நெஞ்சுக்கு நீதி
தஞ்சைப் பொதுக்குழு · 233 / 391
16. தஞ்சைப் பொதுக்குழு பு துக்கட்சி உருவாக்கி அதற்கு "மக்கள் தி.மு.க." என்று பெயரிட்டு, பணம் பெருமளவுக்குச் செலவிடப்பட்டும், பத்திரிகைகளின் பலம் அந்தப் புதிய கட்சிக்கு அமோகமாகக் கிடைத்தும்கூட; நாவலரின் "ம.தி.மு.க."வை மக்கள் நாடவில்லை. கடையை விரித்தோம் கொள்வாரில்லை என்ற நிலைக்கு ஆளான அந்தக் கட்சி மிக விரைவில் தன்னைத்தானே கலைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்து, எம்.ஜி.ஆர்.
அமைச்சரவையில் நாவலரும் அவரது குழுவினர் ஓரிருவரும் பதவிபெற்றுப் பிறகு எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அவர்களின் துணைவியார் ஜானகி அம்மையார் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது ஜெயலலிதாவுடன் நாவலர் குழுவினர் சேர்ந்து ஜானகி அம்மையாரை எதிர்த்து, சட்டசபையில் இருகோஷ்டிகளும் இரத்தக்களரி யுத்தமொன்றையே நடத்தி, ஜானகியின் ஆட்சியை ஒரே மாதத்திற்குள் கவிழ்த்த பெருமை தனக்கே உரியதென மார்தட்டிய நாவலர் அவர்கள், சில மாதங்களில் ஜெயலலிதாவையும் பகைத்துக் கொண்டு அவரும் அவரது அணியினர் சிலரும் வெளியேறி - அந்த அணிக்கு நால்வர் அணி என்று பெயரும் சூட்டிக் கொண்டார்.
அந்த நால்வர் அணியை மிக இழிவான முறையில் வசைபாடிக் கண்டித்து ஜெயலலிதா நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியை நாவலர் கடுமையாகச் சாடி ஜெயலலிதாவை ஒரு பெண் என்றே ஏற்றுக்கொள்வது தவறு என்று நாடு முழுதும் மேடை போட்டுப் பேசினார். சில மாதங்கள் கழித்து மீண்டும் ஜெயலலிதாவுடன் சேருவதற்கு மனுப் போட்டார். இதற்கிடையே 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் நாவலர் நின்று கட்டுத் தொகையைக்கூட இழந்தார்.
அவரது நண்பர்களும் அவரைப்போலவே ஜாமீன் இழந்து மிகப்பெரும் தோல்விக்கு ஆளாயினர். அதன் பிறகு அவரது மனு பரிசீலிக்கப்பெற்று ஜெயலலிதாவின் கட்சியிலே அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அந்தக் கட்சியில் அமைச்சராகவும் ஆனார்! சுயமரியாதைச் சுடராக உதயமான நாவலர், எப்போதும் தொய்வில்லாமல் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டுமென்பதற்காக இடையில் நின்றுபோன தொடர்கதையானார்! ஆனால் அவரை விடுத்து; 1977லே கழகத்தினர் தொடர்ந்த பயணம் நிற்கவில்லை!
