நெஞ்சுக்கு நீதி
ஈழத் தமிழர் உரிமைப்போர் · 234 / 391
17. ஈழத் தமிழர் உரிமைப்போர் ஈழத் தமிழர் தந்தை செல்வநாயகத்தின் மறைவு குறித்து, "இலங்கைத் தமிழரின் இணையற்ற செல்வம்" என்ற தலைப்பிட்டு 28.4.77 அன்று முரசொலியில் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் வருமாறு:- "படுக்கையின் ஓரத்தில் இருந்த தொலைபேசி நள்ளிரவு பனிரெண்டு மணியளவில் ஒலித்தது. இலங்கையிலிருந்து வந்தது குரல். சுதந்திரன் பத்திரிகை நண்பர் மகேசன் தழுதழுத்த தொனியில் அந்த அதிர்ச்சிக்குரிய செய்தியைச் சொன்னார்.
செல்வா மறைந்து விட்டார். இலங்கைத் தமிழர்களின் செல்வம் மறைந்துவிட்டது. அந்தோ! இலங்கையில்தான் அடுக்கடுக்கான எத்தனை வேதனைகள்! தமிழர்களின் உணர்ச்சி விளக்காக ஒளிவிட்டுக் கொண்டிருந்த திருச்செல்வம் பிரிந்தார். தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய பொன்னம்பலமும் திடீரென மறைந்தார். இதோ, அள்ள அள்ளக் குறையாத அரும்பெரும் செல்வமாம் ஈழத்துத் தந்தையையும் இழந்துவிட்டோம். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரோடு வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்த இலங்கைத் தமிழர்களுக்கு இவரன்றோ, போர்வாளாய் - கேடயமாய்த் திகழ்ந்தார்.
அங்கு எத்தனை அடக்குமுறைகளைத் தமிழர்கள் ஏற்க வேண்டியிருந்தது. தூண்டிவிடப்பட்ட கலவரங்கள் பலவற்றில் தூண்டில் மீன்களாய்த் தமிழ்க் குலத்தைச் சார்ந்த ஆடவரும் பெண்டிரும் அவதிப்பட்டுத் துடித்திட்ட போது அவர்களுக்குத் துணை நின்ற "காவல் தெய்வம்" என்ற நிலையில் அல்லவா செல்வா அவர்களின் தொய்வில்லாத் தொண்டு அமைந்திருந்தது. பசப்பு மொழி பேசி அவரைத் தம்பக்கம் இழுத்திட நினைத்தோர் - பதவி சுகம் காட்டி அவரது பகையைத் தவிர்த்திட முனைந்தோர் - அவர்கள் யாருக்கும் வணங்காத தலையினனராக - வைர நெஞ்ச வேங்கையாக - கொண்ட கொள்கையில் குன்றென நிமிர்ந்து நின்று இறுதி மூச்சு போகும் வரையில் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வு ஒன்றையே எண்ணிக் கொண்டிருந்தார் அந்த ஈழத்துப் பெருந்தமிழர்.
மூன்று நான்கு ஆண்டுகட்கு முன்பு தமிழகம் வந்திருந்தார். எங்களையெல்லாம் சந்தித்தார். எலும்பினால் மட்டுமே உரு- வானதோ அந்த உடல் என வியக்கத்தக்க அளவுக்கு அவ்வளவு இளைத்திருந்தார் எனினும், இலங்கைத் தமிழர்களுக்காகப் போர் தொடுப்பதில் களைத்திருந்தார் என்று எவரும் கூறிட இயலாது! உலகெங்கும் பரந்து கிடக்கும் தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாக நமது தி.மு.கழகம் இருப்பது கண்டும், அந்தத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகத் தேவைப்படும் பொழுதெல்லாம் குரல் கொடுப்பது கண்டும் - அவர் அடைந்திருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இலங்கையில் தமிழர்கள் அவதிக்கு ஆளானபோது அறிஞர் அண்ணா அவர்களின் காலத்தில் தி.மு.க. நடத்திய இலங்கைத் தமிழர் ஆதரவுப் பேரணியும், அதன் பின்னர் இலங்கை வாழ் தமிழர்களின் துன்ப துயரங்களைப் போக்கத் தி.மு.கழகம், இந்தியப் பேரரசிடம் முறையிட்டு ஆவன செய்திடுமாறு கேட்டுக் கொண்டதையும் மறைந்துவிட்ட தமிழர்களின் மாணிக்கமாம் செல்வா அவர்கள் நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்ந்திடத் தவறியதே இல்லை. இலங்கையே அழுது கொண்டிருக்கும் இன்று!
