நெஞ்சுக்கு நீதி
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் · 235 / 391
18. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் "ச ட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் ஜனதா உறவு தொடருமா?" என்ற பம்பாய் நிருபர்களின் கேள்விக்கு பிரதமர் மொரார்ஜி தேசாய் அளித்த பதில் "அதெல்லாம் முடிந்துவிட்டது. இப்போது கூட்டு இல்லை" என்பதுதான். பிரதமரின் பதில் குறித்து சென்னையில் நிருபர்கள் என்னைக் கேட்டபோது நான் அளித்த பதில்:- "தோழமைக் கட்சிகளின் தேர்தல் உறவை முறித்துக்கொள்ள எந்த நேரத்திலும் தி.மு.க.
காரணமாக இருந்ததில்லை. தேர்தல் உறவு கொண்ட தோழமைக் கட்சிகளின் வெற்றிக்கு, உணர்வு பூர்வமாக தி.மு.க. உழைத்து வந்துள்ளது. அதற்குக் கிடைக்கும் பரிசுகளையும் அது மனம் புண்படாமல் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கிறது. எந்த நிலைமையையும் தி.மு.க. சமாளிக்கும்" என்பதுதான். கழகத்துடன் தேர்தல் உடன்பாடு கொள்ள எந்தக் கட்சி முன்வருகிறது என்பது பற்றியோ எந்தக்கட்சி முன்வரவில்லை என்பது பற்றியோ கவலைப்பட்டுக்கொண்டிராமல் "சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும்" எனும் பழ மொழியை மனத்திற் கொண்டு கழகத்தின் அமைப்புரீதியான பணிகளில் தலைமை தனது முழுக்கவனத்தையும் செலுத்தியது.
7.5.1977 அன்று கழகச் சார்பில் கழகத்திற்குத் துணை அணிகளில் ஒன்றாக "இலக்கிய அணி" அமைக்கப்பட்டது. தமிழ் மொழி, இன உணர்வு, தமிழர் கலாச்சாரம், வரலாறு இவற்றுடன் பகுத்தறிவு பரப்பும் பணியை இலக்கிய அணி மேற்கொள்வதென்று முடிவு செய்யப்பட்டுத் தலைமை அணிக்கான நிர்வாகிகளின் பெயர்கள் சென்னையில் கூடிய அமைப்புக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தலுக்கான ஆட்சி மன்றக் குழுவினரின் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஜூன் திங்கள் 12 மற்றும் 14 தேதிகளில் நடைபெறுமெனவும் ஜூன் 15-ஆம் நாள் தேர்தல் முடிவுகள் வெளியாகுமெனவும் தேர்தல் கமிஷன் அறிவித்ததையொட்டிக் கழக வேட்பாளர்கள் தேர்வு விரைவுபடுத்தப்பட்டது. கழகத் தேர்தல் நிதி திரட்டுவதற்குக் குறிக்கப்பட்ட நாட்களில் சென்னையில் உள்ள இளைஞர் அணித் தம்பிகள் பலர், பல பகுதிகளில் "பூட் பாலிஷ்" இயக்கம் நடத்தி வசூல் செய்தனர். கழகத்தின் சிறப்பு மாநாடு மே 15 அன்று மதுரையில் கோலாகலமாக ஆரம்பமானது.
அன்றுதான் மதுரை செல்லூர் நந்தவனம் எனுமிடத்தில் கழகத்தின் பொதுக்குழுவும் கூடியது. பொதுக்குழு உறுப்பினர்கள் 577 பேரில் 462 பேர் வருகை தந்தனர். சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர். கழகத்தின் புதிய பொதுச் செயலாளர், புதிய பொருளாளர் தேர்தல் அந்தப் பொதுக்குழுவில் நடைபெற்றுப் பேராசிரியர் அவர்கள் பொதுச்செயலாளராகவும், சாதிக் பாட்சா அவர்கள் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரையும் பாராட்டி நானும், மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங்கம், புலவர் கோவிந்தன், திருவண்ணாமலை முருகையன், ஏ.வி.பி.
