உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/வேண்டுகோள் வீணாயிற்று!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

வேண்டுகோள் வீணாயிற்று! · 232 / 391

15. வேண்டுகோள் வீணாயிற்று! அன்னை மணியம்மையார் அவர்களின் அறிக்கை வருமாறு:- "தமிழர் சமுதாய நிலையை எண்ணிப்பார்த்துப் பெரும் வேதனைப்படுகிறேன். தமிழர் இனம் தலைதூக்கும் போதெல்லாம் பிளவு என்ற கடும் நோய் அதனை ஆட்கொண்டு, 'ஆட்கொல்லி'யாக ஆக்கி வரும் கொடுமை நமது சமுதாய வரலாற்றில் இன்னமும் தொடர்ந்து இருந்தே வருகிறது. தி.மு.க.வில் அண்மையில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து, இன மானம் பற்றிக் கவலைப்படும் எவருக்கும் தாங்கமுடியாத வேதனை தான் ஏற்படும்.

கடந்த ஓராண்டுக் காலத்தில் தி.மு.க.வை அழிக்க - ஒழிக்க திருமதி இந்திராகாந்தி அரசு கட்டவிழ்த்துவிட்ட பல கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்த போதும் துவளாத அந்த இயக்கம் இன்று கட்சிப்பிளவு என்ற ஒரு பேராபத்தில் சிக்கி அலைக்கழிக்கப்படுகிறது என்றால் தமிழர் நலம் நாடும் அனைவரும் மிகுந்த கவலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர். "தி.மு.க.வை எதிரிகளால் அழித்துவிட முடியாது; நீங்கள் ஒருவருக்கொருவர் "விவகாரம்" ஏற்படுத்தி அழித்தால்தான் உண்டு" என்றும், "தி.மு.க.

என்பது மிகவும் கெட்டியான பூட்டு; அதற்குக் கள்ளச்சாவி போடச் செய்யப்படும் முயற்சிகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றும், "தி.மு.க.வால் கூறப்படும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் மற்ற இரண்டும் கூட அவ்வளவு முக்கியம் அல்ல; கட்டுப்பாடு என்பதற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும்.

மற்ற இரண்டு சொற்களுக்குப் பல்வேறு வியாக்கியானங்கள் பல்வேறு சூழ்நிலைகளுக்கேற்பத் தரப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் கட்டுப்பாடு என்பதற்கு ஒரே பொருள்தான் எப்போதும் உண்டு. எனவே ஒரு இயக்கத்திற்கு இது தான் முக்கியம்" என்றும் நமது அறிவுத் தந்தை அய்யா அவர்கள் எழுதியதைக் கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துக்களாக ஒவ்வொருவரும் இந்த அறிவுரையை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.

தி.மு.க. என்பது 60 ஆண்டு பாரம்பரியம் உள்ள தமிழர் நல்வாழ்வுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டிய ஒரு மாபெரும் அரசியல் இயக்கம். வெறும் பதவிக் கானல் நீர்வேட்டையில் தன்னை அழித்துக் கொள்ள வேண்டிய ஒரு அரசியல் கட்சி அல்ல. "நான் எந்த சார்பாகவும் பேசவில்லை; தமிழர் சார்பில், பரிதாபத்திற்குரிய தமிழர் நல் சார்பாய்ப் பேசுகிறேன்" என்று அய்யா அவர்கள் 1969-ல் எழுதினார்களே அந்தப்படியே, அதே வாசகத்தைத் தான் இப்போதும் நான் கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

அக்கழகத்தைக் காக்க வேண்டிய பெருமதிப்பிற்குரிய அதன் தலைவர் கலைஞர் அவர்களையும், பொதுச் செயலாளர் நாவலர் அவர்களையும், அருமை நண்பர்கள் ராசாராம் போன்றவர்களையும், முக்கியஸ்தர்களையும் ஒற்றுமை காத்து தி.மு.க.வைப் பலப்படுத்த முன் வருவதை உங்கள் முக்கிய கடமையாகக் கொள்ளுங்கள் என்று மிக்க பேரன்புடன் வேண்டிக் கொள்ளுகிறேன். அய்யா அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் எப்படியெல்லாம் பதறுவார் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவுக்குத் துக்கப்படுகிறேன். அய்யாவுடன் என்னை ஒப்பிட எனக்கு எவ்விதத் தகுதியும் இல்லை என்ற போதிலும் அய்யாவின் பணிக்கு என்னை அர்ப்பணித்துக் கொண்டதால் அய்யா இருந்தால் எதைச் செய்வார்களோ அதை இன்று நமது கழகம் மேற்கொள்ளுகிறது. நமது முயற்சி வெற்றியடையும் என்று இன்னமும் நம்புகிறேன். கோபதாபங்களும், மாச்சரியங்களும் ஒரு மாபெரும் இயக்கத்தை அழித்துவிட இடம் கொடுத்துவிடலாமா?

