர் கே.சி.ரெட்டி என்பவர் திரேந்திருக்கு ஒரு பங்களாவை ஒதுக்கித் தந்தார். பிறகு 1967-ல் இந்திராகாந்தி பிரதமாரானதும் சாமியாருக்கு யோகம் அடித்தது.

மிக முக்கியமான இடத்தில் அவருக்கு ஆஸ்ரமம் கட்டிக் கொள்ள சுமார் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அங்கே ஒரு சதுர கெஜம் மதிப்பு ஆயிரம் ரூபாய். அப்படிப்பட்ட நிலம் சுமார் ஒண்ணே கால் இலட்ச ரூபாய்க்குத் தரப்பட்டது. அந்த நிலத்தில் இருந்த காங்கிரீட் கட்டிடம் சாமியாருக்கு இனாமாகத் தரப்பட்டது. 1969-70-ல் அரசாங்கம் அந்த ஆஸ்ரமத்துக்கு 30,000 ரூபாய் தந்தது. அதே மான்யம் 1970-71-ல் 1,89,875 ரூபாயாக உயர்ந்தது.

71-க்குப் பிறகு அந்த மான்யம் 3,42,727-ஆக ஆயிற்று. ஏழாண்டுக் காலத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் அந்த ஆஸ்ரமத்திற்கு சுமார் 27 இலட்ச ரூபாய் உதவித் தொகை அளித்திருக்கிறது. அது தவிரக் கல்வி அமைச்சகம் பல இலட்ச ரூபாய்களை வழங்கியுள்ளது. திரேந்திரர், தனது வயதைச் சொல்வதேயில்லை. அவரது பழைய நண்பர்கள் அவர் வயது 50-க்குள் எனக் கணித்தனர். இவர் அடிக்கடி பிரதமர் இந்திரா காந்தியின் வீட்டில் காணப்பட்டார்.

இவரோடு மஞ்சு - மாலா எனும் இரு அழகிகள் உடனிருந்தனர். தனது மனைவியுடன் சாமியார் விரும்பத்தகாத நிலையில் இருந்த காட்சியைத் தானே நேரில் பார்த்ததாக இவர் மீது பாதிக்கப்பட்ட ஒருவர் வழக்குக் கூடப் போட்டார். சஞ்சய் காந்தியும், சோனியா காந்தியும் இவர் ஆஸ்ரமத்துக்கு அடிக்கடி வருவார்கள். 1971 தேர்தல் முடிந்தபோது இந்தச் சாமியார் யோசனைப்படியே அமைச்சரவை அமைந்ததால் இவரது மதிப்பு மிக உயர்ந்தது. இந்தச் சாமியார் அழகி மஞ்சுவுடன், "எக்ஸ்போ" கண்டுகளிக்க ஜப்பானுக்குப் போய் வந்தார்.

ஒரு விலை உயர்ந்த டயோட்டா கார், ஒரு ஹெலிகாப்டர், ஒரு நகரும் நீச்சல் குளம், இன்னும் பல சன்மானங்களைக் கொண்டு வந்தார். அவைகளுக்கெல்லாம் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டது. பின்னர் சாமியார் ஜம்முவில் ஓர் அரண்மனை எழுப்பினார். அந்த இரம்யமான மாளிகை முழுவதும் சலவைக் கல்லால் ஆனது. தரையில் பர்சிய நாட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. இவருக்குத் தனி ஆகாய விமானமும் உண்டு. இவர் ஆஸ்ரமத்திலுள்ள ஓர் அழகியை விடியற் காலை 6 மணிக்கு அழைத்திருந்தார்.

அவள் கூச்சல் போட்டதால் ஆஸ்ரமத்திலிருந்து நீக்கப்பட்டார். இன்னொரு அழகியை ஜம்மு ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்றார். அவள் அங்கிருந்து திரும்பி வரும்போது கருச்சிதைவினால் பெரிதும் அவதியுற்றாள். 1977-ல் இந்திரா காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தேர்தலில் தோற்றவுடன் இவரது ஆஸ்ரமத்திலிருந்து அவசரமாக அகற்றப்பட்ட பணம் 500 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது."