ஆசைத்தம்பி, சி.வி.எம். அண்ணாமலை, ப.உ. சண்முகம், அலமேலு அப்பாதுரை, து.ப. அழகமுத்து, முரசொலி மாறன், இளமுருகுபொற்செல்வி, வை. கோபால்சாமி, தி. திராவிடமணி, ஜி. பராங்குசம், எஸ். எஸ். தென்னரசு, நாகூர் அனிபா, ஓ.பி. இராமன், மு. கண்ணப்பன் ஆகியோரும் பேசினோம்! பொதுச்செயலாளர் அவர்களால் தரப்படும் பொறுப்புகளை நிறைவேற்றத் துணைப் பொதுச்செயலாளர் ஒருவரைப் பொதுச் செயலாளர் நியமித்துக்கொள்ளலாம் என்று கழகச் சட்டதிட்டத்தில் ஒரு திருத்தம் செய்து சேர்க்கப்பட்டது.
மதுரைச் சிறப்பு மாநாடு இலட்சக்கணக்கான மக்கள் திரண்ட எழுச்சி மாநாடாக அமைந்தது. அ.தி.மு.க.வுடன் சேர்ந்து நின்று தி.மு.கழகத்தின் மீது புகார்ப்பட்டியல் தயாரித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் எம். கல்யாணசுந்தரம் அவர்கள், சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் தங்களை நடத்தியவிதம் சரியில்லையென அறிக்கை விடுத்துச் சட்ட மன்றத் தேர்தல் உடன்பாடு அ.தி.மு.க.வுடன் கிடையாது என அறிவித்து காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு கொண்டு போட்டியிடப் போவதாக மே திங்கள் 14-ஆம் நாளன்று அறிவித்தார்.
மதுரை மாநாட்டில் வெளியிடப்பட்ட தேர்தல் பிரகடனத்தில் கழகம் மாநில சுயாட்சிக் கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பும் எனறும், இருமொழிக் கொள்கையில் மாற்றத்திற்கே இடம் தராது என்றும், மற்றும் சமதர்ம சமத்துவத திட்டங்களையும் அறிவித்துக் கழக வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தேன். அந்த மாநாட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் இன்றைய தினம் தமிழ்நாட்டை, தமிழினத்தை, தமிழ் மொழியைக் காக்கின்ற ஒரே கட்சியாக தி.மு.கழகம் தானிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
1977 சட்ட மன்றத் தேர்தலில் (நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்துடன் உடன்பாடு கொண்டிருந்த) ஜனதாக்கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கழகத்துடன் உடன்பாடு கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டன. காங்கிரசானாலும், அ.தி.மு.க. ஆனாலும், ஜனதா ஆனாலும், மார்க்சிஸ்ட் கட்சி ஆனாலும் கழகத்திற்குச் சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடம் கூடக் கிடைக்காது என்றே எண்ணின. அவ்வாறே பிரச்சாரம் செய்தன. கழகத் தேர்தல் பிரச்சார இயக்கம் முடுக்கிவிடப்பட்டது.
25.5.77 அன்று முரசொலியில் கழக உடன்பிறப்புகளுக்குக் கடிதமொன்று எழுதினேன். "உடன்பிறப்பே, இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். உன் சுடர் விழிகளைக் கண்டுகளிப்பேன். நீ சுழலும் பம்பரமாகத் தேர்தல் பணி ஆற்றுவதை நேரிலேயே பார்த்து மகிழ்வேன். நான் உன்னை அடிக்கடி கேட்டுக்கொண்டதைப் போல் இப்போதும் கேட்டுக்கொள்கிறேன். பாசமிகுதியால் என்னைத் தயவு செய்து பந்தாடாதே! குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைத் தவிர நீ கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் நான் வந்தே தீர வேண்டுமென்று பிடிவாதம் செய்யாதே!