நிலைகுலையாமல் நடந்த வண்ணமிருந்தது. ஏப்ரல் 24-1977ல் தஞ்சையில் கழகத்தின் பொதுக்குழு மிக எழுச்சியுடன் கூடியது. நாவலரின் புதிய கட்சிக்கு அவரே பொதுச்செயலாளர் என்றும், க. ராஜாராம், எஸ். மாதவன், இராம. அரங்கண்ணல் ஆகியோர் செயலாளர்கள் என்றும் முடிவு செய்யப்பட்ட செய்தி பொதுக்குழுவில் இருந்த எங்களுக்குக் கிடைத்த காரணத்தால் நாவலரின் முடிவை முடிந்த முடிவாகக்கொண்டு அவர் அதுவரையில் கழகத்தின் சார்பாக ஆற்றிய பணிகளுக்கு பொதுக்குழுவில் நன்றி தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மிசாக் கைதிகளாகச் சிறையில் மாண்ட சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் குடும்பங்களுக்குக் கழகம் நிதி திரட்டி உதவியளிக்கும் தீர்மானமும் தஞ்சைப் பொதுக்குழுவில் நிறைவேறியது. மிசாக் கைதிகளுக்கு சென்னைச் சிறையில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென்று தமிழக ஆளுநரைக் கேட்டுக்கொண்டு மற்றொரு தீர்மானமும் தஞ்சைப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 566 பொதுக்குழு உறுப்பினர்களில் 493 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் 199 பேர் கலந்து கொண்டனர். அந்தப் பொதுக்குழுவில் பொருளாளர் பேராசிரியர் அவர்கள், கழகத்தில் ஏற்பட்ட நிலையை விளக்கி ஆற்றிய உரை கழக வரலாற்றில் மிக முக்கியமானது மட்டுமல்ல; பேராசிரியர் அன்பழகனார், மனதிற்பட்டதை ஒளிவு மறைவு இன்றிக் கூறக் கூடியவர் - அதே நேரத்தில் கழகத்தைச் சோதனைக்கு ஆளாக்க ஒருக்கணமும் நினையாதவர். அப்படி நினைப்பவர்களின் நிழலைக்கூட நெருங்குவதற்கு விரும்பாதவர் என்பதை எடுத்துக்காட்டிய உரையாகும்.
அந்த உரை பின்வருமாறு:- (சில பகுதிகள் மட்டும்) "தனி மனிதனுடைய சிந்தனைகளைக் கடந்து, சமுதாயத்தினுடைய மொத்த சிந்தனையை உருவாக்குகிற எண்ணங்கள் சிலரிடத்திலே சிலருக்குப் புகழை உருவாக்கித் தருகின்றன. புகழைத் தேடிக்கொண்டு போகிறவன் அந்தப் புகழை அடையப் போவதும் இல்லை. புகழையே மறந்து விட்டு கடமையாற்றுகிறவன் புகழைப் பெறாமல் போவதும் இல்லை. அப்படிப் புகழைப் பெறுகிறவர்கள் பல இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் புகழைப் பெறுவதும் உண்டு.
அது சில நாட்களுக்குப் பின்னாலே மறைவதும் உண்டு. சில நல்லறிவாளர்களுடைய பாராட்டையும், புகழையும் பெறுகிறவர்களும் உண்டு. அது பல ஆண்டுக் காலம் நீடிப்பதும் உண்டு. எனவே, இந்தப் புகழ் ஒருவன் தேடிக் கொண்டது என்று சொல்வதற்கு இடமிருக்குமானாலும் கூட அது தவறு அல்ல. ஆனால் தேடுகின்றவர்கள் எடுக்கிற முயற்சிகள் எப்படிப்பட்டது என்பது எண்ணிப் பார்க்கிறவர்களுக்குத்தான் தெரியும். இந்தப் புகழ் அந்த முயற்சிகள் இல்லாதபோது, அந்த தியாகம் இல்லாதபோது, அந்த ஆற்றல் இல்லாதபோது இந்தப் புகழ் ஒருவனைச் சேராது, ஒருவனிடத்திலே வந்து ஒட்டாது.
அப்படி ஒட்டிய ஒரு புகழ் இருக்குமானால் அது சில காலங்கள் கூட நீடிக்காது. எனவே கலைஞருக்கென்று ஒரு புகழ், அல்லது ஒரு பாராட்டு, அல்லது ஒரு அனுதாபம், அல்லது ஒரு ஆதரவு இந்த நாட்டு மக்களிடத்திலே இருக்குமானால் அது கலைஞருடைய வரலாற்றோடு கலந்த ஒன்றே தவிர, கலைஞருடைய தனிப்பட்ட விருப்பினாலே உருவாக்கப்பட்ட ஒன்றல்ல என்பதையும், கலைஞரது வரலாற்றோடு கலந்த ஒன்று என்று சொன்ன காரணத்தால் அந்தப் புகழ் அவருக்கே சொந்தம் என்று விட்டுவிடுவதாக நீங்கள் கருத வேண்டாம்.
கலைஞருடைய வரலாறு திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தொடர்பு உடைய காரணத்தால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் புகழ் என்று சொன்னால் அதுதான் உங்கள் சொத்தே தவிர, வேறு எதுவும் நம்முடைய சொத்து அல்ல என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால் இன்றைய தினம் நாவலர் தொடுக்கிற குற்றச்சாட்டு என்ன? "தனி நபர் புகழை வளர்த்துச் சர்வாதிகார ஆதிக்க முறைகளை ஊக்குவித்தது" தி.மு.க. என்றைக்கும் சர்வாதிகார வழியிலே நடந்ததில்லை, நடக்கவுமில்லை, நடக்கப் போவதுமில்லை.