"இந்தியா டுடே" அப்போது வெளியிட்ட இந்தத் தகவல்களை நான் நினைவூட்டுவதற்குக் காரணமே; பண்டித நேருவுக்குப் பிறகு மத்திய அரசிலும் சில மாநில அரசுகளிலும் திரேந்திர பிரம்மச்சாரி போன்ற ராஜகுருக்களின் அட்டகாசம் அதிகமாகிவிட்டது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே! மத்தியில் அமைச்சர்களின் பிரச்சினைகளுக்கும் மாநில அமைச்சர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவும்; அது குறித்து ஆரூடங் கணிக்கவும் சாமியார்களும், சோதிடர்களும் பெருகிக் கொண்டே இருந்தார்கள்.

குடியரசுத் தலைவரிலிருந்து குட்டிக் குட்டிப் பதவிகளில் இருப்போர் வரையில் மடங்களையும் சாமியார்களையும் நம்பித் தங்களது எதிர்காலத்தை ஒப்படைத்துக் கொண்டார்கள். மக்களின் எதிர்காலம் ஒளிமயமாவது குறித்து அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பதவி இல்லாதவர்கள், பதவி கிடைக்குமா என்பதற்கும் கிடைத்தவர்கள் அந்தப் பதவியில் உயர்வு கிடைக்குமா என்பதற்கும் குறைந்தபட்சம் அப்பதவி நீடிக்குமா என்பதற்கும் மடங்களையும் ஆஸ்ரமங்களையும் நாடினர்.

இது ஏதோ கடந்த காலச் செய்தி மட்டுமல்ல; இதனை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முடைநாற்றமெடுத்த மூடத்தனமான செயல் என்று கூறினால் அது முற்றிலும் உண்மையான ஒன்றாகும். மன்னர்கள் காலத்தில் தலையையும், தாடியையும் மழித்துக் கொண்டோ, அல்லது நீட்டிக் கொண்டோ தெய்வத்தின் அவதாரங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த அரச குருக்கள் மக்களாட்சிக் காலத்திலும் திரேந்திர பிரம்மச்சாரிகளின் உருவிலே மத்திய மாநில அரசுகளில் கொலு மண்டபங்களிலே பகிரங்கமாக ஆதிக்கம் செலுத்தாவிடினும் முக்கிய பிரதானிகளின் மாளிகையில் மந்தகாச வாழ்வு நடத்தினர்.

இன்னமும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குச் சிறிய அளவில் ராஜ போகங்கள் என்று சில இடங்களிலும் உலகளாவிய வகையில் ராஜ போகம் என்று ஒருசில இடங்களிலும் வலுவில் கிடைப்பதையும் காண முடிகிறது. அந்த நிலை தமிழகத்திலும் உருவாகி; ஜுன் திங்கள் 15-ந் தேதியன்றே தேர்தல் முடிவுகள் வெளி வந்தபோதும் கூட; ஜுன் 30-ந் தேதி வரையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதை எம்.ஜி.ஆர். அவர்கள் படப்பிடிப்பைக் காரணம் காட்டி நிறுத்தி வைத்திருந்தார் எனினும் பின்னணிக் காரணமாக மடங்களும் சாமியார்களும் சோதிடங்களுமாகத்தான் இருந்தன என்பது விரைவில் தெரிய வந்தது.

இதற்கிடையே நண்பர் ப.உ.சண்முகம் எம்.எல்.ஏ. அவர்கள் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜுன் 24 அன்று பாராளுமன்றத்தில் கழகச் சார்பில் ஒரே உறுப்பினராக இருந்த நண்பர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்கள்; ஜனதா ஆட்சியில் இந்தி ஆதிக்கம் தலை நீட்டுவதுபோல் தெரிகிறது என்பதைச் சுட்டி காட்டியதோடு; "இந்தியா ஒரு நாடல்ல! ஒரு உபகண்டம்! பல மொழிகளைப் பேசுவோர் இந்த அவையில் உள்ளனர். ஒரு மொழி ஆதிக்கத்திற்கு யாரும் எப்போதும் உடன்படமாட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசவும், தமிழில் கேள்விகள் கேட்கவும் இந்திக்கு உள்ள வசதிபோல் எல்லா இந்திய மொழிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார். ஆசைத்தம்பி வாயிலாக அன்று எழுப்பப்பட்ட கழகக் குரலின் விளைவாகத்தான் நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு வசதிக்குத் தொடக்கமே செய்யப்பட்டது. ஒரு குரலாயினும் கழகத்தின் குரல் உறுதியான குரலன்றோ?