ஏன்; தமிழன் எங்கெங்கு வாழ்கிறானோ அங்கெல்லாம் அவனது இல்லம் இருள் சூழ்ந்துதான் கிடக்கும். உள்ளம் அழுதுகொண்டுதான் இருக்கும். இங்கே கடந்த 15-ஆம் தேதியன்று கழகம் பிரச்சினைக்கு உட்பட்டபோதுதான், செல்வாவின் உடல்நிலை பற்றிக் கவலை தரும் செய்தி இலங்கையிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இலங்கை வாழ் தமிழர்களின் அன்புக் கட்டளையை ஏற்று நரம்பியல் மருத்துவ மேதை இராமமூர்த்தி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளைச் செய்தோம்.
அவரும் மிக்க ஆர்வமுடனும், அக்கறையுடனும் அந்தப் பணியினை ஏற்றுத் தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்துவிட்டுத் திரும்பினார். இலங்கையில் உள்ள மருத்துவ மேதைகளும் செல்வாவின் உயிரை மீட்க அரும்பாடுபட்டு அயராது உழைத்தனர். ஆனால், காலம், தன் முழு வல்லமையைக் காட்டிச் செல்வநாயகம் அவர்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டது. செல்வா, மறைந்துவிட்டார் எனினும் அவரால் உருவாக்கப் பட்ட ஆற்றல்மிகு தலைவர்கள், தளபதிகள், வீரக்கவிஞர்கள், இலட்சியக் காளைகள் பலர் இருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்காகச் செல்வா ஆற்றிய பணியை அவர் வழியில் மற்றவர்கள் தொடர்வார்கள். அவர் காத்திட்ட அமைதி - தமிழர் சிங்களவரிடையே பகை மூளாமல் தவிர்த்திடவும் அதே நேரத்தில் தமிழர்களின் நல்வாழ்வுக்கு வழி அமைத்திடவும் அவர் ஓயாது வழங்கிய உழைப்பு - இவை, என்றென்றும் அந்தத் தியாகச் செல்வத்தை உலகத் தமிழர்களின் நெஞ்சத்தில் அணையாத தீபமாக ஆக்கி வைத்திருக்கும் - என்பது மட்டும் உறுதி!"
செல்வா ஆற்றிய பணியை அவர் வழியில் மற்றவர்கள் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையையும், தொடர வேண்டும் என்ற ஆவலையும் நான் கொண்டிருந்தேன். எனினும் தந்தை செல்வநாயகத்தின் வழி ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்குச் சிங்கள அரசும், சிங்கள ஆதிபத்தியவாதிகளும் உரிய மரியாதை தர முன்வராத காரணத்தாலும் - தமிழர்களுக்கு உரிமை தர மறுத்தது மட்டுமின்றி, தமிழின மக்களைச் சிங்களவரும் சிங்கள இராணுவத்தினரும் கொடுமையாக வேட்டையாடத் தொடங்கியதாலும், அற வழியில் அகிம்சைப் போர் நடத்திய நிலையிலிருந்து தமிழ் இளைஞர்கள் ஆயுதந்தாங்கிப் போரிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு - அப்படி அணிதிரண்ட தமிழ் போராளிகளிடையே தமிழர்களின் ஒரு பெருங்குணமான(?)
ஒற்றுமையின்மையும் தலைதூக்கிப் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பலியாகியும், இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வரவுமான கொடுமை விளைந்து விட்டது. இந்த அத்தியாயத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும் 1992-ஆம் ஆண்டு வரையில் இலங்கைத் தமிழ்ப் போராளிகளில் ஒரு பிரிவினரான விடுதலைப் புலிகள், பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைக்காக களத்தில்தான் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசும் குறிப்பாகத் தமிழகமும் அந்தப் போராளிகளுக்குப் பல வகையிலும் துணை நின்றும் கூட; சந்தர்ப்ப சூழல் - போராளிகள் தங்களுக்குள்ள பிரச்சினைகளைத் தமிழகத்தில் வன்முறை மூலம் ஒருவருக்கொருவர் தீர்த்துக்கொள்ள முயன்றதும், அமைதி காப்பதற்கென இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்தியப் படையும் விடுதலைப்புலிகளுமே மோதிக் கொள்கிற எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டதும்....
இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களும்... முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி கொலையில் பிரபாகரனும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதுமான இந்த நேரத்தில்தான்; 15 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்ட செல்வநாயகம் அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் என எண்ணிப் பார்க்கிறேன். ஏனெனில் ஈழத்தமிழ் இளைஞர்களின் உணர்ச்சிக்குச் சரியான வடிவம் கொடுக்கவும், அவர்களிடையே ஒற்றுமையை வலுவுள்ளதாக ஆக்கிடவும், அறிவும் - ஆற்றலும் - செல்வாக்கும் - அனுபவமும் வாய்ந்த செல்வநாயகம் போன்ற முது பெரும் தலைவர்கள் இல்லாமற் போனது உரிமைப் போராட்டத்திற்கு ஒரு பெருங் குறைதான் என்பதை நன்றாக உணர முடிகிறது.
மறைந்த செல்வாவுக்கு இறதி அஞ்சலி செலுத்திட நண்பர் ப.உ. சண்முகம், ஆற்காடு வீராசாமி, இருவரும் கழகப் பிரதிநிதிகளாக இலங்கை சென்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்களைக் கட்சிகள் செய்து கொண்டிருந்தபோதுதான்; 1977 மே திங்கள் இரண்டாவது வாரத்தில் ஸ்பெயின் நாட்டு வீராங்கனை "டோலரஸ் இப்பாரூரி" என்பார் 38 ஆண்டுகள் மாஸ்கோவில் அடைக்கலம் பெற்று வாழ்ந்துவிட்டுத் தனது தாயகமான ஸ்பெயினுக்குத் திரும்பினார்.
பொதுவுடைமைக் கருத்துக்களை ஏந்திய உள்ளத்துக்குச் சொந்தக்காரி அந்த வீராங்கனை! ஸ்பெயின் நாட்டு சர்வாதிகாரி பிராங்கோவின் இராணுவத்திற்கு எதிராகத் தனது கனல் தெறிக்கும் பேச்சால் அறைகூவல் விடுத்தவர் அவர்! "மண்டியிட்டு வாழ்வதைவிடச் சண்டையிட்டு மடிவதே மேல்!"
என முழங்கியவர். தனது 43-வது வயதில் ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தத்திற்குத் தூண்டுகோலாக இருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு நாடு கடத்தப்பட்ட அந்தப் பெண்மணி; தனது 81-வது வயதில் மூதாட்டியாக ஸ்பெயினுக்குத் திரும்பி அரசியலில் மீண்டும் ஈடுபடலானார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் சர்வாதிகாரி பிராங்கோவுக்கு எதிரான கூட்டணியின் தலைவர் அடால்போ சூராஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு மே திங்கள் முதல் வாரத்தில் உலகத்தின் தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளின் தலைவர்கள் இலண்டன் மாநகரில் கூடி உலகில் ஏற்பட இருக்கும் பொருளாதார நெருக்கடிகளையும், குழப்பங்களையும் தீர்ப்பது குறித்து விவாதம் நடத்தினர்.
அமெரிக்கா, பிரான்சு, மேற்கு ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்துப் பிரதமர் கல்லகன் தலைமையில் அந்த மாநாட்டில் பங்கேற்று, வேலை இல்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பது-பணவீக்கத்தைக் குறைப்பது- நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது-போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. மாநாட்டில் கலந்து கொண்ட ஏழு நாடுகளிலும் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்பது சுட்டிக் காட்டப்பட்டுக் கவலை தெரிவிக்கப்பட்டு அமெரிக்க அதிபர் கார்ட்டர் அதற்கான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்லகன் கேட்டுக் கொண்டார்.
(We must act as well as talk) செயலும் வேண்டும் பேசவும் வேண்டுமென கார்ட்டர் தெரிவித்தார். ஏழு நாடுகளில் ஒன்றரைக் கோடிப் பேர் வேலையில்லாதோருக்காக 1977-லேயே அந்நாட்டுத் தலைவர்கள் கவலைப்பட்டுக் காரியத்தில் இறங்கினர். நாம் இங்கே இந்தியாவில் ஒரே நாட்டில் எத்தனை கோடிப்பேர் வேலையில்லாமல், "சாலையோரத்திலே வேலையற்றதுகள்! வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்!"