தலைவராக இருக்கின்ற காரணத்தினாலேயே, தலைவர்கள் எல்லாம் சர்வாதிகாரம் செய்கிறார்கள் என்று சொல்வது தவறு. திருமதி இந்திராகாந்தி சர்வாதிகாரமாக நடந்தார்கள் என்று சொன்னால், அப்படி நடப்பதற்காக அவர் சட்டத்தையே திருத்தினார், மாற்றினார். நீதிமன்ற முடிவை ஏற்கமறுத்தார். நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார். பேச்சுரிமையைப் பறித்தார். எழுத்துரிமையைப் பறித்தார். அதற்குப் பெயர்தான் சர்வாதிகாரம்.
தலைவர் அவர்களை ஏதாவது ஒரு அதிகாரத்தை எடுத்துக் கொண்டார் என்று சொன்னால் இந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த அதிகாரத்தைச் சொல்லலாம். அந்த அதிகாரம் கூட அமைச்சரவையின் கூட்டு உரிமைக்கு உட்பட்டதே தவிர, தனிப்பட்ட அதிகாரம் அல்ல. ஒருவேளை அப்படிப்பட்ட அதிகாரத்திலே இருந்தும் அவருக்கு இப்படிப்பட்ட வல்லமை; புகழ் எப்படிச் சேர்ந்தது என்று சொன்னால் அந்தக் கேள்விக்கு விடைதான் கருணாநிதி என்ற பெயரே தவிர வேறல்ல.
வேறொருவர் அந்த இடத்துக்கு அவரை இழுத்து வந்தார் என்று பேசியவன்தான் நான்! இந்தப் பழைய கதையைப் பேசினால் தவறில்லை. கலைஞர் கருணாநிதியா அல்லது நாவலர் நெடுஞ்செழியனா - யார் சட்டமன்றக் கட்சியின் தலைவராவது - முதலமைச்சராவது என்ற பேச்சு எழுந்த நேரத்தில் - கலைஞர் அவர்களின் திறமையை இன்றைக்கு நான் உணர்ந்திருக்கிற அளவில் அன்றைக்கு நான் உணர்ந்திருந்தேன் என்று கருதவில்லை. ஆனால் உணராமல் இருக்கிற அளவுக்கு என்றைக்கும் நான் இருந்ததில்லை.
ஆகவே நாவலர் அவர்கள் வயதிலே மூத்தவர் என்ற காரணத்தால் அவர் முதல் அமைச்சராக இருந்து கலைஞர் கருணாநிதியின் முழுத்திறமையைப் பயன்படுத்தி ஆட்சி நடத்த வேண்டும் என நான் விரும்பினேன். என்றாலும் நான் எப்போதும் கையெழுத்து வாங்கிப் பழக்கமில்லை. நாலு பேருடைய தயவிலே ஒரு கருத்தை நிறைவேற்றலாம் என்று எண்ணியதுமில்லை. எனவே, நாலு பேரை அந்த ஆர்வத்துக்கு உடன் சேர்த்துக் கொள்ளவில்லை. சிலர் மட்டும் இந்த எண்ணத்தை வெளியிட்டார்கள்.
நான் அப்பொழுதும் சொன்னேன். நாவலர் அவர்கள் கலைஞரைச் சந்தித்துப் பேசி ஒரு நல்ல முடிவை உருவாக்கினால் அதை வாவேற்கலாம் என்றேன். இடையிலே சிலர் தலையிட்டு - 1969-ஆம் ஆண்டு - நீங்கள் தலைவராகி முதல்வரானால் இந்தப் பிரச்சினை தீரும் என்றார்கள். நான் அவர்களுக்குச் சொன்ன ஒரே பதில் - அவர்கள் இருவரும் ஒருவர் பொதுச்செயலாளராக இருந்தவர், இன்னொருவர் கட்சியின் பொருளாளராக இருந்து கட்சிக்குப் பெருநிதி திரட்டியவர்.