ஒரு தமிழர் நல இயக்கத்தை அழித்த பழியை ஏற்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். யார் முந்திக் கொண்டார்கள் என்று மக்கள் அறியாவண்ணம் கட்சியைக் காப்பாற்ற முந்திக் கொள்ளுங்கள் என்று உரிமையோடு அன்போடு வேண்டிக் கொள்ளுகிறேன். இதில் இன்று காட்டப்படும் அலட்சியம், எதிர்காலத்தில் என்ன விளைவை உண்டாக்கும் என்பதை ஒருகணம் ஆழ்ந்து அனைவரும் சிந்திக்க வேண்டும். தந்தை பெரியார் அவர்களும் அறிஞர் அண்ணா அவர்களும் எந்த உணர்ச்சிக்காகப் பாடுபட்டார்கள் என்பதைப் பலமுறை எண்ணிப் பாருங்கள்.

நமக்குள் யார் பெரியவர்கள் என்பது நமக்கு முக்கியமல்ல; தமிழர்களுக்கு, குறிப்பாக கோடானு கோடி, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய இன மக்கட்கு எந்த அளவு நாம் தொண்டு செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே முக்கியம் - மறந்துவிடாதீர்கள் - மறந்துவிடாதீர்கள். இவ்வளவுதூரம் ஆகிவிட்டதே; இனி என்ன செய்ய முடியும் என்றெல்லாம் தயக்கம் காட்ட வேண்டாம். தமிழர் நலன் கருதி நல்ல முடிவுக்கு வாருங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம், ஈ.வெ.ரா. மணியம்மை, தலைவர், திராவிடர்கழகம்." அவரது அறிக்கை வெளியிடப்பட்ட அதே நாளில் தான் நண்பர் சாதிக்பாட்சா அவர்கள் தலைமையில் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் நானும் கழகப் பொருளாளர் பேராசிரியர் அவர்களும் இலட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் உரையாற்றினோம். நாவலர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று அந்தக் கூட்டத்தில் நானும் பேராசிரியர் அவர்களும், கேட்டுக் கொண்டோம்.

நாவலர் குழுவினருடன் இணைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு; பின்னர் அந்தச் செய்தியை மறுத்துவிட்டு நண்பர் ப.உ.சண்முகம் அவர்கள் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். நாவலருடன் மேல் மட்டத்திலிருந்து ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் செல்லவில்லை. எனினும் உளப்பூர்வமாகவும் உணர்ச்சிப் பெருக்குடனும் நானும் பேராசிரியர் அவர்களும் அந்தக் கூட்டத்தில் நாவலருக்கு அழைப்பு விடுத்தோம். மறுநாள் 18.4.1977 அன்று என் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்திலும் நாவலரும் மற்ற நண்பர்களும் மீண்டும் கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்தத் தீர்மானம் ஏடுகளுக்கு வழங்கப்பட்டது.

தீர்மானத்தின் வாசகம் இதுதான்:- "தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் நாவலர் அவர்களும், அவருடன் இணைந்து வேறு சிலரும் கழகத்தின் சாதாரண உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகிவிட்டதாக அறிவித்திருப்பது கண்டு மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தனது வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 10-ம் தேதியன்று கழகத்தில், தலைவர் விலகல், அதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் விலகல் என்ற நிலைமைகள் ஏற்பட்டு அந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட்டு, கழகத் தலைவரும் பொதுச்செயலாளரும் பொருளாளரும் கலந்துரையாடி, கழக ஆக்கப் பணிகளுக்கான திட்டங்களை வகுத்து அவற்றிற்கு ஏற்பக் கழக அமைப்புக்கள் அனைத்தும் ஆர்வத்துடன் செயல்படத் தொடங்கியுள்ள நேரத்தில் நாவலர் அவர்கள் திடீரென இப்படியொரு முடிவெடுத்தது திகைப்பிலும் துயரத்திலும் ஆழ்த்தக்கூடியதாகும்.