என்று அண்ணா சொன்னதற்கேற்ப; வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைப்பதற்கே நெஞ்சம் கனக்கிறது! 1977 மே திங்கள் 15-ஆம் நாள் தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெறுமெனக் கழகத் தலைவர் என்ற முறையில் நான் அறிவித்ததையொட்டி, பேராசிரியர் (அன்பழகன்) அவர்களின் பெயரை முன்மொழிந்து நண்பர் ப.உ. சண்முகம் அவர்களும், வழிமொழிந்து சிறுகதை மன்னன் எஸ்.எஸ். தென்னரசு அவர்களும் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் கையொப்பமிட்ட விண்ணப்பங்கள் தலைமைக் கழகத்திற்கு வந்தன.
இதற்கிடையே மே 10-ஆம் நாள் கழகத் தேர்தல் நிதி திரட்டும் நாளாக அறிவிக்கப்பட்டு நாடெங்கும் உண்டியல் ஏந்தி வசூல் செய்யப்பட்டது. மதுரையில் தி.மு.க. சிறப்பு மாநாட்டினை மே 22-ஆம் நாள் நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாகத் தொடங்கப்பட்டன. மே 2-ஆம் நாள் புதுடெல்லியில் நிருபர்களிடமும், வானொலியிலும் பேசிய ஜனதா கட்சியின் தலைவர் சந்திரசேகர் அவர்கள், "ஜனதா கட்சியானது இதர கட்சிகளோடு ஏற்கனவே கொண்டிருந்தது போன்ற தேர்தல் உடன்பாடு வருகிற சட்டசபைத் தேர்தல்களுக்கும் ஏற்படும்.
எந்தெந்தக் கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு கொண்டோமோ; அதே கட்சிகளுடன் அதே முறையில் இப்போதும் உடன்பாடு அமைய வேண்டுமென விரும்புகிறோம்" என்று அறிவித்தார். அதே நாளில் மீரட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சரண்சிங் அவர்கள், "வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனதா, தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையேயான தேர்தல் உடன்பாடு தொடரும், அத்தகைய உடன் பாட்டுக்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன" என்று தெரிவித்தார்.
ஆனால், வடக்கேயிருந்த அந்தத் தலைவர்களின் கருத்துக்கு மாறாக, தமிழ்நாட்டில் ஜனதா கட்சித் தலைவர்களும், மார்க்சிஸ்ட் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு கொள்வது குறித்து "மதில்மேல் பூனை போல்" இருந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். அதனையொட்டி நான் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது; "நம்மோடு கூட்டுச் சேருவதால் மற்ற கட்சியினருக்குக் கஷ்டமோ நஷ்டமோ விளைவதாக அவர்கள் எண்ணுவார்களேயானால் கூட்டுச் சேர்ந்துதான் தீரவேண்டுமெனக்கோரி யாருக்கும் தொல்லை தரமாட்டோம்.
நமக்கு இருக்கவே இருக்கிறது நமக்கென ஒரு வழி. நீங்கள் இருக்கிறீர்கள். நாங்கள் இருக்கிறோம். அண்ணா தந்த கொடி இருக்கிறது. அவர் தந்த கொள்கை இருக்கிறது. அவ்வழி நடப்போம்" என்று குறிப்பிட்டேன். மே 5-ஆம் நாள் புதுடெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில், "நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்பதில் சந்தேகமில்லை" என வாசகம் அமைந்த தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டது.
அந்தக் கூட்டத்திற்கு மிகுந்த சோகத்துடன் தாமதமாக வந்த இந்திரா காந்தி சிறிது நேரமே உரையாற்றினார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அதற்கு மறுநாள் மே 6-ந் தேதி பிரதமர் மொரார்ஜி தேசாயை பம்பாயில் பேட்டி கண்ட நிருபர்கள்; "நாடாளுமன்றத் தேர்தலைப் போலச் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. ஜனதா உடன்பாடு தமிழ்நாட்டில் தொடருமா?"
என்று கேட்டனர்.