இருவருக்கும் இரண்டு தகுதி இருக்கிறது. எனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நான் என்னுடைய தகுதியை இழந்து விட்டுப் புதிய தகுதியை விரும்பவில்லை என்றுதான் சொன்னேன். ஆனால் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சரான இரண்டு ஆண்டுக் காலத்தில் அவருடைய திறமையும் ஆற்றலும் கழகத்திற்குப் பயன்பட்டதைப் பார்த்த பின்னாலேயே, நாவலர் அவர்கள் அந்த இடத்திலே அமரவில்லை என்றாலும், கலைஞரை அந்த இடத்திலே அமர்த்தியதிலே ஒரு நியாயமும் பொருத்தமும் இருக்கிறது.
இது கழகத்துக்கு வலிவு என்று கருதத் தொடங்கினேன். அந்தக் கருத்தை நாவலர் அவர்களே என்னிடத்திலே ஏற்றுக் கொண்டிருக்கிறார். எத்தனையோ முறை நாவலர் அவர்கள் கலைஞர் அவர்களின் திறமையைப்பற்றி என்னிடம் மனதாரப் பாராட்டியிருக்கிறார்கள். கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாக்களிலேயும் சரி, அல்லது நாவலருடைய பிறந்தநாள் விழாக்களிலே பேசிய எழுச்சியான பேச்சுக்களிலேயும் சரி - எப்போதும் கலைஞருடைய ஆற்றலை, திறமையை, இன்னும் சொல்லப் போனால் நுட்பத்தை, மதித்திறனை, நிர்வாகத் திறனைப் பாராட்ட நாவலர் தவறியதில்லை.
எந்த ஒரு இயக்கத்தையும் அடையாளம் காட்டுவதற்குத் தலைவர் பெயரைத்தான் சொல்லுவார்கள். இயக்கத்திற்கு அடையாளத்துக்கு ஒரு பெயர் எங்கேயும் இருக்கும். அறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக, தலைவராக இருந்தபோது, அறிஞர் அண்ணாவின் பெயரைச் சொன்னால் அத்தனைப் பேரும் அடங்கிப் போனோம். பெரியார் தலைவராக இருந்தபோது பெரியார் அவர்களின் பெயரைச் சொன்னால் அதில் தானாகவே எல்லாம் அடங்கிவிட்டது.
எனவே கலைஞர் அவர்களுடைய பெயரைச் சொல்லி மக்கள் தங்கள் ஆர்வத்தை வெளியிட்டுக் கொள்கிறார்கள் என்று சொன்னால், நம்முடைய கழகத்தின் பெயர்தான் ஒலிக்கிறது என்று கருத வேண்டுமே தவிர, அதை சர்வாதிகாரமாக முறைகேடான காரியமாகக் கருதுவதை நான் மிகமிகக் கண்டிக்கிறேன்."
இவ்வாறு போராசிரியர் அவர்களின் ஒரு மணிநேர விளக்கவுரைக்குப் பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் மேலும் பல விபரங்களையும், கழகத்தை வீழ்த்துவதற்கு எத்தகைய சூதுமுறைகள் கையாளப்பட்டு அவற்றுக்கு நம்மவர் சிலர் பலியாகி எத்தகைய துரோக சிந்தனைக்கு ஆட்பட்டனர் என்பதையும் தெளிவாக உணர்ந்து புதிய தெம்புடன் கழகம் வளர்த்திடப் புறப்பட்டனர். விரைவில் கழகத்தின் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதென்றும் பொதுக்குழுவில் கருத்து அறிவிக்கப்பட்டது.
தலைவரோ, பொதுச் செயலாளரோ பொறுப்பிலிருந்து விலகி விட்டாலோ அல்லது இருவருமே விலகிவிட்டாலோ பொதுக்குழுவின் பொறுப்பு என்ன என்பதை அறுதியிட்டுக் கூறுகிற வகையில் கழகச் சட்ட திட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு தஞ்சைப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு மிக்க உற்சாகத்துடன் நடைபெற்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் போது ஏப்ரல் 26-ஆம் நாள் ஈழத்தந்தை செல்வநாயகம் அவர்கள் யாழகமும், தேனகமும், மலையகமும், மன்னாரும், திருமலையும், வன்னித்திருநாடும் இணைந்து ஓர் உருவமாகிக் கண்ணீர் வடிக்க; நாங்களும் இதயம் துடிக்க காலமானார் என்ற செய்தி கிடைத்தது.