ஒரு ஊரில் என் நிகழ்ச்சி திசை திருப்பப்பட்டுவிட்டால் முழுமையாகச் சுற்றுப்பயணத் திட்டமே நிலைகுலைந்து விடும். 230 இடங்களில் கழகத்தினர் தேர்தல் களத்தில் நிற்கின்றனர். (ஏனைய நாலு இடங்களில் கிள்ளியூரில் விமான விபத்தில் மறைந்த காங்கிரஸ் தியாகி பொன்னப்ப நாடாரின் மகனை எதிர்த்துக் கழகம் போட்டியிடவில்லை. மூன்று இடங்களில் கழக ஆதரவு பெற்றவர்கள் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்கள்) தேர்தலில் போட்டியிடுகிற எல்லாத் தொகுதிகளுக்கும் சென்றிட இயலவில்லை.
அதற்கு நாட்கள் போதவில்லை. பல வேட்பாளர்கள், தங்கள் வெற்றிக்குப் பிரச்சாரத்தை மட்டுமே நம்பி உள்ளனர். வசதி படைத்தவர்கள், தேர்தல் செலவு தாராளமாச் செய்யக் கூடியவர்கள் யாரும் நமது கழக வேட்பாளர்களிலே இல்லை. தலைமைக் கழகத்திலும் நிதித் தட்டுப்பாடு! பொதுவான சுவரொட்டிகளை அச்சிட்டு அனுப்பக்கூட முடியாத சூழ்நிலை! இவ்வளவு வசதிக் குறைவிலும்- நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும், கழக வேடபாளர்களாக நிற்க, "நான்!நீ!"
என்று போட்டி போட்டவர் எண்ணிக்கை மிக அதிகம் என்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். வேட்பாளர்களின் பட்டியலை ஒருமுறை பார்த்தேன். அவர்களில் மிசாக் கைதிகளாக அடைபட்டிருந்தவர்கள் மட்டும் நாற்பது பேர்! பட்டதாரிகள் நாற்பத்தி ஆறு பேர்! மாவட்டச் செயலாளர்கள் ஒன்பது பேர்! நகரச் செயலாளர்களும் பகுதிச் செயலாளர்களும் இருபது பேர்! எண்பதுக்கும் மேற்பட்டோர் பொதுக்குழு உறுப்பினர்கள்! இவ்வாறு கழகத்தின் செயல் வீரர்களாகவும், தியாக மறவர்களாகவும், கழகத்தை உயிரெனக் கருதும் தொண்டுள்ளம் படைத்தவர்களாகவும் நமது வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணிக்குப் பெருவாரியான வெற்றியை ஈட்டித் தருவது உன் பொறுப்பு. இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் பெற்ற அனுபவங்களையும், பாடங்களையும் மனத்திற்கொண்டு-நமது கழக மாமணிகள் வெற்றி பெற்றிட ஓயாது உழைத்திட வாராய் என் உடன்பிறப்பே! உன் உழைப்பில்தான் இருக்கிறது கழகத்தின் வெற்றி! உன்னைத்தான் நம்பியிருக்கிறது இந்தக் கழகம்!"