விலகல் முடிவை அறிவித்துவிட்டு நாவலர் அவர்கள், கழக முன்னணியினர் யாரும் சந்திக்க இயலாதவாறு தன்னை ஆக்கிக் கொண்டு எங்கிருக்கிறார் என்று தெரியாத சூழ்நிலையில் இந்தக் கூட்டம், தனது வேண்டுகோளைப் பின் வருமாறு அவருக்கு விடுக்கிறது. நாவலர் அவர்களே தங்களுடன் இணைந்து விலகியுள்ள சிலர்-இனி மறுபரிசீலனைக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்கள். அவர்கள் அறிவிப்புக்களின் மூலம் "தலைமைப் பொறுப்புப் பற்றிப் பிரச்சினை இல்லை.

கொள்கைப் பிரச்சினைதான்" என்று குறிப்பிட்டுள்ளார்கள். எந்தப் பிரச்சினையானாலும் அவற்றை விவாதிக்கத் தலைமைக் கழகச் செயலாளர்கள் கொண்ட குழு, செயற்குழு, பொதுக்குழுப் போன்ற பல்வேறு ஜனநாயக அமைப்புக்கள் நமது கழகத்தில் இருக்கின்றன. தாங்களோ, அல்லது தங்களுடன் இணைந்து விலகியிருப்பவர்களோ, தங்கள் கருத்துக்களை மனம்விட்டுப் பேச நமது கழகத்தில் வகையில்லாமற் போகவில்லை. தாங்கள் செயல்படுத்த வேண்டுமென்று கருதுகிற எந்தக் கொள்கையானாலும் அதனை மனம் திறந்து நமது கழகத்திற்குள்ளாகப் பேச எந்தவிதத் தடையுமில்லை.

எனவே, கழகத்தின் கட்டுக் கோப்பைக் காப்பாற்றும் வண்ணம் தாங்கள் தங்கள் முடிவினை மாற்றிக்கொண்டு, மற்ற நண்பர்களுடன் என்றும் போல் ஒன்றுபட்டுழைக்க வருமாறு வேண்டுகிறோம். கழகத்தின் முன்னணித் தலைவர்கள். சிலரோடு முன் கூட்டித் தாங்கள் விவாதிக்க விரும்பினாலும் அதற்கும் அனைவரும் தயாராக இருக்கிறோம். தாங்கள் கழகத்தில் இணைந்து பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்றுக் கழகத்தை வழி நடத்திச் செல்ல வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்."

பொதுக் கூட்ட வாயிலாக விடுத்த வேண்டுகோள், மாவட்டக் கழகச் செயலாளர்களின் கூட்டத்தில் தீர்மான வடிவில் விடுத்த வேண்டுகோள்; இவை எதையுமே அறிந்துகொள்ள முடியாத ஓர் இடத்தில் நாவலர் அவர்கள் அவரது நண்பர்களால் அழைத்துச் செல்லப்பட்டுச் "சிறை" வைக்கப்பட்டார். தமிழகத்திலிருந்தால் கண்டுபிடித்து அவரிடம் நேருக்கு நேர் பேசிக் கழகத்தின் ஒற்றுமையைக் காத்திடுவோம் என்பதற்காக அதைத் தடுத்திட கர்நாடகத் தலைநகரான பெங்களுரில் யாருக்கும் தெரியாமல் அவரைக் கொண்டு போய் வைத்துவிட்டனர் என்ற தகவலை அவரைத் தேடியலைந்த நண்பர் வீராசாமி என்னிடம் கூறினார்.

முகவரி அறிந்து நாவலருக்குக் கடிதம் எழுத இயலாத காரணத்தால், முரசொலியில் எழுதும் கடிதத்தை நாவலருக்கு எழுதும் கடிதமாகவே எழுதினேன். "...நாவலர் அவர்களே! பதவிக்காக உருவாக்கப்பட்டதல்ல நமது கழகம் என்று பன்னிப் பன்னிப் பல கூட்டங்களிலே உரையாற்றிக் கழகச் செயல்வீரர்களை உறுதிவாய்ந்தவர்களாக ஆக்கியிருக்கிறீர்களே; அப்படிப்பட்ட தாங்கள் உருவாக்க இருக்கும் ஒரு புதிய கட்சி இப்போது "பதவி வாய்ப்பை"க் குறிக்கோளாகக் கொண்டு அதற்காகவே தாங்களும் சேர்ந்து வளர்த்த இந்தக் கழகத்தைச் சோதனையில் ஈடுபடுத்துவது முறைதானா?

எண்ணிப் பாருங்கள் நாவலரே; நன்றாக எண்ணிப் பாருங்கள். சோதனைகள் வரும்போதுதான் கழகம் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று தாங்கள் நிமிர்ந்து நின்று ஆற்றிய உரைகளின் ஒலி முழக்கம் தமிழகத்தின் வீதிதோறும் கேட்டுக் கொண்டிருக்கிறதே: அதற்குள்ளாகவா இப்படி ஒரு முடிவு? கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த கழகம் என்று கூறுவீர்களே; நாவலரே - என்ன குறைபாடு அந்த ஒரே நாளில் ஏற்பட்டது? எதுவுமே இல்லையே! யாரோ சிலர், நாம் ஒன்று சேர்ந்த பிறகு கடிதம் எழுதினார்கள் என்று காரணம் காட்டுகிறீர்களே; யார் அவர்கள்?

கழகத்தில் எந்த இடத்திலே இருப்பவர்கள்? எந்தப் பொறுப்பு அவர்களுக்கு? அப்படியே எழுதியிருந்தாலும் ஜனநாயக இலக்கணப்படி அதற்கு நாம் விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோமே தவிர- "விலகி விடுதல்" என்ற முடிவு எப்படிப் பரிகாரமாக இருக்க இயலும்? கண்ணியமற்றதும், கடுமை நிறைந்ததும் கட்டுப்பாடு குலைக்கும் தன்மை கொண்டதுமான கடிதமாக இருந்தால் அதனை எழுதியவர் மீது கழகச் சார்பில் நடவடிக்கை எடுத்திருக்கலாமே!

அதை விடுத்துத் தாங்கள் இந்த முடிவு எடுக்கலாமா? என் வேண்டுகோளை ஏற்கவிரும்பாத உள்ளம் அல்ல தங்கள் உள்ளம்! அது எதிரிகளைச் சந்திக்கும் எஃகு உள்ளம் என்பதையும் கழகத்தை முதுகில் குத்தும் துரோகிகளுக்குத் துணை போகாது என்பதையும், என் கனிவான வேண்டுகோள் கசிந்திடும் தன்மை கொண்டது என்பதையும் இன்னமும் நான் உறுதியுடன் நம்பிக்கொண்டிருப்பதால்தான் நாவலர் அவர்களே; நான் இந்த மடலைத் தங்களுக்கு அனுப்புகிறேன்.

"கொள்கை மறவாதீர்! கோபத்துக்கு ஆளாகாதீர்! கூடிவாழ்வது பொறுப்பான காரியம்...அறிவீர். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை." என்று 1961-ஆம் ஆண்டு அண்ணா எழுதியதையும் நினைவு படுத்துகிறேன். ஓடி வாருங்கள் நாவலரே; தங்களைத் தேடியலையும் எங்களுடன் ஒன்று சேர ஓடிவாருங்கள்! "உடன் பிறப்பு எழுதியுள்ள கடிதம் என்னை உலுக்கிவிட்டது. இதோ தடையுடைத்துக் கொண்டு எனை வளர்த்த தாயாம் எமது கழகத்தில் மீண்டும் இணைகிறேன்" எனக் கூறிவிட்டு ஓடிவாருங்கள்!

காத்திருக்கிறேன்; கண் பூத்துப் போகும் வரையில்!" இந்தக் கடிதமும் புறக்கணிக்கப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் புதுக் கட்சி தொடங்குகிற செய்தியும் அதற்கு "மக்கள் தி.மு.க." எனப் பெயர் சூட்டப்படும் என்ற யூகங்களும், அவரது இளவல் இரா.செழியன் அவர்கள், மாநிலக் கட்சிகளுக்கு நாட்டில் வாய்ப்பில்லை எனக் கூறி ஜனதா கட்சியில் சேர முடிவெடுத்துள்ளார் என்ற செய்தியும் ஏடுகளில் வந்தன.