இக்கடிதத்தை எழுதிவிட்டுத் தமிழக முழுதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். எந்த ஜனதாக் கட்சியின் தலைவர்களைச் சிறை பிடித்தது கொடுமையென்று அறிவித்து, நெருக்கடியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றி, அதன் காரணமாகவே ஆட்சி கலைக்கப்பட்டு, நாடளுமன்றத் தேர்தலில் ஜனதாவுடன் உடன்பாடு கொண்டு உழைப்பைத் தந்து பாடுபட்டோமோ அந்த ஜனதா கட்சி தேர்தலில் தனித்து நின்றது. எமர்ஜன்சி எதிர்ப்பிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நமது கழகத்துடன் உடன்பாடு கொண்டிருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, எமர்ஜன்சியை உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஆதரித்த எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.கட்சியுடன் உடன்பாடு கொண்டு தேர்தல் களத்தில் நின்றது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு கொண்டது. இந்திரா காங்கிரசும், இந்திய கம்யூனிஸ்டும் தேர்தல் உடன்பாடு கொண்டு செயல்பட்டன. மணலி கந்தசாமி அவர்களின் தலைமையில் அமைந்து ஏ.கே. சுப்பையா அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்ட தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சி கழகத்தை ஆதரித்தது. வேறு சில அமைப்புகள் கழகத்தை ஆதரித்தன. திராவிடர் கழகம் தி.மு.க.வுக்குத் தேர்தலில் முழு ஆதரவு தந்தது. அதன் பொதுச் செயலாளர் தளபதி வீரமணி விடுத்த அறிக்கையில்; "தந்தை பெரியார், அண்ணா ஆகியவர்களின் உயிர்க் கொள்கையான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ இட ஒதுக்கீடே தேவையில்லை என்று கூறுகிற அ.இ.அ.தி.மு.க.
பதவிக்கு வருமானால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்கால நிலைக்காக நாம் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்காலம்தான் பொற்கால ஆட்சிக் காலமாகும். எனவே தி.மு.கழகத்தைத் தமிழ்ப் பெருமக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டதோடு, தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். நான் ஒவ்வொரு நாளும் பத்து அல்லது பதினைந்து கூட்டங்களிலும், ஐம்பதுக்கு மேற்பட்ட ஊர்களுக்குச் சென்று வேனில் நின்று பிரச்சாரம் செய்வதிலும் ஈடுபட்டு ஒரு நாளில் ஓரிரு நிமிடங்களே உறங்குவது போல் கண்ணை மூட முடிந்தது.
பல கருத்து வேறுபாடுகளினால் சில காலம் பிரிந்திருந்த என் நண்பர் கவியரசு கண்ணதாசன், எனது பிறந்த நாள் கவியரங்கில் கவிதை பாடும்போது "தி.மு.கழகத்தின் எதிர்காலமே தமிழகத்தின் எதிர்காலம் என்றும், கூட இருப்பவர்களைக் கடைசி வரையில் காப்பாற்றுகிற தலைவர் கலைஞர் கருணாநிதி ஒருவர்தான், எனவே அவர் தலைமையில் உள்ள கழகத்திற்கு வெற்றி கிட்ட வேண்டும்" என்றும் உரைத்திட்டார்.
ஜூன் 15 ஆம் நாள் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின. கழகம் ஒரு இடம் கூடப்பெற முடியாது எனக் கருதி ஓடிவிட்டவர்கள் வெட்கப்படுமளவுக்குக் கழகம் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பைப் பெற்றது. அ.தி.மு.க.129, தி.மு.க. 48, ஜனதா 10, இ.காங்கிரஸ்.27, மார்க்சிஸ்ட் 12, இந்திய கம்யூனிஸ்டு 5, பார்வர்டு பிளாக் 1, மு.லீக் 1 என்ற எண்ணிக்கையில் கட்சிகள் வெற்றி பெற்றன. தி.மு.கழகமும், ஜனதா கட்சியும் உடன்பாடு கொண்டு தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இரண்டு கட்சிகளும் சேர்ந்து 137 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்கிற அளவுக்கு இரண்டு கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டிப் பார்த்தபோது புரிந்தது.
ஜனதா கட்சி அப்போதுதான் தனது தவற்றை உணர்ந்து கொண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் மாறுபாடான முடிவெடுக்காமல் இருந்திருந்தால் 150-க்கு மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்க முடியும். அதிகார பூர்வமான புள்ளி விவரப்படி அ.தி.மு.க.கட்சிக்கு 30.36 சதவிகிதமும், தி.மு.க.வுக்கு 24.89 சதவிகிதமும், காங்கிரசுக்கு 17.53 சதவிகிதமும் வாக்குகள் கிடைத்திருந்தன.
